*
சில பதிவுகள் வாசிக்கும்பொழுது ஒரு உற்சாகம் பிறக்கிறது - ஏனெனில், நாம் வழக்கமாகக் கூறிவரும், ஆனால் பலத்த எதிர்ப்புகளுக்கு உள்ளாகும் ஒரு கூற்று - இன்னொருவராலும் சொல்லப் படும்போது ஏற்படும் ஒரு உற்சாகம்தான். சமீபத்தில் அன்புடன் புகாரி அவர்களின் இடுகையில் வந்த ஒரு பதிவு: மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள் - அதுபோன்ற ஒரு இடுகைதான்.
இந்தப் பதிவில் கூட எனக்குச் சில கேள்விகள் உண்டு. ஆனால் பொதுவாக அதில் பேசப்படும் கருத்துக்களில் பலவும் ஏற்கெனவே என் பதிவுகளில் நான் சொன்ன சில கருத்துக்களுக்கு முற்றிலும் உடன்பாட்டோடு இருப்பதால் அதை ஒரு மீள் பதிவாக அவரது அனுமதியோடு இங்கே இடுகிறேன். எனக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறேன். என் சொந்த சில கருத்துக்களை அடைப்புக் குறிக்குள் வண்ணங்களில் இட்டுள்ளேன். புகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.
*
*
மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள்
மதங்கள் இறைவனை அடையாளம் காட்டுவதற்காகத் தோன்றின. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்துச் சொல்வதற்காக வந்தன. வேறு எதற்காகவும் மதங்கள் பிறக்கவில்லை.
இது செய்யலாம் இது செய்யக்கூடாது. இது செய்தால் பாவம், நீ நரகத்துக்குப் போவாய், இது செய்தால் புண்ணியம், நீ சொர்க்கத்துக்குப் போவாய் என்றெல்லாம் நீதிகளை வகுத்துத் தந்தது மதம். (எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.)
இறைவன் மீது நம்பிக்கையை உருவாக்கி, நல்லது எது கெட்டது எது என்று வரையறை சொல்லி, சொர்க்கம் உண்டு நரகம் உண்டு, இறந்தபின் நீ வாழ்ந்த நாட்களில் நல்லது செய்திருந்தால் சொர்க்கம் புகுவாய், கெட்டது செய்திருந்தால் நரகம் புகுவாய். சொர்க்கம் சுகமானது. நரகம் கொடூரமானது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் இட்டு உன்னை நாளெல்லாம் வறுத்தெடுப்பார்கள் என்ற அச்சங்களைக் கற்றுத்தந்தது மதம். (முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.)
மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக் கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கை நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது. ஒரு மதத்தில் பிறந்ததற்காகவே, அந்த மதக்காரர்களாய் வாழ்பவர்களே பெரும்பாலானோர்.
கந்தசாமி ஒரு முஸ்லிம் வீட்டில் பிறந்திருந்தால் அவன் அப்துல் காதராய் வாழ்ந்து கொண்டிருப்பான். அப்துல் காதர் ஒரு இந்து வீட்டில் பிறந்திருந்தால் அவன் கந்தசாமியாய் வாழ்ந்துகொண்டிருப்பான். (மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். )
பிறந்து வளர்ந்து, தன் அறிவுக்கும் தேவைக்கும் ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் பலர், தன் மதத்தை மட்டும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. தனக்குப் பிடிக்காத ஒரு மதத்துக்குள் கிடந்து சிலர் புழுங்குவார்கள். அந்த மதத்தின் வரையறைகளை இரகசியமாய் மீறுவார்கள். தொடக்கத்தில் எவருக்கும் தெரியாமல் மதத்துக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பின் பழகிப் போவதால், பலரும் அறியவே செய்வார்கள்.
ஒரு மதத்தில், பாவமும் புண்ணியமும் அளந்து பார்க்கப்படலாம். நீ செய்த பாவங்கள் உன் புண்ணியத்தைவிட அதிகமாக இருந்தால், நீ நரகம் புகுவாய் என்றும், மாறாக புண்ணியம் பாவத்தைவிட அதிகமாக இருந்தால் நீ சொர்க்கம் புகுவாய் என்றும் சொல்லலாம்.வேறொரு மதமோ, நீ செய்யும் பாவங்களையெல்லாம் மீண்டும் செய்யமாட்டேன் என்று கூறினால், உன் பாவங்கள் அத்தனையும் கழுப்பட்டுவிடும். நீ சொர்க்கம் புகுவாய் என்று சொல்லலாம்.
