*
ஒரு விரலைச் சுத்தி ஒன்பது பேரைச் சாய்த்து ..ஒவ்வொருவரையும் பத்தடிக்கப்பால் விழச்செய்யும் படங்களின் முடிவு காலம் நெருங்கி விட்டதோ? நரி, நாய், சிங்கம், சிறுத்தை, கருப்பா இருக்கிற வானம் .. கடல் போன்ற படங்கள் வருவது நின்று போய், நல்ல படங்கள் எடுப்பது என்று “சின்னப் பசங்க” நிறைய பேர் வருவது மாதிரி தெரிகிறதே.
நல்ல படம்னா தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கிற பழக்கம் உண்டு. ஆனால் அப்படி எப்போவாவது போவது என்றுதான் இன்று வரை வழக்கமாக இருந்தது. ஆனால் திடீர் புயல் மாதிரி .. மேற்குத் தொடர்ச்சி மலை - கார்ப்ரேட்டுகள் மூலம் தனி மனிதன் வாழ்க்கையில் வீசும் சூறாவளி என்று மட்டும் இல்லாமல், வெகு வித்தியாசமான படம் -... பரியேறும் பெருமாள் - மானுடம், மனித நேயம் என்று அனைத்தையும் அழிக்கும் சாதியச் சகதியின் வீச்சும் வீறாப்பும் - அடுத்தடுத்து வந்தன. காதலையே மய்யமாக வைத்தே படங்கள் வரும் சூழலில் ஒரு வித்தியாசமான, மனதை நெருடும் 96 படம் வந்தது. அதை ஒட்டியே வந்ததாலோ என்னவோ அதிகம் பேசப்படாத இன்னொரு படம் - ராட்சசன்.
பொதுவாக தமிழ்ப்படங்களில் லாஜிக் என்பதைப் பார்ப்பதே கூடாது. முதல் மரியாதையில் கட்டை விரல் கடித்த “கதை”யும், நாயகனில் இருபது முப்பது வருஷத்துக்கு முந்தி செத்துப் போன அப்பாவின் துப்பாக்கியை எடுத்து சுட்டு நாயகனைக் கொல்வதையும் மனசுக்குள் போட்டுக் கொள்ளக் கூடாது. அப்படியே வளர்ந்துட்டோம்.
ஆனால் இந்தப் படத்தில் வெளிப்படையான தவறுகள் என் கண்ணில் படவில்லை. திரைக் கதையமைப்பு நம்மை படத்தோடு ஒன்றியிருக்க வைத்து விடுகிறது. இரண்டாம் படத்தில் முதல் படத்திற்கு நேர்மாறாக இத்தனை அழகான நேர்த்தியா? நல்லது ... வளரட்டும்.
எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ்ப்படங்கள் வளர்ந்து வருகின்றனவோ?
இன்னும் ஒன்று என் நெடுநாள் ஆசை. படத்தில் பாட்டுகள் எதற்கு என்று தெரியவில்லை. பொதுவாக படங்களில் பாட்டுகள் அதன் வார்த்தைகள் என்று எதுவுமே என் காதில் மட்டும் விழுகின்றன. எவ்வளவு சிரமம் எடுத்தாலும் பொருள் என் மண்டைக்குள் ஏறுவதேயில்லை. முதல் இரண்டு மூன்று வரிகளைக் கவனித்தாலும் அதன் பின் படம் பார்க்கும் போது பாடல் முழுவதுமாக மண்டைக்குள் ஏறுவதேயில்லை. பின் எதற்கு அங்கு ஒரு பாட்டு என்ற கேள்விதான் மனதிற்குள் எப்போதும் ஓடுகிறது. முதல் மரியாதை, டூயட் இந்த இரு படங்களில் தான் பாட்டு என்னுள் சென்றது. மற்றபடி பொதுவாக பாட்டுகள் என் தலைக்கு மேல் பறந்து போகின்றன.
இந்தப் பாட்டு போல் எல்லா பாடல்களும் நம் மண்டைக்குள்ளும் மனதிற்குள்ளும் போகின்றனவா? |
இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் எடுக்கும் கட்டாயம் இருப்பதால் சண்டை, பாட்டு என்று போட்டு ‘வெட்டித் தனமாக’ இழுத்து விடுகிறார்கள். பாவம் இயக்குனர்கள். ஏற்கெனவே முன்பே சொன்னது போல் ஒன்றரை மணிப் படங்களுக்கு வரி விலக்கு அரசு கொடுத்தால் படங்கள் இன்னும் ‘சிக்’ என்று மாறும் என்று நம்புகிறேன்.
*
இது வளர்ச்சி என்றே கூறலாம். அடுத்தடுத்து இவ்வாறாக படங்கள் வருவது அரிதே.
ReplyDeleteநீங்க சொன்ன சொன்ன புதிய படங்கள் எதுவும் நான் இன்னும் பார்க்கவில்லை. பொதுவாக தமிழ்ப்படங்கள் பற்றிய உங்க கருத்துக்கள், பாட்டுகள் எதற்கு என்பவற்றுக்கு ஆமென்.
ReplyDelete-----------------
எங்களது பிரச்சனைகள் எல்லாம் இப்போது சர்கார் படத்தில் எமது அம்மாவை அவமானபடுத்திவிட்டார்களே என்ன செய்யலாம் என்பது தான்.