Monday, July 11, 2016

896. UEFA - EURO 2016 -- FINAL








*



 “The level of threats has never been so high as today in regard to the Islamic State and other jihadists,” says Jean-Charles Brisard, chairman of the Paris-based Center for the Analysis of Terrorism. “So the timing is a real challenge for everyone.” 


*


July 11, 2016 – இன்றைக்கு முழுசும் வெறும் தூக்கம் மட்டும் தான். நேற்று ராத்திரி மூணு மூணறை மணி வரை உட்கார்ந்து இந்த வயசில் ஈரோ இறுதிப் போட்டியை உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தா …. பகல்ல தூக்கமாத்தான் வந்துகிட்டு இருக்கும். நடுவில் தங்க்ஸிடமிருந்து சில பல இடிகள் …’இந்த வயசுக்கு இது தேவையா …?’

விளையாட்டிற்கு முன்பே தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்த செய்தி எனக்குப் பின்னால் தான் தெரிந்தது. இப்படி ஓப்பனாக மிரட்டல் வந்தும் ஸ்டேடியம் முழுவதும் ஆள் நிரம்பியிருந்தது ஆச்சரியம் தான். பாவம் போனால் போகுதுன்னு விட்டு விட்டார்களோ?

ப்ரான்ஸ் அரையிறுதியில் luck played a major role அப்டின்னு தோன்றியது. முதல் பத்து நிமிடத்திலேயே பந்து முழுவதும் ஜெர்மனி வசமே இருந்தது. போற போக்கில ப்ரான்ஸ் ரெண்டு மூணாவது வாங்கிவிடும்னு நினச்சேன். ஆனால் முடிவு மாறி விட்டது.

நடுவில் ஒரு சின்னக் கோடு … luck அந்தப் பக்கமும் நிக்கலாம் …அல்லது இந்தப் பக்கமும் நிக்கலாம் அப்டின்ற பெரிய பிலாசபி உண்மையாகப் போச்சு.

நேற்றும் முதல்  பத்து நிமிட்த்திலேயே ஆட்டம் சூடு பிடிச்சது. பந்து முழுவதும் ப்ரான்ஸ்  வீரர்களின் காலில் தான்.
 9வது நிமிடம்: Greizmann – அவர் தான் ப்ரான்ஸின் ஹீரோ. அடிச்ச பந்து இருமுறை போர்ச்சுகல்லின் கோலைத் தொட்டுவிட்டுச் சென்றன.
 அடுத்த ஓரிரு நிமிடத்திலேயே ரொனால்டோவை foul செய்ததில் free kick கிடச்சிது. அந்த foul அப்படி ஒன்றும் பெரிய முரட்டுத் தனமான foul கிடையாது என்றே தோன்றியது. சின்ன மோதல். கால்பந்தில் இது சாதாரணம் தான். ஆனால் அடி பட்டு விட்டது போலும்.  முதலுதவி கிடைத்ததும் அடுத்து ஒரு 10 நிமிடம் விளையாடி விட்டு பின் முழங்காலைப் பிடித்துக் கொண்டார். ஸ்டெச்சரில்  வெளியேறினார்.







நான் ரொனால்டோவாக இருந்தால் ஒரு வேளை நானில்லாமல் என் டீம் ஜெயிக்கக்கூடாதுன்னு நினைப்பேனான்னு ஒரு சுய ஆய்வும் மண்டைக்குள் அப்போது ஓடியது. .



மனசுக்குள் இவர் போய்ட்டா போர்ச்சுகல் அவுட்டு தானோன்னும் தோன்றியது. அதுவும் பந்து இருப்பது முழுவதும் ப்ரான்ஸில் கால்களில் தான். சூடாகவே ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.





 65வது நிமிடம் … Greizmann அடித்த பந்து … நான் கோல் என்றே நினைத்தேன். ஆனால் அது கோலல்ல.
 மணி சரியாக இரவு இரண்டு மணி. அடுத்த ஆறாவது நிமிட்த்தில் ஒரு கார்னர் ஷாட் – ப்ரான்ஸிற்கு. Greizmann அடித்தது. இதுவும் கோல் என்பது போல் தோன்றி .. இல்லாமல் ஆனது. So near ...yet so far!

