Saturday, November 05, 2005

101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…?





ஐந்தாவது வயதில் மதுரை வந்தாகி விட்டது. சிறிய குடும்பம்; அப்பா, அம்மா, நான். வந்ததுமே தூய மரியன்னைப் பள்ளியில் சேர்ந்தேன். ஏற்கெனவே சொன்னது மாதிரி, அம்மா இறப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள் எவ்வளவுக் கெவ்வளவு நினைவில் இல்லையோ, அதற்கு நேர் எதிர்மறையாக அதன் பின் நடந்தவைகள் பலவும் நன்றாகவே நினைவில் உள்ளன. முதல் நாள் பள்ளியில் மாணிக்கம் சாரிடம் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது, முதல் வரிசையில் சீட் பிடித்தது அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன். இப்போ சொல்லப் போற விஷயம் நடந்தது அநேகமாக எனது 11-12 வயதில் நடந்ததாக இருக்கும். ஆறு அல்லது ஏழாவது வகுப்பு படிக்கும்போது நடந்ததாக இருக்க வேண்டும்.



தாத்தாவின் பள்ளியிலேயே மூத்த அத்தைமார்கள் இருவரோடும் இரண்டிலிருந்து ஐந்தாம் வயது வரை அந்த புனித ஜோசஃப் பள்ளியில் - குடும்பப் பள்ளியில் - படித்துவிட்டு, இப்போது மதுரைக்கு வந்தாகிவிட்டது. வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் சொந்த ஊர் செல்லுவது வழக்கம். கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், கோடைகால விடுமுறையிலும் சொந்த ஊர் செல்வது, அடேயப்பா, என்ன சந்தோஷம்! ஊருக்குப் புறப்படும் முன்பே நம்ம தனிப்பட்ட முஸ்திபுகள் நிறைய இருக்கும் புறப்படுறதுக்கு முந்தின நாளே தூக்கமெல்லாம் வராது.அது கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்துக்கு வர்ரதுக்கு முந்தி இன்னொரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு. ஏன்னா, அநேகமா உங்களில் ஒருத்தருக்குமே அந்த விஷயம் தெரிந்திருக்காது. (That includes Dondu, Joseph…மற்ற ‘பெரியவர்கள்’!) அந்த மாதிரி விஷயத்தைச் சொல்லாம விடலாமா? நிகழ் & வருங்கால சந்ததிகள் என்னை மன்னிக்காதே!

அது என்னன்னா, மதுரை டூ திருநெல்வேலி, அல்லது மதுரை டூ தென்காசிக்கு ரயில் பயணம். ஏன்னா, எங்க ஊரு நெல்லை, தென்காசி இரண்டுக்கும் சரியாக நடுவில் இருந்தது. பிறகு, எங்கள் ஊர் செல்ல பஸ்ஸில் செல்லணும். கொஞ்ச வருஷம் முன்பு வரை வெளியூர் பஸ்களில் ஏறுவோர் பின் வாசல் வழியே ஏறி, உடனேயே அந்தக் கடைசி வரிசையில் உள்ள ‘முக்கு சீட்’டைப் பிடிப்பார்கள். பல வசதி. அவரவர் மனசைப் பொறுத்தது; காத்து வரும் நல்லா; சிகரெட் அடிச்சிக்கிட்டே வரலாம். ஏறுறவங்க, இறங்குறவங்களுக்கு உதவி பண்ணி, ‘போற வழிக்குப் புண்ணியம் தேடலாம்’! ஆனா, அப்போவெல்லாம் அந்த சீட்டே இருக்காது; அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன? - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும். இதச் சுற்றுவதற்கென்றே அங்கங்கே சின்ன சின்னப் பையன்கள் ஓடி வருவார்கள். அப்ப அவர்களுக்குச் ‘சம்பளம்’ ஒரு ஓட்டைக் காலணா; அட, ஒரு நாட்டுப் பழம் வாங்கிற காசுன்னு வச்சுக்குவோமே! இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பெட்ரோல்,டீசல் இவைகளுக்கு இருந்த தட்டுப்பாட்டால் இந்த steam buses பயன் படுத்தப்பட்டனவாம். பாய்லர் இருப்பதால் அந்தக் கடைசி வரிசையில் சீட்டுகளே இல்லாமல் space for luggage?-இருக்கும். அப்படி பஸ்களில் பயணித்து ஊர் வந்து சேர்வோம். அந்த பஸ்களை நடு நடுவே நிறுத்தி கண்டக்டர் பஸ்ஸின் கடைசியில் இருந்து கொண்டு, டிரைவருக்கு trip sheet details சொல்லுவார்’ இல்லை ‘கத்துவார்’. அப்போ, ‘மாறாந்தை ஒரு ஜி.டி., நல்லூர் ஒரு ஜி.டி.’ என்பது மாதிரி சொல்லுவார். அது என்ன, ஜி.டி. அப்டின்னு ரொம்ப நாளா ஒரு கேள்வி உள்ளேயே அரிச்சிக்கிட்டு இருந்து, பின்னாளில் ஜி.டி. என்பது got down (G.D.) என்று புரிந்தது.

