Tuesday, March 06, 2012

556. பண்புடன் இணைய இதழில் என் மொழியாக்கச் சிறுகதை:




*

By panbudan - Posted on 29 February 2012



தருமி

பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற, இவர் பிரபலமான வலைப்பதிவரும் கூட, முகம்மது உமரின் பிரபலமான அமினா நாவலை தமிழுக்குத் தந்தவர். அந்த மொழிபெயர்ப்புக்காகவே திசை எட்டும் விருதும், தமுஎகச விருதும் பெற்றவர். இப்போது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார்
--------------------------



முன்குறிப்பு:

ஆசிரியரின் முழுப் பெயர் - CHEKHOV ANTON PAULOVICH (1860 - 1904). டால்ஸ்டாய், கார்க்கி போன்ற பெரும் எழுத்தாளர்களின் உற்ற நண்பர்; சமூகப் பிரச்சனைகளே இவரது கதைகளுக்குப் பின்புலமாக அமைந்தன. இதனால் இவரின் பல கதைகளில் சோகமும், மனமுறிவுகளும், மோனமும் இழையோடும். இக்கதையின் பேசுபடு பொருளான தனி மனித மனோவியலும், கதையின் முடிவும் மிகவும் வித்தியாசமானவை.

                                                                ---------------------------





து ஒரு பனிக்காலத்தின் பின்னிரவு. அந்த வயதான வங்கியாளர் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகக் குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பனிக்காலத்தில் அவர் அளித்த விருந்து ஒன்று அவர் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது. நிறைய அறிவு ஜீவிகள் கலந்து கொண்ட விருந்து அது. எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு இறுதியில் தூக்குத் தண்டனை பற்றி வந்து நின்றது. ஒரு சில இதழியல் நண்பர்களும், இன்னும் சில அறிவாளிகளையும் தவிர மற்ற எல்லோருமே ஒட்டு மொத்தமாக தூக்குத் தண்டனையை எதிர்த்தார்கள். பழங்காலத்து முரட்டுப் பழக்கம் அது; ஒரு கிறித்துவ நாட்டில் இப்படி ஒரு தண்டனையா?; மனிதப் பண்பாட்டிற்கு எதிரானது ... இப்படிப் பல எதிர்ப்புகள். அதிலும், சிலர் உலகம் முழுமைக்குமே தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை மட்டுமே செல்லும் என்று ஒரு வழக்கம், சட்டம் வரவேண்டும் என்று வற்புறுத்தினர்.

விருந்து கொடுத்த வங்கியாளரோ இதற்கு மறுப்பு கூறினார்: "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... எந்த அனுபவமும் எனக்கில்லை. இருந்தும் என்னுடைய மதிப்பீட்டில் தூக்குத் தண்டனையே மிகவும் சரியான தீர்ப்பாகத் தெரிகிறது. ஆயுள் தண்டனையை விட எல்லா விதத்திலும் மேலானது; உயர்வானது. தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு மரணம் உடனே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளியைக் கொல்கிறது. சில வினாடிகளில் உங்களைக் கொல்வது நல்லதா? .. இல்லை அணு அணுவாக உங்களை மெல்லக் கொல்வது சரியா? எதில் மனிதத் தன்மை அதிகம்?"

"இரண்டுமே எனக்குப் பண்பாடானதாகத் தோன்றவில்லை" என்றார் ஒரு விருந்தினர். "ஏனெனில், இரண்டிலுமே உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அரசு என்ன பெரிய கடவுளா? வாழ்க்கையை எடுக்க முடியும். ஆனால் அந்த அரசினால் அதைத் திருப்பித் தரமுடியுமா? அப்படித் திருப்பித் தர முடியாததை எப்படி அவர்கள் இஷ்டத்திற்கு பிடுங்கலாம்?"

அந்தக் குழுவில் ஒரு இளம் வழக்கறிஞரும் இருந்தார். வயது இருபத்தி ஐந்திற்குள் தானிருக்கும். அவரது கருத்தைக் கேட்டதும், அவர் "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... இரண்டுமே என்னைப் பொறுத்தவரை தவறானவை. ஆனால் இந்த இரண்டில் ஒன்று என்று என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். வாழாமலே மாய்ந்து போவதை விடவும், ஏதோ ஒரு வகையில் எப்படியோ வாழ்வது பெரிதுதானே..!"

