Saturday, November 19, 2016

916. GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 2





*


முந்திய பதிவு;

GOD IS NOT GREAT ... CHRISTOPHER HITCHENS ... 1

**
மூன்றாம் பதிவு ...

**



 ***

 Chapter 7

 வெளிப்பாடுகள்: 
 பழைய ஏற்பாடு என்னும் கொடுங்கனவு 


 ‘கடவுளின்’ கட்டளைகள் அங்கங்கே அவ்வப்போது சில மனிதர்களை நேரடித் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. இந்த நம்பிக்கைக்குப் பல எதிர்ப்புகளைச் சொல்ல முடியும். சில சமயங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் யாரோ ஒருவருக்கு அளிக்கப்படுகிறது. பல சமயங்களில் – அதுவும் கிறித்துவ மதத்தில் – இந்த வெளிப்பாடுகள் ஒருமுறை கொடுத்தால் போதாது என்பது போல் பின்னால் வேறோருவருக்குக் கொடுக்கப்பட்டு வெளிப்பாடுகள் வலியுறுத்தப் படுகின்றன. இன்னொரு விதத்தில் இதற்கு நேர் எதிர்மாறாக நடக்கிறது. ஒரே ஒருவர் அவருக்குக் கொடுக்கப்படுவதே வேதமாகிறது. கொடுக்கப்படுபவரின் ஒவ்வொரு சொல்லும் வேதமாகி விடுகிறது. (97)


 பொதுவாக பல வெளிப்பாடுகள் இறுதியான வார்த்தைகளாக இருப்பதில்லை. இதில் எந்த வார்த்தை உண்மை என்று கண்டறிய பல சமயம் மதப்போர்கள் நிகழ்கின்றன. 

 அதுவும் இந்த ஏற்பாடுகள் கொடுக்கப்படுவது மத்திய கிழக்கு நாடுகளில், கல்வியறிவற்ற, சிறிது வரலாற்றுத் தொடர்புடைய ஒரு மனிதருக்குக் கொடுக்கப்படுகிறது. 

 மூன்று ஆபிரஹாமிய மதங்களிலும் கடவுளும் மோசசும் சினாய் மலைமீது சந்தித்ததாகவும் அங்கு கடவுளால் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மோசஸ் எழுதியதாகச் சொல்லப்படும் இரண்டாம் நூலில், யாத்திராகமத்தின் 20 – 40 அதிகாரங்களில் இப்படி சொல்லப்படுகிறது. 

 இந்தப் பத்து கட்டளைகளை ஒரு சிறப்பான பட்டியலாகக் கருதமுடியாது. (98) 


இக்கட்டளைகள் கடவுளால் கொடுக்கப்பட்டதல்ல ... மனிதக்கரங்களால் கொடுக்கப்பட்டவைகளே அவை. உதாரணமாக, கொலை செய்யாதே என்று ஒரு கட்டளையாகச் சொல்வதற்கு தேவை ஏதுமில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை எல்லாம் அப்போதென்ன விலக்கப்படாதவைகளாகவா இருந்திருக்கும்? (99) 


 இந்தக் கட்டளைகளில் சொல்லாமல் விடப்பட்டவைகளைத் தொகுத்தாலே அவைகளின் உண்மைத்தன்மை புரிந்து விடும். பச்சிளங்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவது பற்றியோ, கற்பழிப்புகள் பற்றியோ, அடிமைகளை வைத்துக் கொடுமை செய்வதை எதிர்த்தோ, இனப்படுகொலைகளுக்கு எதிராகவோ எந்த ஒரு கட்டளையும் கொடுக்கப்படவில்லை. (100) 

 யாத்திராமகத்தில் சொல்லப்பட்ட பல கொடுமையான, ஒழுங்கற்ற நிகழ்வுகள் நிச்சயமாக அப்படியே நடந்திருக்க வாய்ப்பில்லை. உலகின் மிகவும் புகழ் பெற்ற இஸ்ரேயலின் தொல்பொருள் விற்பன்னர்கள் கடவுள் மோசசிற்குக் கொடுத்த பத்துக் கட்டளைகள் பற்றிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்காதா என்று பெரும் முயற்சி எடுத்தும் இதுவரை அதற்கு ஏதேனும் பயனில்லை. 

 இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் முழு ஆய்வு செய்து தங்கள் நாட்டின் மீது உரிமை கோரக்கூடிய தகுந்த ஆதாரங்கள், சான்றுகள் ஏதும் கிடைக்குமா என்று தீவிரமாகத் தேடும்படி தனது நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர் யிகேல் யாதின் (Yogael Yadin) என்பவருக்கு ஆணையிட்டார். முழு முயற்சி எடுத்தும் அவர் தேடலில் ஏதும் கிடைக்கவில்லை.


யிகேல் யாதின் (Yogael Yadin), Israel Finkelstein of the Institute of Archaeology at Tel Aviv Universityல் பணியில் இருக்கும் Neil Asher Silberman என்பவரும் இணைந்து ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை கொடுத்தனர்: “மோசஸ் காலத்தில் நடந்ததாகச் சொல்லும் எவ்வித போரும் எகிப்தில் நடக்கவில்லை. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரேயலர்கள் அங்கு சுற்றித் திரியவில்லை. வாக்களிக்கப்பட்ட நாடு எதையும் அவர்கள் கண்டு கொள்ளவுமில்லை”.(102) 


தொல்பொருள் ஆய்வுகள் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தொல்பொருள் குப்பைகளில் பன்றி எலும்புகள் ஏதும் கிடைத்ததில்லை. ஆனால் மோசஸ் வாழ்ந்தது என்பதை எளிதாகப் புறந்தள்ளி விட முடியும். 


 பிரஞ்சு தொல்பொருள் ஆயவாளர் ரோலந்த் டி வாக்ஸ் (Roland de Vaux) “இஸ்ரேயலிர்களின் வரலாற்று நம்பிக்கைகளுக்கு உண்மையான வரலாற்றில் இடமில்லை; ஆகவே அவர்களின் நம்பிக்கைகளும் தவறு. (103) 


சினாய் மலையில் நிகழ்ந்த வெளிப்பாடுகளும், மோசஸ் காலத்தில் நடந்தவைகளாக எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து அதிகாரங்களும் மோசமாகச் சித்தரிக்கப்பட்ட புனைவுகள். 


 அமெரிக்க நாட்டின் மூத்த தலைவரான தாமஸ் பெய்ன் (Thomas Paine): “மேலே சொன்ன மோசசின் அதிகாரங்கள் ஐந்தும் மிகவும் போலியானவை. அவைகளை எழுதியதும் மோசஸ் இல்லை. மோசஸ் காலத்திற்குப் பின்னால் பல நூற்றாண்டுகளுக்குப் பின் அறிவற்ற, முட்டாள்தனமான சிலர் எழுதியவைகளே அவை”. (104) 


 மோசஸ் காலத்தில் நடந்தவைகளாக எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து அதிகாரங்களில் படைப்பைப் பற்றிய இரு மாறுபட்ட கருத்துகளும், ஆதமின் இரு வகை பாரம்பரியங்களும், நோவா காலத்து வெள்ளத்தைப் பற்றி இரு கூறுகளும் சொல்லப்படுள்ளன. (106) 



 Chapter 8 

பழைய ஏற்பாட்டின் தீமைகளை விடவும் 
புது ஏற்பாடு மோசமான ஒன்று 



விவிலியத்தில் சக்காரியா 9.9ல் மெசியா ஒரு கழுதையின் மேல் வருவார் என்று எழுதப்பட்டுள்ளது. யூதர்கள் இன்னும் அந்த நிகழ்விற்காகக் காத்திருக்கிறார்கள்; ஆனால் கிறித்துவர்கள் அது ஏற்கெனவே நடந்து முடிந்த போன நிகழ்வு அது என்கிறார்கள். (109) 


பழைய ஏற்பாடு போலவே புதிய ஏற்பாடும் மோசமான இட்டுக் கட்டின கதைகளின் தொகுதி தான். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு எழுதப்பட்ட தொகுப்பே இது. (110)


 ஏசுவின் பிறப்பில் அவர் ஒரு கன்னித்தாயிடமிருந்து பிறந்தார் என்று சொல்வதில் மத்தேயுவும், லூக்காவும் ஒன்றாக ஒரேவழியில் சொல்லவில்லை. 


