Friday, November 09, 2012

604. காணாமல் போன ஒரு நண்பரைக் கண்டெடுத்து விட்டேன்....





*




*

அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மீள் பதிவு .....


*

பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின் என்று ஒரு பதிவிட்டிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மண்ணைப் பார்த்த நினைவுகளைப் பற்றி அதில் எழுதியிருந்தேன். அப்பதிவில் வேல்முருகன்என்றொரு பதிவர் தனது ஊரும் இதுவே என்றும், தானும் என்னைப் போலவே  பல ஆண்டுகளுக்கு முன்பே ஊரைப் பிரிந்ததாக பின்னூட்டமிட்டிருந்தார். எனக்குப் பெரும் ஆச்சரியம். எங்க ஊரே ரொம்பச் சின்னது. அதில் இருந்து கூட இரு பதிவர்களா என்ற ஆச்சரியம். ஆனாலும் இருவருமே மண்ணை விட்டு விலகியவர்களாக இருந்தோம்.

’ஏலேய்வைத்தி! நல்லா இருக்கியா’ல? பதிவைப் போட்டதும் வேல் முருகனிடம் என் ஐயத்தைக் கேட்டேன். ஏனெனில் வைத்தியின் வீடு வேல்முருகனின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. ஒரு வேளை வேல்முருகனுக்கு வைத்தியைத் தெரிந்திருக்குமோவென நினைத்தேன். அவருக்குத் தெரியவில்லை; ஆயினும் அவரது உறவினர்கள் சிலரை எனக்காகத் தொடர்பு கொண்டு கடைசியில் வைத்தியை எனக்காகக் கண்டுபிடித்து விட்டார். அவருக்கு மிக்க நனறி.

அந்தப் பதிவில் வைத்தி ஊரை விட்டுச் சென்று காவல் துறைக்குச் சென்று விட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் வைத்தியின் தம்பிதான் காவல் துறைக்குச் சென்றிருந்திருக்கிறார். அவரது தொலைபேசி எண் வேல்முருகன் மூலமாகக் கிடைக்க, அவரிடமிருந்து வைத்தியலிங்கத்தின் எண் கிடைத்தது. நாங்கள் இணைந்து நடித்த நாடகம் என் நினைவில் நன்கு பதிந்திருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தன. வைத்தியலிங்கத்திற்கு அப்படி இருக்கக் காரணம் ஏதுமில்லை. இருப்பினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சென்னை, நந்திய பாக்கம் என்னும் பகுதியில் உள்ளார். எல்லா விவரங்களும் நினைவில் இல்லாவிட்டாலும் நாடகத்தில் நடித்ததெல்லாம் அவருக்கு நினைவில் இருந்தது.

மெல்ல ஒருமையில் அவரை அழைக்கலாமாவென்று நினைத்தேன். ஆனால் அவர் மிக மரியாதையாக என்னுடன் பேசியதால் அந்த ஆசையைத் தள்ளி வைத்து விட்டேன். மூன்று குழந்தைகள் அவருக்கு. எல்லோரும் சென்னையிலேயே இருக்கிறார்கள். முகவரி வாங்கி அவரைப் பற்றிய பதிவை அவருக்கு அனுப்பி வைத்தேன். ஏலேஎன்றெல்லாம் எழுதியிருக்கிறோமே என்று நினைத்தேன்.

இப்போது அவர் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதால் அவரளித்த முகவரிக்கு என் கடிதம் உடனே போய்ச் சேரவில்லை. பின் நான் தொடர்பு கொண்டு, வேறொரு முகவரிக்கு அனுப்பி, அவரும் தபால்காரரை விசாரித்து ...  ஒரு வழியாக ஒரு மாதம் கழித்து அவருக்கு என் தபால் நேற்று போய்ச் சேர்ந்தது. வாசித்து விட்டு வைத்தி தொலை பேசினார். குரலில் நிரம்ப மகிழ்ச்சி.

காணாமல் போயிருந்த ஒரு நண்பனோடு பேசிய மகிழ்ச்சி எனக்கு. சென்னை வரும்போது வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தார்.  ... கட்டாயம் முயற்சிக்கணும்.



* 

6 comments:

  1. /குரலில் நிரம்ப மகிழ்ச்சி.
    காணாமல் போயிருந்த ஒரு நண்பனோடு பேசிய மகிழ்ச்சி எனக்கு./

    உலகம் சிறியது என்பார்கள். இத்தனை வருடங்கள் கழித்து நண்பரைக் கண்டெடுக்க உங்கள் எழுத்து உதவியிருக்கிறது. எங்களுக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. தங்கள் மகிழ்ச்சியில் எனக்கு சிறுபங்கு, அதை தொலைபேசியிலும் பகிர்ந்து கொண்டோம். இருப்பினும் இங்கே......

    ReplyDelete
  3. தங்கள் மகிழ்ச்சியில் சிறுபங்கு, இதை தொலைபேசியிலும் பகிர்ந்து கொண்டோம் இருப்பினும் இங்கே.... மனது நெகிழ, மனிதம் தழைக்க

    ReplyDelete
  4. உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்! சிறுவயது நண்பர்களை மீண்டும் சந்திப்பது! மிக்க நன்றி!

    ReplyDelete
  5. Cherish your friendship & Happy Deepavali.

    ReplyDelete