வங்கியாளருக்கு தன் கருத்துக்கு எதிர்கருத்தாக வந்த விவாதம் மிகக் கோபத்தைத் தந்தது. முன்னால் இருந்த மேசை மேல் ஓங்கித் தட்டியவராக அந்த இளம் வழக்கறிஞரைப் பார்த்துக் கத்தினார்: "நீங்கள் சொல்வது சுத்தப் பொய்; இருபது லட்சம் தருகிறேன்... வெறும் ஐந்தே ஐந்து வருஷம் ... ஒரு தனிமைச் சிறையில் உங்களால் இருக்க முடியுமா?"

"நீங்கள் இத்தனை தீவிரமாக இதைப் பேசுவதால் அதே தீவிரத்தோடு நானும் சொல்வேன். இருபது லட்சம் கொடுத்தால் ஐந்து என்ன ..பதினைந்து வருஷம் தனிமைச் சிறையில் இருக்க நான் தயார்" என்றார் அந்த இளம் வழக்கறிஞர்.

"பதினைந்து வருஷம்! சரி .. நானும் ஒத்துக் கொள்கிறேன். நண்பர்களே! நான் இருபது லட்சம் பணயமாக வைக்கிறேன்" என்று வங்கியாளர் கத்தினார்.

"நானும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் பணயமாக வைப்பது இருபது லட்சம்; நான் பணயமாக வைப்பது என் “சுதந்திரம்".

மூர்க்கத்தனமான இந்த பந்தயம் உறுதியாயிற்று. வங்கியாளருக்கு இந்த இருபது லட்சம் என்பது பெரிய விஷயமல்ல; பணத்தில் புரள்பவர்; நினைத்ததைச் செய்பவர்; பல லட்சங்களை உருட்டி விளையாடுபவர். விருந்து தொடர்ந்து நடக்கும்போது பக்கத்திலிருந்த இளைய வழக்கறிஞரிடம் சிரித்துக் கொண்டே, "இளைஞனே! கொஞ்சம் புத்திசாலியாயிருங்கள். காலந்தாழ்த்தியாவது திருந்திக்கொள்ளுங்கள்.இருபது லட்சம் எனக்குப் பெரிதல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல நாலைந்து ஆண்டுகளை இழக்கப் போகிறீர்கள். ஏன் நாலைந்து ஆண்டுகள் என்று மட்டும் சொல்கிறேனென்றால் அந்த நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உங்களால் இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது. அதோடு இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - தானாக வலிந்து நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த தண்டனை பிறரால் உங்கள் மேல் ஏற்றப்படுவதை விடவும் மிகக் கடினமானதாக, கசப்பானதாக இருக்கும். எந்த நிமிஷத்திலும் வெளியே வந்து இந்தப் பந்தயத்தை முறித்துக் கொள்ளலாம் என்பதாலேயே இந்தச் சிறை வாழ்க்கை மிக மிகக் கடினமானதாக இருக்கும். வாழ்க்கையே கசப்பான ஒரு சிறைக்குள் நீங்கள் அடைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது".

வங்கியாளர் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று நடந்த நிகழ்வு ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொண்டார். கால்கள் அவரது அறையை அங்குமிங்குமாய் அளந்து கொண்டிருந்தன. ஆனால், அவரது நினைவுகள் அன்றைய நிகழ்வுகளை ஆழமாக அசை போட்டுக் கொண்டிருந்தன.

"எதற்காக இப்படி ஒரு பந்தயத்திற்குள் தலையை விட்டேன்! இதனால் எனக்கு என்ன லாபம்? அந்த பந்தயத்தால் ஆயுள் தண்டனை சிறந்ததா தூக்குத் தண்டனை சிறந்ததா என்று மக்களை உணர வைக்கப் போகிறதா? இல்லை .. இல்லவே இல்லை .. எல்லாம் சுத்த வெட்டித் தனம். பந்தயம் வைத்த அந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு வீம்பு பிடித்த, மனம்போல் நடக்கும் ஒரு பணக்காரனின் வெட்டிப்பந்தயம், அந்த வழக்கறிஞனுக்கோ என் காசு மேல் கண்!"

மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கிப் போனார் வங்கியாளர். அந்தப் பந்தயம் உறுதியானதும் மற்றைய அனைத்து ஏற்பாடுகளும் உறுதியாக்கப்பட்டன. வழக்கறிஞருக்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறை. வங்கியாளரின் வீட்டில் இருந்த தோட்டத்து அறையே கடுஞ்சிறையாகும். பந்தயக் காலமான பதினைந்து ஆண்டுகளும் வழக்கறிஞர் அந்த வீட்டின் வாசலைத் தாண்டவோ வேறு மனிதக் குரலைக் கேட்கவோ, கடிதங்கள், செய்தியிதழ்கள் வாசிக்கவோ முடியாது. ஏதாவது ஒரு இசைக் கருவி வாசிக்க, நூல்கள் வாசிக்க, கடிதங்கள் எழுத, மதுபானம் அருந்த, புகை பிடிக்க அனுமதியுண்டு. வெளியுலகோடான தொடர்பு கொள்ள ஒரு சின்ன ஜன்னலிருக்கும். அது வழியே எழுத்து மூலமாகத் தன் தேவைகளை வெளியுலகிற்கு அனுப்பலாம். புத்தகம், இசை, மது - இவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஜன்னல் வழியே சிறு குறிப்புகள் மூலம் அவர் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் கூட மிகத் திருத்தமாக முதலிலேயே திட்டமிடப்பட்டது. பதினைந்து ஆண்டுகள் அவர் தனிமைப்படுத்தப் படுவார். 1870-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் பந்தயம் 1885-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். சரியாக இந்த நேரத்திற்கு இரு நிமிடங்களுக்கு முன்பே வெளியே வழக்கறிஞர் வந்தாலும், வங்கியாளர் பணம் எதுவும் தரவேண்டியதில்லை. இருபது லட்சம் வங்கியாளருக்கே என்று ஒப்பந்தமிடப்பட்டது.

பந்தயம் ஆரம்பித்தது. முதல் ஆண்டில் வழக்கறிஞர் அனுப்பிய சீட்டுகளிலிருந்து அவர் தனிமையின் தீவிரமும், அதனாலான தவிப்பும் தெரிந்தன. இரவும் பகலும் அவரது அறையிலிருந்து பியானோவின் இசை வெளியே கசிந்தது. மது, புகை இரண்டும் அவரால் கேட்கப்படவேயில்லை. சீட்டு ஒன்றில், "மது ஆசையை வளர்க்கிறது; ஆசைகள் ஒரு சிறைக் கைதியின் முதல் எதிரி; அதுவும் நல்ல ஒயினை தனியாக அமர்ந்து அருந்துவது அயர்ச்சியை மட்டுமே தரும். புகையோ அறையின் மூச்சுக் காற்றையே அசுத்தமாக்கி விடும்" என்று எழுதியிருந்தார். முதல் ஆண்டு முழுவதும் வழக்கறிஞர் கேட்ட நூல்கள் மிக எளிதானவைகளே - காதல், மர்மங்கள், கற்பனைகள், நகைச் சுவைகள் - இப்படிப்பட்ட கதைகளே அவரால் கேட்கப்பட்டன.

இரண்டாவது ஆண்டு - பியானோ அமைதியாகி விட்டிருந்தது. வழக்கறிஞர் இப்போது கேட்ட நூல்கள் யாவும் பெரும் இலக்கியங்கள் தான். ஐந்தாவது வருடம் மறுபடியும் பியானோ ஒலிக்க ஆரம்பித்தது. மதுவும் கேட்கப்பட்டது. அவரது வாழ்க்கையை உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கு வழக்கறிஞர் இந்த ஆண்டு முழுவதும் குடிக்க, உண்ண, தூங்க மட்டுமே செய்கிறார் எனப் புரிந்தது. தொடர்ந்த கொட்டாவிகள் .. தனக்குத் தானே கோபமாகப் பேசிக்கொள்ளுதல் .. என்று காலம் போனது. வாசிப்பு அறவே இல்லாது போயிற்று. சில நாட்களில் இரவு முழுக்க முனைந்து எழுதிக் கொண்டிருந்தார். இரவு முழுக்க எழுதியதைக் காலையில் எழுந்ததும் கிழித்துப் போட்டார். பல நேரங்களில் அவரின் அழுகைக் குரல் வெளியே வரை கேட்டது.

ஆறுவது ஆண்டின் இரண்டாம் பகுதியில், பல மொழிகள் கற்கும் ஆவலுண்டானது. அதனோடு வரலாறு, தத்துவம் இவைகளையும் கற்க ஆரம்பித்தார். இவைகளைக் கற்க ஆரம்பித்த போது, அவரது ஆர்வத்தை நிறைவேற்ற வங்கியாளர் மிகுந்த சிரமப்பட்டார். அத்தனை நூல்கள் ... அத்தனை வேகம் ...! நான்கு ஆண்டுகளில் மட்டும் 600 புத்தகங்களை வங்கியாளர் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தத் தீவிரம் உயர் நிலையிலிருந்த போது வழக்கறிஞரிடமிருந்து ஒரு சீட்டு வங்கியாளருக்கு வந்தது.

