Thursday, October 05, 2006

178. இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் !

ஆபிரஹாமிய மதங்களின்படி இந்த அண்டம் அனைத்தும் ஆறு நாட்களில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும், ஆறாவது நாளில் ஆதாமும் அவனின் விலா எலும்பிலிருந்து (இன்னொரு ஆணாதிக்கக் கருத்து..?) ஏவாளும் படைக்கப்பட்டாள் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகவுள்ளது. இதை "இன்னுமா நம்புகிறார்கள்?" என்று மிக ஆச்சரியத்துடன் பதிவர் எழில் ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவும் இட்டுள்ளார். அவரது ஆச்சரியத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். :) இதற்குப் பதில் சொல்லும் முகமாக அபு முஹை ஒரு பதில் பதிவிட்டுள்ளார். ஆகவே இந்தப் பதிவை "இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் ! " என்ற தலைப்பில் அங்கு கூறப்பட்டவைகளை வைத்து எழுத நினைக்கிறேன்.

லமார்க் சொன்ன use and disuse, inheritance of acquired characters என்ற தியரிகள் தோற்று விட்டன; தவறென நிரூபணமாகி நாளாகிவிட்டது. இன்னும் பல பாட நூல் ஆசிரியர்கள் மட்டும் 'பழைய நினைப்பில்' பரிணாமம் பற்றிய நூல்களில் இவருக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து வருகிறார்கள்; அவ்வளவே.

அதே போல, டார்வின் சொன்ன பல hypotheses குறையுள்ளவை என்றும் நிரூபித்தாகி விட்டாயிற்று. உதாரணமாக, அவர் வெறுமே factors என்று மொட்டையாகச் சொன்ன விஷயம் பின்னால் ஜீன்கள் என ஆயிற்று; அவர் உயிரினங்கள் மாறக்கூடியவை என்று சொல்லிச் சென்றார்; பின்னால் mutation, அதன் விளைவுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் அவர் காலத்தில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத பல விஷயங்களையும் சேர்த்து, புதிய பரிணாமக் கொள்கையை பலரின் முயற்சிகளால் உருவாக்கி அதனை இப்போது Modern synthesis of Evolution' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

படைக்கப்பட்டதாகவும், எப்போதும் அதே படைக்கப்பட்ட நிலையில் இருந்துவருவதாகக் கருதப்பட்டு வந்த உயிரினங்கள் அவ்வாறின்றி மாறக்கூடியவை என்ற டார்வினின் முதல் கருத்தே இன்றுவரை பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்து வருகிறது. அதைத் தவிர மற்ற அவரது கருத்துக்கள் பின்னால் மறு உருவெடுத்தன. எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் survivial of the fittest என்பதுகூட பின்னாளில் மறுக்கப்பட்டு, மாற்றப் பட்டது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நாம் கூறுவதும் எளிய புரிதலுக்காகச் சொல்லப்பட்ட ஒரு விஷயம். ஏதோ, நேற்று குரங்காக மரங்களில் ஊசலாடிக்கொண்டிருந்தது இன்று மாறி மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கிறான் என்றோ, குரங்கு போட்ட குட்டி மனிதக் குழந்தையாக இருந்தது போன்றோ மனப் பிம்பங்களை யாரேனும் ஏற்படுத்திக் கொண்டால் அது அவர்களின் தவறேயன்றி, பரிணாமக் கொள்கையின் தவறோ, குறைபாடோ இல்லை.

evolution என்ற சொல்லுக்கே blossoming என்பது பொருள். மாலையில் பார்க்கும் மொட்டு காலையில் பூவாக மலர்கிறது. மெல்ல மெல்ல இதழ் அவிழும் அந்த 'பூத்தலை'ப் போலவே உயிரினப் பரிமாணமும் மிக மிக மெல்ல - for millions of years - நடக்கும் ஒரு நிகழ்வு. இதில் ஆராய்ச்சிக் கூடத்தில் நடத்திக்காட்டக் கூடிய விஞ்ஞான சோதனைகளைப் போல என் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டு என்றால் அது கேட்பவர்களின் மன நிலையைத்தான் காண்பிக்கும்.

அதோடு, இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்ற நிலைதான் இருக்கிறதே என்பது பல விஞ்ஞான உண்மைகளைப் பொருத்தவரை முழு உண்மையே. பரிணாமம் மட்டுமல்ல பல விஞ்ஞான உண்மைகள் 'சாத்தியக் கூறுகளாகத்தான்' உள்ளன. அவைகள் மேலும் மேலும் புதிய பரிமாணங்களோடு வளரவும் செய்யலாம்; அல்லது தவறென நிரூபிக்கப்படவும் செய்யப்படலாம். அதுதான் விஞ்ஞானம். விஞ்ஞானம் எந்த ஒரு கண்டுபிடிப்பையுமே அறுதியாகச் சொல்லாது, வளர்ச்சி வேண்டி ஒரு கேள்விக்குறியுடனே முடிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் அந்த கேள்விக் குறிகளுக்குப் பதில் கண்டு அடுத்த கேள்விக்குறியை நோக்கி நம் அறிவை முன்னெடுத்துச் செல்கின்றன. அண்டத்தின் பிறப்பு பற்றிய புதுப் புது கருத்துக்களும் வளர்ச்சிகளும் இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால், மத நம்பிக்கைகளோ இதற்கு நேர் எதிர்மறை. முன்னதில் கேள்விக் குறி முக்கியமென்றால் இங்கே 'முற்றுப் புள்ளிகள்'தான் உண்டு. மாற்றங்கள் முன்னதில் முக்கியமென்றால், மற்றதில் மாற்றமே இல்லை என்பதில் தான் அதன் சிறப்பு. கேள்விகள் கேட்டுக்கொண்டே இரு என்கிறது விஞ்ஞானம்; கேள்விகள் கேட்டாலே blashphemy என்கிறது வேதங்கள். இன்றைய உண்மைகள் நாளைக்கு மாறலாம்; இன்னும் சிறப்பான, சரியான பதில்கள் மனிதனுக்குக் கிடைக்கும் என்கிறது விஞ்ஞானம்; இல்லையில்லை.. "அந்த உண்மைகள்" எக்காலத்துக்கும் உரியது; எப்போதைக்கும் சரியானது என்கின்றன வேதங்கள். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு சாரார் கண்ணை இறுக மூடிக் கொள்வதுதான்.

fossils, connecting links, carbon dating, extinction of living things, mutations causing changes in species, genes and their role; mutations and their role in evolution - இவைகளெல்லாமே நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான உண்மைகள். இவைகளை வைத்தே பரிணாமக் கொள்கை விளக்கங்கள் concepts-களாக தரப் படுகின்றன. இவைகளைப் பற்றிய தேடுதல், புரிதல் ஏதுமின்றி தங்கள் மதம் சொல்வதால் அதை மட்டுமே கண்டுகொள்ளும் நிலைப்பாடு இருப்பின், அவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதே உண்மை. இவைகள் வெறும் concepts தானே என்றும், இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பின்னும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதானே சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி:
எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் -
எந்தக் குரங்கிலிருந்து எந்த மனிதக் குழந்தை பிறக்கக் கண்டீர்கள்; 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?'; அதைப் பார்த்தவர் யார்; குரங்கிலிருந்து மனிதன் வந்தானெனில் எதிலிருந்து குரங்கு வந்தது? பரிணாமக் கொள்கைகள் வெறும் தியரிதான் நிரூபிக்கப்பட்ட உண்மையில்லை; மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது?; - என்பது போன்ற கேள்விகள் வருகின்றன. தவறில்லை. ஆனால், இதற்கு மாற்றாக கேள்வியெழுப்புவர்கள் தரும் விடையென்ன?

மனிதன் களிமண்ணிலிருந்து (பைபிள்) / ரத்தத்திலிருந்து (குரான்?) கடவுளால் உண்டாக்கப்பட்டான் என்பதுதானே. இதற்கு என்ன ஆதாரம். உங்கள் வேத நூல்கள்தானே. விசுவாசம் / ஈமான் கொண்டவர்களுக்கு அந்த வேத / தேவ வார்த்தைகள் உண்மை. மற்றவர்களுக்கு...? அவர்களுக்கு நீங்கள் தரும் ஆதாரம் என்ன? வெறுமே அது ஆவியால் தரப்பட்டது என்பதோ, இறக்கப்பட்டதாக ஒருவர் சொன்னது என்பதாலோ உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள். மத மறுப்பாளனாகிய எனக்கு விஞ்ஞானம் தரும் உண்மைகளும், சான்றுகளும் ஆதாரங்கள் என்றால், உங்களிடம் (என்னையும் நம்ப வைக்க) என்ன ஆதாரங்கள்? பிறப்பால், வளர்ப்பால் ஊட்டிவிடப்பட்ட விஷயங்களை முழுமையாக நீங்கள் நம்பலாம். உங்கள் வேத புத்தகங்களின் வார்த்தைகள் உங்களுக்குக் கடவுளின் வார்த்தைகளாகவே இருக்கலாம்; இருக்கட்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாத போது நீங்கள் தரும் மேற்கோள்கள் எங்களுக்குப் பொருளற்றவையே. மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டான் என்று சொன்னால் நம்பிக்கையாளர்கள் அப்படியே ஒப்புகொள்கிறீர்கள்; ஆனால், நீங்கள் பரிணாமத்திற்குரிய சான்றுகளைக் கண்முன்காண்பி என்று சொல்வது போல நானும் மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டதற்கு என்ன சான்று என்று கேட்கலாமல்லவா? கேட்டால் உங்கள் பதிலென்ன? "வார்த்தைகள்" சான்றுகளாகாது.

