Friday, February 23, 2007

202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.




நான் அன்றே சொன்னேன்.
இன்று அதுவே நடந்தது.


*


$செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தொஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி.

ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன். எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும். இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும்இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.


அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். வெண்மணி வெண்மணின்னு ஒரு பயங்கர சம்பவம் நினைவில் இருக்கிறதா? மூணு பேர் இல்லை முப்பது பேர். என்ன ஆச்சு அந்தக் கேஸ்? இப்பவும் அதில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்வை மய்யமாக வைத்து எடுத்த செய்திப் படத்திற்கு கம்பீரமாக உட்கார்ந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன?

சில பல ஆண்டுகள் நடந்து -அதற்குள் தண்டிக்கப் பட வேண்டியவர்களின் ஆயுட்காலமே கூட முடிஞ்சிரலாம் - அதன் பின் தண்டனை வெகுவாகக் குறைக்கப் பட்டு, சில ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டு, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக 'பாவம், இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே சில காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்கள் தண்டனை முடிந்ததாக'க் கருதப் படுகிறது; ஆதலால் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை எனவும் மேல் கோர்ட் முடிவு செய்துவிடலாம்.

அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?

====================== 888888888888888888888 ===================


இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.)

அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!




*

Tuesday, February 20, 2007

201. சுடரோட்டம்.

சுடரை ஏற்றி வைத்து, நமக்காக தேன்கூட்டைத் தந்து இன்று நம்மிடமிருந்து பிரிந்து விட்ட சாகரன் அவர்களுக்கு என் மரியாதையோடு, இந்த சுடரோட்டப் பதிவையும் சமர்ப்பிக்கிறேன்.



சிபி,

நீங்கள் உங்களை சுடரோட்டத்தில் இணைத்த குமரனுக்கு நன்றி சொன்னது போல் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. அவர் உங்களை இணைத்தார்; நானோ மாட்டி விடப்பட்டேன். பொருத்தமான ஆளாகக் குமரன் தேடிப் பிடித்தார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி? இதெல்லாம் உங்களுக்கே நல்லாவா இருக்கு. சரி, விடுங்க. தனியா மண்டபத்தில நின்னு புலம்பணும் அப்டிங்கிறது என் தலையெழுத்து.

கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 18 x 5 = 90

இதுவரை வாத்தியாரா இருந்து கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டு இருந்த எனக்கு இப்போ இப்படி ஏமாற்றுத் தேர்வு – சாய்ஸே இல்லாம கேள்வி கேட்டா அது ஏமாற்றுத் தேர்வுதானே. ‘எவையேனும் ஐந்து வினாக்களுக்கு ..’ அப்டின்னு கொடுத்துட்டு சாய்ஸே இல்லைன்னா .. இது அநியாயம் இல்லையா, சிபி. இதில ரெண்டு செக்ஷன் வேற! அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியும் உண்டு. சரி… தலையக் குடுத்தாச்சு… இனிம ஆகுறது ஆகட்டும்னு பார்க்கிறேன். ஆனா கேள்விகளை உங்க ஆர்டர்படி இல்லாம கொஞ்சம் மாத்திக்கிறேன்.

முதல்ல, உங்க 4-வது கேள்வி:
4: "இல்லறமல்லது நல்லறமன்று" - சிறு குறிப்பு வரைக.

இந்தக் கேள்விக்குப் பதில் : தெரியாது.

நமக்குத் தெரிஞ்சா பதில் சொல்லணும்; இல்லாட்டி சாய்ஸ்ல விட்டுரணும் – இதுதான் நம்ம பாலிஸி. ஆனா இந்தக் கேள்விக்கு ஏன் பதில் தெரியலை அப்டின்றதை மட்டும் சொல்லிடறேன்.

