Monday, March 27, 2017

933. ஆவியில் வந்த என் ஆசை ...3




***
ஆவியில் வந்த என் ஆசை ...1  

ஆவியில் வந்த என் ஆசை ... 2  

***



           
ஆவியின் ”ஆசைஎன்ற ஒரு தொடர் நிகழ்வுக்கு என் பெயரையும் கொடுத்திருந்தேன். எல்லாம் ஒரு சின்ன ஆசை தான். நம் பக்கம் “சீட்டுவிழுந்து விடாதா என்ற ஒரு  நப்பாசை. ஆனால் நப்பாசை நடந்தே விட்டது. ஓவியர் மருது மிகவும் பெரிய மனது வைத்து, தன் சுறுசுறுப்பான நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


***


 
என் நல்லூழ் ...  இந்நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் கொஞ்சம் முகநூலில் எனக்குப் பரிச்சயமான பெயர் - பரிசல்காரன் கிருஷ்ணா. அவரோடு உடன் வந்தவர் ஆவியின் தலைமைப் புகைப்படக்காரர் - கே.ராஜசேகரன். இவரைப் பற்றியும், அவரின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பற்றியும் தெரியும் – பின்னால் சொல்கிறேன் அதைப் பற்றி.  அவரோடு  காணொளிப் பொறுப்பாளராக இன்னொரு இளைஞர்- நாகமணி – வந்திருந்தார். நாங்கள் நால்வரும் மருது அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.




ஓவியர் எனது கல்லூரிக்கு ஒரு முறை வந்த போது அந்த நாள் முழுவதும் அவரோடு இருந்திருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்னை அவர் வீட்டில் பார்த்ததும் என் முகம் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.

இனிய முகம் ஓவியருக்கு. பேச்சிலும் இனிமை. புகழ் பெற்ற மனிதர்களைப் பார்க்கப் போகும் போது பல சமயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து மிகவும் விலகியே இருப்பது வழக்கம் தான். ஆனால் ஓவியரிடம் அந்த குணம் சிறிதும் இல்லை. நல்ல விருந்தோம்பல். எங்களோடு சமதையாக அமர்ந்து பலவற்றைப் பற்றிப் பேசினார்.

ஒரு ஓவியராக அவரது  professional work (!!)  அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விட்டது என்றார்.  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெரிய சுவர்களில் பிரம்மாண்டமாக, பெரிய படங்கள் வரைய கிடைத்த வாய்ப்புகள் பற்றிப் பேசினார். அதனால்  ஓவியத்தில் ”space" பற்றிய அனுபவம் அந்த சிறிய வயதிலேயே கிடைத்தது பற்றிக் கூறினார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிக் கூறியதும் நானும் அந்தப் போராட்டத்தில் என் பங்கைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன்.

அடுத்து அவர் சிறு வயது முதல் அவர் தந்தையோடு ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பித்ததைக் கூறினார். நானும் விடுவேனா .... எப்படி வீட்டில் படிக்கப் போவதாகச் சொல்லி ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்த என் வரலாற்றை எடுத்து விட்டேன்! அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே! வரும் மக்களும் கோலிவுட்டின் வரலாறும், ஆங்கிலப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பெரும் பட்டியல்களை அள்ளித் தெளிப்பது இன்னொரு அதிசயம். இதில் பலரும் அதிகம் படித்திராத மக்கள் தான். அந்தத் தியேட்டரின் மகிமை பற்றிப் பேசினோம்.

ஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பேசிய சுவாரசியத்தில் அந்த நேரம் போனதே தெரியவில்லை. படம் வரையலாமா என்றார். நிலத்திலிருந்து சில இஞ்சுகள் மேலெழும்பியது போல் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் எப்படியிருக்குமென மனதிற்குள் பல கேள்விகள். லைட்டிங்க் செய்ய வேண்டுமென்றார். ஆவி மக்கள் தயாராக வந்திருந்தார்கள். ஒரு லைட்டை என் முகம் நோக்கி வைத்தார்கள். ஒளிவெள்ளத்தில் நான். அப்போதே அரைகுறை நினைவு என்னிடமிருந்து கழன்று போனது போன்று இருந்தது. ஒரு மேஜையின் பாதிப் பரப்பில் பல தூரிகைகள், பல விதப் பேனாக்கள் .. அதில் சிலவற்றோடு என் எதிரில் அமர்ந்தார். என்னை அவருக்கெதிராக வசதியாக உட்கார வைத்து வரைய ஆரம்பித்தார். அவர் தலைக்குப் பின்னால் சுவற்றில் ஒரு கடிகாரம் இருந்தது. கடிகாரத்தின்பெரிய முள் ஏழாம் எண்ணில் இருந்தது. நல்ல பிள்ளையாக, தலையை ஆட்டாமல் என் பெரிய தொந்தியோடு  பிடித்து வைத்த பிள்ளையாராக  அப்படியே அமர்ந்திருந்தேன். பெரிய முள் பதினொன்றைத் தொடுவதற்குள் படம் வரைந்து முடித்து விட்டார்.
 


