Thursday, August 02, 2012

583. சிவகுமார்… எங்கேடா இருக்கே? – காணாமல் போன நண்பர்கள் (1)




*

இந்த வார அதீதம் இணைய இதழில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

பதிப்பித்தோருக்கு மிக்க நன்றி.

*



*
1952-ல் ...........

இந்தக் கதையை ஆங்கிலத்தில் அப்போதே எழுதியிருக்கிறேன். பெயரைத்தான் கொஞ்சம் மாற்றிவிட்டேன் போலும். முதலில் எழுதியதில் தான் நண்பனின் பெயரைச் சரியாகச் சொல்லியிருந்திருக்கிறேன். அதையே இங்கு மறுபடி மாற்றி விடுகிறேன். நண்பனின் பெயர் சூர்யகுமார் இல்லை .. சிவகுமார்.



 சென்ற வாரம் தாராசிங் இறந்த போது தினசரிகளில் வந்த செய்தி இந்த வாரம் இறந்த இந்தியாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ் கன்னாவிற்கு வந்ததை விட அதிகமாக இருந்தது எனக்கு ஒரு ஆச்சரியம்தான் — எப்படி தாராசிங்கிற்கு இவ்வளவு கவரேஜ் என்று.

இந்த இரு செய்திகளும் வாழ்க்கையில் பழைய பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்க வைத்தன. ராஜேஷ் கன்னா ’ஆராதனா’ என்ற படத்தில் போட்டு பிரபலமான கலர் குர்தாக்களை (தைரியமாக) அணிந்து ஊர் சுற்றியது, அதனால் நடந்த ஒரு சண்டையும் நினைவிற்கு வருகிறது. (இந்தப் பதிவில் ‘அந்தச் சண்டை’ இருக்கிறது!) தாராசிங் நினைவுகள் அதற்கு ரொம்ப முந்தியது. முதல் நிகழ்வு கல்லூரியில் வேலை பார்த்த போது, எழுபதுகளின் ஆரம்பத்தில் நடந்தது. தாராசிங் காலம் நான் மூன்றாவது, நான்காவது வகுப்பு படித்த போது நடந்தது.

மூன்றாம், நான்காம் வகுப்பு படித்த போது தாராசிங் பெயர் எங்கள் மத்தியில் பிரபலம். அப்போது மதுரையில் இந்த பயில்வான்களின் போட்டிப் பந்தயங்கள் நடைபெற்று வந்தன. கிங்காங், சிகப்புத் தேள் … இப்படிப் பல பெயர்கள். இப்போது WWF மாதிரி அப்போ இது!

எங்கள் பள்ளியில் ஒரு நாள் திடீரென்று மதியத்தில் பயங்கர சலசலப்பு. எல்லோரும் பக்கத்திலிருக்கும் பெரிய மாதா கோவிலுக்குப் படையெடுத்தார்கள். மாணவர்கள் மட்டுமல்ல … ஆசிரியர்களும் தான். எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களையும் கூட்டிக் கொண்டு ஓடினார். கோவில் பூட்டியிருந்தது. ஆனால் ஜன்னல் வழியே நாங்கள் பார்த்த போது ‘செந்தேள்’ – இவர் ஒரு அயல்நாட்டு பயில்வான் – மட்டும் கோவிலுக்குள் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அவர் ஆஸ்த்ரேலியா நாட்டுக்காரர்னு சொன்னதாக் ஞாபகம். அவரும் வந்துட்டு போனார்.

ஆனால் தொடர் கதையாக அந்தப் பயில்வான்களின் சண்டைகள் பற்றி பெரியவர்கள் வீட்டில் சொன்னதையெல்லாம் வைத்து மாணவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பன் ‘கிடுக்கிப் பிடி’ என்று ஒன்று சொல்லிக் கொடுத்தான். என் பின்னால் நின்றுகொண்டு, என் கைகளுக்குக் கீழே அவன் கைகளைக் கொண்டு போய் … அப்படியே அவன் தன் கைகளை என் கழுத்துக்குப் பின்னால் சேர்த்து பிடித்துக் கொண்டான். என்னைத் தப்பிக்கச் சொன்னான். முயன்றேன். முடியவில்லை. பாடம் நடத்தினான். அப்படியே குனிந்து பின்னால் இருப்பவனை முதுகுக்கு மேல் தூக்கி அந்தப் பக்கம் டமார்னு போடணும் என்றான். இப்போது அவன் அந்தப் பிடியை என்னிடம் போட மாட்டேன் என்று சொல்லி விட்டான். ட்ரெய்லருக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்காமல் போனது.

