Friday, August 19, 2005

54. மரணம் தொட்ட கணங்கள்...முதல் கணம்

பள்ளியிறுதி படிப்பு முடியும்வரை ஒவ்வொரு கோடைவிடுமுறையையும் கழிக்க சொந்த ஊர் செல்லும் பழக்கம் இருந்தது. அந்த நாட்களில் மதுரையில் செய்யமுடியாத காரியங்களைச் செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்காகவே அந்தப் பயணங்களுக்காக ஆவலாகக் காத்திருப்பேன். நெல்லைவரை புகைவண்டியில் வந்து அதன்பின்னும், 30,40 மைல்கள் பஸ்ஸில் செல்லும் அந்தப் பயணத்திற்கு வீட்டில் பெரியவர்கள் தயார் செய்வதைவிட நான் அதிகமாகத் தயார் செய்யவேண்டியதிருக்கும். கிராமத்து நண்பர்களுக்கென்று அங்கே கிடைக்காத கண்ணாடி கோலிக்குண்டு, தீப்பெட்டிப் படங்கள்,பம்பரம், டென்னிஸ் பந்து,காமிக்ஸ் புத்தகங்கள்...இன்னும் என்னென்னவோ.

அப்படி என்ன மதுரையில் செய்ய முடியாத காரியங்கள் என்று கேட்கிறீர்களா? அது எவ்வளவு! காடு மேடு பாராமல் சுற்றுவது; திருட்டுத்தனமா பீடி, சிகரெட் பிடிக்கிறது, கிட்டி விளையாடுறது, பிள்ளையார் பந்து, நீச்சல்...இப்படி லிஸ்ட் நீளமா போகும். இந்த லிஸ்டில் இன்னுமொன்று, மாட்டு வண்டி ஓட்டுறது. மற்ற எல்லா விஷயங்களும் 'குரூப் ஆக்டிவிட்டி'. ஆனால், மாட்டு வண்டி ஓட்றது மட்டும் தனி நபர் ஆக்டிவிட்டி. (individual-யை தமிழில் டைப் செய்து பார்த்தேன்; முடியவில்லை. அதனால், நல்ல பிள்ளையாக 'தனிநபர்' என்று போட்டுத் தப்பித்துக்கோண்டேன்.)

விடுமுறைக்கெல்லாம் பாளையங்கோட்டை சித்தப்பா, மதுரைப் பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள் என்று ஒரு பத்து, பன்னிரண்டு உருப்படிகளாக சிறிசுகள் நாங்கள் தேருவோம். அக்கா, தங்கைகள் என்று எல்லோருமாகச் சேர்ந்தால், இந்தக்காலத்து 'அந்தாக்ஷிரி' மாதிரி 'சினிமா தலைப்புகளை' வைத்து விளையாடுவோம்; இல்லை, கல்லா மண்ணா விளையாட்டு; இல்லை, இரண்டு தூண்களுக்கு நடுவே சேலையைக் கட்டி, ஒரு பக்கம் நடிக, நடிகையர்களும், மற்றொரு பக்கம் 'ஆடியன்ஸ்' என்று பிரித்து நாடகம், டான்ஸ் எல்லாம் நடக்கும். shift system-ல் இந்தக் 'கலைவிழாக்கள்' நடக்கும் என்பதால் ஒவ்வொரு குரூப் குரூப்பாக creative work தனித்தனியான discussion மூலம் முந்திய நாளிலேயே தயாரிக்கப்படும். பயங்கர secrecy maintain பண்ணப்படும்!

பசங்களாகச் சேர்ந்தால் ஒரே வீர விளையாட்டுக்கள்தான். அப்டின்னா பெருசா பசங்க ஏதோ பண்ணுவாங்கன்னு நினைச்சுக்காதீங்க. 'வாதமடக்கி' மரம் தெரியுமா, அதன் குச்சிகளை உடைத்து அரை ட்ரவுசரின் சைடில் சொருகிக்கொண்டு, ஓடைக்காடெல்லாம் சுற்றுவோம்; ஓணான் அடிப்போம். இல்லை..இல்லை...அடிக்க அங்கும் இங்கும் ஓடுவோம். ஏதும் அடித்ததாக ஞாபகம் இல்லை. ஆஹா, அண்ணன் தம்பிகளோடு அந்த திருட்டு 'தம்' அடிக்கப் பழகிய நேரங்கள், திருட்டு பீடி (த.பி. சொக்கலால்) சப்ளை செய்த ஜான்சன், இடம் கொடுத்த புளியந்தோப்புகள், கிணறுகள், மாட்டிக்கொண்டு முழித்த தருணங்கள், செய்து கொடுத்த சத்தியங்கள் -- அவைகளெல்லாம் ஒரு தனிக்கதை. அதப்பத்தி படிக்கணும்னா, அங்கே போங்க !

