Monday, October 16, 2006

180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT***

நேற்று எங்கள் ஊர் மதுரையில் மாநகராட்சி ஓட்டுப் பதிவு. துணைவியாருக்கு PO1 பொறுப்பு ஒரு பூத்தில். கொஞ்சம் பதட்டத்தோடுதான் எல்லோருமே இருந்தார்கள் - சென்னை பற்றிய சேதி பரவியிருந்ததால். மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப் போகும்போதே பக்கத்து பூத்தில்தால் பிரச்சனை; எங்கள் பூத்தில் பிரச்சனையேதும் இதுவரை இல்லை என்றார்கள். மாலை கூப்பிடச் சென்றால் பூத் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு தேர்தல் தளவாடங்களோடு தளவாடங்களாக மக்களும் பூத்துக்குள் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் 'ரிலீசா'னார்கள். அதன்பின் அருகாமையிலிலிருந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு இரண்டரை மணி நேரம், செய்த வேலைக்குரிய பணப் பட்டுவாடாவிற்காகத் தேவுடு காக்க வேண்டியதாப் போச்சு. அவர்களோடு நானும் அந்த அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்த ஏரியாவிலுள்ள 20 பூத்துகளில் தேர்தல் வேலை செய்தவர்கள் யாவரும் குழுமினர்.

பலரிடமும் பகல் நேரத்தில் நடந்தவைகளின் தாக்கம் என்னவோ குறையாமலிருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் தப்பிப் பிழைத்தது பற்றியும், தங்கள் பூத்துகளில் நடந்தவை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் துணைவியார் இருந்த பூத்தில் - பெண்களுக்கான பூத் என்பதலா என்னவோ - கலாட்டா கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கும் போலும். நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து 'இப்போ ஒரு 25 பேர் வருவாங்க; எந்த கேள்வியுமில்லாமல் ஓட்டுப் போட விடுங்க 'என்ற ஒரு தெளிவான உத்தரவு தேர்தல் ஆபிசருக்கு. அந்தக் கட்டளை நல்லபடியாக நிறைவேற்றணுமே; அதுக்காக மட்டும் அங்கிருந்த நாற்காலி, மேசை எல்லாவற்றையும் கொஞ்சம் போல் உதைத்து, தள்ளி விட்டு, அடையாள மை வைத்திருந்தவரிடமிருந்து மையைக் கீழே தட்டிவிட்டு அவருக்குக் கொஞ்சம் போல அந்த மையால் அபிஷேகம் பண்ணிவிட்டுப் போனார்களாம். இதில் PO4 PO5 இருவரும் பெண்கள். முதல்வர் இவ்வளவு கலாட்டாவிலும் ஓட்டளிக்கக் கொடுக்கப்பட்டிருந்த முத்திரையைப் பாதுகாப்பாக முந்தானைக்குள் எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்தவரோ இந்தக் களேபர நேரத்திலும் வாக்குப் பெட்டியை அணைத்துப் பாதுகாத்தார்களாம். என் துணைவியாரிடம் 'உனக்கு என்னவாயிற்று' என்று கேட்டேன். 'என்னமோ, என்னைப் பார்த்து என்ன பரிதாபமோ, என் மேசையை தட்டி விடவில்லை; நானும் உட்கார்ந்த இடத்திலே ஆணி அடித்ததுமாதிரி இருந்திட்டேன்; பத்து நிமிஷம்னாலும் வேர்த்து விறு விறுத்துப் போச்சு' என்றார்கள். அதைச் சொல்லும்போதுவரையும் கூட அந்த ஆசுவாசம் நீடித்தது; தணிய இன்னொரு மணி நேரம் ஆச்சு.