நமக்கு (அதாவது, எனக்கு) தெரிஞ்சதே இல்லறம் மட்டும்தான். இதுவரை சாமியாரா ஆனது இல்லை; இனிம ஆகிறதாகவும் ஐடியா கிடையாது. பிரம்மச்சாரிகளைப் பார்க்கும்போது சில சமயம் பொறாமையாகூட இருக்கும். ஆனா, அவங்க செருப்புக்குள்ள (அதாங்க, being in their shoes ) நாம இருந்தது இல்லை. அதனால அது அவங்களுக்கு எப்படி இருக்குது அப்டிங்கிறது நமக்குத் தெரியாது. நம்ம கஷ்ட நஷ்டம் அவங்களுக்குத் தெரியாது. இப்போ என்னடான்னா, புதுசா ‘ஒன்றாய் வாழ்தல்’ – cohabitation அப்டின்னு ஒண்ணு வேற வந்திருக்கு. வெளிய இருந்து பார்க்கிறதுக்கு, 'பரவாயில்லையே, மீசையையும் வச்சிக்கிறாங்க; கூழையும் குடிக்கிறாங்களே' அப்டின்னு நமக்குத் தோணுது. அதில என்ன கஷ்ட நஷ்டம் என்னன்னு நமக்குத் தெரியுமோ!

நான் இல்லற வாசி; அது பிடிச்சிருக்கு; நல்லா இருக்கு அப்டின்னு சொல்றதோடு நிப்பாட்டிக்கணும்; அதை விட்டுட்டு இதுதான் எல்லாத்தையும் விட டாப்புன்னு அடிச்சி விடக்கூடாது; இல்லீங்களா?

----------------------------------------------------------------------------
(வேற ஒண்ணும் இல்லீங்க; தேர்வு எழுதும்போதும் இப்படித்தான் ஒழுங்கா கோடு போட்டு எழுதுற வழக்கம்; அதனாலதான் கோடு எல்லாம் போட்டுட்டேன்.)
-----------------------------------------------------------------------------

2: கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் - ஒப்பிடுக.

இந்தப் பெருசுங்க எல்லார்ட்டயும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ‘எங்க காலத்தில எல்லாம் …’ அப்டின்னு ஒரு பெருமூச்சோடு பேச ஆரம்பிச்சி பெரிய ரோதனை பண்ணிடுங்க .. அது மாதிரி விஷயத்தில இந்தக் கூட்டுக் குடும்ப விஷயம் ஒண்ணு. நம்ம பண்பாடு, வழமை அது இதுன்னு பேசி, கூட்டுக் குடும்பத்துக்கு ஒரேயடியா வக்காலத்து வாங்குவாங்க. அதெல்லாம் 50 வருஷத்துக்கு முந்திய கதை. எப்போ நம்ம சமூகம் விவசாய சமூகமா இருந்தது மாறியதோ அப்பவே வாழ்க்கை முறைகளும் மாறும்; மாறணும்; மாறியாச்சி. கூட்டுக் குடும்பம் என்பதெல்லாம் இனிமே சினிமாவில பாத்துக்க வேண்டியதுதான்.

அதில இன்னொண்ணு, நாம எல்லோருமே கொஞ்சம் சென்டி டைப்புகள்தான். என் பிள்ளை என் பக்கத்திலேயே இருக்கணும்; நான் எப்படி சீராட்டி வளர்த்தேன் அதனால அவன்/அவள்/அவர்கள் வயசான காலத்தில என்னை அப்படி வச்சுக்கணும்; இப்படி வச்சுக்கணும் என்ற பெருசுகளின் வாழ்க்கைக் கணக்கு எனக்குப் பிடிப்பதில்லை. ரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.

