ஆச்சு .. எப்படியும் கணக்குப் பண்ணிப் பார்த்தால் இது மாதிரி ஒரு குட்டைப் பென்சில் ஒன்றைப் பார்த்து 65 வருஷம் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு இப்படி ஒரு பென்சிலைப் பார்த்ததே இல்லை. நேற்று நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குப் போயிருந்தேன். இந்தப் பென்சிலுக்கு ஒரு நெகிழி மூடியையும் போட்டு மேசை மேல் வைத்திருந்தார். பார்த்ததும் எனக்கு எங்க காலம் நினைவுக்கு வந்தது.
மொதல்ல எங்க காலத்தில இந்த மாதிரி பட்டை போட்ட பென்சிலைப் பார்க்க முடியாது. எல்லாமே ரவுண்டான பென்சில்கள் தான்.அழகு அழகு வண்ணத்தில் எல்லாம் பார்க்க முடியாது. அப்போ பென்சில்களின் பின்பக்கத்தில் அழிப்பான் - ரப்பர் - இருக்காது. ஒரு வேளை நாங்க அந்தக் காலத்தில் தப்பே இல்லாம எழுதியிருப்போமோ? அதான் ரப்பர் வைக்கவில்லையோ? இருக்கும்.
ரப்பர் இல்லாதது மாதிரி அப்போவெல்லாம் பென்சில் சீவி .. அதாங்க .. sharpener - ஏதும் இருந்த மாதிரி நினைவில் இல்லை. பின்னாளில் தான் வந்தது. நாங்கள் பென்சில் சீவுவதற்கு ஏற்றது மாதிரி அப்போ வர்ர ப்ளேடுகள் இருக்கும். அதை வச்சி தான் பென்சில் சீவுவோம். ஒரு தடவை என் அப்பாவின் சவரப் பெட்டியிலிருந்து ஒரு ப்ளேடு எடுத்து பென்சில் சீவிட்டு அப்பா பெட்டியில் திருப்பி வைத்து விட்டேன். அடுத்த நாள் அப்பா ஷேவ் பண்ணும் போது சரியாக சிரைக்க முடியவில்லை. அப்பா கழட்டிப் பார்த்த போது அதில் பென்சில் சீவும் போது விழும் கோடுகள் இருந்தன. அப்பா என்னைக் கூப்பிட்டு இத வச்சி பென்சில் சீவினியா? என்றார். ஆம் என்றேன். அப்பா அம்மாவிடம் ‘இந்தப் பயலைப் பாரு. ஒரு ப்ளேடைக் கெடுத்துட்டான். முடிய வெட்டவே மாட்டேங்குது’ என்று கம்ப்ளெயின்ட் வாசித்தார்கள். அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அப்போ எனக்கு ஒரு ஆச்சரியம். என்னடா இது .. ஒரு பென்சிலையே அழகா சீவுது. இத்தனூண்டு சின்ன முடியை அது வெட்டாதான்னு ஒரு பெரிய கேள்வி. அதுக்குப் பதில் தெரிய சில வருசங்கள் ஆச்சு!
ஆனா அந்தக் காலத்திற்குப் பிறகு வந்த ப்ளேடுகள் எல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ப்ளேடுகள். அதை வைத்துப் பென்சில் சீவ முடியாது. ஒரு வேளை இந்தக் காலத்தின் கட்டாயத்தினால் தான் புதிதாகப் பென்சில் sharpener
கண்டு பிடித்திருபார்களோ ... இருக்கும்; அப்படிதான் இருக்கும். அது காலத்தின் கட்டாயம். ஆனால் ப்ளேடு காலத்தில் இன்னொரு பழக்கம் இருந்தது. பென்சிலைச் சீவி அந்த மரத்தூள்களைப் புத்தகங்களுக்கு நடுவில் சேமித்து வைப்போம். அது நிறையாகச் சேர்ந்ததும் அதைப் பாலில் ஊற வைத்தால் ‘அழி ரப்பர்’ கிடைக்கும் என்ற விஞ்ஞான மூளை எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. மயிலிறகை புத்தகத்திற்குள் ஒழித்து வைத்தால் அந்த ஒற்றை மயிலிறகுகள் ‘குட்டி’ போடும் என்பது போன்ற விஞ்ஞான உண்மை அது!
எங்களுக்கு அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பென்சில் மட்டும் தான். அப்போது பால் பாய்ண்ட் பேனா, ஜெல் பேனா போன்றவைகள் ஏதுமில்லை, இருந்தது பென்சிலும். பேனாவும் - அதுவும் மை ஊத்தி எழுதும் fountain pen மட்டும் தான். பேனா ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகுதான் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி அனுமதிப்படும். ஆகவே ஐந்தாம் வகுப்பு வரை எங்களுக்குப் பென்சில் மட்டும் தான். இப்போது மாதிரி மொத்தமா பென்சிலை வாங்கிப் போட்டோமா .. பிள்ளைகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பயன்படுத்துவார்கள் என்ற மாதிரி எல்லாம் அப்போது கிடையாது. ஒரு பென்சில் வாங்கிக் கொடுப்பார்கள். தொலைந்து போகாமல் வைத்திருக்க வேண்டும். இப்போது பென்சில் டப்பா இருக்கிறதே .. அதெல்லாம எங்க காலத்தில இல்லை. அதனால் ரொம்ப பத்திரமாக வைத்திருப்போம். இப்போவெல்லாம் அங்கங்க நிறைய குட்டிப் பைகள் வைத்து Back bag இருக்குமே .. அது எல்லாம் ஏது எங்களுக்கு. காக்கித் துணி மாதிரி முரட்டுத் துணியில் கைப்படி வைத்து ஒரு பை. அதில் ஒரு மூலையில் பென்சில் தூங்கும்.
