Thursday, July 20, 2023

1236. என்னென்னமோ நடக்குது........ ஒண்ணும் புரியலை



  

 


 


                                                                     

ஜப்பானிய பிரதமர் காகுயிய் தனகா லாக்ஹீட் விமானங்கள் வாங்குவதில் பல மில்லியன் டாலர் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.



இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு ஊழல் செய்தார் என்று 2019 நவம்பர் 21ல் கைது செய்யப்பட்டார்.

·         .தி.மு. ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துதுறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைதாகியுள்ளார்.

·        

 

என்னடா ரொம்ப பெரிய ஆளுகளோடு நம்ம ஊரு பாலாஜியையும் போட்டிருக்கிறாரேன்னு யோசிப்பீங்க.

தேனெடுக்கிறவன் கையை நக்காமல் இருப்பானா அப்டின்னு வழக்கமா சொல்லுவாங்க. ஆனால் நம்மூர் அரசியல்வாதிகள் - 99.99% விழுக்காடு அரசியல்வியாதிகள் - எல்லோரும்  நக்குவதற்குத் தேனெடுப்பதில்லை; தேனெடுப்பதே மொத்தமாக அப்படியே   குடிப்பதற்குத்தான். அரசியலே வியாபாரமாக ஆகிவிட்டது. எல்லோரும் மொத்தமாக ஊழலின் மொத்த உருவங்களாகி விட்டார்கள். ஏன் இப்படி மனசாட்சி இல்லாமல் பணத்தை “அள்ளுகிறார்கள்” என்பது எனக்குச் சுத்தமாக புரியாத ஒன்றாக இருக்கிறது.

 

இதைப் பற்றி யோசிக்கும் போது மேலே சொன்ன இரு பிரதமர்கள் நினைவுக்கு வந்தனர்.

 

ஜப்பான் மக்களின் ஒழுக்கம், மனப்பான்மை பற்றியெல்லாம் நிறைய வாசித்திருக்கிறேன். திருட்டு பயம் கிடையாது. புயல், வெள்ளம் போன்றவைகள் வரும்போது கடைகளில் அங்கங்கே வாரிச் சுருட்டும் வழக்கம் பணக்கார அமெரிக்காவில் கூட நடக்கிறது. ஆனால் ஜப்பானில் அந்தப் பழக்கமே கிடையாது; மக்கள் அத்தனை ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் வாசித்திருக்கிறோம். அப்படி நல்ல பண்புடைய மக்கள் இருக்கும் நாட்டின் பிரதமர் ஊழல் செய்கிறாரென்றால் ஆச்சரியமாக உள்ளது. ரபேல் விமானம் ... மன்னிக்கணும் – லாக் ஹீட் விமானக் கம்பெனியிலிருந்து ஊழல் பெற்றாரென்றால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி அதிகமாக உள்ளது.

 

இஸ்ரேல் நாடு எவ்வாறு உருவானது என்பதையும், அந்த நாட்டை எப்படிப்பட்ட சூழலில் தன்னைத் தற்காப்பது மட்டுமில்லாமல் சுற்றியுள்ள அரேபிய நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறது என்பதை சில நாவல்கள் மூலமாகவும், வரலாற்று நூல்கள் மூலமாகவும் அறிந்திருக்கிறேன். மிகவும் ஆச்சரியமான சூழலில், நிறைய புத்திசாலிகள் அடங்கிய (நோபெல் பரிசு வாங்கியவர்களில் மிக அதிகமான விழுக்காட்டில் இருப்பவர்கள் யூதர்களே.) இப்படி இருக்கும் யூத நாட்டின் பிரதமரும் ஓர் ஊழல்வாதி என்று தெரியும் போது அதிர்ச்சியே மிச்சமாக உள்ளது.

ஜப்பானும் இஸ்ரேலும் பலருக்கும் நல்ல முன்மாதிரியான நாடுகள். Extraordinary countries. அங்கேயும் ஊழல்!