பொது விடுமுறை என்பதால் மதுரைப் பெரியப்பா, பாளையன்கோட்டை பெரியப்பா, தூத்துக்குடி சித்தப்பா என்று ஒரு பெரும் ‘நகர் கூட்டம்’ சேரும். நிறைய cousins. பெரிய தாத்தா வீடு ரொம்பப் பெரிசு. ஓடிவிளையாடறது, கலை நிகழ்ச்சி இப்படிப் பல அப்பப்போ பெருசுகளின் கண் பார்வையிலோ, அவர்களுக்குத் தெரியாமலோ நடக்கும். ஆனா ஒரு வருஷம் மட்டும் தாத்தா ஸ்கூலில் என்ன காரணத்துக்கோ தெரியவில்லை; ஒரு பெரிய விழா நடந்தது. பகல் முழுவதும் விளையாட்டு, கண்காட்சி அப்டி இப்டின்னு என்னவெல்லாமோ நடந்தது. அதன்பின், மாலை ஒரு நாடகம்.

கிறித்துவ மக்கள் நாடகம் போட்டால் என்ன போடுவார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்; ஊதாரிப் பிள்ளை கதைதான் என்று யாராவது சரியாக நினைத்திருந்தால் நீங்களே உங்கள் முதுகை ஒரு தட்டு தட்டிக் கொள்ளுங்கள்! எப்படி அந்தக் கதையின் அடிப்படையையே நான் பின்னால் கேள்விக்குரிய ஒன்றாக எடுத்துக்கொண்டேன் என்பதுதான் ஒரு irony! அது என்ன ராசியோ, மாயமோ தெரியலை; நானே மொத்தம் மூன்று தடவை இதே கதையை வைத்துப் போடப்பட்ட ட்ராமாக்களில் ஒரே ரோலில் நடித்திருக்கிறேன்; இரண்டாம், மூன்றாம் தடவைகள் மதுரையில நம்ம கோவில்ல இளைஞர் மனறத்திலிருந்து போட்டது.
இப்போ நம்ம முதல் நாடக்த்துக்கே வருவோம். பெரிய ஸ்டேஜ், ஸ்க்ரீன் அது இதுன்னு திட்டம் போட்டாச்சு. இவ்வளவையும் நடத்தியது என் கடைசி இரண்டு அத்தைகள்; அப்பாவின் கடைசித் தங்கைகள்.



படம் பார்த்துக்கொள்ளுங்கள். நடுவில் நிற்கும் எனக்கு இடப்பக்கம் நிற்பது ரோஸ் அத்தை; வலது பக்கம் மரியத்தை. இவர்கள் பொறுப்பில்தான் அப்போது எங்கள் பள்ளி நடந்துவந்தது. விழாவை முன்னின்று நடத்தியது இவர்களே.(ரோஸத்தை பின்னாளில் nun ஆனார்கள்; ரொம்ப நல்ல, எனக்குப் பிடிச்ச அத்தை; இப்போது இரு மாதங்களுக்கு முன்புதான் காலமானார்கள்.)இந்த இரண்டு அத்தைமார்களின் தலைமுடியழகை வெகு சிலரிடமதான் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தடிமன்; அவ்வளவு நீளம். ரோஸத்தை nun ஆனபோது நிறைய பேர் அவர்களின் முடிக்காகவே ஸ்பெஷலாக வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது.