ஏறக்குறைய அங்கு குழுமியிருந்தவர்கள் பலரும் ஆசிரியர்களே; அதுவும் இரண்டே இரண்டு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஆகவே, இப்படி காத்திருந்த போதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் 'நலம்' விசாரிக்கவும், பகலில் நடந்தது பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூத்தில் PO மட்டும் - அவர் ஒரு தலைமைஆசிரியர் - ஆண்; மற்றவர்கள் அனைவரும் பெண்கள். அவர் கதைதான் இருப்பதில் பயங்கரமா இருந்தது.ஒரு பெரிய கூட்டம் உள்ளே நுழைய, எல்லா பெண் தேர்தல் ஊழியர்களும் அவருக்குப் பின்னால் பதுங்க, வந்த கூட்டத்தில் ஒருவன் அவர் கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள 50 ஓட்டுகள் போல அந்தக் கூட்டம் போட்டுவிட்டுச் சென்றதாம். இன்னொருவர் பூத்தில் கத்தியெல்லாம் ஒன்றுமில்லையாம்...! ஆனால் உள்ளே நுழைந்து அதே வேகத்தில் பூத்தில் இருந்த இரண்டு குழல் விளக்குகளை உடைக்க, அதன் சத்தமும்,தெறித்த கண்ணாடி தலையில் விழவும்...அதற்கு மேல் கூட்டத்தின் அராஜகம்தானாம்.

இந்த பூத்துகள் இருந்த தொகுதியின் தி.மு.க. ஒரு பெண் உறுப்பினர்; இம்முறை மதுரைக்குப் பெண் மேயர் என்பதால், இந்த வேட்பாளர் வென்றால் அவர்தான் எங்கள் "வணக்கத்துக்குரிய மேயராக" ஆகும் வாய்ப்புள்ளதாலேயே இப்பகுதியில் இந்த அளவு வன்முறை என்றார்கள். அதோடு இந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளராக இன்னொருவர் - கட்சி வேட்பாளரை விடவும் கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் பெற்றவர் - போட்டியிட்டதும் இன்னொரு காரணமாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் 'கதை' சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு post-election commotion நடந்தது. எல்லாம் அந்தப் பெண் வேட்பாளரும் அவரது தொண்டர்கள் செய்யும் கலாட்டா என்று சேதி வந்தது.

இந்த அனுபவ பகிர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பூத்தில் இருந்தவர்களும் சொன்ன ஒரு சேதி ஒரே மாதிரியாகவே இருந்தது: எல்லா பூத்துகளிலும் இந்தக் கலாட்டாக்கள் நடந்தேறும்போது, போலீஸ்காரர்கள் "பத்திரமாக" வெளியில் சென்று நின்று கொண்டார்களாம்.

சென்றைய ஆட்சியில் அரசு ஊழியர்களை - ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சுவர் ஏறிக்குதித்து உயிருக்குப் பயந்து ஓடிய அரசுப் பணியாளர்களைக் கூட - இதே போலீஸ் ஓடஓட விரட்டியக் காட்சிகளைக் கண்டது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. நம் காவல் துறையினரை வாட்டுவது என்ன? - a sick psychology and lousy philosophy?

முதல் நாள் பயமும்,பதட்டமும் முழுசாக விலகி, அடுத்த நாள் என் துணைவியார் என்னிடம் சொன்னது: 'நல்ல adventureதான், இல்ல? அந்தக் காலத்திலன்னு... பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லலாம்'. அதோடு இன்னும் அடுத்த தேர்தல் வருவதற்குள் ஓய்வு பெற்றுவிடலாமென - இன்னுமொரு ஆண்டுதானே - சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை; நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!


*
*** இப்பதிவு 30.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (3)

*

Monday, October 09, 2006

179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***

நானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்ததும் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.

எல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....

சரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன? நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

இப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவன் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா? ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.

நீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.

அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.

கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html


இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------


கீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:

kumaran ennam
http://kathalregai.blogspot.com/2006/10/blog-post_07.html

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//

இதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.
---------------

muthu thamizini
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

---------------------
selvan
http://holyox.blogspot.com/2006/10/184.html

முழுமையாக நான் ஆமோதித்த பதிவு

------------------------
சமுத்ரா -
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

ஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து
கொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//
=====================

meena
http://www.tamiloviam.com/unicode/09280601.asp
தூக்கில் போடுங்கள் அப்சலை

=============
நல்லடியார்
http://athusari.blogspot.com/2006/10/blog-post_07.html

முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்
==========
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
=====================

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
so sad. never expected such a post from you.
i strongly suggest that you remove this post.