சான்ஸ்கள் ப்ரான்ஸ் பக்கம் நிறைய. தொடர்ந்து வந்தன. ஆனால் கோல் ஏதும் விழவில்லை.

 73வது நிமிடம். என் மனசுக்குள் ஒரு பட்சி சொன்னது: போற போக்கைப் பார்த்தால் நிச்சயம் ப்ரான்ஸ் கோல் வாங்கப் போகிறது. 

 74 நிமிடம் .. அடுத்த சான்ஸ்.
79 நிமிடம் .. 83 நிமிடம் இன்னும் இரண்டிரு வாய்ப்புகள். கோல் ஏதுமில்லை. 90வது நிமிடம் .. விசிலுக்கு இரு நிமிடங்கள் முன்பு .. போர்ச்சுகல்லின் மரியோ அடித்த அடி கோல் போஸ்ட்டின் - horizontal bar – பட்டு தெறித்துப் போனது.

 முழு நேரவிளையாட்டு முடிந்த பின் அரை மணி நேர விளையாட்டு ஆரம்பித்தது. இப்போது தான் பந்து இரு முனைகளுக்கும் மாறி மாறிச் சென்றன. மேலும் சூடு.
 94 வது நிமிடம் – போர்ச்சுகல் கோல் விழுந்தது என்று நினைத்தேன். அது ஒரு off side ஆனது.
 103 வது நிமிடம் – கார்னர் ஷாட். போர்ச்சுகல் அடித்து ப்ரான்ஸ் கோல் விழுந்து விட்டது என்றே நினைத்தேன். விளாயாடிய வீரர்களில் மோசமாக விளையாடியது ப்ரான்ஸின் கோல் கீப்பர் என்று தான் எனக்குத் தோன்றியது. 

சைட் பெஞ்சில் ப்ரான்ஸ் கோச் இரு கைகளில் தலையைப் புதைத்து, தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்.

107 வது நிமிடம். போர்ச்சுகல்லிற்கு ஒரு foul க்காக ஒரு free kick கிடைத்த்து. பந்து சரியாக vertical bar பட்டுப் போனது.

அப்போது மனசுக்குள் வந்த வாக்கியம் – “அட .. போங்க பாஸ்”!

108 போர்ச்சுகல்லின் எடர் அடித்து … ப்ரான்ஸிற்கு கோல் விழுந்தது.





மனதிற்குள் தோன்றியது – அப்பாடா … ! ஏன்னா… ப்ரான்ஸ் தோற்க வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சொல்லப் போனால் மனசு ப்ரான்ஸிற்காகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் … டென்ஷன் தாங்க முடியவில்லை. இதய நோய்க்காரர்கள் பார்க்கத் தகுந்த ஆட்டமல்ல நேற்று நடந்தது. முதலில் ப்ரான்ஸ் ஜெயிக்கும் என்பது போல் இருந்தது. பின்பு இறுதியில் மாறி மாறி வந்தது. 120 நிமிடமும் ஏறத்தாழ ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனோடு தான் ஆட்டம் நடந்தது.

அதோடு பெனல்டி அடித்து வெற்றி தோல்வி என்று மதிப்பிடுவது வழக்கமாக எனக்கு நிறைய ஏமாற்றமாக இருக்கும். அந்த நிலைக்குச் செல்லாமல் ஆடியே வெற்றி தோல்வி என்றானது கொஞ்சம் திருப்தி தான். போர்ச்சுகல்லின் நானா விளையாட்டு எனக்குப் பிடிக்கும். ஆனால் நேற்று அவரது ஆட்டம் கவரவில்லை.



***

நண்பர் வேகநரி: போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள் (குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ.