எகிப்திலிருந்து தப்பி ஓடிய நிகழ்ச்சியிலும் அவர்கள் வெவ்வேறு விதமாக எழுதியுள்ளார்கள். மத்தேயு ஜோசப்பிற்கு கனவில் வந்த எச்சரிக்கை பற்றிக் குறிப்பிடுகிறார். லூக்கா பெத்லேகமில் அடுத்த நாற்பது நாள் தங்கியிருந்து விட்டு, பின் நாஸ்ரேத்திற்கு ஜெருசலேம் வழியாகத் திரும்ப வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.(111)


பேரரசன் சீசர் அகஸ்டஸ் வரி விதிப்பிற்காக உத்தரவிட்ட மக்கள் கணக்கெடுப்பு நடந்த அதே ஆண்டில் ஏசு பிறந்தாரென லூக்காவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் ஹெரோது மன்னன் ஜுதேயா நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்; க்யுரினியஸ் சிரியாவின் கவர்னராக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விவிலியத்தில் ஓரளவாவது வரலாற்றுக் குறிப்புகள் ஏற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் இதுவும் ஒன்று. ஆனால் ஹெரோது மன்னன் கிறித்து பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்பது வரலாறு. அதோடு அவரது காலத்தில் சிரியாவின் ஆளுநராக இருந்தது க்யுரினியஸ் அல்ல. மேலும் எந்த எகிப்து வரலாற்றாளரும் அகஸ்டஸ் வரி விதிப்பைப் பற்றி எழுதிய குறிப்பேதும் இல்லை. ஆனால், யூத வரலாற்றுக் குறிப்பாளர் ஜோசபஸ் அப்படி ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அதில் மக்கள் தங்கள் பிறந்த மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்ற எந்தக் கடினமான கட்டளைகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்கிறார். ஆயினும் அவர் இந்தக் கணக்கெடுப்பும் கிறித்து பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தே நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 


 ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் நாக் ஹமாதி ஏடுகள் என்ற புறந்தள்ளப்பட்ட விவிலியங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப் படாத யூதாசின் விவிலியமும் (Gospel of Judas) கிடைக்கப்பட்டு அதுநேஷனல் ஜியோக்ராபிக் சொசைட்டியால் மொழியாக்கம் செய்யப்பட்டு 2006 ஆண்டு வெளியிடப்பட்டது.(112) 


அதில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் வெறும் ‘ஆன்மீகப் பிதற்றல்கள்’ என்று கூறப்பட்டாலும், அவைகளில் வரும் பல நிகழ்வுகள் மிகவும் சரியான கால அளவில் உள்ளன. 


 ஏசு யூதாசைத் தனியாக அழைத்து அவருக்குச் சதையால் ஆன தன் ஈன உடலை விட்டுச செல்லும் உன்னதப் பணியில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். 


பல காலமாக எவையெல்லாம் உண்மையான, கடவுளால் ஏவப்பட்ட விவிலியங்கள் என்ற சூடான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. (113) 


பழைய ஏற்பாட்டில் உள்ள முன்னறிவித்தலில் மெசியா தாவீதின் நகரத்தில் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அது பெத்லேகமாக இருக்க வேண்டும். ஆனால் ஏசுவின் பெற்றோர்கள் நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள். பிள்ளை பிறந்திருந்தால் அங்குதான் பிறந்திருக்க வேண்டும். இதனால் அகஸ்டஸ், ஹெரோது, க்யுரினியஸ்ப் போன்ற வரல்லாற்றுப்பெயர்களையும், கணக்கெடுப்பு என்ற ஒரு நிகழ்வையும் சேர்த்து ஒரு திரிக்கப்பட்ட கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தை பிறந்தது பெத்லேகமாக மாறுகிறது – அதுவும் பிறந்த இடம் ஒரு ‘மாட்டுத் தொழுவம்’ என்பதும் ஒரு புதுச் சேர்க்கை. (114) 


ஏறத்தாழ எல்லா மதங்களிலும் – புத்த மதத்திலிருந்து இஸ்லாம் வரையிலும் – தேர்ந்த்தெடுக்கப்படும் தூதுவர்கள் மிகச்சாதாரண, பாவப்பட்ட மனிதர்களாகவோ அல்லது ஒரு ராஜகுமாரனாகவோ இருக்கிறார்கள். இது சாதாரண மக்களை ஈர்க்கும் ஒரு ஏற்பாடின்றி வேறென்ன? படித்தறிவு இல்லாத, பரிதாபத்திற்குரிய, பாவப்பட்ட மக்களை எளிதாகச் சென்றடைய இது தானே வழி. 


