Sunday, September 04, 2005

63. முதன் முதலாய் பறந்தபோது...

ஒரு இந்தி தெரியாதவனின் வடநாட்டுப் பயணம்...3
(அல்லது)
முதன் முதல் பறந்தபோது...


நான் முன்பே ஒரு பதிவில் சொன்னபடி, நான் அப்போது அமெரிக்கன் கல்லூரியில்
'சித்தாளு வேலை' பார்த்து வந்தேன். முதலில் லெக்சரர் பதவி வந்தபின் கல்யாணம் என்று சொல்லி வந்தேன். ஆனால் அது நடப்பது போல் தெரியாததால், சரி, இரண்டில் ஒன்றையாவது முடிப்போமே என்று வீட்டில கல்யாணத்திற்குச் சரி என்றிருந்தேன். அதே நேரம் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் லெக்சரர் பதவிக்கு கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தேன். இந்த நிலையில்தான் வட நாட்டுப் பயணம். இப்போது அந்தக் கல்லூரியிலிருந்து நேர்முகத்தேர்வுக்கு நாள் குறித்துவந்த சேதியைத்தான் அப்பா தந்தி மூலம் அனுப்பியிருந்தார்கள். அந்த தந்தி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் ரயில் மூலம் மதுரைக்குச் சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாம். தந்தி வந்த நேரத்தால் அந்த வாய்ப்பு நழுவிப் போச்சு. என்ன செய்வது என்றறியாத நிலையில் இருந்தேன். உறவினர் விமானத்தில் போய்விடு என்றார். அப்போதெல்லாம் என்னைப் போன்ற lower middle class ஆட்களுக்கு விமானம் என்பதெல்லாம் கனவே. அதை நாங்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அவர் சொன்னதும் சரி போய் விடுவோம் என நினைத்தேன். இதுவரை, எல்லாம் பம்பாயில் வாங்கிக்கொள்ளலாமென நினைத்து பணம் அதிகம் செலவு செய்யாமல் வைத்திருந்தேன். அந்த பணம் போதுமா என்றும் தெரியாது. விமானப் பயணத்திற்கு என்ன செலவாகும் என்று யாருக்குத் தெரியும்? உறவினர் அந்த விவரத்தைக் கேட்டுச் சொன்னார். டிக்கெட் வாங்க பணம் தேறும்போல் தோன்றியது. மீதி 40-50 ரூபாய் தேறும். அதில் மதராஸ்-மதுரை பஸ் டிக்கெட் போக 10-15 மீதும். அது போதும் வழிச்செலவுக்கு என்று கணக்குப் போட்டாகி விட்டது. அரை மனதோடு திட்டம் போட்டாகிவிட்டது.

