Tuesday, July 29, 2014

781. தருமி பக்கம் (20) - அம்மா வீடு







*




 அப்பாவின் ஊருக்குப் போகும் போது அங்கே நடக்கும் பல சிறு பிள்ளை  விளையாட்டுகள்,  ‘தீவிரச் செயல்கள்’ ஏதுமில்லாமலும், மற்றைய என் வயது பிள்ளைகளோடு போடும் ஆட்டங்கள் எதுவுமில்லாமலும் அம்மா ஊரில் வீட்டுக்குள்ளேயே சித்தி, பாட்டியுடன் நேரம் போகும். எப்போதாவது தான் பிள்ளையார் கோவில் பக்கம் போவேன். மற்றபடி வீட்டில் மட்டும் தான் இருப்பேன். பஞ்சமில்லாமல் புளியங்கொட்டை இருக்கும். அதை வைத்து ஒத்தையா ரெட்டையா விளையாட்டு நடக்கும். இல்லாவிட்டால் பாண்டி விளையாட்டு. ஆனால் இரண்டாவது விளையாட்டு நமக்கு ஒத்து வராது. ஏனெனில் அங்கு விளையாடுபவர்களுக்கு எந்தக் குழியில் ஆரம்பித்தால்
நிறைய முத்து கிடைக்கும் என்பதெல்லாம் தெரியும். அதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளும் வரை எனக்கு ஞாபக சக்தி சுத்தமா கிடையாது. எப்போதாவது சாயங்காலம் கண்ணா மூச்சி ஆட்டம் இருக்கும். இதைத் தவிர நினைவில் இருப்பதெல்லாம் சித்தியுடன் இருந்தது தான். 

நினைவில் இருப்பதெல்லாம் இரு நினைவுகள் மட்டுமே. ஒன்று கடவுள் சம்பந்தப்பட்டது; இரண்டாவது மனிதன் தொடர்புடையது. முதலில் ‘கடவுளைப்’ பற்றிப் பார்ப்போமா ...?

தாத்தா வீட்டிற்கு அருகில் ஒரு ஆழமான கமலைக் கிணறும் அதன் இரு பக்கமும் இரு தோட்டங்களும் உண்டு; கிணற்றின் கிழக்குப் பக்கம் உள்ள தோட்டம் பெரியது; நடுவில் ஒரு பெரிய மாமரம் உண்டு; சுற்றி என்னென்னவோ பயிர்கள் போடுவார்கள்.மேற்குப் பக்கம் உள்ள தோட்டத்தில்  அதிகமாக பயிர்கள் பார்த்ததில்லை; ஆனால் அதன் வடக்கு ஓரத்தில் நிறைய செடிகளும் ஒரு பெரிய சமாதியும் இருக்கும். என் பூட்டனாரும், பூட்டியும் புதைக்கப்பட்ட இடங்களாம். சமாதியில் பெயர்கள் போன்ற எதுவும் இருக்காது; இந்தச் சமாதிக்குப் பக்கத்தில் வெகு காலம் ஒரு மனோரஞ்சிதச் செடி இருந்தது. இதைத் தவிர பச்சை வண்ணத்தில் வேறு ஏதேனும் பூ இருக்கிறதா ... தெரியவில்லை.

நான் ஊருக்குப் போகும் பல நேரங்களில் இந்தச் சமாதியில் பூஜை நடக்கும். திவசமாக இருக்கலாம். அப்போது அந்தச் சமாதியில் நைவேத்தியம் எல்லாம் செய்வார்கள். அது முடிந்ததும் அதை எல்லோருக்கும் கொடுப்பார்கள். முதலிலிருந்தே மறுத்து விட்டேனா ... இல்லை.. பின்னால் அப்பா சொல்லிக் கொடுத்து மாறினேனா என்று தெரியவில்லை. அதை வாங்க மறுத்து விட்டேன். அதோடு எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதை அங்கே
  

சொன்னேன்: "இது பேய்க்குப் படைக்கப்பட்டது; நான் சாப்பிட மாட்டேன்”. இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கமாக இருக்கிறது. முன்னோர் முன்னால் வைத்ததை  பேய்க்குப் படைக்கப்பட்டது என்று நான் சொன்னதும் என் இந்து உறவினர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை; ஆனால் அது பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. அந்த வயதில் சொல்லிக் கொடுத்ததை அங்கே வாந்தி எடுத்திருக்கிறேன். இப்போதும் இளம் வயதில் ஆப்ரஹாமிய  மதங்கள் மடத்தனமாக போதிக்கும் சில மத மாச்சரியங்களை நினைத்து வருத்தப் படுகிறேன்.

இரண்டாவது மனிதன் தொடர்பானது என்று சொல்லியிருந்தேன். அது அம்மா வீட்டிற்கு நான் வந்திருப்பது தெரிந்ததும் என்னை உடனே ஓடிவந்து பார்க்கும் ஏமன் என்பவரைப் பற்றியது. எமன் என்ற பெயரைத் தான் இப்படி ஏமன் .. ஏம(ன்) என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பார்க்க வரும் ஏமன் வீட்டு முற்றம் வரைதான் வருவார். நான் வெளியே வந்ததும் என்னைத் தூக்கி வைத்துக் கொள்வார்.  ஒரு வேட்டி மேலே ஒரு துண்டு. அந்த துண்டும் வீட்டிற்குள் வரும்போது தோளில் இருக்காது. கிராமத்தில் இருக்கும் மற்ற வீடுகளை விட அம்மா வீடு இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் இப்படி பிள்ளைகளைத் தூக்க விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஏமன் சின்னப் பையனாக இருக்கும் போது அவரது அக்கா இறந்து விட்டார்களாம். அதற்காக அழுத ஏமனிடன் என் அம்மா ஒரு அக்கா போல் அன்பாக இருந்திருந்தார்களாம். அழக்கூடாது என்றெல்லாம் தேற்றினார்களாம். இதனால் என் அம்மா மேல் அவருக்கு அப்படி ஒரு மரியாதையும் பக்தியும். அம்மா இறந்த பின் அத்தனையும் என் மீது பெரும் அன்பாகப் பாய்ந்தது. நான் ஏறத்தாழ எட்டு பத்து வயதிருக்கும் போது அவர் மருத்துவத்திற்காக மதுரைக்கு வந்திருந்தார். அப்பா அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வந்தார்கள். அவர்கள் அப்போது சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ஏமனுக்குச் சக்கரை வியாதியால் காலில் வந்த புண் ஆறாமல், சில விரல்களை எடுத்து விட வேண்டுமென சொல்லியுள்ளார்கள். மனமில்லாமல் ஊருக்குச் சென்று, சில நாட்கள் கழித்து வந்த போது முழங்கால் வரை காலை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் மீண்டும் ஊருக்குப் போய் விட்டார். அதுவே அவரை நான் கடைசியாகப் பார்த்தது. அதன்பின் அம்மா ஊருக்குப் போகும் போது அவர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்று வந்தேன். சில நாட்கள் ... சில பொழுதுகள் மட்டுமே ஏமனோடு இருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை ஏமனின் உயர்ந்த ஆஜானுபாகுவான உடம்பும், அவரது சிரித்த முகமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவரது உடலிலிருந்து வரும் வாசனை எனக்குப் பிடிக்கும். அந்த வாசனையையும் நான் இன்னும் உணர முடிகிறது. 

முன்பெல்லாம் ஊருக்குப் போகும் போது அவரது வீட்டிற்கு ஓரிரு முறை போயிருக்கிறேன். ஆனால் என் வீட்டார்தான் என்னைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும். ஏமனின் வீட்டினருக்கு நான் ஏமனின் மீது வைத்திருந்த அன்பு புரிந்திருக்காது. அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போகும் என் உறவினருக்கும் அது புரிந்திருக்காது. ஆகவே அதை நான் நாளாவட்டத்தில் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற போது வளர்ந்து நெருங்கியிருந்த தெருவில் ஏமனின் பழைய வீட்டை நினைத்துக் கொண்டு தேடிப்பார்த்தேன் - கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தும்.

அவர் என்ன சாதியோ எனக்குத் தெரியாது இன்று வரை.. சிறு வயதிலிருந்தது என்னிடமிருந்தது அவர் மீதான பாசம் மட்டும். சிறிது அறிவும் வயதும் கூடும்போது அவர் ஏனைய சாதியினரால் ஒதுக்கப்பட்டவர் என்பது புரிந்தது. அவர் காலத்திற்குப் பின் என்னைப் பார்த்ததும் அவர் வீட்டினர் காண்பிக்கும் பதட்டமும், என் வீட்டார் என்னை அங்கே அழைத்துப் போக காண்பிக்கும் தயக்கமும் மெளனமாக எனக்குப் பல செய்திகளைச் சொல்லியது. முழுச் சித்திரமும் கிடைக்க பல்லாண்டுகள் ஆகிப் போய் விட்டது. கிராமங்களில் தலித் மக்களுக்குக் கொடுக்கப்படும் இடம் (கொடுக்கப்படாத இடம்?) எத்தனை மோசமானது என்று பின்னாளில் புரிந்தது. ஒரு வேளை நான் ஏமன் மீது வைத்திருந்த அன்பினால், என்னால் பின்னாளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பரிவாக மாறியதோ என்னவோ தெரியவில்லை. Freud இடம் தான் கேட்கணும்!

