*
அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு ....
*
பூண்டிக் கல்லூரியில் நான்காண்டுகள் விரைவாக நழுவிச் சென்றன. வித்தியாசமான வாழ்க்கை. பொதுவாகக் கல்லூரிகளில் துறை சார்ந்த நட்பே அதிகமாக இருக்கும். ஆனால் இக்கல்லூரியில் நான் வேலை பார்க்கும்போது - 1966-70 - உறவுகள் வேறுமாதிரியாக மாறியிருக்கும். காலையும் மாலையும் தஞ்சையிலிருந்து தான் பெரும்பாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வருவோம். குடிகாடு என்ற ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரைக் கிலோ மீட்டர் கல்லூரிக்கு நடக்கவேண்டும். சிலர் குடிகாட்டின் கிழக்குத் திசையிலிருந்து வருவார்கள். காலையும் மாலையும் போக்குவரத்து எல்லாமே ரயில் வண்டிகள் மூலம் தான். மாணவர்களுக்கு ரொம்ப வசதி. செயினைப் பிடித்து இழுத்து, ரயிலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பல சமயங்களில் காரணமே இல்லாமல் நிறுத்தி விடுவார்கள். யாராவது ஒரு மாணவன் சுவர் ஏறிக் குதித்து ரயிலைப் பிடிக்க ஓடிவருவதைப் பார்த்த மாணவர் குழாமிற்கு, ஆஹா! இப்படி ஒரு மாணவன் தன் கல்விச் சூழலை ஒரு நாள்கூட இழக்கலாமா?’ என்ற ஆதங்கத்தில் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை இழுத்து விடுவார்கள். ஆசிரியர்கள் யாரும் அப்ப்டி ஓடி வந்தால் மாணவர்கள் அப்படியெல்லாம் உதவி, ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் ஒரு சோகம்.
இந்த ரயில் போனால் தான் கல்லூரி. இல்லையென்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் எங்கோ ரயில் பாதையில் நின்று கொண்டிருப்போம். நான் இருக்கும்வரை இந்தச் சூழலே இருந்தது. இது மாணவர்களுக்கு ரொம்ப வசதி. யாருக்கோ ஒருவனுக்கு நம் மெக்கலே கல்வியின் மீது ஏதோ ஒரு கோபம் என்றாலும் ரயில் நின்றுவிடும். ஆசிரியர்களில் பலரும், ‘அடடா .. இன்று என் வகுப்பு போச்சே!”, என்று ஆதங்கப்படுவார்கள். அது உண்மையோ என்னவோ தெரியாது. ஆனாலும் தப்பித் தவறி ஆசிரியனான நானும் என் நண்பர்களும் அது மாதிரி சோகத்தில் எங்களை ஆழ்த்திக் கொண்டதேயில்லை. நான் அக்கல்லூரியை விட்டு போனபின், ஆசிரியர்களுக்கு என்று தனியாக ஒரு பஸ் போக்குவரத்து ஏற்பாடுசெய்து விட்டார்களாம். இப்போது ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்து தானே ஆக வேண்டும். இதனால் மாணவர்களுக்கு ரயிலில் செய்யும் பராக்கிரமங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன.
ஆனால் நானிருந்த வேளையில் ரயிலும், வகுப்புகளும் சென்டிமென்டலான ஒரு டச்சோடு தான் இருந்தார்கள். இப்படி ரயிலில் வந்து கொண்டிருப்பதால் துறை சார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டாரங்களில் ஒன்று சேர்ந்து வருவது வழக்கமாக இருந்தது. பொதுவாக bachelors கூட்டம் தனிக்கூட்டமாக இருக்கும். மத்த ‘பெருசுகள்’ எல்லாம் தனி வட்டங்களில் வருவார்கள். துறைத் தலைவர்களிடமிருந்து சிறுசுகள் விலகியே இருப்பதும் வழக்கம். ஆகவே துறைசார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டங்களே பெரிதான் இடம் வகித்தன. இது அரட்டை அடிக்க ஏதுவான வசதியாக இருக்கும். பொதுவாக முதலில் உள்ள ரயில் வண்டிகளில் மாணவர்களின் ராஜாங்கம். அதன்பின் ஓரிரு வண்டிகளில் இளம் ஆசிரியர்கள். கடைசி வண்டியில் பெருசுகள். இப்படியாகத்தான் இருக்கும் ரயில் ராஜாங்கம்.