இதில இன்னொரு ஜோக் என்னென்னா, என் பிள்ளை என்னோடு இருக்கணும் அப்டின்னு சொல்ற பெற்றோர்கள் தங்களைப் பெத்தவங்க பக்கத்தில உக்காந்துகிட்டு இருந்திருக்க மாட்டங்க. அதை நினைச்சும் பார்க்கிறதில்லை. ஜெயகாந்தன் சொன்னது மாதிரி ‘உறவுகள் முன்னோக்கியே நீளுகின்றன’.
--------------------------------------------------------------------------------

5: இறை மறுப்பு என்பது எப்போதும் இறை நம்பிக்கை என்ற ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்கிறேன் நான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிபி, இந்தக் கேள்விக்கு நியாயமா ஒரே வரியில் பதில் சொல்லிட முடியும். அதுக்கு நியாயமா பார்த்தா நீங்க ஃபுல் மார்க் பதினெட்டும் கொடுக்கணும். பொதுவா எடை பார்த்து ஆசிரியர்கள் மார்க் போடுறதா பசங்க எல்லோரும் சொல்றது உண்டு. அதனால் நீங்களும் அப்படி கொடுப்பீங்களான்னு தெரியாததால கூட கொஞ்சம் ரீல் விட்டுக்கிறேன்.

ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.

ரீல் : இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்தக் கேள்வியும் இன்றி, ஊட்டப் பட்டதை அரைகுறையாய் செரித்துக் கொண்டு பலரும் இருப்பதாலேயே ‘ஏன், எப்படி, சரியா, தவறா என்றெல்லாம் கேள்வி கேட்கும் சிலர் மட்டும் தங்கள் முடிவாக இறை மறுப்புக் கொள்கையை கைக் கொள்கிறார்கள். ‘அவனை நிப்பாட்டச் சொல்; நான் நிப்பாட்டி விடுகிறேன்’ என்ற தத்துவம் தான்.

விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன?
---------------------------------------------------------------------------

3: இசங்கள், ஈயங்கள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தாலும், அனைவருக்கும் ஏற்புடைய ஒத்த கருத்து இதுவரை கிடைத்தபாடில்லையெ! அல்லது விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் நன்மை பயக்குமா?

ஒருத்தர் சொல்லி இருப்பாரே தன் tag line-ல: “நான் தனித்துவமானவன்; உங்களைப் போலவே” அப்டின்னு. I think; so I am அப்டின்னு பெரிய தத்துவ ஞானி ஒருவர் சொன்னதாகச் சொல்லுவாங்களே; What is meat for the goose may be poison for gander – அப்டின்னும் சொல்லுவாங்களே அது மாதிரி ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். அது அதுபாட்டுக்கு போகுது. “என் வழி தனி வழி”ன்னு சூப்பர் சொன்னாருன்னா அது அவருக்கு மட்டுமில்லீங்க; நம்ம எல்லாத்துக்கும் பொருந்தும். என்ன பிரச்சனைனா, எல்லோருமே ‘என் வழி தனி வழி; அதுவே மிகச் சரியான வழி’ அப்டிங்றாங்க.. அங்கதான் எல்லாமே உதைக்குது!

இது நன்மை பயக்குமா அப்டின்னு கேட்டீங்கன்னா, அங்க ஒண்ணு இங்க ஒண்ணு அப்டின்னு நடக்கலாம். தீப்பொறி எப்போ எங்க எப்படி பத்திக்கும்னு தெரியாதது மாதிரிதான். ஆனாலும் இந்த தத்துவ விவாதங்கள் எல்லாமே அனேகமாக ஒரு வித ego tripsதான்!
----------------------------------------------------------------------------

1 : ஒரு ஆசிரியரின் ஆத்ம திருப்தி என்பது எதில் அடங்கியிருக்கிறது? அதன் எல்லைகள் யாவை?

இது பெரிய கேள்விங்க; சொல்லப் போனா சுயசரிதை எழுதினால்தான் முழுசா பதில் சொல்ல முடியும் அப்டின்னு தோணுது.

