Wednesday, May 17, 2023

1221. WALKING TIME IN A GREEN PARADISE



நேற்றைய நடையில் ஊரைப் பார்த்து வியந்தேன்; இன்று (14.5.23) ஊரின் வெளிப்பகுதியைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விழுந்தேன். சமீப காலத்தில் நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ அருள்பாலித்ததில் நிறைய கேரளப் படங்களைப் பார்த்து, ஏற்கெனவே இருந்த கேரளக் காதல் அதிகமாக வளர்ந்துள்ளது. இப்போதும் இந்த ஊர் கேரள எல்லையில் உள்ளது. இன்று நடந்த சாலையில் தொடர்ந்தால் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் கேரளம் வந்து விடுமாம். எல்லைப் பகுதி மக்கள் என்பதால் தமிழும் கேரளமும் எங்கும் நிரவிக்கிடக்கின்றன.

தெரியாத சாலை. நல்ல சிமிண்ட் போட்ட சாலை. பெரிய சாலையிலிருந்து கிளைத்துச் சென்ற நல்லதொரு சாலை. நடக்க ஆரம்பித்தேன். பச்சையழகில் அப்படியே குடை சாய்ந்து வீழ்ந்தே விட்டேன். வழுவழு சாலை. சாலையில் வலது பக்கத்தில் பெரும்பள்ளம். அது ஒரு கால்வாய். ஆனால் தண்ணீர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அந்தப் பள்ளத்திலிருந்து பல்வேறு மரங்கள்; செடிகள்.  திரும்பும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று இருந்தது. சிறிது தூரம் வரை இடது பக்கத்தில் பல மாமரங்கள். காய்கள் காய்த்துத் தொங்கின. அதன்பின் இடது பக்கம் ஆங்காங்கே சில கேரள வீடுகள்; சில பாவப்பட்ட மக்களின் குடிசைகள். வலது பக்கமோ நான் நடந்த தொலைவு வரை செடிகளும், மரங்களும். எல்லோரும் வாழைத் தோப்பு பார்த்திருப்போம். ஆனால், இங்கே கால்வாய் பள்ளத்திலிருந்து உயர்ந்து வளர்ந்த பல வாழை மரங்கள் கேட்பாரற்று காய்த்து, காய்ந்து, சாய்ந்து ஒரு வாழைக்காடாக இருந்தது.

எதிரில் வந்த சில மக்களும், குடிசை வாழ் மக்களும் என்னை ஓர் அபூர்வ பிராணி மாதிரி பார்த்தார்கள். நட்பாகப் பழகிய காவல் துறை ஆய்வாளரிடம் திரும்பி வரும்போது அவரது அவுட் போஸ்ட்டில் காலாற உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எல்லையோரம் என்பதால் அருகருகே அவுட்போஸ்ட்டுகள் இருக்கின்றன என்றார். அபூர்வ பார்வை பற்றிச் சொன்னேன். இந்தப் பக்கம் யாரும் உங்களைப் போல் முக்கால் கால்சட்டை போடுவதில்லை; அதனால் அப்படிப் பார்த்திருப்பார்கள் போலும்” என்றார். இன்னொன்றும் நான் கவனித்தேன்: என்னைப் போன்ற ஒரு வயயயசான ஆள் காதில் எதையோ மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பதையும் விநோதமாக ( வயது குறைவான இப்போதைய என் ரூம் மேட்டும் அப்படிதான் பார்த்தார்; கேட்டார்!) பார்ப்பது போல் தோன்றியது.

என்னமோ போடா, குமாரு!

நான் மயங்கிய இடங்களைக் காண்பிக்க இதோ ஓர் காணொளி:

காணொளி போட முயற்சித்தேன். இரு நாளாக முயற்சித்தும் முடியவில்லை - இங்கே இணையத்தின் நிலை இப்படி போலும். பின்னாளில் சேர்க்கிறேன். இப்போதைக்கு இப்பதிவு இவ்வளவே !!



Sunday, May 14, 2023

1220. இது ஆறாம் திணையோ ...?