இந்த நல்ல விஷயங்களுக்கு நடுவே ஒரு பயங்கர கசப்பான காரியம் அப்பப்போ நடந்தேறும் என் அப்பா மூலமாய். நாங்கள் இன்று மதியம் 'வேட்டை'க்குப் போய்ட்டு, அப்டியே ஆசாரி குளத்துக் கிணற்றில் அல்லது மாமரத்துக் கிணற்றில் குளித்துவிட்டு வரலாம் என்றெல்லாம் திட்டம் போட்டிருப்போம். ஆனால் அன்று பார்த்து என் அப்பா 'டேய், அந்தப் புஸ்தகத்தை எடுத்துட்டு இங்க வந்து உட்காரு'ன்னு சொன்னாருன்னு வச்சிக்கிங்க; அதோடு எங்க பிளான் அவுட். என்ன புஸ்தகம் தெரியுமா? Wren & Martin - ஆங்கில இலக்கணப் புத்தகம்தான். முட்டி பேந்திரும் அன்னைக்கி. உள்ளதே நாம ஒரு 'மொடாக்கு'; இதில லீவுல, பல பிளான் போட்டிருக்கப்போ என்னைத் தனியே கார்னர் பண்ணி உட்காரவச்சு பிராணனை எடுத்தா படிப்பா வரும்; அப்பா மேல கடுப்புதான் வரும்.

இதையெல்லாம் தாண்டி...புனிதமான ச்சீ...ச்சீ...ட்ராக் மாறிடப்போகுது... இதையெல்லாம் தாண்டி சித்தப்பா, பெரியப்பா வீட்டுப் பசங்களுக்குக் கிடைக்காத ஒரு மகத்தான அனுபவம் அந்த மாட்டு வண்டி ஓட்றது. அது எனக்கு மட்டுமே கிடச்ச அனுபவம். ஏன்னா, எங்க பாட்டையா விவசாயத்தோடு, விளைச்சல்களை டைரக்ட்டாக சந்தைக்குக் கொண்டுபோய் விற்கவும் செய்தாரென்பதால் வீட்டில் இரட்டை மாட்டு வண்டி, ஓட்டிச் செல்ல ஆள் என்று இருந்தது. வண்டி ஓட்டும் ஆள் ( car[t] driver ?!) நம்ம தோஸ்த்து. என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவன்; பெயர் தங்கச்சாமி. நானும் அவனும் வழக்கமாக நான் ஊரிலிருந்து வந்ததும் செய்து கொள்ளும் பண்டமாற்று - மதுரையிலிருந்து நான் smuggle செய்து கொண்டுவரும் கோலிக்குண்டுகள்; பதிலாகப் பெருவது கருங்கல்லில் நெல்லிக்காய் அளவில் கையாலேயே தட்டித் தட்டிச் செய்த (கோலிக்)குண்டுகள். இன்னும் எனக்கு ஆச்சரியம் எப்படி அவ்வளவு உருண்டையாக அதைச் செய்வான் என்று. அவன் மட்டுமல்ல, ஊரில் பசங்க அதைவைத்துதான் விளையாடுவார்கள். தோத்தால், முட்டி பேந்திடும்.

