Monday, February 22, 2016

889. ஒரு பெரும் நடிகனின் கடும் தோல்விச் சோகம்




*

அறுபது வருஷத்துக்கு முந்தின என் கதையைப் பற்றி  பத்து வருஷத்துக்கு முந்தி எழுதியிருந்தேன். இப்போ இந்த வருஷம் அதே மாதிரி இன்னொரு ஏமாற்றம்.  ஒரே சோகம்…..  அந்த சோகத்தில முந்தி எழுதினதை எடுத்து வாசிச்சேன். அட .. பரவாயில்லையேன்னு அதுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்ததும் மனசில தோணுச்சி

சின்ன வயசில போட்ட ஒரு நாடகத்தில நடிச்சி, நல்ல பேரு வாங்கி …. அதப்பத்தியெல்லாம் எழுதிட்டு கடைசியா கொஞ்சம் விளையாட்டா //நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா?// அப்டின்னு என் முதல் star weekல் எழுதியிருந்தேன். அப்போவெல்லாம் ப்ளாக்கர்கள் எல்லாம் ரொம்பசொந்தமா .. நெருக்கமாஇருப்பாங்கல்லா. அது மாதிரி இருந்த நண்பர்கள் நிறைய பேர் என்வருத்தம்போக நிறைய ஆறுதல் சொன்னாங்க

சில உதாரணங்கள்...

//மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ் பண்ணவன் நான்// அப்டின்னு வெளிகண்ட நாதர் அமெரிக்காவிலிருந்து தன் சோகம் சொன்னார்
//இப்பகூட நாளாகலை தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம். அமிதாப் இன்னும் நடிக்கலையா என்ன? // அப்டின்னு பத்மா அர்விந்த் சொன்னாங்க.
அடுத்து, மதுமிதா, //பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி. // என்று சொன்னாங்க.
அடுத்து ramachandran usha (November 6th, 2005) ஒரு ஐடியாவே கொடுத்தாங்க ..//தருமி மனம்தளர வேண்டாம். விளையாட்டுக்கு சொல்லவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பிரபல விளம்பர நிறுவனங்கள் எல்லா வயது ஆட்களையும் மாடலாய் எடுக்கிறார்களாம். நீங்கள் முயற்சிக்கலாம். //


கட்டக் கடைசியில உஷா கொடுத்த ஐடியா க்ளிக் ஆனது மாதிரி ஒண்ணு இப்போ நடந்திச்சு.  பழைய மாணவ-நண்பன் – தான்யராஜ், பழைய விஸ்காம் மாணவன் - அவனிடமிருந்து ஒரு போன் வந்ததுசென்னையிலிருந்து பேசினான். சென்னைக்கு வருவீங்களாவர்ரதுன்னா எப்போ வருவீங்க? அப்டீன்னு கேட்டான். அவன் கேட்ட போது நான் இருந்ததே சென்னையில் தான். சார் உங்களைப் பார்க்கணுமேநான் சொல்ற இடத்துக்கு வர்ரீங்களான்னு கேட்டான். சரின்னேன். அடையாளம் கேட்டு டாக்ஸி அனுப்பினான். போன இடம் பெரிய இடமாகவும் இருந்ததுஎன்னன்னு கேட்டேன். நடிக்க வர்ரீங்களான்னு கேட்டான். அடபோப்பாதொப்பையும் அதுவுமா இருக்கேன் அப்டின்னேன். அதெல்லாம் பொருத்தமா இருக்கும் அப்டின்னான். என்ன ப்ரோஜக்ட் அப்டின்னும் சொன்னான்ஒரு சீரியல். தாத்தா வேடம். ஆனால் கம்பு ஊனாத கொஞ்சம் energetic தாத்தா அப்டின்னான். நம்மளும் வாழ்க்கையில் துணிஞ்சி நிக்கணும்லா. மூச்சை இழுத்துப் பிடிச்சிகிட்டு, நானும் துணிஞ்சி சரின்னு சொல்லிட்டேன். இன்னும் மூன்று நாட்கள் சென்னையில் இருக்கும் ஏற்பாட்டோடு போயிருந்தேன். வேண்டுமானால்  நீட்டித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.



,








அவன் என்னிடம் படித்து சில வருஷம் ஆகியிருந்தது. அவன் சொன்ன கதைக்கு எப்படி என்னை ஞாபகம் வச்சிக் கூப்பிட்டான் எனக் கேட்டேன். அங்கும் நம் ப்ளாக் தான் வேலை செய்திருக்கிறது. நமது "பழைய" ப்ளாக்கர் ஒருவர்தான் இந்த சீரியலுக்கு வசன கர்த்தா. பெயர் வரவனையான். (நிறைய அருமையாக எழுதிக் கொண்டிருந்த ஆளு .. அம்புட்டு நகைச் சுவை உண்டு. இப்போ  ப்ளாக் பக்கமே வருவதில்லை. சமூக ஊடகங்களில் மட்டும் எழுதுகிறார். ) அறுபது எழுபது வயசில ஒரு ஆளு வேணுமேன்னு அவங்க டீம் யோசிச்ச போது வரவனை என் பெயரைச் சொல்லியிருக்கிறார். (எம்புட்டு ஞாபக சக்தி!) தான்யா – அவன் தான் இயக்குனர் - சரின்னு என்னைக் கூப்பிட்டிருக்கிறான்

வாழ்க்கையில் ப்ளாக் நிறையவே உதவியிருக்கிறது!








அடுத்த நாள் ஷூட்டிங்  அப்டின்னான். காஸ்ட்யூம் என்னன்னு கேட்டேன். முதல் ஷெட்யூலில் வேஷ்டி, முழுக்கை பனியன் அப்டின்னான். பனியன் போடுற கெட்ட பழக்கமே கிடையாது. வேட்டி சுத்தமா கிடையாது. அட .. என்னிடம் தான் இல்லையென்றால் நம்ம மருமகன்களுக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. சொன்னேன். சரி வாங்க என்றான். அடுத்த நாள் அவனே புது காஸ்ட்யூம் ரெடி செய்து விடுவதாகச் சொன்னான். இரண்டாவது ஷெட்யூலுக்கு வழக்கமான உடை. டி-ஷர்ட் என்றான். அதுக்குப் பஞ்சமில்லை. காலையில் வீட்டுக்கு வந்து அழைத்துப் போகிறேன் என்றான்.