புது ஏற்பாட்டில் உள்ள முரண்கள் பற்றிய பெரும் தொகுப்புகள் வெளி வந்து விட்டன. 


 மரியாவைப்பற்றிச் சொல்லும்போது அவரை ‘virgin’ என்றழைக்கின்றனர். ஆனால் இந்தச்சொல் almah என்ற சொல்லிலிருந்து வருகிறது. இச்சொல்லின் பொருள் ‘இளம் பெண்’ என்பதேயாகும். (115) 


ஏசு ஒரு கன்னிகைக்குப் பிறந்தார் என்பதே இது மனிதக்கரங்கள் படைத்த கதை என்பதற்கு எளிதான தடயம். ஏசு தன் வாழ்நாளில் தன் தந்தை பரமபிதா பற்றி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஓரிடத்தில் கூட தான் ஒரு கன்னிப்பெண்ணின் மகனாகப் பிறந்தேன் என்று கூறவேயில்லை. ஆனால் தன் அன்னையிடம் அவர் பலமுறை கடுமையாக நடந்து கொண்டுள்ளார். 


காபிரேயல் நீ ஒரு கடவுளின் தாய் என்று கூறியிருந்தும், ஏசு செய்வதெல்லாம் மரியாளுக்கு ஆச்சரியமான விஷயங்களாகத்தான் இருக்கிறது. 


 மரியாளுக்கு ஏசுவோடு நான்கு மகன்களும் சில சகோதரிகளும் உள்ளதாக மத்தேயு 13: 55 -57கூறுகிறது.(116) 


புறந்தள்ளப்பட்ட ஜேம்ஸ் விவிலியத்திலும் இதைப் பற்றிச் சொல்லியுள்ளது. ஏசுவின் உடன்பிறப்பான இன்னொரு ஜீசஸ் மதக் குழுக்களில் தீவிரமாக இருந்தாரெனச் சொல்லப்பட்டுள்ளது.


கத்தோலிக்க கிறித்துவ மக்கள் மரியாளை கன்னி மாதா என்று மிகவும் பக்தியோடு  வணங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி வருத்தம் தரலாம். அநேகமாக அதில் பலருக்கு இந்த விவிலியச் செய்தி  தெரியாமலும் இருக்கலாம். அவர்களுக்காக அந்த விவிலியத்தில் இருந்து இதை மேற்கோளிடுகிறேன்:  

 "இவன் தச்சனுடைய மகனல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமான், யூதா என்பவர்கள் இவர்களுக்குச் சகோதரர் அல்லவா?


இவன் சகோதரிகள் எல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இவனுக்கு இதெல்லாம் எப்படி வந்தது?


இதைச் சுற்றி பல கதைகள் நிர்மாணிக்கப்பட்டன. A sort of reverse-engineering. எந்த விவிலியங்களைத் தேர்ந்தெடுப்பது என்ற முயற்சியோடு, மரியாளின் பிறப்பைப்பற்றி எந்த நூல் சொல்லாவிட்டாலும், அவரது பிறப்பு பாவமற்ற ஒன்றாக இருக்க வேண்டும். அதோடு பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால் அவருக்கு இயற்கையான மரணம் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நேரே பரலோகத்திற்கு எழுந்தருளினார் என்றெல்லாம் கூறப்பட்டது. 


இதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் புதுக் கண்டுபிடிப்புகளாவும் ஆச்சரியமாகவும் உள்ளன. 

ரோம் நகரத்தில் 1852ல் மரியாளின் பாவமற்ற பிறப்பு – Immaculate Conception – என்பது அறிவிக்கப்பட்டது. 

அதன் பின் 1951ல் பரலோகத்திற்கு எழுந்தருளியது – Assumption – என்றும் அறிவிக்கப்பட்டது. 