ஏமனோடு இருக்கும் போது எனக்கு இன்னொரு அமானுஷ்ய அனுபவமும் எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் இது வரை இரு நிகழ்வுகளை தெய்வாதீனமான, அல்லது அமானுஷ்யமான நிகழ்வுகளாகப் பார்க்கிறேன். அதில் இரண்டாவது நிகழ்வு நான்  என் அம்மா ஊரிலிருந்து அப்பா ஊருக்கு வரும்போது நிகழ்ந்தது. ஏமன் தான் என்னை அம்மா ஊரிலிருந்து பஸ்ஸில் அப்பா ஊருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஊருக்குத் தள்ளியிருக்கும் சாலையில் இறங்கி நடந்து எங்கள் ஊருக்க வர வேண்டும். கொஞ்சம் தொலைவு என்பதால் ஏமன் என்னை வழக்கம் போல் தோளின் மீது வைத்துக் கொண்டு வந்தார். வழியில் அப்பா ஊருக்குள் நுழையும் போதிருந்த கல்லறைத் தோட்டத்தில் என் அம்மாவின் கல்லறை இருந்தது.

                                                             பூட்டையா - பாட்டையா 
                                                             கல்லறைகளுக்கு நடுவில் அம்மா கல்லறை

அந்த வயதில் என் அம்மாவின் கல்லறையைப் பார்க்கும் போது மனதுக்குள் என்னமோ செய்யும். ஒரு தயக்கம்; பயம் போலவும் இருக்கும். அதனால் லேசாக அந்தப் பக்கம் பார்த்து விட்டு வேறு பக்கம் பார்ப்பது வழக்கம். ஏமன் என்னைத் தூக்கிக் கொண்டு வரும்போது நான் கல்லறை பக்கம் பார்க்காது இருந்தேன். கல்லறையை நாங்கள் தாண்டிய பின் ஏமனின் தோளிலிருந்து திரும்பிப் பார்த்தேன். அம்மாவின் கல்லறையின் இரு



அம்மா கல்லறை - 13.10.’47
                                                                                 











புறமும் ஏறத்தாழ அந்த தோட்டத்திலிருந்த பனை மரங்களின் உயரத்திற்கு வெள்ளை வெளேரென்று இரு சம்மனசுகள் முழந்தாளிட்டு இருப்பது போல் தோன்றியது. எல்லாம் ஓரிரு வினாடிகளுக்கு தான். வேறுபுறம் உடனே திரும்பி விட்டேன்.


 *




 

Saturday, July 26, 2014

780. ஷியா – சன்னி பிரிவுகள் ...2






*



 //நபியின் இறப்பை ஒட்டியே அவரால் உருவான இஸ்லாம் சன்னி – ஷியா என்ற இரு பகுதிகளாக உடைந்தது. இதற்குக் காரணம் நபியின் இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தோன்றிய தகராறே காரணம். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சன்னிகள் நபியின் வழிவந்தோரில் தகுதியானவர் பதவியேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஷியா என்ற சிறு பகுதியினர் முகமதுவின் மகளை மணம்புரிந்த அலி பதவிக்கு வரவேண்டுமென விரும்பினர். நபி இறந்த உடனேயே இந்தப் பிளவு ஏற்பட்டு விட்டது. //

இது எனது முந்திய பதிவில் எழுதியது. 

ஆனால் இந்த வரலாற்றிற்கு இன்னொரு பக்கமும் இருப்பது அறிந்தேன். அப்பக்கத்தை இங்கே சிறிதே தருகிறேன்.

முகமது வஹி பெற்ற பின் அவரோடு இஸ்லாமை ஏற்றுக் கொண்டு காபாவிற்கு சென்ற இருவர் முகமதுவின் மனைவி கதிஜாவும் அலியும் மட்டும் தான். அலி முகமதுவின் நெருங்கிய உறவினர்; அதோடு முகமதுவின் மருமகனுமாவார். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முதல் ஆண் இவரே. அலியை சன்னியினர் தங்களது நாலாவது கலிபாவாகக் கருதுகிறார்கள். ஆனால் ஷியா பிரிவினர் அலியை முகமதிற்கு அடுத்த முதல் இமாமாகவும், முகமதுவின் உரிமையுள்ள வழித்தோன்றலாகவும், முகமதுவின் குடும்பத்து உறவினராகவும் கருதுகிறார்கள்.

அலியின் அதிசயப் பிறப்பு, அவர் முகமதுவின் மகள் பாத்திமாவைத் திருமணம் செய்தது இரண்டும் தெய்வீக நிகழ்வுகள் என்பது இன்னொரு பக்கக் கதை.

முகமது தன் வீட்டிற்கு குழுத் தலைவர்கள் சிலரை அழைக்கிறார். நாற்பது பேர் வருகிறார்கள். அவர்களிடம் முகமது கடவுளின் சேதியை அறிவிக்கிறார். இதனைப் பரப்ப தன்னோடு ஒத்துழைப்பவர்கள் தனக்குப் பின் அவரது வழித்தோன்றலாக இருப்பார்கள் என்று அழைக்கிறார். ஆனால் யாரும் உடனே அவரோடு சேரவில்லை. முகமது இதை மறுபடியும் அறிவிக்கிறார். மூன்று முறை அழைத்தும் யாரும் முன் வரவில்லை. 13 வயதே ஆன அலி மட்டும் எழுந்து முன் வருகிறார். முகமது அப்போது அலியைத் தன் உதவியாளராகவும், தனக்குப் பின் வரும் தலைவராகவும் அறிவிக்கிறார்.


இதன் பின் வரும் மூன்று முக்கிய போர்க்களங்களில் அலி கொடியேந்தி முகமதிற்குத் தோள் கொடுக்கிறார். வரலாற்றுப் பாதையில் பல இடங்களில் முகமது அலியைத் தன் உதவியாளராகவும், தன் வழித்தோன்றலாகவும் அறுதியிட்டுக் கூறுகிறார். அதிலும் காதீர் என்னுமிடத்தில், அதிக எண்ணிக்கையில் நபியின் பேருரையைக் கேட்பதற்காக வந்த மக்களிடையே முகமது அழுத்தம் திருத்தமாக, ‘நான் விரைவில் இறைவனால் அழைக்கப்பட்டு விடுவேன். அவரின் வசனங்களை நான் எவ்வாறு உங்களுக்குக் கொடுத்தேன் என்பதைச் சொல்ல வேண்டும். பின்பு அவர் உங்களிடம் அவைகளை எவ்வாறு ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்பார். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?’ என்று கேட்டார்.

 பதிலாக அங்கிருந்த அனைவரும் ஒரு குரலாக, ‘நாங்கள் நீர் சொல்வதை நம்புகிறோம்; அதனை அவரிடம் சாட்சி பகர்வோம்’ என்றனர். இப்பதிலைக் கேட்டதும் முகமது, ‘உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; ஒன்று, குரான்; இரண்டு, என் வழித்தோன்றல் (Ahlul Bayt). இரண்டையும் பத்திரமாகக் கையாளுங்கள். அவைகள் என்னிடம் இறுதியில் கவ்சார் நீரூற்றின் அருகே வந்து சேரும் வரை ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்தே இருக்கும்,’ என்றார். மேலும் அவர் தொடர்ந்து, ‘நான் யாருக்கெல்லாம் தலைவனோ (Maula) அதே போல் அலியும் அவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் (Maula)’ என்றார்.

(சன்னியினர் இந்த நிகழ்வில் முகமது இரு விஷயங்களை தன்னோடு உள்ள இஸ்லாமியரோடு பகிரவில்லை; வெறும் குரானைப் பற்றி மட்டும் சொன்னார்; அலியைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்று மாற்றிச் சொல்கிறார்கள். 


இரண்டில் எது உண்மை? அவரவர் கட்சிக்கு அவரவர் சொல்வது உண்மை. நடுவிலிருக்கும் நமக்கு …?) 

இதைச் சொல்லும் போது முகமது அலியை தன் தோளுக்கு மேல் உயரத்தில் நிறுத்தி,எல்லோரும் அவரைக் காணும்படி செய்தார். அபபோது தன் கடைசி வசனத்தைக் கூறினார்: ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கானவாழ்க்கை நெறியாக பொருத்திக் கொண்டேன். .’ (5:3)

இதன் பின் முகமது அனைத்து இஸ்லாமியரும் அலிக்கு மரியாதை செய்யும்படி செய்தார். அலியை அவர்கள் அனைவருக்கும் Amirul Momeneen (Lord of the faithful) என்று உயர்த்தினார். முகமது எப்போதும் பெரும் பொருப்புகளை அலியிடம் கொடுத்து வந்தார். உதாரணமாக, முகமது தம்புக் (Tambuk) என்னுமிடத்திற்குப் பயணப்பட்ட போது இஸ்லாமிய உம்மா – இஸ்லாமியக் குழு - முழுவதையும் காக்கும் பொருப்பை அலியிடம் விட்டுச் சென்றார். மேலும், முகமது தனக்குப் பின் அலியைத் தவிர வேறு யாருக்கும் உயர்ந்த தகுதி கிடையாது என்று சொல்லியுள்ளார். . (Bihar Al-Anwar v.12 p.361 h31, Ghayatol Maram p.45 h.54, Rowzat Al-Jannat v.6 p.185).

