Friday, May 12, 2006

159. நாமும் தமிழும், ஆங்கிலமும்...

Image and video hosting by TinyPic

“வசந்தத்தின் முதல் மொட்டுக்கள்”

‘எனக்கு டமில் வராது, சார்’ ( I don’t know Tamil) என்று என்னிடம் கூறிய மாணவர்களின் முகத்தில், தொனியில் கவலையோ வெட்கமோ இருந்ததில்லை. ஆனால், ‘நான் தமிழ் மீடியம்,சார்’ என்றவர்களின் முகம் மட்டுமல்ல முழு உடம்பே வெட்கத்தால் கூனிக் குறுகி நிற்கும். இந்த நிலை தலைகீழாக இருந்தால் சரியாக இருக்கும். ஆனால் நமக்கு ஆங்கிலம் என்றால் அதில் முழு பாண்டித்தியம் இருக்கவேண்டும்; தமிழ் என்றால் ‘கிடக்குது, போ’ என்ற நினைப்பு. எப்படி வந்தது இந்த மனநிலை? புரியவில்லை!

அவ்வளவு எதற்கு? நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவுகள் வைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் முடிந்தவரை தவறின்றி தட்டச்சி, ஒரு முறைக்குப் பல முறை தவறிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்து அதற்குப் பின்பே பதிவிடுகிறேன். ஆனால், தமிழ்ப் பதிவுகளில் அவ்வளவு மெனக்கெடுவதில்லை. தமிழ் தவறின்றி வந்து விடுகிறதென்றா பொருள்; அப்படியெல்லாம் இல்லை. பின் ஏன் இந்த இரு வேறுபட்ட நிலைப்பாடு? ஆங்கிலத்தில் தப்பு செய்துவிட்டால் ஏதோ பெரிய தவறு போல நினைக்கும் நான், தமிழில் பதிந்த பிறகு தெரியும் தப்புகளைக் கூட பல சமயங்களில் கண்டு கொள்ளாமல் செல்வதுண்டு. எந்த இலக்கணப் பிழையும் ஆங்கிலத்தில் வந்து விடக்கூடாதே என்ற கவலையும், கவனமும் ஏன் தமிழில் எழுதும்போது வருவதில்லை.

அதோடு நம் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படும் தமிழ் ஒரு தனிவகை. ஒரு சில பதிவர்களைத்தவிர after all, language is just a carrier of ideas என்பதை மற்றவர்கள் அனைவருமே அப்படியே கடைப்பிடிக்கிறோம். சமீபத்தில் துணைவியார் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள்; ஒரு தாளில் ‘எங்க அம்மா நல்லவங்க’ என்று ஒரு சொற்றொடர்; தமிழாக்கப் பகுதி, தவறு என்று x போட்டிருந்தார்கள். என்னடா, இது சரியாகத்தானே இருக்கிறது என்று நினைத்து, கொஞ்சம் அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன்.’ எங்கள் அம்மா நல்லவர்கள்’ என்பதுதானே சரி என்ற பின்தான் எனக்கும் உறைத்தது. காரணம் வேறொன்றுமில்லை. இப்போதெல்லாம் நான் மட்டுமல்ல, பதிவர் பலரும் இப்படித்தான் எழுதுகிறோம்.

நம் மொழியில்தான் இந்தத் தகராறு என்று நினைக்கிறேன். பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மிகுந்து வேறு பட்டு இருக்கின்றன. நிச்சயமாக ஆங்கிலத்தில் இவ்வளவு வேறுபாடு இருப்பதில்லை. I wanna write about it என்று நாம் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல நிச்சயமாக எழுதுவதில்லை. அப்படியே அதிக அமெரிக்கத் தாக்கம் ஏற்பட்டவர்கள்கூட மிஞ்சிப்போனால் It sucks ; howdy..என்று கொஞ்சமே கொஞ்சம் எழுதுகிறார்கள் ஓரோரிடத்தில், எப்போதாவது. அவ்வளவே!

பேச்சுத் தமிழை நல்ல தமிழ் எழுத்துக்காரர்கள் நல்ல தமிழாக அங்கீகரிக்கப்பதில்லை. ஆனால் நாம், பதிவர்களோ அப்படியே எழுதப் பழகிவிட்டோம். எழுதுபவர்களில் என்னைப் போன்ற ‘வயசாளிகள்’ வெகு சிலரே. ஏனையோராகிய நீங்கள் எல்லோரும் 25-35 வயதுக்காரர்களாகத்தான் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தே எதிர்காலத்தில் அங்கீகாரம் பெறும் நிலை. அப்படியானால் இதுவே வழக்கில் நிலை நின்று விடுமா? அப்படி நின்று விடின், அது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததா இல்லையா?

பதில் எனக்குத் தெரியவில்லை. (தருமிக்கு கேள்வி கேட்க மட்டும்தானே தெரியவேண்டும்!) உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்!!

மொழிக் கல்வி பற்றி இங்கே கொஞ்சம் அழுதிருக்கிறேன்; வந்து பாருங்களேன்.



பிற்சேர்க்கை:

அடப் பாவி மக்கா!
நான் மட்டும் என்ன தனித்தமிழியக்கத்தின் தனிப் பெரும் தலைவனா என்ன?
நானும் உங்க கட்சிதாம்’ப்பா! பேச்சுத்தமிழ்ல்ல எழுதுறதுதான் சுகமாவும் இருக்கு; நல்லாவும் இருக்கு; ‘டார்கெட்டு’க்கும் போய்ச்சேருது.இல்லைங்கல…இது நல்லதா கெட்டதான்னு ஒரு பட்டிமன்ற சான்ஸ் கொடுத்தேன். என்னப் போட்டு இப்படி புரட்டி எடுத்தா எப்படி?

இளவஞ்சி, (என்(சிவா)புராணம்) சிவா, ஆசீஃப் மீரான் - இந்த மாதிரி ஆளுகளுக்கு அவங்கவங்க வட்டார வழக்கு நல்லா வருது. பொளந்து கட்றாங்க; நான் என்ன பண்றதுன்னா, பின்னூட்டங்களில இத கொஞ்சம் எடுத்து உட்டுட்டு, பதிவுகளில் கொஞ்சம் அடக்க வாசிக்கிறதுன்னு ஒரு ‘பாலிசி’; அம்புடுதன்..!

இத பின்னூட்டத்தில போடறதா இல்ல, பதிவில போடறதான்னு யோசிச்சு, எதுக்கு வம்பு எல்லாருக்கும் போய்ச்சேரணுமேன்னு ரெண்டுலயும் போட்டுர்ரதுன்னு முடிவு பண்ணியாச்சி…





Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 12 2006 10:48 pm | சமூகம் |
87 Responses
Prasanna Says:
May 12th, 2006 at 11:09 pm
தருமி சார். வலைப் பதிவுகளில் அப்படி எழுதுவதன் நோக்கம், நாம் எளிதாக வாசகர்களை சென்று அடைந்து விடலாம் என்பது தான். ராஜேந்திர குமார், சுஜாதா, ஆகியோர்களிம் வெற்றிக்கு இந்த பொதுத் தமிழ் நடை மிகவும் கை குடுத்தது. தெரிந்தோ தெரியாமலோ வலைப் பதிவாளர்கள் பலருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. நான் வலை பதியும் போது தான் இப்படி பொது தமிழில் தட்டச்சுகிறேன். மற்றபடி கல்லூரிகளில மடல் எழுதும் பொழுதும், பிற காரியங்களுக்கு மடல் எழுதும் போதும் சுத்த தமிழில் தான் எழுதுகிறேன்.

கொசுறு: சென்ற முறை சென்னை சென்ற பொழுது என் தங்கையின் நண்பிகளுடம் காஃபி ஷாப் சென்றேன். காப்புசினோ ஷேக் வாங்க குடித்து “பரவாயில்ல! சுவையாத்தான் இருக்கு” அப்படின்னேன். என்ன உக்கார வெச்சு 2 பொண்ணுங்க குமைச்சு தள்ளிடுச்சுங்க. தமிழ ஒழுங்க பேசினவன கிண்டல் பண்ணா அப்புறம் எப்படி பொது இடத்துல தமிழ்ல எல்லாரும் பேசுவாங்க.

TheKa Says:
May 12th, 2006 at 11:13 pm
என்ன தருமி சார்….இப்படி பண்ணி விட்டீர்களே? நானும் அந்த இரண்டாம் தர எழுத்தில் விழுந்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான்றகத்தான் எழுத ஆரம்பித்தேன், பிறகு யாரும் அதனை படிப்பது போல் தெரியவில்லை. குதித்துவிட்டேன் குட்டைக்குள்.

இருப்பினும் கதை சொல்ல ஏதுவாக இருக்கிறது என்பதால் அம்முறையை பயன்படுத்துகிறேன். சரியா? தவறா? தெரியவில்லை.

நீங்களே கூறிவிடுங்கள்.

ஆமா, நீங்க இன்னும் தூங்கப் போகவில்லையா?

தெகா.

