Sunday, August 28, 2005

60. மாநாட்டு வேலைக்குப் போகணும்...

இன்னைக்கு ராத்திரி மதுரை போறேன். ஏன்னு கேக்றீங்களா?

நேத்து ராத்திரி நல்லா தூங்கின பிறகு யாரோ எழுப்பினாங்க. யாருன்னு கேட்டேன். நம் எதிர் கால முதல்வர், கறுப்புச் சிங்கம், மதுர கீரத்துரை அரிசி மில்லின் அன்புப் புதல்வன், நம்ம கேப்டனின் மச்சான் என்றார், வந்தவர். என்ன வேணும்னேன். 'நீங்க'தான் அப்டின்னார். எனக்கு ஒண்ணும் புரியலை. பிறகுதான் விதயத்துக்கு வந்தார். 'நம்ம கட்சிக்கு தமிழ்மண ப்ளாக் உலகத்துக்கு கொ.ப.செ.வாக நம்ம கேப்டன் உங்களை தெரிஞ்செடுத்திருக்கிறார்' என்றார் வந்தவர். உடனே உக்காரச் சொல்லி, காப்பி பலகாரம் கொடுத்து உபசரிச்சேன்.

'என்னங்க இப்படி, எனக்கு என்ன தெரியும்னு இப்படி ஒரு பெரிய பொறுப்பை கேப்டன் குடுத்துட்டார்'னு கேட்டேன்.

எல்லாம் அப்டி அப்டிதாங்க. இப்ப, என்ன தெரியும்னு நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சீங்க? html...ip number...graphics...இப்படி ஏதாவது தெரிஞ்சா ஆரம்பிச்சீங்க. ஒரு லின்க் கொடுக்க தெரியுமா உங்களுக்கு? சுட்டி தெரியும்; கீ போர்டு தெரியும். இத வச்சுக்கிட்டே ஏதொ நீங்க ப்ளாக்-பொழப்ப ஓட்டல? இப்ப பாருங்க உங்களுக்கும் திட்டி திட்டி வாசிக்கிறதுக்கோ, இல்ல, வாசிச்சி வாசிச்சி திட்றதுக்கோன்னு நாலு ஆளுக இல்லியா? சிலரு + வேற போடுறாங்களாமே, இல்லியா? அதுமாதிரிதாங்க இதுவும். அதல்லாம் சமாளிச்சுப்புடலாம்; கவலையே படாதீங்க. கேப்டனுக்கு நம்ம மதுர ஆளு வேணும்னு ஆயிப்போச்சு. ஏன்னா, அவரு ஆஸ்தான அலங்காநல்லூர் ஜோசியரு இதுக்கு ஒரு மதுர ஆளுதான் போடணும்னு சொல்லிட்டார்லா' அப்டின்னு சொன்னதும் எனக்கும் ஒரு 'இது' வந்திரிச்சி.

'சரீங்க, நான் என்ன பண்ணனும்னு கேட்டேன்.

'இன்னும் இரண்டு மூணு நாள்ல நல்ல நாள், நல்ல நேரம் பாத்துட்டு கேப்டன் உங்க பேரை அதிகார பூர்வமாய் அறிவிச்சுடுவார். அதுக்குப் பிறகு நீங்க மள மளன்னு வேலய ஆரம்பிச்சுருங்க' அப்டின்னார் மச்சான், I mean, கேப்டனோட மச்சான்.

'சரி'ன்னு எந்திரிச்சி 'எல்லாம் பாத்துக்கங்க; தமிழ் ப்ளாக்கர்க ஓட்டு ஒண்ணுகூட வெளிய போயிரக்கூடாது; பாத்துக்கங்க. அதுக்கு நீங்க தான் பொறுப்பு. அதுக்கு என்ன வேணும்னு முதல்ல சொல்லிடுங்க; எல்லாம் கவனிச்சுடுவோம்'னார். அந்தக் 'கவனிச்சுடுவோம்'னு சொன்னதுமே எனக்கு மூளை வேல செய்ய ஆரம்ப்பிச்சிருச்சி.

புறப்பட்டவர் சடாரென திரும்பி 'இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு. மள மளன்னு வேல ஆரம்பிச்சிருங்க' என்றார். 'என்ன இரண்டு வாரத்தில'ன்னு கேட்டேன். கொஞ்சம் கோவம் வந்திருக்கும்போல. இருக்காதா பின்ன. மெனக்கெட்டு என்ன கொ.ப.செ. வா போட்ருக்காங்க. அவரு சொன்ன பிறகுதான் 'நம்ம கட்சி' மாநாடு மதுரல நடக்க போற விதயம் ஞாபகத்திற்கு வந்திச்சு. நான் ஒரு பெரிய மொடாக்குதான்; நம்ம கட்சி, நம்ம ஊர்ல நடக்கப் போகுது; நான் எப்டி அத மறக்கலாம். 'சாரி'ங்க'ன்னு சொல்லிட்டு 'இப்பவே ஆரம்பிச்சிடலாம்'னேன்.

'உடனே நம்ம ஊருக்கு கிளம்புங்க. மாநாட்டு வேல எல்லாம் நல்லா பாத்துக்குங்க. அநேகமா, நம்ம கட்சியின் ' உ.வெ.கொ.ப.ச' வா மாநாட்டு மேடைல உங்கள நம்ம கேப்டன் அறிவிச்சுடுவார்', அப்டின்னர். வழக்கம்போல மொடாக்குக்கு புரியல.

'அது என்னங்க...உ.வெ.கொ.ப.ச. ?' அப்டின்னேன். கொஞ்சம் முறைச்சார். பிறகு, மூஞ்சில ஒரு சிரிப்பை ஓடவிட்டு, 'உள்நாட்டு வெளிநாட்டுக்கு கொள்கை பரப்புச் செயலாளர்' என்றார். அப்டின்னா, கட்சிக்கு முழுசுமா நாந்தான் கொ.ப.ச. அப்டின்ற உண்மை புரிஞ்சுது. அடுக்கடுக்கா எனக்கு பதவிக்கு மேல பதவியா கொடுத்துட்டு மச்சான் 'டக்'னு போய்ட்டார்.

'ஆஹா, இன்னும் ரொம்ப விதயம் டிஸ்கஸ் பண்ணாம போய்ட்டோமே'ன்னு இருந்திச்சு.

ஏன்னா, எனக்குத் தெரியும். இந்த விஷயம் லீக் ஆனதும் 'எனக்கு கட்சியில இந்த பதவி வாங்கிக்கொடு, அந்தப் பதவி வாங்கிக்கொடு; நம்மள அப்டி கவனிச்சுக்கோ, இப்டி கவனிச்சுக்கோன்னு' நம்ம வலைஞர்கள் மொய்ச்சுடுவாங்கன்னு. எல்லாம் நல்லா யோசிச்சுதான் செய்யணும்னு முடிவெடுத்திருக்கேன். சும்மா இந்த லொள்ளு பண்ற கேசுகள எல்லாம் பக்கத்தில சேத்துக்கவே கூடாது.

மாநாட்டு வேல தலைக்கு மேல இருக்கு... மச மசன்னு நிக்காம வேல ஆரம்பிக்கணும்னு நினச்சுக்கிட்டு இதோ மதுரைக்குக் கிளம்பிட்டேன் இன்னைக்கு ராத்திரியே! அங்க பாப்போம்...சரியா?

Thursday, August 25, 2005

58. வயசுக்கு மரியாதை கொடுங்க'ப்பா...

அமெரிக்காவில் ஒரு சின்ன டவுணில் சரியாக 100 நாட்கள் 'தனிஆவர்த்தனம்' செய்ய வேண்டியிருந்தது. இங்கே, சமையலறைப் பக்கமே போகாத நான் தனியே சமைத்துக்கொண்டு, அதை சாப்பிடமுடியாமல் கீழே கொட்டிக்கொண்டிருந்தேன். நான் oven-ல் மீன் பொரித்தால் அது கருவாடாக மாறியது. சரி, ரெடிமேட் சப்பாத்தி வாங்கி சுடவைப்போமே என்று சுடவைத்தால் அது அப்பளமாக மாறியது. வீட்டிலிருந்து எழுதி வாங்கிட்டுபோன notes-யைக் கையிலேயே வைத்துக்கொண்டு நான் பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவ்வப்போது அடுத்த அறை நண்பர்-சீனத்து நண்பர்- தரும் கண்ணங்கரேலென்ற கோழியையும், vegetable dip + பச்சைக் காய்கறிகளுடன் வாழ்க்கையை ஒருமாதிரி ஓட்டிக் கொண்டிருந்தேன். சோறும் தயிரும் ஊறுகாயும் கொஞ்சம் கை கொடுத்தது. அதைப் பற்றி பிரிதொரு பதிவில் பார்ப்போம்.

நான் இருந்த டவுணில் - அது ஒரு கிராமம்தான் - மொத்தம் 8,000 பேர் தானாம். அதிலும், பாதிக்கு மேல் அங்கிருந்த கல்லூரியின் மாணவர்கள்தான். பதினைந்து பதினைந்து கடைகளாக சரியாக நான்கே நான்கு வரிசைகளாக இரண்டு தெருவில் கடைகள்; ஒரு சின்ன சினிமா தியேட்டர், ஊருக்கு ஊர்தான் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்களே, அது ஒன்று, ஒரு ஆடிட்டோரியம் - அதுதான் கல்லூரி வளாகத்தைத் தவிர அந்த ஊரில் இருந்த மொத்த விஷயங்கள். கடைகளின் வரிசை ஆரம்பமாகும் இடத்தில் ஒரு board.

Oberlin
Downtown
1882
- என்று எழுதியிருக்கும். கணக்கு போட்டுப் பார்த்தேன். 120 ஆண்டுகள்; பரவாயில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

கல்லூரியில் பேசிய ஒரு கூட்டத்தில் இந்த விஷயம் பற்றிப் பேசும்போது அதைக் குறிப்பிட்டுவிட்டு, அதே மூச்சில், என் ஊரில் இது மாதிரி ஒரு போர்டு வைத்தால் என்னவென்று எழுதுவது?
Madurai
Downtown
1882 B.C.
என்றுதான் எழுதவேண்டி வருமென்றேன்.

எனக்கு என்ன வருத்தம்னா, இப்படிப்பட்ட, ஆனானப்பட்ட எங்க ஊரைப் பத்தி இந்த சென்னைவாசிகள் என்னதான் நினைக்கிறாங்கன்னு. நேத்து பெஞ்ச மழையில...அப்டின்னு சொல்லுவாங்களே அதுமாதிரி வெறும் 366 ஆண்டுகளே ஆயிருக்கு நேத்தோடு. அதுக்கு ரொம்ப பெரிசா பிறந்தநாள் கொண்டாட்டம் வேற. போனாப் போகுது..கொண்டாடிட்டு போகட்டும்; நானும் கூட பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன். ஆனா, என்னமோ மதுர ஒரு கிராமம் மாதிரி சொல்றது; ஓ, அங்கே internet-கூட இருக்காங்கிறது, (அடுத்தவாரம் இந்நேரம் எங்க வீட்டுக்கே broad band வந்திரும்னு நினைக்கிறேன்) - இதல்லாம் வேணாங்க; நல்லா இல்ல.
அவ்வளவுதான் சொல்லுவேன்.

366 எங்கே? எங்க ஊரு எங்கே? எங்க ஊரு மீனாட்சி அம்மன் கோயிலு வயசே அதுக்கு மேல; தெரிஞ்சுக்கங்க. இனிமேயாவது... வயசுக்கு மரியாதை கொடுங்க'ப்பா ! சரியா...?

57. எனது "ஜாவா மஹாத்மியம்"...

ஜாவா எனக்குத் தண்ணி பட்ட பாடு. பிறகு என்ன, கொஞ்சமா, நஞ்சமா.. 22 வருஷத் தொடர்பு என்றால் சும்மாவா? மேலே சொல்வதற்கு முன்பே ஒரு முக்கியமான சேதி. ஜாவா என்றதும், software கில்லாடிகளாக நிறைந்திருக்கும் இந்த வலைஞர்களில் பலர் நான் 'ஜாவா'ன்னு சொன்னது JAVA என்று நினைத்திருக்கலாம்.. இல்லை..இல்லை.. நான் சொல்லவந்தது - JAWA, 1966 மாடல், 250 c.c., Made in Czechoslovakia (இப்போ அந்த நாடே இல்லையோ?!), MDA 2107, என்னிடம் வந்தபோது 'சிகப்பழகி'; பின் எனக்குப் பிடித்தவாறு 'கறுப்பழகி'யாக மாறியவள். 1970 அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் 'அவள்' கைப்பிடித்தேன் - I mean its 'handlebar' ! அப்போது நான் ஒரு bachelor. ஆனால், 1992-ல் -22 ஆண்டுகள் என் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்ட'அவள்' என்னைவிட்டுப் பிரியும்போது எனக்கு இரு வளர்ந்த குழந்தைகள். அந்தப் 'பிரிவு' என்னைவிட என் மகள்களை மிகவும் பாதித்தது. சின்னவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

தஞ்சையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நல்ல மூடில், உள்ளூரில் வேலை பார்த்தால் ஒரு பைக் வாங்கிக்கொள் என்று அப்பா permission கொடுக்க, என் நல்ல நேரம் அமெரிக்கன் கல்லூரியில் 1970-ல் வேலை கிடைத்த உடனே அப்பாவை அனத்த ஆரம்பித்தேன். நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்தது 'சித்தாள்' வேலை; அதாவது, அப்போதெல்லாம், கல்லூரிகளில் லெக்சரர் மட்டுமல்லாமல், tutor/demonstrator என்ற போஸ்ட்டும் உண்டு. ஒரே தகுதியிருப்பினும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதால், சில பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அந்தப் பதவிகளே கிடைத்து, பின், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்காய் தவமிருந்து லெக்சரர் பதவி உயர்வு பெறவேண்டும். அது ஒரு சோதனைக்காலம். நான் சேர்ந்தது அப்படி 'சித்தாள்' வேலையில்தான். அப்பாவுக்கு இது ஒரு சாக்காகப் போய்விட்டது. 'பார்க்கிற வேலை என்னவோ சித்தாள் வேலை; இதில் பைக்கில் போய் இறங்கினால் ரொம்ப நல்லாவே இருக்கும்; போ..போ... பிறகு பார்த்துக்கொள்ளலாமென' சொல்ல மனம் உடைந்து, தாடி இல்லாமல் சோகம் காட்டி, பிறகு பயங்கர பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து அப்பாவைச் சரிக்கட்டினேன்.