முகமது இறந்து அலியினால் அடக்கம் செய்யப்பட்ட உடனேயே சன்னிகளின் உதவியினால் அபுபக்கர் முதலாம் கலிபாவாக பட்டம் சூட்டிக் கொண்டார். இச்செய்தியை அபு சோபியான் அலியிடம் தெரிவிக்கிறார். அலி புதிதாகத் தோன்றிய இஸ்லாம் மதம் பிளவு படுவதை சிறிதேனும் விரும்பவில்லை. அதனால் எந்த வித மாச்சரியமும் இல்லாமல் குரானைத் தொகுக்கும் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்பெரிய முயற்சியை அடுத்த ஆறு மாதங்களில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். முடித்த குரானை இஸ்லாமியர்கள் முன் கொண்டு வந்தார். ஆனால் அவரது இமாலய முயற்சியை ஆதரித்து எடுத்துக் கொள்ள ‘அரசு’ தயாராக இருக்கவில்லை. அலி தயாரித்த குரான் ‘மிகப் பெரியதாகவும், மக்களால் புரிந்துகொள்ள முடியாத நூலாகவும்’ இருக்கிறது என்பது அபு பக்கரின் கருத்து. ஆகவே முகமதுவோடு எப்போதும் சேர்ந்திருந்த  அலி தொகுத்த முதல் குரான் அரசியல் வேற்றுமைகளால் அபு பக்கரால் புறந்தள்ளப்பட்டது. அலி தான் தொகுத்த குரானை தன்னோடு வைத்துக் கொண்டார்.


மூன்றாவது கலிபா ஒஸ்மான் இறந்ததும் அலி பலத்த ஆதரவுடன் நாலாவது கலிபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அலிக்கு பதவிக்கு வருவதில் முழு விருப்பமில்லை. இவ்வுலகத்து ஆதாயமெல்லாம் ஒரு ஆட்டின் தும்மல் போன்ற சாதாரணமான ஒன்று  என்பது அவர் எண்ணம். பதவியேற்ற பின் அலிக்குப் பல எதிரிகள் முளைத்தார்கள். முக்கிய எதிரி சிரியாவின் கவர்னரான மோயவியா (Moawiya ibne Abi Sofian). மேலும், Talha, Zubair என்ற இருவருக்கும் கவர்னர் பதவிகள் கிடைக்காததால் அவர்கள் இருவரும் அலியை எதிர்த்து புரட்சிக் கொடி எழுப்பினார்கள். மதினாவிலிருந்து கிளம்பி மெக்காவிற்கு வந்து அங்கிருந்த ஆயிஷாவைத் தூண்டிவிட்டு,அலிக்கு எதிராகப் போராட அழைத்தார்கள். பஸ்ராவிற்கு வந்து அலிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள்.

அலி ஆண்ட நான்கு ஆண்டுகளும் பத்து மாதங்களும் ஒரு நல்ல இஸ்லாமிய அரசுக்கு உதாரணமாக விளங்கியது.

 அலி, மோயவியா இருவருக்குள்ளும் இருந்த பகைமை வளர்ந்து இருவரும் போரிடும் நிலைக்கு வந்தது. அலியின் படையில் 25 ஆயிரம் பேரும், மோயவியா படையில் 45 ஆயிரம் பேரும் இறந்தனர் என்று கூறப்படுகிறது. பெரும் மனித அழிவைத் தடுக்க அலி மோயவியாவைத் தன்னோடு போரிட தனிப் போருக்கு அழைத்தார். மோயவியா ஒத்துக் கொள்ளவில்லை.

இந்த இருவரின் போரினால் இளம் இஸ்லாமியத்திற்குக் கெடுதல் என்றெண்ணி சிலர் அலி, மோயவியா, அம்ர் ( Amr bin Aas) என்ற மூவரையும் கொல்ல முடிவெடுத்தனர். இத்திட்டத்தின் இறுதியில் அலி மட்டும் கொல்லப்பட்டார். மற்ற இருவரும் தப்பித்து விட்டார்கள்.

41வது ஹிஜ்ரியில் ராமதான் மாதத்தின் 19ம் நாள் அலி தன் காலைத் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது Abdur Rahman bin Muljam என்ற எதிரியின் வாளால் வெட்டப்பட்டார். இரு நாட்கள் உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் போது அவரது மகன் ஹசன் மூலம் தன் இறுதி உயிலை எழுதி வைத்தார். அதுவும் பெரும் இலக்கிய அழகோடு இருந்தது.

அலியின் மறைவுக்குப் பின் இன்றைய ஈராக்கில் உள்ள கர்பாலா என்னுமிடத்தில் நடந்த போர் ( Battle of Karbala) இரு படைகளுக்கு நடுவே நடந்தது. ஒரு பக்கம் ஒரு சிறு படையுடன் அலியின் பெயரனான ஹூசைன் இப்ன் அலி; இன்னொரு பக்கம் உமயாத்தின் கலிபா ஆன யாஸித் ( Yazid I, the Umayyad caliph) என்பவரின் பெரும் படையும் இருந்தது. போரில் ஹூசைன் மட்டுமல்லாது, அவரது ஆறு மாதக் குழந்தையும் கொல்லப்பட்டது; பெண்டிர், குழந்தைகள் பலரும் சிறை பிடிக்கப்பட்டனர். இறந்த இம்மக்கள் ஷியா, சன்னி இருவராலும் புனிதத் தியாகிகளாகக் கருதப்படுகின்றனர்.

இவ்விடத்தில் மீண்டும் ஒரு கேள்வியைத் திரும்பக் கேட்க விளைகிறேன்:

முகமது தன் காதீர்  உரையின் இறுதியில் முகமது, ‘உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; ஒன்று, குரான்; இரண்டு, என் வழித்தோன்றல் (Ahlul Bayt). இரண்டையும் பத்திரமாகக் கையாளுங்கள். அவைகள் என்னிடம் இறுதியில் கவ்சார் நீரூற்றின் அருகே வந்து சேரும் வரை ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்தே இருக்கும்,’ என்றார்.

ஆனால் சன்னிகள் அவர் இரு விஷயங்களைப் பற்றிச் சொல்லவில்லை. 
வெறும் குரானைப் பற்றி மட்டும் சொன்னார்; அலியைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்று மாற்றிச் சொல்கிறார்கள். 


இரண்டில் எது உண்மை? 

அவரவர் கட்சிக்கு அவரவர் சொல்வது உண்மை. 

நடுவிலிருக்கும் நமக்கு …?

*

முகமதுவோடு எப்போதும் சேர்ந்திருந்த  அலி தொகுத்த முதல் குரான் அரசியல் வேற்றுமைகளால் அபு பக்கரால் புறந்தள்ளப்பட்டது. 

ஏன்?


*



https://www.facebook.com/notes/imam-ali-as-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85-%D8%B9%D9%84%D9%8A-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85/imam-ali-ibn-abi-talib-as-the-only-divinely-chosen-successor-to-the-holy-prophet/113335118717
http://www.al-islam.org/restatement-history-islam-and-muslims-sayyid-ali-ashgar-razwy/assassination-ali
http://en.wikipedia.org/wiki/Ali#Election_as_Caliph
http://www.al-islam.org/story-of-the-holy-kaaba-and-its-people-shabbar/first-imam-ali-ibn-abu-talib


*


Friday, July 25, 2014

779. அசோகர் நூல் வெளியீடு






*



  ஈரோடு புத்தகத் திருவிழா 



2014 ஆகஸ்ட் 1 முதல் 12 வரை நடைபெற உள்ள ஈரோடு புத்தகத் திருவிழா 2014ன் போது "எதிர் வெளியீடு" வெளியிட உள்ள புத்தக வெளியீடுகளின் பட்டியலை  இத்துடன் இணைத்துள்ளேன்..






இவைகளில் நான் மொழியாக்கம் செய்த “பேரரசன்  அசோகன்” என்ற நூலும் உள்ளது.









To buy thro VPP or Courier services.....

Contact the address and phone numbers below...

Ethir Veliyedu
96,New Scheme Road,
Pollachi
642002

ethirveliyedu@gmail.com
04259 226012
99425 11302






 *

778. AN ISRAELI TALKS TO THE PEOPLE OF GAZA




*



  I AM WITH YOU ......... 

 *

*

Wednesday, July 23, 2014

777. 2040-களில் - மத நம்பிக்கையாளர்கள் சிறுபான்மையராக ஆகி விடுவார்கள்.





*




*

“Why Atheism will replace religion என்ற நூலை எழுதிய Nigel Barber வரும் எதிர்காலத்தில் – 2040-களில் - மத நம்பிக்கையாளர்கள் சிறுபான்மையராக ஆகி விடுவார்கள் என்று எழுதியுள்ளார். நூலாசிரியர் ஒரு சிறந்த மனோதத்துவர்.  137 நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மேல் கொண்ட மதிப்பீடுகள் இவை.

மதங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பொருளாதார மேன்மை, வீழ்ச்சி இவைகளோடு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதுகிறார். மத நம்பிக்கையற்றவர்களின் விழுக்காடு வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கும். எந்த நாடுகளில் மக்கள் நல்வாழ்வு சிறந்து உள்ளதோ அங்கு இவர்களின் எண்ணிக்கை அதிகம். எந்த நாட்டில் மக்களின் வருமானம் சீரான ஒன்றாக உள்ளதோ அங்கு மதநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்.