வேறொரு மதம், நீ செய்த பாவத்துக்கு உனக்குத் தண்டனை நிச்சயம் உண்டு. நீ செய்த புண்ணியத்துக்கு உனக்குச் சொர்க்கமும் நிச்சயம் உண்டு. நீ செய்த பாவங்களுக்காய் நீ கேள்வி கேட்கப்படுவாய், நீ செய்த புண்ணியங்களுக்காய் நீ பாராட்டப்படுவாய் என்று சொல்லக்கூடும்.
இப்படியாய் மதங்களின் சட்டதிட்டங்களிலும் வாழ்க்கை நெறிகளிலும் ஒவ்வொரு மதத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கும். தனக்குப் பிடிக்காவிட்டாலும், மதங்களின் வேறு எந்த சம்பிரதாயங்களையும் சட்டதிட்டங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்தான், ஆனால் மனிதமே அவமானப் படுத்தப்படுவதைக் காலங்காலமாய்ப் பொறுத்துக் கொள்வது கொடுமையிலும் கொடுமை. தீண்டாமை, பெண்ணடிமை என்பன அப்படியான கொடுமைகளுள் சில.
ஒரு மதத்தின் தத்துவங்களில் நேரடியாய், தீண்டாமையைப் போதிக்கும் வாசகங்களோ அல்லது பெண்ணடிமையைப் போதிக்கும் வாசகங்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட நெடுங்காலமாய் செயல்முறையில் தீண்டாமையோ பெண்ணடிமையோ அந்த மதத்தில் உண்டென்றால், இந்த மதம் தீண்டாமையைப் போதிக்கவில்லை அந்த மதம் பெண்ணடிமையைப் போதிக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது.
வெறுமனே சொல்லில் இருப்பதல்ல மதம்.செயல்பாடுகளில் இருப்பதுதான் மதம்.அரக்கன் என்ற பெயரில் ஒருவன் நல்லதை மட்டுமே செய்துவந்தால் அவன் நல்லவன்தான், அரக்கனல்ல. அதுபோல நல்லவன் என்ற பெயரில் ஒருவன் அட்டூளியம் செய்துவந்தால், அவன் அரக்கன்தான், நல்லவனல்ல.
ஒரு மதத்தில் ஒருவன் இழிவு படுத்தப்படுகிறான் என்றால், அவன் அதிலிருந்து விடுதலை அடையவேண்டும். விடுதலை அடைய எந்தெந்த வழிகள் உள்ளன என்று ஆராயவேண்டும். உயிர் காக்கப்படுவதற்காகவும், மனிதம் காக்கப்படுவதற்காகவும் எடுக்கப்படும் எந்த முடிவும் தவறாகாது.
எந்த மதமும் தனக்கான தீர்வு அல்ல என்றால் எல்லா மதங்களையும்விட்டு வெளியேறவேண்டும். எனக்குச் சொர்க்கமும் நரகமும் நான் வாழும் இந்த மண்ணில்தான் என்று தெளிவாகச் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.
