Wednesday, May 07, 2014

749. தருமி பக்கம் (18) .... அந்தக் காலத்தில ...





*

“அதீதம்”  இணைய இதழில் வந்த தருமி பக்கத்தின் மறு பதிப்பு ....

*

தின்பண்ட வரிசை ....



*




சிறு வயதில் ஊருக்குப் போனால் அங்கே கிடைக்கும் தின்பண்ட வரிசை மிகச் சிறியது தான். ஆனாலும் அவையெல்லாம் மிகவும் பிடித்த ஒன்று. நிச்சயமாக சந்தை அன்று கிடைக்கும் அவித்த பயறு வகைகள் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் தின்பண்டம். அதன்பின் எப்போதும் கிடைக்கும் தின்பண்டம் ஒரு கையளவு பெரிதாக இருக்கும் அரிசி முருக்கு. நல்ல வெள்ளையாக இருக்கும். அதிலிருந்து  எள் அங்கங்கே எட்டிப் பார்க்கும்.

அனேகமாக இது காப்பி குடிக்கும் போது கிடைக்கும் அதற்கான சைட் டிஷ்! இரண்டும் கைக்கு வந்ததும் முருக்கை உடைத்து அதிலிருந்து முக்கால் வாசியைக் காப்பிக்குள் போட்டு விட வேண்டும். அதன்பின் கைவசம் மீதி இருக்கும் முருக்கை சாப்பிட வேண்டும். இந்த நேரத்திற்குள் முருக்கு காப்பிக்குள் முங்கி, முக்குளித்து உள்ளே போய் ‘அடங்கி’ விடும். காப்பியின் சூடும் போய் விடும். இப்போது காப்பியைக் குடிக்க வேண்டும். முதலில் அனேகமாகக் காப்பி மட்டும் வாய்க்குள் போகும். அதன்பின் மிதக்கும் ஒன்றிரண்டு முருக்குத் துண்டுகளும் உடன் போகும். கடைசியில் காப்பியைச் சுற்றிச் சுழற்றினால் நன்கு ஊறிப்போயிருக்கும் முருக்குத் துண்டுகள் காப்பிக்குத் தனிச் சுவை கொடுத்து உள்ளே போகும்.  காப்பி முடிந்த பின் மீதி ஊறிய முருக்குகள் தனிச் சுவையோடு உள்ளே போகும்.  ஊருக்குப் போவது நின்று போனபின் வேறு முருக்குகளைக் காப்பியில் ஊறப் போட்டால் அப்படி ஒன்றும் சுவையாக இல்லை. அந்த காப்பிக்கும் - வெள்ளைக் காப்பியோ, கருப்புக் காப்பியோ - எங்கள் ஊர் அரிசி முருக்குக்கும் மட்டும் தான் அந்த combo-effect போலும்!

 மதுரை வாழ்க்கை ஆரம்பித்த வருடங்களில் இந்த முருக்குக் கதை மதுரை வரை சென்றது. விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்பிப் போகும் முன் எங்கள் ஊர் ஹோட்டலில் அரிசி முருக்கு செய்பவர் எங்கள் வீட்டுக்கே வந்து முருக்கு செய்து கொடுப்பார். அனேகமாக ஊருக்குப் புறப்படும் ஓரிரு நாட்களுக்கு முன் வந்து முருக்கு செய்து கொடுப்பார்.  மீதியிருக்கும் அந்த ஓரிரு நாட்களில் முருக்குக்கு எந்த ரேஷனும் இருக்காது. வேண்டிய மட்டும் எடுத்துச் சாப்பிடலாம். ஆனால் மதுரைக்குப் போனதும் ரேஷன் வந்து விடும். அம்மா கொடுக்கும்போது, கொடுப்பதை மட்டும் சாப்பிட வேண்டும்.

இருந்ததென்னவொ ஒன்றரை அறை மட்டும்  இருந்த வீடுதான். ஆனாலும், வழக்கமாக இந்த முருக்கு வகையறாக்கள் கைக்குக் கிடைக்காத அளவிற்கு  உயரே வைத்து விடுவார்கள். அதற்கென்றே இருந்த சதுர தகர டப்பாவில் வைத்து மேலே வைத்து விடுவார்கள். எனக்கு எட்டாது. ஆனால் எட்டாத பழம் தானே சுவை. அம்மா வெளியே எங்கேயும் செல்லும் போது கண்ணபிரானின் வெண்ணெய் திருட்டு வேலையை நான் முருக்குத் திருட்டாக செய்து விடுவேன். கண்ண பிரான் பானைகளை அடுக்கி உரியிலிருந்து வெண்ணெய் எடுப்பாராம். நான் எங்கள் கதவின் மேல் ஏறி என் திருவிளையாட்டின் மூலம் முருக்கை எடுப்பேன்.