படம் முடிந்ததும் பேச்சு ஓவியக்கலை பற்றியதாக மாறியது. தனது படங்கள் பலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். நால்வருக்கும் அதுவே பெரும் விருந்தாக இருந்தது.    தன் அயல் நாட்டு அனுபவங்கள், அங்கு மறைந்த ஓவியர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை ... அதன் பின் கணினி வைத்து ஓவியம் வரையும் தற்கால முன்னேற்றம், இந்த முன்னேற்றத்திற்கு அவர் முன்பே எடுத்த முயற்சிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
 
திடீரென்று என்னை வேறு ஒரு கோணத்தில் அமர்த்தி, அதற்கும் ஒளி அமைப்பு கொடுத்தார். ஆனாலும் ஒளி போதுமான அளவில் இல்லை என்றார். இந்த இரண்டாம் படம் வரைய அனேகமாக நான்கு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார். படத்தை என்னிடம் கொடுத்தார்.நோ்த்தியான வெகு சில கோடுகளுக்கு நடுவே நான் இருந்தேன். மனதில் உடனே தோன்றிய சொல் “MAGIC". முதல் படத்தை விட இது எனக்குப் பிடித்தது. அவரிடம் இந்தப் படம் ஒரு “MAGIC" என்றேன். மகிழ்ச்சியோடு பெரிதாகச் சிரித்தார்.

அதன் பின்னும் பேசிக்கொண்டிருந்தோம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறி போல் அவரது படங்களில் உள்ள சிறு கிறுக்கல்கள் கூட அழகாக இருக்கிறது என்று நானும் பரிசல்காரனும் அவரிடம் சொன்னோம்.
 
மூன்று மணி நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டார். நிச்சயமாக அது அவர் ஆவியோடு கொண்டிருக்கும் நேசத்திற்கு இது ஒரு அடையாளம் என்றே நினைக்கின்றேன். அந்த மணித்துளிகள் மிகவும் பயனுள்ளதாகவும், நிறைய அனுபவங்களையும் தந்தன. ஒரு பெரிய ஓவியரோடு இணைக்கு இணையாக அமர்ந்து அளவளாவியது ஆவி தந்த கொடை. வாழி.

ஓவியர் வீட்டை விட்டு வெளிவந்ததும் புகைப்படக் கலைஞர் ராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் மருதுவோடு பேசிக்கொண்டிருக்கும்  போது தொடர்ந்து பல படங்கள் எடுத்துத் தள்ளினார். ஒவியர் வரைந்த படங்கள் போலவே இன்னொரு புகைப்பட ஓவியர் எடுத்த படங்களும் கிடைத்தால் நலமே என்று எண்ணிக் கேட்டேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எல்லா படங்களையும் கொடுப்பதாகச் சொன்னார்.
 
அவரின் படங்களை நான் கேட்டுப் பெற ஒரு காரணம் இருந்தது.  மிகப்பல ஆண்டுகளுக்கு முன்  மதுரை சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது ஆவியின் மாணவ புகைப்படக்காரராக இருந்தார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் என் மனதில் இன்னும் தேங்கி நின்று விட்டது. சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு தொடரை ’செளபாஎன்ற எங்கள் கல்லூரி மாணவ நண்பன் ஜூனியர் விகடனில் எழுதி, அது வெளியாகி, பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் இறுதி அத்தியாயங்களில் சீவலப்பேரி பாண்டியன் காவல்துறையினர் ஒருவரின் தலையைத் தனியாகச் சீவி வெட்டியதாக வரும்.