முதல் ஷெட்யூல் ஒரு வீட்டில். வேறு ஏதோ ஒரு சீரியலுக்காக வாடகைக்கு எடுத்த வீடு. புதிதாக இவர்களும் சில “props” (எப்பூடி…! நாங்களும் அவுக professional slang எல்லாம் use பண்றோம்ல…) சேர்த்துக்கிட்டாங்க. சுவத்தில இருக்கும் சின்ன படம் கூட வாடகைக்கு வருகிறது. காமிரா, ஸ்டாண்ட் எல்லாம் ஒரு பக்கம் இருந்தும், லைட் வகையறாக்கள் இன்னொரு இடத்திலிருந்தும் வரும் போலும்.  என் பார்வைக்கு எல்லாமும் புதிதாக இருந்தது. ! இப்படித்தானோ என்று பல விஷயங்கள் தோன்றின. அதற்குப் பிறகு இப்போவெல்லாம் சினிமா, சீரியல் பார்க்கும் போது படத்தை  இப்படித்தான் எடுத்திருப்பார்களோ என்று technical-ஆக  தோன்ற ஆரம்பித்து விட்டன. முன்பெல்லாம் இரண்டு பேர் பேசும் போது அதை ஒரே sequence என்பது போல் தோன்றும். இப்போதெல்லாம் எல்லாம் துண்டு துண்டாகத் தெரிகிறது. வெற்றுவெளியைக்கூட  எதிரில் வைத்து இன்னொருவரிடம் பேசுவது போல் நடிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அட …lip synch ஆகுதான்னு கூட மனசு பார்க்கச் சொல்லுது




நானும் என்பேத்தியும்  நடிக்கணும். அவர் ஒரு RJ.  ஏற்கெனவே நடித்திருப்பார் போலும். என்னைப் போல் அவர் காமிராவிற்குப்  ‘பயப்படவில்லை’.  அவர் வசனத்தை அவர் பேசும் போது நான் frameல் இல்லாவிட்டாலும் பயங்கரமாக சாதாரணமாக நம் வாழ்க்கையில் இருப்பது போல் அவர் பேசுவதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் நான் மட்டும் frameல் இருக்கும் போது அவர் என்னைப் பார்க்காமல் casualஆக ஏதாவது செய்து கொன்டு இருப்பார். எனக்கு அது புரிந்து விட்டாலும் அந்த atmos பிடிக்கவில்லை. அதனால் அவரிடம் நான் பேசும் போது என்னைப் பார்த்துக் கொண்டிருங்க என்று கேட்டுக் கொண்டேன். அதாவது எதிரில் இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பித்துக் கொண்டு நடிக்க வரவில்லை. அவரைப் பார்த்துக் கொண்டே பேச வேண்டிய கட்டாயம் எனக்கு








ரொம்ப டேக்குகள் வாங்கவில்லை. ஒரு வேளை trial run மாதிரி இருந்திருக்குமோன்னு நினச்சேன். இப்போது நான்கைந்து ஆட்கள் மட்டும் சுற்றி நின்றார்கள். கூட்டம் அதிகம் இல்லைமுதல் ஷெட்யூல் முடிந்தது. கொஞ்சம் தெளிச்சியானது மாதிரி எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இதே ஷெட்யூலை மறுபடி எடுத்தால் இன்னும் பின்னி விடலாம் அப்டின்னு தோன்றியது. 




ஆனால் மதியம் இரண்டாம் ஷெட்யூல்இதில் நான் மட்டும் காமிராவிற்கு எதிரில்ஆனால் என்னைச் சுற்றி நிறைய ஆட்கள் – எல்லாம் ஒரு ambience வேண்டுமென்பதற்காகஒரு coffee shop situation. சுற்றி நிறைய பேர் இருந்தார்களா … கொஞ்சம் கை கால் உதறல்எப்படியோ ஒப்பேற்றினேன்இரண்டாம் ஷெட்யூல் முடிந்தது.  இதற்கு dubbing நாளைக்கு என்றார்கள்அது ரொம்ப கஷ்டம் என்று எனக்குள் ஒரு நினைப்பு




வீட்டிற்கு வந்து படுத்தால் ஒரே கனவு.





அட … போங்கய்யா… கனவுல தான பாதி வாழ்க்கை எப்பவுமே போகுது!







அடுத்த நாள் dubbing. சின்ன அறை. ஒன்றரை மேசை. அரை மேசையில் ஒரு கணினி. இன்னொரு நீள மேசையின் முடிவில் ஒரு மைக். மைக் முன்னால் உட்கார வைத்தார்கள். கணினி இயக்க ஒருவர். பேச்சு சொல்லிக் கொடுத்து monitor செய்ய இன்னொருவர். சும்மா சொல்லக் கூடாது. Copy & paste கண்டு பிடித்தவனுக்கு ஒரு சிலை வைக்கணும். அதை வச்சே மனுசங்க செம விளையாட்டு விளையாடிருவாங்க போலும். வாங்கமா என்பதில்மாவை மட்டும் வெட்டி விட்டால் வாங்க அப்டின்னு மட்டும் வந்திரும்ல .. அது மாதிரி நிறைய மேஜிக் பண்ண முடியுது






மைக் முன்னால் என்னை உட்காரவைத்து வசனம் சொல்லணும் – நம்ம சீனும் கண் முன்னால் ஓடும். Dubbing monitor சில இடங்களில் நடிப்பை விட வாய்ஸ் நல்லா கொடுக்குறீங்க அப்டின்னார். ஒரு வேளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க அப்படி சொல்லியிருப்பாரோன்னு நினச்சேன்.






இந்த dubbingல எனக்கு ஒரு சின்னப் பிரச்சனை. உட்கார்ந்து கொண்டு அந்த வசனங்களைப் பேசச் சொன்னார். ஏறக்குறைய எல்லாம் முடிந்த போது ஒரு சின்ன ஐடியா வந்தது. நின்று கொண்டு பேசியிருந்தால் இதை விட நன்றாக குரலில் emote பண்ண முடியும்னு தோன்றியது. அவரிடம் சொன்னேன். அடுத்த தடவை அப்படி செய்யலாம் என்றார் – அடுத்த தடவை என்பதே இல்லாமல் போய்விடும் என்பது தெரியாதவராக ….  L





 கொஞ்ச நாள் காத்திருக்கணும் என்றான் இயக்குனர். தலைவர் பார்த்து சரின்னு சொன்ன பின் தொடரலாம் என்றான். சில நாளில் செய்தி வந்தது. தலைவரும் ஓகே சொல்லிட்டாராம்

ஆனால் கொஞ்ச நாளில் இன்னொரு செய்தி; தொடரவில்லைன்னு செய்தி வந்தது. நம்ம ப்ளாக் நண்பர் வரவனையான் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டாராம். அதனாலோ என்னவோ project dropped!




