Thursday, August 25, 2005

58. வயசுக்கு மரியாதை கொடுங்க'ப்பா...

அமெரிக்காவில் ஒரு சின்ன டவுணில் சரியாக 100 நாட்கள் 'தனிஆவர்த்தனம்' செய்ய வேண்டியிருந்தது. இங்கே, சமையலறைப் பக்கமே போகாத நான் தனியே சமைத்துக்கொண்டு, அதை சாப்பிடமுடியாமல் கீழே கொட்டிக்கொண்டிருந்தேன். நான் oven-ல் மீன் பொரித்தால் அது கருவாடாக மாறியது. சரி, ரெடிமேட் சப்பாத்தி வாங்கி சுடவைப்போமே என்று சுடவைத்தால் அது அப்பளமாக மாறியது. வீட்டிலிருந்து எழுதி வாங்கிட்டுபோன notes-யைக் கையிலேயே வைத்துக்கொண்டு நான் பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவ்வப்போது அடுத்த அறை நண்பர்-சீனத்து நண்பர்- தரும் கண்ணங்கரேலென்ற கோழியையும், vegetable dip + பச்சைக் காய்கறிகளுடன் வாழ்க்கையை ஒருமாதிரி ஓட்டிக் கொண்டிருந்தேன். சோறும் தயிரும் ஊறுகாயும் கொஞ்சம் கை கொடுத்தது. அதைப் பற்றி பிரிதொரு பதிவில் பார்ப்போம்.

நான் இருந்த டவுணில் - அது ஒரு கிராமம்தான் - மொத்தம் 8,000 பேர் தானாம். அதிலும், பாதிக்கு மேல் அங்கிருந்த கல்லூரியின் மாணவர்கள்தான். பதினைந்து பதினைந்து கடைகளாக சரியாக நான்கே நான்கு வரிசைகளாக இரண்டு தெருவில் கடைகள்; ஒரு சின்ன சினிமா தியேட்டர், ஊருக்கு ஊர்தான் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்களே, அது ஒன்று, ஒரு ஆடிட்டோரியம் - அதுதான் கல்லூரி வளாகத்தைத் தவிர அந்த ஊரில் இருந்த மொத்த விஷயங்கள். கடைகளின் வரிசை ஆரம்பமாகும் இடத்தில் ஒரு board.

Oberlin
Downtown
1882
- என்று எழுதியிருக்கும். கணக்கு போட்டுப் பார்த்தேன். 120 ஆண்டுகள்; பரவாயில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

கல்லூரியில் பேசிய ஒரு கூட்டத்தில் இந்த விஷயம் பற்றிப் பேசும்போது அதைக் குறிப்பிட்டுவிட்டு, அதே மூச்சில், என் ஊரில் இது மாதிரி ஒரு போர்டு வைத்தால் என்னவென்று எழுதுவது?
Madurai
Downtown
1882 B.C.
என்றுதான் எழுதவேண்டி வருமென்றேன்.

எனக்கு என்ன வருத்தம்னா, இப்படிப்பட்ட, ஆனானப்பட்ட எங்க ஊரைப் பத்தி இந்த சென்னைவாசிகள் என்னதான் நினைக்கிறாங்கன்னு. நேத்து பெஞ்ச மழையில...அப்டின்னு சொல்லுவாங்களே அதுமாதிரி வெறும் 366 ஆண்டுகளே ஆயிருக்கு நேத்தோடு. அதுக்கு ரொம்ப பெரிசா பிறந்தநாள் கொண்டாட்டம் வேற. போனாப் போகுது..கொண்டாடிட்டு போகட்டும்; நானும் கூட பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன். ஆனா, என்னமோ மதுர ஒரு கிராமம் மாதிரி சொல்றது; ஓ, அங்கே internet-கூட இருக்காங்கிறது, (அடுத்தவாரம் இந்நேரம் எங்க வீட்டுக்கே broad band வந்திரும்னு நினைக்கிறேன்) - இதல்லாம் வேணாங்க; நல்லா இல்ல.
அவ்வளவுதான் சொல்லுவேன்.

366 எங்கே? எங்க ஊரு எங்கே? எங்க ஊரு மீனாட்சி அம்மன் கோயிலு வயசே அதுக்கு மேல; தெரிஞ்சுக்கங்க. இனிமேயாவது... வயசுக்கு மரியாதை கொடுங்க'ப்பா ! சரியா...?