 

இதனை மிக அழகாகப் கொடூரமாகப் புகைப்படத்தில் ராஜசேகரன் காண்பித்திருப்பார்.  ஒரு குழியை வெட்டி, ஆளை உள்ளே இறக்கி, பாதுகாப்பிற்கு வாழை மட்டைகள் கொடுத்து எடுத்த படம். தரையில் தலை ஒன்று தனியாக உருண்டு கிடக்கும். படமே பார்க்க பயங்கரமாக இருக்கும். அந்தப் படம் வந்த போது அதைப் பற்றி நண்பர்களோடு பேசியிருந்திருக்கிறோம். அதன்பின் அவர் ஆவியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் எடுத்த படங்களை சிரத்தை எடுத்து பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அன்று  Portrait எடுப்பதற்கு வசதியான இடத்தில் அவர் எடுக்கும் படங்கள் கிடைத்தால் நல்லதே என்று ஆசைப்பட்டேன். அன்று என் ‘ஆசைகள்’ எல்லாமே நிறைவேறும் என்ற ‘விதி  இருந்திருக்கும் போலும். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்படங்களை எந்தவித மறுப்பின்றி கொடுத்துதவினார். நன்றி.


என்னை யூ ட்யூபில் காணொளியாகக் காண்பிக்க என்னைச் சுருள்  படமெடுத்த நாகமணிக்கும் மிக்க நன்றி. (என்னதொப்பையை மறைக்க நாகமணி ‘ஏதாவதுசெஞ்சிருக்கலாமோவென நானே என்னைக் காணொளியில் பார்க்கும் போது தோன்றியது!)   




















 *

Friday, March 24, 2017

932. ஆவியில் வந்த என் ஆசை .. 2







*


//என் ஆசை ... எனக்கு ஆ.வி. “இறவாமை”யைத் தர வேண்டும். கடினமோ? உங்களுக்கு அது எளிது தான் என்று நினைக்கின்றேன்.

எனக்குப் பிடித்த ஓவியர் மருது அவர்கள் என்னை நேரில் பார்த்துப் படம் வரைந்தால் - பெரிய படமல்ல, 1.5’ x 2’ போதும்! – பரம்பரையாக என்றும் பேணுவோம். நான் உங்களிடம் கேட்கும் இறவாமை அதுவே ... //

இது நான் ஆவிக்கு எழுதிய ‘ஆசை மனு’!


 ஆசையை நிறைவேற்றிய ஆவிக்கும், பொறுப்போடு இதனை ஏற்று நடத்திய பரிசல்காரன் கிருஷ்ணாவுக்கும், ஆவியின் முதன்மை புகைப்படக்காரர் கே. ராஜசேகரன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும்.




 *




 * *

Monday, March 20, 2017

931. பூங்கா காப்பு போராட்டம்





அந்தக் காலத்தில ....

ஏறத்தாழ 17 - 19 ஆண்டுகளுக்கு முன், நான் எங்களது பகுதியில் புதிதாகக் குடியேறியதும் ஒரு சங்கம் ஆரம்பித்தோம். 20-25 வீடுகள் மட்டும் இருந்தன. ஒரே குடும்பம் போல் இருந்தது. 
                                            

அப்போது எப்படியோ  எங்கள் பழைய போன் விரைவாக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அத்தனை வீட்டுக்கும் ஒரே போன் எங்களுடைய போன் தான். வீடுகளும் தூர தூரத்தில் இருக்கும். மழைக்காலங்களில் எங்கும் சகதி. போன் வந்தால் சில நிமிட வித்தியாசத்தில் மறுபடியும் போன் செய்யச் சொல்லி விட்டு, போன் வந்தவர்கள் வீட்டிற்குப் போய் செய்தி சொல்லி விட்டு வருவது வழக்கம். 





அதில் ஒரு வீடு மிகவும் தொலைவில் இருக்கும். எங்கள் இரு வீட்டுக்கும் நடுவில் நெல் வயல். மழையில் இருட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்போது எங்கள் மாடியிலிருந்து அவர் வீட்டுப் பிள்ளையின் பெயர் சொல்லிக் கூப்பிடுவோம். அந்த போன்கள் சிம்லாவில் இருந்து வரும்.   அவர்கள் வீட்டுப் பிள்ளை - பட்டாளத்துப் பிள்ளை - கூப்பிடுவார். அதுவும்  இரவில் தான் வரும். அதுவும் 10 மணிக்கு மேல் தான் அழைப்பு வரும். 








