Wednesday, July 27, 2005

35. ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.

எனக்கும் வயசு என்னவோ ரொம்பவே ஆகிப் போச்சு. ஆனால் நானும் 'எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து' எப்படியும் பதில் கண்டு பிடிக்கவேண்டுமென்று தலையைப் பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம்; பதிலேதும் கிடைக்கவேயில்லை. நாளாக நாளாக ஒன்று மட்டும் புரிந்தது. நான் மட்டுமல்ல, யாருமே 'அந்தக் கேள்விகளுக்குப்' பதில் சொல்லமுடியாது என்று. இல்லையென்றால் தலைமுறை தலைமுறையாக இதற்கு ஏன் யாருக்கும் பதில் தெரியவில்லை? ஒருவேளை இதை வாசிப்பவர்களில் யாருக்காவது பதில் தெரிந்துவிட்டால் அவர்கள் எனக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே பதில் தர முன்வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் இந்த 'ஆராய்ச்சிக் கட்டுரை'.

அப்படிப்பட்ட கேள்விகள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் தலையைப் பிய்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தால் it is your problem! இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பம், theory of chaos, black hole - இப்படி ஏதாவதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டாலோ, த்வைதம்-அத்வைதம் இரண்டில் எது சரி, பசு, பதி, பாசம் என்ற இந்து தத்துவத்தையோ, mystery of trinity என்ற கிறித்துவ தத்துவத்தையோ புரிந்துகொள்வது எப்படி என்பது போன்ற தத்துவ விசாரணைகளையோ நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் அதற்கு எப்படிப் பொறுப்பு? ஆனாலும் என் கேள்விகள் இதைவிடக் கடினமானவைதான். ஏன் என்கிறீர்களா? பிரபஞ்சத்தைப் பற்றிய இன்றைய கேள்விகளுக்குப் பதில் இல்லாமலிருக்கலாம். ஆனால் எதிர்காலம் நிச்சயம் பதிலைத் தரும். ஆனால், என் கேள்விகளுக்கு...? நிச்சயம் என்றும் அவைகளுக்குப் பதில் தெரியப்போவதில்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி என்ன கடினமான கேள்விகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். நம்மில் மயில் இறகுகளைப் புத்தகத்திற்குள் புதைத்துவைத்து, அது குட்டி போடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்காதவர் யார்தான் சொல்லுங்கள்? மயிலிறகு கிடைப்பதே குதிரைக்கொம்பு; அப்படிக் கஷ்டப்பட்டுக் கிடைத்ததை ஒற்றை ஒற்றையாகப் பிரித்து ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்துவிட்டு, தினமும் காலையில் படிக்கப் புத்தகத்தை எடுக்கிறோமோ இல்லையோ, குட்டி போடுவிட்டதா என்று நித்தம் நித்தம் திறந்து பார்த்து...

உங்களுக்கும் அந்த நாட்கள் நினைவுக்கு வருமே. இதில் எனக்குள்ள சந்தேகம் என்னவென்று கேட்கிறீர்களா? என் குழந்தை இப்படிச் செய்தபோது அந்தக் குழந்தைத்தனத்தை ரசித்துச் சிரித்தேன். அப்படிச் சிரித்தபோது நான் மயிலிறகின் குட்டியை எதிர்பார்த்து இருந்ததைப்பார்த்து என் அப்பா சிரித்தது நினைவுக்கு வந்தது. நிச்சயமாக என் தாத்தா அப்பாவைப்பார்த்து அதேமாதிரி சிரித்திருப்பார். எப்படி இது தொடர்கதையாகத் தெடர்ந்து வருகிறது?