டிராமா வசனம் எல்லாம் தயார். ‘நகர் கூட்டத்தைச்’ சேர்ந்த மக்களுக்கு டிராமாவில் lion’s share கிடச்சுது. அப்பா கேரக்டருக்கு என் அண்ணன் (மதுரை) ஒருவன், எக்ஸ்ட்ராவாக ஒரு தங்கை (பாளையன்கோட்டை) கேரக்டர் இருந்திச்சு; அப்புறம் டான்ஸ் இரண்டு; என் இன்னொரு அண்ணன் - என்னைவிட ஒரு வயது மூத்தவனுக்கு ஹீரோ ரோல் கொடுக்கப்பட்டது. எனக்கு - ராஜா பக்கத்தில நின்னு சாமரம் வீசுற காரக்டர் மாதிரி - ஹீரோவின் நண்பன் காரக்டர் கொடுக்கப்பட்டது.வசனம் மனப்பாடம் செய்தோம். அத்தைகள்ட்ட ஒப்பிக்கணும். முதல் நாள் ரிகர்சல்; அதுதான் screen test அப்போதைக்கு! எனக்கு ஓகே ஆயிரிச்சி. அப்பா காரக்டர் ஓகே. ஆனா இந்தக் கதாநாயகன் மட்டும்தான் சரிப்பட்டு வரலை.அத்தைமார்கள் முயன்று பார்த்தார்கள். அவர்களாலும் ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்தது a merciless operation தான்! எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஹீரோ வேஷம் எனக்கு. அந்த அண்ணனுக்கு எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேஷம். அத்தைமார்கள் முதலிலேயே சொல்லிவிட்டார்கள்; நானும் சரியாகச் செய்யவில்லையெனில் என்னிடமிருந்தும் வேஷம் பறிக்கப்படுமென்று. மனப்பாடம் பண்ண கால அவகாசம் கொடுக்கப்பட்டு மறுபடியும் ரிகர்சலுக்கு வந்தேன். அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிற சீன்; ஒரே டேக்கில் ஓகே ஆச்சு!

ரெண்டு அத்தைமார்களில் உண்மையிலேயே ரோஸத்தை ரொம்ப சாஃப்ட் டைப்; மரியத்தை கொஞ்சம் tough -இப்பவும்! அவங்கவங்க நிஜ கேரக்டருக்கு ஏத்த மாதிரி, முதல்ல அப்பாகூட சண்டை போடற சீன், சொத்தைப் பிரிச்சுக்கிட்டு போற சீன்களுக்கு மரியத்தையும்,அதன் பின் மனந்திருந்திய மைந்தனாக மாறும்போது ரோஸத்தையும் எனக்கு டைரக்டர்கள் ஆனார்கள். பயங்கர ரிகர்சல்; நடனப் பயிற்சிகள்;’பச்சைக் கிளி பாடுது; பக்கம் வந்தே ஆடுது’ன்னு ஒரு பாட்டு, படம் என்னவென நினைவில்லை (அமரதீபம்..?) - இந்தப் பாட்டுக்கு ஒரு ‘கிளப் டான்ஸ்’! அதைவிடவும்,நாங்கள் நினைத்தும் பார்க்காத சைசுக்கு ஸ்டேஜ்; அது மட்டுமா? ராஜா காஸ்ட்யூம் இருக்குமே அதெல்லாம் வந்திச்சி. எனக்கு ஒரு புளு வெல்வெட்ல கோட்டும், கால்சராயும்.என்ன கால்சராய்னு சொல்றென்னு பாத்தீங்களா? ஏன்னா, அது அரையும் இல்லாம, முழு நீளத்துக்கும் இல்லாம ரெண்டுங்கெட்டானா - இந்தக் காலத்து pedal pusher மாதிரின்னு வச்சிக்கங்களேன். இதை நல்லா ஞாபகம் வச்சிக்கிங்க; பின்னால ஒரு touching scene இத வச்சுதான்.