விமான டிக்கெட் எடுக்கப் போனேன். இனிமே எப்போ விமானம் ஏறப்போகிறோம்; இந்த ஒரு தடவை போவதிலாவது ஜன்னல் ஓரமா உக்காந்து போனா நல்லாயிருக்குமே என்று நினைப்பு. ஆனால், 'எனக்கு ஜன்னல் பக்கத்தில் ஒரு சீட் கொடுங்க'ன்னு கேக்கலாமான்னு தெரியாது. டிக்கெட் கொடுப்பவரும் ஏதோ கூட்டம் அலை மோதுவது போல என்னென்னமோ பாத்து பாத்து டிக்கெட் கொடுத்தார். சரி, நம்ம அதிர்ஷ்டத்தைதான் பார்ப்போமே என்று சாமி மேல பாரத்தைப் போட்டுவிட்டு டிக்கெட் எடுத்தாச்சு. அப்படி இப்படி ஒரு வழியா சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்தாச்சு.. அங்கு வந்தபின் ஒரு சந்தேகம். கையில் ஒரு சின்ன சூட்கேஸ் வைத்திருந்தேன். அதுக்கு தனியாக ஏதும் பணம் கொடுக்க வேண்டியதிருக்குமா என்றொரு ஐயம். யார்கிட்ட போய் கேட்க? என்ன செய்வது என்று முழிச்சிக்கிட்டு இருந்தேன். அங்கே நம்மள மாதிரியே அச்சு அசலா ஒரு சூட்கேஸ் வ்ச்சுக்கிட்டு ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். மெல்ல அந்தப் பக்கம் போய், ரொம்ப casualஆக இருக்கிறது மாதிரி pose கொடுத்துக்கிட்டு, ஒரு 'சார்மினாரை'ப் பத்த வச்சிக்கிட்டு ரொம்ப styleஆக 'Excuse me, do you have to pay anything for this?' அப்டின்னு எடுத்து விட்டேன். அவர் உடனே, 'ஹி..ஹி..I am also going by flight for the first time'அப்டின்னு வழிஞ்சார். அப்போதான் நானும் அப்படிதான் வழிஞ்சிருப்பேன்னு தெரிஞ்சது. அவரும் நம்மள மாதிரி டென்ஷன் பார்ட்டிதான்னு புரிஞ்சுது. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாமாவென பார்த்தா அவர் கல்கத்தா போற பார்ட்டி. சரி விடு, (என்ன பார்த்திபன்-வடிவேலு ஜோக் மாதிரி) நம்மள என்ன நடுவழியில இறக்கியா உட முடியும்; பாத்துக்கலாம். இனி வேற வழியும் இல்ல அப்டின்னு நினைச்சுக்கிட்டேன். கடனோ உடனோ சொல்லி சமாளிச்சிதான் ஆகணும் என்றும், அந்த இளைஞரைப் பார்த்ததால் வந்த தைரியமுமாக இருந்தேன்.

ஆனாலும் இந்த டென்ஷனில் நாக்கெல்லாம் காஞ்சு போச்சு. அங்க இருந்த கடைப் பக்கம் போனேன். அதைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம். எல்லாரும் full suit-ல இருந்தாங்க. நானோ தனியாளா பயணம் வந்ததாலே அநேகமா எல்லாமே T-shirtsதான்; காலில் ஒரு சாண்டல். ஒரு பக்கிரிமாதிரி இருந்ததாக ஞாபகம். எக்கச் சக்கமா காம்ப்ளக்ஸ் ஆயிப்போச்சு. உடம்பெல்லாம் ஒரே கூச்சம். அந்தக் கூட்டத்துக்குள் செல்லவே தயக்கம். ஒரு வழியா அந்தக் கூட்டம் நகர்ந்துச்சு அந்த இடத்த விட்டு. ஆனாலும் இன்னும் தயங்கி நின்றேன். பிறகு என்ன கையிலிருந்த காசுக்கு கோகோ கோலாவா குடிக்கமுடியும்? (அப்போ கோகோ கோலா இங்க இருந்திச்சு). என்ன செய்யலாம் என்று யோசனையில இருக்கும்போது, 'இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே'. அந்தக் கடை ஆட்கள் எல்லாம் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். பத்தாதா நமக்கு. ஒரு தமிழ்ச்சங்கமே ஆரம்பிச்சிர மாட்டோமா; மதுரக்காரனா, கொக்கா. 'அண்ணன் கொஞ்சம் தண்ணி கொடுங்க' என்றேன். ஆஹா, என்னே நம் தமிழுணர்வு. முதலாளி, 'டேய், சாருக்கு ஐஸ் வாட்டர் எடுத்துக்கொடு' என்றார். வாழ்க அவர்தம் தமிழுணர்வு!