வியாழக்கிழமை எங்கள் ஊரில் சந்தை. செவ்வாய்க்கிழமை பக்கத்து புதுப்பட்டி ஊரில் சந்தை. செவ்வாய்க்கிழமை ஐயாவுக்கு வேற எந்த புரோகிராமும் இருக்காது. காலையிலேயே நானும் தங்கச்சாமியும் புறப்பட்டு விடுவோம். போகும்போது தங்கச்சாமி எனக்கு வண்டி ஓட்ட பெர்மிஷன் தர மாட்டான் - லோடு இருந்தா உன்னால ஓட்ட முடியாதுன்னு சொல்லிருவான். சரி, ஒழின்னு விட்டுட்டு, சந்தையில் வியாபாரம், மதியம் கொண்டு சென்றிருக்கும் தூக்குப்போணியில் உள்ள பழைய + மோர் சோறு, அதற்கு அங்கே சந்தையில் கிடைக்கும் வடை என்று எல்லாம் உள்ளே தள்ளிவிட்டு மாலையில் கிடைக்கப்போகும் சான்ஸ்க்காக கொக்குமாதிரி தவம் பண்ணிக்கிட்டு இருப்பேன். திரும்பும்போதும் தங்கச்சாமி வண்டியை உடனே தர மாட்டான். ஊர் எல்லை தாண்டணும்'பான். ஏன்னா, ஊருக்குள்ள ட்ராஃபிக் இருக்குமாம்!!
ஊர் எல்லை தாண்டியதும் ஐய்யாவிடம் மூக்கணாங் கயிறும், தார்க்குச்சியும் வந்திரும். ஹாய்...ஹாய்னு வாலை முறுக்கி, மேலாப்ல குச்சியால ரெண்டு தட்டு தட்டி விட்டா - அதுக்கு வீட்டுக்குப் போய் கழினி குடிக்கப்போற உற்சாகத்தில பறக்கும் பாருங்க.... அன்னைக்கி கிடைச்ச சந்தோஷமும், ஆளுமை உணர்வும் அதுக்குப்பிறகு பைக், கார்னு ஓட்றப்போகூட கிடைச்சது இல்ல.

திடீர்னு ஒரு நாள் நானும் தங்கச்சாமியும் இருந்தப்போ, அப்பம்மா ஒரு வேலை குடுத்தார்கள். வெளங்காட்டில் விறகுக்கு வெட்டிப் போட்டிருக்கிறதை வண்டியில் எடுத்துவரச் சொன்னார்கள். எனக்கு வண்டி ஓட்ட ஒரு போனஸ். சந்தோஷமா கிளம்பினோம். நான் பயங்கர புத்திசாலியாக்கும்; திரும்பும்போது தங்கச்சாமி வண்டி தர மாட்டான்னு தெரியும்ங்கிறதால போகும்போது என் உரிமையை போராடிப் பெற்று ஓட்டிச் சென்றேன். விளைக்குப் போய், விறகெல்லாம் ஏற்றியாச்சு. வண்டியில் உயரமாய் ஏற்றி, உச்சாணியில் நான் உட்கார்ந்து கொள்ள return trip ஆரம்பிச்சது. எனக்கு இதுவும் ரொம்ப பிடிச்சுது; ஏன்னா, நான் அவ்வளவு உயரத்தில் உட்கார்ந்து பயணித்தது ரொம்ப த்ரில்லிங்.

மணல் தடத்துவழியே வந்து, குறுக்காகச் செல்லும் நெல்லை - தென்காசி, குற்றாலம் தார் ரோட்டிற்குச் செங்குத்தாக ஏறி அதற்கு அடுத்த பக்கம் மறுபடியும் செங்குத்தாக இறங்கி, இந்தப் பக்கத்து மணல் தடத்துக்கு வரவேண்டும். நம்ம car[t] driver தங்கச்சாமி ஒரு தப்புக்கணக்கு போட்டுட்டான். உலகத்தையே காலடியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு வண்டியின் மேல் ராசா மாதிரி நான் உட்கார்ந்திருக்க, தங்கச்சாமி செங்குத்தாக ஏறி ரோட்டுக்கு வந்தவன், அங்கிருந்து செங்குத்தாக இறங்கினால் மாடு கால் எதுவும் இடறி ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகக்கூடாதேங்கிற நினப்புல ரோட்டுக்கு அந்தப்புறம் செங்குத்தா இறங்காம, ரோட்டு சைடுலேயே போய் சரிவா இறங்க ஆரம்பிச்சான். இந்த strategy எதையுமே கண்டுக்காம நான் டாப்ல இருந்தேன். வண்டி இப்போ ஒரு வீல் - அதாங்க, சக்கரம் - ரோட்டிலயும், அடுத்தது புழுதி மண்ணிலயுமா இறங்க, அதேபோல மாட்ல ஒண்ணு ரோட்ல, இன்னொண்ணு மண்ணுல. மண்ணுல இருந்த சக்கரம் நல்லா மண்ணுல - சாஃப்டான மண்ணுல - பதிய அடுத்த சக்கரம் அப்டியே தூக்க....