=====================

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

//தேவை//
======================

http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html
மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

i fully endorse this view.
========================
prapuraajadurai
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html
தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்
இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!//

உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

=========================
சிறில்
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
===================

http://abumuhai.blogspot.com/

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!
===========================


http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
திருத்தமாக எழுதவில்லை
=============================

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?

=================

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html
அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!
=================

http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html


================
http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_09.html

அந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.
================



***இப்பதிவு 16.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (2)


*

Thursday, October 05, 2006

178. இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் !

ஆபிரஹாமிய மதங்களின்படி இந்த அண்டம் அனைத்தும் ஆறு நாட்களில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும், ஆறாவது நாளில் ஆதாமும் அவனின் விலா எலும்பிலிருந்து (இன்னொரு ஆணாதிக்கக் கருத்து..?) ஏவாளும் படைக்கப்பட்டாள் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகவுள்ளது. இதை "இன்னுமா நம்புகிறார்கள்?" என்று மிக ஆச்சரியத்துடன் பதிவர் எழில் ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவும் இட்டுள்ளார். அவரது ஆச்சரியத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். :) இதற்குப் பதில் சொல்லும் முகமாக அபு முஹை ஒரு பதில் பதிவிட்டுள்ளார். ஆகவே இந்தப் பதிவை "இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் ! " என்ற தலைப்பில் அங்கு கூறப்பட்டவைகளை வைத்து எழுத நினைக்கிறேன்.

லமார்க் சொன்ன use and disuse, inheritance of acquired characters என்ற தியரிகள் தோற்று விட்டன; தவறென நிரூபணமாகி நாளாகிவிட்டது. இன்னும் பல பாட நூல் ஆசிரியர்கள் மட்டும் 'பழைய நினைப்பில்' பரிணாமம் பற்றிய நூல்களில் இவருக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து வருகிறார்கள்; அவ்வளவே.

அதே போல, டார்வின் சொன்ன பல hypotheses குறையுள்ளவை என்றும் நிரூபித்தாகி விட்டாயிற்று. உதாரணமாக, அவர் வெறுமே factors என்று மொட்டையாகச் சொன்ன விஷயம் பின்னால் ஜீன்கள் என ஆயிற்று; அவர் உயிரினங்கள் மாறக்கூடியவை என்று சொல்லிச் சென்றார்; பின்னால் mutation, அதன் விளைவுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் அவர் காலத்தில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத பல விஷயங்களையும் சேர்த்து, புதிய பரிணாமக் கொள்கையை பலரின் முயற்சிகளால் உருவாக்கி அதனை இப்போது Modern synthesis of Evolution' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

படைக்கப்பட்டதாகவும், எப்போதும் அதே படைக்கப்பட்ட நிலையில் இருந்துவருவதாகக் கருதப்பட்டு வந்த உயிரினங்கள் அவ்வாறின்றி மாறக்கூடியவை என்ற டார்வினின் முதல் கருத்தே இன்றுவரை பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்து வருகிறது. அதைத் தவிர மற்ற அவரது கருத்துக்கள் பின்னால் மறு உருவெடுத்தன. எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் survivial of the fittest என்பதுகூட பின்னாளில் மறுக்கப்பட்டு, மாற்றப் பட்டது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நாம் கூறுவதும் எளிய புரிதலுக்காகச் சொல்லப்பட்ட ஒரு விஷயம். ஏதோ, நேற்று குரங்காக மரங்களில் ஊசலாடிக்கொண்டிருந்தது இன்று மாறி மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கிறான் என்றோ, குரங்கு போட்ட குட்டி மனிதக் குழந்தையாக இருந்தது போன்றோ மனப் பிம்பங்களை யாரேனும் ஏற்படுத்திக் கொண்டால் அது அவர்களின் தவறேயன்றி, பரிணாமக் கொள்கையின் தவறோ, குறைபாடோ இல்லை.

evolution என்ற சொல்லுக்கே blossoming என்பது பொருள். மாலையில் பார்க்கும் மொட்டு காலையில் பூவாக மலர்கிறது. மெல்ல மெல்ல இதழ் அவிழும் அந்த 'பூத்தலை'ப் போலவே உயிரினப் பரிமாணமும் மிக மிக மெல்ல - for millions of years - நடக்கும் ஒரு நிகழ்வு. இதில் ஆராய்ச்சிக் கூடத்தில் நடத்திக்காட்டக் கூடிய விஞ்ஞான சோதனைகளைப் போல என் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டு என்றால் அது கேட்பவர்களின் மன நிலையைத்தான் காண்பிக்கும்.