ஒரே ஒரு இடத்தில் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆட்டத்தில் நடுவிலும், ப்ரேக் சமயங்களிலும் விளையாட்டு வீரர்களைத் தட்டிக் கொடுப்பதும், தொடர்ந்து அவர்களுக்கு பெப் கொடுப்பதும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது.

அதோடு விளையாட்டு முடிந்த பின் காலில் knee cap போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். நடுவில் சில steps சாதாரணமாகப் போட்டுக் கொண்டு, திடீரென்று நினைவுக்கு வந்தது போல் சிறிது நொண்டியது போல் எனக்குத் தோன்றியது.

ஆனால் அடிபட்டு விழுந்ததும் அவர் கண்களில் வந்த கண்ணீர் உண்மையாகத்தானிருக்க வேண்டும். டாப் ப்ளேயராக இருந்து கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனால் … நிச்சயம் பெரும் வருத்தம் தான்


விளையாட்டு முடிந்ததும் நானேஒரு சுய பரிசோதனை செய்து கொண்டேன். இவ்வளவு த்ரில்லான, டென்ஷனான விளையாட்டை இவ்வளவு நேறம் உட்கார்ந்து பார்ப்பது கொஞ்சம் அதிகம் தானோ …? அதுவும் நடுவில் ஓரிரு இடத்தில் சிறிது எமோஷனலாகி நான் போட்ட ‘சின்ன’ சத்தம் தூங்கிக் கொண்டிருந்த  தங்க்ஸ் காது வரை போய் காலையில் அதற்கும் கொஞ்சம் ‘தூபம்” காட்டப்பட்டேன்.








*

Thursday, July 07, 2016

895. DOWN .. DOWN … FACEBOOK



*

என்ன ஆச்சு எனக்கு?

ரொம்ப நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது. திடீர்னு எப்படி ப்ரேக் விழுந்திச்சு. ஏதோ வாரத்துக்கு ஒண்ணோபத்து நாளைக்கு ஒண்ணோன்னு ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ நாலஞ்சு பேர் பார்த்துட்டு, எப்பவாவது யாரோ ஒருத்தர் ஒரு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க  … நாளும்  கிழமையும் நல்லாதான் போய்க்கிட்டு இருந்திச்சு. இன்னைக்கா நேத்திக்காபதினோரு வருஷமா ஒரு மாதிரி இப்படி தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.

முதலில் கொஞ்சம் சுய புராணம். அடுத்து கொஞ்சம் மதுரை .. கொஞ்சம் சமூகம் அப்டின்னு போச்சு. அடுத்து மதங்களைப்பற்றி, இறைமறுப்பாளர்களின் புத்தகங்கள் என்று சூடாக் கொஞ்ச காலம் ஓடியது

புதியதாகத் தெரிந்த விஷயங்களை எழுதி முடித்ததும் இனி அடுத்தது எதை எழுதலாம்னு யோசிச்சிவேகம் குறைந்து போச்சு.

பெருமாள் முருகன் புத்தகம் வாசித்து எழுத குறிப்பெல்லாம் எடுத்து வைத்தேன். விட்டுப் போச்சு. அப்போ விழுந்த ப்ரேக் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்

தேர்தல் வந்தது. நிறைய எழுத நினைத்துஒன்றுமே எழுதாது விட்டு விட்டேன். தேர்தல் முடிந்த பின் ஒரே  சோகம்! அதையாவது எழுதலாமான்னு நினச்சேன். சோகத்தில் அப்படி இருந்தாச்சு.

நடுவில் வந்த விளையாட்டு பந்தயங்கள் – கால்பந்து & டென்னிஸ் – பற்றியெல்லாம் எழுத ஆசை தான். ஆனால் எழுதவேயில்லை.

நாடல் தோற்றது, வீனஸ் வில்லியம்ஸ் இன்னும் Steffi Graf recordயை முறியடிக்க முடியாமல் போகும் வருத்தம் பற்றியெல்லாம் எழுத ஆசை. எழுத நினைத்தேன். எழுதவேயில்லை.