ஒருவழியா விமானத்தில் ஏறும் நேரம் வந்தது. விமான வாயிலில் சேலை கட்டிய அப்சரஸ் ஒன்று -அதாங்க, விமானப் பணிப்பெண் - நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் நான் முதன் முதலாக ப்ளேனில் ஏறப்போவதைத் தெரிந்து வைத்திருப்பதுபோல எனக்குள் ஒரு வெட்கம். தகுதிக்கு மீறிச் செயல் படுவதுபோல ஒரு தயக்கம். அந்த அம்மாவைப் பார்க்காமலேயே உள்ளே வந்தாச்சு. இந்தக்காலத்து ஆளுங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் too much அப்டின்னு தோணும்; நான் சொல்றது மிகைப்படுத்திக் கூறுவதுமாதிரி தெரியும். உண்மைதான். அதேமாதிரி அன்றைக்கு எனக்கு இருந்த மனப்பாங்கும் உண்மைதான். இப்போ விமானப்பயணம் அப்படி ஒன்றும் பெரிய விதயம் இல்லைதான். ஆனால், அன்று நிலை வேறு. ஜாவா மகாத்மியத்தில் சொன்னது மாதிரி அப்போவெல்லாம் பைக் வைத்துக்கொள்வதே ஒரு பெரிய காரியம் மட்டுமல்ல; வைத்துக்கொண்டால் என்ன என்ற mind set கூட கிடையாது. காசு இருந்தால்கூட அதெல்லாம் நமக்கு எதுக்கு என்ற மனப்பாங்கு. அந்த நேரத்தில் எனக்கு விமானப்பயணம் அதுமாதிரி; அதுவும் திடுமென்று முன்னால் குதிச்சு வந்து நின்றது அந்த வாய்ப்பு. எல்லாம் அதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள்தான்.

உள்ளே ஆளுங்களே ரொம்ப கம்மியா இருந்தோம். நம்ம வரிசையில ஆளே இல்ல. ஆஹா, வசதியா போச்சுன்னு ஜன்னல் பக்கம் உக்காந்துட்டேன். ஜெயகாந்தன் ஒரு இடத்தில சொல்லியிருக்கிறார்: பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல வாழ்க்கை; பிரச்சனைகளைத் தீர்ப்பதும், புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டு அவைகளைத் தீர்ப்பதும்தான் வாழ்க்கைன்னு'. அதுதாங்க இப்ப எனக்கு. உள்ளே ஏறுவது ஒரு பிரச்சனை; அதை தீர்த்தாச்ச்சு. இப்ப அடுத்த பிரச்சனை: இடுப்புக்கு பெல்ட் போடறது. இது என்ன பெரிய விதயம்ன்னு சொல்லிடுவீங்க உங்களுக்கென்ன தெரியும் நான் பட்ட கஷ்டம்.

கேப்டன் சொல்லியாச்சு பெல்ட்டெல்லாம் போட்டுக்குங்கன்னு. முன்னால இருந்து பணிப்பெண் ஒவ்வொருவரா பாத்துக்கிட்டே வர்ராங்க. பெல்ட் போடமுடியலைன்னா ஒருவேளை அவுகளே போட்டு விடுவாகளோன்னு ஒரு ஜில்லு நினப்பு வரத்தான் செஞ்சுது. இருந்தாலும் நம்ம first timer-ன்னு அவுகளுக்கு எதுக்கு தெரியணும்னு ஒரு நினப்பு. அவுக அங்க முன்னால இருந்து வந்துக்கிட்டு இருக்காக. நான் வேகமா பெல்ட்டை மாட்டி ஒரு இழு இழுத்தேன். என் ராசி, முக்கால்வாசி வந்த பெல்ட் அதற்கு மேல் வருவேனா என்றது. நான் இழுத்து இழுத்துப் பாக்கிறேன்; வரமாட்டேங்குது. அந்த அம்மா வந்துகிட்டே இருக்காக. பார்த்தேன். ஜன்னல் எனக்கு வலது பக்கம் இருந்திச்சு. மீதி லூசா இருந்த பெல்ட்டை வலது விலாப் பக்கம் மடிச்சு கையைவச்சு விலாவோட அமுக்கி வச்சுக்கிட்டு, 'நமக்கு இதல்லாம் சகஜமப்பா'ன்ற மாதிரி ஜன்னல் பக்கம் வெளியே பாத்துக்கிட்டு, அந்த அம்மா வர்ரதே நமக்கு தெரியாதமாதிரி உக்காந்திட்டேன். என்ன அப்டியா ப்ளேன்ல இருந்து கீழேயா விழுந்திடப்போறோம் அப்டிங்கிற தைரியம்தான்.