மயிலிறகு விஷயம் மட்டுமல்ல; முதல் பல் விழுந்த நாள் நினைவுக்கு வருகிறது. ஏற்கெனவே பல் ஆடிக்கொண்டிருக்கும்போதே விளையாட்டு நண்பன் - கொஞ்சம் சீனியர் - எச்சரித்திருந்தான் விழுந்த பல்லை வானம் பார்த்துவிட்டால் மறுபடி பல் முளைக்காது என்று. நாக்கால் ஆட்டிக் கொண்டேயிருக்கும்போது, ஏதோ ஒரு தருணத்தில் பல்லைத்தேட நாக்கு துளாவும்போது அங்கே பல்லுக்குப் பதில் ஒரு பெரிய வெற்றிடம்; பல் வாய்க்குள்ளேயே விழுந்திருந்தது - ரத்தமின்றி, சத்தமின்றி! சீனியர் சொல்லியிருந்தது நினைவுக்குவர, விழுந்த பல்லை வானம் பார்த்துவிடாதபடி, நன்கு குனிந்து உள்ளங்கையில் லாவகமாகத்துப்பி, இறுக்கமாகக் கைக்குள் மூடிவைத்து, மாட்டுச்சாணம் தேடி அலைந்து... கஷ்டப்பட்டுக் கிடைத்த சாணத்திற்குள் பல்லைப் பத்திரமாகப் பதிய வைத்து, வீட்டுக்கூரை மீது வீசிவிட்டு, அதற்குப் பின்பே நிம்மதிப் பெருமூச்சு விட்டு...

இப்படித்தான் எத்தனை எத்தனை...?

எழுதுவதற்கு என்பதைவிடவும் சீவித்தள்ளும் இன்பத்திற்காகவே பென்சிலைப் பயன்படுத்தும் வயது. சீவிய பென்சில்களின் துகள்களைப் பத்திரமாகச் சேர்த்து வைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைப் பாலில் ஊற வைத்தால் அச்சுக்குண்டான நல்ல 'அழிரப்பர்' கிடைக்குமே! அங்கங்கே புத்தகங்களுக்கிடையே பென்சில் தூள்கள்...

அந்த வயதில் ஒரு சின்னக் காந்தத்துண்டு கிடைத்துவிட்டால் அதுதான் நம் அந்தஸ்தை எவ்வளவு உயர்த்திவிடும். நண்பர்களுக்கு அதைக் காண்பிப்பதில்தான் எவ்வளவு பெருமை. ஆனால் hands-on experience நமக்கு மட்டுமே. பிரத்தியேகமாக வைத்துக்கொண்டு, மணலில் இருந்து 'இரும்புத்தூள்' சேர்த்து... இது மாதிரி நிறைய சேர்த்தால்,உருக்கி இரும்பு செய்யலாமென்று கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துச் சேர்த்து...


மேற்சொன்ன எல்லா விஷயத்திலும் எனக்கு இன்றுள்ள சந்தேகம் ஒன்றுதான். எப்படி சரியாக அந்த வயதில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான நம்பிக்கை? 'இம்மீடியட் சீனியர்கள்' சொல்லி வருவதுதான்; ஆனால், அதே நேரத்தில்'சூப்பர் சீனியர்கள்' இதெல்லாம் மூடநம்பிக்கை என்று எவ்வளவு சொன்னாலும் நம் மண்டையில் ஏறுவதேயில்லை. என் அப்பா சொல்லும்போது நான் கேட்கவில்லை; நான் சொல்லும்போது என் பிள்ளை கேட்கவில்லை. இது ஒரு முடியா நெடுங்கதை. இது காலங் காலமாய் தொடர்ந்துவரும் நம்பிக்கைகள். இது எப்படி?

ஒருவேளை, நம் எல்லோருக்குமே (பிறந்ததிலிருந்து பெற்றோரும், பின் பிறரும் சொல்லிச் சொல்லியே- brain-washed?) மதங்கள் மீதும், கடவுளர்கள் மீதும் நமக்கு காலங்காலமாய் இருந்துவரும் நம்பிக்கைகள் மாதிரிதானோ இவைகளும் ??

20 comments:

  1. பதில்தானே? மண்டபத்துக்கு வாருங்கள். நான் எழுதித் தருகிறேன். பரிசு பெற்று கொள்ளவும். பரிசோ உதையோ நீங்களே வைத்து கொள்ளவும்.

    எல்லாமே ஜீன்களின் விளையாட்டுத்தான். மயிலிறகு விளையாட்டு நான் செய்ததில்லை, ஏனெனில் என் அப்பா செய்யவில்லை. அவர் அப்பாவும் செய்திருக்க சான்ஸ் இல்லை. சில preferences வம்ச வழியாக வருபவை.