 என் வகுப்பில் என் நண்பன் சிவகுமார். எங்கள் வீடும் அவன் வீடும் ஒரே பக்கம் இருந்தது. இருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து ஒன்றாகத் திரும்பி போவோம். நல்ல நண்பன். அவன் அம்மா ஒரு பள்ளியின் ஆசிரியரோ .. தலைமை ஆசிரியரோ தெரியவில்லை. ஆனால் குடை பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டைத் தாண்டி போவார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் தான். டீச்சராச்சே …!

சிவகுமார் மட்டுமல்ல அவனது அம்மாவும் கொஞ்சம் குட்டைதான். சிவகுமாரிடம் நான் படித்த ‘புதுப் பாடத்தை’ நடத்திக் காண்பிக்க ஆசை வந்தது. நான் அவனைக் கிடுக்கிப் பிடியில் இறுக்கிப் பிடித்தேன். தப்பிக்கச் சொன்னேன். அவனால் முடியவில்லை. அடுத்து அவன் என்னைப் பிடித்தான். என்னை விட அவன் குட்டை என்பதால் என்னால் அவனை என் முதுகுக்குப் பின்னால் தூக்கி முன்னால் டொம் என்று போட முடிந்தது. ஆனாலும் பயல் ரொம்பவே டொமால் ஆகிவிட்டான். பாவி … இப்படியா விழுவான். தூக்கிப் போட்டதும் அப்படியே விழுந்து தொலைத்தான். நல்ல அடி .. அவனுக்குக் கொஞ்சம் அழுகை; எனக்கு நிறைய சிரிப்பு. நானோ சிரிச்சிக்கிட்டே வெற்றிக் களிப்பில் இருந்துட்டேன்.

அதுக்குப் பிறகு பள்ளி அன்று முடியும் வரை பேசினான். ஆனால் .. கள்ளப்பயல் … வீட்டிற்குப் போனதும் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அடுத்த நாள் அவர்கள் அம்மா பள்ளிக் கூடத்திற்கே வந்து விட்டார்கள் சிவகுமார் அவன் அம்மா என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னான். போனேன். . நன்கு திட்டினார்கள். ஏன் அவனை அப்படி கீழே தள்ளினாய் என்று கடிந்து கொண்டார்கள். அதைவிட உலகத்திலேயே அதிகம் பயப்படும் தண்டனை ஒன்றைச் சொன்னார்கள்; அதாவது இப்படியெல்லாம் செய்தால் என் அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்றார்கள். புளியைக் கரைத்தது.

அன்றிலிருந்து சிவகுமாரிடம் நான் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வாழ்க்கையில் உடைந்த முதல் நட்பு இதுதான் … ஆனால் இன்னும் நானும் அவனும் நட்பாயிருந்தது; நாங்கள் ’குஸ்தி’ போட்ட அந்த வேப்ப மரத்தடி; ஓடிப்போய் கோவிலுக்குள் சேர்ந்து எட்டிப் பார்த்தது … எல்லாமே பசுமையாக நினைவில் இருக்கிறது.

இப்போதும் தூய மரியன்னை கோவிலுக்குப் போனால் (கோவிலுக்குப் போற அந்த நல்ல காரியம்லாம் அடிக்கடி செய்வோம்ல .. தங்க்ஸூக்கு ட்ரைவர் வேலை பார்க்கும் போது ....) அந்தக் கோவிலைச் சுற்றி வருவது வழக்கம். அந்த மரம், காம்பவுன்ட் சுவர் இப்போது இல்லை.  ஆனால் நினைவுகளில் அவைகள் இன்னும் இருக்கின்றன!