அட… நேற்று இரவு இரண்டரை மணி வரை நடந்த அரையிறுதி ஈரோ கோப்பை கால்பந்து போட்டி – Portugal X Wales – பற்றி எழுதிடணும்னு நேற்று நினச்சேன். ஆனால் எழுதவில்லை. 

ஜிகாத் பத்தி தொடர்ந்து எழுதி வந்தேன் பல பாகங்களாக.  அது நிற்பது போல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.   அதுவும் விட்டுப் போச்சு

மதங்களைப் பற்றி புதிதாக எழுத இன்னும் எந்த சமய நூலும் புதியதாக வாசிக்கவில்லை

சென்ற சென்னைப் புத்தக விழாவில் ஏசு பற்றி இரு புத்தகங்கள் வாங்கினேன், வாசித்து ஏதாவது எழுத முடிந்தால் எழுதணும்னு ஆசையை மனசுக்குள்ள வச்சிருக்கேன். எப்போ வாசித்து முடித்து …. எப்ப எழுதப் போகிறேனோ தெரியவில்லை.


என்ன தான் ஆச்சுன்னு யோசிச்சிப் பார்த்தேன்.

என்ன ஆச்சு …? சின்னத் தடைகள். அதில் சில ப்ரேக்குகள். எனக்கு ஒருவியாதிஉண்டு – procrastination. ஒரு வேலை செய்ய நினைப்பேன். ஆனால் வழக்கமாக அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பேன். எப்போ அதை நிஜமாகச் செய்வேனோ .. எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்!!

இந்த லட்சணத்தில் எழுதாமல் விட்டதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டு விட்டது. அது ஒரு சைட் எபக்ட்!  

கணினியைத் திறந்தாமல் ஏதாவது எழுதலாமேவென தோன்றும் முன்பு. இப்போ இந்த சனியன் பிடித்த முகநூல்னு ஒண்ணு இருக்கேஅந்தப் பேய் ஆளை முழுசா இழுத்திருச்சு. கணினி திறந்தாச்சாமெயில் பார்த்தாச்சாஅடுத்து முகநூல் அப்டின்னு ஆகிப் போச்சு. ஒரு காலத்தில் கணினி திறந்ததும் அடுத்ததாகதமிழ்மணம்திறப்பது  வாடிக்கையாக இருந்ததுஇப்போ கணினி …மெயில்அடுத்து முகநூல். அடஅதப்பார்க்க ஆரம்பிச்சுநம்ம ப்ரேக் பிரச்சனை வந்ததும்  வெறுமனே முகநூலில் முங்கி முத்தெடுக்கஅட .. ஒரு பேச்சுக்கு சொன்னேன்முத்தெடுக்க முகநூலா வேணும்னு இப்ப நினச்சிப் பார்க்கிறேன். ஆக டைமெல்லாம் முகநூலிலேயே போயிருச்சி. நொண்டிக்கு ஒரு குச்சி கிடச்ச மாதிரி முகநூல் ஆகிப் போச்சு.

ஆனாலும் ஒரு சந்தேகம். நான் நொண்டியானதால் குச்சியே கதின்னு முகநூல் பக்கம் போய்ட்டேனாஇல்லகுச்சி கிடச்சதால நொண்டியாகி விட்டேனா?

தெரியலை.

இதைக் கண்டு பிடிக்க ஒண்ணு பண்ணப் போறேன். முகநூலுக்கு சில நிமிசம் மட்டும். அதன் பின் எப்போதும் திறப்பது போல் blogger.com போயிர்ரதுன்னும் முடிவு பண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சொல்லுங்க … blog எழுதி காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு இருக்கிறதில்ல உள்ள சுகம், சந்தோஷம்,  மகிழ்ச்சி முகநூலைப் பார்க்கிறதில கிடைக்கிறதில்லை. அதுனால் முகநூலை கொஞ்சம் ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு …. blogger.comக்குப் போயிர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

என்ன ஆகுதுன்னு பார்ப்போம் ….

