*
T.B.R. JOSEPH இருக்காரே .. நல்ல மனுஷன் தான். ஆனால் விவரம் இல்லாதவர். ஏன்னா என்னை மாதிரி வயசான கிழடுகிட்ட போய் ஒரு விஷயத்தைப் பத்தி எழுதுன்னு சொன்னா, நாங்க உடனே அதைப் பத்தி மட்டுமா எழுதுவோம். எங்கள மாதிரி வயசான ஆளுக கிட்ட போய் ஒரு பழைய விஷயத்தைப் பற்றிக் கேட்டா அதுக ஆதாம் காலத்திலிருந்து ... sorry .. sorry.. ஆதிகாலத்திலிருந்து கதை சொல்லிராதுகளா. அதுகள உக்காந்து வாசிக்கணும்னு என்பது பதிவர்கள் தலைவிதியா என்ன? இருந்தாலும் மனுஷன் கேட்டுட்டார். சொல்லாமப் போனா நல்லாயிருக்காது. ஏதோ கொஞ்சம் சொல்றேன் ...
அந்தக் காலத்தில் பள்ளியில் படிக்கிறப்போ அப்பா பள்ளியிலேயே படிச்சேனா .. ரெண்டு பேரும் ஒண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவோம். ஒரே நேரத்தில் சாப்பிடுவோம். அப்பா அப்போவெல்லாம் அம்மாட்ட, என்கிட்ட எல்லா கதையும் பேசிக்கிட்டே சாப்பிடுவார். அதில நிறைய G.k. விஷயங்கள் இருக்கும். ஒரு நாள் எங்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கிற L.I.C. அலுவலகத்தில் ஒரு போராட்டம். எல்லோரும் வெளியே வந்து கோஷம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அது என்னான்னு அப்பா சொல்லிட்டு இருந்தார். கம்ப்யூட்டர்னு ஒரு மெஷின் வந்திருக்காம். ஒரு மெஷினே பல ஆட்கள் வேலையைச் செஞ்சிருமாம். அதை அந்த அலுவலகத்திற்குக் கொண்டு வரக்கூடாதுன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க அப்டின்னார்.
அது தான் நான வாழ்க்கையில் முதல் முறையா கம்ப்யூட்டர் அப்டின்ற வார்த்தையைக் கேட்டேன். அப்போ வந்த அந்த கம்ப்யூட்டர் ஏதோ punch card operation பண்ணும் என்றார்கள். நீளமான அட்டை ஒன்றில் ஓட்டைகளா போட்டு அந்த அலுவலகத்தில் பார்த்திருக்கேன். அது கம்ப்யூட்டர் செஞ்சது என்றார்கள். data storing என்று ஏதேதோ மக்கள் சொல்லிக் கேட்டிருக்கேன்.
அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்கன் கல்லூரியில் சில கம்ப்யூட்டர்கள் வந்திறங்கின. மதுரைக்கு வந்த முதல் கம்ப்யூட்டர் எங்கள் கல்லூரிக்குத் தான் என்று சொல்லிக்கொண்டார்கள். இரண்டாவது கம்ப்யூட்டர் மதுரை மில்லிற்கு வந்தது என்றும் கேள்விப்பட்டேன். அப்போவெல்லாம் இருந்த கம்ப்யூட்டர்கள் ரொம்ப சொகுசானவை. ஏ.சி. ரூம்ல மட்டும் தான் இருக்குமாம். வெளியில வச்சா ஓடாது அப்டின்னாங்க. (இதில ஒரு ஜோக் உண்மையில் நடந்தது. கம்ப்யூட்டர் கொஞ்சம் அதிகமான போது எனக்குத் தெரிந்து சிறுவர் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியை கம்ப்யூட்டரை பள்ளிக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு நாள் மாலையும் நல்ல கம்பிளி போர்வை வைத்து அதை மூடி வைத்துவிட்டுப் போவாராம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை இதெல்லாம் எதற்கு என்று கேட்டாராம். திறந்து வச்சா வைரஸ் அட்டாக் பண்ணிடும் என்றாராம். தலைமை ஆசிரியை என்னிடம் இதைக் கேட்டு இது உண்மைதானா என்று கேட்டார்.)
எங்கள் கல்லூரிக்கு கம்ப்யூட்டர் வந்ததும் அதைப் பற்றி ஒரு விளக்க வகுப்பு நடக்கிறது. விருப்பமுள்ளோர் வரலாம் என்று சொன்னார்கள். விளக்கியது ஒரு அமெரிக்க இயல்பியல் பேராசிரியர். அவர் என்னென்னவோ சொன்னார். புரியிறவங்களுக்குப் புரிஞ்சிருக்கும். மசாலா இல்லாத கேசுகளுக்கு ஒண்ணும் புரியலை. இந்த ரெண்டு category-ல் நான் எதில் இருப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! வகுப்பு முடிஞ்சதும் இன்னொருத்தரிடம் ‘என்னப்பா இது. கேல்குலேட்டர் மாதிரி இது வேலை செய்யும் போலும்!’ என்றேன். நான் கேட்டது என்னைவிட ஒரு அசமஞ்சம் போலும். ’ஆமாப்பா ... ஆனா இதுல டைப் அடிக்க பெரிய பட்டனா இருக்கு’ அப்டின்னார். இப்படியாகக் கம்ப்யூட்டரின் முதல் தரிசனம் கிடைத்தது.