பட்டாளத்துப் பையன். புதிதாகத் திருமணமாகி மனைவியோடு அங்கிருந்து பேசுவார். அவருக்கு உதவுவதில் ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. ஆனாலும் போன்
 வந்ததும் அவர்களைக் கூப்பிடக் கஷ்டமாக இருந்தது. அதனால் ஒரு ஹை-டெக் ஒன்றிற்கு மாறினோம். ஒரு லேசர் லைட் அப்போது கீ-செய்னாக வந்தது. அது ஒன்று வாங்கி வந்தேன். எங்கள் வீட்டிலிருந்து அதை அடித்தால் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டு தொலைக்காட்சி ஸ்க்ரீனில் அடிக்கும்.  கூப்பிட மிக வசதியாக இருந்தது!




மரங்கள் நட்டோம். வீட்டுக்கு வீடு மரங்களைத் தத்து எடுத்தார்கள். அவ்வப்போது கூட்டம் போடுவோம். வழக்கமான பொங்கல் நாளன்று கோலப்போட்டிகள், சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் போன்றவைகள் 
உறவுகளை வளர்த்தன. இதையெல்லாம் விட pot luck dinner ஒன்று மிகவும் எங்களை நெருங்கியிருக்க வைத்தது. அவரவர் வீடுகளில் உணவுகள் சமைத்து யாராவது ஒருவர் வீட்டு மாடியில் இரவு விருந்து நடக்கும். தாய்க்குலத்தை இது நெருங்கி வரச் செய்தது. சிறு பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் என்று பல நிகழ்வுகள் எங்களின் உறவுகளை வளர்த்தன. 



 








அப்படியெல்லாம் இருந்த குடியிருப்புப் பகுதி நன்கு வளர்ந்தது; பெரியதானது. இப்போது முன்பு போல் கூட்டங்களோ, விருந்துகளோ நடப்பது அரிதாகி விட்டது. இதற்கு முடிவு கட்டவே வந்தது எங்கள் பூங்காப் பிரச்சனை. விலகியிருந்த எங்களை இப்போது ஒன்றாக்கி விட்டிருக்கிறது.





















எங்கள் பகுதியில் எங்களுக்கே உரித்தான பூங்கா பகுதி ...  ஒன்றுக்கு இரண்டு தீர்ப்புகளும் உயர்நீதி மன்றத்தில் இருந்து  வந்து விட்டன. ஆயினும் இன்னும் சிலர் அப்பகுதி எங்களுடையது என்று மாநகராட்சி ஆரம்பித்த வேலைகளையும் நிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.








எல்லோருக்கும் எல்லாமும் தெரியவேண்டுமென்றால் ஒரு கூட்டம் தேவையென 19.3.17 அன்று ஒரு கூட்டம் கூட்டினோம். குடியிருப்புப் பகுதி முழுவதும் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரண்ட கூட்டம்; பெரும் ஆர்வம்.





பழைய கால நினைவுகள் வந்தன. எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம்.






புதிதாக என்ன செய்வது என்பது பற்றியும் ஆர்வத்தோடு பேசினோம்.






 







                    

போராட்டங்கள் தொடரும் ... வெற்றியை எட்டும் வரை என்று ஒருமித்து முடிவு செய்தோம்.

யார் கண்டது ... இன்று எதிர்க்கும் ஆட்கள் இன்னும் சில நாட்களில் ஓட்டு போடணும்னு நம்ம முன்னால் வந்து நிற்கலாம். யார் கண்டது!!


**







Wednesday, March 01, 2017

929. ‘மதங்களும் சில விவாதங்களும்’ - மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் - ஆனந்த விகடனில் வந்த விமர்சனம்




*


ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் 


மதங்களும் சில விவாதங்களும்’ 

மதங்களின் ஆதி அந்தங்களை 
அலசும் ஆவணம் 



மனிதனின் முதல் கண்டுபிடிப்பு கடவுள்தான். ஆதிமனிதன், இடிக்கும், நெருப்புக்கும் அஞ்சி அவற்றை வணங்க ஆரம்பித்து அது வளர்ச்சிபெற்று இன்று இத்தனை மதங்களாகப் பரிணமித்து நிற்கிறது. ஆதிமனிதனின் உள்ளத்தில் பதிந்த ‘தொல் உணர்வு’ தனக்கு மேலே இருக்கும் ஒன்றைக் குறித்த பயம். அது நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் பதிந்திருக்கிறது. எனவேதான் அதைக் கடப்பதற்கு மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் இது. 