என்ன ஆச்சுன்னே தெரியலை. முந்தின நொடி வண்டிமேல ராசா மாதிரி; அடுத்த நொடி ஆகாசத்தில் மிதந்தது மாதிரி இருந்தது. வண்டி மாட்டோடு சைடுல விழ, நானும் அதே சைடுல விழ, தங்கச்சாமி மட்டும் ஆப்போசிட் சைடுல பத்திரமா விழுந்துட்டான் போல. விழுந்தவன் நான் வண்டிக்கு அந்தப் பக்கம் விழுந்துகிடப்பதைப் பார்த்திருக்கிறான். அவன் பார்க்கும் போதே சைடுல விழுந்த வண்டி பாரம் தாங்காம, மறுபடி ஒருமுறை உருண்டுவிட்டது. தங்கச்சாமி எழுந்து பார்த்தா, நான் அவனுக்குத் தெரியவில்லை. நான் வண்டிக்கு அடியில் மாட்டிக்கொண்டேன் என்று நினைத்து அவன் ஓ-ன்னு கத்தி அழுதான்; அழுதுகிட்டு அந்தப்பக்கமே இருந்தான். நான் எப்படி தப்பித்தேனோ தெரியாது. வண்டி மறுபடியும் குப்புற விழப்போகும் தருணத்தில் என்னை அறியாமல் மறுபடியும் நானும் ஒரு முறை உருண்டிருக்கிறேன். வண்டி தலைகீழாக உருண்டு விழுந்தபின் அந்தப் பக்கமிருந்து பார்த்த தங்கச்சாமிக்கு என்னை பார்க்க முடியவில்லை. கத்தி கூப்பாடு போட்டுவிட்டான். initial shock போனதும் நானே எழுந்து தங்கச்சாமியின் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்க்க.... என்னைப் பார்த்ததும் தங்கச்சாமி இப்போது வேறுவிதமான சத்தத்தோடு அழுதான். அவன் சொன்ன பிறகே நான் எவ்வளவு அதிசயமாக, என்னையறியாமலே மீண்டும் ஒரு முறை உருண்டதாலேயே அன்று பிழைத்தேன் என்பது தெரிந்தது.

* * *

அட, கடவுள் நம்பிக்கையில்லா தருமியே, அன்று உன்னை உருளவைத்துக் காப்பாற்றியது யார்/எது தெரியுமா? அன்று அந்த 'தெய்வம்' உன்னைக் காப்பாற்றாவிட்டால், இன்று உன்னால் இதுபோல் உன்மத்தமாகக் கடவுளை மறுத்து ஒரு கட்டுரை எழுதமுடியுமா? உன்மத்தனே, இனியாவது நீ வந்த வழியைத் திரும்ப்பிப்பார்; திருந்து!

* இது எப்படியிருக்கு?? *

அன்று என்னை உருட்டிப்போட்டது எது? survival instinct / reflex ....?

* * *

பின்னாளில், நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தங்கச்சாமியைப் பார்க்க முயற்சிப்பதுண்டு. அநேகமாக, ஒவ்வொரு முறையும் பார்த்துவிடுவேன். ஏனெனில், நாளில் பாதி நேரம் அந்தத் தெக்கு டீ கடைக்கு எதிர்த்த திண்ணையில் முட்டைக்கட்டிக் கொண்டு, கள்ளோ, சாராயமோ தந்த போதையில் உட்கார்ந்திருப்பான். என்னைப் பார்த்ததும் என்னிடம் பேசுவதைவிட அங்கே பக்கத்திலுள்ளவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல ஆரம்பித்துவிடுவான். அவர்களுக்கு நடுவில் அவன் என்னை 'வாடா, போடா' என்று பேசுவதிலும், 'இது என் தம்பி; மதுரையில இருந்து வந்திருக்கான்' என்று குரலெடுத்து கத்துவதிலும் அவனுக்கு ஏகப் பெருமை.

முதலில், புறப்பட்டு வரும்போது கையில் ஐந்தோ, பத்தோ தருவதுண்டு. பிறகு அது எதற்குச் செலவாகும் என்று தெரிந்ததால், அவன் பிள்ளைகளுக்கு 'இது ஒரு சித்தப்பா கொடுத்தது என்று சொல்லிக்கொடு'ன்னு எங்க ஊரு தேன்குழல் இனிப்பும், பெரிய முருக்கும் (முறுக்கும் ? - துளசி, என்ன ஆச்சு. இந்த spellling பற்றிய நம் சந்தேகம்? ) வாங்கிக்கொடுத்துட்டு வருவேன் அந்த முகம் தெரியாத பிள்ளைகளுக்கு.