விழா அன்று மதியம் வரை மக்களோடு மக்களாக எல்லாநிகழ்வுகளிலும் பங்கெடுத்தாயிற்று. அத்தைமார் சொன்னது மாதிரி மாலை சீக்கிரமே ஸ்டேஜுக்குப் பின்னால், வந்தாச்சு. எங்கிருந்து வந்திருந்தார்களோ, மேக்கப் போடக்கூட வெளியிலிருந்து ஆள் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் முன்வரைகூட அண்ணனாய் கூட சுற்றியவன், இப்போது வேட்டி கட்டி, தலை முடியெல்லாம் வெள்ளையாய் மாறி ‘அப்பா’வாக மீசையோடு எதிரில் நின்றான். தங்கைகள் நங்கைகளாக மாறி, சேலையில், தலையில் கிரீடத்தோடு நின்றார்கள். வியப்பாய் இருந்தது; வேடிக்கையாயும் இருந்தது. நான் என் புளு வெல்வெட் கோட்டோடும், கால்சராயோடும் நின்றேன். ஒரிஜினல் ஹீரோவாக இருந்த சின்ன அண்ணன் கொஞ்சம் பொறாமையோடுதான் என்னைப் பார்த்தான். அவனுக்கு வெல்வெட் கோட் ஒன்றும் கிடையாது, பாவம்!

நாடகம் ஆரம்பித்தது. மரியத்தைதான் prompter. சைடுல நின்னுக்கிட்டு அப்பப்போ எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க - ஒரு ரிமோட் கன்ட்ரோல்தான். அப்பாகூட சண்டை போட்டு, சொத்து பிரிச்சிக்கிட்டு, நண்பர்களோடு கும்மாளமாயிருந்தாச்சு. இப்போ, ஒரு ‘கிளப் டான்ஸ்’. அதுவும் முடிஞ்சிது. இப்போ நான் அந்த கிளப்ல சாப்பிடணும்; அதுக்குப் பிறகு காசு இல்லாம அடிபட்டு… இப்படியாகப் போகணும் கதை. சாப்பாடு வந்திச்சு;ஏற்கெனவே மரியத்தை சொல்லியிருந்தாங்க…சும்மா சாப்டறது மாதிரி ஒரு கடி கடிச்சிட்டு அடுத்த வசனம் பேசணும்னு. நானும் ஒரு கடி கடிச்சேன். என் நேரம். நான் கடிச்ச வடையில கடிபட்டது ஒரு மிளகாய்! அம்மாடியோவ்! ஒறப்பு தாங்கல! ஒறப்புனால வாயில் எச்சில்; இந்த லட்சணத்தில் எப்படி வசனம் பேசுறது? தண்ணீர் என்ன கேட்டா கிடைக்கவா போகுது? என்ன பண்றது. வடையோடு ஒரு அல்வா - அன்னைக்கி பகல்ல நடந்த விழாவில் விற்பனைக்கு இருந்தது - அது ஒண்ணு தட்ல இருந்துது. அவசர அவசரமா அதைப் பிரிச்சேன். அத்தை சைடுல இருந்து ‘அதெல்லாம் வேணாம்; வசனம்..வசனம் பேசுங்கிறாங்க; எங்க வசனம் பேசுறது. அத்தை, நான் இதுதான் சான்ஸுன்னு அல்வா சாப்பிடறன்னு நினச்சுக்கிட்டு அங்க இருந்து திட்றாங்க! அதெல்லாம் பாத்தா முடியுமா, என்ன? ஒருவழியா அல்வாவை ரெண்டு மூணு கடி கடிச்சதும் வசனம் பேசுற அளவுக்கு எரிச்சல் நின்னு போயிருந்தது. ஆடியன்ஸுக்கு நான் ரொமப் நேட்சுரலா நடிக்கிறமாதிரி இருந்திருக்கும் போல, சிலர் நாடகம் முடிந்த பின் ‘இதான் சான்ஸுன்னு ஒரு வெட்டு வெட்டினது மாதிரி இருந்தது’ என்றார்கள்! அப்போ, நம்ம நடிச்சது அவ்வளவு தத்ரூபம்னு தெரியுதில்லா…?

அடுத்துதான் நம்ம ‘டச்சிங் சீன்’!