பக்கத்து வீட்டு பாய் ரம்ஜானுக்குக் கொடுத்தனுப்பிய  பிரியாணி & தாள்ஸா சாப்பிட்ட ஜோர்ல சொல்றேன் – இன்னும் முன்பு மாதிரி எழுதுறேனான்னு பார்க்கணும்.

ஈத் முபாரக்.










*




Monday, June 13, 2016

894. அமினா - (சந்தேகமான பார்வையோடு) ஒரு ஆய்வு







*

Abu Khalid's Review on AMINA in his facebook


*

 'ஆமினா' என்ற 368 பக்க நாவலை இரண்டே தினங்களில் படித்து முடித்தேன்..

ஒரு நைஜீரிய முஸ்லிம் பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதையாக இது வரையப்பட்டிருக்கிறது.. நாவலாசிரியர்: முஹம்மது உமர். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் : தருமி.[?]

 இஸ்லாத்தின் அடிப்படைகளான சமத்துவத்தை.. நீதிபோதத்தை..அன்பு, கருணை..மனிதநேயத்தை.. சாந்தி..சமாதானத்தை.. எல்லாம் தூக்கி ஓரத்தில் போட்டுவிட்டு.. சாரற்ற சக்கையாக.. உயிரற்ற பிணமாக.. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கிரியைகளை மட்டும் சடங்கு போல செய்து வருகிற முஸ்லிம் சமூகம்.. அதனால் பாதிக்கப்படுகிற மக்கள்.. அதிலும் குறிப்பாக பெண்கள்.. என்று சமூக அவலங்களை இந்த நாவல் நம்முடைய பார்வைக்கு கொண்டு வருகிறது..

மேற்கத்திய ஆதிக்க சக்திகளால் நிர்மாணிக்கப்பட்ட பொம்மையாட்சி.. அதன் மூலம் நாட்டின் இயற்கைவளங்கள் சுரண்டப்படுவது.. அதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை ஏழைபாழைகளாக.. அரசு வரிகளை சுமப்பவர்களாக ஆக்கப்படுவது.. அதே சமயம் ஆதிக்க சக்திகளின் அடிவருடிகளான ஆளும் வர்க்கமோ, கார்பரேட் பண முதலைகளோ கொஞ்சமும் இறையச்சமோ, மனசாட்சியோ இல்லாமல்.. தவறாக சேர்க்கப்பட்ட பெரும் செல்வத்தில் கொழிப்பது.. இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் பெயராலேயே நியாயப்படுத்துவது..இவற்றையெல்லாம் இந்த நாவல்.. வன்மையாக கண்டிக்கிறது..

 ஆங்காங்கே இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளை எடுத்து வைத்தாலும்.. அவை முழுமையான முறையில் சொல்லவில்லை என்கிற குறை தவிர..[ இதனை தருமியே மெனக்கெட்டு செய்திருக்கலாம்.!] நாவல் நன்றாகவே பெயர்தாங்கி முஸ்லிம்களை வறுத்தெடுக்கிறது.. +




*




Tuesday, May 24, 2016

893. நீங்களே பறை அடித்துக் கொள்ளுங்கள் .......... அவர்கள் எதற்கு?






*




 ஞாயிறு மே 22, 2016 தமிழ் இந்துவின் நடுப்பக்கத்தில் அழகிய பெரியவன் எழுதிய “திணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்” என்ற சிறுகதைஇடம் பெற்றுள்ளது. தலித் மக்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமைத்தனமான, ஈனமான வேலைகளைச் செய்யக்கூடாதென ஒரு முடிவெடுத்து, கதையில் இறுதியில் ஊர்வலமாகச் சென்று பறையை தீக்குள் எரிந்து பொசுக்குகிறார்கள். இது ஒரு மனமொத்த முடிவுமல்ல; பலர் காலங்காலமாய்ச் செய்த வேலையை விடுவதற்குத் தயங்குகிறார்கள். இதே கருத்தை நானும் என் பதிவுகளில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுமிருக்கிறேன். (http://dharumi.blogspot.in/2005/06/16_03.html)


 பதிவுகளில் எழுதியவன் ஓரிரு இடங்களில் அந்த வேலையைச் செய்பவர்களிடமும் பேசியிருக்கிறேன். ‘எங்களுக்கு வேறு வேலை தெரியாது’ என்பது தொடர்ந்து கிடைத்த பதில். அதே போல் இக்கதையிலும் ஒருவன் திடீரென்று எழுந்து கேட்டான்.

