Thursday, November 20, 2008

280. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 2

*

*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்...1

ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல். 3




II. ஒரு செய்திப்படம்


மற்றைய தொடர்புடைய பதிவுகள் ... 1

Anand Patwardhan's "IN THE NAME OF GOD"

முந்திய பதிவில் சொன்னதுபோல் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு இருந்த எனக்கு இந்த நிகழ்வின் மறுபக்கத்தைக் காண்பித்தது ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படம்: IN THE NAME OF GOD தான்.

ஆனந்த் பட்வர்த்தன் பற்றி ஒரு சிறு குறிப்பு: நம் நாட்டிலும், உலக அளவிலும் தன் செய்திப் படங்களுக்காக பல பரிசுகளை வென்றவர். பல படங்கள் நீதிமன்றங்களின் தாழ்வாரங்களில் அலைந்து திரிந்த பிறகே வெளியில் வந்துள்ளன.

அவரது சில முக்கிய செய்திப் படங்கள்:
Zameer ke Bandi ( 'Prisoners of Conscience’) (1978)
Ram ke Nam ('In the Name of God' (1992),
Pitr, Putr aur Dharmayuddha ('Father, Son and Holy War') (1995)
War and Peace (2002) [5


படத்தைப் பற்றிச் சுருக்கமாக:

பாபர் மசூதியும் ராம ஜன்மபூமியாகக் கருதப்பட்ட கோவிலும் ஒரே வளாகத்துக்குள் அடுத்தடுத்து இருந்து வந்திருக்கிறது. 1949 டிசம்பர் 22 இரவில் ராமர் என் கனவில் குழந்தையாக வந்து மசூதிக்குள் நிற்பதைப் பார்த்தேன் என்று பலரும் கூறி வர, அதைத் தொடர்ந்து அடுத்த நாளிரவு மசூதி பூட்டியிருந்த நேரத்தில் கோவிலுக்குள் இருந்த ராமர் சிலைகளை மசூதிக்குள் சிலர் வைத்து விடுகின்றனர். பிரச்சனை வழக்கு மன்றம் வர, பிரதமர் நெஹ்ரூவெ (நேரு) தலையிட்டும், Dt. Magistrate ஆக இருந்த K.K. NAYAR ஏதேதோ காரணங்கள் கூறி அச்சிலைகளை அகற்ற மறுத்துவிடுகிறார். (இந்த நய்யார் பின்பு ஜனசங்க கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் M.P. ஆகவும் பாராளுமன்றத்திற்கு செல்கிறார். வெகுமதி போலும்!) இதற்குப் பின் பல கமிஷன்கள்; போராட்டங்கள்; உயிர்ப் பலிகள் (1986-ல் 2500 கொல்லப்பட்டிருக்கிறார்கள்)இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்ட B.J.P. பாராளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையை இரண்டிலிருந்து 85க்கு உயர்த்திக் கொள்கிறார்கள்.

செய்திப் படம் இரு கூறுகளாக மாற்றி மாற்றிக் காண்பிக்கப் படுகிறது. சோமநாத்திலிருந்து புறப்படும் அத்வானியின் ரத் யாத்திரையும், அதைச்சுற்றி அர்த்தம் புரியாமல்கூட கோஷம் போடும் கூட்டம் ஒரு புறம். மற்றொரு பக்கம் அயோத்தியும் அதைச் சுற்றியுள்ள மக்களையும் சுற்றி வருகிறது.

அத்வானியின் ஆவேசப் பேச்சுக்கள், வழிநெடுக அவருக்கு ஆதரவான மக்கள் - இந்த மக்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் சரியான பதில்களோ விளக்கங்களோ வருவதில்லை. Such Q & A sessions are the comical part of this film! இந்த சமயத்தில் V.P சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் இவர்களால் கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. இப்போது இதற்கு என்ன அவசியம்; அவசரம்? இப்போது வேண்டுவதெல்லாம் அயோத்தியில் ராமர் கோவில் என்பது இந்து மடாதிபதிகளின் கூட்டத்தில் எழுப்பப்படும் கேள்வி. எல்லாமே mass psychology, mass effervescence என்பதாகத்தான் இருக்கின்றன. படித்த மக்களானாலும் சரி, படிக்காதவர்களாயினும் சரி ஒரே மாதிரி முழு நோக்கம் புரியாத ஒரு போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். அதைவிடவும், ஈடுபடுத்தப் பட்டனர் என்பதே சரியாக இருக்கும்.