பல கனவுகள் போல் இதுவும் ஒரு கனவு…..



ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. காமிராவிற்குப் பின்னாலேயே நிற்பது பழகிப் போன விஷயம். புதிதாக முன்னாலும் நின்று “நடித்து” ஒரு அனுபவம் பெற்றது ஒரு சின்ன மகிழ்ச்சி.

இப்படி காமிரா முன்னால் நின்னதை யாரிடமும் சொல்லவில்லை. மனசுக்குள் ஒரு பயம். முதலில் என் நடிப்புக்கு பாஸ் சரி சொல்லுவாரா …? அடுத்து, இந்த சீரியல் – தமிழ்நாட்டில் ஒரு புது முதல் முயற்சி என்றான் இயக்குனர் –தொடர்ந்து எடுக்க சரி சொல்வார்களா என்ற கேள்வியும் இருந்தது. இப்படிப் பல குழப்பங்கள். அதனால் வெளியே சொல்ல வேண்டாமென்று யாரிடமும் சொல்லவில்லை. வீட்டுக்கு மட்டும் தெரியும். இல்லையென்றானதும் செய்தியை குடும்பத்தில் ஒலிபரப்பியாகிற்று. ஆனாலும் பிறகு போட்டோக்களைப் பார்த்த்தும், சரி இதை இனி உலகத்திற்கே ஒளிபரப்பி விடுவோம் என நினைத்தேன். நண்பர்களிடம் கேட்டேன். எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதனால் தான் – ஒரு டயலாக் மாதிரி சொல்லிர்ரேன் – உங்கள் எல்லோரிடமும் என் வாழ்வின் ஓரு பெரும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் இப்போது உரித்து உங்கள் முன் கொட்டி விட்டேன் ..  L

சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லி மிச்சமானது கொஞ்சம் போட்டோக்கள் மட்டும் தான். அவை கைக்கு வந்த பிறகு தான்  “இந்த உண்மையை உலகத்தின் முன் உடைத்து விடுவோம்” என்று தோன்றியது. கொட்டி விட்டேன்.


இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம். இந்த creativity மதுரக்காரங்க கிட்ட கொட்டி குவிஞ்சி கிடக்கோ… இந்த சீரியல் அனுபவத்தில் நான் சந்தித்த பலரும் மதுரைக்காரர்கள். இயக்குனர், கதாசிரியர், dubbing monitor, photographer என்று மட்டுமல்ல அதன் பின் இதன் தொடர்பாக நான் சந்தித்த முக்கிய நபர்களில் பலரும் எங்க ஊர்க்காரர்கள் தான். அந்த விதத்தில் மிக்க மகிழ்ச்சி.


*
பதினோரு வருஷத்திற்கு முன் என் நாடக அனுப்வத்தை எழுதிய போது அனுபவித்து நன்றாக எழுதியது போன்று ஒரு நினைப்பு. ஆனால் இந்த சீரியலைப் பற்றி எழுதணும்னு நினச்சி ரொம்ப நாளாச்சு. ‘mood’ வரவே மாட்டேன்னு சொல்லிரிச்சு. இப்போ எழுதினதை வாசிக்கும் போது எனக்கே ஒரே dryயாக இருப்பது போல் தோன்றுகிறது. ஏன் இப்படி ஆகிப் போச்சு?

 I know I should improve …but how? 

தெரியலையே!!!


*




Tuesday, February 16, 2016

888. உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.








*

Siachen bravehearts laid to rest என்று இன்றைய தினசரிகளில் வந்த தலைப்பு. இறந்தவர்கள் bravehearts அல்ல …just ‘cold hearts’! தன் தலைவிதியை நொந்து கொள்ளும் சில போர்வீரர்களும் அவர்களது பாவப்பட்ட குடும்பங்களும்.


700 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இந்த பனிபடர்ந்த இடம் 5,753 m /18,875 ft உயரத்தில் உள்ளது. உலகின் மிக உயரமான படைத் தளம். சிம்லா உடன்படிக்கையை பாக்கிஸ்தான் மீறியதால் 1984ல் Operation Meghdoot என்ற பெயரில் இந்தியா போர் தொடுத்து Siachen Glacier முழுவதையும் தன் “குடைக்குக் கீழ்’ கொண்டு வந்தது.

பாதுகாப்பு அமைச்சர் Rao Inderjit Singh பாராளுமன்றத்தில் இது வரை 869 படைவீர்ர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். (1000 வீர்ர்கள் இறந்ததும் நாமெல்லோரும் அதைக் கொண்டாடுவோமா?)

இவர்கள் எதிர்களோடு போரிட்டு மாளவில்லை. இயற்கையோடு போராடி உயிரைத் தந்துள்ளார்கள்.

இந்த லட்சணத்தில் Siachen என்ற பெயருக்கு “ரோஜாக்களால் நிரம்பிய இடம்” என்று பொருளாம்! அடப்பாவமே!

இந்த அழகில் இப்போது இவ்விடத்தின் பொறுப்பு 16 madras regiment இடம் உள்ளதாம். அப்படியானால் நம் ஏரியாக்கார்ர்கள் அதிகமாக இருப்பார்களோ? (இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?)

பயனில்லாத, தேவையில்லாத இட்த்தில் ஒரு போர்க்களம். போரில்லாமல் இயற்கையின் இறுக்கத்தில் உயிரை அனாவசியமாக இழக்கும் நம் வீர்ர்கள். இறந்தவர்களின் பட்டியல்:

(1) Subedar Nagesha TT r/o vill Tejur, Hassan Dist, Karnataka.
(2) Havildar Elumalai M r/o vill Dukkam Parai, Vellore Dist, Tamil Nadu. 
(3) Lance Havildar S Kumar r/o vill Kumanan Thozhu, Teni Dist, Tamil Nadu.
(4) Lance Naik Sudheesh B r/o vill Monroethuruth, Kollam Dist, Kerala.
(5) Lance Naik Hanamanthappa Koppad r/o vill Betadur , Dharwad Dist, Karnataka.
(6) Sepoy Mahesha PN r/o vill HD Kote, Mysore Dist, Karnataka.
(7) Sepoy Ganesan G r/o village Chokkathevan Patti, Madurai Dist, Tamil Nadu.
(8) Sepoy Rama Moorthy N r/o vill Gudisatana Palli , Krishna Giri Dist, Tamil Nadu. 
(9) Sep Mustaq Ahmed S r/o vill Parnapalle, Kurnool Dist, Andhra Pradesh.
(10) Sepoy Nursing Assistant Suryawanshi SV r/o village Maskarwadi, Satara Dist, Maharashtra

4 பேர் தமிழர்கள்; 9 பேர் தென்னிந்தியர்கள். 