15 comments:

  1. //வயசுக்கு மரியாதை கொடுங்க'ப்பா ! சரியா...?//
    சரி தருமி ஐயா! -ன்னு சொன்னா அடிக்க வர்றீங்க..நாங்க என்ன தான் பண்ணுறது? (சும்மா தமாசு)

    //1882 B.C. என்றுதான் எழுதவேண்டி வருமென்றேன்.//
    இது என்ன கணக்கு ? சங்கம் வளர்த்த மதுரை எங்க ஊருக்கு தெற்கே கடலுக்குள்ள இருக்கதா கேள்விப்பட்டேன்.(விடு ஜூட்)

    ReplyDelete
  2. ஆனாலும் இந்த மாயூரத்தார்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தியோ?

    ReplyDelete
  3. ஜோ,
    "...தெற்கே கடலுக்குள்ள இருக்கதா.."

    அது புராணக்காலத்து மதுரையாக இருக்கும்.......

    ReplyDelete
  4. Dharumi,
    kalakareenga..
    Padu jolly-aana pathivu..
    Inge en pollappum appadiththaan irukku...:)

    ReplyDelete
  5. இந்தியாவின் ஜீவனே மதுரையில்தான்தான் (அதாவது கிராமங்களில்தான்) என்று பெரியவங்க சொல்லியிருக்கும்போது ஏன் வருத்தப்படறீங்க..

    // அடுத்தவாரம் இந்நேரம் எங்க வீட்டுக்கே broad band வந்திரும்னு நினைக்கிறேன் // இப்பதிவை எழுதிய நாள் 2882 A.D என்று சொல்லாமல் விட்டீர்களே

    ஆயிரத்து எண்ணூத்தி எண்பத்தி ரெண்டு ஆனாலும் மாயூரம் ஆகாது

    ReplyDelete
  6. மதுரையும் சென்னையும் எனக்குப் பழக்கமே. மதுரையில் ஓராண்டு பள்ளிப் படிப்பு படித்திருக்கிறேன்.

    மதுரையையும் சென்னையையும் ஒப்பிட முடியாது. மதுரை சென்னையை விட உண்மையான முகங்கொண்ட ஜீவனுள்ள ஊர் என்றால் மிகையாகாது.

    சென்னையும் எனக்குப் பிடிக்கும். ஆனால் சென்னையை விட மதுரை எனக்குப் பிடிக்கும். மதுரையில்தான் கிராமத்தான் கிராமத்தானாகவும், நகரத்தான் நகரத்தானாகவும் இருக்கமுடியும். மேலும் மதுரைக்காரர்கள் மரியாதை தெரிந்தவர்கள்.

    இண்டெர்நெட் பார்லர் எங்க இருக்குன்னு கேட்டேன். என்னைய விட பெரியவரா இருந்தாரு. "இந்தா இருக்குண்ணே" அப்படீன்னு வழி காட்டுனாரு. "இப்போ இன்னான்குறே"யை விட "இந்த இருக்குண்ணே" எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  7. "பல சிறந்த அறிஞர்களை/கலைஞர்களைத்தந்திருந்தாலும்..."
    வளவன் எதுக்கு இப்படியெல்லாம் புகழ்றீங்க...வெக்கமா இருக்கில்ல..!

    --L-L-D-a-s-u---, ராகவன் -- நன்றி

    Inge en pollappum appadiththaan irukku...:) --பாலாஜி, நான் இப்போ ரொம்ப தேறிட்டேன், தெரியுமா?
    முகமூடி - ye tu mayavaram?? என்னப்பா, இவ்வளவு பேரு??

    ReplyDelete
  8. தருமி,
    உங்க broadband அனுபவம் பத்தி ஒரு பதிவ போடுங்க...
    (ease of ordering, wait time, speed, downtime, etc...)

    ReplyDelete
  9. நீங்க இவுங்க நக்கலையெல்லாம் கண்டுக்காதீங்க தருமி.

    மதுரைன்னா மதுரைதான்.

    இப்படிக்கு,
    துளசி( இங்கே ஒரு ஊர் இல்லே ஒரு நாட்டோட சரித்திரமே வெறும் 165 வருசம்தான்!)

    ReplyDelete
  10. நீங்க இவுங்க நக்கலையெல்லாம் கண்டுக்காதீங்க "
    துளசி,
    நக்கலா..இல்லீங்க, ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே பொறாமை'ங்க.

    பார்த்தா,
    அதுல என்ன எழுதிறதுன்னு தெரியலையே. டிப் கொடுங்களேன்..

    ReplyDelete
  11. நல்ல நகச்சுவையாய் எழுதிறீர்கள்.

    மதுரை எண்றால்...
    மதுரை பாண்டிய அரசு
    வீரம், வாள் வீச்சு
    தமிழ் சங்கம்
    என்று ஒரு புத்தக மன சித்திரம் இருக்கு.

    நான் ஈழம், இந்தியாவே தெரியாது.
    நீங்க மதுரையை போய் இப்படி சொல்கிறீர்கள்!!