 மதங்களும் சில விவாதங்களும் இளமையில் நாத்திகமும் முதுமையில் ஆத்திகமும் பொது இயல்பு. அது மரணபயம் சார்ந்தது என்பதை அறிவோம். அந்தவகையில் தருமி தனது நாற்பதுகளுக்கு மேல் தீவிர நாத்திகரானது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம். அறிவியல் கற்றதனால், அறிவியல் முறையில் சிந்திப்பது ஒரு காரணம் என்று எப்படிச் சொல்வது? எத்தனையோ அறிவியல் அறிஞர்களே ஆத்திகர்களாக இருந்திருக்கிறார்களே! ஆக, அவரே கூறுவதுபோல் இதுவொரு மிகக் கடினமான பரிணாம வளர்ச்சிதான். 

 என் சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று. 80-களின் பிற்பகுதி, எனக்குப் பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கலாம். வீதிகளில் திராவிடக் கொள்கைப் பிரசாரம் செய்வார்கள். அப்போது ஒரு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதி்ல், திராவிடக் கட்சியின் கொள்கைகளை விளக்கி மேடையில் பேசுவார்கள் மற்றும் நாள் குறித்த விவரம் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என் கவனத்தை எப்போதும் ஈர்த்தது, ‘கடவுள் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் ஒருவர் கைவிடுவார்’ என்றிருக்கும். நானும் சில நண்பர்களோடு ஓரிருமுறை அந்நிகழ்வுக்குச் சென்றிருக்கிறேன். 

 ஒருபக்கம் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் பெரியதொரு கொப்பரையில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்நிகழ்ச்சி மாலைக்கு மேல் ஆரம்பித்து இரவு நேரத்தில் நடக்கும் என்பதால் எங்களால் முழுமையாகப் பார்க்க முடியாது, நான் பார்த்த வரையில் யாரும் அந்தக் கொப்பரைக்குள் கைவிட்டதே இல்லை. நாங்கள் அதற்காகக் காத்திருக்கையில் எங்களை அழைக்க வீட்டிலிருந்து யாரேனும் வந்துவிடுவார்கள். ஒருமுறை என் நண்பன் அப்துல் ரசாக் என்பவனுடன் அங்கே வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். சிறிதுநேரத்தில் நண்பனின் தந்தை எங்களை அழைக்க வந்தார். எங்கள் இருவரின் வீடுகளுக்கும் மிக அருகில், தெருமுக்கில் மேடை போட்டு அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எனவே யாரேனும் அந்தச்சட்டிக்குள் கைவிடும்வரை பொறுத்திருக்கச் சொல்லி அவரைக் கெஞ்சினோம். அவரோ ஆத்திகர். நாங்கள் அங்கே இருந்ததே அவருக்குக் கடுப்பு, “ஏண்டா கடவுள் எண்ணச்சட்டிக்குள்ள இருக்காருன்னு எங்கடா சொல்லியிருக்கு? உள்ள கையை விட்டுட்டு இல்லேன்னு சொல்றதுக்கு. கிளம்புங்கடா.” என்று அதட்டினார். அப்போது எரிச்சலோடும் துக்கத்தோடும் அங்கிருந்து அகன்றாலும் பின்நாட்களில் அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்திருக்கிறது. ‘ஆமாம்! கொதிக்கிற எண்ணெய்க்குள் கைவிட்டுவிட்டு கடவுள் இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்வேன். திராவிடக் கொள்கைகளை விளக்கும் கூட்டங்கள் அதன்பிறகு என்னை ஈர்க்கவில்லை. 