 “மேளமடிக்கப்போலன்னா அப்புறம் பொளைக்கிறதெப்படி?”

 “செத்துப் போடா”.


 இந்தப் பதிலை நாம் எப்படி இவர்களிடம் சொல்லுவது. ஏதாவது ஒரு வேலை செய்யலாமே என்று சொல்லியிருக்கிறேன். இப்போது இந்தக் கதையை வாசிக்கும்போது 11 ஆண்டுகளுக்கு முந்தி இருந்த நிலை இன்றும் மாறவில்லையே என்ற எண்ணம் தான் தோன்றியது.

சமீபத்தில் ஒரு இழவு வீடு. பணக்கார இடம். 90 வயதுப் பாட்டி இறந்திருக்கிறாள். திருமணச் சாவு என்பார்களே அது மாதிரி. சோறும் கறியும் …. தொடர்ந்து சில நாட்களுக்கு.

உடம்பை எடுக்கும் போது பறையடிக்க வந்த ஆட்கள் பட்ட பாட்டைக் கண்ணால் கண்ட போதும் அதே வருத்தம் அன்றும் தொடர்ந்தது. அவர்களை மனித ஜென்மங்களாகவே யாரும் நடத்தவில்லை.

 தொடர்ந்து இப்படி இழிவு படுத்தப்பட்ட போதும் அவர்களால் எப்படி அவைகளைச் சகித்துக் கொள்ள முடிகிறது? ஏன் கோபம் வரவில்லை? தட்டியெழுப்ப ஒரு தலைவன் என்றாவது வருவாரா?


 சோகங்கள் ….. 





அழகியபெரியவனின் புதினம் வல்லிசையிலிருந்து ஒரு பகுதி:


“யாரோ ஒரு சிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படி ஓரவஞ்சனை கொண்ட கடவுளே நமக்குத் தேவையில்லை.”

 *

Sunday, May 22, 2016

892. THANK YOU, MY BOYS





*




 1985-88 ஆண்டு மாணவர்கள் இன்று (22.06.2016) கல்லூரியில் ஒன்று கூடுகிறார்கள்ஆசிரியர்களுக்கும் அழைப்பு உண்டுஆனால் என்னை அழைத்த போது கல்லூரிக்குள் நான் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறினேன். (தடைக்கான காரணம் -- இங்கே.....-  http://americancoll.blogspot.in/2014/01/de-addiction.html )



 


இருந்தும் நேரில் பார்க்க விரும்பினார்கள் இருவர் வீட்டு முகவரி கேட்டு இரு நாட்களுக்கு முன்பே வந்தனர்கையில் அழைப்பிதழோடு வந்தார்கள்நீங்கள் கல்லூரிக்கு வர முடியாவிட்டால்நாங்கள் உங்கள் வீட்டுக்கு அனைவரும் வந்து விடுகிறோம் என்றார்கள்அனைவருக்கும் எதற்கு அலைச்சல்வேண்டுமென்றால் நான் கல்லூரிக்கு வெளியில் வந்து விடுகிறேனே என்றேன். ‘அது மரியாதையில்லைநாங்களே வந்து விடுகிறோம்’ என்றார்கள்.