மனம் மாறிய அப்பா அவருக்குத் தெரிந்த நண்பரிடம் இருந்த ஜாவா பைக்கை எனக்காக வாங்கி, ஒரு சனிக்கிழமை இரவு 'வண்டியை நாளைக்கு எடுத்துக்கொள்' என்று அதன் சாவியைக் கொடுத்தபோது ஒரே 'ஜிவ்'தான். ஏனென்றால், அப்போது மொத்தமே மூன்றே மூன்று வகை பைக்குகள்தான். புல்லட் 350 சி.சி.- அப்போது விலை 4,500 ரூபாய்; அந்த வண்டியைப் பார்க்க ஆசை ஆசையாகத்தான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் யானை நினனவுதான் வரும். அடுத்தது ஜாவா 250 சி.சி. - விலை 3,500. பார்க்கும்போது வரும் நினைவு: முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் அழகுக் குதிரை. முன்றாவது, ராஜ்டூத் 150 சி.சி. விலை 2,500. சரியான எருமை மாடு மாதிரி நிற்கும். பிடிக்காது. 'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500.

அதுவரை வண்டி நன்றாக ஓட்டத்தெரியாது. தஞ்சையில் தங்கியிருந்த லாட்ஜில் வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த அடுத்த அறை நண்பருக்கு அளிக்கப்பட்டிருந்த 'எருமைமாடு'- அதாங்க, ராஜ்தூத்தை அவர் வெளியூர் செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம். அந்த அனுபவம் மட்டுமே உண்டு. அடுத்த நாள், நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று, நான் படித்த மரியன்னை பள்ளியில் இருந்த என் குதிரையை எடுத்துக்கொண்டு நேரே ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குச் சென்றோம். நட்ட நடு மைதானத்தில் வண்டியை நிப்பாட்டிவிடு நண்பர் 'தம்' அடிக்க உட்கார்ந்து விட்டார். சரி வண்டியை எடு என்றார். ஸ்டார்ட் செய்தேன்; கியர் போட்டேன்; நாலைந்து சுற்று சுற்றினேன். அவ்வளவுதான், உனக்கு ஓட்டத் தெரிந்துவிட்டது என்று சொல்லி நண்பர் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு அப்பாவிடம் நல்ல சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஏழுமணிக்கு முந்தி எப்பவுமே எழுந்திருக்காத நான் அடுத்த சில நாட்களுக்கு ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குதிரையை நன்றாகத் துடைத்து, அப்போதெல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமலிருந்த (இப்போது அங்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து ஒரே மக்கள் கூட்டம்தான்) வைகை நதிக்கரையின் ஓரமாக இருக்கும் சாலையில் சைலன்சர் இல்லாத வண்டியை ஓட்டிப் பழகினேன். கொஞ்சம் தைரியம் வந்த உடன் கல்லூரிக்கு ஓட்டிப்போனது; போகும் வழியில் எல்லோருக்கும் நடப்பது போலவே, போலீஸ்காரரைப் பார்த்ததும் வண்டி நின்றுபோனது - எல்லாமே நினைவிலிருக்கிறது. இப்போ பைக் ஓட்டுபவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, இந்தக்காலத்து பைக்குகள் எல்லாமே கையாலேகூட ஸ்டார்ட் செய்யமுடியும். ஆனால், புல்லட், ஜாவா பைக் இரண்டுக்குமே செம உதை கொடுக்கவேண்டும். கொஞ்ச காலம் வரை இடது கால் பெருவிரலில் எப்பவுமே ரத்தக்காயத்தோடேயே அலைந்தேன். ஷூகூட போடமுடியாது.

எப்போது கோடை விடுமுறை வருமெனக் காத்திருந்தேன். விடுமுறையும் வந்தது.
சொந்தஊருக்கு பைக்கிலேயே செல்ல முடிவு செய்திருந்தேன். 130 மைல்கள். ஊருக்குள் நுழைந்ததும் பைக் பின்னாலேயே ஒரு பெருங்கூட்டமாகச் சின்ன பசங்கள் எல்லோரும் ஓடிவர வீடுவந்து சேர்ந்தேன். என் அப்பம்மாவிற்குப் பெருமை பிடிபடவேயில்லை; திருஷ்டிதான் சுற்றவில்லை. நான் வீட்டுக்குள் வந்த பிறகும் சின்னப் பிள்ளைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. அப்போது எங்கள் ஊர் பக்கம் நானே பைக் எதுவும், யாரும் ஓட்டி வந்தும் பார்த்ததில்லை. பசங்க கூட்டத்திலிருந்து பைக்கைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அன்று ஊருக்குப் போனதால் என் வண்டிக்குப் புதுப் பெயர் ஒன்று கிடைத்தது. பசங்க எல்லோரும் வண்டியைச் சூழ்ந்துகொண்டும், நான் போகும்போது பின்னாலேயே கூட்டமாய் ஓடி வந்தும், 'டக்கு மோட்டார் ...டக்கு மோட்டார்' என்றார்கள். அந்தப் பெயர் மிகவும் பிடித்ததால் 'Darling Duck' என்று நாமகரணம் சூட்டினேன். ஆனால், இந்தப் பெயரைக் கடைசியில் மாற்றும்படியானது. என்ன பெயர், ஏன் அந்தப் பெயர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

நான் பைக் வாங்கியபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், ஏழு பைசா !. Fill tha tank எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்! கால் கீழேயே பாவாது; துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான். எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த நண்பரும் ஜாவா வைத்திருந்தார். இரண்டுபேருமாகச் சேர்ந்தே தனித்தனி பைக்கில் சுற்றுவோம். 'சர்க்கஸ்காரங்க மாதிரில்ல சுத்துறாய்ங்க'ன்னு மற்ற நண்பர்கள் அடிச்ச கமெண்ட் ரொம்ப பெருமையா இருந்திச்சு. ஆனா, கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டின்னு வந்தப்புறம் இந்த நிலை மாறிப்போச்சு. எங்கள் கல்லூரி slang படி நான் ஒரு 'ஒத்தை மாட்டு வண்டி'; அதாவது, என் மனவி அப்போது வேலை பார்க்கவில்லை; நான் மட்டுமே 'தனி மாடாக' வண்டியை இழுத்தாகணும். வாங்கும் சம்பளம் இழுத்துப் பிடித்து 'வண்டி'யை ஓட்டுவதற்கே சரியாக இருக்கும்; இதில் பைக் வேறு. அதுக்கு ஊத்தணுமே, பெட்ரோல். நிலைமை ரொம்ப 'டைட்' ஆன பிறகு, சம்பளம் வாங்கியதும் போடற பெட்ரோல் முதல் பத்து நாளைக்கோ ஒரு வாரத்துக்கோ வரும்; குடும்பத்தோடு போகவேண்டிய கடமைகளை இந்த நாட்களுக்குள் முடிப்போம். பிறகு, அடுத்த பத்து நாட்களில் அவசரத்தேவைகளுக்கு மட்டும். கடைசி பத்து நாட்களுக்கு 'நடராஜா செர்வீஸ்'தான். முதல் வாரம் 'பெட்ரோல் வாரம்'; கடைசி வாரம் 'பஸ் வாரம்'. த்சொ, த்சொ... ஐயோ, பாவம் இந்த மனுஷன் அப்டின்னு யாரும் நினைச்சீங்கன்னா, இன்னும் ஒரு விஷயம் சொல்லணும். நான் பைக் வாங்கும்போது ஏறத்தாழ 200 ஆசிரியர்கள் இருந்த எங்கள் கல்லூரியில் இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையே பன்னிரெண்டே பன்னிரெண்டுதான்! நான் பதின்மூன்றாவது ஆள். என்ன பண்றது; அப்போ கல்லூரி வாத்தியார்கள் நிலைமை அவ்வளவுதான்.

அதோடு இப்ப எல்லாம் ரோட்ல போகும்போது அங்கங்கே இருசக்கர வாகனங்களைக் 'கூறு கட்டி' வைத்து விற்கிறார்கள். நீங்கள் வண்டி ஒன்று வாங்கலாமா என்று ஒரு கனவு கண்டால்கூட அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு ஆள் வந்திடும்- 'சார், வண்டி வாங்கலையோ, வண்டி' என்று கூவிக்கொண்டு. ஆனால், அப்போதெல்லாம் வண்டிகள் வாங்க ஆட்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். இயலாமை ஒரு பக்கம்; அதைவிட இதெல்லாம் தேவையில்லை என்ற மனப்பாங்கு அதிகம். It was out and out a luxury item! பைக்குகள் வாங்க ஆள் கிடையாது; ஆனால், ஸ்கூட்டருக்கு மட்டும் கொஞ்சம் போட்டி உண்டு. அதுவும் demand-supply விதிகளால்தான்! அப்போது இருந்த வண்டிகள்: லாம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட லாம்ப்ரெட்டாவும், வெஸ்பாவும்தான். அதிலும், இந்த வெஸ்பாவுக்கு ஏக டிமாண்ட்; அதிலும், குறிப்பாக 'chetak' என்று ஒரு மாடல். அடேயப்பா, அந்த வண்டி வச்சிருந்தா அவர்மேல்தான் எத்தனை பொறாமைக்கண்கள். அப்போது, டாலரில் கொடுத்தால் இந்த வண்டி உடனே கிடைக்கும். எங்கள் கல்லூரியிலிருந்து அமெரிக்காவிற்கு வருஷத்திற்கு ஒருவராவது போய் வருவதுண்டு. போய் வந்தவர்கள் வந்த வேகத்தில் செய்வது ஒரு chetak வாங்குவதுதான். ஒரு chetak கல்லூரிக்குள் வந்து விட்டால் அதைச் சுற்றி ஓரிரு வாரங்களுக்காவது அப்பப்போ ஆசிரியர் கூட்டம் வேடிக்கை பார்க்க நிற்கும். டாலர் இல்லாமல் சாதாரண முறையில் வாங்க வேண்டுமானால், ரூபாய் 500 கட்டிவிட்டுக் காத்திருக்கவேண்டும் - எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? Just for 6 years! கையில் காசு இருந்தாலும் காத்திருக்கவேண்டும். அதிலும் சிலர் ஒரு வியாபாரம் செய்வதுண்டு. 500 ரூபாய் கட்டிவிட்டு, 6 ஆண்டுகள் கழித்து வண்டி அலாட் ஆனதும் அதை 'பிரிமியத்துக்கு' விற்று விடுவதுண்டு. கட்டிய 500 ரூபாயுடன் மேலும் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்துவிடுவார்கள். இப்படி வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் உண்டு; ஆனாலும் இந்த வியாபாரம் வெற்றி நடை போட்டு வந்தது. இப்படி ஒரு காலத்தில் பார்த்துவிட்டு, இப்போது தெரு முனைகளில் வண்டிகளை நிப்பாட்டிகொண்டு, ' கூவி கூவி ' விற்பதைப் பார்க்கும்போது... என்னமோ போங்க..எனென்னமோ நடக்குது நாட்டிலன்னு நீட்டி முழக்கணும்போல தோன்றும்.

ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது என் 'டார்லிங் டக்'கை. எப்போதுமே ரொம்ப தொல்லை கொடுத்ததேயில்லை. ஏதோ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அதுபாட்டுக்கு ஓடியது. குடும்பத்தில் ஒரு நபர் மாதிரிதான். ஜாவா + தோளில் ஒரு ஜோல்னா பை + கழுத்தில் அடிக்கடி ஒரு காமிரா - இதுதான் ரொம்ப நாள் என் அடியாளமாக இருந்தது. வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn! டார்லிங் டக்கில் பல இடங்களுக்கும் பயணம் - தனியாக, குழுவாக. எனக்கும் இளம் வயசு; என் பைக்குக்கும் இளம் வயசு. ஊர்சுற்ற கேட்கணுமா, என்ன? ஒரு முறை தஞ்சை பயணம். வேலைபார்த்த இடத்தில் பழைய நண்பர்களைப் பார்க்கலாமென ஒரு பயணம். காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டேன். திருமயம் என்று நினைக்கிறேன். அந்த ஊரிலுள்ள கோட்டையைத் தாண்டியதும் கண் முன்னே நீ...ண்...ட நெடுஞ்சாலை; நல்ல சிமெண்ட் சாலை; கண்ணுக்கெட்டிய தொலைவு உயிரினம் ஏதும் காணோம்; வேறு வாகனங்களும் இல்லை. ஒரு ஆசை; டார்லிங் டக்கின் முழு 'பலத்தையும்' டெஸ்ட் செய்துவிட ஆசை. த்ராட்டிலைத் திருகினேன்; முழுவதும் திருகியபிறகு அதன் முழுத் திறனில் வண்டி சென்றபோது - வண்டி அப்படியே மிதப்பதுபோல உண்ர்ந்தேன்; வண்டி தரையைத் தொட்டு செல்வதுபோலவே தோன்றவில்லை; மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை. இப்போது காரில்கூட எழுபதைத் தொட்டால் பயம் வந்துவிடுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒருவனே கையாண்டதாலோ என்னவோ டார்லிங் டக் நல்ல கண்டிஷனில் இருந்துவந்தது. அதன் பிறகு, நண்பர்களாக மாறிவிட்ட என் பழைய மாணவர்கள் - அதில் பலரும் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டிருந்தனர் - பைக்கை 'ஆத்திர அவசரத்திற்குக்' கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது. அதுவும் சிலர் மதுரைக்கு வந்தால் என்னோடு இருப்பதே அதிக நேரமாயிருக்கும். அவர்களுக்கு எப்படி இல்லையென்பது. அப்படி நாலைந்து நண்பர்கள். வயசும் ஆகிப்போச்சு. எல்லாமாகச் சேர்ந்து பைக் இப்போது சல சலக்க ஆரம்பித்துவிட்டது. டார்லிங் டக் என்ற பெயரை மாற்றிவிட்டு புதுப்பெயரைச் சோகமாகச் சூட்டினேன் - 'கண்ணகி' என்று. ஏன் தெரியுமா? சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரையை வலம் வந்தாளல்லவா, சிலம்பல்லவா கைகளில்; ஜல்..ஜல் என்று சத்தம் வந்திருக்கணுமே. என் பைக்கும் இப்போது சல சலவென மதுரையம்பதியின் தெருக்களை வலம் வருகிறதல்லவா, அதனால்தான்.