அதுக்குப்பிறகு ஒரு 20 நிமிடம் பறந்த பிறகு ஏதோ எஞ்சின் பிரச்சனைன்னு மறுபடி பம்பாய் போய் இரண்டு மூன்று மணி நேரம் உட்கார வச்சிட்டு மறுபடியும் அதே மாதிரி 'அழிச்சி கிழிச்சி' புதுசா பயணம் ஆரம்பிச்சது. அந்தக் கதையை இப்ப உட்ருவோம். என்ன, ஒரு தடவை கொடுத்த காசுக்கு இரண்டு தடவை take off and landing கிடச்சுது.

இப்ப மறுபடியும் பறக்கிறோம். இனி மறுபடி எப்ப பறக்க முடியுமோ முடியாதோ, அதனால இந்த தடவையே 'அதை' செஞ்சு பாத்திடணும்னு ஒரு ஆசை; ஆனாலும் அதே தயக்கம். என்ன ஆசைன்னு கேக்கலியே. ஓடுற...இல்ல..இல்ல.. பறக்கிற விமானத்தில 'மூச்சா' போயிடணும்னுதான்; தப்பா நினச்சுக்காதீங்க; 'லூ'வுக்கு போய் அங்கதான். மனசு கேக்குது; ஆனாலும் உடம்போ மறுக்குது. இந்த போராட்டம் முடியறதுக்குள்ள மதராஸ் வந்திருச்சி. அதனால 29 வருஷம் நான் மூச்சா போகாம அடக்கிக்கிட்டேன் - என்ன சொல்லவந்தேன்னா, 29 வருஷம் பறக்கிற ப்ளேனில் மூச்சா போகணுங்ற ஆசையை அடக்கிக்கிட்டேன்னு சொல்ல வந்தேன். நடுவில ஒரு நல்ல விதயம். ஜன்னல் வழியா பாத்துக்கிட்டே வந்தேனா. அதுக்குப்பிறகு பறந்த நேரங்களில் பார்க்காத காட்சி ஒன்று இன்றும் அப்படியே நெஞ்சில் பதிந்த ஓவியமாய்... வேற ஒண்ணுமில்ல. கீழே பார்த்த பஞ்சுக்குவியல். அதில் ஒன்று: ஆரஞ்சுப்பழத்தை உரித்து, பின் அதன் மேல் பகுதியில் சுளைகளை விரித்து வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி ஒரு மேகப் பொதி. இன்றும் என் ஜன்னலின் வழியே பார்க்கும்போது அதை என் கண்முன்னால் கொண்டுவர முடிகிறது.

மதராஸ் வந்தாச்சு. விமானப் பயணிகளிலே நான் ஒருவன் மட்டுமே நடந்தே வெளியே வந்து பஸ் ஸ்டாப்புக்கு வந்தவன். அங்கிருந்த ஒருவரிடம் பாரிஸுக்கு எந்த பஸ் என்று கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையும் என் பெட்டியையும் பார்த்துவிட்டுப் பின் பதில் சொன்னார். மதுரை பஸ்ஸில் அருகில் இருந்தவர் பேச்சுக்கொடுத்தபடி வந்தார். எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். பம்பாயிலிருந்து, விமானத்திலிருந்து என்றெல்லாம் கதைவிடாமல் அடக்கி வாசிச்சேன். மதுரைக்கு வந்த பிறகும் அப்பாவிடம் சொல்லாமல், மைத்துனரிடம் மட்டும் சொல்லிவிட்டு நேர்முகத்தேர்வுக்கு விரைந்தேன். அந்தக் கல்லூரியில் சேர ஒரு 'தகுதி' வேண்டியதிருந்தது. ஜாதி. அதுகூட என்னிடம் இருந்தது. ஆனாலும், மதமும் சேர்ந்துவிட்டதால் என் பழைய மாணவர் ஒருவருக்கே அந்த பதவி கிடைத்தது. நல்ல வேளை எனக்கு அங்கு கிடைக்கவில்லை.

