Thursday, November 15, 2007

241# + * x $-% + @x& + ^() = தமிழ் சினிமா ! :(

மேலே தலைப்பில் குடுத்திருக்கிற 'கணக்கு' / பார்முலா புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுப்படம் ஒண்ணு வரப்போகுதுன்னு வச்சுக்கங்க. நம்ம டைரடக்கர்கள், தொழில் விற்பன்னர்கள், அதில் வரும் நடிக, நடிகையர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமா சொல்ற பார்முலாதான் மேலே தலைப்பில் கொடுத்திருக்கிறது.

புரியலையா? எப்படிப் புரியும் உங்களுக்கு! விளக்கம் சொல்லியே ஓஞ்சி போயிடுவேன் போல இருக்கு !!

இப்போ பாருங்க. The officer and the gentleman அப்டின்னு ஒரு இங்கிலீசு படம் வந்திச்சி. நல்ல படம். நம்ம ஊரு ஃபேமஸ், டேவிட் கியர் ரிச்சர்ட் கியர் நடிச்ச படம். ரெண்டு நண்பர்கள். ஒருத்தர் நம்மாளு டேவிட் ரிச்சர்ட் கியர்; பட்டாளத்தில சேருவாங்க; கடுமையான ட்ரெய்னிங் இருக்கும்; ஒரு கருப்பர் அவங்களுக்கு ட்ரெய்னிங் குடுப்பாரு. இதுக்கு நடுவில நண்பருக்கு காதல் வந்து, கனியாம காயாகிப் போக அவரு தற்கொலை பண்ணிக்குவாரு. நம்மாளு, டேவிட் கியர் கடைசியில் ஆபிசரா ஆவாரு; அப்போ அந்த ட்ரெயினிங் கொடுத்தவரே இவருக்கு சல்யூட் அடிச்சி ஆபிசருக்கு மரியாதை செய்வாரு.

சுபம்.

இப்போ இதை நம்ம தமிழ்ப்படமா மாத்துவோமா?

"மீண்டும் The officer and the gentleman"

முதல்ல, முக்கியமா நம்ம ஹீரோ, அவர் நண்பர் இருவரையும் அறிமுகம் செய்றதுக்காக கதை ஆரம்பிச்ச உடனேயே ஒரு கோயில் செட் முன்னால ஒரு குத்துப் பாட்டு போட்டுர்ரோம். பாட்டு பாதி போனதும் கூட்டத்தில இருக்கிற கதாநாயகி பகல் கனவில் அவங்களும் சேர்ந்து அந்தக் குத்துப்பாட்டுல ஐக்கியமாயிருராங்க.

ஹீரோ யாரையும் லவ் பண்ணாம காரியத்திலேயே கண்ணாயிருப்பார். ஆனால் அந்த கதாநாயகி, அதாங்க அந்த ட்ரெய்னிங் சென்டரின் தலைவரின் பொண்ணு, அவரை விரட்டி விரட்டி லவ்ஸ் பண்ணுது. அதுக்கு அடிக்கடி கனவு காண்ற வியாதி வேற இருக்கு. அதனால் கலர் கலரா, வெளிநாடு உள்நாடுன்னு பல இடத்தில நூறு நூறு பேரோடு நம்ம ஹீரோவோடு கனவில டூயட் பாடுது.

நண்பர் காதலிப்பாரே ... அவருக்கு ஒரு மெலடி டூயட்; அத ஒரு பிறந்த நாள் விழாப் பாட்டா வச்சுக்குவோம். பிறந்த நாள் பாட்டை ரொம்ப சோகமா இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாடுவாங்க; பாட்டு வரிகள் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் புரியும்; ஆனா வேற யாருக்கும் புரியாது. அவங்க எல்லாரும் பேசாம செம ஜாலியா, கேக் சாப்பிடுவாங்க. சரியா ..

அடுத்து, காதல் அம்போ ஆனதும் ஒரு pathos. இவரு ஒரு மலைக்கு இந்தப் பக்கம் இருந்து பாட, அந்த மலைக்கு அந்தப் பக்கம் இருந்து பதிலாக பொண்ணு பாடுது .. (என்னது, நிறைய தமிழ்ப்படத்தில இதுமாதிரி சீன் வந்திருக்கா .. அதே, அதே!)