நான் பார்த்த வரை எங்கள் இளைஞர் கூட்டத்தில் அப்போதெல்லாம் நிறைய பேர் சரியான ’காசு துரத்திகளாக’ இருப்பதைப் பார்த்துள்ளேன். பலரும் இளங்கலை முடித்து சித்தாள் வேலையில் இருப்பவர்கள். ஏறத்தாழ ஒரு தற்காலிக வேலை. அவ்வளவே. இதனால் பலருக்கு ஆசிரியர் தொழில் ஒரு சைட் கிக் தான். கையில் வேறு சில தொழில்களைச் செய்து கொண்டு கல்லூரி வேலையையும் செய்து வந்தனர். பட்டுச் சேலை விற்பவர்கள் நிறைய இருந்ததாக நினைவு. இவர்கள் எல்லோருமே கொஞ்சம் சீரியசான ஆட்கள். இவர்களுக்கு எங்களைப் போன்ற வேறு சிலரைக் கண்டால் கொஞ்சம் அரட்டிதான். யார் காலையாவது வாருவது, வேலை பற்றி சீரியசாகப் பேசுவது என்றிருக்கும் எங்களை அவர்கள் ஒதுக்க முனைவதும், நாங்கள் வேண்டுமென்றே அவர்களைக் கலாய்ப்பதுவும் தொடர் நிகழ்ச்சி. அவர்களைக் கலாய்ப்பது எப்படி அவ்வளவு எளிதாக இருந்தது; எப்படி அவர்கள் அப்படி ‘டமால்’ என்று எங்களிடம் விழுந்து தொலைத்தார்கள் என்பது எனக்கு இன்று வரை பெரிய ஆச்சரியம் தான்.
போன பதிவில் மதிய உணவு நேரத்தைப் பற்றியெழுதியிருந்தேன். அந்த நேரத்தில் பல துறை இளைஞர்களும் சாப்பாட்டிற்காக விடுதி வந்து. அதன் பின் இந்த அறைக்குச் ‘சிரம பரிகாரம்’ - அப்புறம் எப்படி தம் அடிக்கிறது? - செய்ய வந்து விடுவோம். ஏற்கெனவே சொன்னது போல். மதியம் சினிமா பாட்டு வைத்துக் கேட்பது வழக்கம், அதோடு சொந்தக் கதை சோகக் கதைன்னு ஒருத்தர் ஒருத்தரை கலாட்டா செய்து கொண்டிருப்போம். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஆங்கிலத் துறைக்கு ஒரு புதிய நண்பர் வந்தார். மிக மிக நல்ல மனிதர். அப்போது தான் இளங்கலை முடித்து விட்டு ஆங்கிலத்துறையில் சித்தாளாக - ட்யூட்டராக - வந்து சேர்ந்திருந்தார். ஆறுமுகம் என்று பெயர். மதுரைக்காரர்தான். அதுவும் தியாகராசர் கல்லுரியின் பக்கத்திலுள்ள அனுப்பானடிதான் சொந்த இடம். அட நம்ம ஊர் மதுரைக்காரரே என்று நினைத்து நான் அவரிடம் பேச ஆரம்பித்தால் மனிதர் பயந்து ஒதுங்குவார். நமக்கு அம்புட்டு நல்ல பெயர் அப்போதே இருந்திருக்கு!
ஆறுமுகம் ரொம்ப நல்ல மனிதர் என்று சொன்னேனில்லையா? அதனாலேயே அவரை எல்லோரும் ரொம்பவே காலை வாருவார்கள். அவரும் பாவம் போல சிரித்து மழுப்புவார். ஆனால அவர் மழுப்ப முடியாமல் ஒரு விஷயத்தில் எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார். செக்ஸ் என்றாலே ஆறுமுகத்திற்கு அலர்ஜி. பத்தாதா நம்ம மக்களுக்கு. எதையாவது சொல்லி அவரைக் கஷ்டப்படுத்துவார்கள். எனக்கு எப்போதுமே நாம் ஏதாவது சொல்லி, அதைத் திருப்பிச் சொல்லும் அளவுள்ள மக்களை மட்டும் கலாய்ப்பதில் மட்டும் தான் ஆர்வம். அடிக்கிற ஆளும் கொஞ்சமாவது நம்மைத் திருப்பி தாக்கினால் தானே அந்த விளையாட்டுச் சண்டை நன்றாக இருக்கும்! ஆறுமுகம் அப்படிப்பட்ட ஆளில்லை. ஒரு மாதிரி பாவம் போல் சிரித்து மழுப்புவார். அதனால் அவரைக் கலாய்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. மதியம் அவர் வந்ததும் அவரை ஏதாவது சொல்லி கலாட்டா பண்ணுவார்கள்.
