*
*
சிறு
வயதில் அப்பா ஊருக்குப் போகும் போது ஒரு விதம் என்றால் அங்கிருந்து பத்துப் பதினைந்து
மைல் தள்ளியிருந்த அம்மா ஊருக்குப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமாக
இருக்கும். அம்மா ஊர் மரக்கடைகளுக்கும், சீமை அல்லது மலையாள ஓடு என்பார்களே அந்த ஓட்டுக்கும்
பிரபலமான பாவூர் சத்திரம் என்ற ஊருக்குப் பக்கதிலிருந்த குறும்பலாப்பேரி என்ற ஊர்.
இங்கு எனக்கு இரு தாத்தா-பாட்டி வீடுகள். ஒன்று பெத்த அம்மாவின் வீடு; இன்னொன்று வளர்த்த
அம்மாவின் வீடு. ஒரு காலத்தில் இந்த இரு குடும்பங்களும் உறவினர்களாய், நெருங்கி இருந்திருக்கிறார்கள்.
ஆனால் பின்னால் விலகி விட்டார்கள்.
நாங்கள்
குடும்பத்தோடு முதலில் வளர்த்த அம்மா வீட்டிற்குப் போவோம். சில மணி கழித்து நானும்
அப்பாவும் மட்டும் பெத்த அம்மா வீட்டிற்குப் போவோம். அதென்னவோ இந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம்
அப்பா தன் வழக்கமான வெள்ளைச் சட்டை, வேட்டியோடு தோளில் ஒரு அங்கவஸ்திரம் போட்டிருப்பார்கள்.
கழுத்தைச் சுற்றி போட்டிருப்பார்கள். துண்டின் ஒரு பகுதி முனை முன் பக்கமும், இன்னொரு
முனை பின்பக்கமும் தொங்கும். அது நீள வெள்ளைத் துண்டு. அதில் தங்க ஜரிகை பார்டர் இருக்கும்.
இதை மூன்று விரல் அகலத்திற்கு மடித்து அழகாக அயர்ன் செய்திருப்பார்கள். எப்படித்தான்
அவ்வளவு அழகாக மடித்து அயர்ன் செய்ய முடியுமோ என்று எனக்கு இன்று வரை ஒரு ஆச்சரியம்
தான். ஒரு வேளை ‘மாப்பிள்ளை ஜபர்தஸ்து’க்காக அப்பா இந்த உடையில் வந்திருப்பார்கள் போலும். இங்கே சில
நாள் என்னை விட்டு விட்டு அப்பா போய் விடுவார்கள். பின் வந்து என்னைக் கூட்டிக் கொண்டு
அடுத்த தாத்தா வீட்டிற்குப் போய், பின் அங்கிருந்து அப்பா ஊருக்கு மீண்டும் பயணம் என்பது
தான் வழக்கம்.
அந்த
வயதில் அப்பா வழி கொஞ்சம் செழிப்பாக இருந்தார்கள். அம்மா வழி பழைய கதைகள் சொல்லிக்
கொண்டு கொஞ்சம் தாழ்ந்து போய் இருந்தார்கள். இப்போது நிலை அப்படியே மாறிப்போய் உள்ளது.
வாழ்க்கையே ஒரு சகடம் தானே!
அம்மா வழி தாத்தா வீடு பெரியதாக இருக்கும். மூன்று புறமும்
வீடுகள்; நடுவில் பெரிய திறந்த முற்றம். அதில் ஒரு பெரிய பன்னீர் மரம். இந்த மரமும்
என் மனதில் இன்று வரை நின்று போன ஒரு நிழல். தாத்தா வீடு என்றால் அந்த மரமும் நினைவுக்கு
வந்து விடும். விசாலமான வீடு என்பதால் மாலையில் வெளிச்சம் போனதும் கண்ணா மூச்சி விளையாட
ஏதுவான இடம். வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொள்ள ஏராளமான இடம் இருக்கும். அப்பா வழி தாத்தா
வீட்டில் வெளியே போய் விளையாடியது தான் நிறைய. இங்கே தலை கீழ். மாலையில் கண்ணா மூச்சி
விளையாட்டு. பகலில் புளியங்கொட்டை வைத்து ‘ஒத்தையா .. ரெட்டையா?’ விளையாட்டு இருக்கும்.