நாப்பது பசங்க முன்னால நின்னு க்ளாஸ் எடுக்கிற எல்லோருமே ஆசிரியர் இல்லைன்னு இப்போ இந்த நிமிஷத்தில் தோணுது. க்ளாஸ் எடுக்கிறதோடு, every teacher should leave his stamp on every one of his students அப்டின்ற ‘தத்துவம்’ என்னுடையது. படிச்சி முடிச்சி போனபிறகும் ஒரு மாணவன் தன் ஆசிரியனிடம் காட்டும் அன்பு – மரியாதையோ பயமோ அல்ல – அதில் மட்டுமே ஓர் ஆசிரியருக்கு நீங்கள் சொல்லும் ஆத்ம திருப்தி இருக்கும்.

முதல் முதல் எடுத்த வகுப்பிலிருந்த மாணவன் இன்றும் ஆசிரியனைப் பெயர் சொல்லி அழைத்து நட்போடு பழகி ஆசிரியரின் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறானே அதுவும், கல்லூரியில் படித்து முடித்து பின் Ph.D. பட்டம் வாங்கும்போது தன் thesis-ஐ ஆசிரியனுக்கு சமர்ப்பணமாக்கினானே அதுவும், புதுவீடு கட்டியாக வேண்டிய நிலையில் வங்கிக் கடன் இன்னும் வரவில்லை என்று அதை எதிர் நோக்கியிருப்பது தெரிந்ததும் எதுவும் கேட்காமல் என் பணத்தில் முதலில் ஆரம்பியுங்கள் என்று ஆசிரியருக்குப் பணம் அனுப்பியதும், நல்ல நிலைக்கு வந்த பழைய மாணவன் தன் உயர்வுக்கு காரணம் என்று எல்லோரிடமும் எப்போதும் தன் ஆசிரியர் பெயரைச் சொல்லும்போதும், அதெல்லாவற்றையும் தாண்டி, ஒருகாலத்தில் மாணவனாக இருந்து இப்போது நண்பனாகி, மகனாகி ஆசிரியரின் வாழ்க்கையில் தொடர்ந்து வருவதும்…. இது போல் நிறைய சொல்லலாம். இப்படி நடந்ததெல்லாம் எந்த ஆசிரியருக்கும் நடந்ததா, எனக்கு நடந்ததா என்பதா முக்கியம்? ஆனால், இப்படிப்பட்ட நடப்புகள் தரும் ஆத்ம திருப்தி வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன்.
----------------------------------------------------------------------------

சிறப்புக் கேள்வி :
கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஒன்றினுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 1 x 10 = 10
தங்களை ஜோதிடர் என நினைத்து ஒருவர் ஜாதகத்தில் சந்தேகம் கேட்டாராமே. உண்மையா? :)


ஆமாங்க … ஆமாம் …
அதில் இருந்து என்ன தெரியுது? நிறைய பேர் பதிவுகளின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள்; எழுதியிருப்பதை வாசிப்பதே இல்லை என்றே தெரிகிறது.
Moral: உள்ளே சரக்கு என்ன இருக்கோ இல்லியோ, தலைப்பை சும்மா ‘கும்’முன்னு வச்சா, கவுண்டருக்குக் கவலையே இல்லை; பிச்சுக்கிட்டு போகும். அதனால் --

கவுண்டர் கணக்கெல்லாம் கணக்கல்ல வாசித்தவர்
கணக்கே நல்ல கணக்கு.
------------------------------------------------------------------------

சிபி சார், ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மார்க் போடுங்க. என் பசங்கட்ட சொல்றது மாதிரி: An answer paper can be either corrected or simply valued. Now I prefer the former.

அப்புறம், நான் யார்ட்ட இந்த சுடரைக் கொண்டு சேர்க்கப் போகிறேன் அப்டிங்கிறதையும் சொல்லணுமே. None other than … the only one… who else .. but ..இளவஞ்சி … சரி..சரி … கைதட்டுனது போதும். . இதோ வரச் சொல்லிர்ரேன்.

இளவஞ்சியின் முன் நான் வைக்கும் நாலு கேள்விகள்:

1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா?

2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா? ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்?

3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.

4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா?

நான் சுடரை சொத்ப்பியிருந்தாலும் நல்ல ஆளுகிட்ட கொண்டு போய் சேர்த்த திருப்தி இருக்கு.


