Thursday, June 07, 2007

222. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 2

இன்னொரு படக்கதை.

மதுரைக்கு வடக்கிருந்து வரும் புகைவண்டிகள் ஊருக்குள் நுழையுமிடத்தில், புகைவண்டிப் பாதைக்கு இணையாக ஒரு பாலம் கட்டினார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.மேம்பாலம் இல்லாத இந்த இடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல இது ஒரு தேவையான பாலம்தான். முதல்படத்தில் இந்த பாலத்தையும், பாலத்திற்கு அடுத்துள்ள ரயில்பாதையும் தெரியுதா? ஆனா கட்டுவதற்கு முன்பே இந்தப் பாலம் அடுத்த முனையில் ஊருக்கு உள்ளே வரைசெல்ல ஏதும் தடையேதும் உள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும். பாவம்! என்ன அவசரமோ .. வேக வேகமா கட்டினாங்க போலும்.
இரண்டாவது படத்தில பார்க்கிறது மாதிரி பாலம் முடிஞ்சி, ரோடு நல்லா அகலாமாத்தான் இருக்கும். ஆனா இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் குறுக ஆரம்பிக்கும். வலது பக்கம் மஞ்சள் பெயிண்ட அடிச்ச இடம் தெரியுதில்லையா .. அங்கதான் குறுக ஆரம்பிக்கும். இப்போது
வலது பக்கம் கோவில் சுற்றுச் சுவர்களில் அடிக்கும் காவி-வெள்ளை வண்ணக் கோடுகள் தெரியுதா? அந்த இடத்தில் முதலில் ரோட்டுக்கு உள்ளடங்கி ஒரு கோவில் இருந்தது. உள்ளே இருந்த கோவிலின் வெளிச்சுவர் இப்போது மட்டும் எப்படி வெளியே வந்து, ரோட்டில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்தது பற்றி ஒரு கதை தெரியும்.

பாலம் கட்டி முடித்த பின்தான் அந்த சாலையின் கடைசிமுனைக்கு கொஞ்சம் முன்புள்ள அந்தக் கோவிலுக்குரிய இடம் சாலைக்கு மிக அருகில் இருப்பதைக் கவனித்துள்ளார்கள். அப்போது மதுரை கமிஷனராக இருந்து மதுரைக்குக் குறுக்கே அங்குமிங்குமாக நீரின்றி அமைந்திருக்கும் கிருதிமால் 'நதி'யின் மீதிருந்த ஆக்கிரமிப்புகளை தீவிரமாக அகற்றி மக்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்த அதிகாரி, நான் எங்கள் கல்லூரியில் நடத்திய பட்டரை ஒன்றின் open house session-ல் கூறியது: சாலைக்கருகே இருந்தமையால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக - bottle neck-ஆக - இருக்கும் அந்தக் கோவிலின் முற்றத்தை கையகப்படுத்தும் முயற்சியாக, அந்தக் கோவில் நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு செண்டுக்கும் குறைவான அந்த முற்றத்தை விட்டுத் தந்தால் அந்த்க் கோவிலுக்காக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தைத் தருவதாகச் சொல்லியுள்ளார். கோவில் அங்கேயே இருக்கும்; முற்றம் இருக்கும் இடம் மட்டும் கொஞ்சம் குறையும்.
பொதுநலத்திற்காக இந்த உதவியைக் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். முடியாது என்று மறுத்ததோடு மட்டுமின்றி, அந்தக் கோவிலுக்குரிய இடத்தையும் தாண்டி, சாலையின் பெரும்பகுதியை வளைத்துக் போட்டு பெரிய காம்பவுண்டு சுவரையும் எழுப்பி விட்டார்களாம். 'புல்டோசர் கொண்டு ஒரு மணிநேரத்தில் அந்தச் சுவரை காலி செய்ய முடியாதா?' என்று கேட்ட மாணவர்களிடம் அவர் வருத்தத்தோடு, 'இதில் மதம் வந்து விட்டது; அப்படியெல்லாம் செய்தால் பிரச்சனை பூதாகரமாகி விடும்' என்றார்.