    அரசு அல்லது மதன் கேள்வியில் ஒருவர் நடிகை லைலா அந்த காலத்து நடிகை அஞ்சலி தேவியைப் போல இல்லையா என்று கேட்டதற்கு பதிலுடன் இன்னொரு prediction கொடுக்கப்பட்டது. அதாவது கேட்டவருக்கு லைலா பிடித்திருந்தால் அவர் தாத்தா அஞ்சலி தேவியின் விசிறியாக இருந்திருப்பார். ஆக இந்த விருப்பங்கள் எல்லாம் ஜீன் வழி வருபவையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. Tharumi,
    intha mayiliragu kutti poduma endellam nan puthakuthaka vachirukiran than...anal pallu villumpothu ean sanathila vaikavenum enduthan villangella??

    Sethu padathila vikram Abithakujalmabl college iku pogekaum mayiliragai puthakithila vachirukka athai eduthukondu poi veitila vachu parparu....antha vayasilaum avaiku nambikai irunthuruku.

    theory of chaos, black hole i pathi A Brief History of Time ila - Stephen W. Hawking konjam solli irukaru padichitingala?

    ReplyDelete
  3. தருமி அய்யா நீங்க எழுதியதை நானும் செய்தேன், கணேசன் அய்யா சொன்ன மாதிரி துகள்களைப் வடிச்ச தண்ணியில் (சோறு சமைத்த சட்டியில் இருந்து வடிகட்டப்படும் தண்ணீர்) போட்டு அழிரப்பர் தயாரித்தோம்

    நன்றி

    ReplyDelete
  4. இப்பிடிப் போட்டு குழப்பினா எப்பிடி தருமி தாத்தா! :o\

    நாங்க எல்லாரும் second hand ஆட்கள் தானே (இதுவும் second hand quote தான் ;o)

    ReplyDelete
  5. என்னங்க தருமி, இந்த அழிரப்பர் சமாச்சாரம்மட்டும் எனக்கு அப்பவே தெரிஞ்சிருந்தால்......

    ஆனா சொல்ல வருத்தமா இருக்கு. இந்த 'நம்பிக்கை'யெல்லாம் என்னோடு முடிஞ்சிருச்சேன்னு.
    ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நம்பினா நம்புங்க நம்பாட்டாப் போங்க.
    என் மயிலிறகு ஒரு நா குட்டி போட்டுச்சு. வத்தலகுண்டு எலிமெண்டரி ஸ்கூலில் கேட்டுப் பாருங்க.

    மகளோட(மூட)நம்பிக்கைகள் என்னன்னு ஒருநா விசாரிக்கணும்:-)

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  6. டோண்டு,
    நீங்க படிச்சுக்கிட்டே இருந்த 'டைப்' போல. நம்மல்லாம் அப்படி கிடையாதுங்க! எப்படியோ தேறிய 'டைப்'. மற்றபடி இதுக்கும் ஜீன்ஸுக்கும் ஏதுங்க தொடர்பு? இது ntaure விஷயம் இல்லீங்க; nurture விஷயம்.

    கணேசன், குழலி
    உங்க generation-யைவிட எங்க generation அதிகமாகவே scientificஆக இருந்தோமோ; எப்படியோ ஒருவழியில் 'பால்' சேர்த்திருக்கிறோமே, பார்த்தீர்களா? ரப்பர்பால் விஷயம் தெரிந்து ஏதோ ஒரு பால் சேர்த்திருக்கோம். எல்லாம் ஒரு scientific aptitudeதான்

    சினேகிதி,
    அந்த பல்லு விஷயம் தெரியாதா? Too late now, விடுங்க! stephen hawking படிக்கிறதுவரை black hole-னா ஏதோ ஒரு குகை மாதிரி கற்பனை பண்ணி வச்சிருந்தேன். அந்த மனுஷனைப் பார்த்து வியக்கிறதா, பாவப்படுறதா?

    ஷ்ரேயா பேத்தி,
    என்ன குழப்பினேன்னு தெரியலையே'மா?(da vinci code வாங்கி, வாசிச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கேன்)

    துளசி,
    உங்க பிள்ளையை அஞ்சு வயசிலேயே(?) ஊர்விட்டு ஊர் கூட்டிட்டு வந்துட்டா, பிள்ளைக்கு எப்படி 'இம்மீடியட் சீனியர்ஸ்' கிடைச்சிருப்பாங்க; எப்படி நம்ம ஊரு விஷயங்கள் தெரிஞ்சிருக்கும், சொல்லுங்க?

