சுடரை ஏற்றி வைத்து, நமக்காக தேன்கூட்டைத் தந்து இன்று நம்மிடமிருந்து பிரிந்து விட்ட சாகரன் அவர்களுக்கு என் மரியாதையோடு, இந்த சுடரோட்டப் பதிவையும் சமர்ப்பிக்கிறேன்.
சிபி,
நீங்கள் உங்களை சுடரோட்டத்தில் இணைத்த குமரனுக்கு நன்றி சொன்னது போல் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. அவர் உங்களை இணைத்தார்; நானோ மாட்டி விடப்பட்டேன். பொருத்தமான ஆளாகக் குமரன் தேடிப் பிடித்தார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி? இதெல்லாம் உங்களுக்கே நல்லாவா இருக்கு. சரி, விடுங்க. தனியா மண்டபத்தில நின்னு புலம்பணும் அப்டிங்கிறது என் தலையெழுத்து.
கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 18 x 5 = 90இதுவரை வாத்தியாரா இருந்து கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டு இருந்த எனக்கு இப்போ இப்படி ஏமாற்றுத் தேர்வு – சாய்ஸே இல்லாம கேள்வி கேட்டா அது ஏமாற்றுத் தேர்வுதானே. ‘எவையேனும் ஐந்து வினாக்களுக்கு ..’ அப்டின்னு கொடுத்துட்டு சாய்ஸே இல்லைன்னா .. இது அநியாயம் இல்லையா, சிபி. இதில ரெண்டு செக்ஷன் வேற! அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியும் உண்டு. சரி… தலையக் குடுத்தாச்சு… இனிம ஆகுறது ஆகட்டும்னு பார்க்கிறேன். ஆனா கேள்விகளை உங்க ஆர்டர்படி இல்லாம கொஞ்சம் மாத்திக்கிறேன்.
முதல்ல, உங்க 4-வது கேள்வி:
4: "இல்லறமல்லது நல்லறமன்று" - சிறு குறிப்பு வரைக.இந்தக் கேள்விக்குப் பதில் : தெரியாது.
நமக்குத் தெரிஞ்சா பதில் சொல்லணும்; இல்லாட்டி சாய்ஸ்ல விட்டுரணும் – இதுதான் நம்ம பாலிஸி. ஆனா இந்தக் கேள்விக்கு ஏன் பதில் தெரியலை அப்டின்றதை மட்டும் சொல்லிடறேன்.
நமக்கு (அதாவது, எனக்கு) தெரிஞ்சதே இல்லறம் மட்டும்தான். இதுவரை சாமியாரா ஆனது இல்லை; இனிம ஆகிறதாகவும் ஐடியா கிடையாது. பிரம்மச்சாரிகளைப் பார்க்கும்போது சில சமயம் பொறாமையாகூட இருக்கும். ஆனா, அவங்க செருப்புக்குள்ள (அதாங்க, being in their shoes ) நாம இருந்தது இல்லை. அதனால அது அவங்களுக்கு எப்படி இருக்குது அப்டிங்கிறது நமக்குத் தெரியாது. நம்ம கஷ்ட நஷ்டம் அவங்களுக்குத் தெரியாது. இப்போ என்னடான்னா, புதுசா ‘ஒன்றாய் வாழ்தல்’ – cohabitation அப்டின்னு ஒண்ணு வேற வந்திருக்கு. வெளிய இருந்து பார்க்கிறதுக்கு, 'பரவாயில்லையே, மீசையையும் வச்சிக்கிறாங்க; கூழையும் குடிக்கிறாங்களே' அப்டின்னு நமக்குத் தோணுது. அதில என்ன கஷ்ட நஷ்டம் என்னன்னு நமக்குத் தெரியுமோ!
நான் இல்லற வாசி; அது பிடிச்சிருக்கு; நல்லா இருக்கு அப்டின்னு சொல்றதோடு நிப்பாட்டிக்கணும்; அதை விட்டுட்டு இதுதான் எல்லாத்தையும் விட டாப்புன்னு அடிச்சி விடக்கூடாது; இல்லீங்களா?
----------------------------------------------------------------------------
(வேற ஒண்ணும் இல்லீங்க; தேர்வு எழுதும்போதும் இப்படித்தான் ஒழுங்கா கோடு போட்டு எழுதுற வழக்கம்; அதனாலதான் கோடு எல்லாம் போட்டுட்டேன்.)