சிவகுமார்… எங்கேடா இருக்கே?



*





 

10 comments:

  1. //Will you be able to recognise him//

    no chance !! அறுபது வருஷம் ...

    ReplyDelete
  2. இனிய பழைய நினைவுகள்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. தீனா தானா,

    நன்றி

    ReplyDelete
  4. பால்யக் கால நினைவுகள் காதலியோடு கை கோர்த்து இருக்கும் சுகத்தை விட அதிக சுகம் தருபவை . நெஜமாவே சந்திக்கவே இல்லையா அப்புறம் .. இந்த பேஸ்புக் காலத்தில் அவரை கண்டுப் பிடிப்பது ஈசி தான் ..

    அறுபது வருசமா. சான்சே இல்லை .. என்னுடைய வயதவைவிட பன்மடங்கு அதிக காலம் .. !!! இப்படியான பகிர்வுகளை படிக்கும் போது அதன் மீது ஈர்ப்பு வந்துவிடுகின்றது .. !!!

    தாராசிங்குக்கு ஊடகம் கொடுத்த முக்கியத்துவம் உண்மையில் நம்ப முடியாத மாற்றமே...

    ராஜேஷ் கன்னா என்னுடைய ஃபேவரைட் நடிகர். ஆனால் அவரைப் பற்றி எழுத வேண்டும் என்றுத் தோன்றவில்லை ... !!!

    ReplyDelete
  5. சாம், நான் இங்க மதுரைல தான் இருக்கேன் சாம். நீங்க எப்படி இருக்கீங்க? என்னோட இருபதாவது பர்த் டேக்கு கொடுக்கறேன்னு சொன்ன ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுங்க.

    ReplyDelete
  6. அது சரி தருமி , 70களில் நாலாவது ஐந்தாவது வகுப்பா படித்தீர்களா!!!!!!!!!
    கணக்கு சரியாயில்லையே:))
    தாரா சிங்க் எனக்கும் மிகவும் பிடிக்கும்.ராஜேஷ்கன்னா இன்னும் கொஞ்சம் கூடப் பிடிக்கும்.
    @டெல்ஃபின் ஹெல்லொ தோழி.

    ReplyDelete
  7. //70களில் நாலாவது ஐந்தாவது வகுப்பா படித்தீர்களா!!!!!!!!!//

    முதல் நிகழ்வு கல்லூரியில் வேலை பார்த்த போது, எழுபதுகளின் ஆரம்பத்தில் நடந்தது. தாராசிங் காலம் நான் மூன்றாவது, நான்காவது வகுப்பு படித்த போது நடந்தது.

    சரியாத்தானே இருக்குங்க ...?

    ReplyDelete
  8. அமர பாரதி,
    //ன்னோட இருபதாவது பர்த் டேக்கு கொடுக்கறேன்னு சொன்ன..//

    48 வருஷத்துக்கு முந்திய் ரெடியா வச்சிருந்தேன். ஏன் அப்போ வந்து வாங்கிக்கலை...?! so sad.......

    ReplyDelete
  9. இந்த வார அதீதம் இணைய இதழில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.//



    முதலில் அதீதம் இணைய இதழில் உங்கள் மலரும் நினைவு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    நட்பின் பிரிவை சொல்லும் கட்டுரை மனதை வேதனை படச்செய்து விட்டது.

    இதை படித்து உங்கள் நண்பர் உங்களுடன் இணைந்தால் மகிழ்ச்சி.
    விரைவில் நண்பர்கள் சந்திப்பு நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. hallo ji ,
    a diversion from religious posts.Write something like this.Because however much you write people are not going to chahnge.They want to be addicted to something.As long as they lack confidence in themselves they will be running after some foolish things.
    sorry, my Tamil fond is not working.So I write in English.
    Thangs ku driver velai parpathu perumaiyana vishayamthan.convey my regards to her.
    karthk amma

    ReplyDelete