இன்றும் traffic bottle neck என்பத்ற்கு ஒரு நல்ல உதாரணமாக அந்த இடைஞ்சல் இன்னும் தொடர்கிறது; தொடரும். இதனால் பாலம் கட்டியும் அந்தப் பாலம் அதிகம் பயன்படாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்காக மக்கள் இந்தப் பாலத்தை முழுமையாகப் பயன் படுத்துவதில்லை. ஏதாவது ஒரு காரணத்துக்காக இந்தப் பாலம் வழியாக செல்ல வேண்டியதேற்பட்டால் - இரண்டு மூன்று முறை எனக்கு அந்த அனுபவம் உண்டு - தொலைந்தீர்கள் நீங்கள்!

வாழ்க்கையில் விரக்தி நிலைக்குத் தள்ளப் படுவீர்கள். (கடைசி இருபடங்களும் பாலத்தை நோக்கிச் செல்லும் எதிர்முகமான சாலையைக் காட்டும் படங்கள்)

- இதில் பாலம் கட்டுவதற்கு முன்பே சரியான ஆய்வுகளை மேற்கொள்ளாத அரசு அதிகாரிகளை நொந்து கொள்வதா?

- மதத்தின் பெயரால் ஊருக்கே இடைஞ்சல் தரும்படி, தங்களுக்குரிய இடத்தையும் தாண்டி மதம் தரும் "ஊக்கத்தால்" சுவர் எழுப்பிய கோவில்காரர்களை நொந்து கொள்வதா?

- இவ்வளவுக்குப் பிறகும் கோவில் நிர்வாகத்தினரை மீறி, அந்தச் சுவர்களை எடுத்து 'நாட்டுக்கு நல்லது' செய்ய முடியாத அரசின் கையாலாகாத நிலையை நொந்து கொள்வதா?


இதில் எனக்கு இன்னுமொரு கேள்வி. என் 217வது, 219-வது பதிவுகளில் எல்லா மதத்தினருமே தங்கள் மதத்தின் பெயரால் பல சமூக இடைஞ்சல்களுக்குக் காரணமாயுள்ளார்கள்; இதில் எம்மதமும் விதி விலக்கல்ல என்று கூறியுள்ளேன். அப்படியானால் நம்பிக்கையாளர்களின் ஒட்டு மொத்தமான இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன? அவர்களின் மத நம்பிக்கையா? மதத்தின் மேலுள்ள அதீத பற்றா? கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய வேண்டும் என்ற மதக் கோட்பாடா? நிச்சயமாக இதில் ஏதும் இல்லை. மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு செய்யும் நியாயமற்ற காரியங்கள். தங்கள் கடவுளர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் செய்வதல்ல இவை. நாம் இப்படியெல்லாம் மதத்தின் பெயரால் செய்தால் நம்மைக் கேள்வி கேட்க ஆளில்லை, கேட்க முடியாது என்ற ஆணவம்தான் காரணம். தங்கள் மேல் இப்படி ஒரு ஒளிவீச்சு விழுவதில் எல்லா மதக்காரர்களுக்கும் தனி சந்தோஷம்தான் - vicarious pleasure?

இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களினால் ஏற்படும் இடைஞ்சல்களை மற்றவர்கள் கொஞ்சம் adjust செய்து கொள்ள வேண்டுமென்பது ஒரு சாராரின் வாதம். இப்படி தனி மனிதர்கள் அட்ஜஸ்ட் செய்வது தனிமனித நாகரீகம்தான். ஆனால் 'நீ எனக்காக அட்ஜஸ்ட் செய்தே ஆகவேண்டும்' என்று நிர்ப்பந்திப்பதை அதுவும் ஒரு குழுவாக, அரசியல், பணம், மதம், ஜாதி இப்படி ஏதோ ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, நீங்கள் எல்லோரும் adjust செய்துகொண்டே ஆக வேண்டும் என்றால் அது நாகரீகம்தானா? We dont have any right to be a nuisance to others. None should be forced to 'adjust' for others. அதுதான் ஏற்கெனவே சொன்னதுபோல் அழகாக தமிழில் சொல்லிச் சென்றிருக்கிறார்களே :அடுத்தவனுக்கு உபகாரமா இல்லாவிட்டாலும் உபத்திரமாக இராதே!

