*
மொத மொதல்ல ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தோடு (confession) இதை ஆரம்பிக்கிறேன்: எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது. என்னென்னமோ சொல்லுவீங்களே… ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி (அனு பாடுற பல்லவியா இது?), சரணம் … இதெல்லாம் ”வீசை என்ன விலை”ன்னு கேட்கிற ஜென்மம் நான்.
பின் எந்த லட்சணத்தோடு பஞ்சாயத்து பண்ண வந்த அப்டில்லாம் கேக்கப்படாது. வந்தது வந்திட்டேன்.. சொல்ல நினச்சதை சொல்லிட்டு போய்றேன். அம்புட்டுதான் ………கொஞ்சம் பொறுங்க ... தோள்ல துண்டைப் போட்டுக்குறேன்... எங்கே அந்த சொம்பு...ம்.. இந்தா இருக்கு... ஆரம்பிப்போமா...
சார்லஸ் அப்டின்னு ஒரு புது பதிவர். பத்து பதிவு மட்டும் போட்டிருக்கார். அதில நாலு பதிவு இளைய ராஜா பற்றியது. தலைப்பே இசை ராட்சஷன் அப்டின்னு வச்சிட்டாரு. எப்படி சின்ன வயசில இருந்து பாட்டு கேட்டேன் … சர்ச்ல பாட்டு பாடினேன் … எப்படி என் இசை வளர்ந்தது. எப்படி ஒரு இசை அமைப்பாளரிடமிருந்து கடைசியில் ராஜாவின் ரசிகனானேன். எந்த பாட்டை எப்பெப்போ கேட்டேன். அது எப்படி என்னை ஈர்த்தது அப்டின்னு எழுதினார்.
இப்படி அவர் பத்த வச்சதும் சிலர் – குறிப்பாக இருவர் – அமுதவன், காரிகன் வந்து எதிர்க்கருத்து வைத்தார்கள். நானும் கூட அந்தப் பக்கம் போய் ஒன்று ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா. கண்ணும் மண்ணும் தெரியலைன்னு வெளியே வந்துட்டேன். ஆனால் அங்க ஒரேடியா இன்னும் புகை வந்து கிட்டே இருந்ததா … சரி .. நமக்கு தோன்றதைச் சொல்லலாமேன்னு ஒரு தைரியத்தில வந்திட்டேன் …
சாமிதான் என்னய காப்பாத்தணும்.
நான் பாட்டு கேட்பேன். ஆனாலும் என் வயசுக் காலத்தில வந்த தமிழ்ப்பாட்டுகள் ஒண்ணும் தேறலை. அனேகமா அப்போவெல்லாம் முழு கர்நாடக இசையே அதிகமா இருந்திருக்குமோ என்னவோ.. அதுனால சில தமிழ்ப் பாட்டுகள் பிடிக்கும். கைராசின்னு ஒரு படம். ஜெமினி நடிச்சதுன்னு நினைக்கிறேன். அதில் ஒரு காதல் பாட்டு. கதாநாயகன் பாடுற பாட்டு. அது தான் எனக்கு மொதல்ல முழுப் பாட்டும் மனப்பாடமா இருந்தது. என்ன பாட்டுன்னு இப்போ மறந்து போச்சு. பள்ளிப்பருவம் இப்படிப் போச்சு.
காலேஜ் வந்ததும் இந்திப் பாட்டுகள் தான் பிடிச்சிது. ‘பார்ரா..அம்பது, நூறு வயலின் வச்சி இழைக்கிறாண்டா இந்த சங்கர் ஜெய்கிஷன்’ அப்டினு சொல்லுக்குவோம். தெரிந்த இன்னொரு பெயர் லஷ்மண் – பியாரிலால் மட்டும் தான். அப்பா கூட ஒரு தடவை கேட்டார்; ஏண்டா! இந்தி வேண்டாம்னு போராட்டம்; ஆனால் கேக்குறது இந்திப் பாட்டா?’ நாங்க பதில் வச்சிருந்தோம்ல … இந்தி படிக்கிறது திணிப்பு; இந்தி கேக்கிறது இனிப்பு!
கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.
எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.
70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது.