இதில் வசமாக ஒரு விஷயத்தில் ஆறுமுகம் மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு சினிமாப்பாட்டு - அப்போதைய ஹிட் பாட்டு அது - மிகவும் அலர்ஜியாகி விட்டது. ‘இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்’ என்ற பாட்டு அது. அதற்கு அப்போதைய செக்ஸ் நடிகை ஒருவர் - பெயர் நினைவில் இல்லை - ஒருவர் இதற்கு ‘அபிநயம்’ பிடிப்பார். அட .. இரட்டை அர்த்தம் உள்ள பாடல் என்று வைத்துக் கொள்வோமே! ஒரு பக்கம் பயங்கர தத்துவம்; இன்னொரு பக்கம் நிறைய செக்ஸ். இந்தப் பாட்டைப் போட்டதும் ஆறுமுகம் காதை இறுகப் பொத்திக் கொள்வார். நண்பர்கள் பாட்டை நிறுத்தி விடுவார்கள். ஆறுமுகம் கையை எடுத்ததும் மறுபடியும் அதே பாட்டு தாலாட்டும். மறுபடி ஆறுமுகம் அதே வேலையைத் தொடர்வார். இந்த விளையாட்டு அனேகமாக ஆறுமுகம் அறைக்கு வரும் நாளெல்லாம் நடக்கும். அவர் அவ்வளவு எளிதாக அந்த அறையையும் தாண்டி விட முடியாதபடி நண்பர்கள் அவரை அணைபோட்டு அறைக்கு கொண்டு வந்து விடுவார்கள்!
எனக்குப் பாவமாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது. இந்தச் சமயத்தில் ஆறுமுகம் தங்கியிருந்த அறையைக் காலி செய்ய வேண்டியதிருந்தது. உடனே இன்னொரு அறை வேண்டும் அவருக்கு. தயங்கியபடி என்னிடம் வந்தார். ஒரு அவசர உதவியென்றார். கொஞ்ச நாளைக்கு மட்டும் என்றார். நான் சரியென்றேன். அறை நண்பரானார். அவருக்கு பல நல்ல கொள்கைகள். அதில் ஒன்று சினிமாவிற்கு இரவு ஆட்டத்திற்குப் போகக் கூடாது எனப்து. எனக்கு அது தான் வசதி. சனிக்கிழமை ராத்திரி படம் போய்ட்டு வந்து ஞாயிறு எம்புட்டு தூங்க முடியுமோ அம்புட்டு தூங்கலாமே .. அதனால் என் வசதி இரவு சினிமா தான். ஆறுமுகத்தின் armour-ல் முதல் ‘கட்டுடைப்பு’ இது தான். ’ஆமாங்க .. இந்த சிஸ்டம் நல்லா இருக்கு’ என்பது ஆறுமுகத்திடமிருந்து எனக்கு வந்த முதல் ஆறுதலான பாராட்டு இது!
ஆனால் இதைவிட எனக்கு ஆறுமுகம் மதியம் விடுதியறையில் படும்பாடு தான் நினைவிலேயே இருந்தது. நாலைந்து நாள் விடுமுறை வேறு வந்தது. அந்த சமயத்தில் அவரை மெல்ல உருவேற்றினேன்.
”ஏன்’யா உங்களுக்கு அந்தப் பாட்டு பிடிக்கலை?”
“அது கெட்ட விஷயம் சொல்லுது. அதான்”
“வெறும் பாட்டாக அதை ஏன் கேட்கக் கூடாது?”
“அசிங்கமா அந்தப் பாட்டுக்கு அந்தப் பொம்பளை ஆடுதுல்லா?”
”அதை ஏன் நீங்க நினைக்கிறீங்க. பாட்டை மட்டும் கேளுங்க. நல்ல அர்த்தம் அதில் இருக்குல்ல?”
”அதை நினைக்காம எப்படி பாட்டைக் கேட்கிறது?”
நான் ரெண்டு மூணு பாட்டை எடுத்து உட்டேன். இப்போ எல்லாம் உங்களுக்கு நடனமா நினைவுக்கு வருது? நீங்க நினைச்சா அது வந்து தொலையும். இல்லாட்டி பாட்டு மட்டும் தானே கேக்கும்” என்றேன். ஆறுமுகத்தால ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டேன். ”ஏன் ஆறுமுகம்! உங்களை அந்தப் பாட்டை வைத்துக் கேலி செய்வது பிடிக்குதா?”
