Tuesday, April 25, 2006

154. பிள்ளையாரும் பால் குடித்தார்…




 அது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்னு தெரியலை; ஆனா எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஊரென்ன உலகமே ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு. லண்டன் பிள்ளையார் கோவிலில் குடம் குடமா பிள்ளையார் குடிக்கிறதுக்காக நம்மூர் படித்த மக்கள் பலர் பால் ஊத்தினதைப் படமாக எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள். அன்றைக்கு நடந்தது இன்னும் நல்லா நினைவில் இருக்கு. வீட்டுக்கு வெளியே நான் என் குடும்பத்தாரோடு நின்று கொண்டிருந்தேன் - ஏதோ தெருவும் ஊரும் வித்தியாசமான கல கலப்போடு இருந்தது மாதிரி இருந்ததால். அப்போது எதிர்த்த வீட்டுப் பையன் - ஒன்பதாவது படிக்கிறவன் - அவன் அம்மாவோடும், அக்காமார்களோடும் விரைந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். வேகமாக எங்களிடம் வந்து ‘பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்’ என்றான். சரியாக விஷயம் புரிபடாமல் ‘என்னப்பா? ‘ என்று கேட்டேன். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்; பார்க்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். 

பிள்ளையாராவது, பால் குடிக்கிறதாவது என்று சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். ஆனாலும் தெருவில் சல சலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் - நாங்கள்தான் கிறிஸ்துவர்கள் ஆயிற்றே - வேற சாமி பால் குடிச்சி அதிசயம் பண்ணுதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன? 

 கொஞ்ச நேரம் ஆச்சு; அடுத்த தெருவுக்குப் போன எதிர் வீட்டு பையன் ஓடிவந்து ‘நிஜமா அந்த வீட்டுல இருக்கிற பிள்ளையார் பால் குடிச்சார்’ அப்டின்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான். அப்பவும் நான் கண்டுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் ஓடிவந்த பையன் பரவசத்தோடு, ‘எங்க வீட்டுப் பிள்ளையாரும் குடிக்கிறார்; அப்பா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க’ அப்டின்னான். சரி, பிள்ளையாரத்தான் போய் பார்த்துட்டு வந்துருவோமேன்னு போனேன். 

அங்கே ஏற்கெனவே பிள்ளையார் பால் குடிச்சிருந்தார். பையனோட அப்பா, நம்ம நண்பர் ராமச்சந்திரன் ஒரு தட்டில் இருந்த பிள்ளையார் முன்னால் அமரிக்கையாக உட்கார்ந்து பால் குடுக்க, நல்ல பிள்ளையாக பிள்ளையார் கொடுத்த பால் முழுவதையும் குடித்துக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பூனில் பாலைக் கொண்டு போய், அவரது தும்பிக்கை வயிற்றிற்கு மேல் வளைந்து இருக்கும் இடத்தில் வைத்ததும், பிள்ளையார் பாலை சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சார் பாருங்க…அப்படியே நான் அசந்துட்டேன். என்னடா இது கலிகாலமா போச்சேன்னு நின்னுக்கிட்டு இருந்த போது நண்பர் என்னிடம் ஸ்பூனை நீட்டினார். நானும் பாலை ஸ்பூனில் கொடுக்க பிள்ளையார் அதே மாதிரி சர்ருன்னு உறிஞ்சிட்டார். வெலவெலத்துப் போய்ட்டேன். 

புத்தி கேட்கலை.  சோதனை தொடர்ந்தது. வேற வேற இடத்தில வச்சுப் பார்த்தேன். சில இடத்தில பால் உறிஞ்சப்பட்டது; சில இடத்தில் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய, நான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைச் சுவற்றில் இணைப்பதற்காக உள்ள கீலில் இருந்த சின்ன இடைவெளியில் ஸ்பூனை வைத்தேன்.இப்போவும் பால் சர்ரென்று உறிஞ்சப்பட்டது. நண்பர் ஐயப்பர் பக்தர். அந்த சிலை ஒன்று சிறியது இருந்தது. ஐயப்பனையும் பால் குடிக்க வைத்தேன். நண்பர் குடும்பத்தினருக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. பிள்ளையார் மட்டுமல்லாமல், ஐயப்பன் குடிச்சாகூட பரவாயில்லை; கதவின் கீல் கூட குடிக்குதேன்னு ஆச்சரியம். ‘எப்படி அங்கிள்’ என்ற பையனிடம் ‘தெரியலைப்பா; ஏதோ இயற்பியல் விஷயம் இருக்கு; ஒருவேளை capillary action ஆக இருக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். (பின்னால் அது surface tension என்று சொன்னார்கள்.) 