 மனசு கேட்காமல் கீழேயுள்ள நாலைந்து கீச்சுகள் - twitters - போட்டேன்.

"வீரர்கள் இங்கு அனுப்பப்படும்போது தன் குடும்பத்தினரிடம் "நாங்கள் திரும்பி வந்தால் பார்த்துக் கொள்வோம்" என்று சொல்வார்களாம்."* 

‘two baldies fighting for a single comb” நல்ல உதாரணம். இன்னும் இதற்காக உயிரை விட்டுக் கொன்டிருக்க வேண்டுமா?*  

"உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறோம் என்பது தவிர என்ன பயனோ? தேவையில்லாத உயிர்ப்பலிகள். நிறுத்துங்களேன்." 

"போர் எதுவும் இல்லாமலேயே வெறும் பாதுகாப்புப் பணியிலேயே பல உயிரைப் பலிகொடுக்கிறோம். இது தேவை தானா?"

இப்படி எழுதியும் எந்த விதமான ஆதரவும் என் கீச்சுகளுக்குக் கிடைக்கவில்லை. யார் கடைக்கண்ணும் என் கீச்சுகள் மீது விழவில்லை. முகப் புத்தகத்தில் இட்டேன். அதே கதி தான். ஒரு வேளை எனது profile photoவை மாற்றிப் போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எக்கச்சக்கமாக பலரின் பார்வையும், பகிர்தலும் வந்து விடும். 'விசாரணை' பற்றி எழுதியிருந்தாலும் பற்றிக் கொண்டிருக்கும்.  இல்ல ...?

சமூகத் தளங்களில் போட்டோவிற்கும், சினிமாவிற்கும் இருக்கும் இடம் சீரியசான விஷயங்களுக்குக் கிடைக்காதோ...

மனது இன்னும் வெறுத்து நாடு தழுவி சமூக ஊடகங்கள் வழியாக இதை நாம் எதிர்க்க முடியாதா? முயற்சிக்கக் கூடாதா? என்று ஒரு கீச்சு விட்டேன்.

இதற்கும் எந்த வித பயனுமல்ல. அதனால் உங்களனைவருக்கும் என் ஒரு கேள்வி:

சமூக ஊடகங்கள் வழியே பெரும் புரட்சிகளே ஏற்படும் என்றெல்லாம் சொல்கிறீர்களே …. அது ஏன் நம்மூரில் நிகழ மாட்டேன் என்கிறது.
நம் தோல் அவ்வளவு தடிப்பா?
அல்லது … நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழாமல் இருந்தால் போதும் என்ற மேனாமினிக்கித் தனமா?
இல்லை .. வேறு பெயர் ஏதும் இதற்குண்டா?


அட ... இதுதான் போகுதுன்னு நம்மூர் விஷயம் ஒண்ணு போட்டேன். அதுவும் ஒரு சீரியஸான விஷயம் தான். அதுவும் சேற்றில் விழுந்த கல் போலானது.

#சீப்மினிஸ்டர் சொல்லிட்டாங்க. அதிகாரிகள் மேல் ஊழல்கேஸ் போடக்கூடாதாம்.இனிமே under the table வேண்டாம் எல்லாம் இனிமே over the table தான். ஜாலி … ஜாலி … OPEN BUSINESS ……

------------
சமூகத் தளங்களை வெறும் 'ஜாலிக்காக' மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா?  ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தவே கூடாதா?
 ----------


அட ...போங்கப்பா ...நீங்களும் உங்கள் சமூகத்தளங்களும் ....


----------


 *1 ... From Letters to the Editor from THE HINDU






 *

Friday, February 12, 2016

887. நானும் வரைந்து பார்த்தேன் ...






*


 பேத்தியின் வலைப்பூவில் அவள் வரைந்த படத்தை அலையேற்றினேன். அப்படியே ஒரு ஆசை. நான் வரைந்த படம் ஒன்றையும் சேர்த்து "ஒட்னீஸ்" போட்டுக் கொண்டேன். அதை இங்கேயும் பதிந்து விட்டேன்.


*

நானும் வரைந்து பார்த்தேன் ... 

எப்படியோ பேத்திகள் இருவருக்கும் அன்று வரையும் மூட். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேத்திகள் மும்முரமாக வரைந்து கொண்டிருந்தார்கள். தரையெல்லாம் வண்ணக் கலவைகள் தான். பெரிய பேத்தி வரைந்து முடித்தாள்.

அவள் வரைந்த படம் ....



சின்ன பேத்தியும் வரைந்து முடித்தாள்.

அடுத்ததாக அம்மாகாரி பிள்ளைகளை சிந்திய வண்ணங்களைத் துடைத்துச் சுத்தம் செய்யச் சொன்னாள். சிந்திய வண்ணங்களைப் பார்த்ததும் எனக்குள் இருந்த (?) கலைஞன் விழித்துக் கொண்டான். சிதறிக் கிடந்த வண்ணங்களும், தூரிகைகளும் வா ..வா எனக் கூப்பிட்டன. விட்டேனா பார் என்று கசங்கிக் கிடந்த தாளில் நானும் வரைந்தேன்.

நான் "வரைந்த" படம் ....



படத்தை வரைந்ததும் பெரிய பேத்தியிடம் காண்பித்தேன். not bad என்பது மாதிரி தோளைக் குலுக்கினாள்.

two out of ten? என்றேன்.

 no..no.. eight out of ten என்றாள்.

எனக்கு சந்தோஷம் தாளவில்லை ...


கடைசியாக நால்வரும் சேர்ந்து தரையைச் சுத்தப்படுத்தினோம்!!