சிவா Says:
May 13th, 2006 at 12:00 am
நல்லா சொன்னிய போங்க. ‘நானெல்லாம் தமிழ் மீடியம் தான்’..இதை காலர தூக்கிவிட்டுக்கிட்டே நான் சொல்வேன். ஆனா பொண்ண எங்க படிக்க வைக்கணும் என்று நினைக்கும் போது எத்தனை பேரால் ‘தமிழ் மீடியம்’ என்று போக முடிய/மனசு வருகிறது. காசு இல்லாதவனுக்கு தான் தமிழ் மீடியம் என்று ஆகிவிட்டது.

நீங்க சொல்றது சரி தான் சார். தமிழில் எழுதும் போது பிழைகள் இருந்தால் (தெரியாம எழுதி இருந்தா கூட) நாம அவ்வளவாக கண்டு கொள்வது கிடையாது. ஆனா ஆங்கிலத்தில் ஒரு சின்ன எழுத்து தப்பா போட்ட கூட ‘ஐயோ! அவன் நமக்கு ஸ்பெல்லிங் தெரியலைன்னு நெனைச்சிருவானோன்னு’ அடிச்சிக்குது..நாம வெளங்கின மாதிரி தான்.

முடிஞ்ச அளவு எழுத்து தமிழில் நானும் எழுதலாம் சார். ஆனா ‘ஏல! மக்கா! நல்லாருக்கியால′ என்று எழுதும் போது அதை படிப்பதற்கும் ‘நண்பரே. நலமா?’ என்பதை வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நம் மொழியின் சிறப்பு என்று சொல்வதா, குறை என்று சொல்வதா.. தெரியவில்லை. அதனால் தான் பேச்சுத்தமிழில் நிறையே பேர் எழுதுவதாக எனக்கு படுகிறது.

( மேலே எழுதியிருக்கிறதுல ஏதாவது குத்தம் கண்டுபுடிச்சி (எழுத்துப் பிழை) என்னை திருப்பி அடிக்காதிய..என்ன ).

பேச்சுத்தமிழோ…எழுத்து தமிழோ..மொதல்ல தமிழ சொல்லிக்கொடுக்கவே நிறைய பெற்றோர்கள் (அறிவாளிகள்) யோசிக்கிறார்கள். அதுங்க தாய் மொழியும் தெரியாம, அயல்மொழியும் புரியாம, சொல்ல்வ வேண்டியதை மழலை கலந்த நகைச்சுவையோடு சொல்லமா, ஏதோ ரோபாட் மாதிரி பேசுதுங்க… …எம்புள்ள இங்கிலீசுல தான் பேசுவான்..அவனுக்கு தமிழ் தெரியாது என்று காலர தூக்கிவிட்டுக்கிட்டு சுத்துதுங்க..வெளங்கா மட்டைங்க….என்னமோ போங்க..நாட்டு நெலமய நெனைச்சா சிரிக்கிறதா,,அழுவறதான்னே தெரியலை…

கால்கரி சிவா Says:
May 13th, 2006 at 12:29 am
ப்ரசன்னா,

சிங்கபூரில் பிறந்து வளர்ந்த என் தம்பி மகன்மகளூக்கு சுத்த தமிழ் தான் தெரியும் (நாங்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை). ஒரு முறை அந்த பொடியன்கள் சென்னையில் உள்ள அஞ்சப்பரில் பரிமாறிய சர்வருக்கு ” நன்றி வணக்கம்” என இருவரும் சொன்னார்கள் . உடனே அந்தப் பணியாளர்கள் அந்த சிறுவர்களிடம் ஒவ்வொரு பொருளாக காட்டி அதன் பெயர்களை கேட்க இவர்கள் சுத்த தமிழில் சொல்ல, அந்த பணியாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். உ.ம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்ந்த நீர், குளிர் பானம்.

பிறகு அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என அங்காலாய்த்தார்கள்

கில்லி - Gilli » I dont know tamil… Says:
May 13th, 2006 at 12:37 am
[…] என்று சொல்லிவிட்டு, தங்களுக்குத் தெரிந்த பேச்சுத் தமிழில் எழுதுபவர்கள் பற்றி பேராசிரியரின் புலம்பல் […]

ஜெயபால் Says:
May 13th, 2006 at 1:02 am
இது பதிவில் ஆரம்பித்த ஒரு விடயமல்ல ஐயா. 20, 30 வருடங்களுக்கு முன்னர் வந்த திரைப் படங்களையோ, கதைப் புத்தகங்களையோ பாருங்கள் தெரியும். தூய தமிழில் அவை படைக்கப் பட்டன. இடையே வந்த சிலர், கதைகளை பேச்சுத் தமிழில் எழுதத் தொடங்கினார்கள். பிரபலமும் ஆனார்கள். தமிழ்த் திரைப் படங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுத் தமிழுக்குத் திரும்பியது. அப்படியே கொச்சைத் தமிழாகி, தமிங்கிலமாகி கொஞ்சு தமிங்கிலமாகி இப்பொழுது சிதைக்கப் பட்டுப் போயுள்ளது.

இதைச் சரிப் படுத்த, ஊடகங்கள் அயராது தூய தமிழில் எழுதியும், ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தால் நிலைமை மாறும்.

இன்னொன்று, தமிழைப் படிக்காத தமிழர்கள், தமிழ்ப் பற்றினால், தமிழ் எழுத உதவியாக இந்த ஆங்கில மூலத் தமிழ் இருப்பதால், அவர்கள் எழுதுவது சுத்தமாக இராது தான். அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துத் தமிழைப் படைக்க வேண்டும்.

அன்புடன்,
ஜெயபால்

நல்லசிவம் Says:
May 13th, 2006 at 1:53 am
தருமி,

//நாமும் தமிழும், ஆங்கிலமும்
எனக்கு என்னமோ தலைப்புலயே இடிக்கறாப்போல இருக்கு..

உம்மைத்-தொகை மேல சந்தேகமா இருக்கு..
எதுக்கும் வீட்டுல அம்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்களேன்

துளசி கோபால் Says:
May 13th, 2006 at 2:17 am
தாங்கள் சொல்வதுபோல எழுதினால் வாசகர்கள்(!) படைப்பாளி இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு
பிரிவு, பிளவு இருப்பது போல தோற்றம் அளிப்பதன் காரணமாகவே அநேகர் இப்படிப் பேச்சுத்தமிழில்
எழுத முற்படுகிறார்கள் என்று சொல்லலாமா?

அப்பாடா……………………. ஆளை விடுங்கப்பா

ஏங்க தருமி,

மனுஷனைச் சும்மா இருக்க விடமாட்டீங்களே! முந்தி, மெட்ராஸ்லே ஒரு பஸ் கண்டக்ட்டர் எப்பவும்
தூய தமிழில் பேசுவார். அவரைக் கிண்டல் செய்யவே அந்த பஸ்ஸுலே போவோம்.

இங்கேயும், ஒரு இலங்கைத்தமிழர் எப்பவும் தூய தமிழ்தான். ஆனா அன்னியப்பட்டுப்போற
உணர்வுதான் எங்களுக்கு.

ஜீவா Says:
May 13th, 2006 at 6:28 am
சார்,
இயல்பான நடைமுறைத் தமிழில் எழுதுவதே என் தேர்வு.
அதாவது: தேவையில்லாமல் ஆங்கிலம் கலப்பதையும், பேச்சுத்தமிழில் எழுதுவதையும் தவிர்க்கிறேன்.
வேண்டுமென்றே அனைத்து ஆங்கில சொற்களையும் தமிழில் மொழி பெயர்ப்பதை ஆதரிப்பதில்லை.

வெளிகண்ட நாதர் Says:
May 13th, 2006 at 11:05 am
//அப்படியே அதிக அமெரிக்கத் தாக்கம் ஏற்பட்டவர்கள்கூட மிஞ்சிப்போனால் It sucks ; howdy..என்று கொஞ்சமே கொஞ்சம் எழுதுகிறார்கள் ஓரோரிடத்தில், எப்போதாவது. அவ்வளவே!// கூட கொஞ்சம் ‘awesome’ம்மையும் சேர்த்துக்குங்க! அப்புறம் அனுபவங்களை சொல்லு தமிழ்ல எழுதினா நல்லா இருக்குமா? அப்புறம் இந்த தமிழ் எழுத்து வடிவங்கள்ல வந்த பிரச்சினையே நம்ம ஆங்கிலேயர் அமைத்த சாதியம்-வரலாறு தொடர்கிறது!!ல பாருங்க!

கொத்ஸ் Says:
May 13th, 2006 at 11:30 am
தருமி சார்,

இப்போதான் கௌசிகன் பதிவில் ரொம்ப சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். நான் எங்கள் வெ.வா. ஜீவாவின் கருத்துகளை வழிமொழிகிறேன்.