எங்கள் கதவில் மூன்று இடங்களில்  மரச் சட்டங்கள் இருக்கும். கதவு உறுதியாக இருக்க வேண்டுமே என்று அந்த மரக்கட்டைகள் கட்டையின் முன்புறம் இருக்கும். ஒன்று மேலே; இன்னொன்று கீழே; இன்னொன்று நடுவில். எட்டி மேலே உள்ள கட்டையைப் பிடித்து, கதவின் உச்சியை ஒரு கை பிடிக்கும். காலை நடுக்கட்டையில் வைத்து ஏறினால் மேலே உள்ள முருக்கு டப்பாவை எட்டி விடலாம். அம்மா வருவதற்குள் வேகமாக கதவில் ஏறி ஒன்று - பொதுவாக ஒன்றோடு நிற்பதில்லை - அல்லது இரண்டு முருக்குகளை எடுத்துக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு இறங்கி விடுவேன்.  இறங்கியதும் கால் சட்டையோடு முருக்கை கையால் இரண்டு போடு போட்டதும் முருக்கு நொறுங்கி விடும்.  இனி ... மெல்ல தின்று கொள்ளலாம்.

இதில் ஒரு சின்ன பிரச்சனை. அனேகமாக உங்களுக்கெல்லாம தெரியாத ஒரு பிரச்சனை. அந்தக் காலத்தில் துணிகளை வெளுக்க வீட்டுக்கே வண்ணார் வருவார்கள். அவர்களிடம் தான் துணி வெளுக்கப் போடுவோம். அவர்கள் துவைக்க ஆற்றிற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே வெளுப்பதற்கு முன் துணிகள் sterilise  செய்யப்படும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆற்றுப் படுகையில் உள்ள உவர் மண் என்று சொல்வார்கள். அதில் துணிகளைப் போட்டு புரட்டி எடுத்து, அதற்குப் பிறகு அழுக்குத் துணிகளைப் பெரிய மூட்டையாகக் கட்டி, சுண்ணாம்புக் காளவாசலில் இருக்குமே அது போல் வைத்து துணிகளை வேக வைத்து விடுவார்கள். எங்கள் அழுக்கு அத்தனை அதிகம் போலும். உவர் மண் போட்டு, வேக வைத்து, அதன் பின் அடித்துத் துவைத்து வெளுப்பார்கள். இதனால் எங்கள் கால்சட்டையின் பாக்கெட்டுக்குள் எப்படியும் சிறிது மணல் இருக்கும். இந்த மணலோடு தான் திருடிய முருக்கைச் சாப்பிடணும்! இப்படி ஒரு பிரச்சனை இருந்தது! ஊதி ஊதி கடைசி துண்டுகளைச் சாப்பிடணும்.

ஊரில் எப்போதும் அந்தக் காலத்தில் கிடைத்த தின்பண்டம் காய வைத்த பனங்கிழங்கு. எந்தக் காலத்தில் பிடுங்குவார்களோ தெரியாது. அனேகமாக அளவுக்கு மீறி கிடைக்கும் போலும். நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் மெத்தையில் மொத்தமாக புளி, வத்தல் இவைகளைப் போட்டு வைக்கும் ஒரு அறையில் மூட்டை கட்டி காய வைத்த பனங்கிழங்குகள் இருக்கும். இதுவும் எங்கள் பொருளாதார நிலைக்கு நல்ல indicator ஆக இருந்தது. சின்ன வயதில் இரண்டு மூன்று பெரிய மூட்டைகளில் கிழங்கு இருக்கும்.


அத்ன் பின் மூட்டைகளின் எண்ணிக்கையில் குறைவு நடந்தது. பின்னால் நார்ப் பெட்டிகளுக்குள் சென்றது. அப்படியே குறைந்தது. சின்ன வ்யதில் கிழங்குகளுக்குப் பஞ்சமே இல்லை. பல்லுக்கும் நல்ல வலு இருந்தது. மெத்தைக்குப் போய் கிண்ணிப் பெட்டியில் அள்ளி எடுத்துக் கொண்டு வந்தால் ‘அரவை’ நன்றாக போகும்.