    எல்லோருக்கும் நன்றி. ஆனாலும் ஒரு வருத்தம் - நான் இந்தப் பதிவைக் கட்டுரையாக எழுதியபோது என் உள் நோக்கம் மத/கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரான என் கருத்துக்களுக்கு முக்கியமளித்து, அதை ஒரு sugar coated pill ஆக தரும் முயற்சியாகவே எழுதினேன். வாசித்த நீங்கள் யாருமே அதை கண்டுகொள்ளவில்லையா அல்லது அது உங்களூக்கு வந்து சேரவேயில்லையா (did it not reach you at all?), அல்லது அதற்கு எதிர்மறையான கருத்து இருந்து அதை இங்கே எதற்கு சொல்வானேன் என்று நினைத்து விலக்கி விட்டீர்களா?
    தருமின்னா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கவேண்டாமா? கேள்வி கேட்டுட்டேன்; பதில்...

    ReplyDelete
  7. // வாசித்த நீங்கள் யாருமே அதை கண்டுகொள்ளவில்லையா அல்லது அது உங்களூக்கு வந்து சேரவேயில்லையா //

    வந்ட்து சேர்ந்தது, நீங்கள் சொல்வது உண்மை என்பதால் வேறு கருத்தில்லை எனக்கு

    ReplyDelete
  8. ஆமாங்க தருமி. 'செய்தி' கிடைச்சதுதான்.
    ஆனா இந்த 'முன் ஏர் போற வழியிலேயே பின் ஏர்'ன்றதும் ஒருவிதத்துலே உண்மைதானே?

    இப்ப ஒரு செய்தி சொல்லட்டுமா? இளையதலைமுறை ( எல்லாம் என் மகளைப் பத்தித்தான்)ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை அதாவது கடவுள் இருக்காரா/இல்லையான்னே சந்தேகம் இருக்காம். அதாலெ தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்கிறாங்க.

    ஆனா எனக்கு இவ்வளவு வயசுக்கப்புறம் நம்பிக்கையை மாத்தறது கஷ்டம்தான்.

    அப்புறம் 'சாமி'ன்றது ஒரு அனுபவம். அதான் 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'ன்னு இருக்குல்லே!

    ReplyDelete
  9. தருமி Sir,

    கலக்கிட்டீங்க ! ரொம்ப நாள் கழித்து மனதைத் தொட்ட ஒரு 'NOSTALGIA' பதிவு !!!!!

    //நமக்கு மட்டுமே. பிரத்தியேகமாக வைத்துக்கொண்டு, மணலில் இருந்து 'இரும்புத்தூள்' சேர்த்து... இது மாதிரி நிறைய சேர்த்தால்,உருக்கி இரும்பு செய்யலாமென்று கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துச் சேர்த்து.
    //
    நான் கூட மெரினா கடற்கரையிலிருந்து 'இரும்புத்தூள்' சேகரித்திருக்கிறேன் :)

    பழைய நினைவுகளை அசை போடுவது (Nostalgia!) என்பது மிக மிக ஆனந்தமானது. அந்த நாளும் மீண்டும் வராதோ என்று நம்மை ஏங்க வைத்து விட வல்லது. நானும் "சிறு வயது சிந்தனைகள்" என்ற தலைபப்பில் பல பதிவுகள்
    எழுதியுள்ளேன் !!! சில சாம்பிள்கள்:

    http://balaji_ammu.blogspot.com/2004/10/ii.html
    http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html
    http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
    http://balaji_ammu.blogspot.com/2005/01/7.html
    http://balaji_ammu.blogspot.com/2005/04/some-traders-doctor-evening-game-of.html

    சமயம் கிடைக்கும்போது படிக்கவும்.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  10. குழலி , அப்போ சிம்பிளா வழிமொழிஞ்சிர்ரீங்க
    துளசி,
    "அதாலெ தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்கிறாங்க"

    அவங்கள agnostic-அப்டின்னு சொல்லிக்கச் சொல்லுங்க. அதுதான் முதல்ல கண்திறக்கிற ஸ்டேஜ். நான் மனம் 'திருந்திய'தைப்பற்றி எழுதரப்ப சொல்றேன். உங்களுக்கு objection இல்லன்னா அவங்களும் வாசிக்கட்டும்; சரியா? அதை முதலில் ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு திட்டம்.