ஆனால் சில ஜனரஞ்சகப் பதிவுகளுக்கு பேச்சுத்தமிழில் எழுதினால் தப்பில்லை என்பது என் எண்ணம்.

selvan Says:
May 13th, 2006 at 11:40 am
பார்ட்னர்,

ஆங்கிலம் பிஸினஸ் மொழி என்பதால் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற உணர்வு நம் மனதில் தன்னிச்சையாக எழுகிறது என நினைக்கிறேன்.டெண்டர்,ஆபிஸ் லெட்டர் ஆகியவை ஆங்கிலத்தில் பெரும்பாலும் எழுதுவதால் பிழை இருக்கா என கண்ணில் விளக்கெண்னை ஊற்றிப்பார்ப்பது நம் வழக்கமாகி விட்டது.தமிழில் எழுதுவது பெரும்பாலும் உறவினர்களுக்கான கடிதம்,குழு மடல்கள் என இருப்பதால் அவ்வளவாக இலக்கணம் பார்ப்பதில்லை என நினைக்கிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் தப்பு கண்டுபிடிப்பது எளிது.தமிழில் இலக்கணம் அவ்வளவாக பரிச்சயமில்லை என நினைக்கிறேன்(என்னளவிலேனும் இது உண்மை)

இளவஞ்சி Says:
May 13th, 2006 at 11:55 am
தருமிசார்!

மத்தவங்களைப்பத்தி தெரியலை! நான் ஏன் இப்படி எழுதறேன்னா இதில் எனக்கு கிடைக்கும் Flexibility தான்! மேலும் ப்ளாக்கு என்பதனை நான் இலக்கியத்தின் மற்றொரு ஊடகமாக பார்ப்பதில்லை!

சுயகட்டுப்பாடு என்பதைத்தவிர இங்கு இப்படித்தான் எழுதனும் இதைத்தான் எழுதனும்கற வேறெந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சுதந்திரபூமி!

எனவே அந்த சுதந்திரத்தை நாங்கள் இப்படி.. ஹிஹி…

பொன்ஸ் Says:
May 13th, 2006 at 12:31 pm
தருமி,
சின்னத் திரையில் கடிந்து கொண்டே பார்த்தீர்களே “மாபெரும் தொடர்கள்”, அங்கே இருக்கிறதா நீங்கள் தேடும் தமிழ்?

வெள்ளித் திரையில் வெற்றுச் சடங்குகளால், வெறுப்படைந்தாலும் பார்த்தீர்களே, அங்கேயாவது இருக்கிறதா தமிழ்?

உங்கள் வீட்டம்மா(ள்??), திருத்தும் தாள்களிலும் இல்லை தமிழ்…

நீங்கள் வீட்டில் பேசுவதிலும் இல்லை சுத்தத் தமிழ்..

அப்புறம் ஏங்க பதிவுல மட்டும் எதிர்பாக்கறீங்க?!!
சரி விடுங்க.. என்ன செய்யறது.. சுத்தத் தமிழில் எழுதினா யாருங்க படிப்பாங்க? நம்மளே ஒரு வருடம் கழிச்சு வந்து பார்த்து, இது என்ன மொழின்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டா? தமிழ் அப்படி ‘வளர்ந்துட்டு’ இருக்குங்க இப்போ!!!

(இப்போதைக்கு இது போதும்.. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.. )

தருமி Says:
May 13th, 2006 at 12:53 pm
அடப் பாவி மக்கா!
நான் மட்டும் என்ன தனித்தமிழியக்கத்தின் தனிப் பெரும் தலைவனா என்ன?
நானும் உங்க கட்சிதாம்’ப்பா! பேச்சுத்தமிழ்ல்ல எழுதுறதுதான் சுகமாவும் இருக்கு; நல்லாவும் இருக்கு; ‘டார்கெட்டு’க்கும் போய்ச்சேருது.இல்லைங்கல…இது நல்லதா கெட்டதான்னு ஒரு பட்டிமன்ற சான்ஸ் கொடுத்தேன். என்னப் போட்டு இப்படி புரட்டி எடுத்தா எப்படி?

இளவஞ்சி, (என்(சிவா)புராணம்) சிவா, ஆசீஃப் மீரான் - இந்த மாதிரி ஆளுகளுக்கு அவங்கவங்க வட்டார வழக்கு நல்லா வருது. பொளந்து கட்றாங்க; நான் என்ன பண்றதுன்னா, பின்னூட்டங்களில இத கொஞ்சம் எடுத்து உட்டுட்டு, பதிவுகளில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுன்னு ஒரு ‘பாலிசி’; அம்புடுதன்..!

இத பின்னூட்டத்தில போடறதா இல்ல, பதிவில போடறதான்னு யோசிச்சு, எதுக்கு வம்பு எல்லாருக்கும் போய்ச்சேரணுமேன்னு ரெண்டுலயும் போட்டுர்ரதுன்னு முடிவு பண்ணியாச்சி…

முத்துகுமரன் Says:
May 13th, 2006 at 1:15 pm
தருமி,

பேச்சோ, எழுத்தோ இயன்றவரை தமிழை சிதைக்காமல் எழுதினாலே மகிழ்ச்சி.

தருமி Says:
May 13th, 2006 at 2:19 pm
ப்ரஸ்,
“வலைப் பதிவுகளில் அப்படி எழுதுவதன் நோக்கம், நாம் எளிதாக வாசகர்களை சென்று அடைந்து விடலாம் என்பது தான்.”"// அதே…அதே…

அந்தக் கொசுறு விஷயம்: விஷயம் புரியலையா, ப்ரஸ்? நான் அடுத்த மேசையிலதான் உக்காந்திருந்தேன். உங்கள் கொமச்ச பொண்ணு இருக்கே அது ஏன் அப்படி பண்ணுச்சின்னா, அதுக்குப் பக்கத்தில ஒரு பொண்ணு நமட்டுச் சிரிப்போடு இருந்திச்சே அத indirect-ஆ கலாய்க்கிறதுக்குத்தான். புரிஞ்சுதா?

அதோட ஜிகர்தண்டா சிவா கீழே உங்களுக்கு ஒரு பதில் தந்திருக்கார்; போய் பாத்துக்கோங்க.

தருமி Says:
May 13th, 2006 at 2:22 pm
தெக்காட்ஸ்,
மறுபடி பதிவை பின்குறிப்போடு சேத்து வாசிச்சிருங்க…சரியான ட்ராக்லதான் போய்க்கிட்டு இருக்கீங்க. விஷயங்களும் நல்லா இருக்கிறது ஒரு பெரிய + பாய்ண்ட்.

அதுசரி. தெக்காடுன்னா நெல்லையத்தான் சொல்லுவாங்க. புதுக்கோட்டையையுமா சொல்லுவாங்க? (நீங்க புதுக்கோட்டைன்னு சொன்னமாதிரி படிச்சேன்.)

தருமி Says:
May 13th, 2006 at 2:22 pm
சிவா,
நீங்க கட்டாயம் நான் ‘அழுதிருக்கிற பதிவைப்’ படிக்கணும். மேல, பதிவின் கடைசியில லின்க் கொடுத்திருக்கேன்.

சோகம் என்னன்னா அந்த மாதிரி இங்லீஷ் மீடியத்தில படிக்கிற பிள்ளைக நிறைய பேத்துக்கு இப்ப தமிழும் தெரியலை; ஆங்கிலமும் தெரியலை.

நாம் எங்கே போகிறோம்??

தருமி Says:
May 13th, 2006 at 2:23 pm
ஜிகர்தண்டா சிவா,
(இந்தப் பேரு எப்படியிருக்கு?)

1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)

2. அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தெரியவில்லை என்று அங்கலாய்த்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான் நம்ம வீட்டு ஆளுக ‘அவமானத்தினால கூனிக் குறுகி’ தொங்குற அளவுக்கும் போயிடுவாங்க. ஆனா இப்ப…?

தருமி Says:
May 13th, 2006 at 2:24 pm
கில்லிக்கு நன்றி

தருமி Says:
May 13th, 2006 at 2:25 pm
வாங்க..வாங்க ஜெயபால்..முதல் வருகை.
வரவேற்கிறேன்.

30 வருடங்களுக்கு முன்பு வந்த பட ‘நாதன் & நாதி(!)’ பற்றி முந்திய பதிவில் கூட எழுதியுள்ளேன்.

“ஊடகங்கள் அயராது தூய தமிழில் எழுதியும், ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தால் நிலைமை மாறும்.” - நான் முன் வைக்க நினைத்த கேள்வியே… நிலைமையை மாற்ற வேண்டுமா என்பதுதான். எப்படி பேசும் மொழியும் எழுத்து மொழியும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒன்றாய் இருப்பது போல தமிழிலும் இரண்டையும் நெருக்கிக் கொண்டு வர வேண்டுமா? ஏற்கெனவே நம் பதிவுலகத்தில் நெருங்கி வந்துவிட்டது - அது சரியான பாதைதானா என்பதுதான் என் கேள்வியே!

தருமி Says:
May 13th, 2006 at 2:27 pm
வாங்க..வாங்க நல்லசிவம்..முதல் வருகை.
வரவேற்கிறேன்.