இதையே கிறித்துவத்தின் மேல் உள்ள கேள்விகளாக எனது முந்திய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். படைத்தலைப் பொருத்தவரை கிறித்துவ, இஸ்லாமிய நம்பிக்கைகள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதால் எனது கேள்விகளும் இரண்டு மதங்களுக்கும் பொதுவானதாக இருக்குமென்பதால் அப் பதிவில் படைத்தலைப் பொருத்தவரை நான் எழுப்பியிருந்த ஐந்தாவது கேள்வியை மட்டும் மீண்டும் இங்கே தந்துள்ளேன். கொள்க:

5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஏதோ ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு ஒரு kid stuff போலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180


*

* * இப்பதிவு 09 அக். 2006 பூங்காவில் இடம் பெற்றது. (1)

66 comments:

  1. தருமி அய்யா,

    மிக அருமையான பதிவு.

    நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    //evolution என்ற சொல்லுக்கே blossoming என்பது பொருள். //

    இந்த வரிகள் அருமை..

    மேலும் தெகாவின் பதிவில் கொடுத்த சுட்டியை இங்கே கொடுக்கிறேன். இது Professor Steve Jones நல்லதொரு செமினாரை கொடுத்துள்ளார்.

    இங்கே படிக்க வருகிறவர்கள் இந்த விடியோவையும் கொஞ்சம் பாருங்க...

    http://www.royalsoc.ac.uk/portals/jones/rnh.htm

    அருமையான SEMINAR .. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    மத கோட்பாட்டை நம்பும் பதிவர்கள் இதற்கு மாற்றான தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  3. பார்ட்னர்

    அருமையான கட்டுரை.

    விஞ்ஞானம் "இப்படியும் இருக்கலாம்" "இப்படி நடக்கலாம்" எனத்தான் எதையும் சொல்லும்.அது விஞ்ஞானத்தின் குறை அல்ல.அதன் அடக்கத்தையும்,நேர்மையையுமே காட்டுகிறது.நீங்கள் சொன்ன மாதிரி அந்த கோட்பாடு வளரவும், அதை மேன்மேலும் மேன்மைப்படுத்தவுமே இம்மாதிரி வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படுகின்றன.

    இதை வைத்து விஞ்ஞானமே தப்பு,ஜல்லியடி என யாராவது சொன்னால் அது அவர்களது மதப்பற்றையே காட்டும்.பாராட்டப்பட வேண்டிய விஷயம் தானே?:-)

    விஞ்ஞானம் 'குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்' என சொல்லவில்லை.அது என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாட்டு:-)

    "குரங்குக்கும், சிம்பன்சிக்கும், கொரிலாவுக்கும், போனபோவுக்கும், உராங்க் உடானுக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதை இனம்" எனத்தான் விஞ்ஞானம் சொல்லுகிறது.குரங்கு நம் சகோதர இனம்.

    இதேபோல் சிறுத்தைக்கும், பூனைக்கும், புலிக்கும், சிங்கத்துக்கும் பலகோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதை இனம் தான் இருந்தது.அந்த ஆதி இனத்திலிருந்து தான் இந்த நாலு வகை மிருகங்களும் தோன்றின.

    ReplyDelete
  4. இதைப் பற்றி நான் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு இங்கு எழுதி இருக்கிறேன். http://ariviyalaanmeekam.blogspot.com/2006/09/4.html
    நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

    evolution பற்றியும் பின்னூட்டங்களில் சில விஷயங்களை touch பண்ணி இருக்கிறேன்.

    ReplyDelete
  5. இந்த வார டைம்சிலும் இதே டாப்பிக்தான்.

    http://www.time.com/time/magazine/current

    மொத்தத்தில் அடி பின்னி பெடலெடுக்கிறாங்க.

    நோவாவின் வெள்ளப் பெருக்கினால அமெரிக்காவுல Grand Canyon உருவாச்சுன்னு இங்க ஒரு பைபிள் ப்ரொக்ராம்ல 'அறிவியல்'பூர்வமா வெளக்கினார் ஒருத்தர்.

    இன்னொருத்தர் எப்படி உலகம் பைபிள் சொல்லும் காலத்துலதான் உருவாகியிருக்கலாம்னு கணிக்கிறார்.

    இங்க அமெரிக்காவுல இந்தப் பாடு படுதுண்னா நம்மூர்ல சொல்லவே வேண்டாம்.

    இந்து மதத்துல உலகம் உருவானது பற்றிய பலவிதமான தியரிகள் இருக்கு. நீங்க சொல்கிற குழந்தைக் கதைகளைப் போலத்தான் அவைகளும் தெரியும்.

    ReplyDelete
  6. அய்யோ, ஹய்யோ பெரும் கூத்தால்ல போச்சு. செம கமொடி தருமி உங்களோட சில மதம் சார்ந்த முரண்பாடுகளைப் பற்றி நீங்கள் சுட்டிக் காட்டும் பொழுது.

    ஹப்பாடா, கடைசிய இந்தப் பதிவுகளோட இந்த பரிணாமப் பேச்சு ஓஞ்சா போச்சு.

    ஹூம், ஒரு நல்ல புத்தகம் இருக்கு போர் (Bore) அடிக்காம படிக்க; The Third Chimpanzee : The Evolution and Future of the Human Animal by Jared Diamond.

    முடிஞ்ச கேள்விகள் கேட்டு மண்டையை பிளக்கிறதுக்கும் முன்னாடி ஒரு தபா படிச்சுட்டு வாங்க... மக்களே...

    ReplyDelete
  7. அருமையானப் பதிவு..

    // உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள்//

    உண்மை.ஆனால் நண்பர்களுக்கு வேதப் புத்தகம் தான் ஆதாரம் ..ஆதாரம் என்றப் பெயரில் பைபிள் /குரான் வரிகளைக் கொட்டுவார்கள் ..அல்லது மார்க்க அறிஞர்கள் சொல்வதே உண்மை /அதுவே ஆதாரம்

    தன் வாழ்நாளையே செலவழித்து நிஜமாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருக்கும் அறிவியல்யாளர்களே உண்மையில் சரியான ஆன்மீகவாதி ..அவர்கள் எல்லாம் இவர்களுக்கு ஜோக்கர் மாதிரித் தெரிவார்கள் ..அதான் எங்க புத்தகம் அல்லது குரு சொல்லவில்லையே ..

    //'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' //

    தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

    வெளிச்சம் வந்தப் பிறகுதான் சூரிய சந்திரர்களைப் படைத்தான் போல இருக்கு

    //பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

    15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.//

    உங்கள் கேள்விகளுக்கு விடை வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை ..நம்முடைய நண்பர்கள் யாரும் சொல்லப் போவதில்லை

    ஆனால் வரப்போகும் விவாதங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளேன்

    ReplyDelete
  8. நீங்களும் ஜோதியில் கலந்தாச்சா? வெரி குட் வெரி குட். :D

    ReplyDelete
  9. நம்ம ஊர் கடவுள் விலா எலும்பில் இருந்து படைத்தார் என்று இன்னும் கொஞ்சம் பின் தங்கி இருக்கிறோம் நான் கொடுக்கும் இரண்டு லிங்குகளைப் படித்துப் பாருங்கள் இவர்கள் இருவரும் amino acids உருவாவதில் கடவுளின் பங்கு இருக்கிறதா இல்லையா என்று சர்ச்சை செய்து கொள்கிறார்கள்.

    beleiver

    http://www.forerunner.com/forerunner/X0728_Evolutionary_Improba.html

    non - beleiver


    http://www.talkorigins.org/faqs/abioprob/abioprob.html

    ReplyDelete
  10. இந்த beleiverன் ஆர்க்கியூமெண்டின் முடிவில் இதெல்லாம் சாத்தியமில்லை அதனால் கடவுள்தான் படைத்தார் என்று கூறி இருப்பார் அவருடைய ஆர்க்கியூமெண்ட் இப்படி இருந்தாலும் இவ்வளவு probablity கம்மியாக இருந்தும் உயிர்கள் உருவாகி இருப்பது கொஞ்சம் பிரமிப்பாக இருக்கும். அதற்கு எதிர் வினையாக எழுதப்பட்ட பதிவிலும் இந்த probablity அவர் சொன்ன அளவுக்கு இல்லை என்று மறுத்து எழுதப்பட்டாலும் உயிர் உண்டாகாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருந்ததைப் பற்றி எழுதி இருப்பார்.