அப்போ நான் விடை வாங்கிக்கிறேன்.
வர்ட்டா ….

Thursday, February 08, 2007

200. தருமி 200 - விமர்சிக்கிறார், பெனாத்தலார் !!!!!!!!!!!!

*

*


(குங்குமம் பாணியில் படிக்க)

சில புனைபெயர்களைப் பார்த்ததும், ஏன் இந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்ற கேள்வி மனதில் எழும்பும். தருமி என்ற பெயர், திருவிளையாடல் நாகேஷையே நினைவுபடுத்த, இந்த எழுத்தாளர் நகைச்சுவைக்காக இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே தோன்றியது.


விளம்பரங்களைப்பற்றிய சில கேள்விகளோடு உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அடுத்ததாகவே Civic Sense பற்றிய கேள்விகளை அள்ளித் தெளித்ததில் சரிதான் - இது நாகேஷ் தருமி அல்ல, "எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் - தருமி" எனத் தெரிந்தது.
உள் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டாலும், இதுவரை 199 கேள்விகளைக் கேட்டிருக்கிறார். எத்தனையோ பேர் பதில் சொல்ல முயற்சித்தும் இருக்கிறார்கள்.


சர்தர்ஜியின் மகன் சர்தாரிடம் கேட்டானாம்.. "அப்பா உலகத்திலேயே பெரிய மலை எதுப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

கொஞ்ச நேரம் கழித்து மகன் "அப்பா, பறக்காத பறவைகளிலேயே பெரிய பறவை எதுப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து, மகன் "அப்பா, இந்தியாவின் 8ஆவது பிரதம மந்திரி யாருப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

மகன் அமைதியாகிவிட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து சர்தார் "ஏன்ப்பா கேள்வி கேக்கறதை நிறுத்திட்டே? கேள்வி கேட்காட்டி அறிவு எப்படி விருத்தியாகும்" என்றானாம்.


தருமியின் பிரச்சனையும் இதுவேதானோ என்று தோன்றுகிறது. சரியான கேள்விகள், ஆனால் கேட்கப்பட்டவர்களிடமும் கேள்விகள்தான் இருக்கின்றனவே ஒழிய விடை இல்லை.


ஆரம்ப காலங்களிலேயே இவர் கேள்விகளின் (கவலைகளின்) வீச்சு ஆச்சரியப்படவைத்தது. கற்பழித்தவனுக்கே கல்யாணம் செய்துவைக்கும் நீதிபதியைப்பற்றியும் குமுறுவார். காமன்வெல்த்தில் இன்னும் இந்தியா நீடிப்பது அவமானம் என்றும் வாதிப்பார் (நீடிக்கிறதா என்ன?:-)) ஏன் நம் அரசியல்வாதிகளுக்கு நனிநாகரீகம் தெரிவதில்லை என வருந்துவார்!


அப்புறம்தான் ஒரு கியர் மாற்றி மெகா சீரியல்களை ஆரம்பித்தார். ஹிந்திப்போராட்டம் பற்றிய முதல்கைத் தகவல்கள், "நான் ஏன் மதம் மாறினேன்" என்று இன்னுமொரு informative தொடர், இந்தி தெரியாமல் வடநாட்டுக்குச் செல்வதை வீரப்பயணமாக வர்ணித்த தொடர், மரணம் தொட்ட கணங்கள் என்று தேவிபாலா கணக்காக சீரியல்கள் எழுதினாலும், அவ்வப்போது ஜாவா மகாத்மியம், மீனாட்சியம்மா வீட்டு வயசுக்கு மரியாதை கேட்டு, கொ ப செ வாக பதவி உயர்வு பெற்றது என நகைச்சுவைக்கும் மரியாதை கொடுக்கத் தவறவில்லை.


