Sunday, November 11, 2018

1011. ”நகைச்சுவை திலகம்” திரும்பி வரணும் .........




*


நகைச்சுவைத் திலகம்
அடுத்த வீட்டுப் பெண்”  மிகவும் பிடிக்கிறதென்று பல தடவை அந்தக் காலத்தில் பார்த்திருந்தாலும், “காதலிக்க நேரமில்லை” பார்த்த பிறகு அதுவே நகைச்சுவைப் படங்களின் டாப் லிஸ்ட்டில் இடம் பெற்றது. அடேயப்பா ... நாகேஷ் ... பாலையா... அப்படி ரசித்த ஒரு படம். ஆனால் “இம்சை அரசன் 23” வந்ததும் அத அடிச்சிக்க படமே இல்லைன்னு தோணுச்சு. அது மட்டுமா... வடிவேலு தான் ஒரு நகைச்சுவைத் திலகம்” என்று முழுவதுமாக நிரூபித்து விட்டார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்ற வரிசையில் அவரையும் சேர்ப்பதே சரி. (யாரும் இதைப் பார்த்து விட்டு தனக்குத் தானே “மாபெரும் நகைச்சுவைத் திலகம்” என்று  பெயர் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.) தினசரி வாழ்க்கையிலும், மீம்ஸுகளிலும் அவர் ராஜ்ஜியமே வேரூன்றி நின்று விட்டது. எந்த ஒரு நடிகனின் வசனங்களும் இப்படி நம் வாழ்க்கையோடு இந்த அளவு ஒன்றவில்லை. ‘ஆஹான்’ .. என்பதிலிருந்து தான் எத்தனை எத்தனை வசனங்கள் நம் தினசரி பேச்சு வழக்கில் பெரிய இடத்தைப் பிடித்து விட்டன. சிவாஜிக்குப் பல வேடங்கள் .. ஒவ்வொன்றிலும் தனித்தனியான தன் முத்திரை என்று பதித்து விட்டுப் போனார். ஏறத்தாழ நம் நகைச்சுவைத் திலகமும் அப்படித்தான். அட... போலீஸ்காரராக பல படங்களில் வந்தால் ஒவ்வொரு போலீஸும் வேறு வேறு; திருடனாக வந்தால் ஒவ்வொரு திருடனும் ஒவ்வொரு மாதிரி. சொல்லி மாளாது ....
அப்படி ஒரு நடிகர் நடுவில் இப்படிக் காணாமல் போனால் .. கையில் நல்ல வெண்ணையை வைத்துக் கொண்டு இப்படியா நாம் அலைவது. ஒரு வேளை (இளவஞ்சி சொன்னது போல்) தன்மானத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே அரசியல்வாதிகளிடம் ஏதும் சமரசம் செய்து கொள்ளாமல் அவர் இதுவரை ஒதுங்கி இருக்கலாம். ஆனாலும் அடுத்த இம்சை அரசன் படம் ஆரம்பமாகி விட்டதைக் கேட்ட்தும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் அதுவும் நின்று போனது. தமிழ்சினிமா உலகில் அவருக்கென்று ஓரிடம் அழிய முடியாத அளவிற்குப் பதித்து விட்டார். இருந்தாலும் எவ்வளவு வந்தாலும் திகட்டாத, அலுக்காத உடல் மொழி, அசத்தும் பேச்சு முறை  அவருடையது. இன்னும் தொடர்ந்து பல படங்கள் அவரிடமிருந்து வந்துகொண்டே இருக்க வேண்டும்.
ஏமாற்றாதே.. வந்து விடு வைகைப் புயலே வந்து விடு ... சீக்கிரம்.

