Wednesday, March 21, 2012

559. அமெரிக்காவில் என் முதல் நாள் … ("அதீதம்" இணைய இதழில் ..)

*
அமெரிக்காவில் என் முதல் நாள் …

தருமி

*
மார்ச் II
"அதீதம்" இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.
Date: Tuesday, March 13th, 2012


*


ஆசையிருக்கு தாசில் பண்ண; ஆனா அதுக்குப் பிறகு எதுக்கோதான் அதிர்ஷ்டம் இருக்குன்னு இருக்குமே அதே மாதிரி ஆச்சு நம்ம பிழைப்பு. பல ஆண்டுகளாக முயன்றும் அமெரிக்கா போகும் வாய்ப்பு வாய்க்காமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் அந்த வாய்ப்பும் வந்தது. வந்ததுதான் வந்ததே கொஞ்சம் நல்ல நேரத்தில், காலாகாலத்தில் வந்திருக்ககூடாதா? ஒரு அக்டோபர் மாதம் நெஞ்சு வலி வந்து .. இதய அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நிலையில் .. ..சரி ..சரி.. அந்தக் கதையைப் பிறகு பார்த்துக்கலாம். எப்படியோ புறப்பட்டு போயாச்சி. பத்திரமா அங்க போயும் இறங்கியாச்சி. சேரவேண்டிய இடத்துக்கும் சேர்ந்தாச்சு.

உடன் உறைவாளர்களாக இரு சீனர்கள்; ஒரு ஆண்; ஒரு பெண். இருவரோடும் பேசுவதற்குள் மூக்கால் மட்டுமல்ல வேறு எது எதோவின் வழியாகவும் தண்ணீர் குடிக்க வேண்டியதாகப் போச்சு. அவர்கள் ஆங்கிலத்திறமை அந்த அளவு இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்தார்களாதலால் கடை கண்ணி விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தது. மாலையில் போய்ச்சேர்ந்த நான் அடுத்த நாள் ரொட்டி, பழம் அது இதுன்னு காலையுணவை முடித்ததும், ‘ஆகிவந்த’ விஷயம் இல்லாமல் கஷ்டமாகப் போச்சு. என்ன .. காபி குடிக்காம பல விஷயம் தடை பட்டது. காபி குடிச்சே ஆகணும் அப்டின்னு நினச்சி மக்கள் கிட்ட கேட்டேன். கடை எங்க இருக்குன்னு சொன்னாங்க. சரி, போய் நம்ம முதல் போணியை ஆரம்பிச்சுருவோம்னு அவர்கள் சொன்ன கடைக்குப் போனேன்.

கடையின் கவுண்டரில் ஒரு வயசான அம்மா உட்காந்திருந்தது. ரொம்ப நாள் பழகியவன் போல் கடைக்குள் நேரே நுழைந்து பால் எங்கே இருக்கும்னு பார்க்கலாம்னு தேடினேன். அது ஏன் நமக்கெல்லாருக்கும் – அல்லது எனக்கு மட்டும்தான் அப்படியா? – நாம ஒரு இடத்துக்குப் புதுசுன்னு காண்பிச்சுக்கிறதில் தயக்கம்? மூணு சுத்து சுத்தியும் காணவில்லை. சரி ..இனியும் நடிக்க வேண்டாம்னு நேரே அந்த அம்மா கிட்ட போனேன். ஒரு இளவயதுக்காரர் பில்லுக்குப் பணம் செலுத்திக்கொண்டிருந்தார். கொஞ்சம் விலகி நின்றேன். ஆனால் அந்த அம்மா என்ன வேணும்னாங்க. பால் வேணும்னு சொன்னேன். நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் கேட்டாங்க. நான் நம்மால முடிஞ்ச அளவு ‘milk’ அப்டின்றதை ஸ்டைலா சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம் .. இப்பவும் நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் அடுத்த தடவை நான் முயற்சிப்பதற்குள் அருகே நின்ற இளைஞர் அவருக்குப் பால் வேண்டுமாம் என்றார். எனக்கென்னவோ நான் milk என்று எப்படி சொன்னேனோ அதே போல்தான் அவரும் சொன்னதாகத் தோன்றியது. ஆனால் இப்போ அந்த பெரியம்மாவிற்கு டக்குன்னு புரிஞ்சி போச்சு. அதோன்னு பால் இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க.