 

தாகம், பசி, தூக்கம், sex போன்றவை நம்மோடு பிறந்தவை. அனைத்தும் அனைவருக்கும் தேவை. ஒருவேளை ஊழலும் அதுபோல் நம்மோடு பிறந்து நம்மோடு வளரும் ஒரு இயற்கைத் தேவையோ? அதின்றி நாமில்லையோ? உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஏழு தலைமுறைக்கு சொத்து என்று சொல்வதுண்டு. அதுபோல் கொள்ளையடித்தும் அதன் பிறகும் நாய் போல் காசுக்கு அலைகிறார்களே; எப்படி? ஏன்? பிள்ளை குட்டி இல்லாத நாய்கள் கூட யாருக்கென்று தெரியாமல் காசு பின்னால்  இப்படி ஓடுகிறார்களே; எதற்கு?  காசு சேர்த்தும் அனாதையாக மண்டைய போட்டதைப் பார்த்தும் யாரும் திருந்தலையேஏன்?

 

பொன்முடியின் வீட்டைப் பார்த்தேன். பேராசிரியராக இருந்தவர் இன்று கோட்டை கொத்தளம் போன்றதொரு வீட்டில் வாசம். சிகப்பு வண்ணத்தில் பாகுபலி வீடு .. இல்லை .. கோட்டை போல் தெரிகிறது எத்துணை கொள்ளையென்று. கொடநாட்டைப் பார்த்த போது ஜொள்ளு விட்டதைப் போல் இந்த வீட்டையும் டிவியில் பார்த்த போது எனக்கு இருந்தது. ஒரு பழைய I.A.S. OFFICER. அந்தக் காலத்தில் – பல ஆண்டுகளுக்கு முன்பு –சிறு குழந்தைகளுக்கான மருந்து வாங்கும் போது expiry date ஆன  மருந்துகளை வாங்கினார். அதில் அவருக்கு ஒரு சுருட்டல். பெரிய்ய்ய்ய போலீஸ் ஆப்பீசர். குட்கா விற்க காசு வாங்கியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் திங்கிற சோறு செறிக்கத்தான் செய்கிறது! மன்சாட்சியோ கும்பகர்ணனாகி விடுகிறது.

 

இதெல்லாம் பார்த்த பிறகும் “என்னதான் நடக்கும் ... நடக்கட்டுமே” என்று பாடிக்கொண்டுதான் நாமிருக்கிறோமோ?

 

ஏனென்றால் ஒன்றிய அரசு யார் யாரையோ “கண்டமேனிக்கு” ரெய்ட் விடுகிறார்கள். அரசியல் வியாதிகள் மட்டுமல்ல; ஆன்மீகவியாதிகளையும் ரெய்டு விடுகிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது திரை மறைவில் என்பது என் போன்ற ஏழைகளுக்குப் புரிபடுவதேயில்லை.

 

1.       பால் தினகரன் வீட்டில் ரெய்டு என்றார்கள்; ரிசல்டுக்குக் காத்திருந்தேன்; எதுவும் வரவில்லை.

2.       ஆதி பராசக்தியிலும் ரெய்டு என்றார்கள்; காத்திருந்தேன்; எதுவும் வரவில்லை.

3.       குட்காவிற்கு வழக்கும் வந்ததுரெய்டு என்றார்கள்; காத்திருந்தேன்; எதுவும் வரவில்லை.

4.       பாலாஜி, பொன்முடி ரெய்டு என்றார்கள்; காத்திருந்தேன்; எதுவும் வரவில்லை.

·         இன்னும் எத்தனை கேஸ் வருமோ?

·                      

·                     இதில் நமது ஒன்றிய அரசின் ஆட்டமோ அத்தனை ருசிகரமாக உள்ளது. ரெய்ட் போடுவார்கள்.  ஊழல்வியாதிகள்  பிஜேபி-யில் சேர்வார்கள்; அவர்கள் அப்படியே புனிதர்களாகி விடுவார்கள்.

