Thursday, October 06, 2005

85. அது ஒரு நயா பைசா காலம்…





*

இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: ‘அணாவுக்கு நாலும்’பான்; அஞ்சு கேளு’. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே ‘பிச்சுக்கோ’ என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.


சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த வார்த்தைக்கு இன்னும் யாரும் அர்த்தமே சொல்லவில்லை..!)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை அவரு மண்டையைப்போட்டு கணக்குப் பாத்துக்கிட்டு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னா மனுஷன் அசந்திருவார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க’ அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?)

இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா? (இந்த சைனா… தொடர்பான ஒரு விஷயம் இருக்கு; அதை இன்னொரு பதிவில சொல்லிடுவோம்…)

இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு ‘டாண்’ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.
அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.

நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் ரஜனி படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த ‘பக்தன்’ போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.

அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு பத்து பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 10 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.

இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ என்று கேட்கலாமா, கேட்கக்கூடாதா என்பது இன்றைய பிரச்சனை!



*

Oct 06 2005 08:12 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 5 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
12 Responses
கல்வெட்டு Says: after publication. e -->October 6th, 2005 at 9:34 pm e
தருமி,நல்ல பதிவு.நயா பைசா (எல்லா காசுகளும்) புழக்கத்தில் இருந்தே ஆக வேண்டும்.பொருளாதாரம் எனக்குத் தெரியாது.ஆனால், ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்று சொல்லிக்கொண்டு பைசாவை கண்ணில் காட்டாதாது அரசின் குற்றமே.பணவீக்கம்தான் இதற்குக் காரணம் என்றால்எல்லா வளரும் நாடுகளும் இப்படியா இருக்கின்றன?வளர்ந்த நாடாகிவிட்ட பின்னால் பைசா திரும்ப வந்து விடுமா?
Dondu Says: after publication. e -->October 6th, 2005 at 10:07 pm e
என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு கஷ்டமும் இல்லை. காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே, முக்காலணா 5 நயேபைசே, ஒரணா 6 நயேபைசே. ஒன்றரையணா 10 நயேபைசே, மூன்றணா 19 நயேபைசே மற்றும் நாலணா 25 நயேபைசே. நாலணாவுக்குப் பிறகு பேட்டர்ன் அப்படியே ரிப்பீட் ஆகும்.நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.
அன்புடன்,டோண்டு ராகவன்
துளசி கோபால் Says: after publication. e -->October 7th, 2005 at 3:45 am e
தருமி,
இப்பக் கொசுவர்த்தி வாங்கணும். ஓடிப்போய் எட்டணாவுக்கு வாங்கிட்டு வர்றீங்களா?
இந்த ஓட்டக் காலணா எனக்கு ரொம்பப்பிடிச்சது. கவுன்லே வரிசையா இருக்கற பட்டனிலேஅதைக் கோர்த்து பட்டன் போட்டுக்கிட்டு, பக்கத்துக் கடையிலெ ஜஸ்ட் ஒண்ணு மட்டும் கொடுத்து எதாவது( என்ன கடலை முட்டாய்தான்) வாங்கித் தின்றதுதான். எத்தனை பட்டன் இருக்கோ அத்தனை காலணா கிடைக்கும்.அதனாலே எப்பவுமே ஃபுல்லா பட்டன்த்ரூ சட்டைதான் போட்டுக்கறது.
ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன். இங்கே ஆரம்பப்பள்ளியிலே ஒரு நாள் அதைக் கொண்டுபோய் show & tellசெஞ்சாச்சு.
koothaadi Says: after publication. e -->October 7th, 2005 at 5:32 am e
இந்த அணா விஷயத்த தாத்தா கிட்ட இருந்து அடிக்கடி கேட்டு இருகேன் ,அரைக்காணி etc எல்லாம் சொல்லுவார் ,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் ஒரு மண்ணும் புரியாது.நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க.
பிச்சைக்காரன் இப்பல்லாம் 1 ரூபா தான் வாங்குறதாக் கேள்வி .
//பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ //
இப்ப எல்லாம் சில்லறையக் கேட்டா நம்மளைல்லா பிச்சைக்காரன் மாதிரி பாக்குறானுக..
