*
*
அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு:
திருட்டுத் தனமா ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் இருந்து (முதன் முதல் திருட்டுத்தனமாக வீட்டுக்குத் தெரியாமல் பார்த்த முதல் சினிமா நினைவுக்கு வருகிறது...!)ஒரு பெரிய கவலை! ஆங்கிலப்படங்கள் என்றால் genre வாரியாக படங்கள் வருகிறதே .. அங்கே மாதிரி தனியான காமெடி படம், சண்டைப் படம், காதல் படம், வீரதீரச் செயல்கள் படம் என்று வித விதமாக வராமல் எல்லா தமிழ்ப் படமும் ஒரே மாதிரியாக வருகிறதே என்று தோன்றும்.
ஒரு வேளை நம் நாட்டில் இதிகாசங்கள் நிறைய உண்டு. அமெரிக்க நாட்டின் வரலாறு மிகச் சிறிதே. இவர்களுக்கு நம்மைப் போன்ற பழம் காவியங்கள் இல்லை. அவர்கள் கைவசம் இருப்பது ஒரு உள்நாட்டுப் போர், முதல் இரண்டாம் உலகப் போர்கள், ரஷ்யாவுடன் இருந்த cold war ... இதனால் பல படங்களில் இவைகளில் ஏதாவது ஒன்றினை வைத்துப் படம் எடுத்திருப்பார்கள் போலும். இப்படி ஏதும் அதிகம் இல்லாத நாடுகளில் இது போன்ற வரலாறுகளும் இல்லாததால் அதிகமாக தனி மனிதனை வைத்தே படம் எடுத்திருப்பார்களோ என்று எனக்குத் தோன்றும். நமக்கிருந்த புராணக்கதைகளே நமக்குப் போதும் போதும் என்ற அளவில் இருந்ததால் அதை மட்டுமே கதைக் களமாக்கி முதலில் படம் எடுத்தார்கள். பின் அதை விட்டு விட்டு காதலை மட்டும் பிடித்துக் கொண்டார்கள் போலும்.
புது தியரி ஒன்றும் பல மக்களால் சொல்லப்படுவதுண்டு. இரண்டரை மணி நேரம் காசு கொடுத்து போவது நம்மை மறந்து ‘ஜாலியாக’ இருந்து விட்டு வர மட்டுமே என்பார்கள். அனேகமாக இந்தத் தத்துவம் பேசுபவர்கள் எல்லோரும் ஒரு வாராந்தரியைக் கையில் எடுத்தால் அதில் உள்ள ஜோக்ஸ் மட்டும் படித்து பத்திரிகையைத் தூக்கி எறிபவர்களாக இருக்கும். அதில் உள்ள பல நல்ல கட்டுரைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வாசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. வெறும் காமிக்ஸ் வாசகர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே இதில் எனக்கு ரசனை இல்லை. ஆனால் மற்ற கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதுண்டு. வாசித்த பல genre வாரியான புத்தகங்களை மீண்டும் நினைத்துப் பார்த்தால் எந்தக் கதைகள் வாசித்து என் கண்ணில் கண்ணீர் கசிந்ததோ அவைகளே நினைவில் நிற்கின்றன. முதன் முதல் கண்ணீர் வரவழைத்த நாவல் அகிலனின் ‘பாவை விளக்கு’. ஆங்கில நாவல்களில் முன்னிடம் வகிப்பது Leon Uris எழுதிய Exodus. மூன்று முறை வாசித்த போதும் கண்ணீருக்குப் பஞ்சமில்லாமல் வாசித்தேன். Alex Haley எழுதிய The Roots. இலக்கியங்களை வாசிக்கும் போது நம் நெஞ்சை உலுக்கும் படைப்புகள் மனத்தின் ஆழத்திற்கே சென்று தங்கி விடுகின்றன. இந்த தியரியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திரைப்படங்கள் just for past time என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை.
நம் மக்கள் கூறும் இந்த ’இலக்கணத்தோடு’ வரும் படங்களில் இன்னொரு வேடிக்கை ஒரே படத்தில் அனைத்து சுவைகளும் இருக்க வேண்டும் என்கிறார்கள் படைப்பாளிகளும், படம் பார்ப்பவர்களில் பலரும். படம வருவதற்கு முன்பே நம் இயக்குனர்கள் தங்கள் படத்தை வானளாவப் புகழ்வதும் கடைசியாக் அப்படத்தில் அது .. இது .. என்று எல்லாமும் இருப்பதாகக் கூறுவார்கள். அதில் கட்டாயம் காதல் நிச்சயமாக இருக்கும். இவர்கள் இப்படி ம்ருகி மருகி காதலைப் பறை சாற்றுவதால் தான் நமது மக்களும் ‘காதல் .. காதல் .. காதல் இல்லையேல் சாதல்’ என்று முடிவு பண்ணுகிறார்களோ என்னவோ! தற்கொலைகள் அதிகமாவது இந்த அடிப்படையில் தானோ என்னவோ! எதற்கும் சாகாத இளசுகள் காதலுக்காக உயிரை விடுவது சினிமாக்கள் தரும் உத்வேகம் தானோ என்னவோ!