நடுவில அந்த பொண்ணின் அண்ணன்காரங்கள் & அடியாட்கள் இவங்களுக்கும் நண்பனுக்கும் ஒரு ஃபைட். (என்னது, காதலுக்கு மரியாதை நினைவுக்கு வருதா; அதுக்கு நான் என்ன பண்றது?) ஆனா, பைட் பூராவும் Matrix பட ஸ்டைலில் வச்சுக்குவோம். ( Matrix படம் ஒரு fantasy அப்டின்றீங்களா? அதெல்லாம் கேட்கப் படாது) கதாநாயகன் திரும்பினா, கையைத் தூக்கினா அந்தப் பக்கம் நாலு இந்தப் பக்கம் நாலு - எல்லோரும் காத்தில பறந்து பறந்து போறாங்க. (பின்னே கயிறு கட்டி இழுத்தா போக மாட்டாங்க!) நிச்சயமா காத்தில நாலஞ்சு கரணம் அடிச்சி விழுகிறதுமாதிரி கொஞ்ச பேரைக் காண்பிக்கணும். இந்த சண்டை நடக்கும்போது நம்ம ஹீரோ உதவிக்கு வந்த பிறகுதான் சண்டை சூடு பிடிக்குது. ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி இருக்கு; அதில அடியாட்கள் விழுந்து கலர் எஃபெக்ட் கொடுக்குறாங்க; கையில அருவாளை வீசுறதில காய்கறிக்கடையில இருக்கிற புடலங்காயெல்லாம் வெட்டுப் படுது; ஒரே பயங்கரம்தான்!

இந்தமாதிரி ஆபீசர் ட்ரெய்னிங் அப்டின்னா அங்க ஒரு காமெடியன் இல்லாட்டி என்ன பண்றது? இந்த ரெண்டு நண்பர்களுக்கும் நடுவில ஒரு மூன்றாவது ஆளு. அவருக்கும் அந்த ட்ரெய்னிங் கொடுக்கிற கருப்பருக்கும் எப்போவும் லடாய். கருப்பர் 'குண்டக்க மண்டக்க' கேள்வி கேட்க நண்பர் தெறிச்சி ஓடுவார் எப்பவும். வசனத்தில நடிப்புல சிரிப்பு வராம போய்ட்டா என்ன பண்றது? அதனால நாலஞ்சி இடத்தில இந்த காமெடியன் போறவங்க வர்ரவங்க கிட்ட எல்லாம் அடி வாங்குறார்.

கடைசியில நண்பர் பேனாவினால 'விஷம்' அப்டின்னு எழுதி ஒட்டியிருக்கிற ஒரு சின்ன பாட்டில்ல இருக்கிறதை அப்படியே அண்ணாந்து வாயில ஊத்திக்கிடுறார். பேக்லலைட் எஃபெக்ட் இப்போ கொடுக்கிறோம். அப்போது நம்ம இரண்டாம் கதாநாயகி ஓடிவந்து காலி பாட்டிலைப் பார்த்துட்டு ஒரு பக்க வசனம் ஒண்ணு கடல் மடை திறந்தது மாதிரி பேசுறாங்க. பதிலுக்கு அவர் திக்கித் திக்கிப் பதில் வசனம் பேசுறார். வாயிலிருந்து ரத்தமெல்லாம் வருது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறாங்க. அப்போ கதாநாயகன் வர்ரார். உயிரைக் கொடுத்தும் உன்னைக் காப்பாற்றுவேன் அப்டின்னுட்டு அங்க நிக்கிற கார், ஜீப் எதுவும் வேண்டாம்னுட்டு தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு நடந்தே மருத்துவ மனைக்கி ஓடுறார் .. ஓடுறார். அந்தப் பொண்ணு சாமி சிலைக்கு முன்னால் நின்னு பாட ஆரம்பிச்சிர்ராங்க. சாமி சிலையில் இருந்து பூ ஒண்ணு கீழே விழுகுது. அதே நேரத்தில் அங்க ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் 'நல்ல வேளை, சரியான சமயத்தில கொண்டு வந்தீங்க; இன்னும் 27 நிமிஷம் லேட்டாயிருந்தாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது' அப்டின்னு சொல்லிக்கிட்டே கையைத் தொடச்சிக்கிட்டு வர்ரார்.

சுபம். இப்போ மறுபடியும் முதல் பத்தியைப் படியுங்க.

இப்போ புரிஞ்சிருக்கணுமே .. நம்ம தமிழ்ப்படம் எது புதுசா வந்தாலும் இயக்குனர்கள் இன்னும் மற்றவங்க எல்லோரும் சொல்றது: இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)