 ஆனால், பதின்ம வயதைக் கடந்தபின் வாசிப்பின் காரணமாக ஆத்திகன் என்ற நிலையிலிருந்து ‘இரண்டுங்கெட்டான்’ (Agnostic) நிலைக்கு வந்திருந்தேன். அப்போதும் திராவிடக்கட்சிகள் இந்து மதத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குவதும் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுவும் (இப்போதும் அப்படித்தானே) அவர்களுடைய சிந்தனை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியது. ‘நான் சார்ந்த மதம் குறித்து முதலில் கேள்வி எழுப்புகிறேன். இதுதான் பெரும்பான்மை மதம். இதில்தான் சாதி இருக்கிறது,’ (எல்லா மதங்களிலும் சாதி/இனம் இருக்கிறது) என்று பல்வேறு விளக்கங்களை அவர்களின் நிலைப்பாட்டுக்குக் காரணமாகக் கூறினாலும் அவ்விளக்கங்கள் உண்மையில் எனக்குப் போதுமானதாக இல்லை. உண்மைக்காரணம் அதில்லை என்று தோன்றியது. பொதுவாக இந்து மதத்தில் நாத்திகம் பேசினால் பலத்த எதிர்ப்புகள் ஏதும் எழுவதில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகள் இந்து மதத்தோடு தங்கள் `சேவையை’ நிறுத்திக் கொள்கின்றன. 

 தருமி இந்த இடத்தில்தான் ‘உண்மையான’ நாத்திகராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவரது கேள்விகள் இந்துமதம் முதல் ஆபிரகாமிய மதங்கள் வரை நீள்கிறது. கேள்விகளும் தர்க்கபூர்வமானவை, அறிவியற் பூர்வமானவை. வடைச்சட்டிக்குள் கைவிட்டுவிட்டு, ‘எங்கே காணோம்!’ என்று கேட்பது போல அபத்தமானவை அல்ல. முதலில் அவர் இம்மதங்கள் சார்ந்த அனைத்து நூல்களையும் தெளிவாக, முழுமையாக வாசித்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. 


எழுத்தாளர் தருமி ஏன் எந்தக் கடவுளும் உலக மக்கள் அனைவருக்குமான கடவுளாக இல்லை? ஏன் எல்லோருமே அந்தந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த கடவுளாக இருக்கிறார்கள்? நிலைமை இப்படியிருக்க மதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தானே கடவுள் வாக்கென்று சொல்லப்படும் ‘புனிதப் புத்தகங்கள்’ எழுதி / திருத்தி எழுதப்படுகின்றன? – நியாயமான கேள்விகள்தான். பதில்தான் யாரிடமும் இல்லை. 

 இந்து மதத்தில் எப்போதுமே இரண்டு பிரிவுகளுண்டு. பிராமணர்களுக்கான இந்து மதம், அல்லாதவர்களுக்கான இந்து மதம். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாட்டை தனக்குள் இழுத்து எவ்வாறு அதன் அடையாளத்தைச் சிதைக்கிறது என்பதை முருகன் என்ற சிறுதெய்வம் வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் சிறு குழுக்களின் தெய்வமாக இருந்த முருகன் பிறகு சிவனுக்கு மகனாக்கப்பட்டு, விநாயகருக்கு அண்ணனாக்கப்படுகிறார். அவர் சிறு தெய்வத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு பெருந்தெய்வமாக்கப் பட்டதற்குச் சான்றுகள் உள்ளன (வள்ளியை மணப்பது அவர்களைத் திருப்திப்படுத்த என்றே நினைக்கிறேன். போலவே, சைவ-வைணவச் சண்டையை நிறுத்த திருமலை நாயக்கரால் உண்டாக்கப்பட்டதுதான் மீனாட்சி கல்யாணம்). இது இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு தேர்ந்த யுக்தி. இந்து மதம் என்றழைக்கப்படும் சனாதன மதம் தனக்கு ஒவ்வாததைக்கூடத் தனக்குள் விழுங்கிச் சீரணித்துவிடக் கூடியது. பௌத்தமும் சமணமும் அதற்கான கடந்தகாலச் சான்றுகள். இப்போது மெதுவாக அது புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று என்கிறது. நாத்திகவாதமும் அதுபோலத்தான். இந்துத் தத்துவப் பிரிவுகளில் ‘சார்வாகம்’ எனும் உலகாயதமும் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரணிக்கப்பட்டுவிட்டது. பௌத்தம் மற்றும் சமணத்தின் கொல்லாமை உட்பட பல்வேறு கூறுகளை இந்துமதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. இப்படி மாற்றங்களுக்கு உள்ளாவதன் அரசியல் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