 *

Friday, January 29, 2016

886. புத்தகம் எழுதியதும் வந்த சில "திருகு வலிகள்"






மதங்களும் சில விவாதங்களும் 

***

ஈரோடு புத்தகக் கண்காட்சியில்
ஆகஸ்ட் 3ம் தேதி 
திங்கள் கிழமை, மாலை 2 மணிக்கு
இந்நூல் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால்
வெளியிடப்பட்டது.
எதிர் வெளியீடு
சா. அனுஷ்
பக்கம் 240
ரூ. 220



அணிந்துரை
பூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம், சுவனம், பரலோகம், சிவலோகம், வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து, நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து, அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த முத்தாய்ப்பான உத்திக்குப் பெயர் தான் விதி.
Dr.கோவேத.சுவாமிநாதன், 
தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு),
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

பின்னட்டை
காலமெல்லாம் ஒரே மதத்திலேயே வளர்ந்திருந்தாலும் அம்மதத்தின் பழைய வரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல முக்கிய செய்திகள் நம் கண்களுக்கு வராமலேயே இருக்க வழியுண்டு. அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள செய்திகளின் மேல் இந்நூல் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தருமி
·         இருபத்தைந்து நாட்கள் கழித்து ….

MONDAY, SEPTEMBER 28, 2015
நேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.
இளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை. ஹதிஸ்கள் தான் இழிக்கின்றன. )
1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.
2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைப் பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.
இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.
****
விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது. இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.
***
இவர்களோடு பேசிய சில மணித்துளிகளில் இன்னொரு அழைப்பு. கொஞ்சம் வித்தியாசம். பேசியவரின் போன் எண் கிடையாது. personal number.
அந்த  போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்
அடுத்து ஓரிரு நாட்களில் வெளிநாட்டிலிருந்து இன்னொரு கடுமையான போன். அதன் பின்
புதிய எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
***
11.10.15. ஞாயிற்றுக் கிழமை. புதுக்கோட்டை பதிவர் விழாவிற்குப் பிறகு …
விழா முடியும் தறுவாயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றோம். இப்போது எதிர் வெயில் சுட்டெரித்தது. தெருமுக்கிற்கு வரும்போதே வேர்த்துக் குளித்து விட்டேன். சரவணனே ஏனிப்படி வேர்த்து விட்டது என்றார். ஒரு லொட .. லொட பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஊர்ந்து போனதாகத்தெரிந்தது. ஆனாலும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.
அடுத்த நாள். தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகள் வந்தால் எடுப்பதில்லை என்று வைத்திருந்தேன். இருந்தும் காலையில் ஒரு அழைப்பு. தயங்கியபடி எடுத்தேன்
கடுமையான அழைப்பு”!
இது போன்ற அழைப்புகள் வருவது பெரும் நெருடலாக இருக்க ஆரம்பித்திருந்தன.
அந்த அழைப்போடு அழுத்தத்தோடு பேசி முடித்ததும் எழுந்தேன். இடது கையில் ஒரு வலி. தலையில் சிறிது அசமந்தம். ஏதோ தவறு என்பது போல் நினைப்பு. ஒரு மணி நேரம் வேறு வேலைகளில் ஈடுபட்டேன். பயனில்லை. பக்கத்து வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். வழக்கமாக ரத்த அழுத்தம் சிறிதே மேலே இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்பார். இந்த முறை அழுத்தம் பார்த்த்தும் … down to earth!! ரொம்ப கீழே போயிருந்தது. மருத்துவ மனைக்குச் செல்லுங்கள் என்றார்.
ஒரு மணி நேரத்தில் மருத்துவகத்தில் சேர்ந்தேன்.
வழக்கமாக – 20 ஆண்டுகளாக – பார்க்கும் மூத்த மருத்துவர் வந்தார். என்ன ஆச்சு என்றார். வழக்கமான ஆண்டுக்கொருதடவை அவரைப் பார்த்து இரண்டு மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நடப்பைச் சொன்னேன். முழு விவரமும் கேட்டார். எல்லாம் சொன்னேன். ஒரு நாள் observation என்றார். ஆனால் 4 நாட்களாகி விட்டன. நேற்றுமாலை வீடு வந்து சேர்ந்தேன்.
புறப்படும் முன் மருத்துவர் கொஞ்சம் easyஆகச் செல்லுங்கள் என்றார். நான் எழுதுவது, அரை குறையான போட்டோ ஆர்வம், வீட்டம்மாவின் எதிர்ப்போடும் அவரது ஆதரவோடும் விளையாடும் shuttle cock எல்லாம் அவருக்குத் தெரியும்.
சில வாரம் விளையாட்டு வேண்டாம்.
குறைவாக நடக்க ஆரம்பியுங்கள்.
ப்ளாக் குறையுங்கள்.
கம்ப்யூட்டரில் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
வாசியுங்கள்.
நன்கு ரெஸ்ட் எடுங்கள் ….. என்று சொன்னார்.
அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா….??!!
****
http://dharumi.blogspot.in/2015/09/blog-post_28.html இப்பதிவை போட்டதும் சில கடுமையான விவாதங்கள் ஆரம்பித்தன.
ஒன்றரை ஆண்டுகளாக எழுதாதிருந்த சார்வாகன் விவாதங்களில் வழக்கம் போல் அழகாகக் கலந்து கொண்டார். மிகுந்த நன்றி அவருக்கு. நல்ல பதில்களைப் பொறுமையாகக் கொடுத்தார்.
முன்பு வெளிநாட்டிலிருந்து பேசிய விவாதங்களைத் தொடர்ந்தார்.  நடுவில் மீரான் - //. இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.// எழுதியிருந்தார்.
நானும் பதிலுக்கு - //தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் காபீர் நண்பர் யாராகிலும் இருந்தால் - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.// என்றேன்.
அதற்குப் பதிலில்லை.
விவாதங்கள் மேலும் தொடர்ந்தன. இறுதியில் - நான் வருகின்ற மே மாதம் என்னுடைய விடுமுறையில் இந்தியா வரும்போது நேரடியாக விவாதிப்போம், நீங்களும் உங்களுடைய சகாக்களும் தயாராக இருங்கள்.
இதற்கு மேலும், //நீங்கள் அணிப்பியுள்ள விடயங்களை மீண்டும் ஒரு முறை நீங்களே வாசித்துப் பாருங்கள் எவ்வளவு கொழப்பம் இருக்கின்றது என்பது புரியும். அதனால் இதை பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக விவாதிப்போம்.
மதுரையிலேயே விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்.
விவாதிக்க தயார் என்றால் தெரிவிக்கவும்.// என்று 170வது பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார்.


நேரடி விவாதம் என்றால் அது ஒரு முற்றுப் புள்ளி என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.


புத்தகம் எழுதினால் பொறுப்பில்லாமல் யாரும் எழுத மாட்டார்கள். நானும் அப்படியே. இனியும் பதில் வேண்டுமென்றால் புத்தகமாக வரட்டும்; பதில் சொல்லலாம்.