நம்ம ஆளுங்களும் எந்த லாஜிக்கும் வேணாம்; இந்த ஃபார்முலாவே போதும் அப்டின்ற நிலைமையை விட்டு மாறவேயில்லை. படம் பார்க்குறது entertainment-க்குத்தான்; அதனால் இப்படித்தான் படம் இருக்கணும் அப்டின்னு மேதாவித்தனமா பேசிட்டு, அந்தப் பக்கம் போய் வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரந்தான்யா, எப்படி படம் எடுக்குறாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு போறோம். அவனுங்க படத்திலேயும் காமெடி இருக்கு; பாட்டு இருக்கு; ஜுஜா வேலையிருக்கு - ஆனா அது அது தனித்தனி படமா இருக்கு. காமெடியையும் சீரியஸ் கதையையும் ஒண்ணா சேத்து பினைஞ்சி கொடுக்கிறதில்லை. நம்ம ஊர்ல நம்ம கதாநாயகன் வேல்கம்பை அப்டி ஊன்றி வச்சார்னா, அந்தக் குச்சி மட்டும் எதிராளிகளை ஒரு சுத்து சுத்திட்டு மறுபடி அவர்ட்டயே வந்து நிக்குது; தியேட்டர்ல விசில் பறக்குது. அட, அவங்களை மாதிரி நாமும் ரசனைகளைப் பிரித்து தனித்தனியே வேறு வேறு படங்களாக எடுக்கக் கூடாதா? genre அப்டின்னு சொல்லுவாங்களே அதத்தான் சொல்றேன். காமெடி படம்னு எடுத்தா அதில எத வேணும்னாலும் காமிக்கலாம். கரடி என்ன சிங்கம் கூட எதிர்த்தாப்பில வந்து மூஞ்சில எச்சி துப்பிட்டு போறது மாதிரி காமிக்கலாம். ஆனால், உதாரணமா, பம்பாய் சீரியஸ் படம் - சரி; பின் அதில எதுக்குக் குத்துப் பாட்டு? copy cat இருக்காரே - மணிரத்தினம் - அவரின் படங்களில் (கன்னத்தில் முத்தமிட்டால் தவிர)குத்துப் பாட்டு இல்லாத படம் இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இவரை இந்த மீடியாக்காரர்கள் இந்த அளவு தூக்கி வைத்துப் பேசுகிறார்களோ?

ஆக இந்த ஜென்மத்தில் நம் தமிழ்ப் படங்கள் அதுமாதிரி genre வாரியாக வரப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ...


"லிங்குசாமிக்கு ஜே!

"முருகதாஸுக்கு ஜே !

coffee with anu நிகழ்ச்சியில் சூர்யா, முருகதாஸ் கலந்துகிட்ட நிகழ்ச்சி. இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் விக்ரம், சூர்யா ரெண்டு பேரையும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பார்க்கிறதுக்கே நல்லா இருக்கு. ஒரு துடிப்போடு casual-ஆக இருக்கிறது நல்லா இருக்கு. ஆனா அந்த நிகழ்ச்சியில் பிடிச்சது முருகதாஸ் சொன்ன ஒரு விஷயம். தமிழ்த் திரைப்படங்களை அடுத்த தளத்துக்கு எடுத்திட்டுப் போகணும் அப்டின்னு சொல்லும்போது இந்த genre பற்றிச் சொன்னார் - இதே சொல்லைப் பயன்படுத்தினாரென்றே நினைக்கிறேன்.

அப்பாடான்னு இருந்திச்சி. அட ஒரு இயக்குனருக்காவது இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய தெளிவு இருக்கேன்னு சந்தோஷமா இருந்திச்சு. இனிம அந்த விஷயம் பரவி, மற்ற இயக்குனர்களை அதை பாதித்து அவங்களும் மாறி நம் மக்களும் மாறி ... ம்ம்..ம்.. இதெல்லாம் இப்ப நடக்குற விஷயம் இல்லைதான். இருந்தாலும் முதல் முதல்ல இதைச் சொன்ன-

"முருகதாஸுக்கு ஜே !

பி.கு.
ரிச்சர்ட் கியருக்குப் பதிலா டேவிட் கியர் ..
முருகதாஸுக்குப் பதிலா லிங்குசாமி ..

மாத்தி மாத்தி பேருகளைப் போட்டுட்டேன்; மன்னிச்சுக்கோங்க.
நமக்கு பெயரா முக்கியம் ..விஷயம்தான முக்கியமுங்க (கீழ விழுந்தாலும் ... அப்டின்னு என்னமோ சொல்லுவாங்க ,, இல்ல?!)

Saturday, November 03, 2007

240. தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

அல்லது

தூக்கத்தில் பிறந்த பின்நவீனத்துவம் ... ?

அல்லது

ஃப்ராய்டைத்தான் கூப்பிடணும்!


நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...

இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு!)

அது போகட்டும் ...