*****

வயசுக் காலத்தில் அமிதாபைக் கொஞ்சமும் பிடித்ததில்லை. வயதானபின் வந்த அவரது படங்கள் நிறைய பிடித்தது. இது போல் சிவாஜி நடிக்காமல் போய்விட்டாரே என்ற வருத்தம் நிறைய இருந்தது. சிவாஜி அவரது காலத்து இந்திப் பட அசோக்குமார் மாதிரி வயதான ரோலில் நடிக்கவில்லையே என்ற கவலை சிவாஜி காலத்தில் இருந்தது. அசோக்குமார் அத்தனை அழகாக வயதான ரோல்களில் அப்போது நடித்து வந்தார். நம்ம ஆள் அப்படி செய்யவில்லையே என்ற வருத்தம் முதல் மரியாதைக்குப் பிறகும், தேவர் மகனுக்குப் பிறகும் இருந்து வந்தது. அந்த நிலையில் இன்னொரு தேறுதல் கண்ணில் பட்டது. சிவாஜியின் மூத்த மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் கமல் அது போல் இனி வயதுக்கேற்ற நல்ல படங்களில் நடிப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. பாவி மனுஷன்... கட்சி ஆரம்பிச்சிட்டார். அந்த கடைசி நம்பிக்கையும் ஓஞ்சி போச்சு!

ஐயா கமல் .. கடைசி வரை நடிகனாகவே இருப்பீங்கன்னு நம்பிக்கிட்டே இருந்தேனே .... :(

*****
’ராஜா ராணி’ படம் மிகவும் பிடித்தது. அதுவும் தன் முதல் படமாக அட்லி என்ற ஓர் இளைஞன் இயக்கியது. முதலில் பார்த்ததும் அசந்து விட்டேன் ... ஏனெனில் ஷங்கரிடமிருந்து வந்திருந்தாலும் முதல் படத்தையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறாரே என்ற நல்ல அதிர்ச்சி அது. அந்தப் படத்தின் எடிட்டிங், திரைக்கதை ரொம்பவே பிடித்தது. தேவையில்லாத ஒரு ப்ரேம்கூட  படத்தில் இல்லை. சரி .. ஒரு நல்ல, பிடித்த இயக்குனர் ஒருவர் வந்து விட்டாரென நினைத்திருந்தேன். 
வச்சாரையா அதுக்கு ஒரு ஆப்பு! அடுத்த படம் விஜய் நடித்த இரு படங்கள். (முதல் படத்தின் பெயர் இப்போ மறந்து போச்சே.) மெர்சல் நன்றாக நினைவில் இருக்கிறது. எவையெவை நல்ல அம்சங்கள் என்று ராஜா ராணியில் நினைத்திருந்தேனோ அந்த இரண்டும் இப்படங்களில் சுத்தமாக இல்லை. ரா.ரா. மாதிரியான இறுக்கம் கதைகளிலும் இல்லை.
அவ்வளவு தான் .. மாஸ் ஸ்டார்களின் படங்களில் கைவைத்தால் எந்த இயக்குனருக்கும் இந்த நிலைதான் வரும் என நினைக்கிறேன். இனி அட்லி நினைத்தாலும் ரா. ரா. மாதிரி இன்னொரு படம் கொடுக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். மாஸ் ஹீரோவிடம் மாட்டிக் கொண்டால் வரும் பரிதாபம் இது. இனி எங்கே அதிலிருந்து வெளி வரப் போகிறார்!

அட்லி .. ஒரு முடிந்த கதை.

*****











*

3 comments:

  1. வடிவேலு - ரொம்பவே மிஸ் செய்யும் ஒரு நகைச்சுவை நடிகர். அரசியல் சாக்கடையில் விழுந்து தன் சம்பாத்யத்தை இழந்தவர். மீண்டும் வந்தால் நகைச்சுவை இலாகாவில் இருக்கும் காலியிடம் நிரம்பும்....

    ReplyDelete
  2. வடிவேலு உண்மையிலேயே வரத்தான் வேண்டும்

    ReplyDelete
  3. நகைச்சுவை ஊடாக நம்மை கட்டிப்போட்ட நடிகரில் முக்கிய இடம் பிடித்தவர் வடிவேலு. அவருக்கு இணை அவரே.

    ReplyDelete