பாலை வாங்கிட்டு வந்து காபி எல்லாம் போட்டு குடிச்ச கதை இருக்கட்டும். ஆனா மனசு ரொம்பவே துவண்டு போச்சு. ஏதோ வேலை பார்க்கிற இடத்திலெல்லாம் ஏதோ கொஞ்சம் இங்கிலிபீசு நல்லாத்தான் பேசுற நினைப்புல இருந்த ஆளு நானு. இங்க என்னடான்னு ஒரு சின்ன சாதாரணமான வார்த்தை – பால். இதை முறையாக அவர்களுக்குப் புரிவது போல் சொல்லத் தெரியவில்லையேன்னு என்னை நானே நொந்து கொண்டேன்.

அமெரிக்காவில் நான் முதல் முதலாக வெளியே வந்து இப்படி தோல்வியைத் தழுவியது முதலில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனசைத் தேத்திக் கொண்டேன் – என்னதான் இருந்தாலும் இது என்ன, நம்ம தாய்மொழியா என்று. முதல் நிகழ்வு இப்படி ‘சோகமாக’ ஆனதென்றால், அன்றே நடந்த அடுத்த நிகழ்வு மிக்க ஆச்சரியத்தை அளித்தது.

காலை இப்படிப் போனதென்றால் மாலையில் சீன நண்பர்களிடம் தபால் நிலையம் எங்கு என்று கேட்கப் போய் தபால் என்றால் என்னவென்றெல்லாம் வகுப்பு எடுக்கும் நிலைக்கும், நடன அசைவுகளில் மட்டுமே அவர்களுக்கு விஷயங்களை விளக்கியாக வேண்டியதாயிருந்ததாலும் எனக்கும் நடனத்துக்கும் எந்தவித உறவு முறையுமில்லாமல் இருந்ததாலும் மற்றவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு தேடிப்போனேன்.

நான் இருந்தது ஒரு சின்ன கிராமம்தான். ஒரு பெரிய கல்லூரியும் அதைச் சேர்ந்த கட்டிடங்களுமே அதிகமாக இருந்த கிராமம். எனவே தபால் நிலையம் எங்காவது ஒரு ஓரத்தில் சின்னதாக இருக்குமென்ற நினைப்பில் அங்கங்கே கேட்டு போனேன். அதை அடைந்த போதோ பெரிய ஆச்சரியம். ஏனெனில் மிக அழகான கல்கட்டிடம் ஒன்றுதான் தபால் நிலையம் என்று தெரிந்தபோது ஆச்சரியமாகவும், மிக பிரமிப்பாகவும் இருந்தது. முகப்பு – façade – பிரமாண்டமாக அழகாக இருந்தது. சரி ..சரி.. இருப்பது பணக்கார அமெரிக்கா அல்லவா என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். இரண்டு கவுண்டர்கள் இருந்தன. நேரே ஒரு கவுண்டருக்குப் போகப் போனேன். ஏதோ தடை செய்யவே நின்று நிதானித்தேன். நல்ல வேளை அடுத்த மூக்குடைப்பிலிருந்து தப்பினேன். ஏனென்றால், ஒவ்வொரு கவுண்டருக்கும் முன்பு தரையில் ஒரு மஞ்சள் கோடு; நாம் அதைத் தாண்டி நிற்பது முறையில்லை. அங்கு நின்று தாமதித்து, கவுண்டரில் இருப்பவர் நம்மைப் பார்த்து yes என்று சொன்னபின்தான் நாம் கவுண்டருக்குச் செல்ல வேண்டும் போலும். நல்லவேளை நிதானித்ததில் அது புரிந்து என் முறைக்குக் காத்திருந்தேன்.

என் முறை வந்தது. கவுண்டரில் இருந்தது ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க இளம்பெண். அழகான இளஞ்சிரிப்போடு வரவேற்றாள். கொண்டு போயிருந்த பார்சலைக் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்துவிட்டு $5.20 என்றாள். எனக்கு உதறல் எடுத்துவிட்டது. காலையில் பால்; மாலையில் சில்லறைத் தொல்லையா என்று நினைத்துக் கொண்டேன். நம்ம ஊரில் இந்த மாதிரி இருந்தால் அந்த 20 பைசா சில்லறை இல்லாமல் ஒரு தபால்நிலைய கவுண்டரில் நின்றால் நம்ம ஊரு ஊழியர் என்ன சொல்வார்; எப்படி சில்லறைக்காக நம்மை விரட்டி அடிப்பார் என்ற நினைப்பில், Sorry, I don’t have change என்று தயங்கியபடி 10 டாலர் தாளை நீட்டினேன். நோ ப்ராப்ளம் என்று சிரிப்பு மாறாமல் சொல்லி மீதி சில்லறையைக் கொடுத்த போது அந்தப் பெண் எனக்கு ஒரு தேவதையாகவே தோன்றினாள். அங்கு இருந்த நாட்களில் இந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. அது பேருந்தாக இருக்கட்டும், வங்கியாக இருக்கட்டும்; என் அனுபவத்தில் எல்லாமே இனிமையான நிகழ்வுகளாகவே இருந்தன.பொதுமக்களிடம் அரசு. வங்கி, மற்றும் பொது அலுவலர்கள் எல்லோருமே சிரித்த முகத்தோடு இருந்ததைக் கண்டேன்.