-----------------------------------------------------------------------------
2: கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் - ஒப்பிடுக.இந்தப் பெருசுங்க எல்லார்ட்டயும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ‘எங்க காலத்தில எல்லாம் …’ அப்டின்னு ஒரு பெருமூச்சோடு பேச ஆரம்பிச்சி பெரிய ரோதனை பண்ணிடுங்க .. அது மாதிரி விஷயத்தில இந்தக் கூட்டுக் குடும்ப விஷயம் ஒண்ணு. நம்ம பண்பாடு, வழமை அது இதுன்னு பேசி, கூட்டுக் குடும்பத்துக்கு ஒரேயடியா வக்காலத்து வாங்குவாங்க. அதெல்லாம் 50 வருஷத்துக்கு முந்திய கதை. எப்போ நம்ம சமூகம் விவசாய சமூகமா இருந்தது மாறியதோ அப்பவே வாழ்க்கை முறைகளும் மாறும்; மாறணும்; மாறியாச்சி. கூட்டுக் குடும்பம் என்பதெல்லாம் இனிமே சினிமாவில பாத்துக்க வேண்டியதுதான்.
அதில இன்னொண்ணு, நாம எல்லோருமே கொஞ்சம் சென்டி டைப்புகள்தான். என் பிள்ளை என் பக்கத்திலேயே இருக்கணும்; நான் எப்படி சீராட்டி வளர்த்தேன் அதனால அவன்/அவள்/அவர்கள் வயசான காலத்தில என்னை அப்படி வச்சுக்கணும்; இப்படி வச்சுக்கணும் என்ற பெருசுகளின் வாழ்க்கைக் கணக்கு எனக்குப் பிடிப்பதில்லை. ரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.
இதில இன்னொரு ஜோக் என்னென்னா, என் பிள்ளை என்னோடு இருக்கணும் அப்டின்னு சொல்ற பெற்றோர்கள் தங்களைப் பெத்தவங்க பக்கத்தில உக்காந்துகிட்டு இருந்திருக்க மாட்டங்க. அதை நினைச்சும் பார்க்கிறதில்லை. ஜெயகாந்தன் சொன்னது மாதிரி ‘உறவுகள் முன்னோக்கியே நீளுகின்றன’.
--------------------------------------------------------------------------------
5: இறை மறுப்பு என்பது எப்போதும் இறை நம்பிக்கை என்ற ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்கிறேன் நான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?சிபி, இந்தக் கேள்விக்கு நியாயமா ஒரே வரியில் பதில் சொல்லிட முடியும். அதுக்கு நியாயமா பார்த்தா நீங்க ஃபுல் மார்க் பதினெட்டும் கொடுக்கணும். பொதுவா எடை பார்த்து ஆசிரியர்கள் மார்க் போடுறதா பசங்க எல்லோரும் சொல்றது உண்டு. அதனால் நீங்களும் அப்படி கொடுப்பீங்களான்னு தெரியாததால கூட கொஞ்சம் ரீல் விட்டுக்கிறேன்.
ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.
ரீல் : இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்தக் கேள்வியும் இன்றி, ஊட்டப் பட்டதை அரைகுறையாய் செரித்துக் கொண்டு பலரும் இருப்பதாலேயே ‘ஏன், எப்படி, சரியா, தவறா என்றெல்லாம் கேள்வி கேட்கும் சிலர் மட்டும் தங்கள் முடிவாக இறை மறுப்புக் கொள்கையை கைக் கொள்கிறார்கள். ‘அவனை நிப்பாட்டச் சொல்; நான் நிப்பாட்டி விடுகிறேன்’ என்ற தத்துவம் தான்.
விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன?
---------------------------------------------------------------------------
3: இசங்கள், ஈயங்கள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தாலும், அனைவருக்கும் ஏற்புடைய ஒத்த கருத்து இதுவரை கிடைத்தபாடில்லையெ! அல்லது விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் நன்மை பயக்குமா?ஒருத்தர் சொல்லி இருப்பாரே தன் tag line-ல: “நான் தனித்துவமானவன்; உங்களைப் போலவே” அப்டின்னு. I think; so I am அப்டின்னு பெரிய தத்துவ ஞானி ஒருவர் சொன்னதாகச் சொல்லுவாங்களே; What is meat for the goose may be poison for gander – அப்டின்னும் சொல்லுவாங்களே அது மாதிரி ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். அது அதுபாட்டுக்கு போகுது. “என் வழி தனி வழி”ன்னு சூப்பர் சொன்னாருன்னா அது அவருக்கு மட்டுமில்லீங்க; நம்ம எல்லாத்துக்கும் பொருந்தும். என்ன பிரச்சனைனா, எல்லோருமே ‘என் வழி தனி வழி;
அதுவே மிகச் சரியான வழி’ அப்டிங்றாங்க.. அங்கதான் எல்லாமே உதைக்குது!
இது நன்மை பயக்குமா அப்டின்னு கேட்டீங்கன்னா, அங்க ஒண்ணு இங்க ஒண்ணு அப்டின்னு நடக்கலாம். தீப்பொறி எப்போ எங்க எப்படி பத்திக்கும்னு தெரியாதது மாதிரிதான். ஆனாலும் இந்த தத்துவ விவாதங்கள் எல்லாமே அனேகமாக ஒரு வித ego tripsதான்!