இந்த உலகில் மக்களுக்கு தங்களது சமூகத்தில் தேவையானவைகள் கிடைக்கும் போது அவர்கள் மனத்தில் தெய்வீக நம்பிக்கைகள் வழக்கொழிந்து போகின்றன.

அவரின் கருத்துக்கள் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன்:

மானிடர்களின் பாதுகாப்பற்ற நிலை, அவர்களது நிம்மதியின்மை இவைகளே மதங்களின் பரிணாம வளர்ச்சிக்கான காரணங்கள்.

மக்கள் எப்போது தங்கள் தேவைகளைப் பெற்று சுகமான வாழ்க்கை வாழ்கிறார்களோ, எப்போது அவர்களின் பொருளாதாரமும், ஆரோக்கியமும் நல்ல நிலையில் உள்ளதோ அப்போது அவர்கள் தங்கள் தெய்வீக நம்பிக்கைகளைப் புறந்தள்ளி விடுகிறார்கள்.

முகநூல்கள் கூட மதங்களை மெல்ல கொன்று வருகின்றன. ஏனெனில் இங்கு மனிதனின் புதிய, சுய ஏக்கங்களுக்கான பதில்கள் கிடைத்து விடுகின்றன.
 Sub-Saharan Africa பகுதிகளில் கடவுள் மறுப்பு என்று ஏதுமில்லை.
ஐரோப்பாவில் பெருமளவில் கடவுள் மறுப்பாளர்கள் உண்டு.
ஸ்வீடனில் 64 விழுக்காடு கடவுள் மறுப்பாளர்கள்.
டென்மார்க்கில் 48 விழுக்காடு கடவுள் மறுப்பாளர்கள்.
பிரஞ்சு நாட்டில் 44 விழுக்காடு கடவுள் மறுப்பாளர்கள்.
ஜெர்மனியில் 42 விழுக்காடு கடவுள் மறுப்பாளர்கள்.
ஜப்பான், ஸ்வீடன் போன்ற வசதியான நாடுகளில் மக்கள் மதங்களிலிருந்து விலகி மதச் சார்பற்று உள்ளார்கள்.  

NIGEL BARBER



Thursday, July 17, 2014

776. இதற்கெல்லாம் காரணம் கோட்சே மட்டும் தானா .....!?





*


 ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சில நிகழ்வுகள். அப்படியொன்றும் பெரிதாகவோ, ரசிக்கும் படியோ இல்லை. நிகழ்ச்சி நடக்க மைதானம் முழுமையும் பிளாஸ்டிக் விரித்திருந்தார்கள். அதில் ப்ரேசிலின் தேசியக் கொடியின் படம் இருந்தது. இப்படி நமது கொடியைக் காலுக்குள் போட்டு மிதிக்கலாமா .. இல்லை ... ரோஜா படத்து கதாநாயகன் மாதிரி கீழே விழுந்து, புரண்டு அதைக் காப்பாற்றணுமா என்று எனக்குத் தெரியாமல் விழி பிதுங்கி அந்த நிகழ்வுகளை சோக சோலோ வயலின் இசையை BM-ல் கேட்டுக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடினார்கள் (என்னமோ பாடினார்கள்); ஆடினார்கள் (என்னமோ ஆடினார்கள்).

 ஆட்டம் ஆரம்பமானது. சும்மா சொல்லக்கூடாது. ஒவ்வொரு வினாடியும் இரு அணிகளும் நம்மைக் கட்டிப் போட்டு வைத்தன. பந்து இரு முனைகளுக்கும் மாறி மாறிச் சென்றது. இரு பக்கமும் defense நன்றாகவே இருந்தன. எதிரணிகள் எதிர்ப் பக்கம் நெருங்கிச் சென்று விடுவர். ஆனால் அந்த கடைசி ஷாட் ... அது மட்டும் இரு அணிக்கும் சிறிது சிறிதே தவறியது. 30வது நிமிடத்தில் ஜெர்மானிய வீரர் Schürrle போட்ட பந்து அர்ஜென்டினாவின் கோலுக்குள் சென்றது. ஆனால் லைன் நடுவர் off side என்று பிகில் ஊதி விட்டார். அடுத்து 39வது நிமிடம்  மெஸ்ஸி அழகாக பந்தை எடுத்துச் சென்றார். கடைசி ஷாட் மட்டும் பாக்கி; ஆனால் அவர் அதை வெளியில் அடித்து விட்டார்.

46வது நிமிடம் extra time-ல் ஜெர்மனிக்கு ஒரு corner shot.அடுத்து உடனேயே அர்ஜென்டினாவிற்கு ஒரு corner shot. பந்து கம்பத்தில் பட்டு மோதித் திரும்பியது.




இடைவேளை முடிந்ததும் ப்ரேசில் இருக்கும் பெரிய ஏசுவின் சிலையைக் காண்பித்தார்கள். சிலைக்குப் பின்னால் பெரிய கோளமாக சூரியனின் பெரும் பிம்பம். பார்க்க அழகாக இருந்தது. அப்போதும் பந்து அங்கும் இங்கும் என்று போய்க்கொண்டிருந்தது. எந்த நேரத்தில் எப்போது, எப்படி கவல் எங்கு விழும் என்பதே தெரியாமல் போட்டி போய்க் கொண்டிருந்தது. அப்போது வர்ணனையாளர் ஏசுவின் சிலையின் காட்சியைக் காண்பிக்கும் போது யாருக்கு கவல் விழுமோ என்று சொல்லி, GOD ONLY KNOWS என்றார். 

அப்போது என் mind voice: 
கடவுள் ரொம்ப பாவம் ... அவருக்கு எப்போதோ இந்தப் போட்டியின் முடிவு தெரிந்திருக்கும். இருந்தும் முதலிலிருந்து இந்த ஆட்டத்தையும் அவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்குமே. விளையாட்டு முடிவு தெரிந்த பிறகும் அவர் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் எம்புட்டு போர் அடிக்கும். உண்மையிலேயே கடவுளின் வாழ்க்கை ரொம்ப போராகத்தானிருக்கும். முற்றும் தெரிந்திருந்து ... முக்காலமும் உணர்ந்திருந்து அதன் பின்னும் எல்லாவற்றையும் அங்கிருந்து பார்த்துக் கொண்டு .... பாவம் தான் கடவுள்(கள்)!

இந்த ஆட்டமும் பெனல்ட்டிக்குப் போய்விடக் கூடாது என்று எண்ணினேன். அதன் மூலம் பெறும்  வெற்றி முழு வெற்றியாக எனக்குத் தெரிவதில்லை. இரண்டாம் பகுதியில் மஞ்சள் அட்டை அதிகமாக வெளி வந்தது. 70வது நிமிடம் அர்ஜென்டினா கவல் பக்கம் பந்து. அடுத்த 77 வது நிமிடத்தில் மெஸ்ஸி பந்தை ஜெர்மன் பக்கம் கொண்டு சென்றார். முடிவு ஏதும் வந்து விடவில்லை.ஜெர்மன் அணியின் தீவிரமும் முனைப்பும் நன்கிருந்தது. Team work முழுவதுமாக இருந்தது. 82ம் நிமிடம் கவல் விழுந்து விடுமென நினைத்தேன். Kroos வேகமாக வந்த  பந்ந்தை அழகாக தடுத்து அடித்தார். கவல் தடுப்புகளை ஒட்டி வெளியே சென்றது. 

EXTRA TIME: 
இதில் முதல் நிமிடத்திலேயே பந்து அர்ஜென்டினாவின் கவலுக்கு அருகில் இருந்தது. அவர்களின் அழகான தடுப்பாட்டத்தால் பிழைத்தது. ஆனல் அடுத்த மூன்றாவது நிமிடத்திலும் 7வது நிமிடத்திலும்  ஜெர்மன் கவல் ஆபத்தில் இருந்து மீண்டது. 18வது நிமிடத்தில் எல்லோரும் கவல் என்ற சந்தோஷத்தில் கத்திக் கொண்டிருக்கும் போது அர்ஜென்டினாவின் கவலுக்கு மேல் பந்து சென்றது.  . 

இரண்டாம் பகுதி ஆட்டம். 19வது நிமிடம். substituteஆக இறங்கிய கோட்ஸே - GOTZE!!! - தட்டிய பந்து அர்ஜென்டினாவிற்கு தோல்வியைக் கொடுத்தது. 
கோட்ஸே


116வது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் முட்டிய பந்து வெளியே போனது. அடுத்து இறுதியாக 119வது நிமிடம். அர்ஜென்டினா கவலுக்கு சற்றே வெளியே ஒரு free kick  கிடைத்தது. மெஸ்ஸி பந்தை அடிக்கத் தயாரானார். இறுதி நிமிடம். அப்போதும் வெற்றி தோல்வியை அது மாற்றக் கூடிய பந்து. ஒருவேளை மெஸ்ஸி ஒழுங்காக அடித்து அவர்களது அணியின் நிச்சயமான தோல்வியை முழுவதுமாக மாற்ற முடியும் என்ற நிலைமை. மெஸ்ஸியின் பதற்றம் அவரது உடல் மொழியில் நன்கு தெரிந்தது. பந்தை அடித்தார். பெருத்த ஏமாற்றம். கவலுக்கு மிக உயரத்தில் பந்த் பறந்து பார்வையாளர்களின் பகுதிக்குப் போனது. பெரிய ஆட்டக்காரராய் இருந்தால் என்ன ... மனிதனின் நிறைவு நேரப் பகுதியில் ஏற்படும் பதட்டம். 