ராஜாவிற்குப் பிறகு மற்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் பிடித்தன. ’அன்னக்கிளி என்னைத் தேடுதே’ கேட்ட போது எழுந்த நினைப்புகளும் நினைவில் இருக்கு. ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டு முதல் முறை கேட்ட நேரம், இடம் எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனாலும் ரஹ்மான் ராஜா போல் சிம்மாசனம் போட்டு அமர முடியவில்லை, வார்த்தைகள் புரிந்து பாடல் கேட்ட காலம் முடிந்து, இசைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டதாலோ என்னவோ பழைய பாடல்கள் போல் புதுப் பாடல்களில் மனம் ஒன்று படவில்லை. இது நான் ரசித்த விதம்.
சார்லஸ் ரசித்ததும் இதுபோல் தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரது பதிவு எனக்கு உடந்தையாக இருந்தது. ஆனால் அமுதவனும் காரிகனும் முற்றிலும் வேற்றுச் சுவையோடு இருக்கிறார்கள். இதுவும் இயற்கையே…. Tastes differ.
ஆனால் அவர்கள் எனக்கு இந்த இந்த இசையமைப்பாளர்கள் பிடிக்கிறது; ராஜாவைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் சரி தான். ஆனால் ராஜாவின் மேல் ஏதோ வன்மம் கொண்டது போல் எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
பஞ்சாயத்தில் இதைப் பற்றிப் பேசுவோமே ….
காரிகனுக்கு …
உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் இசையில் நிறைய அறிவுள்ளவர் என்று தெரிகிறது. நல்லது. மகிழ்ச்சி.
இருப்பினும் உங்கள் சில கருத்துகளுக்கான என் எதிர் கருத்துகள்: காரிகன் என்னிடம் -- //இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.// என்று கேட்டிருக்கிறார். என் பதில் -- ஒரு வேளை நான் அதிகம் வாசித்திருக்க மாட்டேனாக இருக்கலாம். ஆனால் சில வாசித்திருக்கிறேன். அதிலும் மதுரைக்காரர் ஒருவர் - குமரன் - இளையராஜாவின் இயற்பியல் என்று எழுதுகிறார். அந்த தலைப்பில் அவர் எழுதிய அழகான பதிவுகளும் நினைவுக்கு வருகிறது. //இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது எப்படி? வாழ்க்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும்.// இது போல் அழகாக எழுதிச் செல்வார். வாசிக்கவே இன்பம் வாசித்துப் பாருங்கள் காரிகன். (இப்போது எனக்குப் பின்னால் ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடல் கேட்கின்றது…. நல்ல பாட்டு …இல்லீங்களா?)இது போல் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் என் கண்பார்வையில் ராஜாவைப் ‘போற்றிப் பாடடி கண்ணே…’ பதிவுகள் தான் அதிகம் பட்டன. அதனாலேயே உங்கள் கருத்துகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.
உங்களின் இன்னும் சில கருத்துகள் என் பதில்களோடு;
//உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்?// காரிகன் நாம் யாருக்கும் conduct certificate கொடுக்க வேண்டியதில்லை. யார் இசை யார் யாருக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே ‘பஞ்சாயத்தின் முன் உள்ள கேள்வி’. ?/
ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.// ஓ! இசை அறிஞர் நீங்களே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல? என் ஒரே பதில்: அப்படியா? //
ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.// ஓ! நானும் ஒரு மர மண்டை தான். //
இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன்.//
காரிகன் , This shows just how biased you are.
காரிகன், உங்கள் இசையறிவைப் பார்த்து வியக்கிறேன்.இருப்பினும் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளை வாசித்த போது உங்களைப் போல், அல்லது - என் பார்வையில் உங்கள் அளவோ அல்லது அதற்கு சிறிது மேலோ உள்ள - சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தேன். படித்தவை எனக்கு மகிழ்ச்சியளித்தன. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
செளந்தர்
ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன் இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு ....
பால ஹனுமான்
ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, (ஹே ராம்) படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.
காரிகன், எனக்கும் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.
செழியன்
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது. (அமுதவன், இதே கருத்தை நாம் சிவாஜிக்கும் வைத்தோம்...)
இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.
ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின், அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும், அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது, அவன் திசைகள் கடந்து... தனது படைப்பின் எல்லைகளை, மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை, அவனுக்குத்தரும்.
அடித்துச்சொல்கிறேன்.. உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ், ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா. (ஹே ராமில்) இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க, கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு. ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள், தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.
அமுதவனுக்கு ….