திரைப்பட விமர்சனங்கள் என்று தனிப்பட்டு செய்யாவிட்டாலும், நல்ல திரைப்படங்களுக்காக (அவருக்கும் எனக்கும் பல இடங்களில் நல்ல திரைப்படம் என்றால் என்ன என்ற கருத்து ஒத்துப்போகிறது) ஆதங்கப்படுவார், டிவி தொடர்களைக் கண்டு வெதும்புவார். திடுதிப்பென்று கவிதைகளை மொழிபெயர்த்து ஆச்சரியப்படுத்துவார்.


பின்னூட்டங்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதை அருமை. நேரம் எடுத்தாலும், பொறுமையாக ஒவ்வொரு வரிக்கும் பதிலை அளிப்பதாக இருக்கட்டும், தனக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என ஒப்புக்கொள்வதாக இருக்கட்டும், விவாதம் வி-வாதமாக மாறும்போது சரி இத்தோடு போதும் என புல்ஸ்டாப் வைப்பதாகட்டும், விவாதக்களத்தை வழிநடத்துவதில் பல விஷயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


எனக்கு இவரிடம் ஒத்துப்போகாத விஷயங்கள் பல இருந்தாலும் பெரும்பான்மையானவை கிரிக்கெட் மசாலா சினிமா போல தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் சார்ந்தவை - ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாகக் குறிப்பிட்டுவிடுகிறேன். முகம் மறைத்து எழுதும் பதிவர்கள் பற்றிய இவரது தீவிரமான கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை. முகம் மறைப்பது தன் கருத்தில் உள்ள நம்பிக்கையின்மை என்பது இவர் கருத்து. நான் மாறுபடுகிறேன். தீவிரமான கருத்துக்களை வெளியிடுவோர் பல காரணங்களால் முகம் மறைக்கலாம், போலித்தனம், அடையாளத் திருட்டு, அவதூறு நோக்கம் இல்லாதவரை முகம் மறைப்பது தவறல்ல என்பது என் கருத்து. இருக்கட்டும்..முழுக்க ஒத்துப்போனால் வாழ்க்கை போரடித்துவிடும்.


சமீப காலங்களில் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவை சார்ந்த பதிவுகளில் அதிக பங்களிப்பு இருந்தாலும், ஆரம்ப காலங்களில் இருந்த Versatality குறைந்துவிட்டதுபோல உணர்கிறேன். பரந்த களங்களில் பங்கேற்கக்கூடிய திறமை உள்ளவர் ஓரிடத்தில் மட்டும் ஒடுங்கிவிடக்கூடாது என்பதனால் இந்த விண்ணப்பமே தவிர, சமீப காலப் பதிவுகளை எதிர்த்து அல்ல.


எப்படி இருப்பினும், தெளிவான, யாரையும் காயப்படுத்தாத, மெல்லிய நகைச்சுவை கொண்ட தமிழ்நடையால், முகப்புக்கு வந்த அடுத்த நொடி க்ளிக் பெறும் தருமியின் பதிவுகள். அதே போல, மறுமொழியப்பட்ட பதிவுகளில் வந்தாலும் உடனே க்ளிக்க வைக்கும் விவாதங்கள் - இதே வீரியத்துடன் தொடர விரும்புகிறேன்.


200க்கு வாழ்த்துகள்.

முதல் பதிவில் வேறு யாரும் பின்னூட்டம் போடாத காரணத்தாலே எனக்கு இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.


*

*

Monday, February 05, 2007

199. நான் ஏன் இப்படி ... ?

*

*

சாமிகளா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

எல்லாம் என்னைப் பத்தின விஷயம்தான். இதுல என்மேல என்ன தப்புன்னு நீங்கதான் சொல்லணும். நான் சரியா, இல்லையான்னு எனக்குத் தெரியவில்லை. நீங்களாவது சொல்லுவீங்கன்னு நினச்சு கேக்கிறேன்.