ஜெர்மன் நான்காவது முறையாக வென்றது .....

*

உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்குச் செல்வதற்கு முன் வேறு இரு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜெர்மன் கவல் காப்பாளருக்கு GOLDEN GLOVE என்ற பரிசு NEUER-க்கும், GOLDEN BALL என்ற சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு மெஸ்ஸிக்கும் அளிக்கப்பட்டது. சுரத்தே இல்லாமல் அப்பரிசை அவர் பெற்றுச் சென்றார். 

எனக்கென்னவோ இப்பரிசு கொலம்பியாவின் வீர்ர் James Rodríguez-க்குக் கொடுத்திருக்க வேண்டுமென நினைத்தேன். ஐந்தே ஆட்டங்கள் ஆடி, எல்லா வீர்ர்களையும் விட அதிகமாக 6 கோல் போட்ட இவரே சரியான வீரர் என்று எனக்குத் தோன்றியது.  ஆனாலும் சிறந்த விளையாட்டுக்காரர் என்ற பட்டம் இல்லாவிட்டாலும் அதிக கவல்கள் போட்டதால் GOLDEN SHOE இவருக்கு கிடைத்தது.


*

நம் வரலாற்றில் கோட்ஸே நமக்கு ஒரு வில்லனாக முளைத்தான். அரசியலிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றான். 

substituteஆக இறங்கிய கோட்ஸே அர்ஜென்டினாவிற்கு வில்லனாகி, ஜெர்மனுக்கு வெற்றியை வாங்கிக்கொடுத்தார். ஆனாலும் ஒரு சந்தேகம் ....




ஜெர்மனி வெற்றி பெற்றது கேப்டனால் என்றும் ஒரு வதந்தி உலா வருகிறது. கொடிகளைப் பாருங்கள் - ஒற்றுமை புரியும் உங்களுக்கு !!!

ஒரு காலத்தில் நிறைய பார்த்த ஹாலிவுட்டின் இரண்டாம் உலகப் போர்ப் படங்களில் வரும் ஜெர்மானிய வில்லன்கள் மாதிரி இரு ஜெர்மன் அணி வீரர்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.



Bastian Schweinsteiger

André Schürrle

*

என்னகாரணமோ தெரியவில்லை. உலகக் கோப்பை முடிந்ததும் எழுத ஆரம்பித்த இப்பதிவை பாதிக்கு மேல் தொடராமல் அப்படியே போட்டு  விட்டேன். முடிக்கவே மாட்டேன் என்பது போல் கிடப்பில் கிடந்தது. எப்படியோ தூசியைத் தட்டி எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து ஒரு வழியாக முடித்து விட்டேன்.

இனியாவது ஒழுங்காக “வேலை”யைப் பார்க்க வேண்டும். (“வேலை”ன்னா வேறென்ன ... பதிவு போடுறது தான். நிறைய வெய்ட்டிங்க் ....!)


*


Sunday, July 13, 2014

775. FIFA 14 - முக்காலிறுதி - ப்ரேசில் ஜாதக பலன்கள்







*

ப்ரேசில்   0  -  3  நெதர்லாந்து


நிறைய எதிர்பார்ப்புகள். வழக்கமான ஆதரவு. இவை எல்லாம் சேர்ந்து ப்ரேசிலிடமிருந்து என்னென்னவோ நடக்கும் என்ற ஆசையில் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக லீக் சுற்றுகளில் வெற்றி பெற்றுத் தொலைந்தது; தப்பிப் பிழைத்தது.

ஆனால் அரையிறுதியிலும், ‘முக்காலிறுதி (!)’யிலும் எந்த அணியும் இப்போட்டியில் தோற்காத அளவிற்குத் தோற்றது பார்த்ததும் மனசு ரொம்ப உடைஞ்சி போச்சு. அதுவும் இந்த முக்காலிறுதிப் போட்டியில் ஒரு தடவை கார்னர் பகுதியிலிருந்து ஒரு ப்ரேசில் வீரர் கோல் போஸ்ட்டுகளை ஒட்டி ஒரு பந்தை அடித்தார். அப்பகுதியில் மூன்று ப்ரேசில் வீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் பாய்ந்து தலையால் தட்டி கோலுக்குள் அனுப்ப முயன்றார்கள். மூன்று பேர் தட்டியும் பந்து அவர்கள் தலையில் படாமல் தப்பித்துச் சென்றது. என்னடா ... அநியாயம். இது போன்று எளிதாகச் செல்லக்கூடிய பந்து ஏன் இப்படித் தப்பிச் சென்றது?

அடுத்து, ஆஸ்கர் பந்தோடு நெதர்லாந்து கவல் பகுதிக்குள் வந்து விட்டார்; கவலுக்குப் பக்கத்தில் உள்ள வெள்ளைக் கோட்டிற்கருகே நெத்ர்லாந்து வீரர் தப்பாட்டம் ஆடினார். நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார். ஆஸ்கர் பெனல்டி கேட்டார். நடுவர் கொடுக்கவில்லை. பொதுவாக ஏரியாவுக்குள் தப்பாட்டம் என்றால் பெனல்டி உண்டு, அதுவும் கிடைக்கவில்லை.

எல்லாத்தையும் மண்டைக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டேன். இது ஏன் ... ஏனிப்படி நடந்து என்று யோசித்த போது “எல்லாம் கிரகங்களின் பலன் தான் இது” என்று தோன்றியது. அதைப் பற்றி யோசித்த போது கீழ்க்கண்ட ராசி பலன்கள், ஜாதக பலன்கள் கிடைத்தன.

உங்களோடு அதைப் பகிர்ந்து கொள்கிறேன் ......


*

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

இந்த தர்மத்தை மனதில் கொள்ள வேண்டும்.


ப்ரேசில்:

ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதியும் லக்கினமும் கெட்டிருந்தால், அவைகள் பயன்படாது. சொந்த மண்ணிலே விளையாடினாலும் இதே கதிதான். இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாது என்பதையும்  மனதில் வையுங்கள்.

நீசமான செவ்வாய் உச்சமான குருவோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளான். எட்டாம் அதிபதிக்கு மரண யோகம் தான்.. ப்ரேசிலின் ஜாதகப் பயனால்  சொந்த மண்ணிலேயே மண்ணில் வீழ்த்தப்பட்டது.


நெய்மர்:

ஏழாம் வீட்டுக்காரன் குரு உச்சமாக இருக்கிறான். அத்துடன் தன் முதுகெலும்பைப் பார்க்கிறான். அதனால்  ஜாதகனுக்குத் அங்கே அடி .. வலி ….
மேலும். லக்கினாதிபதியும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.அதுபோல களத்திரகாரனும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.ஆகவே ஆட்டம் ஆடி விட்டது.
கோல் போடுவதற்கு ஒன்பதாம் வீட்டுக்காரான் முக்கியம். இங்கே அவன் 111ல் இருக்கிறான். ஆகவே வாங்குவதெல்லாம் 7 கோலும், 3 கோலுமாக இருக்கும் என்பது ஜன்ம விதி..


தியாகோ:

ஏழாம் அதிபதி குருவை, எட்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் கட்டிப்போட்டிருக்கிறான். லக்கினாதிபதியை 12ஆம் வீட்டுக்காரன் சூரியன் கட்டிப்போட்டிருக்கிறான். ஆறாம் வீட்டுக்காரன் லக்கினத்தையே செக்கில் வைத்திருக்கிறான். ஆக இந்த 3 அமைப்புக்களுமே மோசமானது. ஆகவே ஜாதகருக்கு கோல் பாத்தியதை இல்லை.



சீசர்:



ஜாதகருக்கு 27வ யது முதல் 33 வயதுவரை ராகு திசை. எட்டாம் இடத்து ராகுவால் அந்த திசை நன்மையானதாக இருக்கவில்லை. இரண்டு பெனல்டி கோலைத் த்டுத்திருந்தாலும் அதன் பின் வரிசை கட்டி கவல் வழியாகப் பந்தை விட்டுக் கொண்டே இருப்பார் என்பது ஜாதக லட்சணம்.\


மார்செலோ:

இவர் முதல் பந்தயத்தில் தங்கள் அணிக்கே பிரத்தியட்சமாக முதல் கோல் போட்டு நைவேத்தியத்தை ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகுவந்த குரு திசை, ஜாதகருக்கு அவருடைய சுய
தொழிலில் கொஞ்சம் நன்மைகளைச் செய்தது. ஜாதகரின் நிலமையை அணியில் ஸ்திரப்படுத்தியது. குரு பகவான்உச்சம் பெற்றிருப்பதோடு, லாபத்தில் அமர்ந்திருப்பதையும் கவனியுங்கள்.


ஸ்கோலாரி:

கன்னி லக்கினக்காரர். லக்கினாதிபதி புதன் 12ல். விரையம் ஏறி உள்ளார். ஆகவே ஜாதகரின் அணி அவருக்குப் பயன்படாது.

