Saturday, September 03, 2005

62. ஒரு இந்தி தெரியாதவனின் வட நாட்டு (வீரப்) பயணம்... 2

தில்லியில் எல்லா இடங்களையும் பாத்துடலாமேங்கிற ஆசையில, ஆசைஆசையா அந்த பஸ்ஸில் ஏறியாகிவிட்டது. பஸ்ஸில் நம் தமிழ் மக்கள் கொஞ்சம் இருந்தார்கள். எல்லாரும் பெருங் குடும்பத்தோடு இருந்தார்கள். தனியாள் நான் மட்டும்தான். பஸ் முதல் இடத்தில் நின்றதும் சிங் ஒருவர்தான் எங்கள் கைடு. அந்த இடத்தப்பற்றி முதலில் இந்தியில் சொன்னார்; பிறகு ஆங்கிலம். இந்தி பேசுவதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தில் ஏறக்குறைய பாதி நேரமே ஆங்கிலத்தில் சொன்னார். சரி..சரி..அதுவே போதும்; நாம் என்ன பரிட்சைக்காகவா கேட்கிறோம் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். அடுத்த இடம் வந்தது. இந்தியில் விளக்கம் கொடுத்தார். நாங்கள் எதிர்பார்க்காமல் பஸ் அடுத்த இடத்திற்குப் புறப்பட்டு விட்டது. ஆங்கில விளக்கம் கொடுக்கப்படவில்லை. அப்போதுகூட நாங்கள் யாரும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த இடத்திலும் அவர் அதே மாதிரி ஆங்கிலத்தில் சொல்லாமல் பஸ்ஸை எடுக்கச் சொன்னதும் போர்க்கொடி தூக்கினேன். நல்லவேளை நம் மக்கள் யாவரும் உடனே என் போராட்டத்தில் சேர்ந்துகொண்டார்கள். ஆங்கிலத்தில் சொல்லாவிட்டால் பஸ்ஸில் ஏற வேண்டாம் என்று நான் விடுத்த அழைப்பை மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். சிங் வேறு வழியில்லாமல், என்னை முறைத்துக்கொண்டே ஏதோ கொஞ்சமாவது ஆங்கிலத்தில் சொன்னார். (என் இந்திப்போராட்ட பதிவில் இந்தி படித்தேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று குரல் கொடுத்தவர்கள் அன்று என்னோடு அந்த பஸ்ஸில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் - என்று ஒரு கற்பனை செய்து பார்க்கவேண்டும். ஹலோ..நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?)

இந்த இந்திப் போராட்டத்தால் அங்கு பஸ்ஸில் ஒரு தமிழ்ச்சங்கமே உருவாகிவிட்டது. எங்கெங்கு இறங்கினமோ அங்கெல்லாம் ஒருவருக்கொருவர் ஒட்டிக் கொண்டோம். இன்னொன்று சொல்லவில்லையே; இந்தப் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்பே நான் பெண்பார்த்த படலம் முடிந்துவிட்டிருந்தது. அநேகமாக அந்தப் பெண்தான் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது - at least நான் அப்படி நினைத்திருந்தேன். செங்கோட்டையில் இறங்கி சுத்தும்போது 'அவளுக்கு' ஏதாவது வாங்கிடணும்னு ஒரு ஆசை; ஆனா என்ன வாங்கிறதுன்னு தெரியலை. புதுமாதிரியா ஏதோ ஒண்ணைப் பார்த்ததும் இதை வாங்கலாமா என்று நம் தமிழ்ச் சங்கத்து உறுப்பினரிடம் கேட்டேன். 'தம்பி, இங்க ஒண்ணும் வாங்காத; இது எல்லாமே பாதி விலையில நம்ம மீனாட்சியம்மன் கோவில் கடையில வாங்கிடலாம்' என்று அம்மா ஒருவர் எச்சரித்துவிட்டார்கள். ஆக நான் ஒன்றும் வாங்கவில்லை. அதன் பலன் பின்னால் எனக்குத்தான் கிடைத்தது.


