Monday, May 02, 2005

10 EARTH-ன் தொடர்ச்சி இல்லை இது...

ஆண்டான் - அடிமை என்ற உறவால் வந்ததா, இல்லை வேறு காரணமா என்று தெரியாது - முதலிலிருந்தே இந்த ஆங்கிலேயர்கள் என்றாலே எனக்கு ஆகி வருவதில்லை. அவர்களை நினைத்தாலே எனக்குக் கோபம் வருவதுண்டு. இத்தனூண்டு நாடு; உலகமெல்லாம் காலனி ஆதிக்கம், சூரியன் மறையாத பேரரசு என்ற திமிர்; செல்லும் இடமெல்லாம் தங்கள் பிரித்தாளும் கொள்கையால் இன்று நாமும் பாகிஸ்தானும் மட்டுமல்ல அவர்கள் கால் பதித்த இடமெல்லாம் பல உலக நாடுகளுக்குள் பகை. ஸ்ரீலங்கா, gulf நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், அயர்லாந்து...பட்டியல் நீளுமென்று நினைக்கின்றேன். சுரண்டியே பிழைப்பை ஓட்டி வந்தவர்கள். சுரண்டியது ஏராளம்; கொடுத்தது ஆங்கிலமும், கிரிக்கெட்டும், அங்கங்கு ஒரு கலப்பினமும்....


அவர்களின் ஆட்சிக்கு கீழ் கஷ்டப்பட்டவர்களை எல்லாம் அதோடு விட்டுவிடாமல் இன்னும் common wealth என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தன் பழைய 'அடிமை'களை இன்னும் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். இந்த அமைப்பால் யாருக்கு என்ன லாபமோ, அவர்களுக்குநிச்சயமாக இறுமாப்பும் அதனால் ஏற்படும் திமிரும் கட்டாயமாக இருக்கும்.


இப்படிப்பட்ட நிலையில் எதற்காக இந்தியாவும், மற்ற நாடுகளும் அந்த அமைப்பில் இன்னும் இருக்க வேண்டும்? இது நமக்கு இழிவு இல்லையா? நான் ஒரு காலத்தில் உன் அடிமை என்ற நினைப்பைத் தந்து கொண்டேயிருக்கும் ஒரு அமைப்பல்லவா இது.


ஆனால் இன்னும் அது நீடிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்; ஆனால் எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்களேன்.


ஏங்க சொல்லுவீங்களா...?

8 comments:

  1. மிக,மிக ஆரோக்கியமாகச் சிந்திப்பவர்களுக்கு எவரும் பின்னூட்டமிட மாட்டார்கள்.சமூகத்தில் அடிமைகளையுருவாக்கிய ஆங்கியக் கல்வியே இதற்கெல்லாம் காரணம்.நீங்கள் தாராளமாக எழுதுங்கள் எங்கள் உள்ளத்தை நான் புரிந்துள்ளேன்.ஆங்கிலேயர்கள் பல நாடுகளைப் பிடித்துப் பூர்வீகக் குடிகளை அழித்துவிட்டு தமது பரம்பரையை உருவாக்கிவிட்ட கொடுமைதாம் அனைத்திலும் கொடுமை.உதாரணம்:அவுஸ்திரேலியா!இப்போது நமது மக்களோ 18 நூற்றாண்டுக் கல்வியோடு ஆங்கிலமே தஞ்சமெனக் கிடக்கின்றபோது அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராது.உங்கள் எழுத்து நன்றாகச் சிந்திக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்.உங்களைத் தமிழ் மணத்தில் நட்ஷத்திரமாக்கணும் முடியுமா?
    சிறிரங்கன்

    ReplyDelete
  2. போங்க...ரொம்ப வெக்கமா இருக்குங்க

    ReplyDelete
  3. நல்ல ஒரு அலசல், இருந்தாலும் என்னை பொறுத்தவரை ஆங்கிலேயர்கள் இந்தியாவில்(மட்டுமா?) எத்தனையோ தவறுகள்,அட்டூழியங்கள் கொள்ளைகள் அடித்திருந்தாலும் அடித்தட்டு மக்களின் சில வாழ்க்கை முறை மாற்றத்துக்கு காரணம் அவர்களின் ஆட்சி என்பது மறுக்கமுடியாது, அது மட்டுமின்றி சில பழமைவாத பழக்கங்களை ஒழித்ததும் அவர்கள் தான் அதில் முக்கியமானது சதி, தீண்டாமையை ஒரு தவறாகவே கருதாமல் இருந்த சமுதாயத்தை சிந்திக்கவைத்ததும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் இதற்கெல்லாம் மேலாக இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியதே ஆங்கிலேயர்கள் தான், ஆங்கிலேயர்களுக்கு முன் வரலாற்றில் இந்தியா என்றொரு தேசமில்லை, அது பல தேசங்களாகத்தான் இருந்தது, ஆங்கிலேயர்களால் தான் இன்று உலகில் இந்தியா என்ற பெயரோடு ஒரு தேசம் உள்ளது.

