*
சவாலே சமாளி. சிவாஜி; ஜெயலலிதா.முதல் நாள். மதுரை தேவி தியேட்டர். (இராதாகிருஷ்னன் பார்த்திபனாக இல்லாமல் வெறும் பார்த்திபனாக இருந்த போது ’ஹவுஸ் புல்’ அப்டின்னு ஒரு படம் எடுத்தாரே, அந்த தியேட்டர் தான்.) முதல் நாள் மாலை படம் போகலாம்னு நண்பன் ஆல்பர்ட் சொன்னான். அதெல்லாம் வேண்டாண்டா... யாரு அடி வாங்குறது. பிறகு பார்த்துக்கலாம் அப்டின்னேன். நான் டிக்கெட் வாங்கிர்ரேன்... வா’ன்னு இழுத்துட்டுப் போனான்.
கிழக்கு மேற்காகப் போகும் ரோட்டில் அந்த தியேட்டர் இருந்தது. தியேட்டரும் கீழ் மேலாக இருந்தது. ரோட்டிலிருந்து 100 மீட்டர் நீளம் தாண்டி தான் தியேட்டர். அந்த 100 மீட்டரும் ஒரு ரோட் மாதிரி நீளமாக தியேட்டருக்குள் போகும்.இந்தச் சாலையின் இரு பக்க ஓரத்தில் சுவர் ஓரமாக ஒரு ஆள் போகும் அகலத்தில் கம்பி வைத்து வரிசையாக டிக்கட் வாங்க கட்டி இருப்பார்கள். தலைக்கு மேல் தகரம் போட்டிருக்கும். மெயின் கேட்டை மூடி இரு காவலர்கள் நிற்பார்கள். அந்த மெயின் வாசல் வரை டிக்கெட் வாங்க அதில் வரிசையாக ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். மெயின் கதவுக்கு வெளியே ரோட்டில் ஜே..ஜே ..ன்னு கூட்டம்.
மெல்ல கேட் வரை நானும் ஆல்பர்ட்டும் போனோம். எனக்கு அவ்வளவு தான் தைரியமிருந்தது. போதும்டா... வா போய்டுவோம் அப்டின்னேன். கொஞ்சம் பொறு; C.T.O. (commercial tax office அப்டின்னு சொல்லிப் பார்க்கிறேன் என்று சொல்லி திடீரென்று கூட்டத்திலிருந்து எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டு போவது போல் வாயில் காப்பான் பக்கதில் போய் விட்டான். என்னமோ பேசினான். கதவைத் திறந்து உள்ளே விட்டு விட்டார்கள். எல்லோரும் வரிசையில் நிற்கும் போது இவன் மட்டும் நேரே தியேட்டர் வாசலுக்குப் போய் விட்டான். அங்கே ஒரு பெரிய கதவு இருக்கும். அங்கே போனான் ... அடுத்து உள்ளே போய்விட்டான்.
கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். எனக்கு என்ன பயம்னா ... ஆல்பர்ட் பயலுக்கு இத்தனூண்டு உடம்பு. ஆளும் குட்டை; சின்ன உருவம். இவன் உடம்புக்கு C.T.O. அப்டின்னு சொன்னாலும் யார் நம்புவார்கள்... உள்ளே விட்டு ’மாட்டிறக் கூடாதேன்னு’ எனக்குப் பயம். கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். டிக்கெட் குடுக்க ஆரம்பித்தார்கள். பாதி வழி வந்து, அங்கிருந்து என்னைப் பார்த்துக் கையைக் காண்பித்தான். நானும் அப்படியே உள்ளே போய் விட்டேன். இப்படி முதல் நாள் ஒரு படம் பார்த்தோம்.
அடுத்த முறையும் இதே போல் சினிமா முதல் நாள் போவோம் என்றான். நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஏதோ அந்த தியேட்டர் ஆளுக அவன நம்பிட்டாங்க ... எப்படித்தான் நம்பினார்களோ! அடுத்த தியேட்டர்லயும் இதே போல் சொன்னா என்ன ஆகுமோன்னு பயமா இருக்குடான்னு சொல்லி அவனையும் தடுத்து நிறுத்தி விட்டேன். அப்போவெல்லாம் தியேட்டர்னா கூட்டமோ .. கூட்டம். அதில் இப்படிப் படம் பார்த்ததெல்லாம் ஒரு பெரிய adventure தான்!