                                     

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித்திணையில் வருமாமே? அப்படியென்றால் ஒரே ஊரில் நகரமும், கிராமியமும் இணைந்தால் அதன் பெயர் என்ன? ஏழ்மையும், வளமையும் அருகருகே அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? நாடும் காடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? ஆளே இல்லாத இடத்தில் பெரிய கடைகள் நடுநடுவே இருந்தால் அதன் பெயர்  என்ன? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாட்டுக்கு ஒரு மருத்துவப் பயணம். தமிழ் நாடு- கேரளம் இரண்டும் இணையும் இடத்தில் – இப்படி சொல்லணுமா அல்லது இரண்டும் பிரியும் இடத்தில் – ஒரு சிற்றூர். மாலை நேரம். சற்றே நடக்கலாமென்று நேற்று ஒரு சாலையில் சென்றேன். சின்ன குறுகலான சாலை; ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஆனால் எதிரும் புதிருமாக நிறைய வண்டிகள். அதனால் இன்று(13.5.23) சாலையை மாற்றி நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நெடும் பாதை. சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்த சாலை.


பல வியப்புகள் ...

·         சாலையில் இருமருங்கிலும் தொடர்ந்து வீடுகள் இருந்தன. இருந்தும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. இரு சக்கர வண்டிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. இப்போது தான் வாசித்த ஒரு செய்தி உண்மையெனத் தெரிந்தது. சில பெரிய வீடுகள் ஆளில்லாத வீடுகள் மாதிரி இருந்தன. இப்படிக் காலி வீடுகள் நிறைய கேரளாவில் இருப்பதாகவும் வெளிநாட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் எனவும் சமீபத்தில்  வாசித்திருந்தேன். வீடுகளைப் பார்த்த போது அச்செய்திதான் நினைவுக்கு வந்தது. இதில் ஆச்சரியப்பட வைத்த ஒன்றும் இருந்தது. பெரிய வீடுகள் .. அலங்கார வீடுகள். ஆனால் அடுத்த வீடு ஒரு ஓட்டைக் குடிசையாக இருந்தது. சாலைகள் மேடும் பள்ளமுமாக இருப்பது போல் மக்களும் ஏழ்மையும் வளமையும் மாறி மாறி இருந்தார்கள்.  இருண்ட ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஒரு வயதான் அம்மையார் என்னைக் கவர்ந்தார். படம் எடுக்க உத்தரவு வாங்கிப் படம் எடுத்தேன். மொழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டோம்.

                                                                  



                                                                              



                                                                                                         


·         சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு அதிசயம்; இரு மருங்கிலும் வீடுகள். அதிகமாக மரங்கள் சூழ்ந்த வீடுகள். மாமரங்கள் காய்த்துத் தொங்கின. பலாமரங்கள் கைக்கெட்டும் அளவில் காய்த்துத் தொங்கின. சிறு வயதில் எங்காவது கண்ணில் படும் மாமரங்களில் அல்லது புளியமரங்களில் கல்லெறிந்து விரட்டுப்பட்ட நினைவு வந்தது. இங்கே யாரும் கல்லை விட்டு கூட அல்ல, எட்டியும் மாங்காயைப் பறிக்க மாட்டார்கள் போலும். நான் படமெடுத்த போது காய் பிடுங்கும் ஆவலைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.




·         வீடுகள் நிறைய உள்ள தெரு என்றால் அங்கு வீடுகளை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் வீடுகளின் நடுவே ஒரு காடும் இருக்கிறதே என்று வியப்போடு பார்த்தேன். அடுக்கடுக்காக நீள் வரிசையில் ஒரு பெரும் காட்டையும் அந்தத் தெருவில் பார்த்தேன். அடுத்த ஆச்சரியமாக அது இருந்தது.                                                                                     

                                                          


    



·         மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. ஆட்கள் அதிகமில்லாத வீடுகள் இருந்தன. ஆனால் அந்தத் தெருவில் அங்கங்கே பல கடைகள். ஒரு ரெடிமேட்  கடை; இன்னொரு பெரிய பழக்கடை. கவரிங் கோல் கடையும் கூட ஒன்று; ஓர் இருசக்கர பணிமனை. யார் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


                                                                             

·         இவ்வூரின் ஊராட்சி அலுவலகமும், நூலகமும் அதே தெருவில் பார்த்தேன். இது அவ்வூரின் முக்கிய தெருவாக இருக்குமோ?
















