Tuesday, July 26, 2022
Friday, July 22, 2022
1175. என் வாசிப்பு ... தமிழும் ஆங்கிலமும்.
முந்திய ‘என் வாசிப்பில்’ ஒரு தோழி பாலகுமாரனின் கதைகளும் ஆர்தர் கெய்லி போல் பல்வேறு விசயங்களை எழுதுவார் என்று சொல்லியிருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. மெர்க்குரிப் பூக்களிலும் இரும்புக் குதிரையிலும் யூனியன் விஷயங்களைத் தொட்டிருப்பார். உடையாரை விட்டு விடுவோம் – அரசியல் புனைவு. மற்ற கதைகளில் மனுஷன் மனதைத் தொடுவார்; மூளையை அல்ல.
எங்கள்
கல்லூரியில் கதை வாசிப்பாளர்கள் நிறைய பேர் இருந்தோம். ஆனால் ஒன்றை வாசிப்பவர்
மற்றொன்றை வாசிப்பதில்லை ... அதாவது ஆங்கில நூல் வாசிப்பவர்கள் தமிழ்ப் பக்கம்
ஒதுங்குவதில்லை ..vice versa . இரண்டையும் கலந்து கட்டி
அடிப்பவர்கள் மிக மிகச் சிலரே. அந்தச் சிலரில் நானும் அடக்கம். வாசிக்கிற அந்த
காலத்தில் இந்த இருமொழிக் கதைகளில் உள்ள
ஒரு முக்கிய வேற்றுமையாக நானொன்றை
நினைத்தேன். இந்தப் பக்கத்தில் எழுதுவதெல்லாம் என்னப் பொறுத்தவை மட்டுமே. அவைகள்
என் வாசிப்பின் பிரதிபலிப்புகள். உங்கள் கருத்து உங்களுக்கு ... என் கருத்து எனக்கு.
சரியா?
ஆங்கிலப்
புதினங்கள் series of events அடுத்தடுத்து நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். டக்கென்று The
day of jackal என்ற கதை நினைவுக்கு வருகிறது. நிமிடத்திற்கொரு
நிகழ்வு ... பக்கத்துக்குப் பக்கம் தொடர்ந்து பல அவசர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே
இருக்கும். (இந்த நூலைப்பற்றியும் எழுத நினைத்திருக்கிறேன்.) இது அனைத்து ஆங்கில கதைகளுக்கும்
(நான் வாசித்தவைகளில்) பொதுவானதே. classic novels, Daphne
Du Maurier போன்ற ஆசிரியர்கள் இதற்குப் பொருந்தாதவர்கள் என்று மனதிற்குள்
ஒரு நினைவு வந்தாலும் பல ஆங்கில நாவல்கள் – முன்பே சொன்ன “airport” கதைகள் - எல்லாமே அப்படிப்பட்டவை தான்.
மிகப் பல
ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. ஆனால் தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம்
நாடுகின்றன. டக்கென ஜெயகாந்தனும், தி.ஜா.ராவும் மனதிற்குள் வந்து நிற்கிறார்கள். அக்கினிப் பிரவேசத்தைத் தொடர்ந்து
கங்கை எங்கே போகிறாள் கதை ஆரம்பிக்கும் போதே ஒரு பேருந்தில் அமர்ந்து ஆங்கிலத்திலேயே
தன் நினைவுகளை யோசித்துக் கொண்டிருப்பாள். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ..ஆடும் நாற்காலிகள்
ஆடுகின்றன .. எல்லாம் உள்ளுணர்வை வெளிக்கொண்டு வரும் வரிகள். திஜாரா என்றதும் நினைவுக்கு
வரும் மோக முள், அம்மா வந்தாள், மரப்பசு,
… எல்லாமே மனசு .. மனசு .. மனசு ... இல்லையா? அட .. முதல்வர்
புதுமைப் பித்தனை எடுத்துக் கொள்ளுங்களேன். ஒரு கதையின் தலைப்பையே பாருங்களேன். ஞானக் குகை
.. ஞானம் வந்து விட்டதே.
இதனால் தான் நான்
ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம்
நாடுகின்றன என்கிறேன்.