அனுப்பானடி தராசு என்று மதுரையில் சொல்வார்கள்; இந்தத் தராசில் ஒரு பக்கம் அரைக்கிலோ படியை வைத்து விட்டு அடுத்த பக்கம் இரண்டு கிலோ வைத்தாலும் சமமாகவே காண்பிக்கும்.. 

ஸ்கோலாரியின் பயிற்சி இப்படி ஒரு அனுப்பானடி தராசு மாறியது அவரது பூர்வ ஜென்ம பயன்!



ப்ரேசில் அணி:

பொதுவாக இந்த அணிக்கு லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் சூரியன். மறுபக்கம் கேது. அது ஜாதகருக்கு, லக்கினாதிபதி 12ல் இல்லாமல் இருந்தாலும் நன்மை செய்யக்கூடிய அமைப்பு அல்ல!

*******



ராபனும் பெர்சியும்:

சூரியனும் புதனும் சேர்ந்துள்ளதால் ஜாதகர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கோல் சம்பந்தப்பட்ட செயல்களைச்  செய்து  கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அந்த வீட்டுக்காரன் 12ல் மறைந்தாலும் (பெர்ஸி விளையாடாவிட்டாலும், அவர் வெளியே அமர்ந்த காரணத்திற்காக) சந்திரன் அவருக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.

 *

இப்படிப்பட்ட ஜாதகப் பலன்கள் உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கின.

அடுத்து, அர்ஜென்டினா  -  ஜெர்மனி அணிகளில் எது ஜெயிக்கும் என்று அவர்களது ஜாதகப் பலனகளைப் பார்த்து விட்டு, நாளை காலையில் தீர்மானமாகச் சொல்லி விடுகிறேன். 

சரியா ....?




Thursday, July 10, 2014

774. FIFA 14 அரையிறுதி - 2







*

புதன் மாலை 6.15

 நேற்று மாதிரி இன்னைக்கும் முழிச்சி உட்கார்ந்து ஆட்டம் பார்க்கணுமான்னு மனசாட்சி உள்ளேயிருந்து தட்டிக் கேட்குது. இன்னைக்கி அர்ஜென்டினா ப்ரேசில் மாதிரி ஆடிடக் கூடாதேன்னு பயம் தான். சரி... நாலு வருஷத்துக்கு ஒரு தடவை. மூணு நாள் முழிச்சிதான் பார்ப்போமேன்னு மனச தேத்திக்கிறேன்.

*
புதன் இரவு

சீக்கிரம் படுத்து இரவு 1.20கு எழுந்திருக்க ஏற்பாடெல்லாம் செய்து விட்டு படுக்கப் போனால் ப்ரேசில் வாங்கிய 7 கவல்கள் மட்டும் நினைவுக்கு வர... தூக்கம் கண்களுக்குள் வரத் தயங்க ... ஒரு வழியாகத் தூங்கி, முதல் மணிச் சத்தத்திலேயே எழுந்து வேகமாகக் கைப்பேசியை அடக்கினேன். இது வேறு ... தங்க்ஸும் எழுந்திருச்சி, ‘கிழட்டு வயசில் ராத்திரி பகலா ஆட்டம் பார்க்கணுமா ?  ... பேசாம படு’ய்யா’ என்றால் என்ன செய்வது என்ற பயம்.

*
வியாழன் காலை 11.30

நெதர்லாந்து  ஸ்பெயினோடு விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பெர்ஸி பறந்து போய் முதல் கோல் போட்டதும் நினைவில் உள்ளது. இருந்தாலும் என்னவோ ... அர்ஜென்டினா வெல்ல வேண்டும் என்று ஒரு ஆசை மனதுக்குள் ஓடுகிறது. ஆனாலும் அதற்கு அதிகம் வழியில்லை ... நெதர்லாந்து வென்று விடும் என்றே தோன்றியது.  எதனால் அர்ஜென்டினா மீதான இந்தக் காதல்..? மரடோனாவினாலா ....? மெஸ்ஸியாலா...? அர்ஜென்டினா ப்ரேசிலுக்கு அடுத்தபடி எனது இரண்டாவது தேர்வாக இருந்ததாலா..?  தெரியவில்லை!



 *

வியாழன் மாலை 

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஜெர்மன் வீரர்கள் சத்தமாகத் தங்கள் நாட்டின் தேசியப் பாடலைப் பாடினார்கள்.  ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் யாரும் தங்கள் தேசியப் பாடலை பாடவேயில்லை. ஏன்?

அர்ஜென்டினா நம்ம ஊர் மக்கள் மாதிரி போலும். முந்திய ஒரு போட்டியில் பார்வையாளர்கள் நடுவே ஒரு சின்ன ( நம்ம ஊர் மாதிரி ஒரு flex board) அட்டை வைத்திருந்தார்கள். மரடோனாவும், மெஸ்ஸியும் கிறித்துவர்களின் பிதா, சுதன் என்ற வேடங்களில் வடிக்கப்பட்டிருந்தார்கள்! மனிதர்களை நாம் மட்டும் தான் கடவுள் வேஷங்களில் பார்க்க முடியுமா ... என்ன? இவர்களும்   இந்த விஷயத்தில் நம்மோடு சேர்ந்த முட்டாள்கள் போலும்! நல்ல வேளை ... இந்தப் படத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். நம்ம ஆட்கள் போல் இன்னும் ’அம்மா’, ‘அன்னை’  மாதிரி ஏதும் கொண்டு வரவில்லை!!





முந்திய அரையிறுதி ஆட்டம் போலில்லாமல் இந்த அணிகளின் ஆட்டமிருந்தது. passing shots சரியாகப் போய்ச் சேர்ந்தன. பந்தை வைத்திருப்பதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தது. அர்ஜென்டினாவின் right winger லாவெஸ்சி (22) முழு ஈடுபாட்டோடு விளையாடினார்.  இதற்குள் இரு முறை அர்ஜென்டினாவின் கவல் பகுதியில் பந்து சென்று இரு முறையும் தடுக்கப்பட்டன. இதுவரை இருந்த கணக்குப்படி அர்ஜென்டினாவிடம் பந்து 51 விழுக்காடு அளவு இருந்துள்ளன.  அர்ஜென்டினா அணியின் விளையாட்டும் தீவிரமாக இருந்தது.

இரண்டாம் பகுதி ஆட்டம் ஆரம்பித்ததும் இரு அணியிடம் முன்பிருந்து வேகம் மிகவும் குறைவாக ஆனது போலிருந்தது. 55வது நிமிடத்தில் லாவெஸ்சி அடித்த பந்தை பெர்ஸி தடுத்தார். நல்ல ஒரு சந்தர்ப்பம் அர்ஜென்டினாவிற்கு. ஒரு மணி ஆனபோது மழை தூறலாக விழ ஆரம்பித்தது; முழு நேரம் வரை இது நீடித்தது. 90வது நிமிடத்தில் பந்து ராபனிடம் இருந்தது. அர்ஜென்டினாவிற்கு ஆபத்தான் நேரம் அது. ஆனாலும் அர்ஜென்டினா தப்பிப் பிழைத்தது. முழு நேரம் முடிவதற்கு முந்திய ஐந்து நிமிடமும் அர்ஜென்டினாவின் கவல் பகுதி நெதர்லாண்ட் அணியினரால் நன்கு முற்றுகையிடப்பட்டிருந்தது. கவல் ஏதும் விழவில்லை. ஆட்ட நேரம் இரு அணிக்கும் கவல் ஏதுமில்லாமல் ஆட்டம் முடிந்தது.

extra time  இதில் ஆரம்பத்திலேயே பெர்ஸி side benchக்கு அனுப்பப்பட்டு விட்டார், 98வது நிமிடத்தில் ராபன் கவலை நோக்கி அடித்த பந்து நல்ல வேளையாகத் தடுக்கப்பட்டது.

98ல் பெர்ஸி வெளியேறினாரா ... அது போல் அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லாவெஸ்சியும் வெளியே எடுக்கப்பட்டார். என்ன திட்டமோ தெரியவில்லை.

முதல் 15 நிமிடத்தில் அதிசயத்தக்க, ஆபத்தான நேரங்கள் ஏதும் வரவில்லை; ஆனால் அடுத்த காலப்பகுதியில் இரு அணிகளுக்கும் ஆளுக்கொரு வாய்ப்பு வந்தது. மெஸ்ஸி அடித்த பந்தும் தடுக்கப்பட்டது. கடைசி 30 வினாடிகளில்அர்ஜென்டினாவின் கவல் ஆபத்தான நிலையில் இருந்தது. ஒரு தப்பாட்டம். நடுவர் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது.

அப்புறம் என்ன ... tie breaker தான். அர்ஜென்டினா அடித்த நான்கும் கவல் ஆகின. ஆனால் நெதர்லாண்டின் முதல் அடியும், மூன்றாம் அடியும் தடுக்கப்பட்டன.
4 - 2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

அந்தக் காலத்தில் டென்னிஸில் match points  வரும்போது என் மகள்கள் கண்ணை மூடிக்கொள்வார்கள். கால் பந்துப் போட்டியில் tie breaker அந்த இடத்தை விட்டே நகர்ந்து விடுவார்கள். லாவெஸ்சி வெளியே அமர்ந்திருந்த ஆள் அதே மாதிரி தலையைக் கவிழ்ந்து வைத்து உட்கார்ந்திருந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

நிறைய பேர் ஒரே கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தது போல் தெரிந்தது. ஆனாலும் கடவுள் ஒரு அணிக்கு மட்டும் வெற்றி கொடுத்து விட்டார்!