1992. 'கண்ணகி'யை விற்றுவிட்டு வேறு வண்டி வாங்க முடிவெடுத்தேன்; மனைவிக்கும் முக்கியமாக மகள்களுக்கும் இந்த முடிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிறந்த நாளிலிருந்தே இர்ந்துவந்த தொடர்பல்லவா? ஆனாலும் விற்றுவிட முடிவு செய்து, 2,500 ரூபாய்க்கு வாங்கியவர் வந்து வீட்டிலிருந்து MDA 2107-யை / டார்லிங் டக்கை / கண்ணகியை எடுத்துச்செல்லும்போது மனதை என்னவோ செய்தது. பக்கத்தில் இருந்த சின்ன மகளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

Wednesday, August 24, 2005

56. எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது...?

பாலாஜி சம்பத் (வயது 32; IIT, chennai), ஸ்மித்தா கல்யாணி (26, BITS, Pilanai) , பானுச்சந்தர் (25; Gunidy Engg. college), வானெஸ்ஸா பீட்டர் (23; International Studies) - ஒரே மாதிரி, கிடைத்த நல்ல நல்ல வேலைகளையெல்லாம் துறந்துவிட்டு, பிறந்த மண்ணின் ஏழை எளியவர்க்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாய் ஏற்றுக்கொண்ட இந்த நல்லவர்களைப் பற்றி நேற்றைய (23.8.05) THE NEW INDIAN EXPRESS-ன் முதல் பக்கத்தில் வாசித்தபோது (லின்க் - கொடுக்க முயன்றேன்; முடியவில்லை) எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது...? என்றுதான் தோன்றியது. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலையும் நம் மத்தியில், புகழுக்காகக் கூட அல்லாமல் ஒரு உன்னதமான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் இந்த நல்லவர்களைப் பற்றிப் படிக்கும்போது - மனதை ஏதோ செய்கிறது. வெறும் கட்டாந்தரையில் இவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தாலும், மனிதநேயத்தால் அவர்கள் என்னாலெல்லாம் நினைத்தும் பார்க்க இயலா உயரத்தில் இருக்கிறார்கள். தலை வணங்குகிறேன். எல்லா நலமும் பெற்று அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துவதைத் தவிர நான் வேறென்ன செய்ய ?

* * * *

அதே நாளில் அதே நாளிதழில் வந்த இன்னுமொரு சேதி (தொடர்பில்லாததுதான்):http://newindpress.com/NewsItems.asp?ID=IET20050822120915&Title=Southern+News+%2D+Tamil+Nadu&rLink=0")
Bloomer in Plus-2 textbook - என்ற தலைப்பில் நம் பிள்ளைகளுக்கான இந்த ஆண்டு 12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகள் பற்றிய ஒரு சேதி.

அந்தச் செய்தி இருக்கட்டும்; அதில் இருந்த ஒரே ஒரு சொற்றொடர் மிக முக்கியமாகப் பட்டது. அதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
This should be done through a meaningful syllabus and not one to flaunt the proficiency of the authors.. என்ன சொல்லுங்கள் நீங்கள். பள்ளிப் பாட நூல்களை எழுதும் ஆசிரியப்பெருமக்களுக்கு இது ஒருநாளும் மண்டையில் ஏறப்போவதில்லை.

Friday, August 19, 2005

54. மரணம் தொட்ட கணங்கள்...முதல் கணம்

பள்ளியிறுதி படிப்பு முடியும்வரை ஒவ்வொரு கோடைவிடுமுறையையும் கழிக்க சொந்த ஊர் செல்லும் பழக்கம் இருந்தது. அந்த நாட்களில் மதுரையில் செய்யமுடியாத காரியங்களைச் செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்காகவே அந்தப் பயணங்களுக்காக ஆவலாகக் காத்திருப்பேன். நெல்லைவரை புகைவண்டியில் வந்து அதன்பின்னும், 30,40 மைல்கள் பஸ்ஸில் செல்லும் அந்தப் பயணத்திற்கு வீட்டில் பெரியவர்கள் தயார் செய்வதைவிட நான் அதிகமாகத் தயார் செய்யவேண்டியதிருக்கும். கிராமத்து நண்பர்களுக்கென்று அங்கே கிடைக்காத கண்ணாடி கோலிக்குண்டு, தீப்பெட்டிப் படங்கள்,பம்பரம், டென்னிஸ் பந்து,காமிக்ஸ் புத்தகங்கள்...இன்னும் என்னென்னவோ.

அப்படி என்ன மதுரையில் செய்ய முடியாத காரியங்கள் என்று கேட்கிறீர்களா? அது எவ்வளவு! காடு மேடு பாராமல் சுற்றுவது; திருட்டுத்தனமா பீடி, சிகரெட் பிடிக்கிறது, கிட்டி விளையாடுறது, பிள்ளையார் பந்து, நீச்சல்...இப்படி லிஸ்ட் நீளமா போகும். இந்த லிஸ்டில் இன்னுமொன்று, மாட்டு வண்டி ஓட்டுறது. மற்ற எல்லா விஷயங்களும் 'குரூப் ஆக்டிவிட்டி'. ஆனால், மாட்டு வண்டி ஓட்றது மட்டும் தனி நபர் ஆக்டிவிட்டி. (individual-யை தமிழில் டைப் செய்து பார்த்தேன்; முடியவில்லை. அதனால், நல்ல பிள்ளையாக 'தனிநபர்' என்று போட்டுத் தப்பித்துக்கோண்டேன்.)

விடுமுறைக்கெல்லாம் பாளையங்கோட்டை சித்தப்பா, மதுரைப் பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள் என்று ஒரு பத்து, பன்னிரண்டு உருப்படிகளாக சிறிசுகள் நாங்கள் தேருவோம். அக்கா, தங்கைகள் என்று எல்லோருமாகச் சேர்ந்தால், இந்தக்காலத்து 'அந்தாக்ஷிரி' மாதிரி 'சினிமா தலைப்புகளை' வைத்து விளையாடுவோம்; இல்லை, கல்லா மண்ணா விளையாட்டு; இல்லை, இரண்டு தூண்களுக்கு நடுவே சேலையைக் கட்டி, ஒரு பக்கம் நடிக, நடிகையர்களும், மற்றொரு பக்கம் 'ஆடியன்ஸ்' என்று பிரித்து நாடகம், டான்ஸ் எல்லாம் நடக்கும். shift system-ல் இந்தக் 'கலைவிழாக்கள்' நடக்கும் என்பதால் ஒவ்வொரு குரூப் குரூப்பாக creative work தனித்தனியான discussion மூலம் முந்திய நாளிலேயே தயாரிக்கப்படும். பயங்கர secrecy maintain பண்ணப்படும்!

பசங்களாகச் சேர்ந்தால் ஒரே வீர விளையாட்டுக்கள்தான். அப்டின்னா பெருசா பசங்க ஏதோ பண்ணுவாங்கன்னு நினைச்சுக்காதீங்க. 'வாதமடக்கி' மரம் தெரியுமா, அதன் குச்சிகளை உடைத்து அரை ட்ரவுசரின் சைடில் சொருகிக்கொண்டு, ஓடைக்காடெல்லாம் சுற்றுவோம்; ஓணான் அடிப்போம். இல்லை..இல்லை...அடிக்க அங்கும் இங்கும் ஓடுவோம். ஏதும் அடித்ததாக ஞாபகம் இல்லை. ஆஹா, அண்ணன் தம்பிகளோடு அந்த திருட்டு 'தம்' அடிக்கப் பழகிய நேரங்கள், திருட்டு பீடி (த.பி. சொக்கலால்) சப்ளை செய்த ஜான்சன், இடம் கொடுத்த புளியந்தோப்புகள், கிணறுகள், மாட்டிக்கொண்டு முழித்த தருணங்கள், செய்து கொடுத்த சத்தியங்கள் -- அவைகளெல்லாம் ஒரு தனிக்கதை. அதப்பத்தி படிக்கணும்னா, அங்கே போங்க !

இந்த நல்ல விஷயங்களுக்கு நடுவே ஒரு பயங்கர கசப்பான காரியம் அப்பப்போ நடந்தேறும் என் அப்பா மூலமாய். நாங்கள் இன்று மதியம் 'வேட்டை'க்குப் போய்ட்டு, அப்டியே ஆசாரி குளத்துக் கிணற்றில் அல்லது மாமரத்துக் கிணற்றில் குளித்துவிட்டு வரலாம் என்றெல்லாம் திட்டம் போட்டிருப்போம். ஆனால் அன்று பார்த்து என் அப்பா 'டேய், அந்தப் புஸ்தகத்தை எடுத்துட்டு இங்க வந்து உட்காரு'ன்னு சொன்னாருன்னு வச்சிக்கிங்க; அதோடு எங்க பிளான் அவுட். என்ன புஸ்தகம் தெரியுமா? Wren & Martin - ஆங்கில இலக்கணப் புத்தகம்தான். முட்டி பேந்திரும் அன்னைக்கி. உள்ளதே நாம ஒரு 'மொடாக்கு'; இதில லீவுல, பல பிளான் போட்டிருக்கப்போ என்னைத் தனியே கார்னர் பண்ணி உட்காரவச்சு பிராணனை எடுத்தா படிப்பா வரும்; அப்பா மேல கடுப்புதான் வரும்.

இதையெல்லாம் தாண்டி...புனிதமான ச்சீ...ச்சீ...ட்ராக் மாறிடப்போகுது... இதையெல்லாம் தாண்டி சித்தப்பா, பெரியப்பா வீட்டுப் பசங்களுக்குக் கிடைக்காத ஒரு மகத்தான அனுபவம் அந்த மாட்டு வண்டி ஓட்றது. அது எனக்கு மட்டுமே கிடச்ச அனுபவம். ஏன்னா, எங்க பாட்டையா விவசாயத்தோடு, விளைச்சல்களை டைரக்ட்டாக சந்தைக்குக் கொண்டுபோய் விற்கவும் செய்தாரென்பதால் வீட்டில் இரட்டை மாட்டு வண்டி, ஓட்டிச் செல்ல ஆள் என்று இருந்தது. வண்டி ஓட்டும் ஆள் ( car[t] driver ?!) நம்ம தோஸ்த்து. என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவன்; பெயர் தங்கச்சாமி. நானும் அவனும் வழக்கமாக நான் ஊரிலிருந்து வந்ததும் செய்து கொள்ளும் பண்டமாற்று - மதுரையிலிருந்து நான் smuggle செய்து கொண்டுவரும் கோலிக்குண்டுகள்; பதிலாகப் பெருவது கருங்கல்லில் நெல்லிக்காய் அளவில் கையாலேயே தட்டித் தட்டிச் செய்த (கோலிக்)குண்டுகள். இன்னும் எனக்கு ஆச்சரியம் எப்படி அவ்வளவு உருண்டையாக அதைச் செய்வான் என்று. அவன் மட்டுமல்ல, ஊரில் பசங்க அதைவைத்துதான் விளையாடுவார்கள். தோத்தால், முட்டி பேந்திடும்.

வியாழக்கிழமை எங்கள் ஊரில் சந்தை. செவ்வாய்க்கிழமை பக்கத்து புதுப்பட்டி ஊரில் சந்தை. செவ்வாய்க்கிழமை ஐயாவுக்கு வேற எந்த புரோகிராமும் இருக்காது. காலையிலேயே நானும் தங்கச்சாமியும் புறப்பட்டு விடுவோம். போகும்போது தங்கச்சாமி எனக்கு வண்டி ஓட்ட பெர்மிஷன் தர மாட்டான் - லோடு இருந்தா உன்னால ஓட்ட முடியாதுன்னு சொல்லிருவான். சரி, ஒழின்னு விட்டுட்டு, சந்தையில் வியாபாரம், மதியம் கொண்டு சென்றிருக்கும் தூக்குப்போணியில் உள்ள பழைய + மோர் சோறு, அதற்கு அங்கே சந்தையில் கிடைக்கும் வடை என்று எல்லாம் உள்ளே தள்ளிவிட்டு மாலையில் கிடைக்கப்போகும் சான்ஸ்க்காக கொக்குமாதிரி தவம் பண்ணிக்கிட்டு இருப்பேன். திரும்பும்போதும் தங்கச்சாமி வண்டியை உடனே தர மாட்டான். ஊர் எல்லை தாண்டணும்'பான். ஏன்னா, ஊருக்குள்ள ட்ராஃபிக் இருக்குமாம்!!
ஊர் எல்லை தாண்டியதும் ஐய்யாவிடம் மூக்கணாங் கயிறும், தார்க்குச்சியும் வந்திரும். ஹாய்...ஹாய்னு வாலை முறுக்கி, மேலாப்ல குச்சியால ரெண்டு தட்டு தட்டி விட்டா - அதுக்கு வீட்டுக்குப் போய் கழினி குடிக்கப்போற உற்சாகத்தில பறக்கும் பாருங்க.... அன்னைக்கி கிடைச்ச சந்தோஷமும், ஆளுமை உணர்வும் அதுக்குப்பிறகு பைக், கார்னு ஓட்றப்போகூட கிடைச்சது இல்ல.