சாப்டிட்டு கொடுக்க காசில்லாம அடி படறேன்; அதற்குப் பிறகு கிளப் ஓனரா நடிச்ச நண்பன் வைத்தியலிங்கம் என் சட்டையை மட்டும் பிடுங்கி என்ன விரட்டி விடணும். ஸ்கிரிப்ட்ல அப்படித்தான் இருக்கும். அவனுக்கு என்ன கோவமோ, என்னமோ, சட்டையைக் கழட்டிக் கொடுத்திட்டு போ என்றான். அதுவரைக்கும் சரி… அதுக்காகவே உள்ளே பனியன் போட்டு உட்டுருந்தாங்க. ஆனால் அவன் அடுத்து என் கால்சராயையும் கழட்டுங்கிறான். அவனது சொந்த improvisation அது! என்ன செய்றதுன்னு தெரியலை. நான் ஓடப் பார்க்கிறேன்;அவன் விரட்டுறான். அவன் மட்டும்தான் improvise பண்ண முடியுமா? ஓடும்போதே உள்ளே அரைக்கால் சட்டை போட்டுருக்கேனான்னு நிச்சயம் பண்ணிக்கிட்டு, அதன் பிறகு அவன் பிடியில் சிக்கி, அதன்பின் கால் சராயைக் கழட்டிக்கொடுத்து சோகமாக நடக்க… (இப்போ பேக்ரவுண்ட்ல அத்தைமார் இருவரும் ஒரு பாட்டு - ரெண்டுபேருமே ரொம்ப நல்லா பாடுவாங்க)..ரொம்ப அப்ளாஸ் அந்த சீனுக்கு. அதுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு, திருந்தி, அப்பாட்ட போய் மன்னிப்பு கேட்டு…கடைசியில் எல்லாம் சுகமே!

ட்ராமா முடிஞ்சு - அத்தைமார் இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க - வீட்டுக்கு அப்பம்மாவை போட்டிருந்த வேஷத்தோடு போய் பார்க்க ஆசைப்பட்டு, மேக்கப்போடு வீட்டுக்குப் போனேன். அப்பம்மா மூஞ்சே நல்லா இல்லை; என்னைப் பார்த்ததும் ஒரே அழுகை; கட்டிப் பிடிச்சிக்கிட்டாங்க. ட்ராமா பாக்கும்போதே அழுதுட்டாங்களாம். எம்(பேரப்)பிள்ளையை அந்தக் கிளப்-காரன் இப்படி - கால் சட்டையையும்கூட பிடுங்கிக்கிட்டு - கொடுமைப் படுத்திட்டானேன்னு அழுகை. பக்கத்தில இருந்த ஒரு சித்தியும் அழுதிட்டாங்க. எனக்குக் கூட அழுகையா இருந்திச்சு. வைத்தி மேல கோவமா வந்திச்சு. (பின்னாளில் போலீஸ்காரன் ஆனான் என்று கேள்வி.)

பிறவி நடிகன்..பிறவி நடிகன்..அப்டீம்பாங்களே…அதெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களைத்தான். இல்லைன்னா அந்த வயசில ஸ்டேஜ் ஏறி, வெளுத்துக்கட்டி, மக்களைக் கண்ணீர் விடுற அளவுக்கு உருக்கணும்னா அது என் மாதிரி, சிவாஜி மாதிரி பிறவி நடிகர்களால மட்டும்தான் முடியும். இல்லீங்களா? என்ன ஆகிப்போச்சுன்னா, அவர் அப்படியே ஸ்டேஜ், ட்ராமா, சினிமான்னு வளர்ந்துட்டார். நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா? ஆனா எனக்கு ஒண்ணும் இதனால பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. (பாருங்க, சும்மா அப்டியே தமிழ்மணம் பக்கம் வந்து அப்டியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்னு வந்தவனை ஒரு வாரத்திற்காகவாவது இஸ்டாரா இருக்கணும்னு மக்கள் கேக்கலியா? ) சினிமாவில ஸ்டாரா ஆனாதான் உண்டா அப்டின்னு நாமல்லாம் ஒரு பெரும் போக்கா போயிடறதுதான். அதனால் எனக்கு இதில் ஒரு வருத்தமும் இல்லை. வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பான்னு போயிடறதுதான்.

ஆனா என்ன, நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு செவாலியே பட்டமோ, தாதாசாகேப் பால்கே பட்டமோ கிடைக்க இருந்த ஒரே சான்ஸும் போயிருச்சி !

Nov 05 2005 11:40 am சொந்தக்கதை.. edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 7 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
26 Responses
தாணு Says:
November 5th, 2005 at 3:20 pm e
நீங்க சிறந்த `நட்சத்திரமாக’ இருங்க, நடிகன் ஆகவேண்டாம்.