கொஞ்ச காலம் கழித்து கல்லூரியில் எல்லா துறைகளுக்கும் ஒரு கம்ப்யூட்டர் வந்தது. எனக்கு அதில் டைப்படிக்கும் போது வரும் சத்தம் ரொம்ப பிடித்துப் போயிற்று. கொஞ்ச காலம் பசங்களுக்கு hand out கொடுக்கிற சந்தோஷம் கிடச்சிது. அப்போ intranet என்று கல்லூரிக்குள் கொண்டு வந்தார்கள். உள்ளுக்குள் உள்ள சக ஆசிரியர்களுக்குச் செய்திகள் அனுப்பலாம். அதாங்க மெயில் அனுப்பலாம்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நண்பர்களுக்கெல்லாம் அனுப்பிப் பார்த்தேன். ஒரு பதிலும் வரலை.
அன்றிலிருந்து இன்று வரை எனக்கு ஒரு பெரிய சோகம். நிறைய பேராசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் மேல் அப்படி என்ன வெறுப்புன்னு தெரியாது. தொடக்கூட மாட்டாங்க. நான்கூட ரெண்டு நண்பர்களைக் கட்டாயப்படுத்தி கம்ப்யூட்டர் கிட்ட கூட்டிட்டு போய் introduce செஞ்சேன். ஒண்ணும் இல்லாட்டி at least சீட்டு விளையாடுங்கன்னு சொல்லி solitaire சொல்லிக் கொடுத்தேன். தலைவிதியேன்னு கொஞ்ச நேரம் முயற்சி செஞ்சிட்டு ஆள உடுப்பான்னு ஓடிட்டாங்க. இன்னைக்கு வரை பல பேராசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் ஒரு தொடக்கூடாத பொருளாக இருந்து வருவதும் பெரிய சோகம்.
பெரிய மகள் M.C.A. சேர்ந்தாள். ஆனால் அப்போது தான எப்படியோ வானத்தை வில்லாக வளைத்து ஒரு வீடு கட்டும் கட்டாயத்தில் இருந்தோம். அதனால் அப்போது கம்ப்யூட்டர் ஒரு வானவில்லாகப் போயிற்று. அவள் படிப்பு முடித்து திருமணமும் முடிந்து சென்றாள். அடுத்த மகள் இப்போது M.C.A. படித்தாள். 1999 -2000-ல் கம்ப்யூட்டர் வாங்கினோம். வழக்கம் போல் முதல் வாரம் மட்டுமே பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் உறைகள் எல்லாம் வாங்கி ஆசை ஆசையாய் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
அந்த சமயத்தில் தான் internet, e mail எல்லாம் பழக்கத்திற்கு அதிகமாக வந்த நேரம். முதன் முதல் ஷம்மி கபூர் அப்டின்னு ஒரு பழைய நடிகர் internet, e mail பற்றியெழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன். அப்போதெல்லாம் net connectivity என்பது ஒரு பகீரதப் பிரயத்தனைக்குப் பிறகுதான் கிடைக்கும். அவர் அப்போதெல்லாம் இரவு நெடு நேரம் connectivityக்காக விழித்திருந்து ... காத்திருந்து .. அது கிடைத்ததும் உலகே உன் கையில் என்ற நினைப்பு வரும் என்றெல்லாம் எழுதியிருந்தார். நமக்கும் ஆசை வந்திருமே. ஒரு மாணவன் அப்போது இதெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். கல்லூரியிலும் எங்கள் துறையில் internet எடுத்திருந்தார்கள். ஒரு நாள் கஷ்டப்பட்டு எனக்கு ஒரு மெயில் ஐடி உண்டாக்கிக் கொடுத்தான் - hotmail-ல். என்றைக்காவது உட்காருவேன். dial up connection .. என்னமோ பண்ணுவான் ..கர கரன்னு சத்தம் வரும்... ஒரு சின்ன சதுரத்துக்குள் எண்கள் தட தடன்னு ஓடும். சத்தம் வேறு மாதிரி கேட்கும். இப்போ கனெக்ட் ஆகிடும் என்பான். ஆகாது. இப்படியே முயற்சிக்கணும். திடீர்னு கிடைக்கும். ஒண்ணு ரெண்டு மெயில் அனுப்புவோம். அசுர சாதனை தான்!
கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் வளையத்திற்குள் நுழைந்தேன். டிஜிட்டல் காமிரா வந்தது. சூளைக் காற்று மாதிரி கம்ப்யூட்டர் இன்று வரை பெரும் ‘ஆட்டம்’ காண்பிக்கிறது. நாமும் அதோடு ரொம்ப இணைஞ்சாச்சு...