இப்படி மதமற்றோருக்கு இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமுதாயங்களில் அங்கீகாரம் கிடையாது. அவமதிப்புகள் நிறைய உண்டு. அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில், இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை.இந்நிலையில் முன்னேற்றம் காணாத சமுதாயத்தில் உள்ள மக்கள், தங்கள் கொடுமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உடனடி தீர்வாக, மதம் மாறுகிறார்கள். சற்றேனும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
இப்படி மதம் மாறுபவர்கள் இன்னொரு பேருண்மையைத் தெளிவாகக் காட்டுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் இன்னொரு காலகட்டத்தில் இந்த மதமும் ஏற்புடையதல்ல என்னும் பட்சத்தில், இதிலிருந்தும் மாறுவோம் என்பதே அது. இப்படிப் படிப்படியாய், மதமற்ற நிலை உலகில் உருவாக வாய்ப்புகள் ஏராளமாய் உண்டு என்றாலும் அது சற்றுத் தொலைவில்தான் உள்ளது என்பதும் உண்மையே.(you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன்)
ஒரு மதத்தின் உண்மையான தத்துவங்களில் இல்லாத கீழ்த்தரமான செயல்கள், இடைக்காலத்தில் சிலரின் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவை சீர் செய்யப்படவேண்டும். சீர் செய்துகொள்ள அதற்கு உடன்பாடு இல்லாவிட்டாலோ, அதனுள் இருந்து புழுங்குவோர் சீர்செய்யும் சக்தியற்று துயரத்திற்கு மட்டுமே ஆளாகுபவர்களாய் இருந்தாலோ, அவர்கள் மதம் மாறுவதிலோ, மதங்களையே நிராகரிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. மனித வாழ்க்கை அத்தனை நீளமானதல்ல, இயலாததைப் போராடியே உயிர்துறக்க. போராடவும் வேண்டும், வாழவும் வேண்டுமென்பதே மண்ணில் பிறந்த மனித இதயங்களின் முடிவாய் இருக்கமுடியும்.
உள்நாட்டில் வேலை இல்லாதவர்கள்தாம் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். வேலை எங்கே நான் அங்கே என்று செல்வோர்தான் இன்று உலகின் அதிக எண்ணிக்கையானோர். நாளை இதன் நிலை இன்னும் வளர்ச்சியடையும் என்பதை அனைவரும் அறிவோம். முன்பு ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், பின் மாநிலம் விட்டு மாநிலம் சென்றார்கள். இப்போது பெருமளவில் நாடு விட்டு நாடே செல்கிறார்கள். இவற்றுக்கான அடிப்படை என்னவென்றால் அது வாழ்க்கைதான். வாழ்க்கையைத் தேடிப்போவது வரவேற்கப்பட வேண்டியது.
அதேபோலத்தான் இந்த மதமாற்றங்களும்.மதம் மாறுவோர் அதிகமாக அதிகமாக எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. விரும்பாததில் வீற்றிருக்க விரும்பாதோர், அதனுள்ளேயே சாகாமல் வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறுவோர் அதிகரிக்க அதிகரிக்க எல்லா மதங்களையும்விட்டு மனிதர்கள் வெளியேறும் நாளும் விரைந்து வருகிறது.
துவக்கத்திலேயே சொன்னதுபோல, மதம் என்பது இறைவனை அடையாளம் காட்டவும் நல்ல வாழ்க்கை நெறிகளைச் சொல்லித்தரவும்தான். அப்படி இருப்பவற்றுள் எது சரி என்று ஒருவனுக்குப் படுகிறதோ அதில் அவன் மாறிக்கொள்வதே தனிமனித உரிமை, மற்றும் சுதந்திரம்.
ஒரே வீட்டில் ஏன் தாய் ஒரு மதமாகவும், தந்தை ஒரு மதமாகவும், மகன் ஒரு மதமாகவும் மருமகள் ஒரு மதமாகவும், மகள் மதமே அற்றவளாகவும் இருக்கக்கூடாது? யோசித்துப் பாருங்கள், அதில் என்ன தவறு இருக்கிறது? பிறந்துவிட்டால் அதிலேயே புழுங்க வேண்டும் என்றால், மதம் என்பதென்ன மாற்றிக்கொள்ளவே முடியாத ஊனங்களா? கிறித்துவமும், இஸ்லாமும் இரண்டிலிருந்து நான்கைந்து தலைமுறைக்கு முந்திய நம் தாத்தா-பாட்டி காலத்தில் வந்தது. மதம் மாறிய நம் தாத்தாவும் பாட்டியும் மதங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பெரும் ஒப்பீடு செய்து மாறியிருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பாவம் அவர்களுக்கு அந்த அளவுக்கு ஏது படிப்பறிவு. ஏதேதோ சமூகக் காரணங்களை வைத்து மதம் மாறியிருக்க வேண்டும்.