                  

என்னமோ போங்க .. என்னென்னமோ நடக்குது........ ஒண்ணும் புரியலை.

 

 

 


Saturday, July 15, 2023

1234. நல்லதொரு கேள்விக்கான பதில்



 

                                 நல்லதொரு கேள்விக்கான ஒரு பதில்

                                               

விசுவாசம் மிக்க நண்பரொருவர் நல்ல கேள்வி ஒன்று கேட்டார்” பலருக்கு நன்மரணம் கொடுத்த அன்னை தெரசா போன்றவர்கள் atheistsகளில் யாரேனும் ஒருவராது உண்டா?’ என்று கேட்டிருந்தார். பதில் அங்கே சொல்ல நினைத்தும் முடியாது போனது. பதில் சொல்லமுடியாமல் போனது மனதிற்கு நிறைய விசனமாகி விட்டது. அதற்கான பதில் இதோ:

நண்பரே நீங்கள் சொல்லும் அன்னை தெரசாவே எங்கள் கட்சிதான்; தெரியாதா உங்களுக்கு?  கீழ்வரும் வரிகள் அன்னை தெரசா தன் ஆன்மீக குருக்களுக்கு எழுதிய வார்த்தைகள். படித்துப் பாருங்கள்.

என்னுள் எல்லாமே மரத்துப் போய்விட்டன. (within me everything is icy cold.)  வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே (blind faith) என்னை இந்த இருட்டிலிருந்து வழி நடத்திச் செல்கிறது; ஆனாலும் எல்லாமே எனக்கு இப்போது இருட்டுதான். (163)

எனது தெய்வ நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன் ... மனத்தில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளாக்கி வெளியில் கொட்ட முடியாதவளாக இருக்கிறேன் ... மனத்தில் சூழும் எண்ணங்கள் எனக்கு சொல்ல முடியாத வேதனையைத் தருகின்றன. எத்தனை எத்தனை பதிலில்லா கேள்விகள் என் மனத்துக்குள் ... அவைகளை வெளியில் சொல்லவும் வழியில்லை ... கேட்டால் அவைகள் எல்லாமே தேவதூஷணமாகவே இருக்கும் ... கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, (187)

1959-ம் ஆண்டு  பாவமன்னிப்பிற்காக ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ...

என் ஆன்மாவிற்குள்   நடந்த ஓர் இழப்பிற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் ... கடவுள் கடவுளாக இல்லாமல் இருப்பதற்காக ...கடவுள் என்ற ஒன்று இல்லாமல் போனதற்காக ஏசுவே, என் தேவதூஷணத்திற்காக என்னை மன்னித்துவிடுங்கள் ... பாவமன்னிப்பிற்காக எல்லாவற்றையும் எழுத ஆசை. (190)

கடவுள் என்ற ஒன்றில்லாவிட்டால் அங்கே ஆன்மாவும் கிடையாது. ஆன்மா என்ற ஒன்றில்லாவிட்டால், ஏசுவே, நீரும் அங்கில்லை ... மோட்சம் ... மோட்சத்தைப் பற்றிய எந்த நினைவும் மனதில் தோன்றவேயில்லை ...

ஒவ்வொரு முறையும் நான் உரக்க 'என்னிடம் (கடவுள்) நம்பிக்கை இல்லை' என்ற உண்மையைச் சொல்ல நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. என் உதடுகளோ மூடிக்குவிந்து விடுகின்றன. நானோ இன்னும் கடவுளையும் மற்றவர்களையும் பார்த்து புன்னகைக்கிறேன். (238)

மேலும் படிக்க:

https://dharumi.blogspot.com/search/label/COME%20BE%20MY%20LIGHT

https://dharumi.blogspot.com/2010/10/450-come-be-my-light-2.html#more