Wednesday, April 04, 2007

209. என் வாசிப்பு - 1

பிறந்தது என்னவோ வாத்தியார் பிள்ளையாய்தான். ஆனால் ஏன் என்றே தெரியாது, அப்பாவுக்கு நான் கதைப் புத்தகம் படிப்பதைப் பார்த்தாலே பிடிக்காது. சின்ன வயதிலிருந்தே ஒரு கண்டிப்பு. ஆக அந்த வயசிலேயே திருட்டுத் தனம் ஆரம்பிச்சிருச்சி. அப்பா வேலை பார்த்த பள்ளியிலேயே படித்ததால் சிலரிடம் கொஞ்சம் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கிடைக்கும். எங்க பள்ளி நூலகப் பொறுப்பாளர் அப்படி ஒருவர். எல்லோரும் என்ன புத்தகம் வேண்டுமென்று அதற்குரிய தாளில் எழுதிப் போட்டு, அந்தந்த வகுப்புக்குரிய நாள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் நமக்கு அந்தக் கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. ரைட் ராய(ரா)லா (அந்த நூலகர் பெயர்: ராயர் ) அவர் சும்மா இருக்கும்போது உள்ளே நுழைந்து வேண்டிய புத்தகம் எடுத்துக் கொள்ள விட்டு விடுவார். நானும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பாடப் புத்தகங்களோடு சேர்த்து வைத்து வீட்டுக்குக் கொண்டு போய் அங்கும் அதே மாதிரி புத்தகங்களுக்கு நடுவில் புதைத்து வைத்து விடுவேன். யார் கண்டது, அப்பா எல்லாம் தெரிந்து கொண்டே தெரியாதது மாதிரி காண்பித்திருக்கலாம். அப்பாவிடம் சொல்ல வேண்டாமென்று நூலகரிடம் சொல்லியிருந்தாலும், அவர் என்ன சொல்லாமலா இருந்திருப்பார் என்று அப்போதே தோன்றும்.

ஆனாலும் வீட்டில் கதைப் புத்தகத்தோடு பார்த்தால் திட்டு விழும்; “ஆமாம், வரப் போற தேர்வில இதுல இருந்துதான் கேள்வி வரப் போகுதாம்; அத மூடி வச்சிட்டு, பாடத்த எடுத்து படிடா’ அப்டின்னு கர்ஜனை வரும். ஆனால் ஒரு கதையை ஆரம்பிச்சிட்டா எனக்கோ புத்தி பூராவும் அந்தக் கதையின் பாத்திரங்களாகவே நிறைஞ்சிரும். பாடத்த எடுத்தாலும் , அடடா, அவனுக்கு என்ன ஆச்சோ; கொலகாரனை சங்கர்லால் கண்டு பிடிச்சிருவாரா?; வில்லன்அவ்வளவு வேகமா கார்ல போனானே என்ன ஆயிருக்கும்; உதவி கமிஷனர் வஹாபிடம் மாட்டியிருப்பானா? மாயாவி மாட்டிக்குவாரா, இல்ல கருப்பர்களையெல்லாம் காப்பாத்தி விடுவாரா - இப்படியான கேள்விகள் மண்டைக்குள்ள குடைஞ்சிக்கிட்டு இருக்கும்.

வீட்டுக்கு வந்த பிறகு கதை படிக்கிறது கஷ்டமாயிரும். இதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சேன். வீட்டுக்கு அப்பப்போ சின்னச் சின்ன சாமான் வாங்க அருணாசலம் அண்ணாச்சி பலசரக்குக் கடைக்கு என்னைத்தான் அனுப்புவாங்க. கதைப் புத்தகம் ஸ்டாக்ல இருக்கும்போதெல்லாம் கடைக்குப் போறதுக்கு நானே ரெடியா இருப்பேன்; எப்படா அனுப்புவாங்கன்னு எதிர்பார்த்திக்கிட்டு இருப்பேன். அம்மா அல்லது அப்பா கடைக்குப் போறியான்னு சொன்னதும், வேண்டாம்னு சொன்னாலும் ரொம்ப நல்ல பிள்ளையா மேல் சட்டை எடுத்துப் போட்டுக்குவேன். அப்படி சட்டை போடும்போதே நம்ம புத்தகக் கட்டுக்குள்ள இருக்கிற கதைப் புத்தகத்தை எடுத்து சட்டைக்கு உள்ளே இடுப்பில் சொருகிக் கொள்வேன். காசை வாங்கிட்டு நல்ல பிள்ளையாய் நாலைந்து வீடு தள்ளி இருக்கும் தெருமுனை வரை போய்ட்டு, தெருமுனை திரும்பியதும் கதைப் புத்தகத்தை வெளியில் எடுத்து தெரு ஓரமாய் மெல்ல கதை படித்துக் கொண்டே அண்ணாச்சி கடைக்குப் போவேன். பொதுவா எப்போதும் நாலஞ்சு ஆளுகளாவது கடை முன்னால இருப்பாங்க. நான் நல்ல பிள்ளையாய் அண்ணாச்சி கடை ஓரத்தில் இருந்த சின்ன மரத்துக்குக் கீழே நின்று கதையைத் தொடர்வேன். அண்ணாச்சிக்கு வாத்தியார் பிள்ளை பற்றி தெரியும். கொஞ்சம் டைம் கொடுப்பார். பிறகு ‘டேய், என்ன வேணும்னு சொல்லிட்டு படிடா; சரக்கு போட்டு வைக்கிறேன். பிறகு உங்க அப்பா வந்து ஏன் பையனை ரொம்ப காக்க வச்சிட்டன்னு திட்டுவாரு’ என்பார். நானும் லிஸ்ட் சொல்லிட்டு கதையைத் தொடர்வேன். பிறகு சாமான்கள் வாங்கிட்டு, வந்த மாதிரியே தெருமுனை வரை வாசித்து விட்டு, பின் புத்தகத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு நல்ல பிள்ளையாய் வீடு வந்து சேர்வேன்.