’கிண்ணிப் பொட்டி’


பின்னாளில் இதற்கு ஒரு combination  கிடைத்தது. கொஞ்சம் கிழங்கு ... சின்ன தேங்காய்த் துண்டு ... சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். தேங்காய் இல்லாவிட்டால் கொஞ்சம் பொரிகடலை. இதுவும் நல்ல combo effect !


சின்ன வயதில் பனம்பழம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை .. பின்னாளில் பனம் பழம் ஏதும் சாப்பிடவேயில்லை.  விழுந்து கிடக்கும் பனம் பழத்தைச் சுட்டுத் தருவார்கள். நல்ல மணம் இருக்கும். நாராக இருக்கும். சப்பிச் சப்பி சாப்பிட வேண்டும். நன்றாகவே இருந்தது. ரொம்ப



சின்ன வயதில் சாப்பிட்டது;  அதன் பின்னால் வாய்ப்பே கிடைக்கவில்லை;

அனேகமாக கிராமத்துப் பசங்க யாரும் குருவியை, அணிலைச் சுட்டு தின்னாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. குறைந்த அனுபவம் தான். இதோடு மழைக்காலத்தில் வரும் ஈசல் பூச்சிகளைப் பிடித்து, வறுத்து தின்ற அனுபவமும் உண்டு.

அது ஒரு காலம் ....








*




8 comments:

  1. காணம், மொச்சை, முறுக்கு, கடுங் காப்பி மறக்க முடியாத உணவுகள். நீங்கள் கூறியதை போல அந்த முறுக்கி ருசி இங்கே கிடைப்பதில்லை

    ReplyDelete
  2. அதென்ன 'முருக்கு'? கடுக் முடுக்ன்னு கடிச்சு அரைச்சுத் தின்னணுமுல்லே? மு'று'க்கா இருந்தத்தானே முடியும்:-)

    சின்ன வயசுலே வீட்டுக்கு வீடு கண்ணன்களும் கண்ணிகளும் தவறாமல் இருப்பாங்க:-)))))

    நீங்க முறுக்குன்னா நான் அதிரஸம்!

    ReplyDelete
  3. அது ஒரு கனாக்காலம்.

    ReplyDelete
  4. ரெண்டு பெரியவங்க - டீச்சர் & டாக்டர் - வந்து சொல்லிக் கொடுத்திட்டீங்க ... நானும் இனிமே ‘முறுக்கிக்கிறேன்’. நன்றி

    ReplyDelete
  5. வேல்முருகன்,
    நம்ம ஊர்க்காரரே வந்து சொன்னா நல்லா இருக்கு. நன்றி.

    பழனி கந்தசாமி,
    மிக்க நன்றி.
    ஆனாலும் அது கனவுக்காலம் தான். இப்0போ அப்படி ‘கடிச்சி’ தின்ன கஷ்டமாயிருக்கே!

    ReplyDelete
  6. நீங்கள் முருக்கு என்பதை முறுக்கு என்போம். ரீச்சர், டாக்டர் வேறு சொல்கிறார்கள் .
    அடுத்து அவித்துக் காயவைத்த பனங்கிழங்கை புளுக்கொடியல் என்போம். அவித்து காயவைத்துக் குற்றிய நெல்லைப் புழுங்கல் அரிசி என்பதுபோல்.
    புழுக்கொடியலுக்கு தேங்காய்ச்சொட்டு அமுதமுங்கோ? இப்போதும் வீட்டில் 4 கிலோ ஊரிலிருந்து,எடுத்து வைத்து சாப்பிடுகிறேன். பல்லுக்கு இப்போ கொஞ்சம் சிரமம் ஆனாலும் சுவை மறக்கமுடியவில்லை.
    இந்தக் கிண்ணிப் பெட்டியை ஈழத்தில் கடகம் என்போம்.
    பனம்பழம் -மறக்கமுடியுமா?, யாழ்பாணத்தவரை சிங்கள நண்பர்கள் அந்த நாளில் பகிடியாகப் பனங்கொட்டை சூப்பிகள் என்பார்கள். அந்த அளவு பிரபலம்.
    அது போல் பனாட்டு, பனங்காய்ப் பணியாரம் மறக்கமுடியாதவை.
    குருவி, அணில், ஈசல் இருந்தது, ஆனால் இவற்றை உண்ணலாம் என அப்போது தெரியாது, ஊரில் எவரும் உண்டதைக் கண்டதில்லை.
    அந்தக் காலம் இனி வராது.
    தயவு செய்து உங்களிடமுள்ள கிண்ணிப் பெட்டி (கடகம்) யின் முழுஅளவுப் படத்தின் பிரதியை எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா? johan.arunasalam@gmail.com .
    நன்றி!

