Monday, September 25, 2006
177. சில நேரங்களில் சில பதிவர்கள்.
பதிவர்: 1
வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட 'ஜூஜா' தான் என்றார்!
அவ்வளவு 'ஆட்டோக்களா' இருக்கு நம்ம ஊரில...?
"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல"
பதிவர்: 2
அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, 'என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா' அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே 'உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?' என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு 'எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க' அப்டின்னு கேட்டேன்.
'இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்' என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. 'ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு' கேட்டேன். அதுக்கு அவர்: 'அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு' அப்டின்னார்.
அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !
Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive - அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.
பதிவர்: 3
நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!
பதிவர்: 4
அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.
நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து 'நொறுங்க தின்னா நூறு வயசு'ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.
அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.
பதிவர்: 5
மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி 'மிஸ்' பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை 'மிஸ்' செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. 'சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது' என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் - ""அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" - அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை...சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.
ஆனா ஒண்ணு...'வாட்டர்' பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு 'இதுக்காக' இப்படி 'ரூட்' உடுறது. லொல்லலாங்காட்டி... 'வாட்டர்' போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி 'வாட்டர்' பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது 'வாட்டர்' பத்தி பேசுறேனா, என்ன?
Monday, September 18, 2006
176. மாங்கா மடையர்களா...?
இன்று (18.08.'06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.
ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.
விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு...? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்...? Cann't these judges fix up priorities first?
இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.
விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு...? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்...? Cann't these judges fix up priorities first?
இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.