WE AND TAMIL & ENGLISH இப்படி மனசுல நினச்சுக்கிட்டு தலைப்பை வச்சேன்னா, அப்போ எப்படி எழுதணும். தெரியலையே! அம்மணிட்ட அவ்வளவெல்லாம் கேக்க முடியாதுங்க. நீங்கதான் உதவணும்…ஒரு உம்மைத் தொகைதான் வரணும்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அந்த விதியை மீறாமல் நான் நினைத்தத் தலைப்பை எப்படி எழுதுவது

தருமி Says:
May 13th, 2006 at 2:32 pm
துளசி,
“….அன்னியப்பட்டுப்போற
உணர்வுதான் எங்களுக்கு. //

அதனால இப்போ மேலே ஜெயபால் அவர்களிடம் கேட்ட கேள்வியைத் திரும்பவும் உங்கள் முன் வைக்கிறேன்.

“எப்படி பேசும் மொழியும் எழுத்து மொழியும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒன்றாய் இருப்பது போல தமிழிலும் இரண்டையும் நெருக்கிக் கொண்டு வர வேண்டுமா? ஏற்கெனவே நம் பதிவுலகத்தில் நெருங்கி வந்துவிட்டது - அது சரியான பாதைதானா என்பதுதான் என் கேள்வியே!”
வேண்டுமென்றால் ஒரு சிறு திருத்தம் அதில்: அது சரியான பாதைதானே என்பதுதான் என் கேள்வியே!”

தருமி Says:
May 13th, 2006 at 2:36 pm
வாங்க..வாங்க ஜீவா..முதல் வருகை. வரவேற்கிறேன்.

“பேச்சுத்தமிழில் எழுதுவதையும் தவிர்க்கிறேன்.”// பட்டி மன்றத்தில் நீங்கள் ஒரு பக்கம் எடுத்து இருக்கிறீர்கள். மறுபக்கம் வெகுஜன ஆதரவோடு மாற்றுக் கருத்து இருப்பதற்கு உங்கள் பதில்

தருமி Says:
May 13th, 2006 at 7:37 pm
வெளிகண்ட நாதர்,
fantastic அதுக்கு எதிர்மறையாக very weird - இந்த இரண்டையும்கூட சேர்த்துக்கணும்னு நினைக்கிறேன்.

உங்க பதிவில இந்த விஷயம் எங்கே இருக்குன்னு தெரியலையே!

தருமி Says:
May 13th, 2006 at 7:46 pm
கொத்ஸ்,
அப்போ ஜனரஞ்சக எழுத்துக்களுக்கு மட்டும்தானா? வீட்டுக்கு அம்மா, அப்பாவுக்கு எழுதுறீங்க; நண்பர்களுக்கு மயில் அனுப்புறீங்க…அப்போவெல்லாம் எப்படி எழுதலாம்..?

Padma Arvind Says:
May 13th, 2006 at 8:01 pm
எனக்கும் தமிழ் சரியாக தெரியாது. இது உண்மை மட்டும் தானே தவிர கர்வமோ ஆங்கிலம் தெரியும் என்ற அகந்தையோ இல்லை:( வீட்டில் பேச்சு மொழி சிறிது தமிழ், சொல்ப கன்னடா, தோடாஸா ஹிந்தி,அதிகமாய் ஆங்கிலம்.. இது வசதிக்காகத்தானே தவிர பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை.I love you ஆனால் என்ன பிரேம் கர்தோ என்றால் என்ன காதல் காதல்தானே என்ற ஒரு சமன்பாடு அவ்வளவே.

சிங். செயகுமார். Says:
May 13th, 2006 at 8:05 pm
உங்கள் பதிவு ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உண்மை நிகழ்வும் அதுதான்.பேச்சு தமிழ் கடை கோடி வாசகர்களையும் சென்றடைவதால் இலக்கியம் பாமரரும் பருக வாய்ப்பும் அமைகின்றது.

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் தொலை பேசியில் பேசும் போது தம்பி நீங்க ரொம்ப தமிழ் பேசுரீங்க நமக்கு அந்த மாதிரி பேசி பழக்கமில்லைன்னு சொல்லிவிட்டார் .அந்த உடைந்த தமிழ் பேசினால்தான் அவருக்கு புரிகின்றது. இவ்வளவும் அவர் மெத்த படித்தவர். முடிந்த வரை நல்ல தமிழில் எழுத பழகுவோம். இதனுடன் சம்மந்த பட்டபதிவொன்று

Gowrishankar Says:
May 13th, 2006 at 8:12 pm
Hi,

The difference between spoken and literary forms of a language is well known in linguistics, and is not unique to Tamil. It is called “diglossia”. It is a feature of all Dravidian languages and several other languages in the world. This happens in all languages with a fairly early literary tradition. The literature freezes the written form of language, even while the spoken form keeps moving farther and farther away from it due to the masses.

Even in English, you will realize that there is a standard Queen’s/ Webster forms as opposed to various forms of colloquial language. People living abroad in English spoken countries will realize that the native speakers do not care for the correctness of grammar/syntax etc…. “no nothing”, “I says” etc. They do not care, and do not know! We are concerned about our mistakes in English, because we LEARN it, as opposed to the native speakers who merely pick it up as we do in case of Tamil.

When the literary form becomes too different from the spoken form, then the literary language dies…like Sanskrit. Pali and Prakrit were considered “crude” neecha bashas whereas Sanskrit was called deva basha. But all the deva bashas will die, if care is not taken to bring it down gradually to the reality of the day. That is where the importance of “pazhayana kazhithalum pudhiyana puhudhalum vazhuvala, kaala vahaiyinaane”.

சதயம் Says:
May 13th, 2006 at 8:24 pm
நல்லவேளை என் தமிழை…நடையை யாரும் கேள்வி கேட்க முடியாது….இப்படியெல்லாம் யாராச்சும் கிண்டுவாங்கன்னுதான் பதிவு ஆரம்பிக்கும் போதே “இயன்ற வரை இனிய தமிழில்” னு தலைப்பு வச்சிட்டு எழுத ஆரம்பிச்சேன்.

Geetha Sambasivam Says:
May 13th, 2006 at 8:42 pm
தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா?

Gowrishankar Says:
May 13th, 2006 at 9:26 pm
do u not allow replies in english?

TheKa Says:
May 13th, 2006 at 9:29 pm
தருமி,

இப்பத்தான் உங்களோட ஆங்கிலப் பதிவ பார்த்து படிச்சுப்புட்டும் தான் (புரிஞ்சயளவுக்கு ))) இங்கன வாரேன். சார் சும்மா சொல்லக் கூடாது, தூள் பண்ணிட்டீங்க.

எல்லோரும் அதனை படிக்கணும், கட்டாயம.

நீங்க அங்க போயிப் பார்த்தீங்களா, நான் பட்டையைய கிளப்பி புட்டேன் கிளப்பி… உங்களுக்கு எதிர் பாட்டுப் பாடி…

புரியுது புரியுது இந்த தமிங்கிலிஸ் ட்ரெண்ட்…

ஹீம்…புதுகைதான், ஆனா தெக்கிக்காடுங்கிறது ஒரு சிறிய சமூகம் வாழ்ற ஒரு சிறு ஊர்… கட்டக் கடாசிலெ கிடக்கிறதாலெ அப்படி பேர் வந்துடுச்சுப் போல… தெக்கப் பார்த்து…

தெகா

பொன்ஸ் Says:
May 13th, 2006 at 9:36 pm
கொத்ஸ், இந்த ஜீவா நம்ப வெ.வா. இல்லை.. வேற ஒருத்தர்..

தருமி Says:
May 13th, 2006 at 9:39 pm
கொத்ஸ்,
நீங்க சொன்ன பிறகு கெளசிகன் பதிப்பைப் போய் பார்த்தேன். அதில் நிறைய உள்குத்துக்கள் இருப்பதாகப் படுவதால்,பேசாமல் வாலைச்(!) சுருட்டிக்கிட்டு வந்துட்டேன்.

:சில ஜனரஞ்சகப் பதிவுகளுக்கு பேச்சுத்தமிழில் எழுதினால் தப்பில்லை என்பது என் எண்ணம். “//
- இதுவே பலரின் எண்ணமாகவும் இங்கே இருப்பதால் எனக்கு ஓர் ஆசை; நம்ம ஞானவெட்டியான், வளவு இராமகி இருவரையும் இங்கே ‘இழுத்தால்’ என்ன என்று. அடுத்த பக்கத்தையும் கேட்டது மாதிரி இருக்குமே!

தருமி Says:
May 13th, 2006 at 9:59 pm
பார்ட்னர்,
“டெண்டர்,ஆபிஸ் லெட்டர் ஆகியவை ஆங்கிலத்தில் பெரும்பாலும் எழுதுவதால் பிழை இருக்கா என கண்ணில் விளக்கெண்னை ஊற்றிப்பார்ப்பது நம் வழக்கமாகி விட்டது.”//
சரி விடுங்க; நாமளே ஒரு ஆங்கிலப்பதிவு வச்சிருக்கோம்னு வச்சுக்கங்க. தமிழ், ஆங்கிலப் பதிவுகள் இரண்டையும் ஒரே மாதிரியா ட்ரீட் பண்ணு(வோம்)கிறோம்? இல்லையே!