இதனால் தானோ
என்னவோ இந்திய நாட்டின் spirituality பற்றி வெளிநாட்டினர் அதிகம் பேசுகிறார்களோ?
Thursday, July 21, 2022
1174. என் வாசிப்பு ...HAROLD ROBBINS
அந்தக்
காலத்தில நிறைய புத்தகங்கள் வாசித்த காலத்தில் ஒன்று மிகவும் ஆச்சரியமாக மனதில் பட்டது.
அது அவ்வாறு அமைந்ததா அல்லது உண்மையிலேயே அப்படித்தானிருந்ததா என்று தெரியவில்லை.
நான் விரும்பி வாசித்த நாவலாசிரியர்கள் ஏறத்தாழ எல்லோருமே யூதர்களாக இருந்ததைப்
பார்த்து ஆச்சரியப்பட்டேன். கதையெழுத வேறு
ஆட்களே இல்லையென்பது போலிருந்தது. ஒரு சின்னப் பட்டியல்: Leon Uris, Harold Robins, Irving Wallace, Ken Follet,
Asimov, Ayn Rand, Saul Bellow … பட்டியல் இன்னும் நீளும். காரணம் புரியவில்லை.(
ஒரு வேளை ஆர்ய வம்சமோ ...??)
இதில் Harold Robinsக்கு ஒரு விஷயத்தில் முதலிடம் கொடுக்க
வேண்டும். ஏனெனில் அவரது நூல்களில் STONE FOR DANNY FISHER, என்பதை
முதலில் வாசித்ததும் அவ்வளவு பிடித்துப் போனது. அதனால் அவரது எல்லா நூல்களையும் வாசித்து
விட வேண்டுமென நினைத்தேன். இவ்வாறு ஓர் ஆசிரியர் பிடித்துப் போனால் தொடர்ந்து அவர்
புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்க வேண்டும் என்று நான் முதலில் முடிவெடுத்தது
இவரது நாவல் வாசித்த பின்பு தான் ஆரம்பித்தது.
அதன் பின் 79 PARK AVENUE,
CARPET BAGGERS, DREAM MERCHANTS … போன்ற அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்தேன். இவையெல்லாம் அவர் ஐம்பதுகளிலும்
அறுபதுகளிலும் எழுதிய புதினங்கள். 1976ல் எழுதிய புதினம் .. அதைப் புதினம் என்று சொல்வதா
porno என்று சொல்வதா என்று தெரியவில்லை. அதுவரை கதைகளை அழகாக
எழுதியவரின் நூல்கள் எல்லாம் சாண்டில்யன் ஸ்டைல் நாவல்களாக ஆகிப் போய் விட்டன. கடைசியாக
THE LONELY LADY வாசித்ததும் Harold
Robinsயை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.
porno
ஆசிரியர் என்று பெயர் வாங்கி விட்டு அப்படி எழுதினால் ஏமாற்றமில்லை. ஆனால் நன்றாக
புதினங்கள் எழுதும் ஆசிரியர்கள் ஏனிப்படி தாவுகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து
ஒரு கதாசிரியரையும் இவ்வாறு ஒதுக்க வேண்டியதிருந்தது. அவரைப் பற்றி அடுத்துக் கூறுகிறேன்.
Porno என்று
சொன்னதும் வாசித்த ஒரு porno புத்தகம் நினைவிற்கு வந்தது. நூலின்
தலைப்போ, ஆசிரியரின் பெயரோ நினைவில் இல்லை. ஆனால் pornoவை இவ்வளவு நகைச் சுவையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆரம்பமே அமர்க்களம்... அது இன்றும் நினைவில் இருக்கிறது. ஹீரோ பெயர் Father
Mucker. அவரை அறிமுகப் படுத்தும் போது ஒரு spoonerism தவறு நடந்து விடும். நீங்களே இப்போது அந்தப் பெயரைத்த் தெரிந்து கொள்ளுங்களேன்!!!
(தெரிந்தால் வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் தெரிந்தவர்களிடம்
கேளுங்கள் !!! – தீப்பொறி ஆறுமுகம் என்ற தமிழ் அரசியல் பேச்சாளர் அடிக்கடி சொல்லும்
வசனம்!!!) Brain transplant ஒருவருக்குச் செய்தபின் வரும் கலாட்டாக்கள். அவர் “ஒன்றுக்கு” போகும் போது
அவர் படும் பாடு ....