    ஏங்க பாலா,"நானும் "சிறு வயது சிந்தனைகள்" என்ற தலைபப்பில் பல பதிவுகள்
    எழுதியுள்ளேன்" - நீங்க இன்னும் சின்னப் 'பையன்'தானே; அதுக்குள்ள என்ன இப்படி. வாசிச்சிட்டு சொல்றேன்.அதோடு, 'தருமி' மட்டும் போதுமே, பாலா.அய்யாவெல்லாம் வேண்டாமே; ரொம்ப அன்னியப்படுத்துவதுபோல இருக்கு. பாலாவுக்கு மட்டுமில்லை இந்த வேண்டுகோள்.

    ReplyDelete
  11. தருமி,

    ஆங்கிலத்துலேயும் எழுதுங்க. மகளுக்குத் தமிழ்ப் படிக்கத்தெரியாது(-:

    ReplyDelete
  12. அன்பு தருமி!
    நல்ல அழகான பதிவு.
    மதம், கடவுள் பற்றிய உங்கள் கருத்துடன் பூரண உடன்பாடே.
    அதுபற்றி நான் எழுதிய ஒரு பதிவு இது.
    பென்சில் சீவல்கள் சேர்த்து வைப்பது, மயிலிறகு விசயமெல்லாம் எந்தப் பிராந்தியத்துக்குப் பொதுவானவை என்று யோசித்திருக்கிறீர்களா? இந்தியா முழுவதுமுண்டா? தென்னாசியாவுக்கே பொதுவானதா? ஏனென்றால் இலங்கையிலும் இப்பழக்கம் காலங்காலமாக இருக்கிறது. நாங்களும் பாலுக்குப் பதில் கஞ்சிதான்.

    இந்தப்பழக்கங்களிலிருந்து ஒரு வயதில் எல்லோரும் விலகிவிடுகிறோம். ஆனால் மத விசயம் அப்படியில்லை. சுடுகாடு அல்லது இடுகாடு வரைக்கும் அதேதான். சிறுவயதில் விளையாட்டாயிருந்த பக்தி பின் முற்றிவிடுகிறது.

    ReplyDelete
  13. மயிலிறகு- உண்டு உண்டு. எங்கள் ஊர் திருவிழா சமயத்தில் குறவன், குறத்தி காவடியாட்டம் ஆடி முடிந்த மறுநாள் அவர்கள் ஆடிய இடத்தில் பொழுது விடிந்ததும் முதல் ஆளாகப் போய் நின்று பொறுக்கி வந்து புத்தகத்திற்குள் சேர்ஹ்ட்த்ட அனுபவம். அது குட்டிபோட அரிசி வேறு வைப்போம். ஆமாம்.. சாப்பிட்டு தெம்பாகனும்ல?! ஆனாலும் குட்டி போட்டு இருந்தது. எனக்குத் தெரியாமல் யாரோ இன்னொரு சிறு துண்ணை எடுத்து அதோடு வைத்திருந்தனர்!

    பல்- ஆமாம் ஆமாம். வானம் பார்க்காமல் விழுந்த பல்லை சாணம் கொஞ்சம் எடுத்து உருண்டையாக்கி பல்லை உள் திணித்து, "வானமே வானமே என் பல்லை எடுத்துக் கொண்டு உன் பல்லைத் தா!" என்ற வேண்டுகோளின் படி கண்ணை மூடிக் கொண்டு சூரியனை நோக்கி எறிவோம். ஆனால் விழுந்த இடத்தைப் பார்க்கக் கூடாது!

    காந்தம்- அப்பா வெளியூர் சென்று விட்டு சிறு காந்தத் துண்டோடு வந்தார். எங்க அப்பா டவுனில வாங்கி வந்ததாக்கும், உங்களுத விட என்னுதுதான் பவர்புல் தெரியுமா எனக் கேட்டு சோதனையும் செய்து காட்டி மறக்க முடியுமா அந்த நாட்களை?!