தருமி Says:
May 13th, 2006 at 10:01 pm
இளவஞ்சி,
“………வேறெந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சுதந்திரபூமி! “//
- தமிழில் எழுதும்போதும் எந்த மனக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கிறோமல்லவா? பின் எதற்கு/எப்படி/ஏன் ஆங்கிலத்திற்கு மட்டும் …?

தருமி Says:
May 13th, 2006 at 10:02 pm
பொன்ஸ்,
கையில் மாணிக்கச் சிலம்புக்குப் பதில் ஒரு பேப்பரைச் சுருட்டி வச்சுக்கிட்டு கோபமா இருக்கிற கண்ணகியை அப்படியே விஷுவலைஸ் பண்ண முடியுது.
மறுபடி வரும்போது இந்த அளவு கோபமா வராதீங்க சரியா?

தருமி Says:
May 13th, 2006 at 10:16 pm
முத்துக்குமரன்,
நன்றி
நறுக்குன்னு சொல்லிட்டீங்க.

தருமி Says:
May 13th, 2006 at 10:21 pm
பத்மா,
தமிழ் தெரியாது இருப்பது பாவமோ தவறோ அல்ல. ஆனால் அதில் பெருமை கொள்வதும், அப்படிச் சொல்வோருக்கு பெருமை அளிப்பதுமே தவறென்று சொல்கிறேன்.
‘சொல்ப தமிழ்’ வைத்துக்கொண்டுதானா இந்தப் போடு போடுகிறீர்கள்

தருமி Says:
May 13th, 2006 at 11:14 pm
Gowrishankar,
i think this is your maiden visit. if so, thanks.

“This happens in all languages with a fairly early literary tradition.”//
so one can be happy that we have this ‘diglossia’ since that itself proves the antiquity of our mother tongue!
‘no nothing’ or’ i dont have nothing’ - may be used by native speakers but i think ‘I says..’ - that is mostly by illiterate afro-americans. right? and of course in western movies and fictions!

நீங்க சொன்னதில எனக்கு ரொம்ப பிடிச்சது: When the literary form becomes too different from the spoken form, then the literary language dies…like Sanskrit. My major worry was whether this gap between literary tamil and spoken tamil is good for the future of our language. நீங்க சொல்றபடி பார்த்தால் நாம் இந்த ‘மொழிப் பிளவில்’கொஞ்சம் சிரத்தையோடுதான் இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.

நல்ல ஒரு பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.

தருமி Says:
May 13th, 2006 at 11:19 pm
Gowrishankar,
“do u not allow replies in english? “// come on, how and why do you think like that?
why dont you make a visit to the latest posting in my english blog - a matter of concern related to languages.

தருமி Says:
May 13th, 2006 at 11:21 pm
சதயம்,
இந்த மாதிரி ஆளுகளைத்தான் ‘எமகாதகன்’ அப்டிம்பாங்களோ?

வெளிகண்ட நாதர் Says:
May 13th, 2006 at 11:27 pm
அந்த பதிவின் பின்னோட்டம் கொஞ்ச்ம் பாருங்க!

தருமி Says:
May 13th, 2006 at 11:29 pm
“தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா? “//
- தப்பு திரிபுரசுந்தரி தப்பு…sorry, just was carried away
தப்பு கீதா தப்பு.எப்படி கேட்கணும்னா:
தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா?
இப்படியா, இல்லை,
ஏங்க, நீங்க காலையில் காலையில காப்பி குடிப்பீங்களா? இல்ல டீ தானா?

இதுக்கு ரெண்டு பதிலுங்க:
1.அது வீட்டம்மா என்ன கொடுக்குராங்களோ, அதாங்க!
2. நான் இரண்டாவது டைப்புங்க

தருமி Says:
May 13th, 2006 at 11:35 pm
தெக்ஸ்,
உங்க ஆங்கிலப் பதிவைப் பார்த்துட்டேன். Great people think alike அப்டின்னு சொல்லுவாங்க. (அதே மாதிரி இன்னொண்ணும் சொல்லுவாங்க!அது எனக்கு மட்டும்னா சரியா இருக்கும். )

தருமி Says:
May 13th, 2006 at 11:41 pm
வெ.க. நாதர்,
நம்ம மண்டை கொஞ்சம் மரமுங்க தமிழ் நடை பற்றிச் சொல்லியிருப்பதைச் சொல்கிறீர்களா?
நோட்ஸ் இல்லாம் என்னைக்குப் படிச்சேன் இப்ப விளங்குறதுக்கு

ஜீவா Says:
May 14th, 2006 at 7:02 am
இப்போதுதான் பார்க்கிறேன்…பின்னூட்டங்கள் மிகப்பலவாய் வந்து குவிந்திருக்கின்றன…
வேகமாய் நோட்டம் விடுவதற்கே நேரம் போதவில்லை…

வலைப்பதிவுகள் டைரியைப்போல். அதில் இலக்கியம் அல்லாத சாதரண நடைமுறைத் தமிழில் இருத்தலில் எந்த தவறும் இல்லை. அதே சமயம் வெறும் பேச்சுத் தமிழில் முழுதுமாய் நொடிந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாமே! அவ்வாறு பேச்சுத்தமிழை தவிர்க்கும்போது ஏதோ நிறைவு இருப்பதாகவும் சமயங்களில் தோன்றுகிறது!

ஆனால் பேச்சுத்தமிழில் எழுதுவதற்கும் தேவை இருக்கிறது- உதாரணத்திற்கு - நாடக வசனம். அல்லது, கதைகளில் மேற்கோளிடப்பட்ட பேச்சுக்கள்.

“wanna” பற்றி பி.பி.சி யின் சுட்டி:
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/grammar/learnit/learnitv165.shtml

Prasanna Says:
May 14th, 2006 at 9:29 am
///அந்தக் கொசுறு விஷயம்: விஷயம் புரியலையா, ப்ரஸ்? நான் அடுத்த மேசையிலதான் உக்காந்திருந்தேன். உங்கள் கொமச்ச பொண்ணு இருக்கே அது ஏன் அப்படி பண்ணுச்சின்னா, அதுக்குப் பக்கத்தில ஒரு பொண்ணு நமட்டுச் சிரிப்போடு இருந்திச்சே அத indirect-ஆ கலாய்க்கிறதுக்குத்தான். புரிஞ்சுதா?///
இருபதுக்கு அனுபவம் குறைவு, அறுபது அதை எடுத்து உரைத்து விட்டது. இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.

Prasanna Says:
May 14th, 2006 at 9:43 am
///பிறகு அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என அங்காலாய்த்தார்கள்///
தேசிகன் அவர்கள் பதிவுல அவர் ஒரு தடவ சொல்லி இருந்தார். இங்க இருக்குற வரைக்கும் பசங்கள ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்க சொல்லி கஷ்டப்படித்துவோம். அமேரிக்கா போன உடனே சங்கம் வைத்து தமிழ் வளர்க்குற ரேஞ்சுக்கு தமிழ் தமிழ்னு அடிச்சுக்குவோம். அதான் சொல்லத் தோணுது. தமிழ் பேச்சு தமிழா இருந்தாலும் செந்தமிழா இருந்தாலும் தமிழ்ல அடிக்குறோமா அப்படின்றது தான் மேட்டரே. இல்ல இன்னொரு நண்பர் சொன்னது போல் செம்மொழி அந்தச்த்த வெச்சுகிட்டு தூங்குற சமஸ்கிருதம் போல் தமிழும் தூங்க வேண்டி இருக்கும்.

முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 12:48 pm
//இலைநீர் வடிகட்டி//
தேநீர் என்று சொல்லிவிட்டு போகலாமே… பயன்படுத்தவும் எளிமையாகவும் இருக்கும். தமிழ்ப்படுத்துகிறேன் என்கிற பெயரில் எல்லை மீறிப்போவதும் தவறு. இலைநீர் வடிகட்டி என்று சொல்லவேண்டிய கட்டாயமில்லை. அது ஒரு வகையான அரசியல். வேண்டுமென்றே கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆர்வமிருப்பவர்களையும் வதைக்கும் போக்கு கூடாது. நான் பதினொன்றாம் வகுப்பு கணினி பாடத்தை தமிழில் படித்தேன். அப்போது தமிழ்ப்படுத்துகிறேன் என்கின்ற பெயரில் பெரிய கூத்துகளை எல்லாம் அரங்கேற்றி இருந்தார்கள். Keyboard- எளிமையாக தட்டச்சு பலகை என்று சொல்லுவதை விட்டு விட்டு ‘’கட்டை விரற்பட்டடை என்று சொல்லியிருந்தார்கள்'’.

தருமி Says:
May 14th, 2006 at 2:06 pm
என்ன ஜீவா,
பட்டிமன்றத்து நடுவர் உரை மாதிரி சொல்லிட்டீங்க போல..