நூலின் தலைப்பு
ஆசிரியரின்பெயர் எல்லாம் மறந்த பிறகும் சில நூல்கள் நினைவில் தங்கி விடும். அப்படி
ஒரு நூல்.
Extra terrestrial intelligence
பற்றிய கதை. நிறைய physics இருக்கும். (வாசித்ததும்
ஒரு physics பேராசிரியரைத் திட்டி திட்டி அதை வாசிக்க வைத்தேன்.)
SETI – search for intellectual intelligence இங்கிருந்து radio waves அனுப்பித் தேடிக் கொண்டிருப்பார்கள். அங்கிருந்தும் பதில் வந்து விடும்.
ஒரு உருவத்தின் படத்தை அனுப்பியிருப்பார்கள். அதற்கு மதத் தொடர்பு கிடைத்தால் மக்கள்
அதை வரவேற்பார்கள் என்று கிறித்துவ தலைவர்களை அண்டுவார்கள். ஆஹா ... அப்படியே நம்மை
அக்கதை இறுக்கிக் கட்டிப் போடும். 45-50 ஆண்டுகளுக்கு முன் வாசித்தது. பல முறை அதை
கூகுள் ஆண்டவரிட்ம் கேட்டுப் பார்த்து விட்டேன். இன்னும் அந்த நூல் எதுவென்று கண்டு
பிடிக்க முடியவில்லை.
Friday, July 15, 2022
1173. என் படப்பிடிப்பு ... ஆதி காலத்தில் ... டாலருக்கு எட்டு ரூபாய் காலத்தில் எடுத்தது
ஒரு டாலருக்கு
80 ரூபாய் ஆகப் போகிறதாம்.
இது ஒரு பழைய நினைவை கிளப்பி விட்டிருச்சிர்ரா, பேராண்டி!
கூகுள் ஆண்டவரைத் தேடிப்போய் எப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் இருந்தது என்று பார்த்தேன். 1974. சட சடவென்று பழைய நினைவுகள். என்னோடு வேலை பார்த்த ஒரு பெரிய சீனியர் அமெரிக்கா போய் பல வருடங்கள் இருந்து விட்டு கல்லூரி திரும்பியிருந்தார். புகைப்படக் கலையில் திறமை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பேராசிரியர். அவர் தன்னுடைய் நிக்கான் காமிரா, அதனோடு பல லென்ஸ் எல்லாம் வைத்திருந்தார். இவைகளோடு மமியா – MAMIYA Sekor SLR காமிரா ஒன்று வாங்கி வந்திருந்தார். அதுவ்ரை நான் ஒரு TLR பொட்டியோடு போராடிக் கொண்டிருந்தேன்.
அவர் அமெரிக்காவில்
அந்தக் காமிராவை 880 டாலருக்கு வாங்கி வந்திருந்தார். ஒரே ஒரு தடவை கீழே போட்டு ஒரு
சின்னப் பள்ளம் ஒன்றும் இருந்தது. அதை விலைக்குத் தர இசைந்தார். எனக்காக 800 டாலர்
விலை போட்டுக் கொடுத்தார். டாலருக்கு 8 ரூபாயும் சில்லறையும் இருந்தது. அதையும் 8
ரூபாய் என்று கணக்குப் போட்டு ....800 x 8 =…
அப்போதெல்லாம் 50 அடி பில்ம் வாங்கி நாங்களே பழைய டப்பாவிற்குள் ஐந்தடி ஐந்தடியாக வெட்டி லோட் பண்ணி வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த காலமது. என்னிடம் அப்போது ஐந்தடிக்குக் குறைவாக ஒரு “துண்டு” பில்ம் இருந்தது. அதைப் புதுப்பெட்டியில் போட்டு என் மூத்த மகளை .. அப்போது அவளுக்கு அநேகமாக 3 வயதிருந்திருக்கும் ... படம் எடுத்தேன். மொத்தமே ஏழெட்டு படம் எடுத்திருப்பேன்.
அடுத்த நாள் கல்லூரியில் போய் பில்மை டெவலப் செய்தேன்.