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 6:01 am e
//ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன்.//
பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)
மூர்த்தி Says: after publication. e -->October 7th, 2005 at 7:24 am e
பெரியவர் தருமி அவர்களே,
தாங்களால் இந்த வாரம் மிகவும் சிறப்பாகச் செல்கிறது.
அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்குப் புளி கேட்டால் பின்னால் வண்டி நிற்கிறதா என கடைக்காரர் கேட்பார்! இப்போது போய்க் கேட்டால் நாக்கை நீட்டு தடவுகிறேன் என்பார்கள்!
எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது.
ஷ்ரேயா Says: after publication. e -->October 7th, 2005 at 10:07 am e
துளசி.. கொசுவர்த்திச் சுருள் நீங்க வாங்கி வாங்கியே கையிருப்பு(கடையிருப்பு?) தீர்ந்திருச்சாம்!!
வசந்தன் - உமக்கு எரிச்சலோ? எங்கட 1, 2, 5, 10 சதக் கதைகளை எடுத்து விடுமன்..
(1, 2, 5,10 சதங்கள் கொஞ்சம், பழைய எண்கோண 2 ரூபா & 2 ரூபாத்தாள் 5 ரூபாத்தாள் - இதெல்லாம் ஒரு பெட்டீக்க போட்டு வைச்சிருந்தனான் இலங்கையில.. அம்மா எங்கையும் தூக்கிப் போட்டாவோ தெரியேல்ல :S.. கேட்கோணும்.)
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி தருமி.
கோ.இராகவன் Says: after publication. e -->October 7th, 2005 at 12:12 pm e
இந்த அணாக்களையெல்லாம் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் ஐந்து பைசா, ஒரு பைசா எல்லாம் பார்த்திருக்கிறேன். நெளி நெளி பார்டரோடு வரும் அந்த பத்து பைசாவோ அழகோ அழகு. விரலுக்குள் வைத்து அந்த நெளிவுகளைத் தடவி உணர்வது என்ன சுகம். அதெல்லாம் மிகச் சிறிய வயதில்.
இந்த மிச்ச நாப்பது காசு எல்லாம் பாக்கனுமுன்னா கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டியதுதான். இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 1:28 pm e
//நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.//
அப்ப முட்டாள்கள் தினம் கொண்டாடுறனீங்களோ?
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:18 pm e
கல்வெட்டு,“பைசா திரும்ப வந்து விடுமா?”-நல்லா வருமே! ஆச தோச அப்பள வடை….!
டோண்டு,“காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே:- அப்போ நீங்க கணக்கில ரொம்ப வீக்கே? ஏன்னா அப்ப என் கேள்வியே காலணாவுக்கு ரெண்டுன்ன, அரையணாவுக்கு நாலில்லையா என்பது தான்.என்னன்னா, நீங்க பெரியவங்க சொன்னதை அப்படியே கேட்ட நல்ல பிள்ளை. நானோ…அதுதான், பின்னால மத விதயத்திலேயும் ஆகிப்போச்சு போல!
துள்சி,“இப்பக் கொசுவர்த்தி வாங்கணும்.”- இதுக்குத்தான் சொன்னேன். நம்ம சைடு வாங்கன்னு; ‘குதிரையில போறது’ நம்ம பாட்டுக்கு நினச்ச நேரத்தில, நினச்ச இடத்தில…
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:28 pm e
கூத்தாடி,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் …அதெல்லாம் எப்டீங்க…நம்மல்லாம் அதுமாதிரி தப்பெல்லாம் பண்ணினதே இல்லீங்க!
வசந்தன்,“பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)”எல்லாம் ஒரு antiqueதான். நாளைக்கே 1000ரூபாய்க்கு வேல்யூ போகலாம். ஒட்டியாணம் வாங்கிறவங்களுக்கு இதல்லாம் ஒரு ஜுஜுபி’ங்க வசந்தன்! துள்சிட்ட சொல்லிடாதீங்க, சரியா?
மூர்த்தி,“எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது. ” -software ஆளுகளே இப்படி சொன்னா எப்படி?
ராகவன்,“எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!”-அதுக்காக நாட்டுப் பழம் வாங்கவுமா plastic money?
Dondu Says: after publication. e -->October 7th, 2005 at 10:33 pm e
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்ல முடியாது. நான் கூறிய மாற்றுகள் அதிகாரபூர்வமானவை. ஒரணாவிலிருந்து கூறுவேன்.
8 நயே பைசே ஒன்றேகாலணா, 10 நயே பைசே ஒன்றரையணா, 11 நயே பைசே ஒன்றேமுக்காலணா, 12 நயே பைசே இரண்டணா, 14 நயே பைசே இரண்டேகாலணா, 15 நயே பைசே இரண்டரையணா, 17 நயே பைசே இரண்டேமுக்காலணா, 19 நயே பைசே மூன்றணா, 21 நயே பைசே மூன்றேகாலணா, 22 நயே பைசே மூன்றரையணா, 24 நயே பைசே மூன்றேமுக்காலணா மற்றும் 25 நயே பைசே நான்கணா.
இதன் பிறகு பேட்டர்ன் ரிப்பீட்டுதான்.
அன்புடன்,டோண்டு ராகவன்

No comments:

Post a Comment