கொல்லர் ஊதுவது பேர் `துருத்தி’ன்னு எனக்கு ஞாபகம்.

Dondu Says:
November 5th, 2005 at 3:44 pm e
“அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன? - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும்.”

அந்த பாய்லர் பஸ்களை பற்றி என் தந்தை கூற கேள்விப்பட்டிருக்கிறேன். நான் குழந்தையாக இருந்த போது அவை இருந்தனவாம். அவை இப்போது எங்கே என்று நான் அக்காலத்தில் கேட்டதற்கு தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார். அவற்றையெல்லாம் உங்கள் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dharumi Says:
November 5th, 2005 at 7:07 pm e
தாணு,
“நீங்க சிறந்த `நட்சத்திரமாக’ இருங்க, நடிகன் ஆகவேண்டாம்” -
All the world’s a stage,
And all the men and women merely players; …” so sayeth செகப் பிரியர்!!

dharumi Says:
November 5th, 2005 at 7:10 pm e
தாணு,
“`துருத்தி’ன்னு”// — ஒரு தோல் பை இருக்கும்; புஸ்..புஸ்ஸுன்னு ஊதுவாங்க; நான் சொல்றது சர்..சர்ருன்னு சுத்தறது…!

dharumi Says:
November 5th, 2005 at 7:12 pm e
டோண்டு,
“அவற்றையெல்லாம் உங்கள் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது!” //-
- இதுக்குத்தான் இந்த மாதிரி சின்னப் பசங்களுக்கு !? பழைய கதையெல்லாம் சொல்லக்கூடாதென்கிறது!

padma arvind Says:
November 5th, 2005 at 7:46 pm e
விளையாட்டா எழுதினாலும், அடிப்படையில் ஒரு உண்மை இழையோடுகிறது. பொதுவாகவே இந்தியாவில் படிப்புக்கு கிடைக்கும் அளவு மற்றவைகளுக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் படிக்க மட்டுமே குழந்தைகள் ஊக்குவிக்க படுகிறார்கல், விளையாட்டு, கலை துறையில் ஊக்கம் கிடைத்தாலும் அது ஒரு extra curricular ஆக பார்க்க படுகிறது.
இப்பகூட நாளாகலை தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம். அமிதாப் இனும் நடிக்கலையா என்ன?

dharumi Says:
November 5th, 2005 at 9:10 pm e
“விளையாட்டா எழுதினாலும்”// - ஏங்க பத்மா, விளையாடுறீங்களா? மனுஷன் எவ்வளவு சீரியஸா எழுதறான்; நீங்க என்னடான்னா…
“தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம்.அமிதாப் இனும் நடிக்கலையா என்ன? :// நம்ம லெவல்லையே எங்கேயோ கொண்டு போய்ட்டீங்களே..!

ஜோ Says:
November 5th, 2005 at 9:17 pm e
தருமி அவரை எங்கள் நடிகர் திலகம் லெவலுக்கு நிறுவ முயன்றால் ,பத்மா அவரை பாராட்டுவதாக நினைத்து அமிதாப் லெவலுக்கு இறக்கி விட்டார் .இதை வன்மையாக கண்டிக்கிறேன் .ஹி..ஹி..

madhumitha Says:
November 5th, 2005 at 10:11 pm e
நான் பிறந்தது தென்காசியில் தான் தருமி

அப்பல்லாம் நாங்க திருநெல்வேலி ஜில்லாவில தென்காசி ஊரிலே திருப்பிச்சொல்லி வழக்கமில்லன்னு சொல்லுவோம்.
திருப்பித்திருப்பி கேட்டாலும் இதையே சொல்லுவோம்,மறுபடி சொல்லக்கூடாதுன்னு தெரியாம.

‘சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…?’

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி.