என் மகள்களுக்கு நான் தினமும் என் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி மெயில் அனுப்பி வந்தேன். என் முதல் நாள் நிகழ்வை எழுதி அனுப்பும்போது, அந்த தபால்நிலைய நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது: Unlike our public servants who carry the pain of their piles on their faces, these people here are with all smiles.




*

12 comments:

  1. அய்யா உங்க மில்க் பிடிச்சு இருந்தது…சில்லறை மேட்டர் இதை போய் பெரிசு படித்து நம்மாள்கல ஒரு சில்லறை பசங்களாக்கிட்டீங்க .. வருத்தமா தான் இருக்கு… இங்கு புன்னகை பூக்க வழியில்லை. ...

    ReplyDelete
  2. தெளிவா படிச்சு இருக்கேனா..?

    ReplyDelete
  3. இறுதி வரி மிக அருமை.


    மீண்டும் அமெரிக்க வர வாய்ய்ப்பு கிடைத்தால் அதுவும் நீயூஜெர்ஸிக்கு வரும் வாய்ய்பு கிடைத்தால் கண்டிப்பாக என் வீட்டிற்கு வாருங்கள்

    ReplyDelete
  4. அமெரிக்காவா, கொக்கா?

    ReplyDelete
  5. தருமி ஐயா, அருமையான நடை.

    ஒரு கேள்வி. என்ன காரியத்துக்காக உங்கள் அமெரிக்க பயணம் என்று பகிர்ந்து கொள்ள முடியுமா? conference? சின்ன கிராமம் பெரிய கல்லூரி என்று சொல்வதை பார்த்தால் ஒரு வேலை பாடம் எடுக்கவோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. //தெளிவா படிச்சு இருக்கேனா..?//

    ஓவரா ...!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ganesan,
    it was a cultural exchange program between our college and a college in Oberlin. 100 days in the dream world!!

    ReplyDelete
  9. வாங்க சார், உயிருடன் இருக்கும்போதே சொர்க்கதிற்கு சென்று வென்று வந்து விட்டீர்கள் போலிருக்குதே!!!!

    மறுமை சொர்க்கவாசிகள் எல்லாம் தங்களையும் பிள்ளைகளையும் சாத்தான் நாட்டுக்கு சொர்க்கமாக நினைத்து அமைதியாக வாழ செல்ல நினைக்கும் போது, அந்த சாத்தான் நாடு உண்மையில் சொர்க்கம் தான்.

    அமெரிக்காவில் எல்லா தளங்களில் “குறைவான அரசாங்கம்” என்று இருப்பதால் அதன் ஊழியர்கள் சிரிக்கின்றார்கள், சிரிக்காமல் சிடுசிடுத்தால் நமக்கு பழகிபோயிருக்கும் ஆனால் அந்த வெள்ளகாரன் யாங்கி கவுபாய் கலாச்சாரத்தின் படி துப்பாக்கி எடுத்து ஓரே ஒரு சூடுதான். வேறு சொர்க்கத்திற்கு அல்லது நரகதிற்கு செல்ல வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. நரகத்திற்கே போவோமே .. A.R.ரஹ்மான் போன்ற இசைக் கலைஞர்கள், மற்ற கலைஞர்கள் எல்லோரும் அங்கேதானே இருப்பார்கள். அங்கேயே போவோம். any objection?

    ReplyDelete
  11. ஆங்கிலம் பேச இயலாத போது மனம் துவண்டுதான் போனது தாங்கள் சொன்னது போல்

    ஆனால் 1996 ஆல் எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர், after all it is foreign language, கவலைபடாதீர், 17 நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் லத்தீனும், ஈப்ரு மொழியில் பேசுவது நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவது எப்படி பெருமையான விஷயமாக நினைத்து பேசுகிறோமோ அதுபோல இருந்தது, பிறகுதான் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று மொழியியல் அறிஞர்களில் முயற்சியால் ஆங்கிலம் இங்கிலாந்தின் மொழியாக உலக மொழியாக உலவுகிறது என்றார்.

    வந்தேறிகளின் நாடான அமெரிக்காவில் யார் எப்படி உச்சரிப்பார்கள் என்பது யாருக்கு தெரியும்

    விடுங்கள் அய்யா

    ReplyDelete
  12. Avargal Unmaigal,

    Morris Plains வர்ரதாகத்தான் இருந்தேன்; வரமுடியாம போச்சு

    :-(

    ReplyDelete