Wednesday, January 20, 2016

885. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு




*
சந்திரசேகர்  jk

*





அறிவு ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வருகின்ற கருத்துகள் சமானியர்களுக்கு புரியாத வகையில் சிலர் புத்தகங்களை எழுதுவர். அதை ஒரு சிலர் ஆஹா...ஓஹோ...என்றும், இன்னும் சிலர் அந்த அளவிற்கு இல்லை என்று தங்கள் மேதாவிதனத்தையும் காட்டிக் கொள்வர்.

புத்தகம் எழுதுவதே தங்களின் ஆத்ம திருப்திக் கென்று கூறுவோர் உண்டு.அப்படியாயின் அதை அவரின் நாட்குறிப்பிலேயே எழுதலாமே.

இன்னும் சிலர் அவர்கள் படித்ததை அப்படியே புத்தகமாக வாந்தி எடுத்திருப்பார்கள்.அவருக்கும் நமக்கும் புரியவே புரியாது.

ஒரு கருத்து யாருக்கு சென்று சேர வேண்டுமோ,அதை அவர்களுக்கு புரியும் வகையில் அவர்கள் மொழியில் எழுதுவதுதான் நோக்கமாய் இருக்க வேண்டும்.அப்படித்தான் வாசகனின் தரத்தை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்த முடியம்.

பெருவாரியான சாதரணமான மக்களுக்கு, கருத்துக்கள் எளிமையாக சென்று சேரவேண்டும். அத்தகு கலையை நான் தருமி அவர்களிடம் கண்டேன். அதற்காக அவர் உழைத்த உழைப்பும் ஆர்வமும் புத்தகத்தின் வரிகளாய் படிந்துள்ளது.

அவர் பேராசியராய் பணியாற்றிய அனுபவம் கருத்துக்களை எளிமையாகவும் வலிமையாகவும் முன் வைக்கின்றன. இன்றைய உலக அரசியல் சூழலில் மதவாதம் எப்படி அதிகாரத்தை பிடிக்க துடிக்கிறது என்பதை அறியாமல்,மதவெறி துண்டுதலுக்கு இரையாகும் இளைஞசர்களை எச்சரிக்கும் ஒரு எளிய நூலாக விளங்குகிறது.

இத்தகு புத்தகங்கள் தமிழில் வெகு அரிதாகவே காணமுடிகிறது.  'மதங்களும் சில விவாதங்களும்' என்பது நூலின் தலைப்பு. ஆனால் உள்ளே பல விவாதங்கள் சுவாரசியமாக எழுகின்றன.
தருமி அவர்கள் கிறுஸ்துவ மதத்தில் பிறந்தவர்.முதலில் அவர் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிப்பதே கிறுஸ்துவ மதத்தைதான். அதில் நமக்கு அவரின் நேர்மை பிடித்திருக்கிறது. தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடுவதில் விளைந்துதான் இந்த புத்தகம்.

மனிதன் பிறந்த உடனே அவனுக்கு மதம் எனும் கண்ணாடி பொருத்தப்பட்டு விடுகிறது. அவனும் வாழ்க்கை முழுதும் அந்த பார்வையிலேயே கேள்வி கேட்காமல் பயணப் படுகிறான் என்ற உண்மையுடன் துவங்குகிறது.

யூதர்களின் செமிடிக்,கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஒரே இனக்குழுவில் தோன்றியும்,ஜெருசலேமை பொது புண்ணிய பூமியாக ஏற்றுக் கொண்டும், இவர்களுக்குள் 'கடவுளுக்கே' அடுக்காத எத்தனை போர்கள் எத்தனை அராகஜகங்கள்.
கருணையே வடிவான கடவுள் 'சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காமல்' வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ஆரம்ப கால நாகரீகத்தில் அப்படி நடந்தது என்று மறக்க முடியாது, இன்றும் கூட
மாற்று மதத்தவனின் தலையை 'இறைவனின் புகழை' கூவிக் கொண்டு தலையை கொய்து தொலைக் காட்சிகளில் ஒளிபரப்புவது என்ன மதக்கலாச்சாரம்?

முகமது நபி அவர்கள் எந்த விதத்தில் ஒரு சாராசரி மனிதனை விட மேம்பட்டவராகிறார் என்ற கேள்வி எழும் போது, ஏனோ எனக்கு தேவர்களின் தலைவனாயிருந்து பின் காலாவதியான (All Gods have expiry date -Kamalhasan) கேவலமான இந்திரனின் நினைவு வந்தது.

அனைத்து மதங்களும் தங்கள் மதம்தான் சிறந்தது என்று சொல்லி மற்ற, மதங்களை எள்ளி நகையாடுவது ஏன்?

என் அம்மா நல்லவள் என்று சொல்வதில் எந்த தவறுமில்லை.ஆனால் என் அம்மா மட்டுந்தான் நல்லவள் என்று சொல்வதுஎப்படி சரியாய் இருக்கும் என வினவுகிறார் தருமி.உண்மைதானே.

எல்லாம் வல்ல ஈசனுக்கு 'டொய்ங்' என்று உலகத்தை ஒரு நொடியில் படைக்காமல் ஆறு நாட்களாய் படைத்து விட்டு ஒருநாள் ஓய்வெடுத்தக் கொள்கிறாராம்.அது எந்த நாள் என்பதிலும் குழப்பம்.

எந்த சமயமும் ஏன் உலகம் தழுவிய சமயமாக இல்லை என கேள்வி எழுப்புகிறார். மதங்களில் காணப்படும் புவி அறிவே இதெல்லாம் லோகல் பிரச்சனைகள் என தெளிவுறுத்துவதாக சொல்கிறார்.

ஒரு இந்து மதத்துகாரனின் கனவில் ஏன் அல்லா வருவதில்லை.ஒரு முகமதியன் கனவில் ஏன் சிவன் வருவதிலை என கேட்பதில் உள்ள உண்மை நமக்கு புரிகிறது.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றது பழைய ஏற்பாடு(செமிடிக்).ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றது புதிய ஏற்பாடு(கிறுஸ்துவம்).மீண்டும் பழிக்கு பழி என்று செய்துக் கொண்டிருப்பது இஸ்லாம். வெச்சா குடுமி இல்லன்னா மொட்டைதான்.ஆனால் அராஜகத்தில் எவரும் சளைத்தவராக தோன்றவில்லை.

கடவளின் தேவை என்ன? மதத்தின் சேவை என்ன? மனிதன் ஏன் அதில் வயப்பட்டுளான்.