    ReplyDelete
  11. இன்று லாபில் amino acids இருந்த காலகட்டத்தை மறுபடியும் உருவாக்கி amino acidsஐ உருவாக்க முடிகிறது. ஆனால் லாபில் எல்லாமே சாதகமான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து இதனைச் செய்கிறோம்.

    ReplyDelete
  12. மொத்தத்தில் மூன்றாம் பாகம் நல்ல பாகமாக இருக்கிறது

    ReplyDelete
  13. நீங்க என்ன வேணா சொல்லுங்க...

    ஆனா உங்க கேள்விக்கு பதில்..

    //
    இன்னுமா நம்புகிறார்கள்?
    //

    ஆம். என்பதே.

    என்னைக் கேளுங்கள்...

    இங்கே, creationist scientists கள் இருக்கிறார்கள்...அதுவும் உயிரியல் துரையில்...! இங்கு வந்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்றால் இது தான்.

    ReplyDelete
  14. தருமி,
    பிரம்மாதமா எழுதியிருக்கீங்க (slam dunk). இதே கேள்விகள் (ஆதாரங்களை காட்டு) எனக்கும் எழுந்தது, நீங்க கேட்டுட்டீங்க.
    அதே போல, உலகில் உள்ள மற்றவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள்னு சொல்லியிருக்கு? ஆதாம் ஏவாள்-லேர்ந்து தான் எல்லாரும் வந்தாங்கனா, இப்ப இருக்கிற உறவுமுறைகள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

    இப்ப ஜெனடிக் நுட்பம் முன்னேறியிருக்கிற நிலையில, மனிசனாலேயே உயிர உண்டாக்கமுடியும்னு நிருபிச்சாச்சு. இதுக்கு என்ன வாதம் வைக்கப்போறாங்க?

    ReplyDelete
  15. //மனிசனாலேயே உயிர உண்டாக்கமுடியும்னு நிருபிச்சாச்சு.//

    இது எப்ப? புதுத் தகவலாயிருக்கே.

    ReplyDelete
  16. ///

    //மனிசனாலேயே உயிர உண்டாக்கமுடியும்னு நிருபிச்சாச்சு.//

    இது எப்ப? புதுத் தகவலாயிருக்கே.

    ///

    லாபில் அமினோ ஆஸிடை உருவாக்குவதைப் பற்றி தான் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    அதாவது அந்த கால கட்டத்தில் இருந்த எல்லா சூழ்நிலைகளையும் சரியான முறையில் சரியான விகிதத்தில் நாம் வைக்கும் சமயம். evolutionனில் முதன் முதலாக உருவாகப் பட்டதாக விஞ்ஞானம் கருதும் அமினோ ஆஸிட் உருவானதைத் தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    இந்த அமினோ ஆஸிட்கள் தான் பின்னால் முதல் செல் உயிரினமான அமீபாக்கள் உருவாக காரணியாக இருந்தது.

    இதைத் தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன் இல்லை வேறு எதாவது பற்றியா என்று தெரியவில்லை அவர்தான் விளக்க வேண்டும்.

    ReplyDelete
  17. உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் எப்படி வர முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.

    ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வந்த ஆய்வுக்கட்டுரை இது பற்றி நடந்த பரிசோதனையையும் அதில் வெற்றி பெற்றதையும் இங்கே குறிப்பிடுகிறது.

    அந்த பத்திரிக்கையில் வந்த ஆய்வுக்கட்டுரை, இது போன்று பரிணாமத்தை எதிர்க்க கேள்வி கேட்பவர்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    http://www.evilbible.com/Synthetic_Life.htm

    ReplyDelete
  18. சிறில்,
    கல்லு மண்ணுலேர்ந்து பண்ற அளவுக்கு இன்னும் வரலை. ஆனா க்ளோனிங் முறையில உயிர உண்டாக்க முடியிது இல்லையா? டாலி-ய உண்டாக்கினதும் பர்டிலைஸ் செய்யாத முட்டையிலேர்ந்து தானே. அடல்ட் ஸ்டெம் செல்-லேர்ந்து உயிர உண்டாக்கிற நாள் ரொம்ப தூரத்தில இல்ல.
    அறிவியல் போன நூற்றாண்டுல முன்னேறின அளவு அடுத்த நூற்றாண்டுலயும் முன்னேறினா, கல்லு மண்ணுலேர்ந்து உயிர உண்டாக்கினாலும் ஆச்சிர்ய படுவதற்கு இல்லை.

    ReplyDelete
  19. இப்ப ஜெனடிக் நுட்பம் முன்னேறியிருக்கிற நிலையில, மனிசனாலேயே உயிர உண்டாக்கமுடியும்னு நிருபிச்சாச்சு- அப்படியா?
    தருமி: லமார்க்கியன் தியரி இன்னமும் சிலரால் சாத்தியமோ என்று யோசிக்கப்படுகிறது.அறிவ்யலில் எதையும் முடிந்துவிட்டது என்றூ மூட்டை கட்டி தூக்கிப்போடுவதில்லை (மருத்துவ அறிவியலில், எனக்கு தெரிந்தவரை)

    ReplyDelete
  20. "இந்து மதத்துல உலகம் உருவானது பற்றிய பலவிதமான தியரிகள் இருக்கு. நீங்க சொல்கிற குழந்தைக் கதைகளைப் போலத்தான் அவைகளும் தெரியும்".

    ஆனால் இது நம்பிக்கை என்ற வகையிலும் சமூகக்கதையாடல் என்ற அளவிலும் மட்டுமே இந்துக்களிடத்தில் உள்ளது. இந்துக்கள் பொதுவாக மதத்தையும் அறிவியலையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்வதில்லை.
    விவிலியக்கதையாடல்களையெல்லாம் அறிவியல் பாடமாகக் கொண்டு வந்து திணிப்பதெல்லாம் மேற்குலகில்தான். அமெரிக்காவில் 6 மாகாணங்களில் பரிணாமக் கல்வி தடை செய்யப்பட்டிருக்கும் வெட்கக்கேட்டுடன், அறிவியல் முகமூடியுடன் பாடங்களுக்குள் திணிக்கப்படாமல் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே நிற்கும் தசாவதார புராணங்களை ஒப்பிடும் "நேர்மை" எங்கிருந்து உங்களுக்கு வருகிறது சிறில்?

    எனினும், பரிணாம எதிர்ப்பினை நான் இந்தியாவில் படிக்கையில் சக கிறித்துவர்களிடத்தில் கண்டதில்லை என்றே சொல்வேன். இதற்குக் காரணம், இந்து ஞான மரபின் வழி வந்த இந்தியக் கிறித்துவர்களிடத்தில் மதப்புத்தகங்களை லிட்டரலாகக் காணும் போக்கு குறைவு என்பதாகவே நினைக்கிறேன்.

    விவிலிய நோவாவின் வெள்ளம் குறித்த கதையை வரலாற்று உண்மையாக்கி தொன்மை நாகரீகங்களுக்குக் காலம் குறிப்பதும், ஏசு என்பவரின் பிறப்பே உறுதி செய்யப்படாத நிலையில் அவரை சரித்திர கதாபாத்திரமாக்கி வெறும் மித்தாலஜியை கிமு கிபி என்று சொல்லி வரலாற்றுக்குக் கடத்தியதும்
    நவீன கல்வியமைப்பின்மீது
    மேற்கத்திய கிறித்துவம் செய்த கயமைத்தனம்.

    மேற்குலகில் பரிணாம எதிர்ப்புத்தீ கொழுந்து விட்டு எரியக் காரணம் விவிலியம் அறிவுபூர்வமானதென்றும் உயிர்த்தெழுந்த ஏசு என்பவர் வரலாற்று உண்மையென்றும் மேற்குலகம்- குறிப்பாக மேற்கின் கிறித்துவ நம்பிக்கையாளர்கள்- கொண்டிருக்கும் மதபோதைதான். மேற்கின் பொருளாதார மேம்பாட்டுக்கும் கிறித்துவமே காரணம் என்ற எண்ணமும் வலுவாகவே உள்ளது.

    கலிலியோவின்மீது ஏவிவிடப்பட்ட கத்தோலிக்க பயங்கரவாதம் கல்வியாளர்களை சிந்திக்கச்செய்யும்வரை, வட்டிகனின் நுகத்தடியிலேயேதான் 17-ஆம் நூற்றாண்டுவரை ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கூட இருந்தன; போப்பின் அனுமதியுடனேயே துறைத்தலைமைகள் நியமிக்கப்பட்டன. இதனால் நவீன கல்விக்குள் விவிலியத்தைக்கடத்துவதும், நவீன கல்வியின் சாதனைகளை கிறித்துவ சாதனைகளாகப் பரப்புவதும் எளிதாயிற்று. காலனீய நாடுபிடித்தலில் கிறித்துவ மேற்கினை நவீன கல்வியால் நாகரீக மேம்பாடு அடைந்த சமுதாயமாகவும், பிற
    அ-கிறித்துவ சமுதாயங்களை பிற்போக்காகவும் சாயம் பூசி, தாழ்வுணர்த்தி, செல்வம் சுரண்டி அடிமையாக வைத்திருக்க இது பெரிதும் உதவியது.