அதோடு, இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்ற நிலைதான் இருக்கிறதே என்பது பல விஞ்ஞான உண்மைகளைப் பொருத்தவரை முழு உண்மையே. பரிணாமம் மட்டுமல்ல பல விஞ்ஞான உண்மைகள் 'சாத்தியக் கூறுகளாகத்தான்' உள்ளன. அவைகள் மேலும் மேலும் புதிய பரிமாணங்களோடு வளரவும் செய்யலாம்; அல்லது தவறென நிரூபிக்கப்படவும் செய்யப்படலாம். அதுதான் விஞ்ஞானம். விஞ்ஞானம் எந்த ஒரு கண்டுபிடிப்பையுமே அறுதியாகச் சொல்லாது, வளர்ச்சி வேண்டி ஒரு கேள்விக்குறியுடனே முடிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் அந்த கேள்விக் குறிகளுக்குப் பதில் கண்டு அடுத்த கேள்விக்குறியை நோக்கி நம் அறிவை முன்னெடுத்துச் செல்கின்றன. அண்டத்தின் பிறப்பு பற்றிய புதுப் புது கருத்துக்களும் வளர்ச்சிகளும் இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால், மத நம்பிக்கைகளோ இதற்கு நேர் எதிர்மறை. முன்னதில் கேள்விக் குறி முக்கியமென்றால் இங்கே 'முற்றுப் புள்ளிகள்'தான் உண்டு. மாற்றங்கள் முன்னதில் முக்கியமென்றால், மற்றதில் மாற்றமே இல்லை என்பதில் தான் அதன் சிறப்பு. கேள்விகள் கேட்டுக்கொண்டே இரு என்கிறது விஞ்ஞானம்; கேள்விகள் கேட்டாலே blashphemy என்கிறது வேதங்கள். இன்றைய உண்மைகள் நாளைக்கு மாறலாம்; இன்னும் சிறப்பான, சரியான பதில்கள் மனிதனுக்குக் கிடைக்கும் என்கிறது விஞ்ஞானம்; இல்லையில்லை.. "அந்த உண்மைகள்" எக்காலத்துக்கும் உரியது; எப்போதைக்கும் சரியானது என்கின்றன வேதங்கள். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு சாரார் கண்ணை இறுக மூடிக் கொள்வதுதான்.

fossils, connecting links, carbon dating, extinction of living things, mutations causing changes in species, genes and their role; mutations and their role in evolution - இவைகளெல்லாமே நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான உண்மைகள். இவைகளை வைத்தே பரிணாமக் கொள்கை விளக்கங்கள் concepts-களாக தரப் படுகின்றன. இவைகளைப் பற்றிய தேடுதல், புரிதல் ஏதுமின்றி தங்கள் மதம் சொல்வதால் அதை மட்டுமே கண்டுகொள்ளும் நிலைப்பாடு இருப்பின், அவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதே உண்மை. இவைகள் வெறும் concepts தானே என்றும், இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பின்னும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதானே சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி:
எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் -
எந்தக் குரங்கிலிருந்து எந்த மனிதக் குழந்தை பிறக்கக் கண்டீர்கள்; 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?'; அதைப் பார்த்தவர் யார்; குரங்கிலிருந்து மனிதன் வந்தானெனில் எதிலிருந்து குரங்கு வந்தது? பரிணாமக் கொள்கைகள் வெறும் தியரிதான் நிரூபிக்கப்பட்ட உண்மையில்லை; மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது?; - என்பது போன்ற கேள்விகள் வருகின்றன. தவறில்லை. ஆனால், இதற்கு மாற்றாக கேள்வியெழுப்புவர்கள் தரும் விடையென்ன?