மதம் மாறுவதால் இனம் மாறாது நிறம் மாறாது தன் முகம் மாறாது, ஆனால் எது கொடுமை செய்ததோ அதிலிருந்து விடுதலை கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் என்றுதான் மதமே மாறுகிறார்கள். அங்கேயும் அது கிடைக்காவிட்டால், அதிலிருந்தும் வெளியேற சில் நிமிடங்களே போதும். ஆக மனிதன் மனிதனாக வாழ எந்த மரம் நிழல் தருகிறதோ அந்த மரம் நாடுவதே வாழ்க்கை.
ஒரு மதத்தில் தீண்டத்தகாதவர்களாய் இருப்பவர்கள் இன்னொரு மதம் மாறும்போது சகோதரகளாய் ஆகிறார்கள் என்றால் மதம் மாறுவது நல்ல விசயம்தான். ஒரு மதத்தில் அடிமைகளாய் இருக்கும் பெண்கள் இன்னொரு மதம் மாறும்போது சுதந்திரமாய் ஆவார்கள் என்றால் மதம் மாறுவது சிறந்ததுதான்.
மதம் ஒன்றும் பெற்ற தாய் இல்லை, அதை மாற்றாமலேயே வைத்திருக்க. வெறுமனே அது ஒரு கொள்கைதான்.(இப்படி மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றைப் பிடித்துக் கொண்டு மனிதநேயத்தைப் புறந்தள்ளுவது எந்த அளவு சரி -
பாம்புகள்கூட தங்கள்
தோல்களையே
சட்டைகளாக உரித்துப் போடுகின்றன.
ஏன் இந்த
மனிதர்கள் மட்டும்
தங்கள் சட்டைகளையே
தோல்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அதன் நல்ல கொள்கைகள் ஈர்ப்பதைவிட அதன் மோசமான கொள்கைகள் வதைப்பது அதிகம் எனில் வெளியேறுவது நல்வாழ்வின் அடையாளம்.
எத்தனைதான் சிலர் கல்வி கற்றுவிட்டாலும், உயர் பதவிகளில் பணியாற்றினாலும், பணக்காரர்கள் ஆகிவிட்டாலும், பலர் அவர்களை வன்மையாய் சாதியின் பெயரால் கேவலப்படுத்துவார்கள். அவர்களை மோதிமிதித்துவிட்டு, முகத்தில் உமிழ்ந்துவிட்டு, மாற்றம் காணுவதே மீதி வாழ்வுக்கு அமைதி.
ஒரு மதத்திற்குள் இருந்துகொண்டே அதன் சாதிக்கொடுமைகளுக்காகப் போராட வலிமை பெற்றவர்களாய், நல்ல மனம் கொண்ட உயர்சாதிக்காரர்களாகவே இருந்திருக்கிறார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களில் பலர் போராடும் வலிமையும் இல்லாதவர்களாய், அதற்கான அறிவும் இல்லாதவர்களாகவே நெடுங்காலமாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். விழித்துக்கொண்ட தாழ்ந்த சாதிக்காரர்கள் போராடிப் போராடி மனம் வெறுத்து ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மதம் மாறித்தான் இருக்கிறார்கள்.
உயர் சாதிக்காரர்களுள் பலர் இன்றும், சாதியமைப்பு தீண்டாமை போன்றவற்றை மாற்றுவது அவசியமில்லை என்று வாதிடுவதும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் பெண்ணடிமைத் தனத்தை மாற்றத் தேவையில்லை, பெண்கள் பாதுகாப்பாகவும் நலமாகவுமே வாழ்கிறர்கள் என்று கூறுவதும் வேடிக்கையான விசயங்கள். சுயநலத்தின் உச்சங்கள். வக்கிர எண்ணங்களின் எச்சங்கள்.
மதம் மாறினால் அடையாளம் தொலைந்துவிடுமே என்று சிலர் அடுத்தவர்களுக்காக வெகு அக்கறையாய்க் கவலைப்படுகிறார்கள். நல்ல அடையாளங்களையே பெற்றிருக்கும் இவர்களைப் போன்ற மேல் சாதியினருக்கும் சுதந்திர வர்க்கத்துக்கும் மாற்றம் ஏன் வேண்டும். அடுத்தவர்களை அடிமைகளாக்கி வாழ்வதுதானே இவர்களின் எண்ணம்.