    மிட்டாய்- இன்னுமொன்று வாங்க காசு இல்லாத காரணத்தால் வாங்கிய ஒன்றையே நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க தகுந்த ஆயுதமில்லாமல் சட்டையின் நுனியில் வைத்து காக்காய் கடி கடித்து பங்கிடும்போது சொல்வோம், "எச்சில் இருக்காது தின்னு, இல்லன்னா சாமி கண்ண அவிச்சிடும்!"

    இப்படிப் பல நினைவுகள்! கடவுள் நம்பிக்கையும் நிறைய உண்டு. சில மூட நம்பிக்கைகளும். அது அந்த வயதில் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது உண்மை புரிகிறது. என்றாலும் அம்மாதிரி நம்பிக்கைகள் இருந்ததால்தான் நன்கு ஒழுங்காகவளர்ந்தோம், படித்தோம் என்ற திருப்தி உண்டு!

    ReplyDelete
  14. //வாசித்த நீங்கள் யாருமே அதை கண்டுகொள்ளவில்லையா அல்லது அது உங்களூக்கு வந்து சேரவேயில்லையா (did it not reach you at all?), //

    மயிலிறகு, பல்... போன்ற இளமைக்கால இனிய நினைவுகளின் மத்தியில் மதம் ஒரு பொருட்டாவே தெரியவில்லை.

    என்றாலும் நாங்கள் பல்லை எறிவதே
    "அணிலே அணிலே
    என்ரை பல்லை வைச்சுக் கொண்டு
    உன்ரை அரிசிப் பல்லை
    எனக்குத் தா"
    என்று சொல்லித்தான். ஒவ்வொரு பல் விழும் போதும் அப்படித்தான் சொல்லி கைக்குள் பொத்தி வைத்திருந்த பல்லை எறிந்தேன்.
    அரிசிப் பல் வரும் என்ற நம்பிக்கையில்.

    ReplyDelete
  15. "அரிசிப் பல் வரும் என்ற நம்பிக்கையில்."

    வந்ததா, இல்லையா?

    அந்த கடைசி 4 வரிகளுக்காகத்தான் அந்த முழுக் கட்டுரையுமே. ஆனால், பல்லும்,மயிலிறகும் அதைக் கொஞ்சம் திசை திருப்பிவிட்டது என்று நினைக்கிறேன். ஆகவேதான் அடுத்தபதிவு முழுமையாக ...

    நன்றி

    ReplyDelete
  16. துளசி,
    இதோ வந்தாச்சே ஆங்கிலத்தில்(அடுத்த பதிவைப் பார்க்க); உங்கள் மகளுக்காகவேன்னு வச்சுக்கங்க.இன்னும் வரும் என்றும் சொல்லுங்கள். (அந்த autobiographical section-ம் வாசிக்கச் சொல்லுங்கள்)

    அதோடு உங்கள் மகளுக்கு: Hi, you may not know how much you miss by not knowing to read Tamil, especially your mum's writings on her pets!

    "என்றாலும் அம்மாதிரி நம்பிக்கைகள் இருந்ததால்தான் நன்கு ஒழுங்காகவளர்ந்தோம், படித்தோம் என்ற திருப்தி உண்டு! "

    சாரி, மூர்த்தி. உங்கள் கருத்தோடு ஒத்துப் போகமுடியவில்லை. ஒன்று மொட்டத்தலை; இன்னொன்று முழங்கால்!

    ReplyDelete
  17. //ஒருவேளை, நம் எல்லோருக்குமே (பிறந்ததிலிருந்து பெற்றோரும், பின் பிறரும் சொல்லிச் சொல்லியே- brain-washed?) மதங்கள் மீதும், கடவுளர்கள் மீதும் நமக்கு காலங்காலமாய் இருந்துவரும் நம்பிக்கைகள் மாதிரிதானோ இவைகளும் ??//

    தருமி
    கேள்வியும் நீரே, பதிலும் நீரே!