    சொல்லப்போனால் இன்னுமா நம்புகிறார்கள் என்பதே அல்ல உண்மையில் பிரச்சனை. ஏன் இன்னும் நம்புகிறார்கள் மற்றும் அந்த நம்பிக்கையின் விளைவாக என்ன செய்யத்துணிகிறார்கள் என்பதே பிரச்சனை. உலக அளவில் கிறித்துவ மதம் என்பது ஆன்மீகத்தைவிட, அதிகாரக் கைக்கொள்ளலையும் அதற்கு உதவும் வகையில் ஆள்பிடித்தலையுமே ஆதாரமாகக் கொண்ட ஒரு அரசியல் நிறுவனம் என்பதே உண்மை. அறிவியல், விவிலியத்தைப் பொய் என்றால் கிறித்துவத்தில் இருப்பவர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் (மேற்கில் காணும் உண்மை); ஆள்பிடிப்பதும் கடினமாகலாம். இது கிறித்துவத்தின் அதிகாரக் கைக்கொள்ளலை பாதிக்கும். எனவேதான் இத்தனை எதிர்ப்பு. இந்த எதிர்ப்பின் எதிரொலிதான் விவிலிய நம்பிக்கைக்கு அறிவியல் முலாம் பூசி கல்விக்கூடத்தினில் நுழைக்கவும் மற்றவர் மேல் திணிக்கவும், இடைவிடாது எடுக்கப்படும் முயற்சிகள். பரிணாமத்தை
    பாடப்புத்தகங்களிலிருந்து அறவே நீக்க நடக்கும் இம்முயற்சிகளின் சமீப வெளிப்பாடுதான் intelligent design என்று வரும் கும்மியடிப்புகள். இவ்வகையான முனைப்புகளின் தொடர்ச்சியே- இஸ்லாமிய எதிர்ப்புக்காகப் பிரபலமானாலும்கூட- காரண அறிவை கிறித்துவத்துடன் மணமுடிக்கும் போப்பின் சமீபத்திய உரை.

    ReplyDelete
  21. //இவைகளைப் பற்றிய தேடுதல், புரிதல் ஏதுமின்றி தங்கள் மதம் சொல்வதால் அதை மட்டுமே கண்டுகொள்ளும் நிலைப்பாடு இருப்பின், அவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதே உண்மை.//

    இதற்குப் பின்னும் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?
    இது பற்றி எனது 'காதலும் கடவுளும்' பதிவில சொன்னதுதான் எனது நிலைப்பாடு.
    கடவுள் இருக்கிறாரா - இல்லையா, உண்மையா - பொய்யா என்று ஆராய்ச்சி செய்து அதற்காக ஒரு நிமிடத்தைத்தானும் செலவழிப்பவன் படு முட்டாள்.

    இருந்தாலும் பதிவிலும் பின்னூட்டங்களிலும் சில விஞ்ஞானத் தகவல்களை அறிந்துகொண்டேன். எங்கள் பதிவர்கள் ஏன் இவைபற்றி பதிவுகள் எழுதக்கூடாது? முன்பு உதயகுமார் (என்று நினைக்கிறேன்) ஸ்டெம் செல் பற்றி (குருத்துக் கலம் என்பதா தமிழாக்கம்?) எழுதினார். அவ்வப்போது சில பதிவுகள் வரும். ஆனால் தொடர்ச்சி இருப்பதில்லை.
    இச்சந்தர்ப்பத்திலாவது அறிவியல்துறை சார்ந்தவர்கள் அறிந்த விதயங்களைப் பதிவாக்க முன்வருவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  22. இதற்குப் பின்னும் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?
    இது பற்றி எனது 'காதலும் கடவுளும்' பதிவில சொன்னதுதான் எனது நிலைப்பாடு.
    கடவுள் இருக்கிறாரா - இல்லையா, உண்மையா - பொய்யா என்று ஆராய்ச்சி செய்து அதற்காக ஒரு நிமிடத்தைத்தானும் செலவழிப்பவன் படு முட்டாள்.

    இருந்தாலும் பதிவிலும் பின்னூட்டங்களிலும் சில விஞ்ஞானத் தகவல்களை அறிந்துகொண்டேன். எங்கள் பதிவர்கள் ஏன் இவைபற்றி பதிவுகள் எழுதக்கூடாது? முன்பு உதயகுமார் (என்று நினைக்கிறேன்) ஸ்டெம் செல் பற்றி (குருத்துக் கலம் என்பதா தமிழாக்கம்?) எழுதினார். அவ்வப்போது சில பதிவுகள் வரும். ஆனால் தொடர்ச்சி இருப்பதில்லை.
    இச்சந்தர்ப்பத்திலாவது அறிவியல்துறை சார்ந்தவர்கள் அறிந்த விதயங்களைப் பதிவாக்க முன்வருவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  23. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை.

    இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் Qtv, Pease Tvவிலிருந்து கொஞ்சம் விலகி Discovery,Animal Planet, National gegography ( கிளுகிளுப்புக்கு பார்க்கும் Ftvயையிம் இதனுடன் continue பண்ணலாம்) போன்றவைகளை பார்த்தால் கொஞ்சம் தெளிவு பிறக்கும்.

    ReplyDelete
  24. தருமி,
    பல புதிய சிந்தனைகளை தெரிந்து கொண்டேன் .நன்றி!

    ReplyDelete
  25. தருமி ஐயா...!

    உங்கள் கேள்விகளுக்கு மிதவாதிகளாலும் பதில் சொல்ல முடியாது !
    :)

    ReplyDelete
  26. அனானி 1 & 2,
    கோபித்துக்கொள்ளக் கூடாது. அனானிகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்ற முடிவெடுத்துள்ளேன்.

    ஆனால், இம்முறை அனானி 1 - உங்கள் பின்னூட்டம் என் க.கை.நாட்டுத்தனத்தால் பதிப்பிக்கப்பட்டு விட்டது - எப்படியோ என்னையும் மீறி!

    அனானி 2,
    உங்கள் லின்க் எல்லோருக்கும் தெரியவேண்டுமென்பதால் வெளியிடும்படி ஆயிற்று.

    எழுதும் விஷயத்தில் எந்த விஷமும் இல்லையே; பின் ஏன் முகத்திரை. இது என் கருத்து.

    ReplyDelete
  27. சிவ பாலன்,
    நீங்கள் கொடுத்துள்ள வீடியோவைப் பார்க்க முடியவில்லை; முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். முடியவில்லையென்றால் யார் தலையையாவது உருட்டியாவது பார்க்கணும்.
    நன்றி.

    ReplyDelete
  28. partner,
    மேல் விவரங்களுக்கு நன்றி.

    குமரன் எண்ணம்,
    முழுதுமாக வாசித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  29. சிறில்,
    நீங்கள் தந்துள்ள சுட்டி பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி.
    இந்து மத 'தசாவதாரம்' பற்றி ஒரு சிறு பதிவிட உத்தேசம் உண்டு.

    ReplyDelete
  30. தெக்ஸ்,
    எது காமெடியா இருக்குங்றீங்க?

    ?/இந்த பரிணாமப் பேச்சு ஓஞ்சா போச்சு.// அப்படி ஓஞ்சு போற விஷயமா இது?

    ReplyDelete
  31. கூத்தாடி,
    //தன் வாழ்நாளையே செலவழித்து நிஜமாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருக்கும் அறிவியல்யாளர்களே உண்மையில் சரியான ஆன்மீகவாதி ..//

    அவர்கள் ஆன்மீக வாதிகளோ இல்லையோ...பல்லாயிரம் பேர் genomics அது இதுன்னு ஆண்டாண்டுகளாகக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கிறதையெல்லாம் இதெல்லாம் ஒண்ணுமில்லை; ஏன்னா எங்க பொஸ்தகத்தில வேற மாதிரி சொல்லியிருக்குன்னு மக்கள் சொல்றதப் பாத்தா என்ன சொல்றதுன்னு தெரியலை. இதுவரை எனக்குத் தெரிஞ்ச ( நான் டெஸ்ட் பண்ணினவரைக்கும்...!) இரண்டு விலங்கியல் ஆசிரியர்களே ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு குறைவுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. எடுத்துச் சொன்ன பிறகும் அதை ஒப்புக்கொள்ள அவங்களுக்கு மனசு வரலை!
    மதத் தீவிரம் அப்படியிருக்கு!! என்னத்த சொல்றது?

    ReplyDelete
  32. கொத்ஸ்,
    இந்த ஜோதியில கலக்கலைன்னா எந்த ஜோதியில நான் கலக்க முடியும்னு சொல்லுங்க. நான் என்ன வெண்பா புலவனா என்ன? சரியான, மண்டபத்துப் புலவன்தானே!