ஹா ... பின்னிட்டேன் போங்கோ. எல்லா படமும் அத்தனை அழகாக
இருந்தன. மகள் ஒரு அயல்நாட்டுச் சட்டை போட்டிருந்தாள். கொஞ்சம் கனமான, உல்லன் மாதிரியான துணி. படத்தில் அந்தத் துணியின்
texture அத்தனை அழகாக
வந்திருந்தது. க்ளோசப் படம் எடுக்கும் போது கண்களை வைத்து போகஸ் செய்ய வேண்டுமாமே
... அதனால் கண்களும் அதே லெவலில் அவளது உடையும் அப்படியே மிக அழகாக போகஸ் ஆகியிருந்தது.
அசந்து விட்டேன்
போங்கள் ... ஆனால் அதன் பிறகு அத்தனை நல்ல படம் எடுத்தேனா என்பது இன்று வரை ஒரு பெரிய
கேள்விக்குறி .......
அந்தப் படத்தை இங்கே போடலாமென்று அதைத் தேட ஆரம்பித்தேன். காக்கா தூக்கிட்டு போயிருச்சு போலும் ... காணோம். அதனால் அந்த சமயத்தில் எடுத்த மூன்று படத்தைப் போட்டிருக்கிறேன். ஒன்று (அந்த வயதில் மட்டும்)ஒழுங்காக போஸ் கொடுத்த பெரிய மகள்; இரண்டாவது காமிரா கொடுத்த நண்பரிடம் ஒரு டெலிலென்ஸ் ஓசி வாங்கி, ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரிடம் அனுமதி வாங்கி எடுத்த படம் ஒன்றையும் இங்கே போட்டிருக்கிறேன்.
பழைய நினைப்புடா
... பேராண்டி !
Thursday, July 14, 2022
1172. என் வாசிப்பு ... ARTHUR HAILEY
கதைகள் எல்லாம் வாசித்து அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. கதைகள்
எல்லாமே ஏறத்தாழ மறந்து போனது தான். ஆனால் ஒரு கதாசிரியர் எழுதிய கதையெல்லாம் மறந்து
போனாலும், அவர் நாவலில் பொதிந்து வைத்திருந்த செய்திகள் அப்போதும் சரி
இப்போதும் சரி பெரும் பிரமிப்பாகவே இருக்கும்.
ARTHUR HAILEY இவரது கதைகள் வாசிக்கும் போது நல்ல கதையும் கிடைக்கும்; தொடர்பான பல செய்திகளும் வந்து சேரும்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வைத்து சொல்கிறேனே... AIRPORT என்றொரு நாவல். ஆங்கிலத்தில் படமாக வந்தது. தமிழிலும் வந்தது என்று நினைக்கின்றேன்.
சத்யராஜ் நடித்த படமோ... தெரியவில்லை. நான் தமிழ்ப்படம் பார்க்கவில்லை. ஆனால் இக்கதையை
வைத்து எடுத்த படம் என்று வாசித்த நினைவு. AIRPORT-ல் ஒவ்வொரு
நாள் நடக்கும் அத்தனையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அங்குள்ள குளிப்பறைகளைச்
சுத்தம் செய்யும் janitor என்பதில் ஆரம்பித்து, அந்த முழு விமான நிலையத்தின் உயர் அதிகாரி வரை செய்ய வேண்டிய வேலைகள்,
கடமைகள் பற்றியெல்லாம் நாமும் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு janitor
வேலை செய்யாமலிருக்க என்னென்ன செய்வார் என்பதிலிருந்து ஒவ்வொரு விமானமும்
இறங்கி ஏறிச்செல்லும் வரை உயரதிகாரிக்கு எத்தனை தலைவலி என்பதும் தெரியும். ஏதோ ஒரு
புதிய வகை விமானம் மிக அதிகமாக சத்தத்தோடு ஏறும், இறங்கும்.
இதனால் விமானநிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சன்னல் கண்ணாடிகள் நொறுங்கி
விடும். அந்தப் பகுதி மக்கள் அதற்காக விமானநிலையத்திற்குள் வந்து கூட்டம் போட்டு எதிர்ப்பு
காண்பிப்பார்கள்.நமக்கும் டெசிபல்,நம் காதுகளின் தன்மை,
அதிக டெசிபல் சத்தம் கேட்பதால் நடக்கும் கேடுகள் பற்றியெல்லாம் விஞ்ஞானத்தோடு
எழுதுவார். விமான நிலையத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் தெரிந்து கொள்ளும்படி
எழுதியிருப்பார். ஆனால் கதையின் வீரியம் சிறிதும் குறையாது.