அல்லது பாண்டி விளையாட்டு. இதில் நான் ரொம்ப வீக்; எப்போதும் தோற்று விடுவேன். எப்போதும்
நான் ஜெயிக்கும் விளையாட்டு சினிமா பெயர் சொல்லி விளையாடுவது.
இங்கு
எனக்கு விளையாட்டுத் துணை என்று அதிகம் இல்லை. என் சித்தி தான் எனக்கு முழு துணை. சித்திக்கு
என்னிடம் கொள்ளைப் பிரியம். நேரம் முழுமையும் அநேகமாக அவர்களோடுதான் இருப்பேன். அம்மாவிடம்
எதிர்பார்த்த அன்பு அவர்களிடமிருந்து தான் கிடைத்தது. சித்தியைப் போல் இன்னும் ஒருவரை
நான் இன்னும் பார்த்ததில்லை. எப்படியும் யாரைப் பற்றியும் நல்லது சொல்ல நாலாயிரம் பேர் இருந்தாலும், ஒரு நாலு பேராவது மோசமாகப் பேசுவது
வழக்கம் தான். ஆனால் என் வாழ்க்கையில் பொல்லாத ஒரு வார்த்தையையும் நான் எங்கும் சித்தியைப்
பற்றி யாரும் பேசியதாகக் கேட்டதேயில்லை. திருமணமாகி அவர்கள் சென்ற ஊரிலும் அதே போல்
தான். அங்கே ஒரு பள்ளியின் பொறுப்பாளராகவும், தலைமை ஆசிரியையாகவும் இருந்தார்கள். ஆசிரியர்களிலிருந்து
மாணவர்கள் வரை அவர்கள் மேல் அத்தனை மரியாதையையும், அன்பையும் பார்த்திருக்கிறேன். அட
.. இவ்வளவு எதுக்கு? ஐந்து நாத்தனார்கள் அவர்களுக்கு. ஒரு சண்டையோ .. எதுவுமோ இல்லை.
அவர்களது பிள்ளைகளுக்கு புத்தி சொல்ல சித்தியிடம் பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். மாமியாரும்,
மருமகளும் மாவு ஆட்டிக் கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை கிராமமே ஆச்சரியமாகப்
பார்க்கும்; பேசும்! இது போன்ற ஒரு உயர்ந்த
ஜீவனை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை.
வெளியில்
சென்றால் போகும் ஒரே இடம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில். சின்ன
உயரமான கல் மண்டபத்தின் உள்ளே பிள்ளையார் இருந்தார்.
இரண்டு கல் தூண்கள் இருக்கும். அதில் ஒரு பக்கம் எனக்குப் பூட்டனாராம் – தாத்தாவின்
தந்தை – சிலை இருக்கும்.
இன்னொரு பக்கம் பூட்டியின் சிலை. பூட்டையா கட்டிய கோவிலாம்
அது.
இந்த மண்டபத்திற்கு முன்னால் மிக நீளமான, மண்டபத்தை விட உயரம் குறைவான திண்ணை
இருந்தது. உயரமாக ஓடு போட்டு வேயப்பட்ட மண்டபம். ஊர் மக்கள் நிழலுக்கும், காற்றுக்கும்
இங்கு வந்து உடம்பைச் ‘சாய்ப்பது’ உண்டு. எப்போதும் அங்கே யாராவது இருப்பார்கள். பழைய
செஸ் விளையாட்டு மாதிரி ஆடு-புலி ஆட்டம் ஒன்று உண்டே – மூணு புலி, பதினைந்து ஆடு –
அது விளையாட மண்டபத்தின் ஒரு ஓரத்தில் இடம் இருக்கும். மக்கள் விளையாடி விளையாடியே
தரையில் உள்ள செங்கல்லில் முக்கோண வடிவ பள்ளங்கள் இருக்கும். பல நாள் வேடிக்கைப் பார்த்து,
சில நாள் விளையாடியுள்ளேன்.