அதோடு கொண்டுவந்த காசையெல்லாம் பத்திரமாக வைத்திருந்து பம்பாயில் எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். தில்லியில் நான்கைந்து நாள் தங்கல். மாலையில் - அந்த இடம் என்ன கன்னாட் பிளேஸ்தானே? - அங்கு சிரத்தையாகச் சென்றுவிடுவேன். 'இந்தியா காஃபி ஹவுஸ்'என்றொரு கடை. அது கடை என்பதைவிட தென்னிந்தியர்கள் கூடுமிடம் என்றே தோன்றியது. தமிழர்களும், மலையாளிகளும் நிறைந்து வழிந்தனர். நல்ல காஃபி; நம்மூர் தோசை என்று தமிழ் மணத்தது. தில்லியிலிருந்து ஒரு நாள் ஆக்ரா. தாஜ் மஹல். உள்ளே நுழைந்ததும் படத்தில் பார்த்தது மாதிரி நீண்ட நீரோடை முன்னால் இருக்க, அதில் தாஜ் மஹலின் தோற்றம் தெரியுமே அப்படி இல்லாமல், நீர் இல்லாமல் வறண்டிருந்தது. சுற்றிச் சுற்றி வந்து போட்டோ எடுத்தேன். படம் எடுப்பதற்காகவே போட்டதுபோல் மஹலின் முன்னால் இருந்த ஒரு பளிங்கு benchல் உட்கார்ந்து படம் எடுக்க ஆசை. என்ன செய்யலாமென முழித்துக்கொண்டிருந்தபோது இன்னொருவரும் அதேபோல் முழித்ததுபோல் தெரியவே, அவரை அணுகி ஆங்கிலத்தில் 'என்னை நீ எடு; நான் உன்னை எடுக்கிறேன்' என்று சொல்ல, அந்தப் பிரச்சனை முடிந்தது. எடுக்கும்போதுதான் நாங்கள் இருவருமே பார்த்துக்கொண்டோம் - எங்கள் இருவரின் காமிராவும் ஒரேமாதிரி என்று. இரண்டுமே அந்தக் காலத்து famous brand, Yashica J. ஆச்சரியத்தில் இருவரும் அதைப்பற்றி சிறிது பேசினோம். கடைசியாக, 'எங்கே வாங்கினீர்கள்' என்றேன். நாகப்பட்டினம் என்றதும், ஓ, நாகப்பட்டினமா ? என்று நான் தமிழில் சொல்ல, அடுத்த சங்கம் அங்கு உருவானது. அதிலும் அவர் மதுரைக்காரராகவே இருந்தார்.


தில்லியிலிருந்து பம்பாய் பயணம். இங்கு இடம் பார்க்கும் தொல்லையில்லை. உறவினர் வீட்டில் தங்க ஏற்கெனவே ஏற்பாடு. பம்பாய் போய்ச்சேர்ந்ததுமே ஒரு கடிதம் காத்திருந்தது. அப்பா எழுதியிருந்தார்கள். நான் பார்த்திருந்த பெண்ணே முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நான் சம்மதம் என்று ஒரு கடிதம் எங்கள் சாமியாருக்கு (Parish priest)உடனே எழுதவேண்டுமென்றும் எழுதியிருந்தார்கள். அதைவிட வேறு வேலை என்ன? உடனே கடிதம் எழுதிப்போட்டேன். ( அப்படியாக என் தலைவிதியை நான் பம்பாயில் முடிவு செய்தேன். ம்..ஹும்..!) ஊரிலிருந்து வந்த களைப்பைப் போக்கிக்கொள்; நாளைக்கு கடை, கண்ணி (அது என்னங்க; கடை சரி..கண்ணி - அது என்ன?) போகலாமென்றார் உறவினர். அடுத்த நாள் ஒரு தந்தி வந்தது அப்பாவிடமிருந்து.


to be continued.............

14 comments:

  1. இன்ட்ரஸ்டிங்கான கட்டத்திலே கட் பண்ணிட்டீங்களே.. எப்போ 3?