    ReplyDelete
  33. கால்கரி சிவா, வஜ்ரா,
    நன்றி.
    வஜ்ரா,
    கூத்தாடிக்கு எழுதிய என் பின்னூட்டத்தைல் நீங்கள் சொன்ன விஷயத்தில் என் சொந்த அனுபவத்தைச் சொல்லியுள்ளேன். நீங்கள் சொல்வது போல் அது மிக ஆச்சரியமாகத்தான் உள்ளது. fossils பற்றி நம்ப மாட்டோம் என்று சொன்ன ஆசிரியர்கள், மாணவர்கள் நிறைய உண்டு. carbon dating எல்லாம் சும்மா ஜுஜுபியாம்!

    ReplyDelete
  34. பார்த்தா,
    அந்த slam dunk வார்த்தை சொல்லிக் கொடுத்தமைக்கு சிறப்பான நன்றி !

    ReplyDelete
  35. பத்மா,
    //...லமார்க்கியன் தியரி இன்னமும் சிலரால் சாத்தியமோ என்று யோசிக்கப்படுகிறது..// வெகு வெகு சிலரால் என்று வைத்துக் கொள்ளலாமா?
    ஆனாலும் டார்வினின் தியரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள நவீன விஞ்ஞான நிரூபணங்கள் எதுவும் லமார்க்கின் தியரிக்குக் கிடையாதல்லவா?

    ReplyDelete
  36. என்னங்க இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க :-)))))))) இனிமே தனியா வெளிய போகாதீங்க....எம்மதவாதிகளும் சம்மதவாதிகளா ஒங்கள எதிர்த்தாலும் எதிர்க்கலாம். :-)

    கேள்விகள் அபிரஹாமிய மதங்களைப் பத்தீங்குறதால இந்து மதத்துக் கருத்துகளைக் கொஞ்சம் சொல்லீர்ரேன்.

    இந்து மதங்குறதே பலரசம் (பழரசம்) போல இருக்கிறதால....ஒருத்தர் நம்புறத இன்னொருத்தர் நம்பத் தேவையில்லை. ஆகையால எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச சைவ சித்தாந்தத்த எடுத்துக்கிறேன்.

    இது லேசா அறிவியல்பூர்வமாத் தெரியலாம். ஆனா இதுதான் உண்மைன்னு நான் சொல்ல வரலை. பகிர்ந்துக்கிறதுக்காகச் சொல்றேன். எனக்கே முழுசாத் தெரியாது.

    ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். இங்க என்ன இருக்கோ அதுக்கு நேரெதிரா அங்க இருக்குதாம். எளிமையாச் சொல்லனும்னா ஓசையும் அமைதியும். இந்த ரெண்டும் சேந்தப்போ ஓங்காரம் வந்துச்சாம். அதுதான் ஆதாரம். like an energy source. அதுல இருந்து கூறுகூறா பிரிஞ்சி பிரிஞ்சி உலகம் உருவாச்சாம். இதுவும் ஒரு நம்பிக்கை. ஒரு கம்பிய எடுத்து ஒரு முனைய நெருப்புலயும் மறுமுனைய பனிக்கட்டியிலயும் வெச்சா...அங்க ஏற்கனவே இல்லாத கரண்டு உருவாகுதுல்ல...அந்த மாதிரி விவரம்தான் இது.

    அறிவியல் வழியா என்ன கண்டு பிடிச்சாலும் அதுக்கு முன்னாடி என்னன்னு ஒரு கேள்வி கண்டிப்பா இருக்கும்.

    ஆனா கடவுள் படைத்தான்னு நெனச்சாச்சுன்னா....அது போதும். எதையும் நம்ப வேண்டியதில்லை. அடுத்தவன் நம்புறதையும் சேத்து. ஆனா எல்லாரும் நல்லா வியாக்கியானம் கொடுப்பாங்க. :-) என்னையும் சேத்துத்தான்.

    ReplyDelete
  37. அருணகிரி,
    //இந்துக்கள் பொதுவாக மதத்தையும் அறிவியலையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்வதில்லை. //
    ஏற்கென்வே இதைப் பற்றி மதங்கள் என்ற என் பதிவுகளில் கொஞ்சம் சொல்லியுள்ளேன்.
    தாமரை இலையின் தண்ணீர் திவலைகள் என்ற தத்துவத்தை, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்வியல் பாடமாகவே மதத்தைப் பொருத்தவரைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

    ப்ராமணீய (சாதியைக் குறிப்பிடவில்லை இங்கே) இந்து மதத்தைத் தவிர, மற்றையோருக்கு மேலிருந்து உறுத்தும் கட்டளைகள் ஏதும் வருவதில்லை. they dont wear their religion on their sleeves.

    //கிறித்துவர்களிடத்தில் மதப்புத்தகங்களை லிட்டரலாகக் காணும் போக்கு குறைவு என்பதாகவே நினைக்கிறேன்.// முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இது உண்மையே. ஆனால், இது "மதத் தீவிரவாதிகளால்" எப்போதும் நெகட்டிவாகவே பார்க்கப் படுகிறது - 'உண்மையான விசுவாசம்' இல்லாதவர்களாக.

    நான் பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒரு மாதா படமோ, ஏசு படமோ போட்ட ஒரு கேலண்டர் கொடுக்க முடியும். கிறித்துவர்கள் கொடுப்பதுமுண்டு; இந்துநண்பர்கள் அதை உரிய மரியாதையோடு பெறுவதும் சாதாரணம். ஆனால், vice versa வாக நடக்குமா?

    மனிதத்தை மீறிய மதங்கள்...

    ReplyDelete
  38. ஜிராகவன், said:

    என்னங்க இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க :-)))))))) இனிமே தனியா வெளிய போகாதீங்க....எம்மதவாதிகளும் சம்மதவாதிகளா ஒங்கள எதிர்த்தாலும் எதிர்க்கலாம். :-)

    கேள்விகள் அபிரஹாமிய மதங்களைப் பத்தீங்குறதால இந்து மதத்துக் கருத்துகளைக் கொஞ்சம் சொல்லீர்ரேன்.

    இந்து மதங்குறதே பலரசம் (பழரசம்) போல இருக்கிறதால....ஒருத்தர் நம்புறத இன்னொருத்தர் நம்பத் தேவையில்லை. ஆகையால எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச சைவ சித்தாந்தத்த எடுத்துக்கிறேன்.

    இது லேசா அறிவியல்பூர்வமாத் தெரியலாம். ஆனா இதுதான் உண்மைன்னு நான் சொல்ல வரலை. பகிர்ந்துக்கிறதுக்காகச் சொல்றேன். எனக்கே முழுசாத் தெரியாது.

    ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். இங்க என்ன இருக்கோ அதுக்கு நேரெதிரா அங்க இருக்குதாம். எளிமையாச் சொல்லனும்னா ஓசையும் அமைதியும். இந்த ரெண்டும் சேந்தப்போ ஓங்காரம் வந்துச்சாம். அதுதான் ஆதாரம். like an energy source. அதுல இருந்து கூறுகூறா பிரிஞ்சி பிரிஞ்சி உலகம் உருவாச்சாம். இதுவும் ஒரு நம்பிக்கை. ஒரு கம்பிய எடுத்து ஒரு முனைய நெருப்புலயும் மறுமுனைய பனிக்கட்டியிலயும் வெச்சா...அங்க ஏற்கனவே இல்லாத கரண்டு உருவாகுதுல்ல...அந்த மாதிரி விவரம்தான் இது.

    அறிவியல் வழியா என்ன கண்டு பிடிச்சாலும் அதுக்கு முன்னாடி என்னன்னு ஒரு கேள்வி கண்டிப்பா இருக்கும்.

    ஆனா கடவுள் படைத்தான்னு நெனச்சாச்சுன்னா....அது போதும். எதையும் நம்ப வேண்டியதில்லை. அடுத்தவன் நம்புறதையும் சேத்து. ஆனா எல்லாரும் நல்லா வியாக்கியானம் கொடுப்பாங்க. :-) என்னையும் சேத்துத்தான்.

    ReplyDelete
  39. ஜிரா,
    //ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். //
    அதாவது matter- antimatter அப்டின்னெல்லாம் சொல்லுவாங்களே..அது மாதிரி; இல்ல?

    அதென்னவோ ஜிரா, உங்க பின்னூட்டம் தானா வரமாட்டேன்னு மொரண்டு பிடிச்சிது; அதனால நானா 'இறக்கிட்டேன்' :)

    ReplyDelete
  40. // Dharumi said...

    ஜிரா,
    //ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். //
    அதாவது matter- antimatter அப்டின்னெல்லாம் சொல்லுவாங்களே..அது மாதிரி; இல்ல? //

    அதே அதே...இன்னமும் விளக்கமா என்னென்னவோ சொல்வாங்க...எனக்குத் தெரியாது. இதுக்கு நாத விந்து தத்துவம்னு பேரு.