இப்படி தெருவில் கேள்வி கேட்பாரற்று நடக்கும், முன்பு ஒரு பதிவில் நான் எழுதிய ஒரு வழக்கமான நிகழ்வுக்கும், மேற்கூறியவைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ஆனால் நமக்கு இந்த civic sense என்பதுதான் சுட்டுப் போட்டாலும் வராதே! அது எப்படி? ஒருவேளை, இந்தப் பண்பு நம் தேசிய குணமோ?

26 comments:

  1. 'நீங்கள்' கோவிலைப் பற்றி சொல்லி உள்ளதால் பதிவு திசை மாறக் கூடும். அதனை அனுமதியாதீர்கள்.

    இதெல்லாம் அங்க அங்க இருக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் ஓட்டு வங்கியை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்வது.

    சென்னை க்ரோம்பேட்டில் விமான நிலயம் செல்லும் சாலையை விரிவு படுத்திய போது நீங்கள் நொந்து கொள்ளும் மூன்று விஷயங்களும் சரியாகவே நடந்தது.

    மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    ReplyDelete
  2. கொத்ஸ்,
    முதல் பாய்ண்ட் புரிந்தது; சொல்லியபடி செய்கிறேன். நன்றி

    //அரசியல் தலைவர்கள் தங்கள் ஓட்டு வங்கியை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்வது..//

    இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை, கொத்ஸ். எல்லா இடத்திலும் அரசியல்வாதிகள் வருவதில்லை. சாதாரண மக்களும் கூட 'மதக் கேடயம்' தாங்கி வருகிறார்கள்.

    ReplyDelete
  3. யார் செய்தாலும் தப்புதான்.மதுரையில்
    ஓரொருகோயிலிலும்
    ஓரோரு அரசியல்வாதியின் பெயர் பயன்படுத்தப்படுவதை
    2002இன் ஒரு பயணத்தின் போது பார்த்தேன்.:-(

    ReplyDelete
  4. மக்கள் பிரச்சனையில் மதமாவது.. வெங்காயமாவது..இடித்து தள்ளவேண்டியதுதான்.

    இதில் அரசியல்வாதிகளின் பங்குடன்,அந்தந்த பகுதியின் சுயநலமிக்க தனிநபர்களின் பங்களிப்பும் உள்ளதாக நான் நினைக்கிறேன்.மேலும் இதை செயல்படுத்த முடியாமைக்கு காரணம் சம்பந்தபட்ட அதிகாரிகளின் திறமையின்மை கூட.

    சென்னை திருவான்மியீரில் ரோட்டின் மத்தியில் ஒரு கோவில்... எனக்கு வருகின்ற ஆத்திரத்தில்..நற..நற.. பாழாய் போன இந்திய மத உணர்வு..

    ஏற்கனவே முளைத்துவிட்ட சாமிகளை விடுங்கள்..புதிதாக சாலையோரத்தில் முளைவிடும் அம்மன்களையும்,கல் பாம்பு போன்றவறையும் அரசாங்கம் கட்டுப்படுத்த தவறினால் நாம் குடியிருக்கும் ஒவ்வொரு தெருவிலும் மேம்பாலம் கட்டவேண்டியிருக்கும்.

    ஒருவேளை இந்த அரசியல்வாதிகளின் திட்டமே மேம்பாலம் கட்டுவதுதானா? அட கருமாந்திரமே!

    எதற்கும் ஒரு டிஸ்கியை போட்டு விடலாம்...

    இந்த நற..நற மற்றும் கருமாந்திரம் எல்லாம் அம்மனுக்கு மட்டும் அல்ல கண்ணாடி பேழையில் குழந்தையுடன் நிற்கும் சிலை மற்றும் பச்சை கொடிகளுடன் உள்ள தெருமுனை வெள்ளை கட்டிடங்களுக்கும் சேர்த்துதான்.