மாலை மூன்று மணிக்கு மேல் வருகிறோம் என்றார்கள்அதன்படி வந்தார்கள்சின்ன வீடு … அட்ஜஸ்ட் செய்து உட்கார வைத்தேன்சின்னப் பசங்களாகப் பார்த்ததுகால் நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே…. எல்லோரும் எங்கெங்கு என்னவாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்நான் அதிகமாக மாறவில்லை என்றார்கள் – தொப்பையைத் தவிர. (ஆக அப்போதேஅவர்கள் மாணவர்களாக இருந்த போதே நான் ஒரு ‘வங்கிழடாக’ இருந்திருப்பேன் போலும்!  அதனால் தான் நான் இன்னும் மாறாமல் இருக்கிறேன்! )





 ஒரு ”பையன்” .. அப்போது நான் 22 ஆண்டுகளாக வைத்திருந்த ஜாவா பைக் பற்றிக் கேட்டான்(ர்). இன்னொரு “பையன்” என் ஜோல்னா பைகயிற்றில் தொங்கும் மூக்குக் கண்ணாடி,ஜிப்பா என்று தொடர்ந்தான்(ர்). இன்னொரு ”பையனுக்கு” இன்னொரு  ஆசை
என்னை ஜீன்ஸில் அன்று பார்த்தது போல் இன்றும் பார்க்க வேண்டும் என்றான்(ர்). ’நான் கிராமத்திலிருந்து வந்தவன்உங்களை அப்போது ஜீன்ஸில் பார்த்தது புதிதாய் இருந்தது. அதுபோல் இப்போதும் பார்க்க வேண்டும் என்றான்(ர்). உடை மாற்றிக் கொண்டேன்ஒரு மாணவன், “எல்லா தேர்வுகளிலும் நான் பிட் அடிப்பேன்உங்கள் supervisionல் மட்டும் நான் பிட் அடிக்கவில்லை” என்று  சோகமாகச் சொன்னான்(ர்).










நான் இவர்களுக்கு முதலாண்டும்மூன்றாமாண்டும் வகுப்பு எடுத்திருக்கிறேன்என் வழக்கம் முதல் ஆண்டில் கொஞ்சம் ‘உதார்’ காண்பித்தும்மூன்றாமாண்டு  இறுதி செமஸ்டரில் அதிகத் தோழமையுடன் இருப்பது வழக்கம்ஆனால் முதலாண்டில் என் உதாரில் கொஞ்சம் பயந்து போய் ஒரு பட்டப் பெயர் வைத்தார்களாம்பெயரையும் சொன்னார்கள் – அதுவும் என் துணைவியாரிடம் சொன்னார்கள்.  அவர்கள் வைத்த பெயர் – சிங்கம். (ஓரளவு இந்தப் பெயரை வைத்து இரண்டு மூன்று நாளைக்கு வீட்டில் ‘உதார்’ காண்பித்துக் கொள்ளலாம்!)

ஒரு cameraman வேற வந்திருந்தார்என்னோடும்துணைவியாருடனும் படங்கள் எடுத்தோம்.  சில மணித்துளிகள் என்றாலும் அன்பால் நிறைந்திருந்த நேரம் அது.




அழகான கைக்கெடிகாரம் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்கைக்கெடிகாரத்தில் 85 ZOO என்று போட்டிருந்ததுகைத்தொலை பேசி வந்த பிறகு கைக்கெடிகாரம் அணிவது ஏறத்தாழ இல்லாமல் போயிற்றுஇருந்தாலும் இன்று காலை போட்டோ எடுக்கக் கையில் கட்டினேன்அதன் பின் இப்போது வரை கழட்ட மனமில்லைஅதோடு 85 ZOO என்று போட்டு விட்டார்களேஅதன் மதிப்பே மாறி விட்டதுஇப்போதே அந்தக் கைகெடிகாரத்திற்கு 31 ஆண்டு வயதாகி விட்டதே


The watch has got a great antique value now itself!


அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்குப் பெருமை சேர்த்தனஎன்னைத் தேடி என் வீட்டிற்கே அனைவரும் வந்தது மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்ததுபூரிப்படைய வைத்தது.


வாத்தியார்களுக்குத் தான் தெரியும் … பழைய மாணவர்கள் அவர்களைச் சந்திக்க வந்து, பழைய பக்கங்களைப் புரட்டும் போது ஏற்படும் பெருமிதம் எவ்வளவு என்பது!







*