அது அந்தக் காலம் .....................

9 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

நல்லவேளை தப்பிச்சீங்க தருமி.

எல்லாம் கடவுள் கிருபை. நம்ம விதி முடியாம நாம போகமுடியாது.

முறுக்குன்னு தான் இன்னமும் நினைக்கிறேன். இதுவரை யாராவது மறுப்பு சொன்னாங்களா? இல்லையே!

என்றும் அன்புடன்,
துளசி.

Muthu said...

ஏங்க தருமி,
"முறுக்கு" ல என்னங்க சந்தேகம். "முருகு" தான் கேள்விபட்டிருக்கேன் "முருக்கு" கேள்விபட்டதில்லை.

அப்புறம் பாரதி இத (யும் சீடையையும்) ஒருமுறை "வீரப்பலகாரம்" ன்னு சொன்னதா எதோ ஒர் பாரதி பற்றிய/எழுதிய புத்தகத்தில் படிச்சிருக்கேன் (எங்கன்னு சரியா நினைவு இல்லை). "வீரப்பலகாரம்" ன்னு சொன்னது சரிதான். சின்ன வயசுல எங்க பக்கத்து வீட்டு பாட்டி செய்யும் சீடையை சாப்பிட்டு ஒருமுறை என் பல்லே காலி. :-).

நந்தன் | Nandhan said...

எனக்கு R.K Narayan எழுத்து ரொம்ப பிடிக்கும். almost எல்லாம் வாசிச்சிருக்கேன். உங்க பதிவு எனக்கு அவரோட புத்தகங்களை ஞாபகமூட்டுது. அனுபவங்களை இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறேன்.

தருமி said...

துளசி: "எல்லாம் கடவுள் கிருபை." இதுதான வேண்டாங்கிறது!


சோழ நாடன்:"முறுக்கு" ல என்னங்க சந்தேகம்" தனியொரு நபராக வந்து எனக்குள்ள்ல ஐயத்தைத் தீர்த்த சோழ் நாடனாரே, உமக்கு ஒரு பொற்கிழி அனுப்பி வைக்கப்படும் - நமது அமைச்சர் மூலமாக; நடுவழியில் அவர் அதை ஸ்வாகா செய்துவிட்டால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.


நந்தன்: "எனக்கு R.K Narayan எழுத்து ரொம்ப பிடிக்கும். almost எல்லாம் வாசிச்சிருக்கேன். உங்க பதிவு எனக்கு அவரோட புத்தகங்களை ஞாபகமூட்டுது."
- நந்தன், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா படலை?


அவ்வை: :"Dharumi-kku oru "O" podu! "
அவ்வை., 'ஓ' போடச்சொல்றியா, 'zero' (o)போடச்சொல்றியா?

வசந்தன்(Vasanthan) said...

பதிவு 'அந்த மாதிரி' இருக்கு.
முறுக்கு சரிதான். எங்கள் ஊரில் முருக்கு என்று மரத்தைச் சொல்வார்கள். அதாவது முருங்கை என்பது முருக்கு என்றும் அழைக்கப்படும். இரண்டு முள்முருக்கு என்றும் ஒருவகையுண்டு.

Thekkikattan|தெகா said...

மாட்டு வண்டியில ஆரம்பிட்த்த ஜர்னி பிறகு விமான பயணமாக பரிணமித்து, திரும்ப ஜாவாவுக்கு வந்து...

அதிலும் இந்த மாட்டு வண்டி குடம் சாஞ்சு நீங்க பிழைச்சது அந்த முருகனுருள் என்றால் நம்ப மாட்டீங்க... :-)) அவரு வந்து லபக்கடீர்னு ஒரு உருட்டு உருட்டலைன்னா நீங்க எப்படி தப்பிச்சு வந்து 30 வருஷ கதையை எங்ககிட்ட சொல்லுவீங்க ;-)

நான் இன்னமும் ராத்தி நேரங்கள்ள தனியா நடந்து வரும்போது, ஏதாவது மாட்டு வண்டி அந்த வழியா போன ஏறி உட்கார்ந்துகிட்டு சவாரி போறதுண்டு... ஹும்ம்...

Post a Comment