    ReplyDelete
  5. நீங்க சொன்ன '3' குழுவையும் நொந்துக்கிட்டா மட்டும் போதாது. நாலாவதா
    நம்ம மக்களையும் நொந்துக்கணும். இடைஞ்சல் இருக்குன்னு தெரிஞ்சா அதை
    இவுங்களே களைய வேணாமா? நடுத்தெருவுலே கோயில் கட்டுன்னு சாமி வந்து சொல்லுச்சாமா?
    அப்படிச் சொல்லி இருந்தால் அது சாமியே இல்லை. சாமியா(வும்) இருக்கவும் முடியாது.

    ReplyDelete
  6. தருமி (Samji),
    நீங்கள் இது போன்ற மதுரை அவலங்களை வெளிக் கொணர்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    கருத்துக்களைச் சொல்பவர்களைவிட களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்கள்மீது எனக்கு தனி மரியாதை உண்டு.உங்களின் களப்பணிகள் தொடரட்டும். உங்களிடம் இருந்து இன்னும் அதிக அளவில் எதிர் பார்க்கிறேன். உங்களால் முடியும். நம் கண் முன்னாலேயே இப்படி ஒரு கூமுட்டைக் கூட்டம் வாழ்ந்து வருவதைக் காணச் சகிக்க முடியவில்லை. :-(((

    ****

    மதம் / சாதியின் பெயரால் மனிதம் தொலைந்து பல காலம் ஆகிவிட்டது.

    நான் அடிக்கடி எல்லா இடங்களிலும் சொல்வது.

    உலகில்...உலகை விடுங்கள்..இந்தியாவில் 99.9 % ஏதோ ஒரு மத/ கடவுள் நம்பிக்கையாளர்களாகவே உள்ளார்கள். இவர்கள் அனைவரும் நல்லவர்களாக் இருந்துவிட்டாலே இந்த நாடு திருந்திவிடாதா? ஏன் இவர்கள் அனைவருக்கும் நீங்கள் கரடியாய்க் கத்தும் Civic Sense இருப்பதில்லை.

    நெத்தியில் பட்டை போட்டவன்,தலையில் குல்லா போட்டவன், கழுத்தில் கிராஸ் போட்டவன் எல்லாரும் ரோட்டு சந்தில் ஒண்ணுக்குப் போகவோ அல்லது ரோட்டில் குப்பையை தூக்கி எறியவோ அல்லது சாலைவிதியை மீறவோ வெட்கப்படுவது இல்லை.

    இவை எல்லாம் தவறு என்ற சொரணையே கிடையாது பின்னே எப்படி திருந்துவதாம் ?

    மதம் நம்பிக்கைக்கும் Civic Sense க்கும் எந்த தொடர்பும் கிடையாது. மதப் பிரியர்களுக்கு கடவுள் அவர்களை இரட்சிப்பவன் உதவுவன் அவ்வளவே. இதே கடவுள் நளையே "பக்தர்களே நான் இனிமேல் உங்களை கவனிக்க முடியாது. உங்கள் பாவத்துக்கு நீங்களே பொறுப்பு. யாருக்கும் சொர்க்கம்/நரகம் எல்லாம் கிடையாது. வாழும் வாழ்க்கையை நீங்களே பர்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் எந்த சக்தியும் இல்லை " என்று சொல்லட்டும்....இவர்கள் அவனை கை கழுவிவிடுவார்கள்... :-)


    Civic Sense is not an Indian thing ...no matter what religion is

    ReplyDelete
  7. பெரியவரே......

    Town Planning அப்படினு ஒரு சமாசாரம் சொல்றாங்களே......அப்படின்னா என்னன்னு நம்மூர் கார்ப்பரேஷன்ல யாருக்காவது தெரியுமானு கொஞ்சம் செக் பண்ணனும்.

    //சென்னை க்ரோம்பேட்டில் விமான நிலயம் செல்லும் சாலையை விரிவு படுத்திய போது நீங்கள் நொந்து கொள்ளும் மூன்று விஷயங்களும் சரியாகவே நடந்தது.//

    சென்னை மட்டுமே தமிழ்நாடு கிடையாது. இதை ஆள்வோரும் புரிந்து கொள்ள வேண்டும்.....நாமும் புரிந்து கொள்வோம்.