திடீர்னு ஒரு நாள் நானும் தங்கச்சாமியும் இருந்தப்போ, அப்பம்மா ஒரு வேலை குடுத்தார்கள். வெளங்காட்டில் விறகுக்கு வெட்டிப் போட்டிருக்கிறதை வண்டியில் எடுத்துவரச் சொன்னார்கள். எனக்கு வண்டி ஓட்ட ஒரு போனஸ். சந்தோஷமா கிளம்பினோம். நான் பயங்கர புத்திசாலியாக்கும்; திரும்பும்போது தங்கச்சாமி வண்டி தர மாட்டான்னு தெரியும்ங்கிறதால போகும்போது என் உரிமையை போராடிப் பெற்று ஓட்டிச் சென்றேன். விளைக்குப் போய், விறகெல்லாம் ஏற்றியாச்சு. வண்டியில் உயரமாய் ஏற்றி, உச்சாணியில் நான் உட்கார்ந்து கொள்ள return trip ஆரம்பிச்சது. எனக்கு இதுவும் ரொம்ப பிடிச்சுது; ஏன்னா, நான் அவ்வளவு உயரத்தில் உட்கார்ந்து பயணித்தது ரொம்ப த்ரில்லிங்.

மணல் தடத்துவழியே வந்து, குறுக்காகச் செல்லும் நெல்லை - தென்காசி, குற்றாலம் தார் ரோட்டிற்குச் செங்குத்தாக ஏறி அதற்கு அடுத்த பக்கம் மறுபடியும் செங்குத்தாக இறங்கி, இந்தப் பக்கத்து மணல் தடத்துக்கு வரவேண்டும். நம்ம car[t] driver தங்கச்சாமி ஒரு தப்புக்கணக்கு போட்டுட்டான். உலகத்தையே காலடியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு வண்டியின் மேல் ராசா மாதிரி நான் உட்கார்ந்திருக்க, தங்கச்சாமி செங்குத்தாக ஏறி ரோட்டுக்கு வந்தவன், அங்கிருந்து செங்குத்தாக இறங்கினால் மாடு கால் எதுவும் இடறி ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகக்கூடாதேங்கிற நினப்புல ரோட்டுக்கு அந்தப்புறம் செங்குத்தா இறங்காம, ரோட்டு சைடுலேயே போய் சரிவா இறங்க ஆரம்பிச்சான். இந்த strategy எதையுமே கண்டுக்காம நான் டாப்ல இருந்தேன். வண்டி இப்போ ஒரு வீல் - அதாங்க, சக்கரம் - ரோட்டிலயும், அடுத்தது புழுதி மண்ணிலயுமா இறங்க, அதேபோல மாட்ல ஒண்ணு ரோட்ல, இன்னொண்ணு மண்ணுல. மண்ணுல இருந்த சக்கரம் நல்லா மண்ணுல - சாஃப்டான மண்ணுல - பதிய அடுத்த சக்கரம் அப்டியே தூக்க....

என்ன ஆச்சுன்னே தெரியலை. முந்தின நொடி வண்டிமேல ராசா மாதிரி; அடுத்த நொடி ஆகாசத்தில் மிதந்தது மாதிரி இருந்தது. வண்டி மாட்டோடு சைடுல விழ, நானும் அதே சைடுல விழ, தங்கச்சாமி மட்டும் ஆப்போசிட் சைடுல பத்திரமா விழுந்துட்டான் போல. விழுந்தவன் நான் வண்டிக்கு அந்தப் பக்கம் விழுந்துகிடப்பதைப் பார்த்திருக்கிறான். அவன் பார்க்கும் போதே சைடுல விழுந்த வண்டி பாரம் தாங்காம, மறுபடி ஒருமுறை உருண்டுவிட்டது. தங்கச்சாமி எழுந்து பார்த்தா, நான் அவனுக்குத் தெரியவில்லை. நான் வண்டிக்கு அடியில் மாட்டிக்கொண்டேன் என்று நினைத்து அவன் ஓ-ன்னு கத்தி அழுதான்; அழுதுகிட்டு அந்தப்பக்கமே இருந்தான். நான் எப்படி தப்பித்தேனோ தெரியாது. வண்டி மறுபடியும் குப்புற விழப்போகும் தருணத்தில் என்னை அறியாமல் மறுபடியும் நானும் ஒரு முறை உருண்டிருக்கிறேன். வண்டி தலைகீழாக உருண்டு விழுந்தபின் அந்தப் பக்கமிருந்து பார்த்த தங்கச்சாமிக்கு என்னை பார்க்க முடியவில்லை. கத்தி கூப்பாடு போட்டுவிட்டான். initial shock போனதும் நானே எழுந்து தங்கச்சாமியின் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்க்க.... என்னைப் பார்த்ததும் தங்கச்சாமி இப்போது வேறுவிதமான சத்தத்தோடு அழுதான். அவன் சொன்ன பிறகே நான் எவ்வளவு அதிசயமாக, என்னையறியாமலே மீண்டும் ஒரு முறை உருண்டதாலேயே அன்று பிழைத்தேன் என்பது தெரிந்தது.

* * *

அட, கடவுள் நம்பிக்கையில்லா தருமியே, அன்று உன்னை உருளவைத்துக் காப்பாற்றியது யார்/எது தெரியுமா? அன்று அந்த 'தெய்வம்' உன்னைக் காப்பாற்றாவிட்டால், இன்று உன்னால் இதுபோல் உன்மத்தமாகக் கடவுளை மறுத்து ஒரு கட்டுரை எழுதமுடியுமா? உன்மத்தனே, இனியாவது நீ வந்த வழியைத் திரும்ப்பிப்பார்; திருந்து!

* இது எப்படியிருக்கு?? *

அன்று என்னை உருட்டிப்போட்டது எது? survival instinct / reflex ....?

* * *

பின்னாளில், நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தங்கச்சாமியைப் பார்க்க முயற்சிப்பதுண்டு. அநேகமாக, ஒவ்வொரு முறையும் பார்த்துவிடுவேன். ஏனெனில், நாளில் பாதி நேரம் அந்தத் தெக்கு டீ கடைக்கு எதிர்த்த திண்ணையில் முட்டைக்கட்டிக் கொண்டு, கள்ளோ, சாராயமோ தந்த போதையில் உட்கார்ந்திருப்பான். என்னைப் பார்த்ததும் என்னிடம் பேசுவதைவிட அங்கே பக்கத்திலுள்ளவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல ஆரம்பித்துவிடுவான். அவர்களுக்கு நடுவில் அவன் என்னை 'வாடா, போடா' என்று பேசுவதிலும், 'இது என் தம்பி; மதுரையில இருந்து வந்திருக்கான்' என்று குரலெடுத்து கத்துவதிலும் அவனுக்கு ஏகப் பெருமை.

முதலில், புறப்பட்டு வரும்போது கையில் ஐந்தோ, பத்தோ தருவதுண்டு. பிறகு அது எதற்குச் செலவாகும் என்று தெரிந்ததால், அவன் பிள்ளைகளுக்கு 'இது ஒரு சித்தப்பா கொடுத்தது என்று சொல்லிக்கொடு'ன்னு எங்க ஊரு தேன்குழல் இனிப்பும், பெரிய முருக்கும் (முறுக்கும் ? - துளசி, என்ன ஆச்சு. இந்த spellling பற்றிய நம் சந்தேகம்? ) வாங்கிக்கொடுத்துட்டு வருவேன் அந்த முகம் தெரியாத பிள்ளைகளுக்கு.

அது அந்தக் காலம் .....................

Wednesday, August 17, 2005

52. பொட்டு வைத்த முகமோ...

ஜோவின் பதிவில் பின்னூட்டமிட்ட நேயர்களின் விருப்பத்திற்கு இணங்கி (நல்லா மாட்டிக்கிட்டேன்) இந்தப் பதிவை எழுதுகிறேன். நடைமுறைகளைச் சொல்லி, அவைகளுக்கான நான் நினைக்கும் காரணங்களைச் சொல்கிறேன்.

கத்தோலிக்கர்களுக்கும், பிரிவினைச் (Protestant) சகோதரர்களுக்கும் நம்பிக்கைகளிலும்,வழிபாடுகளிலும் வேற்றுமைகள் உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு: 'மேரி' முன்னவர்களுக்கு மிக முக்கியம்; அடுத்தவர்கள் அதைத் தவறு என்பார்கள். Joe, take it in lighter sense: முன்னவர்களுக்கு பைபிள் பற்றி அதிகம் தெரியாது; பின்னவர்களில் பலரும் கரைத்துக் குடித்திருப்பார்கள். இப்படி பல வித்தியாசங்கள்.

வெளிஅடையாளங்களிலும் அதிக வேற்றுமை உண்டு. நம்ம ஊரில் ஒரு கத். (இப்படி சுருக்கமா வச்சுக்குவோமா?) வீட்டுக்குப் போனால், அதற்கும் மற்ற இந்து நண்பர்கள் வீட்டுக்கும் அதிக வேற்றுமை இருக்காது் - (கிறித்துவ)சாமி படங்கள், படங்களுக்குச் சூட்டப்படும் பூக்கள், அதன் முன் குத்து விளக்குகள், கோலங்கள், ஊதுபத்தி இப்படியாக... ஆனால், பொதுவாக, பிரி. வீடுகளில் அவைகளைப் பார்க்க முடியாது. கொஞ்சம் western look-ஓடு இருக்கும்; நடை, உடை பாவனைகளிலும் அதைப் பார்க்கலாம். கத். பெண்களிடம் எந்த வித்தியாசமும் தெரியாது - பொட்டு, மிஞ்ஜி, கொலுசு, நெற்றி வகிட்டில் குங்குமம்... இத்யாதி..இத்யாதி. இவைகள் ஏதும் அநேகமாக பிரி. பெண்மக்களிடம் இருக்காதது மட்டுமின்றி, இவைகளைப் பயன்படுத்தும் கத். மக்களை ஒரு கேள்விக்குறியோடு பார்ப்பதும் உண்டு. எது இருந்தாலும், பொட்டு நிச்சயமாக இருக்காது. (ஜோ சொன்னது ஆச்சரியமாக இருந்தது)
பொட்டு ஏன் வைப்பதில்லை என்றால் வழக்கமாக அவர்கள் சொல்லும் பதில், 'சிலுவைக்குறி இடும் இடத்தில் எப்படி பொட்டு வைப்பது' என்பதே.

என் 'ஆழ்ந்த' ஆராய்ச்சியில் (இதிலெல்லாம் ஆராய்ச்சி ஏன் என்று கேட்டீர்கள் என்றால் - பிறவியால் நான் கத்., வேலை பார்ப்பதோ பிரி. நடத்தும் கல்லூரி; குடும்பத்தோடு போனால் மக்கள் தனியாகவே தெரிவார்கள். அதைப் பற்றி யோசித்து..யோசித்து ) விளைந்த கருத்துக்கள்:

கத். missionaries முதலில் வந்தவர்கள். தாமஸ் யேசுவின் சீடர்; முதலாம் நூற்றாண்டிலேயே நம் நாடு வந்துவிட்டார். அதைப் போலவே, மற்ற கத். மிஷினரிகள். அப்போது அவர்கள் எல்லா வகையிலும் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாகவே நம் தாத்தா, பாட்டியரால் கருதப்பட்டிருக்க வேண்டும். they should have been outright OUTSIDERS. and the first task for them was to get acceptance of local people. அதற்கு முதல் படியாக அவர்கள் நம் ஊர் மக்களைப்போல உடை முதல் எல்லாவகையிலும் தங்களை மாற்றிக்கொண்டார்கள். தேம்பாவணி இயற்றிய வேதமாமுனிவர் தன் பெயரை மாற்றிக்கொண்டது மட்டுமின்றி, நம் ஊர் சாமியார்கள் போலவே, காவி உடை, கட்டைச்செருப்பு, கையில் தண்டம் என்று தன்னை நம்மோடு ஐக்கியப்படுத்திக்கொண்டனர். அவர்கள் மக்களை மதம் மாற்றும்போது, அவர்களின் பழக்க வழக்கங்களையோ, வாழ்க்கை முறைகளையோ மாற்ற முனையவில்லை. அப்படி முனைந்திருந்தால் அதிக எதிர்ப்புகள் இருக்கும் என்பது அவர்களுக்கு நன்கே தெரியும்.

ஆனால், பிரி. மிஷினெரிஸ் வந்த காலம் வெள்ளையர் காலத்தில்தான். வெள்ளையர்கள் வந்து காலுன்றி, ஆட்சி செய்யவும் ஆரம்பித்த பிறகு, ஆங்கிலேயர்களோடு identify செய்து கொள்வது நம்மில் பலருக்கும் பிடித்துப்போயிற்று. என் பாட்டையா சட்டை போட்டுக்கொண்டு, தலையில் தலைப்பாகையோடு pose கொடுத்ததும், என் அப்பா கோட்டும் சூட்டும் போடுவதற்கு முன்பு வேட்டிகட்டி கோட்டு போட்டது எல்லாமே அந்தத் தாக்கம்தான். உடையாலோ, மதத்தாலோ தங்களை வெள்ளையரோடு ஒன்றிக்காண்பிப்பதில் மக்களுக்கு ஒரு பெருமை. அதோடு, கிறித்துவர்களுக்கு அப்போது ஒரு தனி மரியாதை; நான் சின்னவனாக இருக்கும்போது அதைக் கண்டிருகிறேன். 'அவர்கள் வேதக்காரர்கள்' என்று தனிப்படுத்தப்பட்டு, அதில் ஒரு சிறப்பும் சேர்க்கப்பட்ட காலம். படித்தவர்கள் ('உயர்ந்த ஜாதிக்காரர்கள்? ) தங்களை உடை, வேலை மூலம் வெள்ளையர்களோடு ஒன்றிக்கொண்டார்கள். புதிதாக மாறிய பிரி. கிறித்துவர்கள் தங்கள் மதம் மூலமாக மட்டுமின்றி, பல வகைகளிலும் அவர்களோடு தங்களை identify செய்துகொள்ள, தங்கள் வாழ்க்கை முறைகளை மேற்கத்தியத் தாக்கத்திற்கு உள்ளாக்கிக் கொண்டார்கள். ஆண்கள், shoe, pants, suit என்று ஆடைகளை மாற்றிக்கொள்ள முடிந்தது. பெண்கள் frock போட முடியுமா என்ன? ஆனாலும், மற்றவரிடமிருந்து வேற்றுமைப்படுத்திக் கொள்ள எளிய வழி - வெற்று நெற்றியோடு இருப்பது. அது தொடர்கிறது.