"எனதருமை சிறையதிகாரியே! இந்தக் கடிதத்தை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். இவைகளை மொழி வல்லுனர்களிடம் கொடுங்கள். அவர்கள் அதை வாசிக்கட்டும். அவர்கள் தவறு ஏதும் அவைகளில் கண்டுபிடிக்காவிட்டால், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி வெடிச் சத்தம் எழுப்புங்கள். நான் என் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டேன் என்பதைப் புரிந்து கொள்வேன்".

"வித்தகர்கள் பலரும் பல மொழிகளில் எழுதுகிறார்கள். மொழிகள் வேறாக இருந்தாலும் கருத்துக்கள் ஒன்றே. இப்போதைய எனது மிக்க உன்னதமான மகிழ்ச்சிகரமான நிமிடங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்".

வழக்கறிஞரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது .. ஒன்றல்ல .. இரண்டு குண்டுகள் தோட்டத்திலிருந்து சுடப்பட்டன!

பத்து ஆண்டுகள் கழிந்தன.

இப்போது வழக்கறிஞர் தன் மேசையருகே அமர்ந்து அமைதியாக பைபிளின் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருந்தார். வங்கியாளருக்கு இது மிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான்கு ஆண்டுகளில் 600 நூல்களைக் கற்றறிந்தவர். ஆனால் இப்போது ஒரு வருடம் முழுமைக்கும் மிக எளிமையான, சின்னதான ஒரு நூலை எப்படி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார் என் வியந்தார். இந்த நூலை வாசித்த பின் மதங்களின் வரலாறு, இறையியல் என வாசிக்க ஆரம்பித்தார்.

கடைசி இரு ஆண்டுகளில் அவரின் வாசிப்பு மிகவும் வேறுபட்டு இருந்தது. நிறைய வாசித்தார் ... வாசித்தவையும் பல்வேறு துறை தொடர்பானவை. முதலில் உயிரியல் .. பின் பைரனும் ஷேக்ஸ்பியரும் ... அவரிடமிருந்து வரும் சீட்டில் வேதியல் நூலும் இருக்கும்; அதோடு மருத்துவ நூல், மர்மக்கதைத் தொகுப்புகள், தத்துவம், இறையியல் தொடர்பானவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு பெருங்கடலுக்குள் - பல்வேறு உடைந்த பாகங்கள் மிதக்கும் நீருக்குள் - ஏதாவது ஒன்றைப் பற்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிலிருந்தது.

வங்கியாரின் சிந்தனைகள் தொடர்ந்து, அந்த முழு பதினைந்து ஆண்டு கால நிகழ்வுகளை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தன. "நாளை பந்தயம் முடிவிற்கு வருகிறது. நாளை 12 மணிக்கு வழக்கறிஞர் சுதந்திரமாகி விடுவார். நான் இருபது லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை எப்படியாவது பிரட்டிப் போட்டுக் கொடுத்தால் அதோடு என் வாழ்க்கையே அவ்வளவு தான் ... முழுவதுமாக அழிந்தே போய்விடுவேன்...".

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கை நிறைய பணம் .. எத்தனையோ லட்சங்கள் .. கோடிகள் ... ஆனால் இப்போதோ கடன் மயம்தான். பங்குச் சந்தையின் சூதாட்டங்கள், கண்மூடித்தனமான கணிப்புகள், கவனமின்மை, முதுமை ... எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவரது தொழிலை முழுவதுமாக ஆட்டியெடுத்து விட்டன. கவலையற்று, தன்னமிபிக்கையோடுமிருந்த அந்த மனிதர் இப்போது ஒரு வெகு சாதாரண வங்கியாளராக, பங்குச் சந்தையின் ஒவ்வொரு சின்ன அசைவிற்கும் ஆடிப் போகுமளவிற்கு மாறி விட்டார்.

"முட்டாள்தனமான பந்தயம்.." தன் தலையைப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டார். "இந்த மனுஷன் ஏன் செத்துத் தொலக்கவில்லை? வெறும் நாற்பது வயதுதான் இந்த மனிதனுக்கு. வெளியே வந்ததும் என் கடைசிப் பைசாவும் அவரிடம் போய்விடும். இனி இந்த மனிதன் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து, பங்குச் சந்தைகளின் சூதாட்டத்தில் திளைத்து விடுவான். நான் அவனைப் பார்த்து ஏங்கும் பிச்சைக்காரன் போல் நிற்க வேண்டும். யார் கண்டது .. நாளையே அவன் என்னிடம், "எனது இந்த இனிய வாழ்க்கைக்கு நீதான் காரணம். உனக்கு நான் கட்டாயம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றும் சொல்லலாம்! ம்ம் .. ம்.. இது அதிகம் .. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது. நான் ஓட்டாண்டியாவது, மரியாதையை இழப்பது .. இவைகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி - இந்த மனிதன் சாக வேண்டும்.