    ReplyDelete
  8. அரசியல்வாதிகளைத் தவிர வேறு யாரையும் நினைத்து நொந்து கொள்ள வேண்டாம் பேராசிரியரே.. திராவிட அரசியல்வாதிகளைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே? ஓட்டுக்களுக்காக எதையும் செய்வார்கள். அதனால்தான் இதையும் அனுமதித்திருக்கிறார்கள். தீவிர பக்தர்கள் எதிர்ப்பில் மக்கள் மதி மயங்கி எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிடடால் அவர்கள் எப்படி அடுத்த தலைமுறை வரைக்கும் சம்பாதித்து வைப்பது. ஸோ.. இது முழுவதுமே மக்களின் கைகளில்தான் உள்ளது. அதை இடித்தே தீர வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் குதித்தால் ஒழிய அரசும், அதிகார வர்க்கமும் அதன் மேல் கை வைக்காது..
    பின்குறிப்பு : இன்னமும் உங்க பேர் அங்கன பிரபலமாகலை போலிருக்கு.. அதான் இம்புட்டுத் தைரியமா போட்டுத் தாக்குறீக.. தாக்குங்க.. தாக்குங்க..

    ReplyDelete
  9. த்தருமி,

    இதெல்லாம் இல்லைன்னா எப்படிங்க இது நம்மூருதான்னு உணர முடியும் :-). சரி, ஒரு மேற்கத்திய அணுகுமுறையோட எல்லாமே ரொம்பச் சரியா நேரான சாலை, சரியா சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு யாரு என்னான்னு பார்க்காம அமுல் படுத்தும் முறையின்னு வந்துருச்சுன்னு வைச்சுக்கோங்க, நாமெல்லாம் நம்மோட பழைய இந்தியாவை மிஸ் பண்ணுவோமா பண்ண மாட்டோமா? நீங்களே சொல்லுங்கய்யா :-P

    "யாரைத்தான் நொந்துகொள்வதோ சீரிஸ்" என்கிட்டயும் இது மாதிரி நிறைய இருக்கு, அதுவும் இந்த முறை நான் அங்கு வந்திருந்தப்ப நிறைய கடவுளர்களை சந்திக்க நேர்ந்தது. எழுதணும் எழுதி எல்லோர்கிட்டயும் எப்படி நமது மக்களின் attitude towards certain things areங்கிறதப் பத்தி.

    படங்கள் மீண்டும் கண்ணுக்கு குளிர்சியூட்டும் விதமாக இருந்தது. இந்தியாவை மிஸ் பண்ணுவது போல் தோணும்பொழுதெல்லாம் உங்க பதிவில் உள்ள படங்களைப் பார்த்து தனித்துகொள்கிறேன். :-)))

    ReplyDelete
  10. வல்லி சிம்ஹன்,
    எனக்கென்னவோ இந்தக் கோவில் விவகாரங்களில் எல்லாவற்றிலும் அரசியல்வாதிகளைத் தொடர்பு படுத்துவது சரியா என்று தெரியவில்லை

    ReplyDelete
  11. பாபு மனோகர்,
    உங்களை மாதிரி கோபம் கொள்ளும் இளைஞர்களைப் (பாபு, நீங்களொரு இளைஞர்தானே?!) பார்க்கும்போது கொஞ்சம் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை துளிர்விடுகிறது.

    ReplyDelete
  12. கல்வெட்டு,
    //உங்களின் களப்பணிகள் தொடரட்டும்.//
    இதையெல்லாமா களப்பணி அப்டின்னு சொல்றீங்க?
    // உங்களால் முடியும்//
    என்ன முடியும்? கண்முன் நடக்கும், இருக்கும் விஷயங்களை உங்கள் எல்லோருடன் பகிர்ந்து கொள்ளத்தான் முடிகிறது. அதில் ஒரு சந்தோஷம் இருப்பதென்னவோ உண்மை. ஆனால் இதற்கு மேல் என்ன முடியுமெனத் தெரியவில்லை.
    முந்திய பதிவில் நண்பர் ஒருவர் தினமலருக்கு இந்த விஷய்ங்களை எடுத்துச் சென்றால் பயனிருக்குமென்று கூறியுள்ளா. அதனைச் செய்ய சிறு முயற்சி ஒன்றும் எடுத்துள்ளேன்; பார்ப்போம்.