நெருப்பில் நிற்பவனுக்குத்தான் வேதனை. வசதியாய் நிழலில் நின்று கொண்டு உபதேசம் செய்வது மிகவும் எளிதானதுமட்டுமல்ல அப்பழுக்கில்லாத சுயநலமானது. அப்படியே நீ நெருப்பிலேயே நின்றுகொண்டு போராடு, நிழலுக்கு ஓடிவந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதே ஏனெனில் உன் அடையாளம் தொலைந்துவிடும் என்பது இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவையாகும்.
அடையாளம் அடையாளம் என்றால் என்ன? தோட்டி என்பது ஓர் அடையாளமா? பறையன் என்பது ஓர் அடையாளமா? கீழ்ச்சாதி என்பது ஓர் அடையாளமா? அடிமை என்பது ஓர் அடையாளமா?இவற்றிலிருந்து வெளியேறாவிட்டால் நீ உன் மனித அடையாளம் தொலைக்கிறாய் என்பதை மறக்காதே. நெஞ்சு நிமிர்த்தி நான் மனிதன் என்று சொன்னால் அது உயிரினத்தின் அடையாளம். தமிழில் உரையாடி நான் தமிழன் என்று மார்தட்டினால் அது தாய்மொழியின் அடையாளம். நான் கீழ்ச்சாதி என்று சொன்னால் அது அடையாளமா? நான் அடிமை என்று சொன்னால் அது அடையாளமா?
நாம் யாருக்கும் அடிமைகள் இல்லை நாம் யாரையும் அடிமையாக்கவில்லை என்று நடைமுறையில் வாழ்ந்துகாட்டுவதே மனிதர்கள் அவசியமாகவும் அவசரமாகவும் அடையவேண்டிய அடையாளம்.
ஒரு காலத்தில் மதமாற்றம் என்றாலே அது கட்டாயத்தால் நிகழ்ந்த ஒன்றாய் இருந்தது. இன்று அப்படியல்ல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வைக்கமுடியாது. விரும்பியவர்களை யாரும் தடுக்கவும் முடியாது.திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடினார்.
உண்மைதான், ஆனால், திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும் என்றால் அவனுக்கு நல்லவை கெட்டவைகளில் நம்பிக்கை வேண்டும். திருடுவது தவறு என்று தோன்றவேண்டும். ஆனால் அப்படி எண்ணுபவர்கள் திருடர்களாய் இருப்பதில்லை. நாட்டில் இருக்கும் சட்டங்கள் சரியாகச் செயல்பட்டால்தான் திருட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது.
அதே போலத்தான், பாவ புண்ணியங்களின் மீது பயத்தை உண்டு பண்ணி நல்லவர்களாய் வாழ வழி செய்தன மதங்கள். ஆயினும் மனிதர்கள் தவறுசெய்பவர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு நாட்டின் சட்டங்கள் சரியாகச் செயல்படுவதுதான் நடைமுறைத் தீர்வு.
நாட்டின் சட்டங்களை வகுத்தவர்கள், பல மதங்களிலும் சொன்னவற்றை அலசிப்பார்த்திருக்கிறார்கள், பல புரட்சியாளர்கள் சொன்னவற்றை அனுசரித்திருக்கிறார்கள், மக்கள் நலன், நாட்டின் முன்னேற்றம் இவை அனைத்துக்கும் எது சிறந்தவழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அனுபவத்தின் பலனால் அவ்வப்போது சட்டத்தை மாற்றியமைத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றுள் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதில் ஓட்டைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் நிறைவு படுத்திக்கொண்டும், ஓட்டைகளை அடைத்துக்கொண்டும் சட்டங்கள் வரும். அவை கடைபிடிக்கப்படும். நாடும் மக்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும், நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகும் பிரச்சினைகளோடு சுகமாக வாழ்வார்கள்.
ஆக, மதமாற்றம் என்பது, கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான தற்காலிக தீர்வுதான். ஆனால் அது அவசியமான தீர்வு. நிரந்தரத் தீர்வு என்பதை எட்டிப்பிடிக்க இதுபோன்ற மதமாற்றங்கள் அவசியமாகின்றன. மதமாற்றம் ஒரு மதத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான பற்றை அடித்து நொறுக்கி, எனக்கு வேண்டாம் என்றால் வெளியேறுவேன் என்று வீராப்பாய்ச் சொல்கிறது. இதை நான் வரவேற்கிறேன்.