அது என்னன்னு தெரியலைங்க. சில ஆளுங்கள பாத்தாலே, நினச்சாலே சும்மா 'கும்முன்னு' ஏறுது மனசுக்குள்ள. ரொம்ப கடுப்பாயிருது. இப்ப பாருங்க நம்ம இளைய தளபதி - அவரு நடிச்சதில காதலுக்கு மரியாதை, அப்புறம் இன்னொரு படம், நம்ம சிம்ரனுக்குக் கூட கண்ணு தெரியாம போய் கடைசியில ஐ.ஏ.எஸ். கூட ஆயிருவாங்களே அந்த மாதிரி சில படத்தில நல்லாவே நடிச்சிருப்பார். ஆனா இப்போ அவரை அப்படியே தூக்கி சாப்பிடுறது மாதிரி சூர்யா, விக்ரம் எல்லாம் தூள் கிளப்புறாங்க. (இதுவரை நம்ம சிவாஜியில இருந்து பலர் போலீஸ் வேஷம் கட்டி நடிச்சதைப் பார்த்தாச்சு; ஆனா காக்க காக்க படத்தில சூர்யா பண்ணினது மாதிரி வேற யாரும் நடிச்சதில்லைன்னு எனக்குத் தோணுது.) கான்செப்ட் கிறுக்குத்தனமா எனக்குத் தெரிந்தாலும் விக்ரம் அந்நியன்ல மாத்தி, மாத்தி நடிச்சதோ, இல்ல சேதுல பிச்சு வாங்குனது மாதிரியோ நம்ம ஆளு இளைய தளபதி, அவரே அடிக்கடி சொல்லிக்கிறது மாதிரி அந்த மாதிரி 'தப்பு' பண்றதில்லை. ஆனாலும் பாருங்க எந்தப் படம் வந்தாலும் பிச்சுக்கிட்டு போகுது. இதில நாளைய சூப்பர் ஸ்டார்னு மக்களெல்லாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துட்டாங்களாமே, நேத்து ஸ்டார் டிவியில் சொன்னாங்க.

என் கேள்வி என்னன்னு சொல்லலையே .. ரெண்டு கேள்வி இருக்கு:

முதல் கேள்வி: அந்தக் காலத்தில இருந்தே நம்ம சினிமா உலகத்தில எப்பவுமே நல்லா நடிக்கிறவங்கவளை விடவும் காசுக்குப் பெறாததுகள் எப்பவுமே டாப்ல இருக்குதுகளே, அது எப்படி? சிவாஜி - எம்.ஜி.ஆர்.; கமல் - ரஜினி; அங்க வடக்கில எனக்கு என்னவோ அந்த big B அப்படி ஒண்ணும் நடிப்பில சொல்லிக்கிறது மாதிரி இருந்ததில்லை (நான் இப்போ கடைசியா பார்த்த Black தவிர; அதைப் பத்தி பிறகு ஒரு தடவை பேசுவோம்.) ஆனால் ராஜேஷ் கன்னா, அதைவிட இன்னொருத்தர்; பேருகூட மறந்து போச்சு; ரொம்ப நல்லா நடிப்பார்; ஒரு பெரிய நடிகை மேல் ஒரே காதலா இருந்து, தேவதாஸாகி, சின்ன வயசிலேயே போய்ட்டார். பிறவி செவிட்டு ஊமையாக அமிதாபோட வீட்டுக்கார அம்மாகூட தூள் கிளப்பியிருப்பார் ஒரு படத்தில. அவரு முன்னால் big B ஒண்ணுமே கிடையாதுதான் இருந்தாலும் இப்ப என்னடான்னா, நூற்றாண்டின் சிறந்த / பாப்புலர் நடிகர் அப்டிங்கிறாங்க.
அட நம்ம மணிரத்தினத்தைக் கூட எடுத்துக்குவோமே. அவர தலைக்கு மேல தூக்கி வைக்கிற அளவுக்கு எந்த படம் சொந்தக் கதையோடு, creativity-யோடு, - அட, நம்ம 'சேது' பாலாவோடு compare செஞ்சு பார்த்தால் - நல்லா இருந்திருக்கு. just a media-made man அப்டின்றதுதான் என் மதிப்பீடு. அவரைப் பத்தி மட்டும் இன்னொரு பதிவு பின்னால போடணும்தான்.