Sunday, May 07, 2023

1219. walk time #DHARUMIsPAGE

Saturday, April 15, 2023

1218. #விடுதலை #DHARUMIsPAGE

Tuesday, March 14, 2023

1217. சூத்திரர்களின் கண்களுக்கு மட்டும் .... 1




“சூத்திரன்” என்றதொரு நூலை மொழிபெயர்த்து முடிக்கும் நிலைக்கு வந்துள்ளேன். வெளிவந்த பின் உங்களுக்குச் சொல்கிறேன். அனைத்து சூத்திரர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். மொழிபெயர்க்கும் போதே எனக்கு ...

சரி விடுங்கள். 

இந்த நூலை வாசித்த பிறகு எனக்கு ஒரு புதிய theory பிறந்தது. நான்கு சாதிகள் .. வர்ணாஸ்ரமம் ... சனாதனம் ... சாதிகளின் கிடுக்கிப் பிடி ... என்று பலவை பேசப்படுகின்றன.  நான்கு சாதிகள் பிரம்மாவின் உடலில் இருந்து தோன்றியவை என்று சொல்லப்படுகிறது. இது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் ... என்று நான்கு வர்ணமாக மனிதர்கள் படைக்கப்பட்டார்கள். புருஷ சூக்தம் (purusasukta) முதலில் சொல்லப்பட்ட நான்கு பிரிவினரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள்பிரஜாபதி என்ற பெருங்கடவுளிடமிருந்து உதித்தவர்கள் என்று கூறுகிறது

எனக்கு இதில் தோன்றிய புதிய விஷயம் என்னவெனில், பிரம்மாவிடமிருந்து இரண்டே இரண்டு சாதிகள் பிறந்தன; தலையிலிருந்து பிராமணன்; காலிலிருந்து சூத்திரன்.  இதில் பிராமணனாகப் பிறந்தவன் எப்போதும் ஒரு பிராமணனே. ஆனால் சூத்திரனாகப் பிறந்தவன் கடைசி வரை சூத்திரனாக இருக்க வேண்டும் என்ற “விதி” இல்லை. நாலு காசு பார்த்தால் அவன் வைசியனாகி விட முடியும். கையில் கத்தியை எடுத்தால் சத்திரியனாகி விட முடியும்.

இந்த வழியில் பல சூத்திரர்கள் கத்தியெடுத்து மன்னரானார்கள். ஆனால் இந்த ‘ex-சத்திரியர்கள் மன்னர்களாக முடிசூட்டக் கொள்ள அவர்கள் பிராமணர்களுக்கு  தட்சணை கொடுத்தால் அவர்கள் பல இட்டுக்கட்டப்பட்ட புராணக் கதைகள் மூலம் புனிதமாக்கப் படுவார்கள். புனிதமாக்கப்பட்ட பின் அவர்கள் மன்னவர்களாகவும், சத்திரியர்களாகவும் ஆகி விடுவார்கள்.. What a magic!

கடைசிப் பத்தியில் சொன்னவை சூத்திரன் புத்தகத்தில் மட்டுமல்ல; அதற்கு முன் நான் மொழிபெயர்ப்பு செய்து முடித்துள்ள ரொமிளா தாப்பரின் வரலாற்று நூலில் சான்றுகளோடு கொடுத்துள்ளார்.  பின்பு வரலாற்றின் நெடுகிலும் சூத்திரர்கள் சில புனைவுக்கதைகளோடு பெரும் வீர தீர சத்திரியர்களாக மாறிவிட்டனர் என்ற விவரங்களைத் தருகிறார். இதற்கான யாகத்தின் பெயர்: ஹிரண்யகர்பா’.  இவை எல்லாம் பிராமணர்கள் அருளிச் செய்த மாயம் தான்.

காஞ்சா அய்லய்யா இந்தப் புதிய சத்திரியர்களை – neo-shatriya –  என்று அழைக்கிறார். இன்றும் நமது சமூகங்களில் பல சூத்திரர்கள் புதிய சத்திரியர்களாக உருமாறி தங்களுக்கான புனைக்கதைகளின் ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு அழகான’, மிக விநோதமான சாதிய சமூகக் கட்டமைப்பு  வைத்திருக்கிறோம்.

என்னே நமது பெருமை!