AIRPORT, WHEELS,
OVERLOAD, STRONG MEDICINE …. என்று ஒரு நீளப் பட்டியல். WHEELS
கதை கார்கள் செய்யும் கம்பெனியில் நடப்பது. வெள்ளிக்கிழமையும்,,
திங்கட் கிழமையும் வெளிவரும் கார்களை வாங்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்.
வெள்ளியன்று வார இறுதி நாள்.. வேளை செய்பவர்கள் ஊர் சுற்றுவதில் குறிக்கோளாக இருப்பார்கள்.
அன்று நன்கு வேலை செய்ய மாட்டார்கள். திங்கட்கிழமை ஹேங் ஓவர். அன்றும் ஒழுங்காக வேலை
செய்ய மாட்டார்கள் என்று எழுதியிருப்பார். OVERLOAD மின்சாரக்
குழுமம் ஒன்றின் கதை. ஓரிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில்
முன்னேற்பாடுகளாக அவர்கள் செய்யும் நேர்த்தியான வேலைகள். மின்சாரத்தின் உதவியோடு
உயிரோடு இருக்கும் ஒருவருக்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் .. அட டா! மனுசன் ஒரு தடவை உடல் நலமின்றி மருத்துவ மனையில்
சில நாட்கள் இருந்திருக்கிறார். அதை வைத்தும் ஒரு கதை. STRONG MEDICINE … மருந்துக் கம்பெனிகள் மருந்து தயாரித்து அதை எப்படியெல்லாம் (!!!) விற்பனைக்குக்
கொண்டு வருகிறார்கள் என்று ஆதியோடு அந்தமாக ஒரு கதை.
அவரது கதைகள்
பலவும் வாசித்தும் நினைவுக்கு வந்த சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதை எழுதுவதற்கு
முன்பு அத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியாக இருக்கும்.
ஒவ்வொரு கதை எழுத தனியாக ஒரு ஆராய்ச்சி செய்வார் போலும். ஒவ்வொரு கதையும் ஒரு Ph.D thesis !!
கதாசிரியர்களின்
கதைகளை அந்தக் காலத்தில் வாசித்திருக்கிறேன். இன்று கூகுள் ஆண்டவர் தயவில் அவர்கள்
முகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது.
Saturday, July 09, 2022
1171. என் வாசிப்பு THE ROOTS
Leon Uris
எழுதிய EXODUS புத்தகம் பத்தி சொன்னியே ஏன் என்ன உட்டுட்டன்னு Roots:
The Saga of an American Family எழுதின Alex Haley
சண்டைக்கு
வந்துட்டார் (கனவுல). என்ன பண்றதுன்னு அவரைப் பத்தியும், அவரது புத்தகம் பற்றியும் கொஞ்சம்
சொல்லலாம்னு நினைக்கின்றேன்.
பல வாரங்கள் best sellers listல இந்தப் புத்தகம் இருந்திருக்கு.
இத வச்சி சீரியலும் எடுத்து ஓஹோன்னு ஓடியிருக்கு. சினிமாவா வந்துச்சான்னு தெரியலை.
ஹேலி ஒரு
அமெரிக்க ஆப்ரிக்கன். (இப்படித்தான் அவங்களை சொல்லணுமாம். அப்டின்னா பிரான்சு
நாட்டில், இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களை எப்படி
சொல்லணும்னு நேத்து .. முந்தா நேத்து விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டைப்
பார்க்கும் போது ஒரு கேள்வி மனதிற்குள் வந்தது. பதில் தெரிஞ்சா சொல்லுங்க.
தன்யமாவேன்.) இவர் அமெரிக்கப் படையில் பணியாற்றி, பின்
அதிலேயே பதவி உயர்வெல்லாம் பெற்று ஓர் இதழியியலாளராக இருந்திருக்கின்றார். படைப்
பதவிகளிலிருந்து வெளி வந்த பின் Readers’ Digest இதழின் Chief Editor ஆகவும்
இருந்திருக்கிறார்.