அர்ஜென்டினா களத்தில் வெற்றியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ராபன் களத்திலிருந்து பார்வையாளர்கள் பக்கம் சென்றார். அவரது மனைவியும் மகனும் என்று நினைக்கிறேன். பயல் ரொம்ப சின்ன பயல் தான். ஆனால் அவனுக்கு தன் தந்தையின் அணி தோற்று விட்டது என்பது தெரிந்திருக்கிறது. அவனை ராபன் கூப்பிட்ட போதும் அவன் அமமாவின் தோளில் படுத்துக் கொண்டு அழுதான். தந்தையைப் பார்க்கவேயில்லை.

ராபனும் அங்கிருந்து அகன்றார்.


*





Wednesday, July 09, 2014

773. FIFA 14 அரையிறுதி






*


 அரையிறுதி ஆட்டம் – 1 

ப்ரேசில் - ஜெர்மனி 

 புதன் கிழமை – இரவு 11.26

 நல்ல வேளை … குறும்பன் மாதிரி நாலஞ்சி பேர் நம்ம பதிவை வாசிக்கிறதினால சில நன்மை நடந்திருது. தினசரியில் பார்க்கும் போது வியாழன் அன்று முதல் அரையிறுதி அப்டின்னு பார்த்ததும், வியாழன் இரவுன்னு நினச்சிக்கிட்டு இருந்தேனா … குறும்பன் இன்னும் நாலு மணி நேரத்தில முதல் அரையிறுதி முடிவு தெரிஞ்சிரும்னு சொன்னாரேன்னு நினச்சிப் பார்த்த பிறகு தான் புதன் – வியாழன் இரவில் ஆட்டம்னு தெரிஞ்சுது. நல்ல வேளை .. பொழச்சேன். குறும்பனுக்கு மிக்க நன்றி.

மனசுக்குள்ள ப்ரேசிலும் அர்ஜெண்டினாவும் இறுதிக்கு வந்து அதில் ப்ரேசில் வெல்லணும்னு ஒரு ஆசை ஓடுறதை இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. ப்ரேசில் அணி வீர்ரகளுக்கு எப்படியோ … மற்ற எல்லோருக்குமே நெய்சர் விழுந்தது ரொம்ப பெரிய சோகமாகப் போச்சு. வேற எந்த அணிக்கும் இந்த நேரத்தில் மனோ தத்துவ உதவி கொடுக்கவில்லை; ப்ரேசில் அணிக்கு மட்டும் கொடுத்திருக்காங்க. அப்டின்னா அவர்களுக்கு அந்த உதவி தேவைப்படுதுன்னு தான் அர்த்தம். அந்த அளவுக்கு அவங்க morale பாதிக்கப்பட்டிருக்கும்னு தோணுது. அதோடு அந்த அணியின் தலைவர் தியோகோவும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் விளையாடும் போது எதிரணி ஆள் தான் foul செய்தது போல் எனக்குத் தோன்றியது. நடுவர் இவருக்கு அட்டை கொடுத்து விட்டார். ஒரு தாழ்ப்பாளுக்குப் பதில் இரட்டை தாழ்ப்பாள் விழுந்தது போல் ஆயிற்று.

இந்த சந்தேகத்தோடு விளையாடும் அணி முழுத் திறமையைக் காண்பிக்க முடியுமான்னு தெரியலை. எதிரணி ஒருமித்த ஒரு அணி. ஏற்கெனவே முல்லர் வேறு நிறைய கவுல் கொடுத்திருக்கிறார். (குறும்பன், கவுல் என்பதை கோலுக்காகப் பயன் படுத்தச் சொன்னீர்கள்; எப்படி … செய்து விட்டேன் பார்த்தீர்களா…?!) தொடர்ந்து நான்காவது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் அரையிறுதிக்குத் தொடர்ந்து வந்த அணி இது. ஆனாலும் இறுதியில் கோட்டை விட்ட அணி. அந்த வேகமும் அவர்களிடம் அதிகமாக இருக்கும். ப்ரேசிலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றால் இவர்களுக்கு இரட்டை உந்துதல் இருக்கும்.

 என் ஆசைப்படி இல்லாமல் ஜெர்மனிதான் இதில் வெல்லும் என நினைக்கிறேன். இறுதியாட்டம் ஜெர்மனி – நெதர்லாந்து என்று தான் நினைக்கிறேன். இந்த முறையும் ஜெர்மனிக்கு ரன்னர் அப் இடம் தான் என்றும் நினைக்கிறேன். ஏன்னா போன உலகக் கோப்பை மாதிரி இந்த முறையும் இதுவரை எனக்கு நெதர்லாந்தின் ராபன் ஆட்டம் தான் மிகவும் பிடித்திருந்தது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மணி 11.40 

ஆச்சு. மதியம் போட்ட தூக்கம் அனேகமாக விளையாட்டை முழுவதுமாகப் பார்க்கத் துணை செய்யும் என்று நினைக்கிறேன்.

மணி  12.01

 இதுவேறு … வர வர அகலப்பட்டை வெற்றுப் பட்டையாகப் போய்விட்டது. நினைத்தால் தொடர்பு உண்டு. இல்லையென்றால் ஒன்றுமே இல்லையென்றாகி விட்டது. அதுவும் இரவில் கூட இணையத்திற்கு இவ்வளவு தடையா? பலரிடமும் மனு போட்டாகி விட்டது. பலன் தான் இல்லை; இப்போது இதைத் தட்டச்சி வைத்திருந்து எப்போது தொடர்பு கிடைக்கிறதோ அப்போது படியேற்ற வேண்டும். வர வர B.S.N.L. வைத்திருப்பது வேதனையாகி விடுகிறது. எனக்கு இப்போதைக்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை.

மணி 12.20

 சரி… மெல்ல போய்… ஆங்கிலத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பார்கள். கேட்க ஆரம்பிக்கிறேன்.

 மணி 2.17 

ஜெர்மனி 5 0 ப்ரேசில் 


 அட போங்கப்பா .. பெரிய சுனாமி ஒண்ணு வந்து எல்லாத்தையும் அடிச்சிட்டி போயிரிச்சி. அப்படித்தான் இருக்கு.

முதல் பத்து நிமிஷம் நல்லாவே இருந்துச்சு. பந்து ப்ரேசில் கை வசமே இருந்தது மாதிரி தோணுச்சு. ஆனால் 11வது நிமிஷத்துல முதல் கவுல். முல்லர் அடித்தது. கார்னர் ஷாட். இலகுவாக அடித்தது போலிருந்தது. இப்போட்டியில் அவரது ஐந்தாவது கோல். தங்கக் காலணி இவருக்குத்தானோ?

இதன் பிறகும் பந்து ப்ரேசிலிடம் தான் அதிகமிருந்தது. திடீரென்று 23 நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை ஒரு பேரலை … சுனாமி … 4 கவுல்கள் விழுந்தன. ஒரு கோல் விழுந்து ஆட்டம் ஆரம்பித்த பின் மறுபடி ரீ வைண்ட் நடக்குமே .. அது தானே என்று பார்க்கும் போது தான் தெரிந்தது அடுத்ததும் ஒரு கவுல் என்று. இப்படியா அடுத்தடுத்த ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் அடுத்தடுத்த கவுல் விழும்! நினைத்தே பார்க்க முடியாது. உலகக் கோப்பையில் இப்படி ஒரு கவுல் மழையா … அதுவும் ப்ரேசிலுக்கு!

இதை தட்டச்சும் போது நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு போன். என்னப்பா இது … உலகத்திலேயே நாங்க தான் ரொம்ப பெரிய ஆளுங்க அப்டின்னு கத்திக்கிட்டு இருக்குற ஆளுக இப்படி அடிச்சிட்டாங்களேன்னு சொல்லி வருத்தப்பட்டார்.

நல்ல வேளை நெய்மர் பிழைத்துக் கொண்டார்.. அவர் இருந்திருந்தாலும் இப்படித்தான் கவுல் விழுந்திருக்கும். ஆனால் இப்போ நானில்லை அது தான் இப்படின்னு கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்னு நினைக்கிறேன்.

Defense of Brasil is in complete jitters.

Marcello பந்தை

 சரி… நேரமாச்சு …மறுபடி போய் உட்காருகிறேன். தலைவிதி ……

 ஜெர்மனி 7 - 1 ப்ரேசில் 

மணி 3.35

எல்லாம் போச்சு …. ஆட்டம் முடிஞ்சி ஒரு லெமன் டீ குடிச்சிட்டு அழுறவங்களைக் காண்பிப்பாங்களே அவங்களைப் பாத்துட்டு எழுத உட்கார்ந்தேன்.

என்னத்த எழுதுறது …. இந்தப் போட்டியின் முதல் நாளில் தன் கவுல் – self goal – போட்டாரே அந்த மார்சலோ ஒருவர் மட்டும் முனைந்து ஆடியது போலிருந்தது. வர்ணனையாளர்களும் நல்லாவே ப்ரேசில் காலை வாரினார்கள். ஆட்டக்காரர்கள் நேரே போய் dressing room-க்குப் போய் ஒளிஞ்சிக்கிறது நல்லது என்றார்கள். ஆட்டம் 90 நிமிடம் முடிந்ததும் அதிக நேரம் கொடுக்கவில்லை. நல்லது தான் … இல்லாட்டி இன்னும் பல கோல் ப்ரேசிலுக்கு விழுந்து விடலாம் என்றார்கள்.