மனிதன் களிமண்ணிலிருந்து (பைபிள்) / ரத்தத்திலிருந்து (குரான்?) கடவுளால் உண்டாக்கப்பட்டான் என்பதுதானே. இதற்கு என்ன ஆதாரம். உங்கள் வேத நூல்கள்தானே. விசுவாசம் / ஈமான் கொண்டவர்களுக்கு அந்த வேத / தேவ வார்த்தைகள் உண்மை. மற்றவர்களுக்கு...? அவர்களுக்கு நீங்கள் தரும் ஆதாரம் என்ன? வெறுமே அது ஆவியால் தரப்பட்டது என்பதோ, இறக்கப்பட்டதாக ஒருவர் சொன்னது என்பதாலோ உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள். மத மறுப்பாளனாகிய எனக்கு விஞ்ஞானம் தரும் உண்மைகளும், சான்றுகளும் ஆதாரங்கள் என்றால், உங்களிடம் (என்னையும் நம்ப வைக்க) என்ன ஆதாரங்கள்? பிறப்பால், வளர்ப்பால் ஊட்டிவிடப்பட்ட விஷயங்களை முழுமையாக நீங்கள் நம்பலாம். உங்கள் வேத புத்தகங்களின் வார்த்தைகள் உங்களுக்குக் கடவுளின் வார்த்தைகளாகவே இருக்கலாம்; இருக்கட்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாத போது நீங்கள் தரும் மேற்கோள்கள் எங்களுக்குப் பொருளற்றவையே. மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டான் என்று சொன்னால் நம்பிக்கையாளர்கள் அப்படியே ஒப்புகொள்கிறீர்கள்; ஆனால், நீங்கள் பரிணாமத்திற்குரிய சான்றுகளைக் கண்முன்காண்பி என்று சொல்வது போல நானும் மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டதற்கு என்ன சான்று என்று கேட்கலாமல்லவா? கேட்டால் உங்கள் பதிலென்ன? "வார்த்தைகள்" சான்றுகளாகாது.

இதையே கிறித்துவத்தின் மேல் உள்ள கேள்விகளாக எனது முந்திய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். படைத்தலைப் பொருத்தவரை கிறித்துவ, இஸ்லாமிய நம்பிக்கைகள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதால் எனது கேள்விகளும் இரண்டு மதங்களுக்கும் பொதுவானதாக இருக்குமென்பதால் அப் பதிவில் படைத்தலைப் பொருத்தவரை நான் எழுப்பியிருந்த ஐந்தாவது கேள்வியை மட்டும் மீண்டும் இங்கே தந்துள்ளேன். கொள்க:

5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஏதோ ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு ஒரு kid stuff போலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180


*

* * இப்பதிவு 09 அக். 2006 பூங்காவில் இடம் பெற்றது. (1)

Monday, September 25, 2006

177. சில நேரங்களில் சில பதிவர்கள்.


பதிவர்: 1


வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட 'ஜூஜா' தான் என்றார்!

அவ்வளவு 'ஆட்டோக்களா' இருக்கு நம்ம ஊரில...?

"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல"

பதிவர்: 2

அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, 'என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா' அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே 'உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?' என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு 'எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க' அப்டின்னு கேட்டேன்.
'இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்' என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. 'ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு' கேட்டேன். அதுக்கு அவர்: 'அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு' அப்டின்னார்.

அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !

Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive - அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.

பதிவர்: 3

நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!

பதிவர்: 4

அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.

நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து 'நொறுங்க தின்னா நூறு வயசு'ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.

அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.

பதிவர்: 5

மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி 'மிஸ்' பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை 'மிஸ்' செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. 'சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது' என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் - ""அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" - அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை...சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.

ஆனா ஒண்ணு...'வாட்டர்' பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு 'இதுக்காக' இப்படி 'ரூட்' உடுறது. லொல்லலாங்காட்டி... 'வாட்டர்' போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி 'வாட்டர்' பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது 'வாட்டர்' பத்தி பேசுறேனா, என்ன?

Monday, September 18, 2006

176. மாங்கா மடையர்களா...?

இன்று (18.08.'06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.

ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.

விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு...? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்...? Cann't these judges fix up priorities first?

இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.