Friday, August 12, 2016

904. கபாலி .... பாகம் ..II


*  முதல் பாகம் ………

*


 எக்கச்சக்கமான பட விமர்சனங்களை வாசித்த பின் படம் பார்த்தேனா .. பல ஏமாற்றங்கள்.

ரஜினி நன்றாக நடித்திருப்பதாகச் சொன்னார்கள் … எழுதினார்கள் … போற்றினார்கள். ஆனால் எனக்கு அப்படியெல்லாம் ரஜினி எந்தப் புதிய உயரத்திற்கும் செல்லவில்லை என்றே தோன்றியது. அவரை அதிகமாகப் புகழ வேண்டும் ஒரு விஷயத்திற்கு. மூன்றாவது படம் இயக்குபவரிடம் சேர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டு தன்னை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். மகிழ்ச்சி.

இன்னும் இளையவர் வேடமில்லாமல் atleast படத்தின் மூன்றிலொரு பங்கிற்கு வெள்ளை தாடியுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மகிழ்ச்சி.

இயக்குனரின் தெறிக்கும் வசனங்களையும், அதன் சமூகச் சாடலையும், சிலருக்குக் கோபம் வரக்கூடிய சில சீண்டல்களையும் அவர் அனுமதித்துள்ளார் என்பது மட்டுமல்லாமல் பல வசனங்கள் அவருக்காகவே இருந்ததையும், அது தனது ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்ற உள் அரசியலுக்குள் போகாமல் அவைகளை அனுமதித்து நடித்தற்குப் பெரிய மனது வேண்டும். அவருக்கு அது இருந்திருக்கிறது. மகிழ்ச்சி. 


ஆனால் மகிழ்ச்சி எனக்கு அத்துடன் முடிந்தது. But he is not able to come out of his routine armour. அவர் அவரது முகமூடிகளைக் கழற்றிப் போடுவது அத்தனை சுலபமல்ல. இன்னும் ’சிங்கம் தனியாக வரும்’ என்று பஞ்ச் லைன் வைத்துக் கொண்டு ஒரு கூரையில் ஏறி நின்று பத்து நூறு பேரை சாகடிப்பாரே … அதே சீன் இங்கும் இருக்கிறது. வில்லனுடன் சண்டை போடும்போது வில்லனுக்குப் பக்கத்திலுள்ள பில்லியர்ட்ஸ் மேசையிலிருக்கும் உருண்டைதான் அவன் கைக்குக் கிடைக்கிறது. ஆனால் தல கையை நீட்டியதும் கைத்துப்பாக்கி வந்து விடுகிறது. அதன்பின் அந்த சண்டை முழுவதும் வழக்கமான ரஜினி பைட் தான் – ஒன்றுக்கு நூறு கணக்கு தான். கைத்துப்பாக்கி முன்னால் ஏ.கே.47 கூட நிற்காது.

சண்டை முடிந்ததும் துப்பாக்கியை தோள் மேல் வைத்து போஸ் கொடுப்பதும், பேசும் போது வாயை ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு பேசுவதும், அட .. இதையெல்லாம் விடவும் 25 வருஷத்துக்கு முன்னால் போன அதே கபாலி திரும்பி வந்திருக்கிறான் என்ற வசனமும், படம் ஆரம்பித்த்தும் வந்த சண்டையும், கபாலி’டா என்ற வழக்கமான பஞ்சுகளும் எனக்கு பழைய கதைகளாகவே தோன்றின. It looked more like a parody என்று teaser பார்த்ததும் எழுதியிருந்தேன். அதே உணர்ச்சி தான் இப்போதும்.

ரஜினி நடிப்பு பற்றி எல்லோரும் பழைய சில படங்களில் நடித்தது போல் நடித்தார் என்று சொல்லும் போது எனக்கு ஒரு கவலை வந்தது. அடுத்த படம் உலகப் ’பிரமாண்ட’ டைரடக்கருடைய படமாச்சே… அதில் ரஜினி மறுபடியும் பழைய ஸ்டைலில் நடித்து விடுவாரே என்று கவலைப்பட்டேன். ஆனால் அப்படி ஏதுமில்லை. கபாலியிலும் அவர் தன் பழைய “ஷ்டைல் நடிப்பை”த்தான் தந்துள்ளார். ரஜினி வயதுக்கு ஏற்றது போல் மாறி விட்டார் என்று கூவினார்கள். இல்லை … வெள்ளை தாடியோடு 1/3 பாகத்தில் வந்தார். அவ்வளவே. ரஜினி மாறவே இல்லை.