இப்போ மறுபடி விஷயத்துக்கு வருவோம். ஏன் இப்படி இரண்டாம் தரம் -அல்லது தரமே இல்லாததுகள், நம்ம எம்.ஜி.ஆர். மாதிரி; ரஜினியை அதோடு சேர்க்க மாட்டேன் - ஓவரா தூக்கி வைக்கப்படுகிறார்கள்? charisma அப்டின்னு ஒண்ணு சொல்லுவாங்க. காரணம் தெரியாமலேயே, சிலருக்கு சுக்கிரதசை அடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி.

இது எப்படி? ஏன் அப்படி? - சாமிகளா! எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்.


இரண்டாவது: சரி, யார் மேல இருந்தா உனக்கென்னன்னு கேக்குறீங்களா? அதையேதான் நானும் என்னையே கேட்டுக்கிறேன். அது மாதிரி இருக்க முடியலையே; ஏன்? எல்லோருக்கும் சின்ன வயசில எம்.ஜி.ஆர். மேல ஒரு 'இது'வும், பின்னாளில் வயசும், புத்தியும் ஏறுன பிறகு சிவாஜியும் பிடிக்கும்னு அந்தக் காலத்தில நிறைய பேரு சொன்னது ஞாபகத்துக்கு வருது. ஆனா அது என்னவோ சின்ன வயசிலேயே சிவாஜிய பிடிச்சதை விடவும் எம்.ஜி.ஆரை. திரையில் மட்டுமல்ல எங்க பாத்தாலும் பிடிக்காது. அட, இப்ப பாருங்க.. நம்ம இளைய தளபதி மேல் ஒரு வெறுப்பு வந்தது இப்போ கொஞ்ச நாளாதான். அவரது இமாலய வெற்றிகளுக்குப் பிறகுதான். நான் இப்படித்தான் நடிப்பேன்; பார்க்குறது உங்க தலைவிதின்னு சொல்லியே செய்றாரே அதுக்குப் பிறகுதான். அமிதாப் மேலேயும் அந்த எரிச்சல் உண்டு. ரஜினி கொஞ்சம் விதி விலக்கு. அந்த மனுஷன் மேல் வர்ர எரிச்சலைவிட அவரது ரசிகர்கள் மேலதான் வரும் (?) அவரு என்ன செஞ்சாலும் -சினிமாவில தான் - கைதட்டுற நம்ம ரசிகர்கள் மேல்தான் எரிச்சல். அது என்னங்க, அவரு வேல் கம்பை தரையில் நட்டு வச்சா, அது அப்படி எதிரிங்களை வட்டம் கட்டி அவர்ட்டயே திரும்பி வருது.. அதுக்கும் நியு ஜெர்ஸி,லாஸ் ஏஞ்சல்ஸ் தியேட்டர்ல உக்காந்து கிட்டு கைதட்டுறீங்க.. என்னமோ போங்க ..

இப்போ இரண்டாவது கேள்வி: ஏன் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் பிடித்த ஆட்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காமல் போய் விடுகிறார்கள்? பெரும்பான்மையினருக்கு 'டேஸ்ட்' இல்லை என்று சொல்ல முடியாது. அப்போ, தப்பு என்னிடம்தான் இருக்க வேண்டும். அது என்ன?
நான் தரமில்லாதவர்கள் என்று நினைப்பவர்கள் 'டாப்'ல இருந்தா, இருந்துவிட்டுப் போகட்டும் என்று இல்லாமல் எரிச்சல் படுவது தப்புத்தான். ஆனாலும் அப்படித்தான் இருக்கிறேனே. ஏன்? இதுவும் ஒரு வகை மனோவியாதியா? இல்லை, ஏதும் குணக்கேடோ?

சாமிகளா! எனக்கு அந்த உண்மைகள் தெரிஞ்சாகணும்.


*

*