இந்த நேரத்தில் தான் ஒரு மெரீனா பீச்சில் ஒரு கூட்டம்னு போய் உட்கார்ந்து ... வாழ்க்கையே ரொம்ப மாறிப் போச்சு.... //மெரினா பீச்சில், காந்தி சிலைக்குப்பின்னல் ஒரு ப்ளாக்கர்கள் கூட்டம் என்றார்களா கொஞ்சம் adjust பண்ணி சென்னையிலுள்ள மூத்த மகள் வீட்டிற்குப்போய் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்து, அதன்படியே கலந்துகொள்ளவும் செய்தேன்.
அதுவும் ஒரு தப்பாகப் போய்விட்டது. ஒன்று: எல்லோரும் பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை; Everything was Greek and Latin to me; things were going above my head. நான் என்றைக்கு unicode-யைக் கண்டேன்; என்னமோ template என்றார்கள்; காசி நிர்வகிக்கும் server அப்படி இப்படி என்று பேசப் பேச, ஆஹா, தப்பான முடிவு எடுத்துட்டோமோ என்ற பயம் வந்தது.
அது போதாதென்று, வந்த 23-ல் (என்னைச் சேர்க்காமல்) 3 பேரைத்தவிர (இராமகி, டோண்டு, மாலன் - அனேகமாக இதே வயது வரிசையில்) மற்ற எல்லோரும் 25-35 வயதுக்குள் இருந்தார்கள்; அந்த முதிர்ந்த மூவரும் கூட என்னைவிட மிகவும் இளைஞர்களே. இந்த 'வலைக்குள்' சிக்கினால் problem of generation gap வந்துவிடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆரம்பிப்போமா, வேண்டாமா என்று ஒரே குழப்பம். வயதானவன் என்று தெரிந்தால் மரியாதை என்று ஏதாவது காரணம் காட்டி sideline பண்ணிவிடுவார்கள் என்ற பயம். (இப்போகூட பாருங்களேன்; stars for voting in my blog is not working; help me என்று forum-ல் அறைகூவல் விடுத்து நாள் பல ஆயிருச்சு; நாப்பது ஐம்பது பேர் வந்து பாத்துட்டும் போயிட்டாங்க; ம்..ம்..ஒரு சத்தம் வரணுமே.)
இதில நிறைய பேரு அவங்க அவங்க போட்டோவெல்லாம் போட்டுகிடராங்க (அழகான மூஞ்சு; போட்டுக்கிறாங்க! பழமொழி -வயசுக்கு ஏத்தமாதிரி பழமொழில்லாம் சொல்லவேண்டாமா- பழமொழி ஒண்ணு சொல்லுவாங்களே முடி இருக்க மகராசி...அப்படிமாதிரி) ஆனா, நம்ம கொஞ்ச நாளைக்காவது பெயர், வயது, நிச்சயமா போட்டோ எதுவும் இல்லாமல் வண்டியை ஓட்டிப்பார்ப்போம்; என்னதான் நடக்கும்; நடக்கட்டுமே அப்டின்னு ஒரு மாதிரி ஆரம்பிச்சு வைக்க, நம்மளையும் போனா போதுன்னு இரக்கப்பட்ட ஏழெட்டு நல்ல மனுஷங்க (மனுஷிங்களும்தான்) ஏதோ அப்பப்ப வந்து பாத்துட்டு... போய்க்கிட்டு...//
மேலே சொன்ன வரிகள் Saturday, July 16, 2005 அன்று எழுதிய பதிவில் உள்ளவை. அவைகளை இங்கே லவட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
அன்றைக்குப் - 24.04.2005 - பிடித்த ‘கிறுக்கு’ இன்னும் இறங்கவில்லை. வீட்டில் முதலில் தங்க்ஸிடமிருந்து நிறைய திட்டு கிடைக்கும். எப்பவும் இதுலேதான் இருக்கணுமான்னு அப்பப்போ ஒரு விரட்டு கிடைக்கும். அதன் பின் பதிவர்கள் நட்புக்கூட்டம் பார்த்து கொஞ்சம் சமாதானமானார்கள். அதைவிட நிச்சயமாக இணையத்தின் மூலமாகவே கிடைத்த அமினா புத்தக மொழிபெயர்ப்பு வாய்ப்பு அவர்களை ‘தட்டிக் கொடுக்க’ வைத்தது. அதுவும் அப்புத்தகத்திற்கு மாநிலப் பரிசு .. கூட்டங்களில் பங்கெடுப்பு .. என்றும், அந்நூலுக்கு ஒன்றுக்கு இரண்டு என்று இரு பரிசுகள் கிடைத்ததும் சுத்தமா மாறிட்டாங்கல்லா ...
வண்டி இன்னும் ஓடுது ....
பி.கு.
இன்னும் இருவரை இதே தலைப்பில் எழுத அழைக்க வேண்டுமாமே .. ஒருவர்
விஜய் முத்தையா; இன்னொருவர்: அ. வேல்முருகன்:
*