நீங்கள் சிவாஜி பற்றி எழுதி, அதற்கு வவ்வால் பதில் சொன்னது போல் இங்கு நீங்கள் எதிர்க் குரலில் பேசுவது போல் தெரிகிறது. சிவாஜி ஒரு பெரும் நடிகர்; அவரது ரசிகர் நீங்கள். வவ்வால் குறை சொன்னது உங்களுக்கு எந்த அளவு கோபம் தந்தது. இப்போது வவ்வாலின் ரோலை நீங்கள் இதில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா; மொசார்டுக்கு இசை சொல்லிக் கொடுத்தவர்; பாக்கிற்கு ட்யூஷன் எடுத்தவர் – இப்படியெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பது உங்கள் குற்றச்சாட்டு. சிவாஜியைப் பற்றி நீங்கள் சொன்ன சில வாசகங்களைத் தருகிறேன். நம்மைப்போல் சிவாஜி மேல் பற்றில்லாத ஒருவருக்கு நீங்கள் சொன்னவை எப்படி பொருள் படும் என்று யோசித்துப் பாருங்களேன்.
சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல,
சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.
அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய் இருந்தார்.
உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத மனிதர்கள் மிக மிக அதிகம்.
வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது.
அத்தனையையும் குரலிலேயே கொண்டு வந்த மகா கலைஞன் உலகத்திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை.
அமுதவன், எனக்கும் மிக மிகப் பிடிக்கும் சிவாஜியைப் பற்றி நமது ஆர்வத்தில் சொல்லும் வார்த்தைகளாகத்தான் இவை இருக்க முடியும். இதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எதிர்க்கும் ஆட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரியாதா உங்களுக்கு?
உங்களைப் போல் இங்கே ராஜாவை விரும்புவோர் சிறிது உயர்வுபடுத்திப் பேசினால் என்ன தவறு? அவர்கள் ரசிகர்கள் - நாம் சிவாஜிக்கு இருப்பது போல்.- உயர்த்திதான் பேசுவார்கள்.
தீர்ப்பு.........
நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!
ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனையோ, ரசினி ரசிகனையோ என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்களையெல்லாம் எப்படிடா ரசிக்கிறாங்கன்னு தான் வருஷக் கணக்கா நினச்சிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இந்த ஆளுகளுக்கு அதீத ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் பட்டியலில் ராஜைவைச் சேர்க்க அமுதவனும், காரிகனும் கூட சம்மதிக்க மாட்டார்கள். ராஜாவை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் ... அதுவும் அவர்களில் பல விஷய ஞானத்தோடு இருக்கிறார்களும் என்பதும் உண்மையே.
சமீபத்தில் நண்பன் ஒருவனோடு காரில் செல்லும் போது அவன் சேமித்து வைத்திருந்ததில் Stanford Universityல் It's Different என்ற FM நிகழ்ச்சியைக் கேட்டேன். கேட்டுப் பாருங்கள். ராஜாவின் இசையை முழுக்க முழுக்க analysis செய்து, மற்ற பெரும் இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு.... மிக அருமையான நிகழ்ச்சி. இசையறிவு உள்ளவர்களுக்கு அது ஒரு உயர்ந்த விருந்து.
எனது வருத்தம் இரண்டு;
1. How to name it?, Nothing but wind போன்ற தனி இசைத்தட்டுகளை வெளியிடாமல் போய் விட்டாரே ...
2. இன்று போடும் பாடல்கள் அவரின் பழைய பாடல்கள் போல் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் ...
ராஜா 142 ராகங்களிலோ, 846 ராகங்களிலோ பாடல்கள் அமைத்திருக்கலாம். அவர் ரசிகர்கள் அவரை ரசிக்கட்டும். முடியாதவர்கள் ஒதுங்கிக் கொண்டு, அவர்கள் ரசனையைத் தேடி செல்லட்டும்.. It is all so simple!
My reqyest:
//The perfect porn music director of the Tamil film music industry//..
— My very sincere request: better all of you stop talking about this porno music. Who is to be condemned for this – the directors, lyricists, music directors or above all, WE, the audience? இதைப் பற்றி அப்பதிவில் பேசியது நமது தரத்திற்கு மிகவும் கீழான ஒன்று.
சொம்பை எடுத்து உள்ளே வைங்க’ப்பா ... !!
*
*