அடுத்த பக்கத்தில் சில முக்கிய செவ்விகள். முதலாவதாக பூசாரி லால்தாஸ். இவர் அரசாங்கத்தால் ராம ஜன்மபூமி கோவிலுக்கென்றே அங்கீகரிக்கப்பட்ட பூசாரி. படித்த பண்புள்ள பேச்சாக இருக்கிறது இவர் தந்துள்ள செவ்வி. இந்து சமய வழிபாட்டு முறைகளில் எங்கே சாமி சிலைகளை வைத்து பூஜை செய்கிறோமோ அந்த இடம் கோவிலாகிறது. ராமஜன்ம பூமி அயோத்தியா தானேயொழிய இந்த இடம்தான் என்று எதையும் எப்படிக் கூறுவது என்கிறார். இதெல்லாம் அரசியல்; ஓட்டு சேர்ப்பதற்காக ஒரு புறம்; கோவில் பெயரைச் சொல்லி பணம் சேர்க்க இன்னொரு கூட்டம் என்கிறார்.

V.H.P.யினரைக் கடுமையாகச் சாடுகிறார் லால்தாஸ். இப்போதிருக்கும் இந்த ராமஜன்மபூமி கோவிலுக்கு இவர்கள் யாரும் வந்ததோ, இங்குள்ள சாமியைக் கும்பிட்டதோ கிடையாது. கோவில் பெயரைச் சொல்லி பெரும் பணத்தை தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் போடுவது மட்டுமே அவர்கள் தவறாமல் செய்வது. அவர்கள் எல்லோருமே உயர்த்திக் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள். துறவு மனப்பான்மையோ, தியாக உணர்வோ சிறிதும் இல்லாதவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள மற்ற சாதி மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நீங்கள் பேசுவது ஒரு பொதுவுடைமை வாதியின் பேச்சு போல் இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது லால்தாஸ், ராம ராஜ்ஜியத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார்கள். பொதுவுடைமைவாதிகளின் நோக்கமும் அதுவாகவே உள்ளது. அப்படியிருக்கும்போது நான் கம்யூனிசவாதி போல் பேசுவது தவறானதல்ல என்கிறார் லால்தாஸ். (மசூதி இடிக்கப்பட்ட பிறகு இவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக அறியப்படுகிறது.)

இன்னொரு செவ்வி Dy. Commissioner of Income Tax. அமெரிக்காவில் M.B.A. முடித்து அங்கு பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு தாய்நாட்டில் வேலை செய்ய வேண்டுமென்று வந்தவர். V.H.P.-ன் அஷோக் சிங்கால் தன் வருமானவரி தாக்கீதை இவரது அலுவலகத்தில் 1989 அக்டோபர் மாதம் கொடுக்கிறார். பின்புதான் முதல் பக்கத்தில் சில தகவல்களைக் கொடுத்துவிட்டு, அதனோடு இணைக்க வேண்டியவைகளை எதையும் இணைக்காமல் கொடுத்திருப்பது தெரியவருகிறது. நகல்கள் கேட்டால் கொடுக்கப் படவில்லை. அயோத்தியாவில் உள்ள இவரது அலுவலகத்திலிருந்து அஷோக் சிங்காலுக்கு சம்மன் போகிறது. சம்மன் கொடுக்கப் பட்ட 24 மணி நேரத்தில் தில்லியில் பிரதமர் வீட்டின் முன் ஒரு பெரும்கூட்டம் ரகளையில் ஈடுபடுகிறது. அதே நாளில் இவர் சென்னை கிளைக்கு மாற்றப் படுகிறார். அதோடன்றி சில நாட்களில் வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப் படுகிறார். அஷோக் சிங்கால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவேயில்லை.

இந்த நிகழ்வுக்கு முன்பே V.H.P. வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற R.B.I.யிடம் அனுமதி கோருகிறது. ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 200 கிளைகள் V.H.P.க்கு உள்ளன; மேலும் கனடா, இங்கிலாந்து என்று பல இடங்களிலும் கிளைகள் உள்ளன. நன்கொடையும் வசூலிக்கப் படுகிறது. செங்கல் செய்வதற்கென்று Rs.18,600,000 செலவு செய்திருப்பதாக கணக்குக் காட்டப் படுகிறது. தவறு ஏதும் செய்யாதவர்களாக இருந்தால் tax returns-யை ஒழுங்காகக் காண்பித்திருக்கலாமே என்கிறார் இந்த அரசு அதிகாரி.

சாதாரண மக்கள் பலரும் அவர்களின் உணர்வுகளும் தெளிவாகக் காண்பிக்கப் படுகின்றன.

சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் ஒரு முஸ்லீம் பெரியவர்: நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த அயோத்தியில்தான். நான் இங்குதான் பிறந்தேன்; சாவது வரையும் இங்குதான். நானென்ன பாக்கிஸ்தானுக்கா போக முடியும். நான் போகவும் விரும்பவில்லை. நாங்களும் இந்துக்களும் சகோதரர்கள். நான் வாழும் பகுதியில் எந்த வித்தியாசமுமில்லாமல் நாங்கள் ஒன்றாகவே ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கோவில் விவகாரத்தில் எல்லாம் எங்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எங்கள் ஏழ்மையை நீக்க அரசு முயற்சி எடுத்தால் எங்களுக்கு நல்லது.

சாமர் என்னும் சாதியைச் சேர்ந்தவர்கள்: நாங்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள். எங்களுக்கு இந்து முஸ்லீம் எல்லோரும் ஒன்றுதான். இருவருமே எங்கள் கடைகளில் டீ குடிக்கவோ எங்களோடு உணவருந்தவோ வரமாட்டார்கள். நாங்கள் அவர்கள் இருவருக்குமே அன்னியப்பட்டவர்கள்.

இன்னொரு தாழ்த்தப் பட்ட பெண்: தானியங்கள் விளைந்து அறுவடை ஆகும் வரை எங்கள் உழைப்பு அவர்களுக்குத் தேவை. ஆனால் தானியங்கள் அவர்கள் வீடு போய் சேர்ந்ததும்தான் நாங்கள் தீண்டத் தகாதவர்கள் என்பது அவர்களுக்கு நினைவுக்கு வரும். இப்படித்தான் காலங்காலமாய் நடந்துவருகிறது. எந்த மசூதி அல்லது எந்த கோவில் எங்கிருந்தால் எங்களுக்கு என்ன?

சில ஏழை இந்துக் குடியானவர்கள்: இருக்கும் மசூதியை எதற்கு இடிக்க வேண்டும். அது தப்பு. புதிய கோவில் கட்டணும்னா எங்க வேணும்னாலும் கட்டிக்க வேண்டியதுதான். அதை மசூதியிருக்கும் இடத்தில்தான் கட்டவேண்டுமென்று சொல்வது தவறு.

இன்னும் சிலர்: நாங்களும் இஸ்லாமியரும் சகோதரர்கள்தான். எங்களுக்குள் எந்த துவேஷமும் கிடையாது.

சுப்ரீம் கோர்ட் மசூதி இடிக்கப் படாது என்று கொடுத்த உறுதி ஒரு புறம்; தடுத்தி நிறுத்தி விடுவோம் என்று சொன்ன மத்திய அரசின் சூளுரை ஒரு புறம்; மாநில அரசு கொடுத்த வார்த்தை ஒரு புறம். – இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாடெங்கிலும் இருந்து வந்த kar seva (labour of love) மசூதியை இடிக்கும் வேலையை செய்து முடித்தார்கள். இந்த கர் சேவாக்குகள் என்னென்ன சாதியினர் என்றும் கேட்கப்படுகிறது; அவர்களில் யாரும் பிராமணர்களில்லை.

6-ம் தேதி நடந்த மசூதி இடிப்புக்கு உடனேயே 12 டிசம்பர் 1982-ல் லிபர்கான் கமிஷன் ஒன்றிற்கு ஒரு முழு அறிக்கை தர உத்தரவிடப்பட்டது. பலப் பல நீடிப்புகள்; பிப்ரவரி 2008க்குள் கொடுக்க வேண்டுமென்று 2007ல் சொல்லப்பட்டது. இது நாள்வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

மண்டல் கமிஷனின் தாக்கத்தைக் குறைக்கவே இந்த அழிப்புப் போராட்டம் ஆரம்பிக்க பட்டது என்ற ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டது. அதற்காகவே B.J.P.,V.H.P. ராம ஜன்ம பூமி விவகாரத்தை முழுமூச்சில் அரங்கேற்றியுள்ளனர்.

இன்று டிசம்பர் 6 என்றாலே கருப்பு நாள் என்றாகிவிட்டது. எல்லோருக்குமே அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வரும்போதே அச்சம் நிறைந்த நாளாக ஆகிவிட்டது. எப்போது இந்த புண் ஆறும். இல்லை ஆறவே ஆறாதா?

முந்திய பதிவில் சொன்னதுபோல் இது ஒரு பெரும்பான்மையரின் சமய நம்பிக்கை சார்ந்த விஷயம்; ஆகவே சிறுபான்மையோர் விட்டுக் கொடுத்தாலென்ன என்ற என் நினைப்பு தவறென்பதை இந்த செய்திப் படம் அழகாக விளக்கியது. பெரும்பான்மை மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த செய்திப்படத்தில் தெளிவாக இதன் இயக்குனர் காண்பித்திருப்பார். அதுவரை நான் கொண்டிருந்த என் கருத்தை இப்படம் முற்றிலுமாக மாற்றியது.

