*
அடுத்த நாள் நல்ல பையனாக சாமியாரைப் பார்க்கப் போனேன். ஒரு சாவி கொடுத்தார். ஏதோ ஒரு வகுப்பறையாக இருக்குமென நினைத்தேன். தனியாகத்தான் படிக்கப் போகிறாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு யாரும் கேட்டால் என்னைப் பார்க்கச் சொல் என்றார். சரி .. போ என்றார். எந்த அறை என்று தெரியவில்லையே என்று கேட்டேன். ஒரு அறையைச் சொன்னார். எனக்கு திக்கென்றது. இதற்கு முன் இன்னொரு சாமியார் அங்கு அலுவலகம் வைத்திருந்தார். அவர் காலி செய்த அறை அது. அந்த அறையா என்று எனக்கு ஒரு சந்தேகம். மறுபடி கேட்டு உறுதி செய்து கொண்டு அந்த அறைக்குப் போனேன்.
அந்த அறை எனக்குத் தெரியும். வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். அந்த அறையா என்ற ஆச்சரியத்துடன் அந்த அறைக்குப் போனேன். கோவிலின் நேர் பின்னால் Fathers' House. அதாவது சாமியார்கள் தங்கும் பங்களா. பின்னாளில் St. Xavier's College, St. Joseph's College, Loyola College போன்ற மூன்று கல்லூரிகளிலும் இருந்த Fathers' Houses ஒரே மாதிரியான கட்டிட அமைப்புடன் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்ததைப் பார்த்தேன். அந்த மூன்றோடு மதுரை St. Mary's கோவிலும் அதே அமைப்பில் இருந்தது. எல்லாமே Jesuits என்று சொல்லும் சாமியார்களின் அமைப்பில் இருந்தன. அதனால் தான் அந்த ஒற்றுமை.
கோவிலுக்குப் பின்னால் Fathers' House. இதற்கு இடது பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி. வலது பக்கத்தில் ஆரம்பப் பள்ளி. Fathers' Houseக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம். நிறைய தென்னையும் பாக்கு மரங்களும் இருக்கும். சுற்றிலும் சுற்றுச் சுவர்கள். இப்போது இந்த சுவர்கள் நல்ல உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. அப்போது உயரம் கொஞ்சம் கம்மி தான். வலது பக்கத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியின் முக்கிய பகுதி கிழக்கு மேற்கில் நீண்டு இருக்கும். அதன் மேற்குக் கடைசியில் இருந்தது தான் எனக்கு வாய்த்த அறை. பள்ளி அப்போது பழைய கட்டிடமாக இருந்தது. ஆனால் இந்த அறை மட்டும் ஒரு புதுக்கட்டிடமாக இருந்தது.
வாசலே மிக அகலமாக இருக்கும். நான்கைந்து நீளப்படிகள் ஏறணும். அங்கே அறை நீளத்திற்கு collapsible gate இருக்கும். ஒரு பாதி கதவுதான் திறப்போம். முன்னறை மாதிரி நீள வாக்கில் முதல் அறை. அடுத்து இன்னொரு வாசல் திறக்க நம் அறை! வீட்டில் செங்கல் தரை. அம்மா வாரம் தோறும் சாணியால் மெழுகுவார்கள். ஆனால் இங்கே எல்லாம் சிமண்ட் மயம். உள்ளே நுழைந்தால் .... அடே .. அப்பா...!
கல்லூரியைத் தவிர இதுவரை என் தலைக்கு மேல் மின் விசிறி எப்போதும் சுற்றியதில்லை. இங்கே தலைக்கு மேல் ஒரு மின் விசிறி. அதன் கீழே மேசை; ஒரு நாற்காலி. மேசை நாற்காலி என்று உட்கார்ந்து கொண்டு படிப்பது எல்லாம் ஒரு கனவு தானே ஒழிய, நிச்சயமாக நிஜத்தில் அது மாதிரி ஏதும் வாழ்க்கையில் இது வரை நடந்தது இல்லை. அதுவும் முட்டை விளக்கில் இருந்து பழகிய எனக்கு ஒரு பெரிய ட்யூப் லைட் வெளிச்சம் ... அடடா... என்ன ஆச்சரியம். என்னமோ சொல்வார்களே .. என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு சம்பவம் என்பார்களே .. அது மாதிரி புது அறை இருந்தது.
நல்லா படிக்கிற ஒரு நல்ல பிள்ளைக்கு இந்த மாதிரி ஒரு அறை கிடைத்திருந்தால் என்னமா பண்ணியிருப்பான்! என்னென்னமோ பண்ணியிருப்பான்! ஆனால் ... நான் என்ன அந்த மாதிரி நல்ல பையனா?
அறை அமைந்ததை விட சுற்றுச் சுவர் எனக்கு மிகவும் தோதானஒன்றாக மாறிப்போய் அதுவே வாழ்க்கையை மேலும் சிறிது புதிய கோணத்தில் மாற்றியது. சுவர் எப்படி வாழ்க்கையை மாற்றும் என்கிறீர்களா?
மாற்றும் ... நிச்சயமாக என் வாழ்வில் மாற்றியது. எப்படி என்று பிறகு சொல்கிறேனே ....
*
மாற்றத்தை அறிய காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteசுற்றுச் சுவர் வாழ்க்கையை மாற்றியதா
ReplyDeleteகாத்திருக்கிறேன் ஐயா
தம +1
வாரத் தொடர் போல கடைசியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் knot ஒன்றை வைத்து விடுகிறீர்கள். interesting!
ReplyDelete