இருண்ட இரவு. கடிகாரம் மூன்று மணியடித்தது.

வங்கியாளர் மிக உன்னிப்பாகக் கவனித்தார். வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். ஜன்னல் வழியே உறைந்து நின்றிருந்த மரங்களின் அசைவுச் சத்தம் மிக மெல்லியதாகக் கேட்டது. எந்த விதச் சத்தமும் இன்றி 15 ஆண்டுகளாகத் திறக்காமலிருந்த தோட்ட வீட்டின் சாவியை இருப்புப் பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்தார். மேல் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டு விட்டு வெளியே வந்தார். தோட்டம் மிகவும் இருளடர்ந்திருந்தது. மெல்லியதாக மழை பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்து ஊடுருவும் காற்று மரங்களை வெறுமனே இருக்க விடாது அசைத்துக் கொண்டிருந்தன. வங்கியாளரின் கண்களுக்குத் தோட்டமோ, அங்கங்கே இருந்த வெண்ணிறச் சிலைகளோ, மரங்களோ .. எதுவுமே தெரியவில்லை. தோட்ட வீட்டின் அருகே வந்து தோட்டக்காரன் பெயரைச் சொல்லி இரு முறை மெல்ல அழைத்தார். பதிலேதுமில்லை. குளிருக்கும், மழைக்கும் பயந்து அவன் சமையலறையிலோ வேறெங்கோ படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பான். நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்து விட்டால், எல்லோருக்கும் முதல் சந்தேகம் தோட்டக்காரன் மேல்தான் வரும் என்று நினைத்துக் கொண்டார்.

இரவில் தட்டுத் தடுமாறி நடந்து, தோட்ட வீட்டிற்குப் போய் இருகி மூடிப்போயிருந்த கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்து மெல்ல உள்ளே நுழைந்தார். குறுகிய பாதை .. நல்ல இருட்டு .. ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தார். எங்கும் அரவம் ஏதுமில்லை. நிசப்தம் .. ஒரு படுக்கை .. காலியாகக் கிடந்தது. உடைகள் எல்லாம் அந்தக் கட்டிலின் மீது கிடந்தன. இரும்பு அடுப்பு ஒன்று அங்கு ஓர் ஓரத்தில் இருந்தது. அங்கிருந்து பார்த்த போது 'கைதி'யின் அறை மூடி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த சீல் உடைக்கப்படாமல் இருந்தது தெரிந்தது.

பற்ற வைத்த தீக்குச்சி அணைந்தது. வயதான வங்கியாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மெல்ல 'கைதி'யின் அறைப்பக்கம் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். கைதியின் அறைக்குள் பெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளி மங்கலாகப் பரவியிருந்தது. கைதி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். தலை, முதுகு, கைகள் இவைகள் மட்டுமே வங்கியாளருக்குத் தெரிந்தன. விரிந்து கிடந்த பல புத்தகங்கள் மேசை, நாற்காலி, கம்பளம் என்று எல்லாவிடத்திலும் விரவிக் கிடந்தன. வங்கியாளர் ஜன்னல் வழியே தன் கைதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்களாயிற்று. ஆனால் கைதியின் உடம்பில் எந்த மாற்றமுமில்லை. 15 ஆண்டின் தனிமைச் சிறை எந்த வித அசைவுமின்றி அவரை அப்படியே இருக்கக் கற்றுக் கொடுத்திருந்தது போலும்!

வங்கியாளர் மெல்ல ஜன்னலின் கண்ணாடி மேல் மெல்லத் தட்டினார். கைதியிடமிருந்து எந்த மாற்றமுமில்லை. வங்கியாளர் மெல்ல பூட்டின் மேலிருந்த சீல்களை மெல்லப் பிரிந்து, சாவியை கதவினுள் நுழைத்தார். இப்போதும் கைதியிடம் எந்த மாற்றமுமில்லை. மெல்லக் கதவைத் திறந்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பூட்டிய கதவின் பூட்டு ... கடிதாயிருந்தது. திறந்த கதவு கிறீச்சிட்டது. வங்கியாளர் ஆச்சரியமான ஒரு கத்தலையும், தன்னை நோக்கி ஓடிவரும் கைதியின் காலடி ஓசையையும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மூன்று நீண்ட நிமிடங்கள் .. மெளனமாகக் கழிந்தன. முன்பு போலவே இப்போதும் மெளனம் தொடர்ந்தது. வங்கியாளர் துணிந்து அறைக்குள் நுழைந்தார்.