    ReplyDelete
  2. பெரிய எழுத்தாளர்னு சொன்னதை உடனே நம்பிட்டீங்களா?

    சரியான இடத்துலே தொடரும் போட்டதைத்தான் சொல்றேன்:-))))

    ReplyDelete
  3. தருமி முந்தின கமெண்ட்டுக்குக் கோச்சுக்காதீங்க... ச்சும்மா வெள்ளாட்டு.

    இப்படித்தான் ஒருக்கா கோபால் அப்ப(?) யு.பி.எஸ்.சி. எக்ஸாம் எழுத நண்பனோடு டெல்லி
    போனப்ப பஸ்லே ஒரு பஞ்சாபியை ஏதோ தமிழிலே சொல்லிக் கிண்டல் செஞ்சப்ப, அந்த ஆள் சட்ன்னு
    திரும்பி, 'தம்பி.. கொஞ்சம் பார்த்துப் பேசுப்பா. நான் மெட்ராஸ்லே தான் கடை வச்சிருக்கேன்'ன்னு
    சுத்தமான தமிழிலே சொன்னாராம்.

    அவரு மட்டும் கோபத்துலே ஒரு அறை விட்டிருந்தாருன்னா கோபாலைக் கல்யாணம் பண்ணியிருக்கமாட்டேன்.
    ஆள் இருந்தாத்தானே கல்யாணம்?

    ReplyDelete
  4. "தருமி முந்தின கமெண்ட்டுக்குக் கோச்சுக்காதீங்க... ச்சும்மா வெள்ளாட்டு."
    ஏற்கெனவே சொல்லிருக்கேன் துளசி, வயசானாலும் sense of humour உண்டுன்னு. feel free. ஏன்னா நானும் அதுமாதிரி அப்பதான் comment அடிக்கமுடியும் - அடுத்தாப்ல சொல்றது மாதிரி..!

    என்ன பண்றது..கோபால் தலையில என்ன எழுதியிருக்கோ அதுதான நடக்கும் !!

    ReplyDelete
  5. துளசி,
    இது எப்படி இருக்கு?!


    நீங்களும்தான் இருக்கீங்களே. --l-l-d-a-s-u பாருங்க, எப்படி நம்ம எழுத்தில ஒரு ஆர்வம் காட்டுராரு!

    --l-l-d-a-s-u - நன்றீங்க. உங்க மாதிரி நம்ம 'ரசிகர்களை' நான் ஏமாத்துவேனா; இதோ வந்துட்டேன்.

    ReplyDelete
  6. நாகப்பட்டினத்தில வாங்கியிருந்தா நம்ம ஊரு ஆளா இருப்பாரு இல்லியா?

    நல்லா வாசி..

    ReplyDelete
  7. //'தம்பி, இங்க ஒண்ணும் வாங்காத; இது எல்லாமே பாதி விலையில நம்ம மீனாட்சியம்மன் கோவில் கடையில வாங்கிடலாம்' என்று அம்மா ஒருவர் எச்சரித்துவிட்டார்கள். ஆக நான் ஒன்றும் வாங்கவில்லை. அதன் பலன் பின்னால் எனக்குத்தான் கிடைத்தது.
    //

    இது, இது, சூப்பர், Mr.புலவர் :)

    Awaiting PART-II eagerly !!!

    ReplyDelete
  8. கரை வேட்டி,
    நன்றி. ஆமா, உங்க வேட்டிகரையின் கலர் என்ன?!

    enRenRum-anbudan.BALA,
    இதோ வந்திட்டேன், பாலா, part II என்ன, III-யே வந்தாச்சு

    ஆமா, அது யாரு கண்ணு? ஐஸ்மாதிரிகூட தெரியலையே!!