அதென்னவோ ஜெர்மனி அடித்த கோல்கள் கவுலானது. ஆனால் ப்ரேசில் அடித்த சில பந்துகளும் நேரே போய் அந்த கவுலர் கைகளுக்குச் சென்றன. 69, 79வது நிமிடங்களில் ஆறாவது, ஏழாவது கோல்கள் விழுந்தன. 94வது நிமிடம் ஆஸ்கர் அடித்த ப்ரேசிலின் ஒரே ஒரு கோல் விழுந்தது.

ஆனால் ஒன்று .. விருவிருப்பான சினிமா போகுமே அது மாதிரி 95 நிமிடங்களும் அப்படி ஒரு விரைவாக ஓடி விட்டன.


* செஸ் ஆட்டத்தில் ஒருவர் தோற்கும் நிலைக்கு வந்ததும் resign செய்வார்களே அதே போல் இந்த விளையாட்டிற்கும் வைத்து விடலாமா?

* ஒரு காலத்தில் ஜே .. ஜே .. என்று இருந்த இந்தியா ஹாக்கியில் கோட்டை விட்டுக் கொண்டே இருப்பது போல் இனி ப்ரேசிலும் ஆகி விடுமோ? எல்லாம் ஒரு BRICS தொடர்புதான்!

* இரண்டு ப்ரேசில் அணி வீரர்கள் விளையாட்டு முடிந்ததும் மண்டி போட்டு ஜெபித்தார்கள். என்னவென்று கடவுளிடம் பேசியிருப்பார்கள் என்று யோசித்தேன்….

மணி  காலை 4.01


 *

Monday, July 07, 2014

772. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 5







*


 எதிர்க் கருத்தைத் தாங்காத மக்கள், சிலை வணக்கத்திற்கு எதிரான மக்கள், இயற்கையின் அழிவு சக்திகள் - பல திக்குகளிலிருந்து வரும் இத்தகைய எதிர்ப்புகளையும் தாண்டி அசோகரது பெயர் பல மாற்றங்களுக்கும் மத்தியில் 2270 ஆண்டுகளையும் தாண்டி நிலைத்து நின்று விட்டது. ஆனாலும், அசோகரைப் பற்றிய பல புத்த சமயக் கதைகள் இருந்தாலும், "சக்கரம் சுழற்றும் பேரரசன்" என்ற தன் தர்ம சக்கரத்தினால் பெயர் பெற்ற அசோகன் என்ற தனி மனிதரைப் பற்றிய விவரங்கள் ஏதும் நம்மிடமில்லை. இருப்பதில், பல கற்பனைகள் தவிர முழு நிஜமுமல்ல. தன் முகத்தைச் சிறிதே வெளிக் காண்பிக்கிறார். முழு உருவம் எதுவும் தெரியாது. அசோகரின் இந்த மாயச் சிற்பம் ஆய்வாளர்களுக்குரிய கேள்விக் குறியாகி விட்டது.

ஒரு பெரும் வரலாற்று மனிதனைச் சுற்றி இத்தனைக் கேள்விக் கணைகள் … இப்படி ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே இருக்கக் கூடிய ஒன்று. இந்திய நாடு முழுவதும் ராமாயணத்தின் நாயகன் ராமரைத் தொழுதேத்துகிறது. ராமர் ஒரு புராணக் கதை வீரன். ராவணன் என்ற ராட்சசனை வென்று, அயோத்தியாவில் பெரும் மன்னனாக முடி சூட்டப்படுகிறான். அதன் பின் பதினோராயிரம் ஆண்டுகள் பெரும் பேரரசனாக நல்லாட்சி செய்கிறான். இது ராமரின் புராணக் கதை! இதை நம்பிச் செல்லும் மக்கள் கூட்டம் உண்மையான மனிதன் ஒருவனைப் பற்றி அதிகம் தெரியாதிருக்கிறார்கள். முதன் முறையாக இந்தியாவை தனது ஒரே குடையின் கீழே கொண்டுவந்த மன்னன் - அவ்வகையில் அவன் தான் உண்மையான ‘இந்தியாவின் தந்தை’; இந்தியாவில் எல்லோருக்கும் ஏற்கும்படியான கொள்கைகளைக் கொண்டு வந்த பெருமனிதன்; காந்தியின் அஹிம்சை கொள்கைகளுக்கு முன்னோடியாக, மூத்து முதலில் நின்றவன்; அறமே எவரையும் வெல்லும் ஆயுதம் என்ற பெரும் கருத்தினைக் கண்டவன்; ஆட்சியாளர்களின் மத்தியில் யாரும், எவரும் ஒத்துக் கொள்ளும் தனிப்பெரும் ஆட்சியாளன்; ஆட்சிப் பண்புகளால் உயர்ந்த இடத்தில் அமர்ந்தவன்; -- ஆனால் இவனைப்பற்றி ஏதும் தெரியாத மக்கள் கூட்டம் …! ஆச்சரியமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது.

அசோகன் எழுப்பிய குரல் ஆசியக் கண்டத்தின் மூலை முடுக்குகளையும் கவரத் தவறவில்லை. ஆனால் அவன் குரலுக்கு இந்தியாவில் ஏதும் பெரிய மரியாதை இல்லாமல் போயிற்று. அவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய பல நினைவுச் சின்னங்கள் மீது நாட்டுக்கோ, அதன் மக்களுக்கோ, எல்லாவற்றையும் விட இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்திற்கும் கூட அதிக மரியாதை இல்லை. அந்த நினைவுச் சின்னங்களுக்கு ASI கூட எந்தப் பாதுகாப்பும் இன்றும் கொடுக்காது இருப்பது வருத்தத்திற்குரியது.


ஏனிப்படி ஒரு நாடே முழு இருளுக்குள் அமர்ந்திருக்கிறது? அறியாமையா? 




*

771. QUARTER FINALS










*
GERMANY  1   0  FRANCE


இறங்கும் போதே ஜெர்மனி வெற்றி பெறும்னு ..........





 *

இப்படி எழுத ஆரம்பிச்சேனா ... அங்க நின்னு போச்சா .... ரெண்டு மூணு நாளா எழுத முடியலையா ....

அதோட ...

செரீனா வில்லியம்ஸ், நாடல் அவுட்டானாங்களா... அதுவும் சேர்ந்துக்கிச்சு...

இதோட  நெய்மர் போய்ட்டாரா ... அந்த அணி தலைவர் தியாகோவும் போய்ட்டாரா ...

சோர்ந்து போச்சு.



*

ஒரு நண்பர் எனக்கு A, B, B, D சொல்லிக் கொடுத்தார் ... இப்படி ...


ARGNETINA   vs     BELGIUM

BRASIL            vs     COLOMBIA

COSTA RICA      vs    DENMARK      

E

FRANCE         vs         GERMANY

*

QUARTER MATCH RESULTS:

ARGNETINA        1:0   BELGIUM

BRASIL                 2:1   COLOMBIA

COSTA RICA        3:4    DENMARK      

FRANCE                0:1    GERMANY

*


Watch the Brazuca  alone ........



*

எப்படியோ ராபனும், பெர்ஸியும் கோப்பையைத் தட்டிச் சென்று 

விடுவார்கள் என்று நினைக்கிறேன். யாரிடமிருந்து என்று 

தெரியவில்லை, ஒரு வேளை ஜெர்மனியாக இருக்குமோ??

*

கவல் என்றால் என்ன?

குறும்பன் சொல்கிறார்:

கவல் என்ற சொல்லைப் படைத்தவர் முனைவர் இராம.கி. இரண்டு கம்பங்களுக்கிடையே உள்ள இடைவெளிதான் Goal Space அல்லது Goal Spot அல்லது Goal Area. அந்த "வெளிக்குள்" பந்து போவதுதான் கோல் எனப்படுகிறது. நமது கால்களின் இடைவெளியைக் கவட்டை/கவட்டி என்கிறோமே, வடிவில் அதனையொத்ததுதான் Goal Area/Post. கவட்டியின் இடைவெளி போலவே Goal Post இடைவெளியும் இருக்கிறது. இதனை ஒப்பிட்டு, கவட்டைக்குள் செல்வதைக் கவல் என்று பரிந்துரைத்தார் அவர். இந்த ஏரணம் நமது பழக்கங்களையும் உடல் உறுப்புகளின் தன்மையையும் கொண்டிருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இலக்கணத்தில் சினைப்பெயர் என்று சொல்வார்களே, அது இங்கே ஆகிவருகிறதோ அல்லது தொக்கி நிற்கிறதோ என்று சிந்திக்க வைத்தது. நமது வழக்கு, இயல்பில் இருந்து கிடைத்த ஒப்புமைப் பெயர் என்பதால் நான் இதையே பயன்படுத்திவருகிறேன். இது ஒரு நல்ல பெயர்ச்சொல். நீங்களும் பயன்படுத்த முன்வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். வினவலுக்கு நன்றி.

*