இது பழைய்ய்ய்ய கதை. ஆனால் புதிய கதை என்ன தெரியுமா?
சில படங்களை மட்டும் தியேட்டரில் பார்க்க ஆசை. பொதுவாக அவை எல்லாம் இயக்குனர்களை வைத்து கொடுக்கும் முன்னுரிமை. சமீபத்தில் வந்தவற்றில் ஜிகர்தண்டா, சதுரங்க சூதாட்டம் இரண்டையும் பார்த்தேன் - வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இரு தியேட்டர்கள். எளிதாகப் போயிற்று. இன்னொரு படமும் இயக்குனர் வைத்து பார்க்க நினைத்தேன். தொலைவில் தியேட்டர்கள் இருந்ததால் இன்று .. நாளை .. என்று தள்ளிப் போனது. சென்ற வியாழக்கிழமை படம் பார்த்து விட முடிவு செய்தேன். அடுத்த நாள் படங்கள் எல்லாம் மாறி விடுமேன்னு நினைத்தேன். ஆனால் மதியம் தூக்கம் கண்ணைக் கட்டியது. சரி ஒரு மணி நேரம் மண்டையைப் போடுவோம்னு நினச்சி நாலு மணிக்குப் படுத்தேன். ஆனால் எழுந்த போது மணி 5.30.
இனி எங்கே போவது என்று நினைத்து, தங்ஸிடம் சினிமா போகலாம்னு நினச்சேன்; தூங்கிட்டேன் என்றேன். தங்ஸிற்கு நான் பார்க்க நினைத்த படம் தெரியும். ’ஏம்’பா இனிமே போக முடியாதா’ன்னு கேட்டாங்க. அது எனக்கு ஒரு கிரியா ஊக்கியாகிப் போனது. போய்ட்டு வந்திருவோம்னு நினச்சி புறப்பட்டேன். மணி 5.45
நான் இருந்தது மதுரைக் கிராமத்தின் மேற்குக் கடைசி. நான் படம் பார்க்க நினைத்தது கிழக்குக் கடைசி. முன்பு ஒரு நல்ல படம் - ஆரண்ய காண்டம் - படம் பார்க்கப் போனேன். படமும் நன்றாக இருந்தது; தியேட்டரும் நன்றாக இருந்தது; இடைவேளையில் சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் க்ரீமும் நன்றாக இருந்தது. இதனாலேயே அந்தத் தியேட்டருக்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
நடுவில் பெட்ரோல் வேறு போட வேண்டியதிருந்தது. அடிச்சிப் பிடிச்சி தியேட்டருக்குப் போனேன். எப்படியும் பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும் என்று நினைத்து தியேட்டருக்குப் போனேன். வாசலில் இருந்த இளம் வயதுக் காப்போன் படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை; இன்னும் டிக்கெட்டும் கொடுக்கவில்லை என்றார். ஏன் என்றேன். பத்து இருபது பேராவது வந்தால் தான் படம் என்றார்.எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றேன். இரண்டு தியேட்டர் அங்கே. ஒரு ஆங்கிலப்படத்திற்கு ஒரு பையனும், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்தப் படத்திற்கு வந்திருந்தார்களோ.. தெரியவில்லை. எப்படி ரொம்ப தூரத்திலிருந்து வேகமாக வந்தேன் என்று சொன்னேன். என்ன நினைத்தாரோ மெல்ல போய் டிக்கெட் கொடுப்பவரிடம் ஏதோ கேட்டார். பின்பு என்னிடம் வந்து சார்.. ’அந்தப் படம் அபிராமி தியேட்டரில் ஓடுகிறதாம். அங்கேயே போய் விடுங்களேன்’ என்றார்.