கால வரிசை சரியாகச் செய்யப்பட்ட ஒரு திட்டம் இது. (117) 


புது ஏற்பாட்டில் சொல்லப்படுவது போல் மனித வாழ்க்கையை லில்லி பூக்களுக்கு ஒப்பிடுவது, நாளை என்பது பற்றிக் கவலைப்படாதே என்பது எல்லாமே குடும்ப வாழ்க்கை, சிக்கனம், புதுக் கண்டுபிடிப்புகள் போன்றவைகளை வெட்டியான விஷயங்கள் என்றாக்கி விடுகின்றன. 


ஏசு சொல்லலும் பல விஷயங்களைக் கேட்டு அவரது குடும்பத்தினரோ, ஏனையோரோ ஏசுவைக் குறைத்து மதிப்பிடுவதும் விவிலியங்களில் காணக்கிடைக்கின்றது. 


 ஏசு ஒரு குறுகிய இனவாத மனிதர் என்பதும் விவிலியங்களில் காணக் கிடைக்கிறது. உதவி கேட்ட கானானியப் பெண்ணுக்கு (மத்: 15: 21-28) உதவுவது இஸ்ரவேலருக்குரியதை மாற்றாருக்குக் கொடுப்பது தவறு என்கிறார். 


இப்படி சொல்லும் பல தூதுவர்கள் அப்போது இஸ்ரவேலில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் இவர் தன்னைக் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ நினைத்திருக்கிறார். (119) 


விவிலியங்களின் வார்த்தைகள் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடியவையல்ல. ஏசுவின் போதனைகள் நேரடியாக எழுதப்பட்டவை அல்ல. அவையெல்லாம் பலப்பல செவிவழிச் செய்திகளே – ஒருவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு அவர் சொல்லி, அவர் கேட்டு மீண்டும் சொல்லி .... என்று வந்தவை. ஆகவே தான் அதில் பல முரண்கள், முரண்பாடுகள் உள்ளன. 


இதை கிறித்துவ பக்திமானான பார்டன் எஃர்மேன் (Barton Ehrman) என்பவர் பல கிறித்துவக் கதைகள் பின்னால் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்று சொல்கிறார். (120) 


தன் விவாதத்திற்கு (யோவான்: 8: 3-11) என்ற நிகழ்வை எடுத்துக் கொள்கிறார். ‘உங்களில் பாவம்செய்யதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று கூறி ஒரு விபச்சாரியைக் காப்பாற்றும் நிகழ்வு அது. இதை ஏசு சொன்னதும் சுற்றியிருந்த அனைவரும் சென்று விடுகிறார்கள். அப்படியானால் அதன் பின் நடந்ததை யார் கேட்டிருப்பார்கள்? (121) 


பார்டன் எஃர்மேன் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். “அந்தப் பெண்ணோடு தீச்செயலில் ஈடுபட்ட ஆண் எங்கே? 


மேலும் அவர் “இந்த நிகழ்வு நமக்குக் கிடைத்த பழைய கைப்பிரதியான யோவான் விவிலியத்தில் காணப்படவில்லை. இப்போதைய விவிலியத்தில் இந்நிகழ்வைச் சொல்லும் வார்த்தைகள் பலவும் வித்தியாசமானவை; அவை யோவான் விவிலியத்தில் வரும் ஏனைய மொழி நடையில் இல்லை. 


எனது முடிவு: இந்த நிகழ்வு உண்மையிலேயே இந்த விவிலியத்தில் மூலப்படிவத்தில் கூறப்பட்டதல்ல”. 


ஆகவே, வெளிப்பாடுகளை நம்புபவர்கள் வெறும் விசுவாசத்தால் மட்டுமே அவைகளை நம்புகிறார்கள். அவர்கள் தைரியமாக, வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ளும் தைரியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 






 *

5 comments:

  1. #மத்: 15: 21-28) உதவுவது இஸ்ரவேலருக்குரியதை மாற்றாருக்குக் கொடுப்பது தவறு என்கிறார்.###இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

    25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.

    26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.

    27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.

    ReplyDelete
  2. Neenga saiva mathathin 24 pirivil ulirgal. nalla pagirvoo..!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நையாயிகம்? அப்டின்னா என்னப்பா?

    ReplyDelete