பிறப்பால் ஒரு மதம் பழக்கத்தால் ஒரு மதம் விருப்பால் ஒரு மதம் அறிவால் நான் எந்த மதமும் இல்லை என்று எத்தனையோ பேர்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு மதத்துக்குள் இருக்கும் பெரும்பாலானோர் எந்த மதத்தையும் ஆதரிக்காதவர்களாய் அல்லது எல்லா மதங்களையும் ஆதரிப்பவர்களாய்த்தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஏதோ பிறந்தோம் இந்த மதத்தில் இருக்கிறோம். அப்படியே அதைப் பின்பற்றியா நடக்கிறோம், நடப்பதெல்லாம் நம் விருப்பம், இந்த சமுதாயத்துக்காக அந்த மத முகம், அவ்வளவுதான் என்று இருப்போர் பலரை பலரும் அறிவார்கள்.
சிலருக்கு மதம் ஓர் உணர்வுபூர்வமான அங்கம். அதைப் பற்றிப் பேசினாலே, கொதித்தெழுந்து அனைத்தையும் கொளுத்திப் போட்டுவிடுவார்கள். இந்த உணர்ச்சித் தளத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை தருகிறது மதமாற்றம்.
மனிதர்கள் அறிவாலும் அன்பாலும் முழு விடுதலை பெறவேண்டும். அதற்குத் தடையாய் இருப்பவற்றை மிதித்து உயர்வதே வாழ்க்கை.
கறுப்பு நிறத்தை வெறுத்து வெள்ளை நிறம் இரத்தவெறி கொண்டது ஒரு காலம். கறுப்பு நிறத்தைக் கண்டு அதில் மயங்கி வெள்ளை நிறம் காதல் கொள்வது இந்தக் காலம். நிறமாற்றம் ஈர்ப்பினைத் தருகிறது பலருக்கு. கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளையாய் இருப்பவர்களை விரும்புவதும், வெள்ளையாய் இருப்பவர்கள் கறுப்பாய் இருப்பவர்களை விரும்புவதும் இயற்கை.
இன்று உலகின் பரப்பு சுருங்கிப் போய்விட்டது. இனங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய இனங்கள் தோன்றுகின்றன. அல்லது இன அடையாளங்கள் மறைகின்றன.
பண்பாடுகள் எல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய கலாச்சாரங்கள் உருவாகின்றன அல்லது பழைய கலாச்சாரங்களின் முகங்கள் வெளிறிப் போகின்றன.
மதங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன.(ஒரு கேள்வி: அப்படியா சொல்கிறீர்கள்? இல்லையே. ஒவ்வொன்றும் தனித்தனியாயல்லவா, ஒன்றோடு ஒன்று ஒன்றாமலேயேதான் இருக்கின்றன என்பதுதானே சோகம்!) விருப்பமானதைத் தேர்வு செய்வதே வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு இதயத்திலும் வலுக்கிறது.
இந்தச் சூழலில் மதமாற்றம் மட்டுமல்ல, மனித நலனை நோக்கிய எந்த மாற்றமும் நல்ல மாற்றம்தான்.
//எல்லாவற்றுக்கும் மேலாக, அனுபவத்தின் பலனால் அவ்வப்போது சட்டத்தை மாற்றியமைத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றுள் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதில் ஓட்டைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் நிறைவு படுத்திக்கொண்டும், ஓட்டைகளை அடைத்துக்கொண்டும் சட்டங்கள் வரும்//
ReplyDeletebest example..section 377 of IPC
a gud analysis by the writer
ok... righttu...
ReplyDeleteவரிக்கு வரி கலக்கி இருக்கிறார்.
ReplyDelete//நெருப்பில் நிற்பவனுக்குத்தான் வேதனை. வசதியாய் நிழலில் நின்று கொண்டு உபதேசம் செய்வது மிகவும் எளிதானதுமட்டுமல்ல அப்பழுக்கில்லாத சுயநலமானது. அப்படியே நீ நெருப்பிலேயே நின்றுகொண்டு போராடு, நிழலுக்கு ஓடிவந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதே ஏனெனில் உன் அடையாளம் தொலைந்துவிடும் என்பது இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவையாகும்.//
மிகவும் பிடித்த வரிகள்.