தருமி Says:
May 14th, 2006 at 2:08 pm
ப்ரஸ்,
“இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.”// அய்யா, ஷியாமி விஷய்த்தில டெய்லர் சித்தப்பா..இங்க நானா?
ஒண்ணு பண்ணுங்க…அந்த மாதிரி காபிக்கடைக்கெல்லாம் போனீங்கன்னா, தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு போங்க..

தருமி Says:
May 14th, 2006 at 2:13 pm
ஆமாம் முத்துக்குமரன்,
துவிச்சக்கர வண்டியில் போறதை விட, சைக்கிளில் செல்வது நல்லா இருக்கில்ல?
சிற்றுந்து ஒன்றில் போய், பின் பேருந்தில் ஏறிப மருத்துவரிடம் போய் கூட்டு மருந்து வாங்குவதற்குப் பதில் மினிபஸ்ல போய், பெறகு பஸ்ஸுக்கு மாறி டாக்டரைப் பாத்து காப்ஸ்யூல் வாங்கிட்டு வந்திடலாமோ?

பொன்ஸ் Says:
May 14th, 2006 at 2:24 pm
//துவிச்சக்கர வண்டியில்//
இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இருசக்கர வாகனம், மிதி வண்டி, இதெல்லாம் புழங்குகின்ற பேர்தானே தருமி - பேச்சுத் தமிழில் இல்லை என்றாலும், எழுத்துத் தமிழிலாவது?!!

உங்க பதிவோட தாக்கத்துல, நான் இன்னிக்கு போட்ட பதிவில் கூடிய வரை எழுத்துத்தமிழில் எழுதி இருக்கேன்.. பாக்கலாம், எத்தனை பேர் படிக்கிறாங்க, எத்தனை பேர் பி.பி.ப.ஓடறாங்கன்னு

முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 2:29 pm
//சிற்றுந்து ஒன்றில் போய், பின் பேருந்தில் ஏறிப மருத்துவரிடம் போய் கூட்டு மருந்து வாங்குவதற்குப் பதில் // இப்படி வாங்கினாலும் நோய் தீரும்

தருமி Says:
May 14th, 2006 at 2:46 pm
பொன்ஸ்,
“இருசக்கர வாகனம்…” என் பேரன்(பெயரன்?)கூட இருசக்கர வாகனம் ஒண்ணு (ஒன்று?)வச்சிருக்கான்(வைத்திருக்கிறான்?)!

பி.பி.ப.ஓடறாங்கன்னு ..அப்டின்னா
‘பி.கா.பி.ப.ஓடறாங்கன்னு …’ அப்டின்னுதானே அர்த்தம்.

தருமி Says:
May 14th, 2006 at 2:47 pm
முத்துகுமரன்,





முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 2:55 pm


முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 3:22 pm
//இப்படி வாங்கினாலும் நோய் தீரும் //
தருமி, மருந்து கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் நோய் குணமாயிடும்..

என்ன சொல்றீங்க

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 3:28 pm
வலைப்பதிவுகள் செய்தித்தாள்கள் அல்ல, பேச்சுத் தமிழில் எழுதுவது,படிப்பது நேரிடையாக பேசுவதோ, கேட்பதுபோன்று இருக்கிறது. வலைப்பதிவுகளை எழுதுபவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் தேர்ச்சி பெற்றோர் என்று நினைக்க முடியாது. தகவல்களை தொலைபேசியில் பேசுவது போல வலைப்பதிவுகளில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். சரியோ தவறோ தமிழில் இருப்பது நன்று என்றே தோன்றுகிறது. ஆங்கில கலப்பில்லாமல் சுலபமாக எழுதமுடியாது அது போலவே, பேச்சுத் தமிழின்றி சொல்லவந்த விசயங்களை தங்குதடையின்றி எழுதமுடியாது. தூய தமிழில் பதிவுகள் எழுதப்பட்டால் அது செய்தி ஓடை போலவே காணப்படும். செய்தி ஊடகங்களின் தாக்கங்களினால் வட்டாரவழக்குகள் அழியும் நிலையில் இருக்கிறது. நல்ல கதைகள், செய்திகள் ஆகியவற்றை அவ்வட்டார வழ்க்கிற்கேற்ப நயமுடன் எழுதப் பெற்றால் நம் வட்டார வழக்குகளையும் காக்க முடியும் என்று நினைக்கிறேன், வட்டார வழக்கின்றி தமிழ் வழங்கப்படுமானால் அது மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும்.

தருமி Says:
May 14th, 2006 at 3:39 pm
முத்துக்குமரன்,
இப்போ சுத்தமா குழம்பிப் போச்சு…இப்போ நீங்க சொல்ற கசப்பு மருந்து எது? நோய் எது?

தருமி Says:
May 14th, 2006 at 3:41 pm
அதாவது கோவி. கண்ணன், நீங்க இப்போ எழுதியிருக்கிறது மாதிரி ‘நற்றமிழாய்’ எழுதாம, நான் இப்போ எழுதிறேனே அதுமாதிரி பேச்சுத் தமிழில் இருக்கணும்னு சொல்றீங்க..சரிங்களா?

அது சரி அது என்ன:”மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும். “”// அது எப்படி இருக்கும்? தெரியாதே!

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 3:54 pm
//அது சரி அது என்ன:”மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும். “”// அது எப்படி இருக்கும்? தெரியாதே!//
சன் தொலைக்காட்சியில் நீங்கள் கேட்ட பாடல்கள் நிகழ்ச்சியில் அங்குள்ள பூர்விக தமிழர்கள் பேசுவார்கள், வட்டார வழக்குகள் முற்றிலும் தெரியாத நிலையிலோ, தமிழில் பேசி பழகாததால் அவர்கள் பேசும் ஓவ்வெரு வார்த்தைக்கும் இடையில் பெரிய இடைவெளியிருக்கும், அங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்பவர்களுக்கும் பேச்சுத்தமிழ் வரவே வராது. மறுபயிற்சி அல்லது தனிப்பயிற்சி (டுட்டோரியல் காலேஜ்) முப்பது நாட்களில் ஆங்கிலம் பேசலாம் என்று கூறி தமிழ் மூலம் ஆங்கிலம் பயிற்றுவிப்பது போல் சொல்லிக் கொடுப்பார்களா என்னவோ. அந்த தமிழாசிரியர்கள் பேசுவதற்கு திணறுவது தெரிந்தது. ஆனால் தமிழ்திரைப்படங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொள்வது இல்லை என்று சொல்கிறார்கள்.
அவர்களை குறைசொல்லவில்லை. பேச்சு வழக்கு இல்லாத மொழி வழக்கு இழந்துவிடும் என்பதற்காக குறிப்பிட்டேன்.

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:00 pm
//நற்றமிழாய்’ எழுதாம, நான் இப்போ எழுதிறேனே அதுமாதிரி பேச்சுத் தமிழில் இருக்கணும்னு சொல்றீங்க..//
கட்டுரைகள் எழுதப்படும் பொழுது கருத்துக்களை உள் நிறுத்தி தூய தமிழில் எழுதலாம். ஆனால் நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது பேச்சுத் தமிழில் எழுதினால் அதனுடன் உணர்களும் சேர்ந்து கொள்ளும் என்பது என்கருத்து.

‘ஐயா தருமி அவர்களே, உங்கள் மறுமொழியில் உடன்பாடு இல்லை’ என்பதற்கும் ‘தருமியாரே கவுத்துப்புட்டிங்களெ’ என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பது தெரிகிறதல்லவா

தருமி Says:
May 14th, 2006 at 4:18 pm
கோவி.கண்ணன்,
பேச்சுத் தமிழில் எழுதினால் அதனுடன் உணர்களும் சேர்ந்து கொள்ளும் என்பது என்கருத்து.//
ரொம்ப சரியாகவே சொல்லீட்டீங்க..மறுப்பேயில்லை.

“பேச்சு வழக்கு இல்லாத மொழி வழக்கு இழந்துவிடும் என்பதற்காக குறிப்பிட்டேன்.”
இதற்கு மறு கேள்வி: பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் ஆபத்து இருந்தால்…அப்போது அதன் நிலை என்ன?

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:27 pm
//இதற்கு மறு கேள்வி: பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் ஆபத்து இருந்தால்…அப்போது அதன் நிலை என்ன? //
இப்படித்தான் தென் திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளுவம், மலையாளம் முதலியன தமிழிலுருந்து தோன்றியதாக மொழியாளர்கள் சொல்லுகிறார்கள். அந்த நிலை இப்போது இல்லை. எனென்றால் காட்சி ஊடகங்களும், செய்த்தித்தாள்களும் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே செய்தித் தமிழில் தான் சென்று அடைகின்றது. பேச்சு வழக்கு எழுத்து மொழியாவது எப்போதென்றால் அதிகம் அன்னிய மொழிகள் கலந்து மொழியின் வேர்செற்களே மறைந்து போனால் நிச்சயம் அந்நிலை வரும். அதை மனதில் வைத்துத்தான் தனித்தமிழ் இயக்கங்களும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் தோன்றின. தமிழில் வேர்சொற்களை தற்பொழுதும் வட்டார வழக்குகள் இனம் காட்டுகிறது, இதைப்பற்றி வேர்சொல் அகராதிகள் நிறைய பேசுகின்றன.