மேசையின் முன்னால் அந்த மனிதன். ஆனாலும் பின்னாலிலிருந்து அவனைப் பார்க்க சாதாரண மனிதனாகத் தெரியவில்லை. வெறும் எலும்புக் கூடு; தோல்கள் வற்றி ஒட்டிப் போயிருந்தது. பெண்ணின் முடி போல் முடி நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட, கரடு முரடான தாடி. முகமெல்லாம் ஓளி படராது மஞ்சள் பூத்துக் காய்ந்திருந்தது. கன்னங்கள் ஒட்டிக் குழிந்து போயிருந்தன. தன் தலையைக் கைகளில் தாங்கிப் பிடித்தவாறு இருந்ததைப் பார்க்கும்போதே வேதனையே மீதியாயிருந்தது. முடியெல்லாம் கருமையிழந்து வெளிறிப் போய் கிடந்தது. முதுமையடைந்து சோர்ந்திருந்த அந்த மனிதனைப் பார்க்கும் யாரும் அவருக்கு வயது வெறும் நாற்பதுதான் என்றால் நம்பவே மாட்டார்கள். மேசையில், குனிந்திருந்த முகத்திற்கு எதிர்த்தாற்போல், கைகளுக்கருகே ஒரு தாள் மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது. மெல்லிய சின்ன எழுத்துகளால் நிறைந்திருந்தது. 'பாவப்பட்ட மனுஷன்'. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். எத்தனை .. எத்தனை கனவுகளோ? இவனை இப்படியே தூக்கிக் கொண்டு போய், கட்டிலில் கிடத்தி, தலையணையை வைத்து அழித்துக் கொன்றால் யாருக்கு என்ன வித்தியாசம் தெரியும்? இயற்கையான சாவு என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். எதற்கும் அதற்கு முன்பு அவன் எழுதியுள்ள கடிதத்தைப் படித்துப் பார்ப்போம் என்று வங்கியாளர் கடிதத்தை மெல்ல எடுத்தார். கைதியிடமிருந்து எந்த அசைவும் இல்லை. வங்கியாளர் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

நாளை ... இரவு 12 மணி .. எனக்கு என் விடுதலை கிடைத்து விடும். மக்களோடு மக்களாய் பழக முடியும். ஆனாலும் இந்த அறையை விட்டு வெளியேறி, உதயமாகும் சூரியனைப் பார்ப்பதற்கு முன் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை. என் முழு மனதோடும், உணர்வோடும் என்னைத் தொடர்ந்து கண்காணித்து வரும் கடவுளின் சாட்சியோடு நான் சொல்ல விரும்புவது ... நல்லூழ் என்றெல்லாம் உங்கள் புத்தகங்கள் எல்லாம் விளிக்கும் சுதந்திரம், வாழ்க்கை, உடல் நலம் போன்ற எதுவும் இப்போது எனக்குப் பெரிதில்லை.

பதினைந்து ஆண்டுகள் வாழ்க்கையை, உலக வாழ்வை ஆழ்ந்து படித்து விட்டேன். நான் பதினைந்து ஆண்டுகளும் உலகத்தைப் பார்க்கவில்லை; மக்களுடன் பழகவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகங்கள் மூலம் இனிமையான ஒயினை ருசித்தேன்; பாடல்களைப் பாடினேன்; காட்டில் திரியும் மானையும் மாட்டையும் வேட்டையாடினேன்; பெண்களைக் காதலித்தேன் ... அதுவும், மிக அழகான பெண்கள் .. தெய்வீகப் பெண்கள் ..உங்கள் கவிஞர்களின் உன்னதக் கற்பனையில் படைக்கப்பட்ட பெண்கள் ... என்னிடம் இரவில் வந்து என் காதுகளில் அழகானவைகளை உச்சரிக்க, நானோ அதன் இன்பத் தலைச் சுற்றலில் மகிழ்ந்தேன். உங்கள் நூல்களின் வழியே நான் எல்ப்ரஸ், வெள்ளை மலை (Elbruz, Mount Blanc) போன்ற உயர்ந்த மலைகளின் சிகரங்களுக்கு ஏறிப் போனேன்; அங்கிருந்து உதயமாகும் சூரியனையும், மாலையில் மயங்கும் சூரியனையும் பார்த்துக் களித்தேன்; கடலும் மலைகளும் ஒளியில் சிலிர்த்துத் தெரிந்தன. அந்த மலை உச்சிகளில் என் தலைக்கு மேல் ஒளிர்ந்த மின்னல்களையும், விலகிப் போகும் மேகக்கூட்டங்களையும் ஆசைதீரப் பார்த்தேன்; பச்சைப் பசும் வயல், தோட்டங்கள், நதிகள், ஏரிகள், விரிந்து பரந்த நகரங்கள் எல்லாம் என் கண்முன் விரிந்தன. எங்கு எதிலும் இசை பொங்கிப் பெருகி வருவதைக் கேட்டேன். அழகான சைத்தான்கள் கடவுளுக்கு எதிராக என்னிடம் முணு முணுத்ததைக் கேட்டேன் ... உங்கள் நூல்கள் மூலம் அளவில்லாத ஆழத்தையும் பார்த்தேன்; விநோதங்கள் தெரிந்தன; எரிந்த நகரங்கள் .. புதிய மதங்கள் புதிய நிலங்களை வெல்வது .. இவைகளையும் கண்ணுற்றேன்."