கதைகள் வாசித்து ஆர்வமாகி ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாறி மாறி விசிறியாகி தமிழ்க் கதை வாசிப்பு ஒரு நீண்ட தொடர்கதையாக ரொம்ப வருஷம் இருந்தது. ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது ஒரு accidentதான். நான் ஏற்கெனவே சொல்லியுள்ளது போல 16 வருஷம் இருந்த வாடகை வீட்டின் உரிமையாளருக்கு ஒரு மகன்; பெயர் பாண்டி. அவரும் நாங்கள் இருந்த வீட்டில் ஒரு போர்ஷனில் சின்ன அறையில் குடும்பத்தோடு இருந்தார். அவர் குதிரை வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருந்தார். நான் கல்லூரியில் பட்டப் படிப்பு இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வண்டியில் வாடகைக்கு ஏறிய யாரோ ஒருவர் விட்டு விட்டுப் போன ஓர் ஆங்கிலக் கதைப் புத்தகத்தை மெனக்கெட்டு எடுத்து வந்து என்கிட்ட ‘இந்தா, இதைப் படிச்சிட்டு எனக்கு அந்தக் கதையைச் சொல்லு’ என்று கொடுத்து விட்டுப் போனார். நான் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. சரின்னு சொல்லி அதை வாங்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து ‘என்னப்பா, அதைப் படிச்சிட்டியா?’ன்னு ஆரம்பிச்சவர் அதன் பிறகு தொடர்ந்து அனத்த ஆரம்பித்து விட்டார். நானும் முதலில் ஏதாவது ஒரு தமிழ்க்கதை வைத்து உல்ட்டா பண்ணி விடலாம்னுதான் நினச்சேன். ஏன்னா, நம்மளோ தமிழ் மீடியம்; கல்லூரி வந்த பிறகுதான் கொஞ்சம் ஆங்கில வாடை அடிக்குது. நமக்கு ஆங்கிலப் புத்தகங்கள் வாசிச்சா புரியவா போகுதுன்னு ஒரு நினப்பு. அதுக்குப் பிறகு பாண்டி அண்ணனின் தொந்தரவு தாங்காமல் என்னதான் ஆகுதுன்னு பாத்திர்ரதுதான்; உனக்காச்சு எனக்காச்சுன்னு அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிச்சேன். முதல் சில பக்கங்கள் வாசிச்சப்போ தலை சுத்திரிச்சி. இருந்தும் விடவில்லை; தொடர்ந்தேன். எனக்கே பல பெரிய ஆச்சரியங்கள்: அப்பா நான் வாசிக்கிறதைப் பார்த்தும் கண்டுக்கவில்லை; என்னால் முழுப் புத்தகத்தையும் வாசிச்சி முடிக்க முடிஞ்சிது; அதையெல்லாம் விட வாசிச்ச பிறகு ஒருமாதிரியா பாண்டி அண்ணனுக்குச் சொல்ற அளவு கதை புரிஞ்சு போச்சு. அட, இவ்வளவுதானா அப்டின்னு அப்ப தோணிரிச்சி. அதில இருந்து ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் வாசிக்கிறதும் தொத்திக்கிரிச்சி………

5 comments:

இலவசக்கொத்தனார் said...

சரிதான். நமக்கு இவ்வளவு கஷ்டமா இல்லை. படிச்சா ஏன்னே கேட்க மாட்டாங்க. அதனால எப்பவும் புத்தகமும் கையுமாத்தான் அலையுறது.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

Kid said,

"அடடா, அவனுக்கு என்ன ஆச்சோ; கொலகாரனை சங்கர்லால் கண்டு பிடிச்சிருவாரா?; வில்லன்அவ்வளவு வேகமா கார்ல போனானே என்ன ஆயிருக்கும்; உதவி கமிஷனர் வஹாபிடம் மாட்டியிருப்பானா? மாயாவி மாட்டிக்குவாரா, இல்ல கருப்பர்களையெல்லாம் காப்பாத்தி விடுவாரா - இப்படியான கேள்விகள் மண்டைக்குள்ள குடைஞ்சிக்கிட்டு இருக்கும்.


Engalaukku entha tension ellam ethukunu than nanga book pandikirathae kidaiyathu!!!!!!

"instrumental music (KennyG, Yanni ..) "

How dare - "Nothing but wind", "Hhow to name it?" vitutinga???? very bad

kid

delphine said...

Reading books has become a thing of the past.now with the dumb box sitting right in our living room.. well,our kids are well settled with cartoons and our elders with those mega serials. who wants to read books?

எனக்கோ புத்தி பூராவும் அந்தக் கதையின் பாத்திரங்களாகவே நிறைஞ்சிரும். ///
well written Sir!

பொன்ஸ்~~Poorna said...

தருமி,
எங்கப்பாவும் இப்படித் தான். கதைப் புத்தகம் அவர் கண்ணில் பட படிக்க முடியாமல் தான் சந்து பொந்துகளில் ஒளிந்து படித்தது. பாட புத்தகத்துக்கு நடுவில் வைத்து படிக்கலாம் என்றால், எந்தப் புத்தகமும் பெரிதாக இல்லை அப்பவெல்லாம்.. ம்ஹும்... :)) தொடர்ந்து எழுதுங்க.. சுவாரசியமா இருக்கு..

Post a Comment