நிலையில்லா மனிதவாழ்வில் நிறைந்த அச்சம், உத்தரவாதமற்ற வாழ்க்கை,அதனால் எழும் சோகங்கள், இவற்றிற்கான ஆறுதலாகவும்,துன்பத்தை போக்கவல்ல நமபிக்கையாகவும்,தன்னுள் எழுந்த உணர்வை கடவளாக கற்பித்துக் கொண்டான்.

பிரான்சு நாட்டில் CERN ஆராய்ச்சி நடக்கும் போது,இந்தியாவில் சில பக்த கோடிகள் 'லோகம் அழிய போறது' என்று கோவில்களில் தஞ்சம் அடைந்தார்களாம்.
அப்போது நவீன அழிக்கும் கடவுளான அப்துல்கலாம் 'அழியாது' என்றதும் பெருமூச்சு விட்டனராம்.

உலகம் அழியும் நாளன்று கடவுள் நிச்சயம் வருவரேன்று அனைத்து மதங்களும் கோரஸாக சொல்கின்றன.சில தேதிகளை குறிப்பிட்டு மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன.

எதையும் காதில் வாங்காமல் புவி அதன் பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
மனித மூளையில் உள்ள 'டெம்பரல் லோப்' பகுதிக்கும் நினைவுகளை ஆளுகின்ற மூளை பகுதிக்கும் உள்ள இணைப்பை பலமாக்கினால் 'மத உணர்வுகள் பொங்குகின்றன' என்று சோதனை மூலம் விடை கண்ட கலிபோர்னியா பல்கலைகழகத்தை சார்ந்த நரம்பியல் விஞ்ஞானி,விலயனூர் ராமச்சந்திரன்(நம்மவர்தான்).

இது குறித்து இறை நரம்பியல் (Neuro theology)என்ற தனித்துறையே உருவாகியுள்ளார்களாம். அந்த சோதனைகளையும் முடிவுகளையும் சுவாரசியமாக
பதித்துள்ளார்.


பெண்களின் உடை குறித்த விவாதம் தற்போது நடக்கின்றது.பெண்களின் உடை விருபத்திற்கெதிராய் மட்டும் இந்து முஸ்லீம் ஒத்த குரலில் முழங்குகின்றன.

'ஹிஜாப்' முஸ்லீம் பெண்ணின் முகம் மற்றும் கைகளை மறைக்கும் தளர்வான ஆடை வந்ததற்கான காரணம் வெளியில் சொல்ல முடியாதவை. தமிழ்நாட்டில் புர்கா போடும் பெண் திருமண சந்தையில் விலை போகாமல்,எங்கே அவமான பட்டு விடுமோ... என்று அச்சப்படும் பெற்றோர்களின் கவலையை, தருமி உணர்வது அவரின் சமூக பொறுப்பை காட்டுகிறது.பெண்கள் உடை குறித்து கிறுத்துவ மதம் அவ்வளவாக கவலை கொள்ளலாது நல்ல விஷயமே.

ஏமன் நாட்டில் சானா என்ற மசூதியில் கணடெடுக்கப் பட்ட புராதாண 'குரான் ' குறித்து தகவல் ஏன் வெளிப்படையாக விவாதிக்க படவில்லை என நியாயமான கேள்வி கேட்கிறார் தருமி. அப்படி வெளிவந்தால் 'டாவின் சி கோட்' போல் இன்னொரு கதை உருவாகலாம்.

இயேசுவே தன்னை யூத ஆடுகளை மேய்க்க வந்த மேய்ப்பாளரா கூறிக் கொள்கிறார்.பின் எப்படி உலக ஆடுகளின் மேய்ப்பாளரா மாறினார். Ron wyatt என்பவர் யேசுவின் புண்ணிய தலங்களில் ஆராய்சி செய்து யேசுவின் ரத்தத்தை கண்டு பிடித்து சோதனை செய்தாராம்.
என்ன ஆச்சரியம் அதில் ஆண்களுக்குரிய 'Y' குரோமோசம் மட்டுமே இருந்ததாம்.
அடேங்கப்பா...என்ன ஒரு கண்டுபிடிப்பு.

நம்ம ஊர்லே ராமர் பிறந்த இடமும்,அவர் கட்டிய பாலமும் ண்டுபிடிச்சாச்சு.அவருடைய வில்லும் அம்பும் BJP கையிலே இருக்கு.

அன்னை தெரிசா பாவமன்னிப்பு கோரும் கடிதத்தில் நாத்தீக சிந்தனையும் மனிதநேயமும் வெளிப்படுவதை விவரிக்கிறார்.

புது மதங்களும் மதக்கிளைகளும் தோன்றும் காரணத்தை விவரித்திருக்கிறார்.
அடடே...அவ்வளவுதானா நாளைக்கே நாம் ஒரு புது மதத்தை உருவாக்கலாம்.சில்லறை தட்டுபாடின்றி சுகமாக வாழலாம்.

இந்து மதத்தை இரு கூறுகளாகப் பார்க்கும் அவரின் பார்வை யாதார்த்தத்தை காட்டுகிறது. ஒரு கூறு சிறுபான்மை பிராமணர்களை கொண்டதாகவும் அடுத்த கூறு பெருன்பான்மை கொண்டதாக இருப்பினும் அதன் தலை மீது ஏறி மதம் என்னும் போர்வையில் சிறுபான்மை ஆளுவதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்து என்ற பெயர் எப்படி வந்தது.அரசு குறிப்பில் எப்போது பதியப் பெற்றது.சிறு மதங்களாய் நிரவி இருந்த மதங்களை இந்து மதம் என்று ஒரே மூட்டையாக கட்டியது யார்? போன்ற சுவாரசிமான செய்திகளை அள்ளி தருகிறார்.

பல கடவுள்களை தொலைத்தும் சில கடவுள்களை சுவீகரித்தும் திட்ட மிட்டு வளர்ந்தது இந்து மதம். புத்தரையே தசவதாரத்திற்குள் கொண்டு வந்தவர்களாயிற்றே.

சாமி சிலை திருட்டை கேள்வி பட்ட நமக்கு சாமி திருடர்களை பற்றி கேள்வி படாதது நம் அறியாமையே.

சமூக தளத்திலும் அன்றாட நடைமுறையிலும் காணத பாலியல் கதைகள் வேதத்திலும் புராண கதைகளிலும் விரவி இருக்கினறன.

இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்ரியர் செயலற்று போனதும்,சூத்திர சாதியினர் புதிய சத்ரியர்களாய் உருவாகி வருகிறார்கள். பதிய சத்ரியர்களின் நோக்கம் மனித உறவுகளை தலித் ஜனநாயகமாக்குவதோ அல்ல. மாறாக பார்பனீய மயமாக்கவே முயல்கிறாரகள் என்பதை துகிலுரித்து காட்டுகிறார். இந்த உண்மை மக்களுக்கு உறைக்க வேண்டுமே, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மனம் பதறுகிறது.

இந்து மதத்தில் சாதி கொடுமைகளால் எழும் எதிர்ப்புகள் மதப்புரட்சி என்ற பெயரில் சாந்தப்படுத்த அவ்வபோது சிலர் தோன்றியுள்ளனர்.சாதிக் கட்டுபாடுகள் மட்டுமே இந்து மதத்தை அழிவில் இருந்துகாப்பாற்றி உள்ளது என்று காந்தியடிகள் கூறியதை வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

இந்து மதத்தில் ஒழுக்க குறைபாடுள்ள மனிதர்களை கூட கடவுளுக்கு இணையாக போற்றுவதை அதிசயமாக பார்க்கிறார்.

எல்லா மதங்களும் வெவ்வேறு கடவுள்களையும் வெவ்வேறு தத்துவங்களையும் சொன்னாலும் சில முக்கிய பிரச்சனைகளில் மாறுபாடில்லாமல் ஒற்றுமையை ஒரே கருத்தை கொண்டிருப்பது உற்று நோக்கத் தக்கதாகும்




ஒன்று பெண் சுதந்திரம்.

எல்லா மதங்களும் பெண்ணை ஜீவனற்ற பொருளாக பார்க்கிறது.அவர்களுக்கென்று தனி உணர்வும் அறிவும் இருப்பதை மறுக்கிறது. இந்து மத வேத்திலேயே 'பெண் பிள்ளை பிறக்க விடாமல் எங்களை காத்தருள்வாய்' என வேத ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
பால்ய விவாகம், உடன்கட்டை,விதவை மறுமணம்(இவை தற்போது குறைந்துள்ளது என்றாலும் BJB ஆட்சி ஆயுளை பொறுத்தே உள்ளது)வழக்கத்தில் இருந்தன.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாய் இருப்பதில்லை என்று ஒழுக்கங்கெட்ட காமுகன் சங்கராச்சார்யா சொன்னது சமீபத்தில்தான்.

முஸ்லீம் மதத்தில் பெண் பிள்ளையை பெறுபவர்களை குரான் போற்றுகிறது.
ஆனால் ஒருவன் நான்கு மனைவியரை கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. திருமணத்திற்கு முன் பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டுமாம்.மௌனமாக இருந்தாலே சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளப் படுமாம்.

வாரே...வா...என்ன ஒரு சுதந்திரம்.

நபிகள் ஒன்பது வயது நிரம்பிய பெண்ணை மணம் புரிகிறார். நபியின் வழியில் தோழர்களும்.ஒரு வறுமைக்கிழவன் தன் இளம்மகளை ஒரு பணக்கார கிழவனுக்கு மணமுடித்து வைக்கிறான்.அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவன் ஒரு இளம் பெண்ணை மணக்கிறான்(ஆப்கானிஸ்தான்)

கிறுஸ்துவ மதத்தில் பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் ஆங்காங்கே கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஏழ்மை

எல்லா மதங்களும் ஏழை மீது அதித கருணை மட்டுமே கொண்டிருக்கின்றன.ஏழையின் மேம்பட எந்த வழியும் மதங்களில் காணப்படவில்லை.

அந்நிலைமை மாறிடாதிருக்க,சொர்க்கம்,தலைவிதி,ஆண்டவன் அறிந்தே ஒருவரின் நிலையை படைக்கிறான் அதை மாற்ற இயலாது என்கிறது.

ஏழைக்கு பிச்சையிடாதவன் நரகம் காண்பான் என்று சொன்னதை நம்பி இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பாமர்கள்.

இந்த இரண்டு காரணங்களுகாகவே மதங்களை கலைத்து விடலாம்.முடியமா....
மதம் தோன்றியதில் இருந்தே அரசியலை தன்னுடன் இருத்திக் கொண்டுள்ளது.சரியாக சொன்னால் அரசின் ஸ்திர தன்மை காக்கவே மதம் பிறந்தது.

முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவ ஆலயங்களில் அரசியல் போதிக்கப் படுகிறது.

இந்து மதத்தில் அப்படி ஒரு ஏற்பாட்டை கொண்டுவர இந்துத்துவா துடிக்கிறது.

முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் அந்த துடிப்பை வேகமாக்குவதில் சளைக்காமல் இயங்குகிறது.

சோசலீச சரிவுக்கு பின் மதங்கள் அரசை கைப்பற்றும் நோக்கம் வேகமடைந்துள்ளது.

இவை ஏகாதியபத்தின் வேலை என்று சொன்னால்,
நம்பாமல் உள்ளூர் பிரச்சனையாக பார்க்க வைக்கும் ஊடகங்கள்.

டார்வினின் பரிணாம கொள்கையும் கொபர்நிக்கஸின் சூரிய மைய வாதமும் பைபிளை கேள்விக்குள்ளாக்கியது.இந்த நெருக்கடியை களைய கடவுளின் ஆட்சி அல்லது யேசுவின் வருகை என்கிற அடிப்படையுடன் முதன்முதலாக அடிப்படைவாதம் என்னும் கருத்து உதயமாகிறது என்கிறார்.

அது இஸ்ஸலாமிலும் நிலைத்து தற்போது இந்து மதத்தில் நீடித்து வளர்கிறது.

சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகலளாவிய எதிரியாக இஸ்லாம் அடிப்படை வாதத்தை உருவாக்கியதாக கூறுகிறார். இந்தியாவின் ஆதரவும் அதற்கு இருந்தது வெட்ககேடு.

அமெரிக்காவின் பொருளாதார வளர்சிக்கு இரையாகும் முஸ்லீம் தீவிரவாதம்.

பெரும்பான்மை கிறுஸ்தவ அடிப்படைவாதிளின் ஆதவுடன் தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர்,யாருடைய நலன் காப்பார்?


மதமெனும் அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால்,ஒரு சமூக புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையில் இருந்து'கடவுளை' அகற்ற முடியும் என்கிறார் மாமேதை காரல் மார்க்ஸ்.

நிறைவான புத்தகத்தை படித்து நிறையவே தெரிந்து கொண்ட பெருமித்தால் 'தருமி'அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
















*