இன்றைய
நிலையில் உள்ள கோவிலின் சில படங்களை இங்கே பார்க்கலாம்:
தாத்தா
வீடு, பிள்ளையார் கோவில் மண்டபம் தவிர மீதி நினைவில் நிற்கும் ஒன்று மண்டபத்தின் பக்கத்தில்
நின்ற ஒரு தெரு விளக்கு. தெரு விளக்குன்னா இன்றைக்குள்ள தெரு விளக்குகள் இல்லை. வெறும்
ஒரு கல் தூண். அதன் தலையில் கண்ணாடிக் கூண்டோடு இருந்த ஒரு விளக்கு. இரவில் முழு இருட்டுதான்.
மாலையில் கல் விளக்கை ஏற்ற ஒரு ஏணியோடு ஒருவர் வருவார். மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கை
ஏற்றி வைப்பார். காலையில் வந்து விளக்கை அணைத்து விடுவார் என்று சொன்னார்கள். சின்ன
வயதில் அவர் விளக்கை ஏற்றுவதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். விளக்கையேற்றி வைத்த பின்பும்
அந்த இடத்தின் இருள் வேறெங்கும் போய் விடாது. எல்லா இருளும் அங்கேயும் இருக்கும். ஆனாலும்
ஒரு சின்ன ஒளிக்கீற்று. அப்போதே நகரத்தில் வாழ்ந்த எனக்கு ஒரு பெரிய கேள்வி – ஒளியே
தராத இந்த விளக்கு அங்கு எதற்கு என்று. ஆனாலும் இருளுக்குள் இருக்கும் அந்த விளக்குத்
தூணின் உருவம் மனதிற்குள் பதிந்து இன்று வரை நின்று நிலைத்து விட்டது.
விளக்குத்
தூணின் உருவம் மட்டும் அப்படியே மனதிற்குள் ஏன் பதிந்தது என்பதற்கான விடையும் எனக்குத்
தெரியும். ஒரு சிறுகதை தான் காரணம். அந்தக் காலத்தில் வாசித்த புதுமைப்பித்தன் எழுதிய
கதையில் இதுபோன்ற ஒரு விளக்கும், அதனை ஏற்ற வரும் ஒருவரும் இருப்பார்கள். காலப்போக்கில்
மின் விளக்கு வந்த பிறகு அந்த விளக்கு ஏற்றப்படாமல் விடப்படும். ஒரு நாள் காலை அந்த
விளக்கின் அடியில் வழக்கமாக விளக்கை ஏற்றுபவரின் சடலம் கிடைக்கும். இந்தக் கதையை இளம்
வயதில் வாசித்ததும் அம்மா ஊரில் பார்த்த அந்த விளக்குக் கம்பம் நினைவுக்கு வந்தது.
புதுமைப்பித்தனின் கதையின் scenario தெரு முக்கில் இருந்த அந்த விளக்காக என் மனதில்
உருப்பெற்று விட்டது. மின் விளக்கு வந்த சில ஆண்டுகள் வரை அந்த தூண் அங்கேயே நின்றது.
ஊர் செல்லும் போது அதைப் பார்ப்பது ஒரு கட்டாயத் தேவையாக இருந்தது.
நல்ல
வேளை … அந்த விளக்குத் தூண் சரிந்து விழுந்த கிடந்ததையும் பார்த்தேன். ஆனால் புதுமைப்பித்தனின்
கதைமாந்தனுக்கு நடந்தது எனக்கு நடக்காமல் தப்பித்தேன்!
*