    // அதென்னவோ ஜிரா, உங்க பின்னூட்டம் தானா வரமாட்டேன்னு மொரண்டு பிடிச்சிது; அதனால நானா 'இறக்கிட்டேன்' :) //

    இதுல பன்னாட்டுச் சதி இருக்குன்னு நெனைக்கிறேன். :-))))) சசி தரூருக்கு வீட்டோ ஓட்டுப் போட்டவங்கதான் இதுக்கும் காரணமாயிருக்கனும். இல்லைன்னா இடியாப்பத்த ஐஸ்கிரீமோட தின்னவங்க, கார்ல தண்ணி ஊத்தி ஓட்டுனவங்க, ஏரோப்பிளேனுக்கு அல்வா வாங்கிக் குடுத்தவங்க, யானைக்குப் பஞ்சாரம் வாங்குனவங்க, இமயமலைய தூசி தட்டுனவங்க, அமோசான் காட்டுக்குள்ள மரம் நட்டுனவங்க, ஆல்ப்ஸ் மலையில ஏசி ஃபிட் பண்ணுனவங்க சதியாத்தான் இருக்கனும். கண்டுபிடிப்போம்.

    ReplyDelete
  41. "ப்ராமணீய (சாதியைக் குறிப்பிடவில்லை இங்கே) இந்து மதத்தைத் தவிர..."

    பிராமணீய இந்து மதம் என்ற கட்டுக்கதை காலனீய ஆதிக்கத்தின் கண்டுபிடிப்பு. இன்று இது வெறும் அரசியல் சொல்லாடலே தவிர இந்து ஞான மரபில் இப்படி ஒரு மண்ணாங்கட்டி பிரிவும் கிடையாது. முதலாளித்துவ கிறித்துவ மதம் என்று ஒன்றை எப்படிச் சொல்ல முடியாதோ அதுபோல இதுவும் ஒரு அபத்த சொல்லாடல்தான்.

    ReplyDelete
  42. அருணகிரி,
    கொஞ்சம் கோபமாக எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
    தேவையில்லையென்று நினைக்கிறேன். என்னுடைய புரிதலில், எனக்கு முற்றிலும் உடன்பாடான காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது. நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து மதம் இரண்டு பிரிவானது - ஒரு பிரிவினருக்குரிய இந்து மதத்தில் - higher gods like brahma, Siva, vishnu et al, ...வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், மனு தர்மம்...இத்தியாதி...இத்தியாதி. இன்னொன்றில், small gods, முனியாண்டி, மாரியாத்தா, சுடலைமாடன், ஐய்யனார்...etc., etc.,.... இப்படி ஒரு வகை. இந்த இரண்டையும் பிரித்தே காஞ்சையா பார்ப்பது போலவே நானும் பார்க்கிறேன். இதில் முதல் வகைக்கு ஏதாவது ஒரு பெயர் சொல்ல வேண்டுமே...நான் அதை ப்ராமணீய இந்து மதம் என்று கூறுகிறேன்; மற்றதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று இன்னும் தெரியவில்லை."அந்த மதத்துக்காரர்கள்"தான் உதவவேண்டும்!

    ReplyDelete
  43. பிரசண்ட் சார்,
    இப்படிக்கு கடைசி பெஞ்சு

    ReplyDelete
  44. நன்றி தருமி
    சிறப்பான பதிவு

    இதனைத் தொடர்ந்து இன்னும் ஒன்று எழுதியிருக்கிறேன்.
    உங்கள் கேள்விக்கு சகோதரர் அபுமுஹை அளித்த பதிலுக்கு எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன்

    வேறென்ன வெட்டி வேலைதான்

    ReplyDelete
  45. // நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து மதம் இரண்டு பிரிவானது - ஒரு பிரிவினருக்குரிய இந்து மதத்தில் - higher gods like brahma, Siva, vishnu et al, ...வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், மனு தர்மம்...இத்தியாதி...இத்தியாதி. இன்னொன்றில், small gods, முனியாண்டி, மாரியாத்தா, சுடலைமாடன், ஐய்யனார்...etc., etc.,.... இப்படி ஒரு வகை. இந்த இரண்டையும் பிரித்தே காஞ்சையா பார்ப்பது போலவே நானும் பார்க்கிறேன். இதில் முதல் வகைக்கு ஏதாவது ஒரு பெயர் சொல்ல வேண்டுமே...நான் அதை ப்ராமணீய இந்து மதம் என்று கூறுகிறேன்; மற்றதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று இன்னும் தெரியவில்லை."அந்த மதத்துக்காரர்கள்"தான் உதவவேண்டும்! //

    இல்லை தருமி. இதுவும் ஓரளவுக்குதான் உண்மை. நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெடா வெட்டிச் சாப்பிட்டு விட்டு அப்படியே கேரளா போய் குருவாயூர் வெண்ணெய் தின்று விட்டு அப்படியே பழநியில் பஞ்சாமிர்தம் நக்கி விட்டு மதுரையில் அழகர் கோயிலில் தோசையை லபக்கி விட்டு நேராக சுடலைமாடன் சாமி கோயிலில் திருநீறு பூசிக் கொண்டு முருகான்னு சொல்வேன். நிறையப் பேரு அப்படித்தான்.

    நீங்க சொல்ற பிரிவினையும் உண்டு. ஆனா அது மட்டுமே உண்மையல்ல என்பது என் கருத்து. அவ்வளவு எளிதாகப் பிரித்து விட முடியாது தருமி. வேளாங்கன்னியில் மெழுகுவர்த்தியும் ஏற்றி விட்டு நாகூர் கோயிலில் பாத்தியா கொடுக்கும் கூட்டமும் உண்டு.

    இந்து என்பது வெறும் பெயர்தான். அதை வைத்து எதையும் பொதுமைப் படுத்த முடியாது. பொதுமைப் படுத்துவதும் தவறு. இந்த நாட்டில் தனக்குப் பிடித்த வழியில் இருப்பதுதான் அது.

    ReplyDelete
  46. தருமி ஐயா..!

    இந்த பதிவு தொடர்புடன் நானும் ஒரு பதிவு போட்டு வச்சிருக்கேன். நேரம் கிடைச்சா பாருங்க...!

    காமடி கீமடி பண்ணவில்லை !
    :)

    http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.html

    ReplyDelete
  47. //
    காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது.
    //

    கஞ்சன் ஐலையா வின் நான் ஏன் இந்து அல்ல என்பது, Bertrand Russel ன் "நான் ஏன் கிருத்துவன் அல்ல", ஐவன் வர்ராக் கின் "நான் ஏன் முஸ்லீம் அல்ல" என்கிற லிஸ்டில் வரும் என்று எண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி எண்ணினீர்கள் என்றால், Himalayan blunder என்று தான் சொல்லமுடியும்.

    Its another hate literature against Hindus or Hinduism in the long list that is regularly published and updated by Marxists, Missionaries etc.,

    ReplyDelete
  48. //கடவுள் இருக்கிறாரா - இல்லையா, உண்மையா - பொய்யா என்று ஆராய்ச்சி செய்து அதற்காக ஒரு நிமிடத்தைத்தானும் செலவழிப்பவன் படு முட்டாள்.//

    அப்போ, நான் செம முட்டாள்னு சொல்லுங்க. ஆனால் எனக்கு இந்த தேடல் மிகவும் பிடிக்கிறது. தொடர்வேன்...

    ReplyDelete
  49. கோவி கண்ணன்,ஜோ, மணியன், நிமல் -

    நன்றி

    ReplyDelete
  50. தருமி, நான் காமெடி என்று சொல்லிருந்த விசயம் நீங்கள் அணுகி கேட்டிருந்த விதத்தினைப் பார்த்து... ரொம்ப தகிரியத்துடன் ;-) கேட்டிருந்த விதம் பிடித்திருந்தது அதான் அப்படிச் சொல்லியிருந்தேன்.

    மற்றொரு விசயம் தாங்கள் கூறியபடியே இந்த தசாவாதாரம் அப்படி இப்படின்னு என்னமோ சொல்லிகிட்டு இருக்காங்க அதுக்கும் பரிணாம கோட்பாட்டிற்கும் தொடர்ப்பு இருப்பதாக. அதனைப் பற்றியும் ஒரு Analytical Essay உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

    கீழே வரும் பின்னூட்டம் நான் சிவாவிற்கு அவரது பதிவில் திரும்பவும் கமெடிக்காக போட்டிருந்தது இங்கேயும் போடணுமின்னு தோணுச்சு போடறேன்...

    ...கொஞ்சம் நகைச்சுவைக்காகயாக பரிணாம ரீதியாக, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஏதாவது ஒரே ஒரு இடத்தில் மட்டும் தன் தன் கடவுளர்களின் அம்மார்க்-ஆக எலும்பு கட்டுமானத்தில் ஒரு சின்ன திருத்தமோ அல்லது ஒரு இத்தியாதி எலும்போ துருத்திக் கொண்டு இருப்பதைப் போன்று பரிணமிக்க வைத்திருந்தால், எவ்வளவு ஈசியாக இருந்திருக்கும், இந்த பிரட்சினைகளையெல்லாம் அணுகுவதற்கு :-))

    உங்களால் யூகிக்க முடிகிறதா? Star Trek Episodeகள் பார்த்ததுண்டா, இல்லையெனில் முயற்சியுங்கள் பிடித்திருக்கும்... அதில் Star Trek Enterprises will travel from planet to planet and galaxy to galaxy and interact with other inhabitants of the respective celestial bodies...