----------------------------------------------------------------------------
1 : ஒரு ஆசிரியரின் ஆத்ம திருப்தி என்பது எதில் அடங்கியிருக்கிறது? அதன் எல்லைகள் யாவை?இது பெரிய கேள்விங்க; சொல்லப் போனா சுயசரிதை எழுதினால்தான் முழுசா பதில் சொல்ல முடியும் அப்டின்னு தோணுது.
நாப்பது பசங்க முன்னால நின்னு க்ளாஸ் எடுக்கிற எல்லோருமே ஆசிரியர் இல்லைன்னு இப்போ இந்த நிமிஷத்தில் தோணுது. க்ளாஸ் எடுக்கிறதோடு, every teacher should leave his stamp on every one of his students அப்டின்ற ‘தத்துவம்’ என்னுடையது. படிச்சி முடிச்சி போனபிறகும் ஒரு மாணவன் தன் ஆசிரியனிடம் காட்டும் அன்பு – மரியாதையோ பயமோ அல்ல – அதில் மட்டுமே ஓர் ஆசிரியருக்கு நீங்கள் சொல்லும் ஆத்ம திருப்தி இருக்கும்.
முதல் முதல் எடுத்த வகுப்பிலிருந்த மாணவன் இன்றும் ஆசிரியனைப் பெயர் சொல்லி அழைத்து நட்போடு பழகி ஆசிரியரின் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறானே அதுவும், கல்லூரியில் படித்து முடித்து பின் Ph.D. பட்டம் வாங்கும்போது தன் thesis-ஐ ஆசிரியனுக்கு சமர்ப்பணமாக்கினானே அதுவும், புதுவீடு கட்டியாக வேண்டிய நிலையில் வங்கிக் கடன் இன்னும் வரவில்லை என்று அதை எதிர் நோக்கியிருப்பது தெரிந்ததும் எதுவும் கேட்காமல் என் பணத்தில் முதலில் ஆரம்பியுங்கள் என்று ஆசிரியருக்குப் பணம் அனுப்பியதும், நல்ல நிலைக்கு வந்த பழைய மாணவன் தன் உயர்வுக்கு காரணம் என்று எல்லோரிடமும் எப்போதும் தன் ஆசிரியர் பெயரைச் சொல்லும்போதும், அதெல்லாவற்றையும் தாண்டி, ஒருகாலத்தில் மாணவனாக இருந்து இப்போது நண்பனாகி, மகனாகி ஆசிரியரின் வாழ்க்கையில் தொடர்ந்து வருவதும்…. இது போல் நிறைய சொல்லலாம். இப்படி நடந்ததெல்லாம் எந்த ஆசிரியருக்கும் நடந்ததா, எனக்கு நடந்ததா என்பதா முக்கியம்? ஆனால், இப்படிப்பட்ட நடப்புகள் தரும் ஆத்ம திருப்தி வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன்.
----------------------------------------------------------------------------
சிறப்புக் கேள்வி :
கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஒன்றினுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 1 x 10 = 10
தங்களை ஜோதிடர் என நினைத்து ஒருவர் ஜாதகத்தில் சந்தேகம் கேட்டாராமே. உண்மையா? :)ஆமாங்க … ஆமாம் …
அதில் இருந்து என்ன தெரியுது? நிறைய பேர் பதிவுகளின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள்; எழுதியிருப்பதை வாசிப்பதே இல்லை என்றே தெரிகிறது.
Moral: உள்ளே சரக்கு என்ன இருக்கோ இல்லியோ, தலைப்பை சும்மா ‘கும்’முன்னு வச்சா, கவுண்டருக்குக் கவலையே இல்லை; பிச்சுக்கிட்டு போகும். அதனால் --
கவுண்டர் கணக்கெல்லாம் கணக்கல்ல வாசித்தவர்
கணக்கே நல்ல கணக்கு.
------------------------------------------------------------------------
சிபி சார், ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மார்க் போடுங்க. என் பசங்கட்ட சொல்றது மாதிரி: An answer paper can be either corrected or simply valued. Now I prefer the former.
அப்புறம், நான் யார்ட்ட இந்த சுடரைக் கொண்டு சேர்க்கப் போகிறேன் அப்டிங்கிறதையும் சொல்லணுமே. None other than … the only one… who else .. but ..
இளவஞ்சி … சரி..சரி … கைதட்டுனது போதும். . இதோ வரச் சொல்லிர்ரேன்.
இளவஞ்சியின் முன் நான் வைக்கும் நாலு கேள்விகள்:
1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா?
2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா? ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்?
3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.
4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா?
நான் சுடரை சொத்ப்பியிருந்தாலும் நல்ல ஆளுகிட்ட கொண்டு போய் சேர்த்த திருப்தி இருக்கு.
அப்போ நான் விடை வாங்கிக்கிறேன்.
வர்ட்டா ….