அவர்கள் பொட்டு இடாமலிருப்பதற்கு, இந்த சமுதாயக் காரணங்கள்தானேயொழிய வேறு வெளியே சொல்லப்படும் சமயக்காரணங்கள் சரியானவைகளாக எனக்குத் தோன்றவில்லை.

எவ்வளவு சின்ன விஷயம் இது. ஆனால், இரு தாராரும் இதை எவ்வளவு கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் தெரியுமா? நான் சொன்னது போல் என் கல்லூரியில் படித்து, காதல் திருமண்ம் செய்துகொண்ட இருவர், வீட்டினரின் தலையீட்டால் 'பொட்டுச்சண்டை' போட்டு, விவகார ரத்து...ச்சீ...விவாக ரத்து வரை போக, ஆசிரியர்கள் போய் சமாதானம் செய்யச் சென்றனர். அதனால்தான் சொல்கிறேன், மதம் நம்மை என்னவெல்லாம் செய்கிறது என்று.



51. சிறுகதைப் போட்டிக்கு அல்ல இந்த miniகதை

ஏன்னா, இந்தக் கதை ஒரிஜினல் இல்லை. இதில் எனக்கு 20% மட்டுமே பங்கு இருக்கு. ஒருவேளை இதைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திட்டா பரிசில 20% மட்டும் எடுத்திக்கிட்டு மீதி 80%-யை 'மண்டபத்தில' போட்டுடறதாக முடிவு.

வாத்தியார் ஒருத்தரு பசங்களுக்குச் சிறுகதைப் போட்டி வச்சாராம். - சில கண்டிஷன்களோட:
கண்டிஷன்கள்:
1.கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும்
2: suspense இருக்கவேண்டும்
3: வரலாற்றுக் கதையாக இருக்க வேண்டும்
4: sex தூக்கலாக இல்லாமல் subtle ஆக இருக்கவேண்டும்.


இதற்கு மேல் adults only


எழுதிய கதைகளில் ஆசிரியர் தேர்ந்தெடுத்த கதை இதுதான்:

" Oh God! Who made the Queen pregnant? " 


எல்லா கண்டிஷனும் இருக்கா, இல்லியா? Oh God!(1) Who(2) made the Queen(3) pregnant(4)?


ஆனால்,
நான் 'வால்' சேர்த்த பிறகு
கதை இன்னும் கொஞ்சம் சிறப்பா
ஆனதாக மக்கள் சொன்னார்கள்:

.
.
"Oh God ! Who made the Queen pregnant", cried the King !!


*

50. ஜெயலலிதாவுக்கு...ஜே..!

இன்றைய நாளிதழில் வந்த நல்ல சேதி - ஜெயலலிதாவின் 'எச்சரிக்கை'. கேட்க நன்றாக இருக்கிறது கர்ஜனை. ஆனால் நெருங்கிவரும் தேர்தலை மனதில் வைத்துச் சொல்லப்படும் வார்த்தையாக இல்லாமல், உண்மையிலேயே மக்களை மனதில் வைத்துச் சொன்ன சொல்லாக இது இருக்கவேண்டும். The judgment shows that the 'elite judges' naturally have the 'class feelings' they belong to - என்பதுபோல எப்படி இதுபோன்ற ஒரு தீர்ப்பைத் தந்தார்களோ; அவர்கள் மீது நான் ஏற்கெனவே முன்பு சொன்ன குற்றச்சாட்டை மீண்டும் புதுப்பிக்கிறேன் - அவர்களுக்கு இன்னும் அதிகமாக சமூகப்பொறுப்பு தேவை.

அரசுடைமையாக்குவது பற்றி ஜெ. சொன்னவை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டும். முதலில் எல்லா சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்து - நுழைவுத்தேர்வு போல் அல்லாமல் - அதன்பிறகு வரப்போகும் நிதிநிலையை மேலாண்மை செய்வதற்குரிய் சரியான திட்டங்களை வகுத்து
இதனால் அரசுக்கு கூடுதல் செலவின்றியே திறம்பட நடத்த வேண்டும்; நடத்த முடியும். செய்வாரா? செய்தால் நிச்சயமாக சமூகநீதி காக்கும் போராட்டத்தின் முன்னணித் தலைவியாக மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டமும் இம்முறை நியாயமாக இருக்கும்.

நடந்துவரும் சுயநிதிக்கல்லூரிகள் பலவும் அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள் இவ்ர்களால்தான் நடத்தப்பட்டு வருகின்றன. மேடையில் 'சமூகநீதி'க்காகப் போராடுவதாக முழங்குபவர்கள் முதலில் தங்கள் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை வழக்கம்போல் பின்பற்றுவார்களா; நிச்சயமாக செய்யமாட்டார்கள். They know which side of their bread is buttered.

இந்தக் கர்ஜனைகள் வெறும் அரசியல் ஸ்டண்ட் ஆக இல்லாமல், உண்மையான செயலாகப் பரிமளித்தால் நானும் சொல்வேன் - ஜெயலலிதாவுக்கு ஜே !

பி.கு. நம்ம ப்ளாக் பிரதாபம் தெரிந்த பக்கத்து வீட்டு நண்பர் இன்னைக்குக் காலையிலேயே வந்து தோள்மேல ஏறி உக்காந்து இந்த பதிவைப்போடத் தூண்டியதற்கு... இப்போதைக்கு அவருக்கு ..ஜே !!

Monday, August 15, 2005

48. Da Vinci Code -ம் மத நம்பிக்கைகளும்..

DA VINCI CODE

by  DAN BROWN





உள்ளதே மத நம்பிக்கைகள் ஆட்டம் கண்டு ஒரு வழியாக இனி சமய மறுப்பே எனது வழி என்றிருக்கும் நிலையில், உள்ளது பற்றாது என்பது போல, இந்தப் புத்தகம் வாசித்ததும் கிறித்துவ சமயத்தைப் பற்றியும், அதனைத்தொடர்ந்து, சமயங்களை இறுகப் பற்றிக் கொண்டு, தங்கள் கடவுள்களையும், சமயங்களையும் தாங்கள்தான் காப்பாற்றியாக வேண்டிய நிலையில் இருப்பதாகக்கற்பித்துக் கொள்பவர்களையும் கொஞ்சம் நினைத்துக்கொண்டேன்.

இந்தப்புத்தகத்தை வாசிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்களுக்கு நிகராக google -லும், wikipedia-விலும் 'ஆராய்ச்சி' செய்தாகிவிட்டது. கதாசிரியர் வரலாற்று உண்மைகளையே எழுதியிருப்பதாகக் கூறியுள்ளார். சரி, நாமும் அதைச் சரி பார்ப்போமே என்று உள்ளே நுழைந்து பார்த்தாகிவிட்டது. சில செய்திகள் google, wikipedia-வில் கிடைக்கின்றன; சிலவற்றைக் கண்டு பிடிக்கவில்லை; எது எப்படியோ - இந்தப் புத்தகம் கிறித்துவர் வட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது போலும். இந்தக் கதைப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகளை மறுக்கும் முகமாக இன்டர்நெட்டில் பலப் பல கட்டுரைகள்; விவாதங்கள். God TV-ல் ஒன்றரை மணிநேர தன்னிலை விளக்கங்கள்; தர்க்கங்கள்; மறுப்புகள். ஆனால், எல்லாம் அறிவு பூர்வமான விவாதங்களே தவிர தனி மனிதச் சண்டைகள் ஏதும் இல்லை. திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது - ஒருவேளை கதாசிரியர் Dan Brown-க்கு ஏதும் மிரட்டல் வந்திருக்குமோவென்று; அதுபோல எதுவும் இல்லையென்பது ஒரு நல்ல விஷயம்.

கிடைத்த சில பதில்களையும், வந்த சில ஐயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

*பைபிள்களில் gnostic gospels என்று ஒரு பிரிவு இருந்தது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

*அவைகளில் சொல்லப்பட்ட பல சேதிகள் இதுவரை மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்து வந்துள்ளன.

*Holy Trinity- கிறித்துவ மதத்தின் ஆணி வேராகக்கருதப்படும் விஷயம்; ஆனால், அது கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) முடிவு செய்யப்பட்டது. ஆனால், கதையில் ஓட்டெடுப்பு மூலம் இந்த விவாதம் முடிவுக்கு வந்ததென்று கூறப்பட்டுள்ளது; எது சரியோ?

*Priory of Sion, Knights of Templars, Opus Dei - என்று கதையில் கூறப்படும் இந்த அமைப்புகள் பற்றிய எல்லாமே முழு உண்மை என்று தெரிகிறது. அதுவும், மேற்கூறியவற்றில் முதலிரண்டும் இப்போது வழக்கற்றுப் போனவை; ஆனால், மூன்றாவது இன்னும் இயங்கி வரும் ஒரு அமைப்பு. அதனால்தானோ என்னவோ, கதாசிரியரின் வெப்சைட்டில் அதைப்பற்றி இருந்த பக்கங்கள் 'தற்காலிகமாக' நீக்கப்பட்டுள்ளன; என்ன அரசியலோ!

*Opus Dei -க்கும் கத்தோலிக்கத் தலைமைக்கும் இருந்த உறவு பற்றிச் சொல்லப்பட்ட சேதிகள் பற்றி இன்னும் விபரங்கள் பார்க்கவில்லை.

*மிக முக்கியமானதாகவும், கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது: ஜீசஸ் திருமணமானவர் என்பது. திருமணம் என்பது தன்னிலே தவறானதாக இல்லாவிட்டாலும், ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும். 'நம்பிக்கை / விசுவாசம் / faith / fidelity - என்ற உணர்வுகளோடு இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையல்ல; புறங்கையால் ஒதுக்கிவிட்டுப் போய்விடுவார்கள் - என் சில கிறித்துவ நண்பர்கள் போல. ஆனால், என்னை மாதிரி 'கேசு'கள்தான் இதன் உண்மைநிலையைக் காண ஆசைப்படுவார்கள். நானும் முயன்றேன்; மிகச்சரியான விடை கிடைக்கவில்லை. தேடல் தொடரும்...

some informative and interesting web sites:

http://www.mystae.com/restricted/streams/masons/mysteries.html
http://www.rosslyntemplars.org.uk/
http://en.wikipedia.org/wiki/The_Da_Vinci_Code - objections or deviations

about templars &priory of sion -----http://altreligion.about.com/gi/dynamic/offsite.htm?

http://www.fiu.edu/~mizrachs/poseur3.html

Mysteries of Rosslyn Chapel, the Templars and the Grail ---
http://altreligion.about.com/gi/dynamic/offsite.htm?site=http://www.ancientquest.com/deeper/2002%2Dkrm%2Drosslyn.html
http://www.mystae.com/restricted/streams/masons/mysteries.html
http://www.rosslyntemplars.org.uk/http://en.wikipedia.org/wiki/The_Da_Vinci_Code - objections or deviations






Wednesday, August 10, 2005

47. இன்னொரு எம்.ஆர்.ராதா வரணுமோ...?

"எதற்காக நீங்கள் திரையுலகிற்கு வந்தீர்கள்"
"நான் கலைத்தாய்க்குச் சேவை செய்யவே நடிக்க வந்தேன்"

நம்புனால் நம்புங்கள்; இல்லாவிட்டால் போங்கள். "அந்தக் காலத்தில்" புது நடிக, நடிகையர்களைப் பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்களின் முதல் கேள்வியும், அதற்கு அவர்கள் பெரும் பதிலும் இவை. பத்திரிககையாளர்கள் கேட்டு நடிக, நடிகையர் அது மாதிரி பதில் சொன்னார்களோ; இல்லை, பத்திரிகையாளர்கள் தாங்களாவே அப்படி எழுதிக்கொள்வார்களோ தெரியாது. ஆனால், இதுதான் ஒரு பேட்டியின் வழக்கமான ஆரம்பம். இதை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் அப்பாவிகள் நிறைய இருந்தார்கள் என்பதென்னவோ உண்மை.

இந்தக் கேலிக்கூத்தை முதன் முதலாக உடைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. நான் காசுக்காகத்தான் நடிக்க வந்தேன். கலைத்தாய்க்குச் சேவை செய்யவே நடிக்க வந்தேன் என்று சொல்றவங்களையெல்லாம் காசில்லாமல் ஓசிக்கு நடிக்கச் சொல்லுங்க, பார்ப்போம் என்று அவர் சொன்னபிறகே இந்த கேலிக்கூத்து நின்றது.

அந்தக் காலத்து நடிக, நடிகையர் சொன்னதை எப்படி மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்க முடியும் என்ற சந்தேகம் யாருக்காவது தோன்றினால் - அவர்களுக்கு ஒரு வார்த்தை. "நான் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்; என் உயிர் உள்ளவரை உங்களுக்கு உழைக்கவே நான் இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் தொண்டர்கள், மக்கள் இன்றும் எவ்வளவு.

"அரசியல் ஒரு தொழில்; அதை ஒரு தொழிலாகவே நான் மேற்கொண்டுள்ளேன்" என்று ஏதாவது ஒரு அரசியல்வாதியாவது, அன்று எம்.ஆர்.ராதா உண்மையைச்சொன்னது போல, சொன்னால் ஒருவேளை நாம் உண்மையை உணர்வோமோ?

46. மதுரைக்குப் போயிட்டு வர்ரேன்...

