Thursday, January 07, 2010

364. யாருங்க இந்த பன்னீர்செல்வம் ?

*

"ரேணுகுண்டா" படம் பார்த்தேன். வேட்டைக்காரனுக்கு சண்டை போட்டுக்கிட்டு திரை விமர்சனம் எழுதிய அளவு இந்தப் பதிவுலகிற்குத் தெரியும்; இன்னும் வரப் போகிற அசலுக்கும், எந்திரனுக்கும் வரப்போகும் விமர்சனங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. ஆனால் இந்தச் சத்தத்தில் ரேணுகுண்டா மாதிரி படங்களுக்கு ஏன் விமர்சனங்கள் அதிகமாக இல்லையென நினைத்து வருத்தமாயுள்ளது.

எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது; இது போன்ற படங்களுக்கு அல்லவா நிறைய விமர்சனங்கள் வரணும்; அதுதானே நல்ல படம் எடுப்பவர்களுக்குக் கிடைக்கும் டானிக். குப்பைகளை குப்பை என்று சொல்வதற்குப் பதில் மாணிக்கங்களை 'இவை நிஜமாகவே நல்ல மாணிக்கங்கள்' என்றால்தானே மாணிக்கக்காரர்களுக்கு மரியாதையும் சிறப்பும்.

கதைகளை சில விமர்சகர்கள் கொடுத்துவிட்டார்கள். ஆக அது தேவையில்லை.



படத்தில் வரும் கதாநாயகன் + நான்கு ரெளடிப் பசங்கள் -- இவர்களில் 'டப்பா' வாக வரும் மதுரைக்காரன் அச்சு அசல் மதுரைக்காரன் தான். காதலில் தோல்வியடைந்து சத்தமாக சினிமா பாட்டு கேட்கும் இடத்தில் கூட அவனது 'ஸ்டைல்' அழகு. அவனும் அவன் பரட்டைத்தலையும், பேசும் 'பந்தா' பேச்சும் எதற்கும் அசராத ஒண்ணாம் நம்பர் ரெளடி என்று அவனை அழகாக அடையாளம் காட்டுகின்றன. சுத்தமான ஒரு களி மண்ணை நன்கு உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

கதாநாயகியின் அக்காவாக வரும் பெண்ணின் நடிப்பும் அழகு. கதாநாயகனுக்கு ஒரே மாதிரியான சோகம் நிறைந்த வெற்றுப் பார்வை. பையனுக்கு அது அழகாக வந்துள்ளது. இந்த மூவரும் படத்தில் மிக அழகாகத் தங்கள் பணியினைச் செய்ய வைத்துள்ளார் இயக்குனர்.

ஒவ்வொரு பாத்திரமும் சாகும்பொழுதும் தனித்தனி முத்திரைகளோடு வந்துள்ளன. அந்தப் பெரிய ரெளடி அடிபட்டு சாவதும், டப்பா சாவு தன்னை நெருங்கியது அறிந்து அழுவதும், அடிபட்டு விழுந்து கிடக்கும் கோலமும், கதாநாயகன் சுடப்பட்டு விழுவதும் --- ஒவ்வொன்றும் நேர்த்தி.

படத்தில் யாரும் நடித்தது போலவே தெரியவில்லை. இயல்பென்றால் அப்படி ஒரு இயல்பு. எங்கும் தேவையில்லாத வசனங்களே இல்லை. கதாநாயகியின் அக்காவின் அன்பு அந்த நான்கு ரெளடிகளைத் தொட்டு இளக வைப்பது மிக அழகாக, அமைதியாக - வழக்கமானத் தமிழ்ப்படங்களில் இருப்பது போல் இல்லாமல் - காட்டப் பட்டிருக்கிறது.

தமிழ்ப்படம் பார்க்கும்போது மனசு சில "முட்டாள்தனமான கேள்விகளைக்" கேட்பது வழக்கம். கதாநாயகன் அடிக்கும்போது மக்கள் ஏன் 25 அடி தள்ளிப் போய் விழுகிறார்கள்; அவர் ஐம்பது பேருடன் சண்டை போட்டாலும் ஏன் ஒவ்வொருவராக வந்து கதாநாயகனிடம் அடி வாங்கிக்கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் தோன்றும். ஆனால் இப்படத்தில், ரெளடிகளால் கொல்லப்பட ஏதுவாக அந்தப் பெரிய அரசியல்வாதி ஏன் அந்த தனியிடத்திற்குக் காரில் வந்தான் என்ற ஒரு கேள்வி தவிர வேறு ஏதும் கேள்விகளே மனதில் எழவில்லை. கதையமைப்பும், காட்சிகளும் மிக நேர்த்தியாக படத்தை நகற்றிச் செல்கின்றன.

ஐந்து ரெளடிகளும் கொல்லப்படும்போது மனது அவர்களுக்காக இரங்குவதும், வெறியோடு அவர்களைத் தேடியலையும் காவலதிகாரியைப் பார்த்து கோபப்படுவதும் இப்படத்தின் வெற்றியென்று நினைக்கிறேன். மிகை நடிப்பென்று யாரையும் சொல்ல முடியாது. இயல்பாக அவர்களை நடிக்க வைத்து, City of God படத்தை நினைவுறச்செய்யும் திறமை மிக்க இயக்குனர் பன்னீர்செல்வத்திற்கு என் வாழ்த்துக்கள்.