.....................................................இன்னும் வரும்.

12 comments:

  1. கபீஷ்,
    யு த ஃபர்ஸ்ட்

    ReplyDelete
  2. //இன்று டிசம்பர் 6 என்றாலே கருப்பு நாள் என்றாகிவிட்டது. எல்லோருக்குமே அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வரும்போதே அச்சம் நிறைந்த நாளாக ஆகிவிட்டது. எப்போது இந்த புண் ஆறும். இல்லை ஆறவே ஆறாதா?
    //

    உண்மைதான்! டிச 6 நாட்டின் பல பகுதிகளும் அலர்ட் செய்யப்பட்டு தேவையற்ற பய உணர்வினை எழுப்புக்கின்றது!

    இது நாள் வரையிலும் கூட இந்த பிரச்சனை தொடர்பாக எந்த வொரு சமரச முயற்சிகளும் இல்லை :(

    ReplyDelete
  3. //பெரும்பான்மை மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை //

    உண்மை தான்.

    ஆனால் சில பொய்கள் மீண்டும் மீண்டும் உண்மையெனச் சொல்லப்பட்டால் எல்லோருமே அதனை உண்மை என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். இப்படி நடந்த பலவற்றைச் சொல்லலாம். அது போலத் தான் இதுவும். பெரும்பான்மை மக்கள் கேட்காத ஒன்றை 80களுக்கு முன்னர் பெரும்பான்மையினருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாத ஒன்றை பெரும்பான்மை மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லியே 'உண்மையோ?' என்று நினைக்க வைத்துவிட்டார்கள். கயவர்கள்.

    ReplyDelete
  4. இப்பத்தான் , இந்தப் பதிவு மூலமா முதல்முதலா நடந்த விஷயங்களைப் படிக்கிறேன்.

    நன்றி தருமி.

    ReplyDelete
  5. இந்த இரண்டாவது பதிவைப் போடத்தான் முதலில் அப்படி எழுதினீர்களோ?
    நல்ல உளவியல் உத்தி !

    ReplyDelete
  6. ஆயில்யன்,
    அன்றைக்கு வெளியூர் பயணங்கள் அதுவும் ரயில் செல்ல வேண்டாமென்ற அளவுதான் நமது பாதுகாப்பு ஏற்பாடுகள். நீங்கள் சொல்லும் முயற்சிகள் எடுக்கப் பட வேண்டுமென்ற நினைவே இல்லாமல் எல்லோருமே இருக்கிறோம்.

    ReplyDelete
  7. சரியா சொன்னீங்க குமரன்.
    கோயபெல்ஸுகள் காலமிது.

    ReplyDelete
  8. துளசி,
    அதுபோல் பலரும் இருக்கலாமென்பதால்தான் இதை பல நாளாக எழுத நினைத்து எழுதினேன்.

    ReplyDelete
  9. தி சின்ஸ் என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா ? அதில் கதோலிக்க பாதிரிமார் ஒருவர் பெண் தொடர்பு வைத்திருப்பதாக கதை வரும்.

    அந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் சிலரில் ஒருவர் டோல்பி டிசூசா என்றவரும் கூட. அவர் மும்பை கதோலிக்  போரம் என்ற அமைப்பை நடத்துபவர் என்று தான் தெரியும்.

    ஆனால் அவர் ஆனந்த் பட்வர்தனுடன் செய்திப்படங்களில் இணைந்து பணிபுரிபவர் என்று தெரியுமா ?

    ஆனந்த் பட்வர்தன் ஒரு இந்து, இந்து அடிப்படைவாதிகளுக்கு எதிராக படம் பிடிக்கிறார். உங்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார். ஆனால் அவருடன் பணிபுரியும் டோல்பி டிசூசா கதோலிக்கர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி சின்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும் என்கிறார்.


    கூடவே இருக்கும் மத அடிப்படைவாதியை விட்டுவிட்டு, இந்து அடிப்படைவாதி பற்றி படம் எடுக்கும் ஆனந்த் பட்வர்தனைப் பற்றி என்ன சொல்ல ?

    ReplyDelete
  10. பட்வர்த்தன் எடுத்தார் என்பதற்காக மட்டும் நம்பினால் தப்புத்தான்; ஆனால் சொல்லப்படும் விஷயங்களை நாமும் யோசித்துப் பார்த்து முடிவெடுத்தால் ...
    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ...அப்டின்னு சொல்லுவாங்களே..

    ReplyDelete