வீட்டுக்குப் போகலாமா தியேட்டருக்குப் போகலாமான்னு நினைத்தேன். நடந்தது நடந்து போச்சி. அந்த தியேட்டருக்கே போய் விடலாம்னு நினச்சி புறப்பட்டேன். இதிலும் ஒரு சந்தேகம் ... இந்த அபிராமி தியேட்டர் எங்கே இருக்குன்னு...அம்பிகா / அமராவதி என்ற இரு தியேட்டர்கள் உண்டு. ஆனால் எது எங்கே என்பது பற்றிய சந்தேகம் அது. சரியென்று ஒரு காம்ப்ளக்ஸ் போனேன். அங்கு அம்பிகா இருந்தது; அபிராமி இல்லை. அது எங்கே என்று கேட்டு அட... போகிற வழிதான்னு அபிராமிக்குப் போனேன். அங்கே இருபது இருபத்தியைந்து வண்டிகள் நின்றன. சரி படம் ஓடுகிறது என்று நினைத்து அங்கிருந்தவரிடம் கேட்டேன். அநியாயம் போங்க... இங்கேயும் இரு தியேட்டர்கள். ஆனால் அன்று தியேட்டர்காரர்களது choice என்னன்னா... வேறு ஒரு படத்திற்கு. ஒரு தியேட்டரில் மட்டும் வேறு ஒரு படம் ஓடியது. நான் நினைத்த படம் அவர்கள் choiceல் இல்லை. ஓடிய படம் பார்க்க விருப்பமில்லை. பேசாமல் அப்படியே வண்டியை வீட்டை நோக்கித் திரும்பினேன்.
சோகத்தை மறைக்க வழியில் இருந்த பர்மா இடியாப்பக் கடையில் இடியாப்பம் வாங்கி வீட்டுக்குத் திரும்பினேன். வழியிலேயே ஒரு முடிவு எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்றார்கள் தங்ஸ். நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சரியாக நான் எடுத்திருந்த முடிவை அச்சு அசல் மாறாமல் கீதை மந்திரம் போல் சொன்னார்கள்:
”இனி இப்படி தியேட்டர் பக்கம் போகாதீங்க... பேசாம வீட்டுலேயே உக்காந்து திருட்டு டிவிடியில் படம் பாத்துக்கங்க” என்றார்கள்.
தங்ஸ் பேச்சைக் கேட்காமல் இருக்கலாமா... !
*
அலைச்சலே வேண்டாம் ,இணையத்திலேயே புது படங்களைப் பார்க்கலாமே !
ReplyDeleteதேவி தியெட்டரில் பாட்ஷா house full ah பார்த்தது இன்றும் நினைவிறுக்கிறது ..., houseful படம் suiting அப்ப நான் 6th படிக்கிரேன் chandler la ..., எனக்கும் அதே தியெட்டர் கண்டு பிடிக்கிற பிரச்சினை வந்தி௫க்கு once went to watch a movie in big cinemas they told me the show was cancelled & asked me to go to abirami , I got confused went to ambika then finally found out abirami opposite to sourashtra school and still amirtham confuses me ... I hope u went to ' sneha's...
ReplyDeleteஅருமையான அனுபவத்தை பகிர்ந்ததிற்கு நன்றி. இந்த மாதிரி நாங்களும் ஹாஸ்டலில் இருந்து சுவர் எகிறி குதித்து சினிமா பார்த்து விட்டு பின் வார்டேனிடம் மாட்டிகொண்டு பேய் அறைந்ததை போல் முழித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
ReplyDeleteஇவ்வளவு அலைந்தும் படம் பார்க்க இயலாமல் ஆகிவிட்டதே,
ReplyDeleteஅடக் கொடுமையே! தியேட்டர்கள் இப்படி காத்து வாங்கற நிலையிலே படங்கள் எப்படி ஓடும்!?
ReplyDeletekarthik
ReplyDelete// I hope u went to ' sneha's...//
அட...கூட்டத்தில கட்டுச்சோத்தை அவுக்காதீங்க......
//பேய் அறைந்ததை போல்...//
ReplyDeleteசரியா ஒரு பேயை full timeக்கு engage பண்ணி வச்சிருக்கீங்களே.... அதுவும் பாவம் தான் ...........
கரந்தை ஜெயக்குமார் , ‘தளிர்’ சுரேஷ்
ReplyDeleteஅதானே........!