இப்பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல. படம் பார்த்தேன். தூங்கப் போனேன். உடனே தூங்கியும் விட்டேன். இரவெல்லாம் உடல் நன்றாகவே தூங்கியது. விழித்திருந்தது எது - அது மூளையா, மனமா - தெரியவில்லை. ஒரே ஒரு விஷயத்தைச் சுற்றிச் சுற்றி அந்த "அது" -மூளையோ, மனசோ (இனி அதை "அது" என்று சொல்லிவரப் போகிறேன்.)- தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அட! இயங்கி வந்ததோ என்னவோ சரிதான்; ஆனால், 'அது' இயங்கி வந்தது இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைச் சுற்றி சுற்றிதான். allure & allude என்ற இரண்டு சொற்களைச் சுற்றிச் சுற்றியே 'அது' வந்ததுதான் ஏனென்று தெரியவில்லை. இந்த இரு வார்த்தைகளுமே பார்த்த படத்துக்கோ முந்திய பகலில் நடந்த நிகழ்வு எதற்குமோ தொடர்பில்லா வார்த்தைகள். பின் ஏன் இந்த இரு வார்த்தைகளை மட்டும் 'அது' சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

allure = The power to attract through personal charm
allude = Make a more or less disguised reference to


இதிலும் பல கனவுலகத்திற்கேயான பல பின்புலங்களில் இந்த வார்த்தைகளை, அதன் பொருளைத் தேடித் தேடி 'அது' போகின்றது. காடு, மேடு, மலைமுகடு என பல இடங்களில் சஞ்சரித்ததாகத் தோன்றியது. இரு சொற்களுக்குமே பொருள் எனக்கு /அதற்கு (?) நன்கு தெரியும். இருப்பினும் கனவா அல்லது நனவா அதில் நான் பொருள்தேடி அலைகிறேன். முதல் சொல்லுக்குப் பொருளும் அந்தச் சொல்லை வைத்து வாக்கியங்களும் அமைக்கிறேன். இரண்டாவது சொல்லுக்குப் பொருள் சொல்கிறேன். ஆனால் 'எதுவோ' அதை மறுக்கிறது. அச்சொல்லை வைத்து வாக்கியம் அமைக்க முயலாது தடுமாறுகிறேன். அந்தக் கோபத்தில் ஒரு மலையுச்சியில் இருந்து எதையோ ஓங்கி உதைத்துத் தள்ளுகிறேன். அனேகமாக நான் உதைப்பது அந்த வார்த்தை 'allude'- யைத்தான் என்று நினைக்கிறேன். நான் மலை முகட்டுக்கு இந்தப் பக்கமிருந்து உதைக்க அந்தப் பக்கம் போய் அது விழுகிறது. மலைமுகடு பனிபடர்ந்து வெள்ளை வெளேரென்று இருந்ததாக நினைவு. ஜோலி முடிந்தது என்று கைகளைத் தட்டு விட்டுக்கொண்டு திரும்புகிறேன். பின்னால் ஏதோ சத்தம். திரும்பிப் பார்த்தால் மீண்டும் 'allude'! இந்தப் போராட்டம் துவந்த யுத்தமாகவே இரவு முழுவதும் நடந்தது போல் நினைவு.

வழக்கம் போலவே 7 மணிக்கு விழிப்பு வர, இன்று தங்கமணிக்கு ட்ரைவர் வேலை பார்க்கத் தேவையில்லை என்ற நினைவு வரவும் மீண்டும் தூங்க முயன்றேன். தூங்கினேனா, இல்லை கனவுகளில் இருந்தேனா என்பது தெரியாத ஒரு நிலை. இரவில் வந்த இரு வார்த்தைகளுகே மீண்டும் வந்து விளையாட்டு காண்பித்தன. இப்போது அரைகுறைத் தூக்கம் என்பதாலோ என்னவோ இரவில் 'அது' செய்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு ஒவ்வொன்றாய் வர அதை முன்னிலிருந்து பின்னாகவும், பின்னாலிருந்து முன்னாகவும் நினைவு படுத்த முயன்றேன். ஏனோ அப்போது பின்நவீனத்துவம் என்பது மண்டைக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் பின்நவீனத்துவமோ என்று ஒரு கேள்வியும், இதுதான் அது என்று ஒரு பதிலுமாக ஒரு சேரத் தோன்றியது.

* இப்படி யாருக்காவது வெறும் வார்த்தைகள் - வார்த்தைகள் மட்டுமே - கனவில் வந்திருக்கின்றதா?

* முன்பின் தொடர்பில்லாமல் இரு வார்த்தைகள் கனவில் வந்து வதைத்ததேன்?

* அதுவும் why did allude elude so much?


*** பின்குறிப்பு: இப்பதிவை சுகுணாவோ, அய்யனாரோ அவர்கள் நடையில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது - சீரியசாத்தான் சொல்கிறேன்!