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:41 pm
பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் என்ற நிலை இப்போது இல்லை. எனென்றால் காட்சி ஊடகங்களும், செய்த்தித்தாள்களும் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே செய்தித் தமிழில் தான் சென்று அடைகின்றது. செய்தி ஊடகங்களின் தாக்கங்களினால் வட்டாரவழக்குகள் அழியும் நிலையில் இருக்கிறது. எனவே அவைகளில் வட்டார வழக்குகள் இடம்பெறவேண்டும் என்றும் சொல்கிறேன்.
(முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும் அதற்காக இந்த சிறுவிளக்கம்)

Prasanna Says:
May 14th, 2006 at 9:23 pm
///ப்ரஸ்,
“இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.”// அய்யா, ஷியாமி விஷய்த்தில டெய்லர் சித்தப்பா..இங்க நானா?///
என்ன செய்யிறது நமக்கு அப்படி அமைஞ்சிடுத

தருமி Says:
May 14th, 2006 at 9:31 pm
கோவி.கண்ணன்,
“அதை மனதில் வைத்துத்தான் தனித்தமிழ் இயக்கங்களும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் தோன்றின.”//
- இந்தி எதிர்ப்பு போராட்டங்களை இதிலிருந்து கழட்டி விட்டு விடுங்கள்; அது ஒரு தனி ட்ராக். அதைப்பற்றிய என் பதிவுகளையும், முக்கியமாக அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் வேண்டுமானால் வாசித்துப் பாருங்களேன்.

உங்கள் பின்னூட்டங்கள் நிச்சயமாக நல்ல பல பதில்களை முன்வைத்துள்ளன. நான் கேட்ட கேள்விகள் எப்படியோ; ஆனால் இப்போது அந்தக் கேள்விகளுக்கே ஒரு தனி மரியாதை வந்ததாக உணர்கிறேன். அதற்குக் காரணம் உங்கள் விளக்கங்களே. மிக்க நன்றி. இப்பதிவை எழுதும்போது ஏற்படாத மகிழ்ச்சியும், நிறைவும் இப்போது ஏற்பட்டுள்ளன.
a very fine analytical explanations. thanks again.
keep in touch.

கமல் Says:
May 14th, 2006 at 9:35 pm
தேவையான நல்ல பதிவு. நான் சொல்ல நினைத்த கருத்துக்களை கௌரிசங்கரும் முத்துக்குமரனும் சொல்லிவிட்டார்கள்.

நாம் தமிழைப் படித்த முறையும், ஆங்கிலத்தைப் படித்த முறையும் வேறுவேறானவை. தாய்மொழியில்தான் சிந்தனை ஓட்டம் இருக்கும். ஆங்கில உரையாடலின்போது, நம் மூளையில் சேமித்து வைத்திருக்கும் Wren&Martin மற்றும் Oxford/Webster சமாச்சாரங்களைப் பயன்படுத்தித் தமிழுக்கு மாற்றி, உரையாடுகிறோம். எனவே, is was ஆக மாறும்போது உடனடியாகத் தெரிந்துவிடுகிறது.

சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் படித்த அமெரிக்கர்கள் கூட இலக்கணப் பிழையுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஜப்பானியர்களும் சில சமயங்களில் தவறாகப் பேசுவதுண்டு. ஆனால், தமிழ் பேசும்போது யோசித்து, சரியாகப் பேசுவார்கள். காரணம், மூளை மொழிமாற்றத்தில் ஈடுபடுவதால்தான்.

பேச்சுத் தமிழை எழுத்தில் கொண்டு வருவதால், தமிழுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால், அதற்குமுன்பு, பேச்சுத்தமிழ் சரியானதுதானா? வேற்றுமொழிச் சொற்கள் கலந்து பேசாத பேச்சுத்தமிழில் எழுதுவதில் தவறேதுமில்லை.

நண்பர்களுக்கிடையில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட, தெரியாத ஆங்கில வார்த்தை வந்தால், கமுக்கமாக இருந்துவிட்டு, பிறகு யாருக்கும் தெரியாமல் அகராதியை எடுத்துப் பார்ப்போம். ஆனால், இதுவரை கேள்விப்படாத ஒரு தமிழ்வார்த்தை வந்துவிட்டால், சொன்னவன் கதி அதோகதிதான். ஓட்டித்தள்ளி விடுவோம். நான் பேசும்போது பெரும்பாலும் முழுவாக்கியமும் தமிழ் அல்லது முழுவாக்கியமும் ஆங்கிலம் என்றுதான் முயற்சி செய்வேன். அதையும் நண்பர்கள் கிண்டலடிப்பது உண்டு. இயல்பாகப் பேசுவதில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். ஒரு தமிழன் தமிழில் பேசுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியே, நாளாக ஆக, வேற்றுமொழி வார்த்தைகள் கலப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தால், இரண்டு அல்லது மூன்று தலைமுறை கழித்து வரும் குழந்தைகளுக்கு எது தமிழ், எது வேற்றுமொழி என்றே தெரியாமல் போய்விடும். இன்று நாம் பயன்படுத்தும் சொற்களில் எது தமிழ், எது வடமொழி எனத் தெரியாமல் இருப்பது போல. எனவே, பிறமொழிச் சொற்கள் கலக்காமல் பேசுவது என்பது தமிழ்த்தாய்க்கு நாம் செய்யும் தொண்டு. தமிழன் என்ற முறையில் நம் கடமையும் கூட.

இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு அதிகரித்தால் என்ன ஆகுமோ என்ற கவலை தேவையற்றது. வேறுபாடு என்பது இப்போது மட்டுமல்ல. எப்பொழுதும் இருந்து வருவதுதான். தமிழ்மொழி தோன்றிய காலகட்டத்திலிருந்து இலக்கியநடை என்பது ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அதேபோல், பேச்சுநடையும் இலக்கியநடையும் ஒரேமாதிரி இருந்ததுமில்லை. அதிகம் விலகியும் போகவில்லை. இரண்டாம் நூற்றாண்டில் எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் எத்தனை சதவீதம் வித்தியாசம் இருந்ததோ, அதே அளவுதான் இருபதாம் நூற்றாண்டிலும் இருந்தது. முப்பதாம் நூற்றாண்டிலும் இருக்கும். பத்தாம் நூற்றாண்டின் எழுத்துத்தமிழையும் இருபதாம் நூற்றாண்டின் பேச்சுத்தமிழையும் ஒப்பிடக்கூடாது. அப்படி ஒப்பிட்டால், அதிகம் விலகியிருப்பது போலத்தான் தோன்றும். சரியான தீர்வும் சொல்ல முடியாது.

நன்றி
கமல்

தருமி Says:
May 14th, 2006 at 9:46 pm
ப்ரஸ்,
“என்ன செய்யிறது நமக்கு அப்படி அமைஞ்சிடுத..”

ஒன்னச் சொல்லிக் குத்தமில்லை
என்னச் சொல்லிக் குத்தமில்லை
……….

சகலமான ஜனங்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்;
எனக்கு ப்ரஸ் என்ற ஓர் ஆளைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது செயல்களுக்கு அவரே பொறுப்பு.

இளவஞ்சி Says:
May 14th, 2006 at 10:34 pm
தருமிசார்!

//பின் எதற்கு/எப்படி/ஏன் ஆங்கிலத்திற்கு மட்டும் …? //

+2 படிக்கையில் வாத்தி 20 மார்க்கு English Essayக்கு ஒரு தப்புக்கு .5 மார்க்குவீதம் குறைக்கப்போவதாக சொல்லி திருத்தி நான் -14.5 வாங்கியது நினைவுக்கு வருவதால் இதைப்பற்றி நான் பேசுவது சரியாக இராது!

கோவி.கண்ணன் Says:
May 15th, 2006 at 5:59 am
//இப்பதிவை எழுதும்போது ஏற்படாத மகிழ்ச்சியும், நிறைவும் இப்போது ஏற்பட்டுள்ளன.//
எனக்கும் நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்கள் இந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகளை ஒரு ‘சுபயோக சுபதினத்தில்’ கட்டாயமாக படிக்கிறேன். பிறிதொரு பதிவில் சந்திப்போம் நன்றி.

கோவி.கண்ணன் Says:
May 15th, 2006 at 2:29 pm
தருமி அவர்களே, நானும் இந்தி பேசி இருக்கிறேன். இந்த தொடுப்பிற்கு சென்று உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html

தருமி Says:
May 15th, 2006 at 3:20 pm
கமல்,
“இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு அதிகரித்தால் என்ன ஆகுமோ என்ற கவலை தேவையற்றது.”//
- உங்கள் பதிலும், கோவி. கண்ணனின் பதில்களும், கெளரி சங்கரின் பதிலும் இந்த அச்சம் தேவையற்றது என்பதை நன்கு நிறுவியுள்ளன.
நன்றி.