    ReplyDelete
  51. //நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெடா வெட்டிச் சாப்பிட்டு விட்டு அப்படியே கேரளா போய் குருவாயூர் வெண்ணெய் தின்று விட்டு அப்படியே பழநியில் பஞ்சாமிர்தம் நக்கி விட்டு மதுரையில் அழகர் கோயிலில் தோசையை லபக்கி விட்டு நேராக சுடலைமாடன் சாமி கோயிலில் திருநீறு பூசிக் கொண்டு முருகான்னு சொல்வேன். நிறையப் பேரு அப்படித்தான்.//

    முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.இன்னும்கூட சேத்துக்கலாம்..மொட்டையடிக்கிறது; அலகு குத்திக்கிறாது; நடை யாத்திரை..இன்ன பிற. ஆனால், நான் சொல்லும் 'அந்த' ப்ராMஅணீய இந்துக்கள் இதுபோல் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.

    காஞ்சையா சொல்வதுவும் இதே. ancestral worship மூலம் சுடலை சாமியையும், கருப்பு சாமியையும் கும்பிடும் என் மேல் உங்கள் 'பெரிய கடவுள்களை' ஏன் திணிக்கிறீர்கள் என்கிறார். இந்தப் பாகுபாடு உண்டு அல்லவா? இப்படி இரண்டு பிரிவுகள் இந்துமதத்தில் உள்ளது அல்லவா?

    ReplyDelete
  52. நீங்கள் சொல்வதுபோல் இரு பிரிவுகள் என்பது இந்துமதத்தில் இல்லை. யாரும் எந்தக்கடவுளையும் எவர்மீதும் திணிப்பதும் இல்லை. மதுரை வீரன் சிலையை உடைக்கும் வைணவர்களையோ, காளிகோவிலை உடைத்து அதன் கற்களை கழிவறைப்படிகளாக்கும் சைவர்களையோ பார்த்திருக்கிறீர்களா?
    மதுரை வீரனுக்குப் படையல் வைக்கும் உயர்சாதி வெள்ளாளர்களையும் மாரியம்மனுக்கு மாவிளக்குப்போடும் பார்ப்பனர்களையும், திருப்பதி செல்லும் திருக்குலத்தோரையும் உள்ளடக்கியதுதான் இந்துமரபு.

    தங்களது அரசியல் கொள்கை நிலைப்பாட்டுச் சாயங்களை இந்து மதத்தின் மேல் ஏற்றி சாமிகளைச் சாதி பிரிக்கும் சித்துவிளையாட்டுக்கள் காஞ்சையா (பெயர் சரியா? காஞ்சி இலையா என்பதே அவர் பெயரென நினைக்கிறேன்) போன்றவர்களின் அரசியலுக்கு உதவலாம்; அதனை இந்து மரபாகக்காண இயலாது- தத்துவார்த்தமாகவும் சரி; நடைமுறையிலும் சரி.

    தனது அரசியல் நம்பிக்கைக்கு ஒத்துவராத விஷயம் நடைமுறையில் இருந்தால் அதை வசதியாக ஒதுக்கி விட்டு, அரசியல் நம்பிக்கையே உண்மையென்று பேசும் "அறிவு ஜீவிகளு"க்கும் பைபிள் லிட்டரல் உண்மை என்று சொல்லும் படைப்புவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

    பலகடவுள் நம்பிக்கையும் பரம்பொருளை அறியும் பாதைதான் என்ற இளகிய நிலை கைகூடுவதால்தான் இந்துவுக்கு அறிவியலையும் கடவுள் நம்பிக்கையையும் குழப்பிக்கொள்ளாமல் பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து தனக்கே உரித்தான இளகிய அணுகுமுறையின் விளைவாக பரிணாமத்தில் கூட தசாவதாரத்தையும் தசாவதாரத்தில் கூட பரிணாமத்தையும் பார்க்க முடிகிறது. மரத்திலும், மலையிலும், நீரிலும் இறையைப்பார்க்கும் இந்துவுக்கு இது மிக எளிதாகவே கைகூடுகிறது. ஆனால் லிட்டரல் உண்மையாக மாற்றவியலா இறைவாக்குகளாக தங்கள் மதப்புத்தகங்களைக்காணும் அரசியல் மதங்களுக்கோ இது மிகப்பெரிய சவாலாகி விடுகின்றது.

    என்னுடைய பின்னூட்டத்தின் ஆதார வரிகளாக நான் கருதுவதை இங்கு மீண்டும் தருகிறேன்.

    சொல்லப்போனால் இன்னுமா நம்புகிறார்கள் என்பதே அல்ல உண்மையில் பிரச்சனை. ஏன் இன்னும் நம்புகிறார்கள் மற்றும் அந்த நம்பிக்கையின் விளைவாக என்ன செய்யத்துணிகிறார்கள் என்பதே பிரச்சனை. உலக அளவில் கிறித்துவ மதம் என்பது ஆன்மீகத்தைவிட, அதிகாரக் கைக்கொள்ளலையும் அதற்கு உதவும் வகையில் ஆள்பிடித்தலையுமே ஆதாரமாகக் கொண்ட ஒரு அரசியல் நிறுவனம் என்பதே உண்மை. அறிவியல், விவிலியத்தைப் பொய் என்றால் கிறித்துவத்தில் இருப்பவர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் (மேற்கில் காணும் உண்மை); ஆள்பிடிப்பதும் கடினமாகலாம். இது கிறித்துவத்தின் அதிகாரக் கைக்கொள்ளலை பாதிக்கும். எனவேதான் இத்தனை எதிர்ப்பு. இந்த எதிர்ப்பின் எதிரொலிதான் விவிலிய நம்பிக்கைக்கு அறிவியல் முலாம் பூசி கல்விக்கூடத்தினில் நுழைக்கவும் மற்றவர் மேல் திணிக்கவும், இடைவிடாது எடுக்கப்படும் முயற்சிகள். பரிணாமத்தை பாடப்புத்தகங்களிலிருந்து அறவே நீக்க நடக்கும் இம்முயற்சிகளின் சமீப வெளிப்பாடுதான் intelligent design என்று வரும் கும்மியடிப்புகள். இவ்வகையான முனைப்புகளின் தொடர்ச்சியே- இஸ்லாமிய எதிர்ப்புக்காகப் பிரபலமானாலும்கூட- காரண அறிவை கிறித்துவத்துடன் மணமுடிக்கும் போப்பின் சமீபத்திய உரை.

    எனவே, இன்னும் ஏன் நம்புகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை ஆபிரஹாமிய மதங்களின் ஒப்புயர்வற்ற தனிக்கடவுள், ஒரேபுத்தகம் இவற்றை லிட்டரலாக எடுத்துக்கொள்ளும் தன்மை - இவற்றில்தான் தேட வேண்டும்.

    நவீன அறிவியலின் பயன்பாடுகளின் கதாநாயகனாகி பொருளாதார உச்சத்தில் உள்ள அமெரிக்காவில் 65% க்கும் மேற்பட்டோர் பைபிளை லிட்டரல் உண்மையாகக் கருதும் விநோதத்தில் இதற்கான பதில் உள்ளது. இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையே பரிணாமத்தை எதிர்த்து கிரியேஷனிசத்தைக் கல்வியில் சேர்க்க வேண்டுமென்று வழக்குப்போட வைக்கிறது; 25 மில்லியன் டாலர் செலவு செய்து அறிவுச்சலவை செய்ய கிரியேஷன் ம்யூசியம் என்ற ஒன்றைக் கட்டத்தூண்டுகிறது; கிரியேஷன் அறிவியலாளர்கள் என்ற விநோத ஜந்துக்களை உருவாக்கவும் உந்துதலாயிருக்கிறது.

    இப்படிப்பட்ட விபரீதங்களோடு ஒன்றாக இணைவைத்து, ஆன்மீகத்தையும் அறிவியலையும் எதிராகப் பார்த்து குழப்பிக்கொள்ளாத இந்துமதத்தினைப் பொத்தாம் பொதுவாய்ப் போகிற போக்கில் ஒப்பீடு செய்து மட்டையடி அடித்தால் கோபம் வராமல் குலாவவா தோன்றும்?

    ReplyDelete
  53. அருணகிரி,
    நீங்கள் குலாவ வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்த்தேனா, என்ன?

    ReplyDelete
  54. நீங்கள் கூறிய ஐலையா (kanchan illaiya) வின் புத்தகத்தை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்கள் இங்கே.