(இதைச் சொல்லும் போது பா, ப்ளாக், சீனிகம்,பிகு, ஷாமிதாப் … போன்ற படங்கள் நினைவுக்குள் வந்து போகின்றன். விடுங்கள் … நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான். ஆனானப்பட்ட சிவாஜி மாதிரி தான் இந்த ராவ்ஜியும்! இயக்குனர்களால்  சிவாஜி சிகரம் செல்ல முடியாது போனது. ரஜினி அவர் ரசிகர்களால் உயரம் போக முடியாமல் தவிக்கிறார். அந்த இறுக்கமான armour-யை விட்டு அவர் வெளி வர  வேண்டும். விடுவார்களா ரசிகர்கள்?

அமிதாப் மட்டுமல்ல. Indiana Jones படத்தில் வரும் வயதான, பழைய James Bond – Sean Connery, ஓடினால் மூச்சு வாங்கி நிற்கும் வயதான காவல் அதிகாரியாக வரும் Clint Eastwood இவர்களும் நினைவுக்கு வந்து போகிறார்கள். ஐந்து குண்டு வாங்கியும் ஆட்டம் ஆடும் கபாலி மாதிரி யாரும் இல்லை!) 

வழக்கமான உசுப்பேத்தும் ரசிகர்களுக்கான ரஜினி தான் இப்படத்திலும். மாற்றமே இல்லை. ஷ்டைலு … ஷ்டைலுதான்!!!

 ரஜினி எனக்குப் பெருத்த ஏமாற்றம்.

ஆனால் இயக்குனர் மேல் நல்ல மரியாதை வந்தது. ரஜினியை சிறிது மாற்றி (வெள்ளை முடியோடு ஒரு வயதான ரோல்) வைத்து அதோடு நில்லாமல் தான் சொல்ல வந்ததை நிறுத்தாமல் தன் பங்கை முழுவதுமாக அளித்துள்ளார். அதில் அவர் ஏதும் சமரசம் செய்யவில்லை. கோட் போடுறதைப்பத்தி நிறைய பேர் கதறியாச்சு .. அத உட்டுறுவோம். தமிழ் வில்லனுக்கு வைத்த பெயரிலிருந்து எல்லாமே அவர் மனத்திட்டம் தான். அந்தப் பெயர் யாரைக் குறிக்கிறது என்பது புரிகிறது. நானும் என் ப்ளாக்கில் அதை எழுதியிருக்கிறேன். அடுத்து வசனங்களும் வெளிப்படை தான். ‘ஒரு துண்டு நிலம் இருக்காடா … பேசாம போட்டத தின்னுட்டு போங்கடா …என்ற வீர சேகரனின் வசனம் நிறையவே வெளிப்படை. ”நான் முன்னுக்கு வர்ரது உனக்குப் பிடிக்கலை …” நிஜமான சுடும் உண்மைகள். எளியவன் உயரும் போது அதற்கு அடுத்த மேல்படியில் இருப்பவனுக்கு வரும் எரிச்சலும் கோபமும் திரையில் வருவதற்கு மிகப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதாவது வந்ததே … மகிழ்ச்சி!

 வழக்கமான இன்னொரு குறை. படத்தின் நீளம். முன்பே சொன்னது தான்.90 நிமிடத்திற்குள் படம் எடுத்தால் வரிச் சலுகை என்று கொண்டு வரலாம்.

முதல் பாகம் ரொம்பவே நீண்டது. ரஞ்சித் பழைய ஆட்களை விடவில்லை. அதில் தினேஷின் அல்லக்கை நடிப்பு நன்றாக இருந்தது. மற்றவர்கள் சோபிக்கவில்லை. பரதேசியில் நடித்த தனுஷ்கா – பரதேசி படத்திலே அந்தக் கவலை – ஏன் இந்தப்பெண்ணுக்கு நல்ல வாய்ப்புகள் இன்னும் வரவில்லை என்று. இதிலும் அந்தக் கவலை தொடர்ந்தது. அப்பட்த்தில் போலவே இப்படத்திலும் நன்றாக நடித்தார்.

 எடிட்டிங் – இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

இசை – இந்த இசையமைப்பாளர் உரைநடைப் பாடல்கள் தருவதில் மட்டும் எக்ஸ்பெர்ட் போலும்.


*

பாலா படம் நான் கடவுள் வந்த பின்பு தான் அகோரிகளைப் பற்றித்தெரிந்தது  ரஞ்சித் படம் வந்த பின்பு தான் மலேசியாவின் gang wars பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. *

No comments:

Post a Comment