சென்னையில் மகள் வீட்டில் ஒரு மாதம் டேரா போட்டுவிட்டு, நம்ம ஊர் நாமில்லாமல் எப்படி இருக்கின்றதோ, என்னவெல்லாம் ஆச்சோ என்ற கரிசனத்தோடு சரி, நம்ம ஊரை ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோம் என்று மதுரைக்குப் புறப்பட்டு, நேற்று காலைல மதுரைக்குள்ள நுழைஞ்சேன். ஆஹா, நம்ம ஊரு காத்துன்னு நினைச்சுக்கிட்டு ஒரு மூச்சு இழுக்கலாமேன்னு ஒரு இழுப்பு இழுக்கறதுக்குள்ள காதில அறையிறது மாதிரி சினிமாப் பாட்டுச் சத்தம் காதைத் துளைச்சது. ஏதோ ஒரு கோயில்; ஏதோ ஒரு விழா; ஒலிபெருக்கியில் அம்பி ஐயங்கார் ஐய்யராத்துப் பொண்ணைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார் - ரொம்பவே சத்தமாக. ஒரு மாத சென்னை தங்கலில் ஒரே ஒரு நாள்மட்டும் இந்த ஒலிபெருக்கிச் சத்தத்தைக் கேட்டேன். ஆனால், எங்கள் ஊரில் மனுஷப் பய பிறந்தா பாட்டு, காது குத்துக்குப் பாட்டு; இன்னும், புனித(!?) நீராட்டுக்கு, அதுக்கு இதுக்கு என்றும், அதோடு செத்தாலும் பாட்டு என்று வாழ்வே எங்களுக்கு ஒலிபெருக்கியோடுதான்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்கூட ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல்துறையின் அனுமதி பெறவேண்டும் என்றொரு கட்டாயம் இருந்தது. இப்போதோ அப்படி எதுவுமே கிடையாது. அது பகலா, இரவா, தேர்வு நேரமா, எந்தத் தடையும் கிடையாது. குழாய் ஒலிபெருக்கி கூடாதென்று ஒரு சட்டம் வந்தது. சட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதை ஒரு தலையான கலையாகவே செய்யும் எம் நற்றமிழர்கூட்டம் இதற்கெல்லாம் தலைவணங்குமா என்ன? இராட்சச சைஸ்களில் ஸ்பீக்கர் பெட்டிகள் இப்போது தமிழ் இசைச் சேவை செய்து வருகின்றன தங்கு தடையின்றி. அதிலும், அந்த அதிரும் பெட்டிகளுக்கு முன்பாக நின்றுகொண்டு பொங்கி வரும் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்தும் கலாரசிகர்கள் - உங்கள் ஊரில் உண்டா, என்ன?



* * * * *

Sunday, August 07, 2005

45. எனது 'காஷ்மீர்' பிரச்சனை.

முன்பிருந்தே இந்த காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி எனக்கொரு கருத்துண்டு. நமது அரசினரின் தேவையற்ற, தவறான முடிவுகள் நம்மை இந்த காஷ்மீர் பிரச்சனையைக் காலம் காலமாய் தொடரும் ஒரு பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே அது. இந்தப் பிரச்சனையை நமது அரசு கையாண்ட முறை மட்டுமல்லாமல், அதில் நமது அடிப்படை உரிமைகளே ஒரு தவறான புள்ளியில் ஆரம்பித்து நீண்ட நெடுங்கோடாகி, முடிவில்லா தொடர்கதையாகி விட்டது. தினமும் நம் செய்திப்பத்திரிக்கைகளின் முதல் பக்கத்திலேயே காஷ்மீர்-குண்டுவெடிப்பு-தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் சண்டை என்பது போன்ற செய்திகள் இல்லாதிருந்து விட்டால் அன்றே நம் நாட்டின் அனைவருக்கும் நல்ல நாள் அது. ஆனால் அப்படிப்பட்ட நாட்கள் மிக அபூர்வமாகவே நமக்குக் கிடைக்கின்றன.

இந்தக் கருத்துக்களை என் தனிப்பட்டக் கருத்துக்களாகவே வைத்திருந்தேன். அந்த மாதிரியான கருத்துக்களை வெளியேசொன்னால் நம் மக்கள் எப்படி அதை எடுத்துக் கொள்வார்களோ என்ற நினைப்போடே 'My Kashmir Problem" என்று ஆங்கிலத்தில் allegory மாதிரி ஒரு கட்டுரை எழுதினேன்; அப்படி ஒன்று எழுதியதும் மறந்தே போயிற்று - சமீபத்தில்
தமிழ்சசி மூன்று தொடர்கட்டுரையாக காஷ்மீரைப்பற்றி எழுதியதைப் படிக்கும்வரை. நல்ல முயற்சி. குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்ற தொனியில் எழுதப்பட்ட அந்த்க் கட்டுரைகளை வாசித்ததும் என் பழைய குப்பைகளைக் கிளறி, அதை rediscover செய்து என் ஆங்கிலப்பதிவில் சேர்த்தேன். உங்கள் பார்வைக்கும் கொண்டுவருகிறேன்.

காஷ்மீரை இப்படி கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருப்பது தேவைதானா என்று நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

Thursday, August 04, 2005

44. இந்தி எதிர்ப்பு - பாகம்-3 (அல்லது) 38-க்குப் பின்குறிப்பு...2.

அந்த போராட்ட நாளில் நடந்து முடிந்த காரியங்கள் அத்துடன் முடியவில்லை; சொல்லப்போனால் அதன்பிறகே பலப்பல நிகழ்வுகள் தமிழ் நாடெங்கும் தொடர்ந்தன. அதில் முக்கியமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் கிளர்ச்சி மேலும் கொழுந்துவிட, போலீஸ் துப்பாக்கி சூடும் நடந்து. அதில் இறந்துபட்ட இராஜேந்திரன் என்ற மாணவருக்கு ஒரு சிலை பல்கலைக்கழகத்தினுள்ளே வைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

மதுரையில் அந்தப் போராட்டம் முடிந்ததும் ஊரே சில நாட்களுக்கு மயான அமைதியில் இருந்தது. கூர்க்கா படையினர் மதுரையில் முகாமிட்டனர். நம் போலீஸ் மீது நம்பிக்கை இல்லாமல் அவர்களைக் கொண்டு வந்ததாக மக்கள் எண்ணியதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்பு. அன்று ஏற்பட்ட வெறுப்பு அவர்களை அடுத்த தேர்தலில் (1966) ஆட்சியில் இருந்தே அகற்றியது. கூர்க்கா படையினரைப் பார்க்கவே எங்களுக்கு அச்சம். யானைக்கல் அருகே குவிந்திருந்தனர். அதோடு, மாணவர்களைக் குறிவைத்து சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீசார் எங்கும் திரிவதாக மாணவர்களுக்குள் பேச்சு. கல்லூரி விடுதிகள் பூட்டப்பட்டன. நண்பர்கள் பலரும் ஊருக்குச் சென்று விட்டனர். கேரளாவிலிருந்து வந்த வகுப்பு நண்பன் தனியறை எடுத்து - அந்த நாட்களில் நான் அவனோடே தங்கியிருக்க வேண்டுமென்று என் அப்பாவுடன் அவன் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையுடன் - வடக்குமாசி வீதியும், மேலமாசி வீதியும் இணையும் இடத்தில் ஒரு குட்டிச் சந்தில் தங்கியிருந்தான். பல பத்திரிக்கைகள் வாங்கி சூடான அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது, முதல் அமைச்சர் பக்தவத்சலம் கார்ட்டூன் ஒன்று - 'தீ பரவட்டும்" என்ற தலைப்பில் வந்திருந்ததைப் பார்த்து நான் பெரியதாக வரைய முயற்சிக்க அது எப்படியோ 'அச்சுஅசலாக' வந்து விட நண்பர்கள் அதை trace எடுத்து (photocopying ஏது அப்போது?)multiple copies தயார் செய்து, அதை சுவர்களில் ஒட்டலாமென முடிவெடுத்து, முதலில் ஒரு டீ குடிக்கலாமென டீக்கடைக்கு வந்தால் - அங்கே நின்ற மூன்று பேரைப்பார்த்துத் திகைத்து நின்றோம். அரண்டவன் கண்ணுக்கு அப்படிப் பட்டதோ, இல்லை அவர்கள் நிஜ போலீசாரோ தெரியாது. அவர்களும் எங்களிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் பேச ஆரம்பிக்க எங்களுக்கு உதறல். நல்லவேளை படங்களை முன்யோசனையோடு பாடப் புத்தகங்களோடு ஃபைலில் வைத்திருந்ததால் பிழைத்தோம். மனம் தளராமல் இரவு வெகுநேரம் கழித்து திரும்பி வந்து வாழைப்பழங்களைப் பிசைந்து பசையாக மாற்றி அங்கங்கே ஒட்டிவிட்டுப் போனோம். முதல் படம் அந்த டீக்கடையில்தான். மக்களெல்லாம் மாணவர்கள் பக்கம்தான். டீக்கடை அண்ணனும்தான். அப்போது இதில் மிகத் தீவிரம் காட்டியது அந்த மலையாள நண்பன். எங்க மக்கள் ஏன் இந்தியை உங்களைப்போல் எதிர்க்கவில்லை என்று கவலையோடு கேட்பான்.

இந்த அளவு எதிர்ப்பு உணர்ச்சி தமிழ்நாடு முழுவதுமாக அன்று பரவியிருந்தது என்றால் அப்போது நாடாளுமன்றத்தில் இது பற்றிய காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. அண்ணா அவர்கள் இதில் முன்னணியில் இருந்தவர்.

மாலன் குறிப்பிட்டதுபோல்,
"இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டாலும்,அது இந்தி ஆதிக்கத்திற்கான கிளர்ச்சி. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எது நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற விவாதம் அரசமைப்பு சட்ட மன்றத்தில் நடந்தது. அப்போது ஒரு முடிவுக்கு வரமுடியாததால், 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும். பின்னர் இந்தி ஆட்சி மொழியாகும் என் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்றத்தில் நாஞ்சில் மனோகரன் எழுப்பிய விவாதத்தின் போது நேரு, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்' என்று ஓர் உறுதி மொழி கொடுத்தார்.

அந்த உறுதிமொழியில், :English MAY continue till...." என்பதை "English SHALL continue...." என்று மாற்ற விவாதங்கள் நடந்தன. அன்று தங்கள் வெறும் மொழித் திறமையைக் காண்பிப்பதற்காக இவ்வாறு பேசுவதாகக்கூட கருதப்பட்டது. ஆனால், இப்போதுள்ள அரசியல் நிலையிலும், நம் அரசியல்வாதிகள் தங்கள் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மரியாதையையும் புரிந்த பின்னர் அன்று திமுக தலைவர்கள், நேருவின் வார்த்தைகள் சட்டமாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது எவ்வளவு சரி என்பது தெளிவாகும்.


1964ல் நேரு காலமாகிவிட்டார். சாஸ்திரி பிரதமராக ஆனார். அவர் 15 ஆண்டுக் காலம் முடியும் 1965 ஜனவ்ரி 26 முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தார். நேருவின் உறுதிமொழி சட்டமல்ல, அதனால் அதனை நடைமுறைப்படுத்தத் தேவை இல்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது. அதனால்தான் ஜனவரி 25 போராட்டநாளாகக் குறிக்கப்பட்டது.

உலகத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன அண்ணனது கரங்கள் வலுவற்றிருக்கலாம் ஆனால் உன்னை இரண்டாம் தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட அவை துவளப்போவதில்லை என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அதிலிருந்த இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை வதைத்தது".


இதுதான் அன்றைய உண்மையான நிலை.

நீங்கள் இந்தி படியுங்கள்; வட இந்தியாவில் உள்ளவர்களுக்குத் தென்னிந்திய மொழி ஒன்றை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்றொரு வாதம்கூட வைக்கப்பட்டது. ஆனால், இது ஒரு ஏமாற்றுவித்தை என்பது நன்கு புரிந்தது. ஏனென்றால், நாங்கள் பள்ளியில் படிக்கும்போது இந்தி ஒரு பாடமாக இருந்தது. ஆனால், அந்த மதிப்பெண்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால் நாங்கள் அதைக் கொஞ்சம்கூட மதித்ததில்லை. பாவம் எங்கள் இந்தி ஆசிரியர்கள். இதே போன்றுதான் இந்த compromise formula இருந்திருக்கும்.


மேலும் சில நண்பர்கள் சொன்ன சில கருத்துக்களை இங்கு உரிமையோடு மேற்கோளிடுகிறேன்.

அருள்:

"ஹிந்தி தேசியமொழி என்ற முடிவும் எப்படி சற்றும் நடுநிலைமையின்றி செய்யப்பட்டது என்பதை அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த சி. சுப்பிரமணியம் தான் உயிருடன் இருக்கும் வரையில், ஹிந்துவில் மொழிப்பிரச்சினை பற்றி யார் தவறான கருத்துத் தெரிவித்தாலும் உடனே ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் எழுதிவிடுவார். நடுவண் அமைச்சில் கூட்டாட்சி இயல்பாக வந்த விபிசிங் காலம் முதற்கொண்டு இம்மொழிப்பிரச்சினை அவ்வளவு பெரிதாக இல்லை. அப்படி தவறாக ஏதோ தேச எதிர்ப்பு போல் இதைக்காட்டிப் பேச ஆளில்லாததால் இப்போது விவாதமும் இல்லை. மற்றபடி தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்கள் அத்தனையும் நியாயமானவைதான்".

தங்கமணி:
"இந்திய ஒன்றியம், பல தேசிய இனங்கள் அடங்கிய கூட்டாட்சி அமைப்பு. அதில் எல்லா மொழிகளும் சமமான அந்தஸ்தும், உரிமையும் பெறமுடியவில்லை எனில் அதற்காக போராடவேண்டியது மிகவும் அவசியமானது. ஏனெனில் அது மொழி என்பதைத்தாண்டி அரசியல் அதிகாரத்தைப் பற்றி பேசுவதாக அது ஆகிறது".

--இதைத்தான் 'இரண்டாந்தரக் குடிமகன்' என்ற நிலை ஏற்படும் என்ற அச்சத்தைக் கொடுத்தது. மொழியின் மூலமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியோ ஒரு முறை ஒரு தென்னிந்தியர் அரசியல் தலைமையை தில்லியில் ஏற்றார். அதைத்தவிர இதுவரை அரசுத் தலைமை வட இந்தியர்களிடமே இருந்துவந்துள்ளது. இதோடு மொழியாலும் அவர்களுக்கு மேல் இடம் கிடைத்திருந்தால்...It is only a hypothetical situation. But still...