"உங்கள் நூல்கள் எனக்கு அறிவை அளித்தன. அலைக்கழியும் மனித மனது ஆண்டாண்டு காலமாய் உருவாக்கி வைத்துள்ள அனைத்தும் என் மூளையில் பொதிந்து விட்டன. உங்கள் எல்லோரையும் விட இன்று நானே புத்திசாலி ..."

"உங்கள் நூல்களை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அதோடன்றி உங்கள் உலக அறிவு, ஆசாபாசங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன். எல்லாமே மாயை; அநித்தியம்; கண்ணில் விழுந்து மண்ணில் மறையும் விழல்கள்! நீங்கள் அறிவோடும் அழகோடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு சுண்டெலி எளிதாகச் சாகடிக்கப்படுமே, அதேபோல் நீங்களும் அழிக்கப்படுவீர்கள். உங்களின் வலிமை, வரலாறு, உங்கள் அறிவின் அழிவின்மை ... எல்லாமே உறைந்து போய், உலர்ந்து போய், எரிந்து விடும்; உலகிலிருந்து மறைந்து விடும்."

"நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள். தவறான வழியில் செல்கிறீர்கள். பொய்யை மெய்யெனக் கருதி, அவலத்தை அழகென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிள் மரங்களும் ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதில் வெறும் தவளைகளையும், ஓணான்களையும் காய்க்க ஆரம்பித்தால் ... ரோஜாப் பூக்களிடமிருந்து குதிரையின் அழுகிய வியர்வை நாற்றம் வந்தால் ... நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இதைப் போலவே நானும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இதைப் போலவே, மோட்சத்திற்காக இந்த உலக வாழ்வைப் பணயம் வைத்த நான் உங்களைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை.

எனது இந்த எண்ணத்தை என் செயலிலும் காண்பிக்க விரும்புகிறேன். கையில் கிடைத்தால் பரவசம் என்று நான் நினைத்த இருபது லட்சத்தை இப்போது நான் விஷமென்று வெறுக்கிறேன். எந்தப் பணமும் எனக்கு வேண்டியதில்லை. அதற்கான என் உரிமையை நான் ரத்து செய்கிறேன். அதுவும் என் விடுதலைக்கான நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக நான் இந்த இடத்தை விட்டு வெளியேறி என் ஒப்பந்தத்தை முறித்து விடுவேன்”

வழக்கறிஞரின் கடிதத்தை வாசித்ததும், வங்கியாளர் அந்தக் கடிதத்தை மேசை மேல் வைத்து விட்டு, வழக்கறிஞரின் தலையில் குனிந்து முத்தமிட்டு ... விசும்பத் தொடங்கினார். அவருக்கு ஏதும் புரியவில்லை. வணிகச் சந்தையில் தன் தவறுகளால் பல முறை பணத்தை இழந்தபோதும் கூட அவர் தன்னை இந்த அளவு வெறுத்ததில்லை.

வங்கியாளர் வீட்டிற்குத் திரும்பினார். தன் படுக்கையில் சாய்ந்தார். அவரின் அழுகையில் பல மணி நேரங்கள் கழிந்து கரைந்தன.