    ReplyDelete
  12. மதுரையில் என்சிறுவயதில் இருந்திருக்கிறேன்.
    இன்னும் எனக்கு நிறைய ஞாபகங்கள் இருக்கின்றன. அன்பான அயலவர்கள். ஆனால் யாரையும் சரியாக எடைபோட முடியாது.

    எம்.ஜி.ஆர். இறந்தபோது அங்கு நின்றோம். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டுக்காரர் எதிர்ப்பக்கம் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அன்று அதிகாலை பொருட்களுடைத்துச் சத்தம் கேட்டு வீதிக்கு வந்து பார்த்தேன். ஒரு கும்பல் (இவர்களும் தெரிந்த அயலவர்கள்தான்) அந்த எதிர்க்கடையை அடித்துத் துவம்சம் செய்துகொண்டிருந்தது. கடைக்காரரின் மண்டை உடைந்து இரத்தம் ஓடியநிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம்பக்கம் கடைதிறந்துகொண்டிருந்தவர்கள் கடையைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

    எம்.ஜி.ஆர் இறந்ததுக்கு ஏன் கடைதிறந்தது? என்பதுதான் பிரச்சினை. உண்மையில் அந்த அனர்த்தத்தின் பின்தான் எங்களுக்கும் அயலுக்கும் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டாரென்பது தெரியும்.

    தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஞாபகங்கள், குழாய்க்கிணற்றிடியில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதும், நாளாந்தம் அதில் நடக்கும் சண்டைகள், அது அடிக்கடி பழுதாய்ப்போவதும் பின் நீண்டதூரம் போய் ஓரிடத்தில் குடமொன்றுக்கு 25 காசு கொடுத்து தண்ணீர் பிடித்து வந்ததும் மறக்க முடியாதவை. அப்படிப்பட்ட தண்ணீர்க் கஸ்டத்தை நான் அதற்குமுன்போ, பின்போ பார்த்ததில்லை. எங்கள் ஊரில் ஒவ்வொரு வளவிலும் கிணறு இருக்கும், அதுவும் இருபது அடியில் தண்ணீர் நிற்குமென்றால் நம்பமாட்டார்கள். எங்களிடமிருந்த சில படங்களைக் காட்டுவோம்.

    மதுரையில் அரசாங்கப்பாடசாலையில் ஒரு வகுப்பில் 100 தொடக்கம் 125 பேர் படிப்பது எனக்கு விசித்திரமாயிருந்தது. அதுவும் நிலத்திலிருந்து படிப்பது. இலங்கையில் 35 பேருக்குமேல் ஒரு வகுப்பில் இருக்க முடியாது(சிறிய வகுப்புக்களில்கூட) அதுவும் முதலாம் வகுப்பிலிருந்தே கதிரைமேசையிலிருந்துதான் படிப்போம். யாழ்ப்பாண இடப்பெயர்வுவரை கடுமையான யுத்தத்துக்குள்ளும் இவை கடைப்பிடிக்குப்பட்டு வந்தன. வன்னியில் மரங்களுக்குக் கீழே நிலத்திலிருந்து பிள்ளைகள் படித்ததைக் காணும்போது எனக்கு மதுரை ஞாபகம் வந்தது.

    சென்னையிலும் ஒரு மாதம் இருந்தவன் என்ற முறையில் ராகவன் சொன்னதுபோல் ஒப்பீட்டளவில் மதுரை எனக்குப்பிடித்த இடம்.
    கோ.புதூர், ஆத்தியடி எனக்குப் பிடித்த இடங்கள்.

    ஒரு குழந்தை தொலைந்துவிடாமலிக்க பெற்றோர்கள் அதிகபட்ச கவனமெடுக்க வேண்டிது நானறிந்த இடங்களில் மதுரையில்தான் என்று நினைக்கிறேன். குழந்தை தொலைவதை சாவகாசமாகச் சொல்வார்கள். என் தங்கைகூட இருமுறை திருவிழாவில் தொநை;து பின் கண்டுபிடிக்கப்பட்டாள்.

    ReplyDelete
  13. "மதுரை எண்றால்...
    மதுரை பாண்டிய அரசு
    வீரம், வாள் வீச்சு
    தமிழ் சங்கம்
    இரண்டு தருமி !!
    என்று ஒரு புத்தக மன சித்திரம் இருக்கு" - இப்படியும் சொல்லலாமே, நற்கீரன்.

    வசந்தன்,
    மதுரை மக்கள் 'emotional type'. அதைப்பற்றியும் எழுதணும்.
    நன்றி

    ReplyDelete
  14. Interesting information, Dharumi !!!

    East or West, Home is Best, so what can I say ???? :)

    ReplyDelete