வளவன்:
"அதென்ன 'வடநாட்டில் பஞ்சம் பிழைக்க வேண்டும்' என்கிற வாதத்தை இந்தி எதிர்ப்பு பற்றி விவாதம் வரும்போதெல்லாம் சொல்கிறீர்கள்".

--இந்தி தெரிந்திருந்தால் ஏதோ அவர்களே வலிய வந்து நம்மைக் கையைப் பிடித்து கூட்டிட்டுபோகப் போறதுமாதிரி மக்கள் எப்படி கற்பனை செய்கிறார்கள், வளவன்?

ஆரோக்கியம் உள்ளவன்:உங்கள் வாதத்தை உடைத்து, உடைத்து(literally!?) இங்கு தருகிறேன்.

"இன்றும் வட நாட்டிலும், பிற நாடுகளிலும் "இந்தியன் என்கிறாய், இந்தி தெரியாதா?" என்று ஏளனமாகவும் கேட்கப்படும்போதும்,

---இந்த (தாழ்வு) மனப்பான்மை தமிழர்களாகிய நம்மைத்தவிர பிறரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு மொழி - அது எம்மொழியாயினும் - தெரியவில்லையென்பதற்காக நான்(ம்) ஏன் வெட்கப்படவேண்டும். i dont know டமில் - என்பதைப் பெருமையாகச் சொல்லும் தமிழன் ஏன் ஆங்கிலமோ, இந்தியோ, இன்னும் என்னென்ன மொழியோ தெரியாதிருப்பதற்கு வெட்கப்படவேண்டும்; கவலைப்படவேண்டும் என்பது என்ன வகை சித்தாந்தம் என்று எனக்கு உண்மையிலேயே புரியாத விஷயம். இதில் என்ன ஏளனம்?அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன்கள், சைனாக்காரர்கள் பலர் கொஞ்சமும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கிறார்கள்; ஆனால், வெட்கப்படவேயில்லை.

இந்தி அறியாததால் வடமாநிலங்களில் உண்மையிலேயே இரண்டாம் தரக் குடிமகனாக இருப்பதாலும்,

-- இரண்டு பதில்கள்:

1. நன்றாகச் சொன்னீர்கள்; இப்போதாவது வடமாநிலங்களுக்குச் செல்லும்போதுதான் அந்த நிலை; இந்தி ஆட்சி மொழியாகவோ, பொது மொழியாகவோ ஆகியிருந்தால், நாம் எங்கேயும், எப்போதும் இரண்டாம் தரக் குடிமகனாகவே இருந்திருப்போம்.

2. உண்மையிலேயே சொல்லுங்கள்; இந்தி தெரியாததால் கடைகண்ணிக்குப் போய் பேரம் பேச முடியாமல் போகலாம்; கொஞ்சம் ஏமாந்தும் போகலாம். Do you say that we undergo insurmountable difficulties as far as our official business is concrned? Come on... நம்ம ஊரில் தமிழ்பேச முடியாத வட இந்தியர்களைப் பார்த்து ஏளனமாகவா சிரிக்கிறீர்கள்?

...இந்தி எதிர்ப்பு என்பது "தமிழ் வெறியாகவே" எனக்குப்படுகிறது.

It is a matter of perspective. ஆனால், அந்த 'வெறி' அன்று இல்லாமல் இருந்திருந்தால் என் போன்ற 'மொடாக்குகள்' தமிழ் (வீட்டுக்கு), இந்தி (நாட்டுக்கு), ஆங்கிலம்(உலகத்துக்கு) என்று மூன்று மொழிகளின் பழு தாங்காமல் பள்ளிப் படிப்பைத் தாண்டி இருக்கமாட்டோம்!

ஒருவேளை, இந்தி அறிந்திருந்திருந்தால் வடநாட்டு இந்தியனிடம், தமிழை விட இந்தி எந்தவகையிலும் உயர்ந்ததில்லை என உணர்த்தி இருக்கலாம்"..

அப்போதுகூட நம் 'டமிழ்ஸ்' அதை ஆங்கிலத்தில்தான் செய்திருப்போம்!!
தமிழைச் செம்மொழியாக்கி அதையும்தான் இப்போது உணர்த்தி விட்டோமே; அப்படி தோன்றவில்லையா உங்களுக்கு!


மாயவரத்தான் :
"பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பது போன்றது இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியை எதிர்த்ததும்"

வேண்டாம், மாயவரத்தான்; இது தப்பு. எல்லாவற்றையுமே ஜாதிக்கண்கொண்டு பார்ப்பது தவறு. உங்கள் வயது என்னவென்று தெரியாது.ஆனாலும் எல்லா பதிவாளர்களைப்போலவே நீங்களும் இளையவராக இருக்கவேண்டும். நடந்தைவைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. பிறந்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நான் மாணவனாக இருக்கும்போது என் ஜாதி என்னவென்று மற்றவர்களுக்கோ, அவர்கள் ஜாதி என்னவென்று எனக்கோ தெரியாது. மாணவர்கள் மத்தியில் இன்று இருப்பதுபோல ஜாதி வேறுபாடுகளோ, அதனால் ஏற்படக்கூடிய சச்சரவுகளோ மிக மிகக் குறைவு; எங்கோ, எப்போதோ ஒன்றிரண்டு நடந்திருக்கலாம்; அவ்வளவே. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதேவும், வேலைக்காக நாம் செல்லும் இடங்களிலும் நமக்கு முன் நம் ஜாதி அங்கே ஆஜராகிவிடுகிறது. ஆனால், அதிலும் ஒரு ஆச்சரியம்; வெளியே நடக்கும் நிதர்சனம் வேறு; உள்ளே -நமது ப்ளாக் உலகத்தில்- நடக்கும் 'நிழல் யுத்தம்'? வேறு. இதைப்பற்றி எனது கருத்துக்கள் இங்கே.

எனக்குத் தெரிந்தவரை 50-களில் அழுக்கு வேட்டியுடன் இருந்தாலும் ஹோட்டலில் வேலை செய்யும் பிராமணரை 'சாமி' என்றுதான் அழைப்போம். அவர்களுக்கு சமூகத்தில் இருந்த இடம்பற்றிச் சொல்ல இதைச் சொல்கிறேன். 60-களில் அது அப்படியே மாறியது - நன்றி பெரியாருக்கு. ஆனால், என்னதான் போராட்டங்கள், பிள்ளையார் சிலை உடைப்பு என்றெல்லாம் நடந்துகொண்டிருந்தாலும் ஜாதித்துவேஷங்கள் மக்கள் மனங்களில் இல்லை; இல்லவே இல்லை. நான் சொல்வது பெரும்பான்மையான மக்களைப் பற்றி - the social mileu அப்படித்தான் இருந்தது. இன்று நீங்கள் பேசும் பகைமை உணர்ச்சிகள் எனக்குத்தெரிந்தவரை மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டும், அதன் தொடர்பாக எழுந்த போராட்டங்களுக்குப் பிறகுதான். எதற்கும் உங்கள் அப்பா, சித்தப்பா, மாமா போன்றோரை விசாரியுங்கள்- நான் சொல்வது சரிதானா என்று. இதெல்லாமே கடந்த 15-20 ஆண்டுகளுக்குள் நம்மிடம் நுழைந்த விஷம். நீங்கள் சொல்வதுபோல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும், ஜாதிகளுக்கும் தொடர்பு இல்லை. என் போன்றோர் அந்தப் போராட்டகாலத்தில் மாணவனாக இருந்தற்காகப் பெருமை கொள்கிறோம்;(ஆ.உ., அது ஒரு accidentதான்; இருந்தும்..) அதை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

எதற்கும் எதற்குமோ ஏன் முடிச்சு போடணும். சமூகம், நாம் எல்லோரும் சேர்ந்ததுதானே. எல்லாமே சரியாக இருக்க நாம் என்ன ஒரு Utopian society-யிலேயா இருக்கிறோம்? என்னை மாதிரி, உங்களை மாதிரி எல்லோரும் சேர்ந்ததுதானே. தவறுகள் - வரலாற்றுத் தவறுகள், நிகழ்காலத் தவறுகள் - எத்தனையோ நம்மிடம். குற்றமில்லாதவன் யார் நம்மிடம், சொல்லுங்கள். ஆனால் , வலைப்பதிவுக்குள் வரும் அளவிற்குப் படிப்பும்,ஞானமும் உள்ள நாம்தான் அந்தத் தவறுகளைத் திருத்தவேண்டும்; திருந்த வேண்டும்.



அய்யே!! எல்லோரும் மன்னிக்கணும் மன்னிக்கணும், ஏதோ நல்லொழுக்க வகுப்பு வாத்தியார் மாதிரியில்ல நாம்பாட்டுக்கு போயிட்டேன்...sorry...ஒரு digression-தான், நம்ம வகுப்பு மாதிரி !! வாத்தியார் புத்தி இதுதான்னு உட்ருங்க. மக்களே!!


Okay..Rewind பண்ணுவதற்குப்பதில் இன்றைய நிலையில் இருந்தே ஆரம்பிப்போமே. உண்மையிலேயே இந்தி பெரும்பான்மையரின் மொழிதானா என்பது போன்ற கேள்விகளுக்குள் செல்வதற்கு முன் நம்மில் பலர் தி.மு.க. இந்த பிரச்சனையைத் தங்கள் அரசியல் ஆயுதமாக எடுத்துக்கொண்டதை ஏதோ ஒரு பெரிய தவறுபோல காண்பிப்பதுண்டு. அரசியல் கட்சிகளுக்கு அவ்வப்போது ஒரு ஆயுதம் தேவைதான். எடுக்கும் ஆயுதம் நமக்கு, மக்களுக்கு நல்லதா என்றுதான் பொதுவில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை அன்று தி.மு.க. இந்தப் பிரச்சனையை எடுக்கவில்லை; நமதுஅண்டை மாநிலங்கள் ஏதும் எதிர்க்காமல் இருந்ததுபோல நாமும் இருந்து அதன் மூலம் இந்தி நம் தேசிய மொழியாக மாறியிருந்தால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும். அதைவிட ஏறத்தாழ Hindi-Belt-ன் கட்சியாக இருக்கும் B.J.P. என்னவெல்லாம் செய்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை; அவர்கள் ஆட்சியில், வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருதத்திற்கு, இறந்துபோய்விட்ட அந்த மொழியை 'வளர்ப்பதற்கு' எத்தனை முயற்சி; பாடத்திட்டங்களில் அவைகளைக் கொணர எத்தனை எத்தனை முயற்சி; யார்தான் கேட்பார்களோ தெரியாது ஆனால் தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு! இறந்த மொழிக்கே இந்த ஆர்ப்பாட்டம், ஆராதனை என்றால் இந்திக்கு என்னென்ன மரியாதை கிடைத்திருக்கும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது என்பது கண்ணை மூடிக்கொண்ட பூனையின் நிலைதான்.

ஆனால் காங்கிரஸ் தென்னாட்டு மாநிலங்களிலும் ஓட்டுவங்கி வைத்திருந்ததால் அவர்கள் இந்த மொழிப்பிரச்சனையை அணுகியதிற்கும், இந்தி மாநிலங்களை மட்டும் நம்பி இருக்கும் பி.ஜே.பி. இந்திக்காக எந்த அளவிற்குச் சென்றிருக்கும் என்ற நிலையினையும் பார்க்கும்போது தி.மு.க.வின் அன்றைய நிலைப்பாட்டிற்கு நாம் அந்தக் கட்சிக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.
ஆனாலும், இன்று மொழிப்போரை நடத்தி இந்தியைத் தடுத்த பெருமையை அந்தக் கட்சி முழுமையாக எடுத்துக்கொண்டிருந்தாலும், அன்று காங்கிரஸ் , நடந்த போராட்டங்களுக்கும், மாணவர்களின் உயிரிழப்பினுக்கும் திமுக-வே காரணம் என்று சுட்டியபோது அது மாணவர்களாகவே உணர்ச்சி வேகத்தில் நடத்திய போராட்டம்; நாங்கள் ஒன்றும் தூண்டவில்லை என்று கூறினார்கள். ஆனால் அவர்களே சூத்திரதாரிகள் என்பது குழந்தைகளுக்குக்கூட தெரியும். (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!)