“என்னங்க .. இப்படிக் கேட்டுட்டீங்க .. இல்லவே இல்லைங்க’.
”அப்போ அதை நிப்பாட்டணுமா வேண்டாமா?” என்று கேட்டேன்.
“கட்டாயமா நிப்பாட்டணுங்க”.
“நான் ஒண்ணு சொல்றேன். கேளுங்க. பய புள்ளைக உங்களைக் கேலி பண்றதையே உட்ருவாங்க” அப்டின்னேன்.
”சொல்லுங்க. செஞ்சுருவோம்” அப்டின்னார் தைரியமாக.
“கொஞ்சம் உங்களுக்குக் கஷ்டம் தான். சிரமப்பட்டு ஒரு நாள் ஒரு நாடகம் போட்டா சரியாயிரும்” என்றேன்.
“சொல்லுங்க ...”
“அடுத்த வாரம் காலேஜ் போறம்ல. அன்னைக்கு மதியம் அந்த அறைக்குப் போனதும் யாரையாவது பாத்து ..’அந்தப் பாட்டை போடுங்க’ அப்டின்னு காஷுவலாகச் சொல்லுங்க. பாட்டைப் போடுவாங்க. ரசிக்கிறது மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு நீங்க என்னத்தையாவது நினச்சுக்குங்க. ஆனா .. தலையை நல்லா ஆட்டணும்” என்றேன்.
ஒரு வழியா அறையில் உக்காந்து நிறைய “போதித்து” அவரை என் வழிக்குக் கொண்டு வந்தேன்.
அந்தத் திருநாளும் வந்தது. மதியச்சாப்பாடு முடிந்ததும் நான் அவருக்கு முன்னாலே போய் அந்த அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு தம் அடித்துக் கொண்டு இருந்தேன். நம்ம ஆறுமுகம் வந்தார். கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டார். பாட்டு போட்டிக்கிட்டு இருந்த நண்பரிடம், ‘என்னப்பா இந்தப் பாட்டு ... நம்ம பாட்டைப் போடுங்க’ப்பா” என்றார். முகத்திலோ அப்படி ஒரு புன்னகை. ஆனால் ஆறுமுகம் சொன்னதைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கெல்லாம் ஒரே ஷாக்! சரின்னு பாட்டையும் போட்டாங்க. காதைப் பொத்திக்கொள்வதற்குப் பதில் ஆறுமுகம் தலையை ஆட்டிக் கொண்டே புத்தகத்தில் கண்களை மேய விட்டார். மக்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. என்னப்பா ஆச்சு ஆறுமுகத்துக்கு என்று ஆச்சரியம். அதைக் கேள்வியாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் இதையெல்லாம் கண்டுக்கவேயில்லை. நண்பர்களிடமிருந்து திடீரென்று ஒரு குரல்: ‘நினச்சேன் .. இந்தப் பயல் ரூம் மேட் ஆயிட்டாரில்ல ஆறுமுகம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்’. குரல் கொடுத்தவனைப் பார்த்தேன். அவன் என்னைக் கையைக் காட்டிக் கொண்டிருந்தான். ‘அட போப்பா ... நான் ஒண்ணும் சொல்லலையே’ன்னு அப்பாவியா மூஞ்சை வச்சுக்க முயற்சி செஞ்சி சொன்னேன்.
எப்படியோ ஆறுமுகத்தைக் கலாய்ச்ச ஆளுகளுக்கு இப்போ வேலை இல்லாம் போயிரிச்சி!
நான் அந்தக் கல்லூரியை விட்ட பிறகு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகம் என் மதுரை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் முதுக்லை முடித்து திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் ஆறுமுகத்தைப் பற்றி இன்னொரு நண்பர் சொன்னது மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
ஆறுமுகம் இப்போதெல்லாம் ஆசிரியர் கழகத்தில் மிகவும் முக்கியமான ஆளாக இருக்கிறார் என்றும், ஆசிரியர் போராட்டங்களில் தீவிரமாக முன்னால் நிற்கிறார் என்ற தகவலே அது. ஆறுமுகம் பெரும் போராளி என்பது எனக்கு மிகவும் இனிப்பாகவும், திருப்தியாகவும் இருந்தது.
*
நண்பர்களோடு பழகிய நாட்கள் ...சொல்லமுடியாத கவிதை?
ReplyDelete46 ஆண்டுகள் கழித்து இன்று ஆறுமுகத்திடம் தொலைபேசினேன்.
ReplyDeleteமகிழ்ச்சி ….!