***
தருமி சார்,
ஒரு ஆத்திகன் நாத்திகம் பேசினால் அது மற்ற ஆத்திகர்களால் முதலில் குழப்பவாதம் என்றும் பின்னாளில் அது மதச் சீர்த்திருத்தமாகப் பார்க்கப்படும், போற்றப்படும்.
மதம்பற்றிய பேச்சை விடறதாயில்லையா?
ReplyDeleteஅவனவனுக்கு விருப்பமா, வசதியா இருக்கும் மதத்தில் இருந்துக்கலாம்தான். ஆனால்......
சாதி ஒழிஞ்சால்தான் மதமும் ஒழியும்(-:
மனுசன் மனுசனா இருந்தால் போதாதா?
அரசாங்கப் படிவங்களில் சாதி, மதம் ரெண்டையும் தொலைச்சால் தேவலை
//எல்லாவற்றுக்கும் மேலாக, அனுபவத்தின் பலனால் அவ்வப்போது சட்டத்தை மாற்றியமைத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றுள் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதில் ஓட்டைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் நிறைவு படுத்திக்கொண்டும், ஓட்டைகளை அடைத்துக்கொண்டும் சட்டங்கள் வரும்//
ReplyDeleteபுகாரி, வோட்டாண்டி,
இதில் எனக்கு உடன்பாடில்லை.
மதச்சட்டங்களே நமது சமூகச் (நாட்டுச்) சட்டங்களாக மாறவேண்டும் என்ற மதக் கொள்கைகளோடு வாழ்பவர்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு //நாடும் மக்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும், நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகும் பிரச்சினைகளோடு சுகமாக வாழ்வார்கள்.// என்ற நம்பிக்கையுள்ளது?
நை.நை.,
ReplyDeleteநன்றி
கோவி,
ReplyDeleteஉங்கள் நம்பிக்கைக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும். ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கையில்லை சில மதங்களையும் அந்த மதங்கள் எழுப்பும் குழப்பங்களையும் பார்க்கும்போது நீங்களிருவரும் சொல்லும் மதச் சீர்திருத்தங்கள் வரும் என்ற நம்பிக்கை. :(
துளசி,
ReplyDelete//மதம்பற்றிய பேச்சை விடறதாயில்லையா?//
இல்லை!
சுற்றி நடக்கும் பல கேடுகளில் முக்கியமான ஒரு கேட்டைப் பற்றிப் பேசாமலிருக்க முடியவில்லை.
//மதச்சட்டங்களே நமது சமூகச் (நாட்டுச்) சட்டங்களாக மாறவேண்டும்//
ReplyDeletenamba aalungalukku sondhama sattam ezhudhura alavaukku moolai illainga..
adhanala dhaan "constitution"aye pala naadoda constitutionlendhu "suttu" ezhudunanga..
konja naalaikku apparam andha matter thappunu therinja udane adha "amend" panniruvaanga..
வோட்டாண்டி,
ReplyDeleteநான் நம் நாட்டு நடப்பைச் சொல்லவில்லை. கொஞ்சம் நேரடியாகவே சொல்லி விடுகிறேன்.
எங்கள் வேதப் புத்தகம்தான் எங்களுக்குச் சட்டப் புத்தகம் என்பவர்களின் நாடுகள் பெருகிவரும் இந்த நேரத்தில் //ஓட்டைகளை அடைத்துக் கொண்டு சட்டங்கள்// எப்படி வரும்?
//எங்கள் வேதப் புத்தகம்தான் எங்களுக்குச் சட்டப் புத்தகம் என்பவர்களின் நாடுகள் பெருகிவரும் இந்த நேரத்தில் //
ReplyDeleteu r completely right..
but laws do get amended in India..
atleast our govt doesnt dance to the tunes of community leaders and moral police..
In indian context wat "pugari" has written is right
வோட்டாண்டி,
ReplyDeleteஏற்கெனவே மேலே சொன்னதுபற்றிய பதிவுதான் இது.
அருமையான பதிவு! நன்றி !
ReplyDelete