நிலமை இப்படியிருக்க அனாதி காலமாக தங்களது மதம் ‘கற்போடு’ உள்ளது என்று நம்பி வாதிடுவதை என்ன மனநிலை என்று கொள்வது? பௌத்தம் இல்லையென்றால் கொல்லாமை, கருணை, அன்பு இவற்றையெல்லாம் இந்நிலப்பரப்பில் இருந்த மதங்கள் பேசியிருக்குமா என்பதே கேள்விதான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் இந்துமதம், தோன்றிய இனத்தை மட்டுமே உயர்த்தி மற்ற இனங்களைத் தாழ்த்தும் கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் என சக மனிதர்களிடையே கூட சகிப்புத்தன்மையே இல்லாத மதங்கள் அன்பை எப்படிப் போதிக்க முடியும் என்ற கேள்விக்கு ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லி தங்களின் புனிதப் புத்தகத்தைத் தோண்டித் துருவி ஏதேனும் ஒற்றை வரியைப் பெருமிதமாக எடுத்துக் காண்பிப்பார்கள். 

புத்தகத்தில் திருத்த வேண்டிய விஷயங்கள் என நான் நினைப்பது: மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலைத் தனி இணைப்பாகக் கொடுத்திருக்கலாம். அது பலருக்கு உதவியிருக்கும். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் உண்மையில் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவை புத்தகம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும் சற்றே விலகிச்செல்கிறது. நிச்சயமாக இதுவொரு தடைதான். அதிலும் ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் உடனே புரிந்துவிடாத வகையில் எழுதப்பட்டுள்ள சிறப்பான கட்டுரை. புத்தகத்தில் இன்னுமொரு திருத்தப்படவேண்டிய அம்சம், அதிலுள்ள ஆங்கிலம். பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பேசப்படுகிறது என்றாலும் முக்கியமான சில இடங்களில் திடீரென்று ஆங்கிலம் நுழைவது வாசிப்புக்கு ஒரு தடைதான். உதாரணமாக பக்கம் 54-இல் 13-ம் எண்ணுள்ள பத்தி ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறது, தொடர்ந்து தமிழில், ‘இதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா?’ என்று கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இதை எப்படிப் புரிந்து கொள்வார்? போலவே பக்கம் - 64-இல் உள்ள 8-ம் எண் கொண்ட பத்தியும் அவ்வாறே உள்ளது. மற்றுமொரு இடத்தில் முகம்மது நடத்திய போர்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அவரது மனைவிகளின் பெயர்கள் பட்டியலில் சில ஆங்கிலம். இதெல்லாம் வாசிப்புக்கான தடைகள். வலைப்பூவில் அவர் எழுதும்போதே இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், வலைப்பூவில் எழுதும்போது சுட்டிகள் கொடுப்பது சரி புத்தகத்தில் எதற்கு? பதிலாக தேடவேண்டிய சொற்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுக்கலாம். அடுத்த பதிப்பில், இக்குறைகளை நிவர்த்தி செய்து, புத்தகத்திலுள்ள ஆங்கிலப் பத்திகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதன் மூலம் இப்புத்தகத்தை பரந்த வாசிப்புக்கு எடுத்துச் செல்லவும், அதன்மூலம் நிறைய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளவும் அவருக்குச் சாத்தியப்படும். 

 சாதிகளை உருவாக்கி அவற்றை இன்றளவும் பாதுகாத்து, அதையொரு மேட்டிமையாக மாற்றிக்கொண்டுள்ள இந்துமதம் குறித்து விமர்சிக்கும்போதும், அறிவியல் என்ற விஷயத்தையே அடியோடு ஒதுக்கிவிட்டு புனிதப்புத்தகங்களில் சொல்லியிருப்பதே உண்மை என்று நம்பி வாதிடும் பிற மதங்கள் குறித்துப் பேசும்போதும், தர்க்க ரீதியிலான கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. மதம் என்ற போர்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் ஒருபுறம், ஏழைகளாக இருப்பதே சிறப்பானது என்றும் இறப்புக்குப் பின்னான சொர்க்கம் அவர்களுக்கே வாய்க்கும் என்று கூறியபடி அவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு காசுகளைக்கூட கடவுளின் பெயரால் களவாடிச் சுரண்டுவது மறுபுறம். இப்படியான சூழ்நிலையில் அபத்தமான வாதங்களை விடுத்து தருமி போல சரியான கேள்விகளைக் கேட்க வேண்டியதுதான் இன்றைய தேவை என்று நம்புகிறேன். 







 *