    ReplyDelete
  7. தருமிய்யா,

    //ரெண்டு பெரியவங்க - டீச்சர் & டாக்டர் - வந்து சொல்லிக் கொடுத்திட்டீங்க ... நானும் இனிமே ‘முறுக்கிக்கிறேன்’. நன்றி//

    இந்த முருக்கு- முறுக்கு பஞ்சாயத்துக்கு அப்போவே தீர்ப்பெழுதிட்டோம்ல,

    //முருக்கு- முறுக்கு:

    முருக்கு என்றால் அழித்தல்.

    முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு, ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

    ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.//

    http://vovalpaarvai.blogspot.in/2013/02/5.html

    # //தின்பண்டம் காய வைத்த பனங்கிழங்கு. எந்தக் காலத்தில் பிடுங்குவார்களோ தெரியாது. அனேகமாக அளவுக்கு மீறி கிடைக்கும் போலும். //

    அது தானா விளையாது, பனங்கொட்டைகளை முளைக்க வைத்து ,மரமாக வேர் ஊன்றும் முன்னர் பிடுங்குவது.

    இயல்பாக கீழ விழுந்த பனங்காயில் இருந்தும் அப்படி கிடைக்கும், அவை பெரிய எண்ணிக்கையில் இருக்காது.

    விற்பதற்காக முளைக்கட்டி இளங்குறுத்தாக தோண்டி எடுக்கிறார்கள், ஒவ்வொரு பனங்கிழங்கும் ஒரு பனைமரம் அவ்வ்!

    எங்க ஊர்ப்பக்கம் இப்பவும் அவிச்ச ,சுட்ட பனங்கிழங்கு விக்குறாங்க ,எப்பவாச்சும் சாப்பிடுவது உண்டு.

    #// ஒரு அறையில் மூட்டை கட்டி காய வைத்த பனங்கிழங்குகள் இருக்கும். இதுவும் எங்கள் பொருளாதார நிலைக்கு நல்ல indicator ஆக இருந்தது//

    எங்க பக்கம்லாம் மரத்தொம்பை அல்லது பத்தாயம் இருப்பதும் ,அது நிறைய நெல் இருப்பதும் பொருளாதார நிலைக்கு இன்டிகேட்டர்.

    நம்பர் போட்டு அடுக்கு அடுக்கா பெட்டி போல ஒன்னு மேல ஒன்னா அடுக்கி வச்ச மரப்பெட்டிகள், தான் பத்தாயம், அடியில சின்ன கதவு, அதுக்கு தாழ்ப்பாள்,பூட்டுலாம் உண்டு, அதை தொறந்தா நெல்லு கொட்டும்!!!

    # கிண்ணிப்பெட்டி என நீங்க சொல்வதை, எங்க ஊர்ப்பக்கம் ,"கொட்டாப்பெட்டி" எனச்சொல்வார்கள், நாட்டு வெல்லம் வைக்க மட்டும் பயன்ப்படுத்துவார்கள், நெல்லு,அரிசிக்குலாம் மூங்கில் கூடை தான்.

    இந்தக்கொட்டாப்பொட்டிக்கு மூடிலாம் வேற இருக்கும்.

    ReplyDelete
  8. வவ்ஸ்
    எம்புட்டு நல்ல ‘பையனாக’ இருக்கீங்க ... ஒரு ‘அவ்வ்’ கூட இல்லாமல் உங்களிடமிருந்து ஒரு பின்னூட்டம்!

    //எங்க ஊர்ப்பக்கம் இப்பவும் அவிச்ச...//
    //எங்க பக்கம்லாம் மரத்தொம்பை ...//
    //எங்க ஊர்ப்பக்கம் ,"கொட்டாப்பெட்டி" எ//

    அது எதுங்க ?

    ReplyDelete