*

13 comments:

  1. நெஜமா தான் சொல்றீங்களா? கொஞ்சம் பார்த்து பேஜாராயிட்டேன் நான், அதுக்கப்பறம் பார்க்கலை, சீரியஸா எடுத்த மாதிரியும் இல்லாம காமெடியா எடுத்த மாதிரியும் இல்லாம செம அட்டு மாதிரி தோன்றியது எனக்கு கொஞ்சத்தோடு பார்ப்பதை நிறுத்திட்டேன்...

    ReplyDelete
  2. சரி சரி.. ரொம்ப பீல் ஆகாதீங்க ஸார்..!

    இயல்பான நடிப்பு.. சூப்பர் டைரக்ஷன்தான்..

    ஆனால் திரைக்கதையும் பல ஓட்டைகள்.. அதைவிட எனக்குப் பிடிக்காதது டூ மச்சான வன்முறைக் காட்சிகள்..

    இதனாலதான் நான் விமர்சனம் எழுதலை..! அவ்ளோதான்..!

    ReplyDelete
  3. ”சிட்டி ஆஃப் காட்” படத்தின் சாயல்னு சொன்னாங்களே!

    ReplyDelete
  4. இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தவரின் தம்பி என் நண்பர் என்பதால் படம் வெளியான அன்றே இப்படத்தை பார்த்தேன்.

    பல சூப்பர் ஹீரோக்களின், சூப்பர் இயக்குனர்களின் குப்பை படங்களைவிட இந்தப்படம் பல மடங்கு நன்றாக இருந்தது.

    ஆனாலும் வலைபதிவு உலகமும், அதன் சினிமா விமர்சகர்களும்கூட பிரபல கலைஞர்களை மட்டுமே மதிக்கும், விமர்சிக்கும் "பிரபல"த்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் ரேணிகுண்டா படம் பரவலாக கவனிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

    (திரைப்பட விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா தெரியாது)

    ReplyDelete
  5. வால்ஸ்,

    //”சிட்டி ஆஃப் காட்” படத்தின் சாயல்னு சொன்னாங்களே!//

    ....City of God படத்தை நினைவுறச்செய்யும் ...அப்டின்னு போட்டிருக்கேனே .. முழுசா வாசிங்க'பா!

    ReplyDelete
  6. குழலி,
    //காமெடியா எடுத்த மாதிரியும் இல்லாம ..//

    அப்டியா சொல்றீங்க ..?

    ReplyDelete
  7. உ.த.,
    இந்தப் பதிவுக்கு இந்த தலைப்பை வைக்கும்போதே உங்களை மனசில வச்சிக்கிட்டுதான் .. இன்னும் கொஞ்சம் செய்திகளை அள்ளித் தருவீங்கன்னு நினச்சேன். படத்தைப் பற்றி, இயக்குனர் பற்றி, அடுத்த படம் பற்றி ...

    சுரங்கமாச்சே...

    ReplyDelete
  8. சுந்தரராஜன்,

    //பல சூப்பர் ஹீரோக்களின், சூப்பர் இயக்குனர்களின் குப்பை படங்களைவிட இந்தப்படம் பல மடங்கு நன்றாக இருந்தது. //

    முற்றிலும் உடன்படுகிறேன்.

    //(திரைப்பட விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா தெரியாது)//

    ஆமாமா ... நாங்கல்லாம் ரொம்பத்தான் விற்பன்னர்கள்!!
    :)

    ReplyDelete
  9. உ.த.,
    //எனக்குப் பிடிக்காதது டூ மச்சான வன்முறைக் காட்சிகள்.. //

    அதான .. ரொம்ப சரியா எடுத்தா இப்படித்தான் சொல்லுவீங்க.. ஹீரோவின் அப்பா-அம்மா கொல்லப்படுவது பயங்கரம்தான். ஆனா .. ரொம்ப நல்லா எடுத்திருந்தாங்க. குண்டு பையன் கொல்லப்படுவது பயங்கரம்தான். பாவமாயிருந்தது. டப்பா சுடப்படுவது காட்டப்படாமலேயே எஃபெக்ட் கொடுத்திருப்பாங்க.

    city of god பாருங்க. அட ... என்னப்பா இது .. சின்னப்பையனெல்லாம் இப்படி பண்றாங்களேன்னு நினைப்பீங்க. அதுதான் இந்த மாதிரி genre படங்களுக்கு முன்னோடி. அது நல்லா இருக்கு அப்டிம்பீங்க.. ஆனா தமிழில் வந்தால் .. விஜய் வாழ்கன்னுட்டு போய்டுவீங்களா?

    ReplyDelete
  10. //....City of God படத்தை நினைவுறச்செய்யும் ...அப்டின்னு போட்டிருக்கேனே .. முழுசா வாசிங்க'பா! //


    பின்னூட்டம் போட்டுட்டு தான் சார் பார்த்தேன்!

    நான் தான் படிக்க படிக்க பின்னூட்டம் போடுவேனே!

    ReplyDelete
  11. தருமி,

    இந்தப் படத்தைப் பற்றி ஒரு நண்பர் படம் பார்த்திட்டு வந்தன்னிக்கே ரொம்ப சிலாகிச்சு ஒரு பதிவு கூட போட்டிருந்தார், இங்கே... ரேணிகுண்டா - வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்

    வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும் எதார்த்தமிருந்தால் கண்டிப்பாக மனசு ஏத்துப் போகுமின்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. நான் படம் பாக்கலை சார்.

    ReplyDelete