தன் பரம்பரை
எங்கிருந்து எப்படி வந்து, இப்படி ஆனோம்னு ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார். ஏழு
தலைமுறைக்கு முன்பு காம்பியா என்ற ஆப்ரிக்க நாட்டில் பறை செய்வதற்காக மரத்தில் ஏறி
கம்பு வெட்டிக் கொண்டிருந்தவரை அடிமை வியாபாரிகள் அடித்து மயக்கமடையச் செய்து, கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு வந்து, விலைக்கு
விற்கப்பட்டார் என்று ஆரம்பித்து தனது ஒவ்வொரு தலை முறையிலும் பல மாற்றங்கள் கண்ட
கதையை மிக அழகாக, நம் மனத்தைக் கசக்கிப் பிழியும் வழியில்
எழுதியிருப்பார்.
EXODUS வாசித்து முடித்ததும் என்னையறியாமலேயே ஒரு pro-Israelite ஆக மாறினேன் என்பது உண்மை. அதே போல் இந்த நூலை
வாசித்ததும் இம்மக்கள் மீதான் அன்பும் கரிசனையும் அதிகமானதாக உணர்ந்தேன். இதேபோல்
இன்னொரு வரலாற்று உண்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். Uncle Tom's
Cabin; or, Life Among the Lowly என்ற நாவலை Harriet Beecher Stowe என்ற பெண்மணி 1852 ஆண்டில் எழுதியுள்ளார். பத்தொன்பதாம்
நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்த படியாக விற்பனையான / வாசிக்கப்பட்ட
புத்தகமாக இருந்திருக்கிறது. ஒரு அடிமையின் கதை. இந்த நாவல் வாசிச்த்ததும் மக்கள்
பலரின் மனதில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக வைத்திருப்பது பற்றிய கேள்விகள் மனதில்
எழுந்துள்ளன. அதன்பின் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்பித்த உள்நாட்டுப் போரிற்கு
இந்த நாவல் தான் விதை போட்டது என்பதும் ஒரு முக்கிய கருத்து. இதை வைத்தே அன்றைய
அமெரிக்கன் பிரசிடென்ட் Abraham Lincoln கூறியதை மேற்கோளிடுவார்கள்
: When Abraham Lincoln met Stowe in 1862 he supposedly commented,
"So this is the little lady who started this great war. … இதைச் சொல்லும் போது ஏன் யாராவது ஒருவர்
நம் தலித் மக்களைப் பற்றியெழுதி, அது நம் மனசாட்சையை உலுக்கி எடுக்கும்
என்றொரு நப்பாசை மனதில் எழுந்தது. ....ம்ம்...ம்... நாம் எங்கே மாறப்போகிறோம் ..
எனக்கென்னவோ அந்த நம்பிக்கை சிறிதும் வரவில்லை இது வரை .... நாமென்ன திருந்துற ஜென்மங்களா
... இல்லியே ...
****
ஆப்ரிக்க அமெரிக்கர்கள்
பற்றி வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி வழக்கமாக எழும்:
இவர்கள் நாய்களுக்கும்
கீழாகவே அடிமைகளாக வெள்ளைக்காரர்களால் நடத்தப் பட்டார்கள். இது உண்மையாக இருக்க, வெள்ளைக்காரர்களின் கிறித்துவ மதத்தின் பக்கம்
அவர்கள் இழுக்கப்பட்டு விட்டனர். Uncle Tom's Cabin கதையில்
வரும் டாம் பெரியதொரு கிறித்துவராகவே இருப்பார்.
என் ஐயம்:
தங்களை இவ்வளவு
கீழ்த்தரமாக நடத்தும் போது ஆப்ரிக்கர்கள் எப்படி வெள்ளைக்காரர்களின் தெய்வத்தை
ஏற்றுக் கொண்டார்கள்? அது எப்படி சாத்தியமாகும்? அவர்களை வெறுப்பது போல்
அவர்கள் கடவுள்களையும் வெறுப்பது தானே சாத்தியம்?