இப்படியே தான் நமது படங்கள் வரும்; வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்ப்பட உலகில் திடீரென்று சில நல்ல மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் மாற்றங்கள் இதைப் போலவே தொடர்ந்தால் மிக மிக நல்லது. இதற்கு அரசு கூட ஒத்துழைக்க முடியும். படத்தின் நீளம் இன்னொரு தடைக்கல். எப்படியும் இரண்டரை மணி நேரம் என்பது யார் விதித்த விதியோ. படத்தின் நீளத்திற்காகவே இன்னும் இரு பாட்டு; நான்கு சண்டை என்று போட்டி போட்டுக்கொண்டு படத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள். எததெற்கோ காரணம் சொல்லி வரியை அரசு குறைக்கிறது. ஒன்றரை மணி நேரத்திற்குள் எடுக்கும் படத்திற்கு வரிக் குறைப்பு என்று ஒன்று கொண்டு வந்தால் இன்னும் சிறப்பு. நீளத்திற்காகவே நம் பல கதைகள் வெறும் ‘அவியல்களாக’ மாறி விடுகின்றன. அவை இதில் கொஞ்சம் தவிர்க்கப்படலாம்.
படத்தின் நீளத்திற்காகவே சேர்க்கப்பட வேண்டும் என்று விதிக்குள் வருவது திரைப்பாடல்கள். இவைகள் தேவையில்லை என்று பெரும் பிரம்மாக்கள் பேட்டிகளில் சொல்லி விடுவார்கள். அதோடு அவர்கள் சரி .. அதற்குரிய முயற்சிகளில் அவர்கள் இறங்குவதில்லை. நல்ல வேளையாக படங்களில் பாடல் எதற்கு என்று கடந்த ஒரு வாரத்தில் இரு இசை இயக்குனர்கள் - முதலில், விஜய் அண்டோனி, அடுத்து, அதை ஒத்துக் கொண்டுள்ள ஜிப்ரான் - கூறியிருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.
எப்படியோ ... எனக்குத் தோன்றுவது தமிழ்ப்படங்களில் ஒரு புது மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மேலும் வளர வேண்டும்.
நல்ல காலம் பிறக்க வேண்டும் ... நடக்கும் புதிய நல்ல விஷயங்கள் தொடர வேண்டும்.
*
படங்கள்: இணையத்திலிருந்து..
//பாடல் எதற்கு என்று கடந்த ஒரு வாரத்தில் இரு இசை இயக்குனர்கள் - முதலில், விஜய் அண்டோனி, அடுத்து, அதை ஒத்துக் கொண்டுள்ள ஜிப்ரான் - கூறியிருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.//
ReplyDeleteபடங்களை விட பாடல்களை அதிகமாக ரசிக்கும் எங்களை மறந்துவிட்டீர்களே !
இதனால் மறுமலர்ச்சி மக்கள் மனதில் உருவானால் சரி... இல்லை என்றால் just for past time என்றாவது இருக்கட்டும்...
ReplyDeleteஉண்மைதான் பாடல்கள் ஒரு திரைப்படத்தின் சரளமான ஓட்டத்தை தடுப்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இத்தகையை போக்கு தொடருமானால் அது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது!
ReplyDeleteபாடல்களால் மட்டுமே கோர்க்கப்பட்ட படங்கள் உருவான காலத்திலிருந்து இப்போதுதான் நான்கைந்து பாடல்கள் மட்டும் இருக்கும் காலத்துக்கு வந்திருக்கிறோம். அதுவும் இந்நிலை நீண்ட நாட்களாக மாறாமல் நிற்கிறது!
ReplyDeleteதிரைப்படங்களுக்குப் பாடல்கள் போடட்டும். அவற்றை தியேட்டரில் காட்ட வேண்டிய அவசியமில்லை. விரும்புபவர்கள் தனியாக பாடல்கள் மட்டும் கேட்கலாம் என்ற வசதியை அளிக்கலாம்.
மெல்லிசை என்று தனியாக ஆல்பம் போடுவதைவிட, கதையுடன் வரும் பாடல்களையே ரசிக்க முடியும்!
ஓநாயும் ஆட்டுக் குட்டியும்படத்தில் பாடல்களே இல்லை. படம் அருமையான இருந்தது. படத்துடன் ஒட்டாத பாடல்களால் படத்திற்கு நட்டம்,
ReplyDeletePackirisamy N,
ReplyDelete//படங்களை விட பாடல்களை அதிகமாக ரசிக்கும் ...//
பாடல்களைக் கேட்டு ரசிக்கணும் .... எதற்கு அதைப் பார்த்துக் கொண்டு ....!