அடுத்த நாள் காலை .. பொழுது விடிந்தது. தோட்டக்காரன் ஓடோடி வந்தான். ‘வீட்டிற்குள் இருந்த கைதி ஜன்னல் வழியே ஏறிக் குதித்து தப்பித்து விட்டான்’ என்றான். வங்கியாளர் தன் வேலையாட்களுடன் தோட்ட வீட்டிற்கு விரைந்து சென்று, கைதி தப்பியதை உறுதி செய்து கொண்டார். தேவையில்லாத குழப்பம் வரும் என்பதற்காக “கைதி” எழுதிய கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வந்து, தன் சேமிப்பறைக்குள் வைத்து பாதுகாப்பாகப் பூட்டினார்.




*

9 comments:

  1. நல்ல சிறுகதை. அருமையான மொழி பெயர்ப்பு. உங்களின் தமிழ் ஆளுமை பொறாமை கொள்ள வைக்கிறது. இலக்கியம், மொழி பெயர்ப்பு, இறை மறுப்பு, போட்டோ கலை என்று உங்களின் பல பரிணாமங்கள், இப்படி தான் வாழவேண்டும் என்று, வயதில் சிறியவனான எனக்கு பல சமயங்களில் தோன்ற வைக்கும். இன்றும் அப்படியே. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தருமி,

    அருமையான கதை. ரொம்ப இயல்பாக ஓடும் எழுத்து நடை. அப்படியே உள்வாங்கி சொந்தமா எழுதித் தருகிற மாதிரியான ஒரு வாசிப்பு.

    இந்த கதை அழுத்தமா எனக்குள்ளர நான் பொதிச்சு வைச்சிருக்கிற சில உண்மைகளை ‘ஆமாம், சரியே’ என்று எடுத்துக் கூறுது.

    தொடர்ந்து கலக்குங்க, தருமி! நன்றி...

    ReplyDelete
  3. உங்களுக்கு நல்ல மொழிபெயர்ப்பு எளியதாக வருகிறது.

    தமிழ் இயல்பாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்த மாதிரியே தெரியவில்லை. அதுதான் மொழிபெயர்ப்பின் வெற்றி.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மொழிபெயர்ப்புக்கு ரொம்ப நன்றி. என்னைப் போல ஆங்கிலம் வாசிக்கத்தெரியாத அன்பர்களுக்கு மொழிபெயர்ப்புதான் ரொம்ப உதவும். நல்ல சிறுகதை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. அருமையான கதை ஐயா. அதை அப்படியே எடுத்துத் தந்த உங்கள் மொழியாக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. முத்துலஷ்மி,
    கணேசன்,
    தெக்ஸ்,
    shakiribnu,
    சித்திரைவீதிக்காரன்,
    குமரன் ...

    ......... அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. "உங்கள் நூல்கள் எனக்கு அறிவை அளித்தன. அலைக்கழியும் மனித மனது ஆண்டாண்டு காலமாய் உருவாக்கி வைத்துள்ள அனைத்தும் என் மூளையில் பொதிந்து விட்டன. உங்கள் எல்லோரையும்
    விட இன்று நானே புத்திசாலி ..."

    "உங்கள் நூல்களை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அதோடன்றி உங்கள் உலக அறிவு, ஆசாபாசங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன். எல்லாமே மாயை; அநித்தியம்; கண்ணில் விழுந்து
    மண்ணில் மறையும் விழல்கள்! நீங்கள் அறிவோடும் அழகோடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு சுண்டெலி எளிதாகச் சாகடிக்கப்படுமே, அதேபோல் நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.
    உங்களின் வலிமை, வரலாறு, உங்கள் அறிவின் அழிவின்மை ... எல்லாமே உறைந்து போய், உலர்ந்து போய், எரிந்து விடும்; உலகிலிருந்து மறைந்து விடும்."

    "நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள். தவறான வழியில் செல்கிறீர்கள். பொய்யை மெய்யெனக் கருதி, அவலத்தை அழகென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிள் மரங்களும்
    ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதில் வெறும் தவளைகளையும், ஓணான்களையும் காய்க்க ஆரம்பித்தால் ... ரோஜாப் பூக்களிடமிருந்து குதிரையின் அழுகிய வியர்வை நாற்றம்
    வந்தால் ... நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இதைப் போலவே நானும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இதைப் போலவே, மோட்சத்திற்காக இந்த உலக வாழ்வைப்
    பணயம் வைத்த நான் உங்களைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை.


    ---
    அருமையான கதை.
    மொழிபெயர்ப்புக்கு நன்றி
    SIR.

    ReplyDelete
  8. தோண்டி எடுத்துப் படித்தமைக்கு நன்றி, மகேஷ்.

    ReplyDelete