நமது சமுதாயத்தில்
முன்னோர் வழிபாடு மட்டும் இருந்தது மாறி, அனைவரும் இந்துக்கள் என்ற அடைப்புக்குள் வடநாட்டிலிருந்து வந்த
மதத்திற்குள் சென்று விட்டோமல்லவா?
அது போலவோ? …..
இது இன்னொரு துணைக் கேள்வி.
Sunday, July 03, 2022
1170. என் வாசிப்பு ... (பழைய கதையை புதிய போத்தலில் ...)
DEV அப்ட்டின்னு ஒரு மனுஷன். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஒரு நூலின்
அட்டைப் படத்தைப் போட்டு நல்லா நாலு சொல்லியிருந்தார். எனக்கோ பழைய ஞாபகம் வந்தது. அதைச் சொன்னேன். இது மாதிரி படிச்சி நல்லா இருந்த நூல்களைப் பற்றி
ஏதாவது சொல்லலாமேன்னு கேட்டார். நம்ம தான் சுத்தமான சோம்பேறி ஆச்சே. அப்டில்லாம் உடனே
எழுதி விடுவோமா?
ஆனாலும் டக்குன்னு
ஒரு புத்தகம் மனசுக்குள்ள வந்து நின்னுது. அதைப் பற்றி மட்டுமாவது சொல்லிருவோம்னு
நினச்சேன். நூலின் பெயர்: EXODUS; ஆசிரியரின் பெயர்: LEON
URIS. நூலைப் பற்றிச் சொல்லும் போது எப்படி படம் இல்லாமல் போடுவது
என்று கூகுள் படங்களுக்குச் சென்றேன். விதவிதமான அட்டைகள்;அதில்
நான் படித்த அதே அட்டையைத் தேடி அதைப் போட்டேன். பின் அட்டையில் இந்தப் புத்தகம்
எழுதுவதற்காக அதன் ஆசிரியர் செய்த முயற்சிகளின் பட்டியல் பிரமிக்க வைத்தது. அங்கே
கதையின் எலும்பை – skeleton of the story – சொன்னதும் அச்சிட்டு
வெளியிடும் குழுமம் காசு கொடுத்து விடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த
நூலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்த போது சோம்பேறிக்கு ஒரு புது வழி கிடைத்தது.
14 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலைப் பற்றி எழுதினோமே என்று நினைத்து அப்பதிவைப் பார்த்தேன்.
..... பதிவைப் பார்த்து, படித்து அதன் பின் வந்திருந்த பின்னூட்டங்களையும்
படித்து அந்தக் காலத்திற்கே ஜம்ப் செய்து விட்டேன். என்ன இனிமையான காலம். நீங்கள்
அங்கு சென்று கொஞ்சம் நீந்தி விட்டு வாருங்களேன். பின்னூட்டங்கள் கட்டாயம் வாசியுங்கள்
... எங்களின் பொற்காலம் உங்களுக்கும் கொஞ்சமாவது புரியும்.
https://dharumi.blogspot.com/2008/11/277-exodus.html
அந்தப் பொற்காலம் பற்றி சொன்னவன்
இப்போதிருக்கும் “இருண்ட காலத்தைப்” பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா? EXODUS வாசித்த காலம் அழகானதொரு வாசிக்கும் பருவம். இரவு, சாப்பாட்டு நேரம், பேருந்திவிற்குக் காத்திருக்கும் காலம் ... என்று எல்லா நேரமும் வாசிப்பின்
நேரமாக இருந்தது அந்தக் காலம். ஆனால் இப்போது ... எல்லாம் வரண்டு
விட்டது. EXODUS நமக்குப் பிடித்ததே என்று பல ஆண்டுகள் கழித்து
அதே ஆசிரியர் எழுதிய THE HAJ வாசிப்பதற்காக எடுத்து சில பக்கங்கள்
வாசித்தேன். கதை நன்றாகவே போனது. ஆனாலும் கைக்கெட்டும் தூரத்தில் இன்னும் தூங்கிக்
கொண்டிருக்கிறது.
ஆனாலும் அந்த வாசிப்புக் காலத்தில் இந்த ஆசிரியரின் வேறு சில
நூல்களையும் வாசித்தேன். அவை ....
Exodus Revisited
Mila 18,
Armageddon: A Novel of Berlin,
Topaz