    ReplyDelete
  13. கல்வெட்டு.
    //Civic Sense is not an Indian thing...//

    மிகச்சரியா ஒரு வருத்தமான சங்கதியைச் சொல்லியிருக்கீங்க.

    மாறவே மாட்டோமோ ...?

    ReplyDelete
  14. டெல்பின்,
    //let them boycott them....// அதாவது கடவுளர்களை boycott பண்ணணும் அப்டின்னு சொல்றீங்களா? :)

    //we tend to adjust and go.//

    இந்த tendency - கண்டும் காணாம போறது - தப்புன்னு நினைக்கிறேன்.இன்னொன்ணுகூட சொல்லுவாங்க: 'நரி வலம் போனால் என்ன; இடம் போனால் என்ன? நம்ம மேல் விழுந்து கடிக்காம போனால் போதும்.'
    நம்மில் இருக்கும் இந்த குணம் தவறுதானே? இல்லீங்களா?

    ReplyDelete
  15. நாணு,
    எல்லாம் ஏதாவது ஒரு நம்பிக்கையில் மக்கள் நீங்கள் சொல்லும் town planning rules களைக் கண்டு கொள்வதில்லை.
    கோயில் கட்டினால் யார் நம்மளை எதிர்க்க முடியும்? - இப்படி ஒரு குரூப்.
    எத்தனை அடுக்கு மாடி வேண்டுமானாலும் கட்டிக் கொள்வோம். பணத்தைக் கொடுத்து யாரை, எப்போது, வேண்டுமானாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ள முடியும். - இது இன்னொரு குரூப்.
    நமக்குத் தேவை - ஓட்டைகள் இல்லாத சட்டங்களும், அவைகளை எல்லோருக்கும் பொதுவானதாக implement செய்யும் ஒரு government machineryயும்.
    தி.நகரில் உள்ள பெரிய கடைகளின் அடித்தளங்கள் எல்லாம் வாகனங்களை நிறுத்துவதற்காக என்று ப்ளானில் காண்பித்து விட்டு, அதையும் பிறகு கடையாக(matching blouse பகுதியாக) மாற்றிக் கொள்வதை அரசு கண்டுகொள்வதில்லை- இது ஒரு சின்ன உதாரணம்.

    ReplyDelete
  16. டெல்பின்,
    //சரியான 12 மணி வெயிலில் எடுத்தீர்களோ?//
    சே! படத்தில் உள்ள நிழலை வைத்தே படம் எடுத்த நேரத்தைக் கணித்து விட்டீர்களே! ஷெர்லாக் ஹோம்ஸ் .. இல்ல.. இல்ல..சங்கர்லால் உங்க பக்கத்து வீட்டுக்காரரா..? :)

    ReplyDelete
  17. ஊரணி,
    //இந்தியாவை மிஸ் பண்ணுவது போல் தோணும்பொழுதெல்லாம் உங்க பதிவில் உள்ள படங்களைப் பார்த்து தணித்துகொள்கிறேன். :-))) //

    ஆக, இந்தமாதிரி தெருக்களை அடைத்து நிற்கும் கோவில்கள் என்றெல்லாம் இருந்தாதான் அது நம்மூரைப் பார்த்த மாதிரி இருக்கும் அப்டிங்கிறீங்க ... !

    பாருங்க,,நாங்களும் சீக்கிரம் மாறப் போறோம் ...

    ReplyDelete
  18. புரபஸர் சார்..உங்களைத்தான் என் ஆதர்ச இளைஞனாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்கள்! நிச்சயமாக இளைஞர்தான்.. பள்ளியில் படிக்கும் போது இருந்த கோபமும்,வேகமும் கூடவே நகைச்சுவை உணர்ச்சியும் இப்போதும் இருக்கிறது.