66-ல் நடந்த தேர்தலில் மாணவர் பலர் போல நானும் ஒரு தி.மு.க. அனுதாபி; ஓட்டுப் போட்டேன். அதன்பிறகு ஓட்டுப் போட்டதும் உண்டு; எதிர்நிலை எடுத்ததுவும் உண்டு. ஆகவே என் கருத்துக்களை ஒரு கட்சிக்காரனின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை அந்த இளம் பிராயத்தில் மனதில் ஆழ்ப்பதிந்த காரணத்தால் 'மொழிப்போர்' என்று வர்ணிக்கப்பட்ட அந்த கருத்து முழுமையாக எனக்கு ஏற்புடையதாக இன்றும் இருக்கலாம். ஆனாலும், இந்தி படிக்காததால் ஏதோ தமிழ் நாட்டு இளைஞர் பலர் வேலை வாய்ப்பை இழந்து நிற்பதுபோல ஒரு தவறான கருத்தைப் பலர் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

மொழியைப்பற்றி நமக்குப் பல தவறான கருத்துக்கள் உள்ளன. தாய்மொழிக்கல்வி என்பது உலகளாவிய ஒரு விஷயம். 1950-ல் சுதந்திரம் வாங்கிய இந்தோனேஷிய நாட்டு நண்பர், "So, you still carry that yoke" என்று கேட்டார். ஆனால் நாமோ இன்னும் ஒரு நூற்றாண்டு போனால்கூட விட முடியாத ஆங்கில மோகத்தோடு - என்னையும் சேர்த்தே - இருக்கிறோம். கல்லூரி ஆசிரியனாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாம் கல்வித்துறையில் தவறான அணுகுமுறைகள் வைத்திருக்கிறோம். தாய்மொழிக்கல்வி என்பது இன்றைய நிலையில் ஒரு நிறைவேறாக்கனவு என்றே நினைக்கிறேன்- a pipe dream. பாடத்திட்டங்களை மாற்றியாகவேண்டும்; ஆனால் அது நடக்கப்போவதில்லை! - a catch-22 situation?. ஏனெனில்,ஆனானப்பட்ட நமது ஜனாதிபதி சொன்ன கருத்துக்களையே யாரும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. தாய்மொழியில் பாடங்களைப் படிக்கவேண்டும் என்றால் ஆங்கிலம் தேவையில்லை என்று பொருளில்லை. இளம் வயதில் நிறைய மொழிகளைக் குழந்தைகள் படிக்க முடியும். ஆறாம் வகுப்புவரை சிறிதே கணக்கும், மற்றபடி ஆழமாகவும், அகலமாகவும் மொழிக்கல்வி தரப்படவேண்டும். மூன்றாம் வகுப்புக் குழந்தை இங்கிலாந்து நாட்டின் கவுண்டிகளையும், அங்கு விளையும் rye என்ற agricultural produce (!) பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இளம் வயதில் மொழிகளை நன்கு ஆழமாய் படித்து, பின் ஆறாம் வகுப்பிலிருந்து மற்ற பாடங்களைப் படிப்பதே நல்லது. என்றைக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர bazar notes in the form of WORKBOOKS வந்ததோ அன்றே நல்ல ஆங்கிலப் போதனைக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. நாங்கள் படிக்கும்போது அது போன்ற - fast food மாதிரி - ரெடிமேட் சரக்குகள் கிடையாது. ஆசிரியர்களுக்கு முனைந்து சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாயமே இருந்தது. இப்போது எந்த மீடியத்திலிருந்தும் வரும் கல்லூரி மாணவனுக்கும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ தன் கருத்துக்களைச் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை என்பதே உண்மை - ஆங்கில மீடியத்தில் படித்தும். இந்த லட்சணத்தில் (கொஞ்சம் கோபம், நம் தலைவிதியை நொந்து) இந்தியும் படிக்காததுதான் குறையென்று பலரும் பேசுவது வேடிக்கைதான்.

கோபித்துக் கொள்ளாதீர்கள் - நிறைய digression! சொல்ல வேண்டியதையெல்லாம் உங்களிடம் கொட்ட ஆசை - ஒருவேளை, உங்களில் யாராவது ஏதாவது செய்யக்கூடிய உயர்நிலை அடைந்தால்...! ஒருவருக்கு பல்கலைக் கழகத்தில் செனட்டர் பதவி கிடைக்கலாம்(வாழ்த்துக்கள், மாலன்!). ஏன், நாளைக்கு வேறொருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்றால் இந்த மாற்றங்களைக் கொண்டுவந்துவிட மாட்டா(டீ)ர்களா, என்ன? ஆரம்ப வகுப்புகளில் மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து - இந்தியும் படிக்கலாமே தாராளமா - அதனால் குழந்தைகள் உயர்கல்வியில் 'புரிந்து' படித்து, படித்தவைகளை உள்வாங்கக்கூடியவர்களாக ஆனால் - ஆகா! அப்படி ஒரு நிஜத்தைத் தரிசிக்க -- வலைப்பதிவின் எழில்மிகு வாலிபர்களே, இளைஞர்களே வாருங்கள்... வாருங்கள் என்று இந்தக் கிழவன்....அச்சச்சோ..மறுபடி எப்படியோ சாக்ரடீஸ் வசனம் ஞாபகத்திற்கு வந்து...எல்லாம் ஒரு வயசுப் ப்ராப்ளம், இல்ல ?

43. உங்களுக்கு என் பதிவுகளில் பிடிக்காதது...

நானும் பாத்துட்டேங்க. புகைப்படத் தனிப்பதிப்புகளுக்கு மெனக்கெட்டுபோய் படம் பாக்கிறவங்ககூட நான் போடுற படங்களைக் கண்டு கொள்வதேயில்லை; அதேபோல்தான் என் ஆங்கிலப் பதிவுகள். ஆனால், நானும் விடுவதாக இல்லை. நீங்களாச்சு, நானாச்சு ஒரு கை பாத்திடுறதுன்னு களத்தில குதிச்சிட்டேன். முதலில், போனாப்போவுதுன்னு ஆறே ஆறு படம் கறுப்பு வெள்ளையில் வருது. இன்னும் வரும்; ஜாக்கிரதை!


இந்தி எதிர்ப்பு..பாகம் 3 - விரைவில்!

42. "அநியாய EXPRESS"

காலங்காத்தால எழுந்திருச்சதும் கண்ணுமுன்னால அழகான பொண்ணு ஒண்ணு; அழகுச்சிரிப்பு; கையில் பெரிய பூங்கொத்து - நல்லாதான் இருந்திச்சு; அட, என்ன விசேஷம் நமக்குன்னு தூக்கக் கலக்கத்தில ஒரு சந்தேகம். கண்ணைக் கசக்கிக்கிட்டு பார்த்தா - நம்ம New INDIAN EXPRESS முதல் பக்கம்தான் அப்படி என்னைப் பார்த்து சிரிச்சது.

முதல் பக்கத்திலேயே Air Tel விளம்பரம். ஒருவேளை பக்கம் மாறி வந்திருக்கோன்னு, நினைச்சு திருப்பிப்பார்த்தா விளம்பரம்தான் முதல் பக்கம்! வழக்கமான தலைப்புச் செய்திகள் எல்லாம் 3-ம் பக்கத்திற்கு போயாச்சு. இது என்ன பத்திரிகை தர்மமோ? நிச்சயமா இது காசுக்காக மட்டும்தான். வேறு காரணம் இருக்கமுடியாது. அதனாலேயே .. It stinks!
இல்ல?
இப்போ அங்கTRIVIAபோங்க!

Tuesday, August 02, 2005

41. அந்த நாள் அலங்கா(ர)நல்லூரில்...



எப்போது என்று தெரியவில்லை; அநேகமாக எனக்குக் காமிரா-கிறுக்குப் பிடித்த ஆரம்ப காலமாக இருக்கவேண்டும் - எண்பதுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன்; அந்த போலீஸ்காரரின் அரைக்கால் சட்டை எந்த period-க்கு உரியது?

40. நம்ம எடமுங்க...



தமிழ்மணத்தில், மதுரன்னா..தருமி; தருமின்னா..மதுரன்னு ஆயிருச்சில்லா..அதான்

Monday, August 01, 2005

39. இந்தி எதிர்ப்பு - 2 அல்லது 38-க்கு பின் குறிப்பு...1

இதற்கு முந்திய பதிவைத் தொடர்ந்து 3 விஷயங்களைப் பற்றி எழுதத் தோன்றியது. காவல்துறை அன்றும்-இன்றும், மாணவர்கள் அன்றும்-இன்றும், இந்தியும் நாமும் என்று எழுத ஆசை. நிச்சயமாக நான் சொன்ன மூன்றில் கடைசி இரண்டும் கொஞ்சம் விமர்சிக்கப்படலாமென நினைக்கின்றேன்; ஆகவே முதலில் நம் காவல்துறையைப் பற்றிப் பேசுவோமா?

நம் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகவே வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது என்றே எண்ணுகிறேன். சென்ற வாரத்தில் ஹரியானாவில் ஹோண்டா நிர்வாகத்தை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் நடத்திய ஊழித்தாண்டவமும், சென்ற மாதத்தில் கேரளாவில் காவல்துறையினரிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைத்த தடியடிகளும் சமீபத்திய நிகழ்வுகள். அதைவிட எனக்கு ஆச்சரியமளித்தது அரசாங்க ஊழியர்கள் நம் தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தபோது நம் போலீஸ் நடந்துகொண்ட முறை - ஆண், பெண் என்றோ, வயது வித்தியாசமோ பார்க்காமல் நடந்த விதமும், போலீஸ் வேனில் ஏறப்போகும் நிலையிலும் அரசு ஊழியர்களை அடித்துத் தள்ளியதும் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்தன. ஆச்சரியம் என்னவெனில், அவர்களும் அரசாங்க ஊழியர்களே; போராடுவதும் அரசாங்க ஊழியர்களே. நல்லது நடந்தால் கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்குமே. நமக்கும் சேர்த்துதானே அரசாங்க ஊழியர்கள் போராடுகிறார்கள் என்ற சுயநல எண்ணம்கூட வராத அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்குக் கடமை உணர்வு சிலிர்த்தெழுந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அரசின் உத்தரவை அமல் படுத்தவேண்டிய நிலையில் உள்ளவர்கள்; அதனால் அவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு கடமை ஆற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஒருவேளை யாரும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும் - கொஞ்சம் மனிதத்தன்மையோடு. வயசான வாத்தியாரையும், கலெக்டர் ஆபிஸ் பெண் குமாஸ்தாவையும் சுவரேறிக் குதித்துத் தப்பியோடவைக்க வேண்டிய அளவிற்கு விரட்டிப் போகவேண்டிய அவசியம் என்ன? அட, அவ்வளவு ஏன்? ஒருவேளை அடுத்து இவரே வந்துவிட்டால் என்ன செய்வது என்றுகூட நினைக்காமல் நள்ளிரவில் காக்காய் கொத்துவதுபோல கலைஞரைக் கொத்திக்கொண்டு போனார்களே அந்த கடமையுணர்வை என்னென்று விளிப்பது?! அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே! கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே! நான் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக் காவலர்களைமட்டும் குறை கூறவில்லை. இது ஒரு பொது வியாதியாக நம் நாட்டுக் காவலர்களிடம் வளர்ந்துவிட்ட நிலை. மனிதத்தன்மையை அவர்கள் 'கடமை உணர்வு' இந்த அளவு மழுங்கடித்துவிடுமா, என்ன?

65-ல் நடந்த அன்றைய ஊர்வலத்தில் காவலுக்கு வந்த காவலர்களின் மனப்பாங்கும், ஊர்வலத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த ஜீப் எரிந்துகொண்டிருந்தபோது அவர்களின் பதபதைப்பும் என் நினைவுக்கு வந்ததாலேயே இதை எழுதும் ஆசை வந்தது. ஊர்வலத்தின் எங்கள் பகுதி அந்த சம்பவ இடத்தை அடைந்ததும், நாங்கள் கல்லூரி மாணவர்கள் அதுவும் முதுகலை மாணவர்கள் என்று விசாரித்தறிந்ததும் 'நீங்கள் சொன்னால் பள்ளி மாணவர்கள் கேட்பார்கள்' என்று சொல்லி எங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயன்று, அதில் நாங்கள் வெற்றியடைய முடியாத நிலையில்தான் அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு என்ற முடிவை எடுத்தார்கள். அதைவிட சட்ட எரிப்பு என்ற அந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி வாசலிலேயே தங்கள் லத்தியாலும், துப்பாக்கியாலும் நடக்கவேவிடாதபடி செய்திருக்கலாம். இன்றைய போலீஸ் அதைத்தான் செய்திருக்கும்.

அன்றிருந்த காவலர்களுக்கும் இன்றைய காவலர்களுக்கும் உள்ள இந்த வெவ்வேறு மனப்பான்மைக்குக் காரணம் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே காரணம்: IMMUNITY. வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகள் சாதாரணம். காவல்நிலையங்களில் நடக்கும் பல்வேறு சேதிகளைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய எங்கள் ஊர் போலீஸ்காரர்கள் சென்னையில் அடித்த கொள்ளை; இன்னும் (சொல்லவேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்) ஜெயலட்சுமி விவகாரம், இதில் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது: பெரிய (மீசை) போலீஸ்காரருக்கு, [முகம்மது அலிதானே அவர் பெயர்?] ஸ்டாம்ப் பேப்பர் பலகோடி ஊழலில் உள்ள தொடர்பு.

குற்றவாளிகளென்றால் அவர்களெல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத்தானே பார்ப்போம்; அது என்ன, இந்த போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் சிரித்துக்கொண்டும், டாட்டா காட்டிக்கொண்டும் வருகிறார்கள்?(இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான்!) அது மட்டுமின்றி, இந்த அலி கோர்ட்டுக்கு வரும்போது ராஜநடைதான், போங்க. அதோடு, அங்கே சீருடையில் இருக்கும் அவரது துறையினர் - பழக்க தோஷமோ என்னவோ - பயங்கரமா சல்யூட் அடிப்பது கண்கொள்ளாக் காட்சி. அவர் தலையை அசைத்து அந்த சல்யூட்டுகளை receive செய்து ஒரு ஸ்டைல் நடைபோடும் அழகே அழகு. அந்த immunityதான் காவல்துறையினரின் பலம். ஒரு குற்றத்தில் ஒரு போலீஸ் - கீழ் மட்டமோ, உயர்மட்டமோ - மாட்டிக்கொண்டாரெனின் அடுத்தநாளே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவோ, இல்லை பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவோ செய்தி வரும் - வேலை நீக்கம் எத்தனை நாட்களுக்கோ, அல்லது சில மணிக்கணக்கில்தானோ; பதவி மாற்றம் என்பது பல சமயங்களில் "நல்ல" இடங்களுக்கான மாற்றலாகக்கூட இருக்கலாம். காவலர்களின் தவறுகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் கண்டுகொள்ளக்கூடப் படுவதில்லை. அவர்களின் அராஜகப்போக்கைக் கண்டித்தால் காவல்துறையின் morale போய்விடும் என்ற கருத்தில் மேலதிகாரிகள் தங்களின் கீழ் வேலை செய்யும் காவல்துறையினருக்குத் தண்டனை ஏதும் தருவதில்லை. அதோடு தவறு செய்யும் போலீஸ்காரர்களைப் பிடிக்கவேண்டியதே போலீஸ்தானே. 'இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உனக்கு' என்ற தத்துவம் நிறைய குற்றவாளிபோலீஸ்களைக் காப்பாற்றுகிறது.

திறமையான காவல்துறை என்ற பெயர் நமது தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு உண்டு. அங்கே மனித்தத்தன்மைக்கும் இடமுண்டு என்றிருந்தால்...?

தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் தவறுகள் செய்வது மனித இயல்பே. Power corrupts என்பார்கள். தண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that's a deadly combination.