வெளிகண்ட நாதர் Says:
November 5th, 2005 at 10:13 pm e
தருமி, நான் பத்மா அவர்கள் கூறியது போல், நம் நாட்டில் படிப்புக் கொடுக்கும் மரியாதையை மற்ற கலைகளில் கொடுப்பதில்லை, அதனால் பொரும்பாலோர், சிறுவயதில் இது போன்று அசாத்திய திறமைகள் பெற்றிருந்தாலும், அந்த துறைகளில் வளர்ந்து பேரும், பகழும் அடைய முடிவதில்லை. மாறாக மற்ற வழிகளில் வாழ்க்கைய அமைத்து ஒரு சாதரண மனித வாழ்க்கை கொண்டு இறந்தும் போகின்றனர்.

padma arvind Says:
November 5th, 2005 at 11:53 pm e
ஜோ: நீங்கள் சிவாஜி ரசிகர் என்று நினைத்தேன். இன்னொரு செவாலியே உருவாக முடியும் என்று நினக்கிறீர்களா? மதுமிதா: நன்றி.
அமிதாப்பின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பித்தது 60க்கு பிறகுதானே.மற்றபடி தருமியின் திறமை வாழ்க, வளர்க

துளசி கோபால் Says:
November 6th, 2005 at 1:36 am e
தருமி,

இப்பத்தான் கொசுவர்த்தி வாங்கக் கிளம்பிக்கிட்டு இருக்கேன். ஞாயித்துக்கிழமை கொஞ்சம் ஓய்வா இருக்கலாமுன்னா……வுடமாடீங்கப்பா நீங்கெல்லாம். ஸ்கூல்…. ஸ்டேஜ்…. நாடகம்….

முகமூடி Says:
November 6th, 2005 at 5:37 am e
நல்லாருந்தது உங்க “பாய்லர் பஸ்”க்ராஃப்… நீங்க சொன்ன அந்த பஸ்ஸ நான் பாத்திருக்கேன் (ஓடாம சும்மா ஒரு காட்சிப்பொருளா நின்னுகிட்டு இருந்தப்போ)

நாடகத்த பாத்து உங்க பாட்டி & சித்தி அழுத சீன் நல்லாருந்தது…

***

// நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு செவாலியே பட்டமோ, தாதாசாகேப் பால்கே பட்டமோ கிடைக்க இருந்த ஒரே சான்ஸும் போயிருச்சி //

அந்த வருத்தமே வேணாம் தருமி… நீங்க ஒரு படம் ஆரம்பிங்க, என்ன ஈரோவா போடுங்க… அப்புறம் பாருங்க செவாலியே, ஆஸ்கர் எல்லாம் தன்னால வரும்…

dharumi Says:
November 6th, 2005 at 1:02 pm e
ஜோ,
அமிதாப் லெவலுக்கு இறக்கி விட்டார்// அப்போ, அமிதாப் மேல நான் வச்சிருக்கிற மரியாதைதான் நீங்களும் வச்சிருக்கீங்களா, ஜோ?

dharumi Says:
November 6th, 2005 at 1:05 pm e
மதுமிதா,
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி. // அப்டின்னா, அடுத்த ஜென்மத்திலா?

dharumi Says:
November 6th, 2005 at 1:06 pm e
பத்மா,
இன்னொரு செவாலியே உருவாக முடியும் என்று நினக்கிறீர்களா?//
- ஜோ, இங்க பாத்தீங்களா, நமக்கு மேல் ஒரு சிவாஜி விசிறி…!

dharumi Says:
November 6th, 2005 at 1:10 pm e
துளசி,
ஸ்கூல்…. ஸ்டேஜ்…. நாடகம்….கொசுவத்திச் சுருளு…// …ஆரம்பிக்கப் போறாங்க’ய்யா, ஆரம்பிக்கப் போறாங்க…

dharumi Says:
November 6th, 2005 at 1:16 pm e
முகமூடி,
‘’நீங்க ஒரு படம் ஆரம்பிங்க, என்ன ஈரோவா போடுங்க… அப்புறம் பாருங்க //
முகமூடி, சீரியஸா கேளுங்க…நீங்களோ ஒரு N.R.I. இப்பவெல்லாம் அவுக எடுக்கிற - ‘cross over’, அப்டின்னு - படங்களுக்கு மவுசு சாஸ்தி. நீங்க என்ன பண்றீங்க…கொஞ்சம் பைசாவ வெட்டி விடுங்க. நம்ம கைவசம் ஆளுக இருக்காங்க. அத வச்சு, பாலிவுட்ல Black எடுத்தது மாதிரி நாமளும் ஒரு ‘அரக்குப் பச்சை’, ‘லைட் மஞ்சள்’, -இது மாதிரி தலைப்பில ஒரு படம் எடுத்து உட்டோம்னு வச்சிக்கிங்க, நீங்க எங்கையோ போயிருவீங்க…அஸின் கால்ஷீட் நான் எப்படியும் வாங்கிடறேன். நீங்க லீவுக்கு வரும்போது ஒரு ‘குத்துப்பாட்டு ஒண்ணு உங்களுக்குப் போட்ருவோம்.