    டெல்பின் மேடம்.. lighting-ஐ வைத்தே நேரத்தை கணித்த உங்களின் I.Q என்ன?

    பி.கு.
    ஒரு சந்தேகம்....
    ரஜினி சொன்ன ஐந்தாம் எட்டில் இருந்தால் இளைஞர்தானே?

    ReplyDelete
  19. கண்டிப்பாக இப்படி அவர்கள் செய்தது தவறுதான். மக்களுக்கு இடைஞ்சலாக ஒரு கோயிலைக் கட்ட வேண்டிய தேவையில்லை.

    எனக்கென்ன தோன்றுகிறதென்றால்..இந்த இடத்தை ஏதாவது பெரிய மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டு..எதுவும் கேட்டால் மிரட்டுவதற்குக் கோயிலை வைத்திருக்கிறானோ என்று தோன்றுகிறது. எப்படியிருப்பினும் அப்படிக் கோயிலைக் கட்டியது தவறே. தவறே.

    அரசாங்கம் ஒன்றும் செய்யாது தருமி சார். பதவீன்னு ஒன்னு இருக்குல்ல. அது ரொம்பத் தேவை. என்னைக் கேட்டால் இந்துக்களே ஒன்னு சேந்து போய் அந்தக் கோயிலின் ஆக்கிரமிப்பை இடிக்கலாம்.

    ReplyDelete
  20. பாபு மனோகர்,

    //ரஜினி சொன்ன ஐந்தாம் எட்டில் இருந்தால் இளைஞர்தானே?//

    நிச்சயமா? கோபம், நகைச்சுவை உணர்வு இரண்டும் நல்ல காம்பினேஷன்தான்.

    இப்படிக்கு,
    From 8/8 to 5/8 !!

    ReplyDelete
  21. ஜிரா,
    என்ன சொல்றீங்க நீங்க? நம்ம மக்களைப் பத்தி தெரிஞ்ச பிறகுமா அப்படிப்பட்ட போராட்டங்களை எதிர்பார்க்கிறீங்க? தர்மபுரி பஸ் எரிப்புக்கு அடுத்ததாக வந்த தேர்தலில் அந்த ஏரியாவிலேயே அ.தி.மு.க. வேட்பாளர் வென்றாரே, அப்போதே இந்தமாதிரி wishful thinking எல்லாமே எனக்கு வர்ரது நின்னே போச்சு.

    ReplyDelete
  22. உண்மைத்திராவிடன் .. ஓ..இல்ல .. இல்ல .. உண்மைத் தமிழனல்லவா நீங்க! ரெண்டும் ஒண்ணுதாங்க!

    //திராவிட அரசியல்வாதிகளைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே?//
    இதில் 'திராவிட' என்பதை எடுத்துரணும். அரசியல்வாதிகளில் திராவிட, ஆர்ய -இன்னும் என்னென்ன வகைகள் இருந்தாலும் அதுகள் எல்லாமே ஒரே 'குலம் / சாதி' தான்.

    //இது முழுவதுமே மக்களின் கைகளில்தான் உள்ளது.//
    ஜிராவுக்குச் சொன்ன பதிலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  23. 'அரசியல்வாதிகளில் திராவிட, ஆர்ய -இன்னும் என்னென்ன வகைகள் இருந்தாலும் அதுகள் எல்லாமே ஒரே 'குலம் / சாதி' தான்'

    நன்றாக சொன்னீர்கள் 7.8/8 அவர்களே..!

    இப்படிக்கு,
    5/8

    ReplyDelete
  24. Saar: Still I remember cycling in that road from American college to Maapillai vinayagar whenever we got a chance (to cut the classes) in the afternoon hours(12 yrs back). We would start at 2:10 PM and would have reached the theatre before 2:30. Two cycles, doubles in both and the second person sitting in the front!!! Imagine me with my weight driving my cycle with one of my friends in the front!! Now thinking about that makes me shudder. (Still I haven't installed e-kalappai in the new laptop, so this feedback in english) - Kaattaan

    ReplyDelete