    ReplyDelete
  9. dharumi,

    antha kaNNu, 'meenAk kaNNOta' kaNNU ;-)

    ReplyDelete
  10. போன மாசம் குஜராத்துல ஒரு கோவில்ல ஒரு சாமி, பார்த்தா அனுமாரு மாதிரியும் இருந்தார், ஆனா இல்லை. என் பையன் உத்து உத்து
    பார்த்தைப் பார்த்த ஒரு பெருசு, பேச ஆரம்பித்தார். என் பையன், "ஹிந்தி மாலும் நை" என்று சொன்னான். உடனே அந்த ஆளும்
    "முஜே பீ மாலும் நை" என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
    அவனை காப்பாற்றும் நோக்குடன், " ஹம் மதராசி, உதர் ஹிந்தி நை" என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் சொன்னதும், திரும்ப அந்த ஆள் கொஞ்சம் சலிப்புடன் எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நாங்கள் கொஞ்சம் முழித்துவிட்டு, மெதுவாய் தப்பித்து வந்தோம். சோகத்துடன், அந்த ஆளு லூசு போல இருக்கு என்றதும், ஹிந்தி
    தெரிந்த என் மகள், அந்த ஆளு பேசியது ஹிந்தி இல்லை, குஜராத்தி, அவுரு தனக்கு ஹிந்தி தெரியாதுன்னு சரியாத்தான் சொன்னார்
    என்றாள்.
    திராவிடர்கள் எல்லாரும் மதராசிகள் அவர்களுக்கு, நமக்கு ஆந்திரா தாண்டினா சேட்டுங்கத்தான்.

    ReplyDelete
  11. அய்யா கரை வேட்டி,
    உங்க ப்ளாக் போனேன். அங்க என்ன கரை மட்டும் இருக்கு; வேட்டிய காணோம்...!!

    ReplyDelete
  12. சூப்பர் தருமி சார்.... அடுத்த பகுதி எப்போ??

    //ஒற்றைக்காலில் நின்று குரல் கொடுத்தவர்கள் அன்று என்னோடு அந்த பஸ்ஸில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்//
    என்ன ரெண்டுகாலையும் தூக்கி சீட்ல வெச்சிகிட்டு வசதியா உக்காந்து சிங் சொல்றதை கேட்டிருப்பங்க.. :)

    //ஆனா என்ன வாங்கிறதுன்னு தெரியலை.//
    கட்டிக்க போறவங்கதானே,
    என்ன அந்த செங்கோட்டை தான் எவ்வளவுனு விலை பேசியிருக்கிறது..ரொம்ப கஞ்சம்யா நீரு...

    //அது என்னங்க; கடை சரி..கண்ணி - அது என்ன?) //
    யாராச்சும் இருக்கீகளா...ஒரு பதிவு போட தலைப்பு தயார்...

    வீ எம்

    ReplyDelete
  13. அய்யா கரை வேட்டி,
    //உங்க ப்ளாக் போனேன். அங்க என்ன கரை மட்டும் இருக்கு; வேட்டிய காணோம்...!! //

    அதான் சொன்னாரே, எல்லா கட்சியையும் தோச்சு தோச்சு கரை மட்டும் இங்கே..வேட்டிய வேற ஒரு வெவரமான கரைவேட்டி உருவியாச்சு :)

    சரிதானெ க.வே?

    ReplyDelete
  14. வீ.எம்.,
    ஆனாலும் ரொம்பவே கிச்சு கிச்சு காட்டீட்டீங்க'ய்யா - க.வே. விதயத்தில!

    அவ்வை,
    நாகப்பட்டினத்தில வாங்கியிருந்தா நம்ம ஊரு ஆளா இருப்பாரு இல்லியா?
    அந்த அஸ்ஸாம்காரர் பற்றியெழுதினதை வாசிக்கலையா?

    பாலா,
    "கண்ணே மீனா
    உன் கண்ணே மீனா" (பார்த்திபன்)
    நல்லாயிருக்கில்ல?

    அனுஷா,
    ஆந்திரா தாண்டினா சேட்டுங்கத்தான்."
    நல்லா சொன்னீங்க. லக்ஷ்மண் ரேகா மாதிரி இது 'ஆந்திரா ரேகா', இல்ல?
    "

    ReplyDelete