    ReplyDelete
  4. அட எனக்கும் கூட இங்கிலாந்துக்குப் போயி அந்த மண்ண நாலு மிதி மிதிக்கணும்கிற ஆசை இருக்கு. மத்தபடி இப்ப பிரிட்டனே., அமெரிக்காவுக்கு அடிமை மாதிரிதான்., தன் பொருளாதாரத்தை தக்க வைக்க., புஷ் 'வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொன்னாலும்., ஆமாம் சாமி போடவேண்டிய நிலை. நீங்க ஒட்டு மொத்த வெள்ளக்காரங்கள சொன்னிங்கன்னா., போனதெல்லாம் போகட்டும்., இந்தியாவும், சீனாவும்தான் அதுக்கெல்லாம் அமைதியா அடி கொடுக்கணும்.

    குழலி என்ன விளாட்டு இது?., ரயிலு., மெயிலு ரெண்டுத்தான் அவிங்களால வந்தது., அதுவும் அவனுங்க வசதிக்கு வச்சது. சாதி போச்சா?., மதப் பிரச்சனைய தூண்டிவிட்டு., உள்நாட்டு பிரச்சனைய பெரிசாக்கி அல்லவா பொழுத ஓட்டினாங்க?. இப்பிடி ஒரு கூட்டம் சொல்லிட்டுதான் இருக்கு.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. அய்யய்யோ யாரும் தேசத்துரோகி பட்டம் கொடுத்துவிடாதீர்கள்...

    //குழலி என்ன விளாட்டு இது?., ரயிலு., மெயிலு ரெண்டுத்தான் அவிங்களால வந்தது., அதுவும் அவனுங்க வசதிக்கு வச்சது.//

    ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்திலா வருவார்கள்? அவர்களது தேவைக்காகவென்றாலும் நாமும்தானே அனுபவித்தோம்.

    //சாதி போச்சா?.,//

    இன்னும் சாதிப்போகவில்லை, ஆனால் தீண்டாமை என்பது அவர்கள் வரும்முன் வரை சமூகத்தால் ஒரு தவறான விடயமாக கருதப்படவில்லை,
    ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் பல ஆலய நுழைவுப்போராட்டங்கள், மாராப்பு மூடும் போராட்டமெல்லாம் நடந்து வெற்றி பெற்றது, அதற்கு முன் வரை ஒரு சிறிய எதிர்ப்புனர்வு கூட காட்டப்படாத சூழலைத்தான் நமது சொந்த நாட்டை ஆண்ட நம் சொந்த மண்ணின் மன்னர்கள் வைத்திருந்தனர்.

    தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்ட சில வெள்ளை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது வரலாற்றில் உள்ளது,(பிற்காலத்தில் அவர்கள் கொடுங்கோலர்களாகவும், சுட்டவர்கள் சுதந்திரப்போராட்டத்தியாகியாகவும் மாற்றப்படனர்)

    //மதப் பிரச்சனைய தூண்டிவிட்டு., உள்நாட்டு பிரச்சனைய பெரிசாக்கி அல்லவா பொழுத ஓட்டினாங்க?. //
    சரிதான்

    //இப்பிடி ஒரு கூட்டம் சொல்லிட்டுதான் இருக்கு//
    பிரச்சினையே இதுதான்,
    எதையுமே ஆராய்ந்து பார்க்காத ஒருவிதமான சமூகநோய் பீடித்துள்ளது, அது மட்டுமல்லாமல் பிடிக்காதவர்கள் எதை செய்தாலும் வெறுக்கும் மனோபாவம் உள்ளது, ஜெயகாந்தனிலிருந்து வலைப்பதிவர்கள் வரை, ஆங்கிலேயர்கள் என்றால் கொடுங்கோலர்கள் மட்டுமே, தி.க. என்றால் பிராமண எதிர்ப்பாளர்கள் மட்டுமே, பா.ம.க. என்றால் மரம்வெட்டி மட்டுமே என்கின்ற ஒரு வட்டத்தைபோட்டு அதிலே சுற்றி சுற்றி வரும் நோயால் நம்மால் நம்முடைய எதிரியாகவே இருந்தாலும் அவனிடம் உள்ள நல்லதை பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Dharumi said...
    thiru Sri Rangan, thiru kuzhali, thiru apdipodu
    - நன்றி

    குழலி, உங்களது சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடாகவில்லை.ரயில் வந்ததும், வாழ்க்கைத்தரம் உயர்ந்ததும், ஒரே நாடானதும் அவர்களின் ஆக்கிரமிப்பால் வந்த bye-products, எச்சங்கள். அந்த அவர்களது எச்சங்கள் நமக்கு 'பிரசாதங்களா'?

    "சதி, தீண்டாமையை ஒரு தவறாகவே கருதாமல் இருந்த சமுதாயத்தை சிந்திக்கவைத்ததும் "

    இதுவும் அவர்களின் வழக்கமான பிரித்தாளும் கொள்கையால் வந்ததே.
    கிறித்துவத்தைப் பரப்பவந்தவர்கள் சாதியை ஒதுக்க முனைந்து, அதனால் புதிதாக இணைந்த மேல்சாதியினரின் எதிர்ப்பால் அதனைக் கண்டு கொள்ளாமல் சென்றது வரலாறு. 'schedule' போட்டது அவர்கள் வசதிக்குத்தானே!

    ReplyDelete