 எங்கள் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் என்னாயிற்று என்று கேட்டார்கள். ‘கொஞ்சம் பாலும் ஒரு ஸ்பூனும் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த மேரி மாதா சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மாதாவின் கால் பக்கம் உள்ள வரை ஒன்றிலும், கூப்பிய கைகளுக்கு அருகிலும் ஸ்பூனை வைத்ததும் மாதாவும் பால் குடித்தார்கள்! பிள்ளைகளிடமும் கதவுக் கீல் பால் குடிப்பதையும் காண்பித்தேன். 

 அடுத்த நாள் கல்லூரியிலும் பரபரப்பு. கிறித்துவ நண்பர் அகஸ்டின் நம்பிக்கையில்லாமல் ‘அதெப்படி பிள்ளையார் பால் குடிப்பார்; சுத்த ‘இதுவா’ இருக்கேன்னார். நான் ‘என் கண்ணால் பார்த்தேன்’ என்றேன். அதெப்படி என்றார். நடந்ததைச் சொன்னேன். இயற்பியல் துறை ஆட்களிடமும் கேட்டேன். அவர்களும் என் தியரி சரியாக இருக்கலாமென்று சொன்னார்கள். இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். 

பிள்ளையார் கதை எல்லாம் ஆறின கேஸாக ஆகிப் போயிருந்தது. அப்போது ஒரு நாள் நண்பர் அகஸ்டின் ஒரு ஃபோட்டோ காப்பி ஒன்றுடன் என்னிடம் விரைந்து வந்தார். எத்தியோப்பாவில் அமெரிக்க சிப்பாய் ஒருவன் sand storm ஒன்றைப் படம் எடுத்து அதைப் பிரிண்ட் செய்து பார்த்த போது அந்த சூறாவளியில் ஏசுவின் முகம் தெரிந்ததாக ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் வந்திருந்த படத்தின் நகல் அது. பயங்கர பிரமிப்புடன் அதை என்னிடம் கொண்டு வந்து அதைக் காண்பித்தார் - ஒரு மத நம்பிக்கையற்றவனை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் நோக்கமாக அது எனக்குத் தோன்றியது! ‘ஏனய்யா, ஒரு வருஷத்துக்கு முன்பு வேற மதத்து சாமி பால் குடிக்கிதுன்னு சொன்னப்போ, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதெப்படி நடக்கும் என்று அன்று கேள்வி கேட்க முடிந்தவருக்கு, இன்று நீங்கள் நம்பும் மதம் என்றால் மட்டும் எப்படி அப்படியே நம்ப முடிகிறது?’ என்றேன். அதோடு, இதே மாதிரியாக கொடைக்கானல் மலை,மேகம் இவைகளின் ஊடே கண்ணாடி போட்ட மாணவன் ஒருவனின் முகம் தெரிவது போல விளையாட்டாக நான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்றையும் காண்பித்தேன். உண்மையை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாத அரைகுறை மனதோடு சென்றார். 

 இதைத்தான் நான் எனது மதங்கள் பற்றிய பதிவுகளில் நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் முதல் பதிவின் முதல் பாயிண்டாகவே கூறியுள்ளேன். என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்; பிறந்ததிலிருந்து ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து மனதை விடுவிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமல்லவே! Every coin has got two sides என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. 

நம்பிக்கையாளர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்… 



1 comment:

  1. புரிந்துகொள்ளத் தயாராக இருப்பதில்லை. முற்றிலும் உண்மை.

    ReplyDelete