    //
    25 மில்லியன் டாலர் செலவு செய்து அறிவுச்சலவை செய்ய கிரியேஷன் ம்யூசியம் என்ற ஒன்றைக் கட்டத்தூண்டுகிறது; கிரியேஷன் அறிவியலாளர்கள் என்ற விநோத ஜந்துக்களை உருவாக்கவும் உந்துதலாயிருக்கிறது.
    //

    இது மிகவும் பிரபலம். Bible Thumpers!!

    இவர்கள் கிருத்துவத்தில் மட்டுமல்ல, இஸ்லாம், மற்றும் யூத மதத்திலும் இருக்கிறார்கள்.

    இவர்கள், evolution என்ற வார்த்தை போட்டு அறிவியல் கட்டுரைகள் எழுத மாட்டார்கள். அப்படி போடப் பட்ட scientific papers களில் இவர்கள் Authorship வேண்டாம் என்று நிராகரித்துவிடுவர்.

    //
    அரசியல் நம்பிக்கையே உண்மையென்று பேசும் "அறிவு ஜீவிகளு"க்கும் பைபிள் லிட்டரல் உண்மை என்று சொல்லும் படைப்புவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.
    //

    இதை கம்யூனிஸத்திற்குச் சொன்னவர் Arthur koestler என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  55. வஜ்ரா,

    ஷாஸ்த்ரிகள்னா கிழிக்காமல் என்ன பண்ணுவார்? ஆனால் அவர் 'கிழிச்சதை' நான் ஏற்கென்வே கொஞ்சம் 'தொவச்சிக் காயப்போட்டிருக்கேன்' - பாருங்களேன் இங்கே.

    என் வார்த்தைகளையும் மீண்டும் இங்கே தருகிறேன். - "என்னுடைய புரிதலில், எனக்கு முற்றிலும் உடன்பாடான காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது. அதைப் படித்த பின்பே பாபர் மசூதியிடிப்பில் எனக்கு இருந்த எண்ணம் மாறியது.

    மற்ற உங்கள் கருத்துக்கு என் பதிலேதும் தேவையில்லை.

    ReplyDelete
  56. //உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள்//
    தருமி சார்,நானும் இதை வழிமொழிகிறேன்.மதம்/வேதம்/புத்தகங்கள் கைதேர்ந்த எழுத்தாளர்(கள்)பல கால கட்டங்களில் எழுதிய கதை புத்தகங்களே.மூத்த மதம் என்று நினைக்கப்படும் இந்து மதம் கடவுளை மனிதனை விட மேண்மையானவனாக காட்ட (பயமுறுத்த)அதை exta fitting வுடன், கிருத்துவம் இல்லபா, அவனின் மகனையே அனுப்ப, islam அவர்களுடைய agent டை அனுப்ப.. இப்படி போகிறது கதைகள் என்று நினைக்கிறேன்.நன்றி.
    லியோ சுரேஷ்
    துபாய்

    ReplyDelete
  57. லியோ சுரேஷ்,
    முதல் முறையாக வந்துள்ளீர்கள். வரவேற்கிறேன்.

    நன்றி...

    ReplyDelete
  58. குலாவ வேண்டும் என நீங்கள் சொல்லவில்லை- கோபப்பட வேண்டாம் என்று சொன்னதற்கான எதிர்வினை அது. கோபத்தின் பின்னுள்ள காரணிகளைப் பட்டியலிட்டும் விட்டேன்.

    பரிணாமத்தையோ அல்லது வேறு எந்த அறிவியல் சமாசாரத்தையோ பொறுத்தவரை, மத நம்பிக்கைகளோ கதையாடல்களோ என்ன சொல்கின்றன என்பதே
    முதன்மைப் பிரச்சனை அல்ல.
    தமது மத நம்பிக்கைகளுடன் அறிவியல் முரண்படுகையில் அதற்கு எந்த வகையில் எதிர்வினை புரிகிறார்கள் என்பதுதான் ஆதாரமான கேள்வி. திரும்பவும் சொல்கிறேன்: தமது மத நம்பிக்கைகளுடன் அறிவியல் முரண்படுகையில் அதற்கு எந்த வகையில் எதிர்வினை புரிகிறார்கள் என்பதுதான் ஆதாரமான கேள்வி. இந்தக் கேள்வியே அறிவியலைப்பொறுத்தவரை, ஒரு மதத்தின் பிற்போக்குக்கும் முற்போக்குக்கும் சரியான உரைகல்லாகும். காது குத்துவதும் காவடி எடுப்பதும் அல்ல. இதுதான் நான் மீண்டும் மீண்டும் இப்பின்னூட்டத்தில் வலியுறுத்த வரும் மையக்கருத்து.

    ReplyDelete
  59. தருமி சார்,

    மிக அருமையான பதிவு. நான் எப்படி இதை இத்தனை நாள் பார்க்காமலிருந்தேன் என்பது ஆச்சரியமாகயிருக்கிறது. தொடர்புடைய என்னுடய இடுகையொன்று. http://puliamaram.blogspot.com/2005/12/blog-post_22.html

    நீங்கள் Ernst Mayor- ன் What evolution is? படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அருமையான புத்தகம்.

    உங்கள் இடுகைகள் அனைத்தையுமே படிக்கவேண்டும் என்ற எண்ணதை இப்பதிவு மேலும் தூண்டுகிறது.

    ReplyDelete
  60. தங்கவேல்,
    மிக்க நன்றி. அப்போ மற்ற ஆறிய பழங்கஞ்சியிலிருந்தும் இன்னும் கேள்விகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ? !! :)

    ReplyDelete
  61. தருமி அய்யா,
    நானும் மதுரையில் தான் இருக்கிறேன்.ஹோண்டா ஸ்கூட்டரிலும்,டிவிஸ்50யிலும் வெண்ணிற மீசை படபடக்க ஒரு இளைஞனைப் போல் பறப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

    http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_3720.html

    மேற்கணட பதிவில் செல்வன் அவர்களுக்கு அளித்த பதிலில் கல்வெட்டு, தருமி போன்றோர் கலந்து கொண்டால் சிறந்த கருத்துக்கள் வெளிப்படும் என்று எழுதியிருந்தேன்.

    அறிவுப்பசியில் அலைபவனுக்கு அறிவு விருந்தே படைத்துள்ளீர்கள்.நன்றி

    ReplyDelete
  62. //ஆறிய பழங்கஞ்சியிலிருந்தும் இன்னும் கேள்விகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ? !! //

    ஹி, ஹி.. கேள்விகள் கேட்பது உங்களது வேலையல்லவா?! :) :)

    ReplyDelete
  63. ஜாலிஜம்பர்,

    ஒரே குழப்பமா இருக்கே! கைனடிக் ஹோண்டா கையை விட்டுப் போய் அஞ்சாறு மாசம் ஆகுது.(அதுக்குப் பிறகு போன வாரம் வரை ஆக்டிவாதான்.இப்போ அதுவும் இல்லை) டி.வி.எஸ் 50 கைவிட்டுப் போறதுக்கு முந்தி ரெண்டே நாள் ஓட்டியிருப்பேன். அதுவும் ஒரு பத்து நாளைக்கு முன்னாலதான். எப்போ எங்க அத பாத்திருப்பீங்க? ஒண்ணுமே புரியலையே!

    ரொம்ப பக்கத்திலேயே இருப்பீங்களோ? அப்படி இருந்தும் இதுவரை ஏன் 'கண்டு கிட்டதே' இல்லை? இனிமேயாவது கண்டுக்கங்களேன்.

    ReplyDelete
  64. மனிதன் உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருளை(அமினோ ஆசிட்) உருவாக்கி விட்டான். க்ளோனிங் மூலம் மனிதனை உருவாக்கமுடியும். இப்படியே போய் சீக்கிரம் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கி விடுவான்.

    -இப்படியும் சொல்கிறார்கள்!!!

    கடவுள் மண்ணிலிருந்து மனிதனை(உயிரற்ற பொருளிலிருந்து மனிதனை) எப்படி படைத்திருக்க முடியும்?

    --இப்படியும் கேட்கிறார்கள்!!!

    மனிதன் உயிரற்ற பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியால் உருவானான்.
    மனிதனை விட திறன் கூடிய கடவுளும் பரிணாம வளர்ச்சியால் உருவாகியிருக்கலாமே!!!

    ReplyDelete
  65. தருமி அய்யா,
    உங்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.முதல் முறை ஹோண்டா ஆக்டிவா உடன் எஸ்.எஸ்.காலனியில், கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் .அடுத்து நான் கரிசல்குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது டிவிஸ்50யுடன் 15 நாட்களுக்கு முன் .

    எங்கள் அப்பா வீடு ARC பார்சல் சர்வீஸ் க்கு அடுத்து உள்ள பொன்நகரில் உள்ளது.நான் பைபாஸ் ரோடு நாகப்பா மோட்டார்ஸ் அருகில் இருக்கிறேன்.

    தங்கள் தொடர்பு எண்ணை மின்மடலில் தெரியப்படுத்துங்கள்.
    ravim2k1@yahoo.co.in

    ReplyDelete