எப்படி நம்ம ப்ளான்…?

dharumi Says:
November 6th, 2005 at 1:19 pm e
வெளிகண்ட நாதர்,
//சிறுவயதில் இது போன்று அசாத்திய திறமைகள் //
- என்ன நீங்க…உண்மைன்னாலும் இப்படியா பப்ளிக்கா பாராட்றது…!

ramachandran usha Says:
November 6th, 2005 at 5:58 pm e
தருமி மனம்தளர வேண்டாம். விளையாட்டுக்கு சொல்லவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பிரபல விளம்பர நிறுவனங்கள் எல்லா வயது ஆட்களையும் மாடலாய் எடுக்கிறார்களாம். நீங்கள் முயற்சிக்கலாம்.
விநாயக மூர்த்தி ( பெயர் சரியா) சமீபத்தில் அறிமுகம் ஆன தாத்தா. “கண்ணுக்குள்ள… வெச்சிருக்கா சிறுக்கி” என்று தூள்படத்தில் பாடலும் பாடினாரே அவர்தான்.
முயற்சி திருவினையாக்கும்.

வெளிகண்ட நாதர் Says:
November 7th, 2005 at 9:17 am e
இது மாதிரி உங்களை பாரட்டினதுல கொஞ்சம் தன்னலமும் உண்டு, நம்மலும் இது மாதிரி திறமை வச்சிருந்தும், ஊரே பாராட்டி ஊக்கம் கொடுத்தும், இஞ்சினியர் படிச்சிட்டு இவணுக்கு போற புத்தியப் பாரு, அப்படின்னு சுத்தி நின்ன உறவுக்கும்பலு சத்தம் போட்டதுனால, மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ்பண்ணவ நான். அதான் இந்த பின்னோட்ட ஏக்கம் போங்க. நீங்க என்னடான்னா….

கோ.இராகவன் Says:
November 7th, 2005 at 1:37 pm e
ஆகா! இன்னொரு சிவாஜியாகாவிட்டால் என்ன! இங்கே தருமியாகி கருமித்தனமில்லாமல் நல்ல பதிவுகளைத் தருகின்றீர்களே. அது போதும் எங்களுக்கு.

அப்புறம். நீங்கள் சொல்லும் பாய்லர் பஸ்ஸைக் கற்பனை செய்து பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. ஏதேனும் பழைய படங்கள் இண்டர்நெட்டில் கிடைக்குமா?

நீங்கள் சொல்வது போலத்தான் நடிகர் செந்திலின் மனைவி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் அடி வாங்கும் பொழுது எல்லாரும் சிரிப்பார்களாம். ஆனால் இவருக்குத் தர்ம சங்கடமாக இருக்குமாம். ஆகையால் அவர் நடிக்கும் படங்களைப் பார்ப்பதில்லையாம்.

dharumi Says:
November 7th, 2005 at 8:31 pm e
வெளிகண்ட நாதரே’

மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ்பண்ணவ நான். “//
- கொஞ்சம் அந்தக் கதையை எடுத்து விடுங்க. கேக்கணும்போல இருக்கு…!

dharumi Says:
November 7th, 2005 at 8:33 pm e
கோ. இராகவன்,
“நல்ல பதிவுகளைத் தருகின்றீர்களே” //
- நிஜமாதான் அப்படிசொல்றீங்க..இல்லியா…?

வெளிகண்ட நாதர் Says:
November 7th, 2005 at 11:37 pm e
இருக்கு, இருக்கு, பாலக்கரை பாலனின் பால்ய பார்வையில இதேட பதிவு வர இருக்கு. கொஞ்சம் பொறுங்க!

கோ.இராகவன் Says:
November 8th, 2005 at 11:53 am e
// நிஜமாதான் அப்படிசொல்றீங்க..இல்லியா…? //

ஆமா ஆமான்னு தான் இதுக்கும் சொல்வேன்.

No comments:

Post a Comment