தருமி Says:
May 15th, 2006 at 3:25 pm
இளவஞ்சி,
என்ன ஒரு ‘இது’ இருந்தால் என் ‘ஜாதி’க்காரரை என் முன்னாலேயே, என் பதிவுக்கே வந்து இளப்பமாகப் பேசுவீர்கள். என்னதான் நான் உங்கள் ரசிகனாக இருந்தாலும் என் ஜாதிக்காரரை இப்படிப் பேசுவதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் எப்படி “+2 படிக்கையில் வாத்தி 20 மார்க்கு …” என்று எழுதலாம். ம்ம்ம்….ம்ம்…ம்

கப்பி பய Says:
May 15th, 2006 at 3:34 pm
தமிழ் பதிவுகளில் அரசியல்,செய்திகள், நிகழ்வுகள், ‘சில கதைகள் மற்றும் கவிதைகள்’ தூய தமிழில் எழுதப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையாக எழுதப்படும் சொந்த அனுபவம் குறித்த பதிவுகள் பேச்சுத் தமிழில் உள்ளன.

இதை “மூளைல இருந்து எழுதினா சுத்தத் தமிழ்…மனசுல இருந்து எழுதினா பேச்சுத் தமிழ்”-னு விஜய் பட டயலாக் மாதிரி சொல்லலாம்…

பதிவுகளை விட பின்னூட்டங்கள் பேச்சுத் தமிழை அதிகமாக உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது…

வசந்தன் Says:
May 15th, 2006 at 3:57 pm
தருமி, வட்டார வழக்கைப் பாவிப்பதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தையே வட்டார வழக்காகப் பாவிப்பது உறுத்துகிறது.
(இன்னிக்கு நைட்டு, ஈவினிங், என்று சகட்டு மேனிக்கு சொற்கள் பாவிக்கப்படுகின்றன.) வலைப்பதிவு என்று கிட்டத்தட்ட அனைவரும் ஏற்றுவிட்ட சொல்லையே இன்னும் நாங்கள் முழுமையாகப் பாவிக்கத் தொடங்கவில்லை. இப்போதும் பிளாக் என்றுதான் நிறையப்பேர் எழுதுகின்றனர்.

நல்ல தமிழ்பற்றிக் கதைப்பவர்களைக் கேலிசெய்யாமலிருப்பதே இப்போதைக்குப் போதுமானது என்று நினைக்குமளவுக்கு நிலைமை இருந்தது/இருக்கிறது.

பதிவுகளில் பிழை திருத்தாமை பற்றி நீங்கள் சொல்வது அப்படியே எனக்கும் பொருந்தும். (ஆனால் நான் தமிழில் மட்டுமே எழுதுகிறேன்.) பொதுவாக நான் எழுதியதைத் திரும்பித் திருத்தும் பழக்கமில்லை. (வலைப்பதிவுகளில்). முன்பு சுரதாவின் எழுத்துரு மாற்றியைப் பாவித்து ஒருங்குறிக்கு மாற்றிப் பதிவிட்ட காலத்தில் திரும்பவும் பதிவைப் படிப்பேன், காரணம் எல்லாம் சரியாக மாற்றியுள்ளதா என்று சோதிக்க. அந்தநேரத்தில் தென்படும் பிழைகளைத் திருத்துவேன். ஆனால் இகலப்பை வந்தபின் இரண்டாம் தரம் வாசிப்பதும் தேவையற்றுப் போனதால் எப்படி எழுதினேனோ அப்படியே பதிவேறுகிறது. பின் கண்டுபிடிக்கும் பிழைகளைத் திருத்துவதேயில்லை. எல்லாம் சோம்பல்தான். ஒரு பின்னூட்டத்துக்குப் பதிலளிப்பதிலுள்ள உற்சாகத்த்தில பத்திலொரு பங்குகூட பதிவைத் திருத்துவதில் இல்லை. அடடே, ஒரே தடவையில் இவ்வளவு தூரம் பிழையில்லாமல் எழுதுகிறேன் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்ட தருணங்களுமுண்டு.

மேலும், இங்கே பெரும்பாலும் எல்லோரும் மற்றோரின் எழுத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். மாற்றமென்பது தனியொருவரில் தங்கியில்லை. இளவஞ்சி சொன்னதுபோல் சுயகட்டுப்பாடு என்பதுதான் இதுவரையாவது பலரின் சுயத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. நீங்கள் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களிற் பெரும்பாலானவர்களை எடுத்துப்பாருங்கள். (சில சுயம்புகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.) அவர்களின் தொடக்க கால எழுத்துக்கும் இப்போதுள்ள எழுத்துக்கும் உங்களால் வித்தியாசம் காண முடியும். ஏதோ மாதிரித் தொடங்கி, பின் பொது நீரோட்டத்திற் கலந்துவிடுவார்கள். இன்று பொது எழுத்துநடையொன்று தமிழ்வலைப்பதிவுகளில் வந்துவிட்டதை உணரலாம்.

sammatti Says:
May 15th, 2006 at 4:35 pm
இது உங்கள் பதிவா ?
http://dharumi.blogspot.com/
http://www.blogger.com/comment.g?blogID=12236223&postID=112827963934942168
அல்லது போலி பதிவா ?

தருமி Says:
May 15th, 2006 at 4:45 pm
சம்மட்டி,
மொதல் லின்க் நம்ம பழைய வீடுங்க…ஆத்திர அவசரத்துக்கு இருக்கட்டுமேன்னு அப்படியே விட்டு வச்சிருக்கேன்.
ரெண்டாவது…தெரியலைங்களே… மட்டுறுத்தலை இதுவரை கண்டுக்கவில்லை…

தருமி Says:
May 15th, 2006 at 5:02 pm
நன்றி சம்மட்டி..இனி கட்டுக்குள் வைத்துக் கொள்கிறேன்.

ஜோ Says:
May 15th, 2006 at 5:49 pm
ஆங்கிலத்தில் தவறு செய்தாலும் நான் வெட்கப்படுவதில்லை .அது என் தாய்மொழி அல்ல.ஆனால் தமிழில் தவறு செய்தால் வெட்கப்படுவேன்.

தருமி Says:
May 15th, 2006 at 10:34 pm
கப்பிப் பய,
பெயர்க்காரணம் என்னங்க?
உங்க பஞ்ச் டயலாக் ப்ரமாதம். ரொம்ப சரியாகவும் இருக்கு.
“பதிவுகளை விட பின்னூட்டங்கள் பேச்சுத் தமிழை அதிகமாக உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது:// - அதுக்குக் காரணம் என்னென்னா, இப்போ பாருங்க நான் உங்ககிட்ட மட்டும் பெர்சனலா பேசுற நினப்பு வந்திடுதில்லா..அதனாலதான். இல்லியா?

தருமி Says:
May 15th, 2006 at 10:35 pm
வசந்தன்,
“அடடே, ஒரே தடவையில் இவ்வளவு தூரம் பிழையில்லாமல் எழுதுகிறேன் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்ட தருணங்களுமுண்டு.”// கொஞ்சம் பொறாமையாகவே இருக்கு. எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று? இப்பின்னூட்டத்தில்கூட பிழை ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

“இன்று பொது எழுத்துநடையொன்று தமிழ்வலைப்பதிவுகளில் வந்துவிட்டதை உணரலாம். “// இந்த நடையைத்தான் கொஞ்சம் ‘உரசிப்’ பார்த்தேன்.

தருமி Says:
May 15th, 2006 at 10:36 pm
ஜோ,
“ஆங்கிலத்தில் தவறு செய்தாலும் நான் வெட்கப்படுவதில்லை”// ஆச்சரியம்தான். என்னுடைய முதலாண்டு இளங்கலை காலத்தில் என் சீனியர் என்னிடம் ஆங்கிலத்தில் பேச, நானும் உளறிக் கொட்ட அதில் நான் செய்த ஒரு பிழை இன்றும் நினைவில் இருக்கிறது. வெட்கமாயிருந்தது. இதைத் தவிர்ப்பது உங்களுக்கு எப்படி முடிகிறது? நல்ல விஷயம்…

4 comments:

  1. இணைப்பிற்கு மிக்க நன்றி தருமி. :)

    ReplyDelete
  2. "ஏன் அழைத்தாய்? ஏன் அழைத்தாய்;
    என்னுயிரே! ஏன் அழைத்தாய்?"

    முழுவதும் படித்து விட்டேன்.

    கருத்து: சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை!

    ReplyDelete
  3. அய்யா ஞான்ஸ்(இப்படிக் கூப்பிடலாமா, at least இந்தப் பதிவிலாவது?),
    May 13th, 2006 அன்று கேட்ட கேள்விக்கு இன்றாவது பதில் சொல்லி விட்டீர்களே!! நன்றி. :) :)

    ReplyDelete
  4. தூயா,
    only attendance? ம்ம்...ம்..

    ReplyDelete