    நாம் வளரும் சூழ்நிலையும், நமது பெற்றோர் , உறவினர் , மற்ற சீனியர்கள் இவர்களை பார்த்து பார்த்து , அவர் சொல்வதை கேட்டு கேட்டே நமக்கு கடவுளின் மீதும், மதங்களின் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது..
    ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை...
    கடவுள் மற்றும் மதங்களின் விஷயத்தில் இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் (சிலர் ஒரு காலகட்டத்துக்கு பிறகு நாத்திக பாதைக்கு மாறுகிறார்கள்) .ஆனால் , குடிப்பதையோ, புகைத்தலோ கூடாது , இன்ன பிரச்சினைகள் வரும் என்று பலர் சொல்லியும் ... ஏன் கூடாது என்று முயற்சித்து பார்கின்றோமே ..அதெப்படி????

    கடவுள் / மதம் என்பதில் அவர்களின் சொல்படியே நடப்பதும் , குடி, சிகரெட் போன்ற விஷயங்களின் அவர்களின் கருத்துக்கு எதிராகவும் ஏன் நடக்கிறோம்???


    ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்வதும், விலகி செல்வதும் பெருமளவு பெற்றோர், உறவினர் , மற்ற சீனியர்களின் தாக்கத்தினால் என்றாலும் அதையும் தாண்டி அந்த விஷயம் சார்ந்த ஏதோ ஒன்று இருக்கிறதோ????

    வீ எம்

    ReplyDelete
  18. "அதையும் தாண்டி அந்த விஷயம் சார்ந்த ஏதோ ஒன்று இருக்கிறதோ????"

    இருக்கிறது, வீ.எம். அது நமது "fear of unknown" ஆக இருக்கவேண்டும். மரணமும், அதற்குப்பின் என்ன என்ற பயமும், மதங்கள் அது பற்றி சொல்லும் விஷயங்களும் நம்மை, கடவுள், கடவுள் பற்றிய அச்சங்கள் என்ற நிலைப்பாட்டிலேயே நிறுத்திவைத்து விடுகின்றன என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. ஆமாம் தருமி, குழந்தைப் பருவம் ஒட்டியே எந்த ஒரு தாக்கமும் மதம் சார்ந்து மற்றும் தனது சொந்த விருப்பு வெறுப்புகள் அன்றி, முடிந்தளவிற்கு குழந்தையின் இயல்பு நிலையிலேயே விட்டு வளர்த்தால் என்னாவாகும், அச் சூழலில் (அது போல ஒஷோவிற்கு கிடைத்ததாம்...) ?

    நாம் தான் ஒரு குழந்தையின் வளர்ப்பு பொருட்டு தமக்கு தெரிந்ததை, அக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்து என்றைக்கும் அது நிலைத்து விடுமாறு நமது சுமையை ஏற்றி அதன் தலைகளிலும் வைத்து விடுகிறோம்.

    சமீப காலமாக பார்த்து வருகிறேன், மிக நெருங்கிய சொந்தத்தில் ஒருவர், தனது மகனை தன்னைப் போலவே ஒரு பிம்பமாக உருவாக்கி வருகிறார். பிறகு அந்தப் பையனே அதனை கண்டறிந்து ஒவ்வொன்றாக பல அடுக்கு சட்டைகளை கழற்றி வைப்பதைப் போல கலைய வேண்டும், பிற்காலத்தில்.

    இதனைப் பொருட்டு தனிப் பதிவு எனது நட்சத்திர வாரத்தில் போடுகிறேன்...

    முதலில் எல்லோரும் தாங்களின் மையக் கருத்தை தவிர்த்து சுற்றிப் போனதிற்கு காரணம்... எதுக்கு வம்பு :-)

    ReplyDelete
  20. clean slate ஆக வளரவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனாலும் சின்ன வயதில் கடவுள் பயம் இருக்கவேண்டும்தான்.

    //தனது மகனை தன்னைப் போலவே ஒரு பிம்பமாக உருவாக்கி வருகிறார்.//சிலர் இப்படி; பலர் தாங்கள் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்பட்டு முடியாது போயிற்றோ அப்படி தங்கள் குழந்தைகளை ஆக்க நினைக்கிறோம். எப்படியோ குழந்தைகளுக்கு individuality இல்லாதபடி பார்த்துக் கொள்கிறோம்!!

    ReplyDelete