திரும்பி வீடு வந்ததும் அப்பா 'என்னடா, எப்படியிருந்தது விமானப்பயணம்' என்றார். மைத்துனர் அதற்குள் 'ஊதி வைத்திருந்தார்'போலும். ஆனால், நான் நினைத்தபடி அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அதற்குப் பதில் நான் நேர்முகத் தேர்வுக்குப் போனபின் ஏதோ வேலை இருப்பதுபோல் பெண் வீட்டுக்குச் சென்று வேறு ஏதோ பேசுவதுபோல் அப்படியே 'மகன் வந்திட்டான்; இன்னைக்கு காலைலதான்; flight-ல வந்திட்டான் போல' அப்டின்னு ஏதோ பய நித்தம் நித்தம் இப்படிதான் விமானத்தில போய்ட்டு போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கான் அப்டிங்றது மாதிரி ஒரு build up கொடுத்து நம்ம image-யை ஒரு தூக்கு தூக்கி விட்டுட்டு வந்திட்டாங்க.

என்ன, கல்யாணத்துக்குப் பிறகு 'இவ்வளவு ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்த ஆளுக்கு எனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணும்னு தோணலியே'ன்னு இடிச்சப்போ செங்கோட்டையில எச்சரிச்ச அந்த அம்மா ஞாபகம்தான் வந்தது. ஒண்ணும் வாங்காம வந்ததுக்கு 'வாங்கின'தென்னவோ வாங்கினதுதானே...!

8 comments:

தருமி said...

தருமின்னு மட்டும் கூப்பிட்டா போதும், சத்யா. அடிக்கடி வாங்க. நன்றி

அது சரி எப்போ cheers வச்சுக்கலாம்??!!

வசந்தன்(Vasanthan) said...

நல்ல சுவாரசியமான பதிவு.
உங்கட வயசுக்கும் அனுபவத்துக்கும் எழுத எக்கச்சக்கமா இருக்கும்.
நிறைய எழுதுங்கோ. மனசுக்கு லேசா இருக்கு.

மோகன் said...

Nice writing.ur writing style is good.

துளசி கோபால் said...

அதென்ன தருமி ஆம்புளைங்கெல்லாம் cheers
சொன்னவுடனே 'எங்கியோ' போயிடறீங்க?

தருமி said...

வசந்தன்,மோகன்,
நன்றி.

துளசி,
எல்லாம் ஒரு பழக்கதோஷந்தாங்க. அது என்ன அப்படி ஒரு பொறாமை உங்களுக்கு?!

Thekkikattan|தெகா said...

பெல்ட் போடமுடியலைன்னா ஒருவேளை அவுகளே போட்டு விடுவாகளோன்னு ஒரு ஜில்லு நினப்பு வரத்தான் செஞ்சுது. //

மீதி லூசா இருந்த பெல்ட்டை வலது விலாப் பக்கம் மடிச்சு கையைவச்சு விலாவோட அமுக்கி வச்சுக்கிட்டு, 'நமக்கு இதல்லாம் சகஜமப்பா'ன்ற மாதிரி ஜன்னல் பக்கம் வெளியே பாத்துக்கிட்டு, //

பெண் வீட்டுக்குச் சென்று வேறு ஏதோ பேசுவதுபோல் அப்படியே 'மகன் வந்திட்டான்; இன்னைக்கு காலைலதான்; flight-ல வந்திட்டான் போல' அப்டின்னு ஏதோ பய நித்தம் நித்தம் இப்படிதான் விமானத்தில போய்ட்டு போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கான் அப்டிங்றது மாதிரி ஒரு build up கொடுத்து நம்ம image-யை ஒரு தூக்கு தூக்கி விட்டுட்டு வந்திட்டாங்க.//

தருமி, செம காமெடி கலந்த அருமையான narration. I am really enjoying every bit of it. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் எத்துனை உண்மைகளும், வாழ்வியல் சார்ந்த புரிதல்களும் அப்படியெ என் மனத்தில் பசக்கென்று ஒட்டிக் கொள்கிறது. எனக்கு நடந்த சில விசயங்களோட வைத்துப் பார்க்கும் பொழுது முழுமையாக உள் வாங்கி கொள்ள் முடிகிறது...

பிறகு அந்த ஜாவா_பதிவிற்கு தனியாக வருகிறது...

Cheers ;-) hahahahaha... Dharumi!!

Divya said...

ரசித்து சிரித்து படித்தேன்!

[thanks for the link]

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அழகாய் அருமையாய் எழுதியிருக்கிறிர்கள்! முடித்த விதம் இன்னும் அழகு :)

Post a Comment