பென்சில் கதை அதோடு முடிந்ததா என்ன? பென்சிலை அடிக்கடி சீவுவோம். பென்சில் கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு அவதாரம் எடுக்கும். இப்போதெல்லாம் அரை நீளத்திற்குக் குறைவான பென்சில்களை நான் பார்த்ததே இல்லை. எங்க காலத்தில் ‘இத்தனூண்டு’ பென்சிலாகும் வரை அதை விட மாட்டோம். பெத்தவங்களும் அப்படித்தான். அட .. இன்னும் இவ்வளவு நீளம் இருக்கேன்னு சொல்லிருவாங்க. ஆக பென்சில் கால்வாசி சைஸுக்கு வரும் வரை பிரச்சனையில்லை. ஆனால் அதைவிட சின்னதாகப் போனால் வாத்தியார்கள் கோவிச்சுக்குவாங்க. நம்ம நோட்டைத் திருத்தும் போது நம்ம பென்சில்களைத்தான் வாத்தியார்கள் கேட்பார்கள். அப்போது நம் பென்சில் ரொம்பக் குட்டையாக இருந்தால் அதை வகுப்பின் ஓரத்திற்கோ அல்லது ஜன்னல் வழியாகவோ தூர எறிந்து விடுவார்கள். இந்தப் பென்சிலை வைத்து எழுதினால் கையெழுத்து மோசமாகி விடும் என்பது அவர்களது சரியான விஞ்ஞான அறிவு. அந்த மாதிரி இத்தனூண்டு குட்டிப் பென்சிலுக்கு அப்போது வழங்கி வந்த slang என்னவென்று தெரியுமா? “புழுக்கைப் பென்சில்”
அந்த மாதிரி ஒரு புழுக்கைப் பென்சிலைப் பார்த்ததும் உடனே பழைய்ய்ய நினைவுகள் வந்தன. நம்மளும் நம்ம பென்சில்களும் ... அப்டின்னு ஒரு நினைப்பு வந்தது. ஏன்னா ... படிச்சது ( எங்க படிச்சேன்!?) zoology ... நிறைய படம் வரையணும். அதுனால பென்சிலுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ரொம்ப நாள் நீடித்தது. பென்சில் ஊக்கை நம்ம இஷ்டத்துக்கு வைத்திருக்க வேண்டியதிருக்கும். ஊசியா ... தடிப்பா .. ஷேட் கொடுக்க கொஞ்சம் நீளமா... இப்படிப் பல மாதிரி இருக்கிறதுனால sharpener இல்லாம பழையபடி ப்ளேடுக்குப் போயாச்சு. ஆனால் அப்ப என்னவோ ஒரு கிக் .. என்னன்னா, sharpener இல்லாம ஆனா அழகா பென்சில் சீவி வச்சிருப்பேன். பைனல் டச்சிற்காக ப்ளேடு வைத்து பென்சில் முனை மீது நெடுங்குத்தா ப்ளேடை வச்சி, ஷேவ் பண்றது மாதிரி தேய்த்து, பாலிஷா கொண்டு வருவேன்.
ஆனால் அப்போவெல்லாம் சாதாரண பென்சில்கள் கிடையாது. ட்ராயிங் பென்சில்னு விற்கும். அதைத் தான் வாங்குவோம். அதில் 2B, B, HB, 2H, 4H .. என்ற வகைப் பென்சில்களைத் தயார் நிலையில் வைத்திருப்பேன். கருப்பா கண்ணெல்லாம் வரைய 2B பென்சில்; லேசா செதில் மாதிரி வரைய 2H / 4H பென்சில்கள். இந்தப் பென்சில்களை கல்லூரிக்கு எடுத்துக் கொண்டு போவதேயில்லை. ஏன்னா ... பென்சில் அம்புட்டு காஸ்ட்லி!
அப்போ சாதாரண பென்சில் நாலணா / 25 பைசாவாக இருந்தது. இந்த ட்ராயிங் பென்சில்கள் விலை ஒண்ணே கால் ரூபாய் / ஒண்ணரை ரூபாய். அதுவும் எல்லா கடைகளிலும் கிடைக்காது. கிழக்கு ஆவணி மூல வீதியும், அம்மன் சன்னதி தெருவும் சந்திக்கும் இடத்தில் கிழக்கு ஆவணி வீதியின் முனையில் இருந்த குழாய்க்குப் பக்கதிலிருந்த சுலைமான் பாய் கடையில் தான் அந்தப் பென்சில்கள் கிடைக்கும். பென்சில் பெயர் வீனஸ். இங்கிலாந்தில் செய்யபட்ட பென்சில். பச்சைக் கலரில் இருக்கும். பச்சைக்கலரில் மெல்லியதாக cracks விழுவதுபோல் கோடுகள் இருக்கும்.
அதன் பின் முதுகலை படிக்கும் போது ஒரு இந்தியன் பென்சில் கிடைக்க ஆரம்பித்தது. பெயர் Engineer. விலை கொஞ்சம் குறைவு. மரக்கட்டை கலரில் மட்டும் தான் இருக்கும். ஆனாலும் வீனஸ் பென்சில்கள் மீது தான் எப்போதும் ஒரு கண்.
*
புழுக்கை பென்சில்... ஆஹா இப்படி ஒரு பெயர்!
ReplyDeleteபென்சில் நினைவுகள் ஸ்வாரஸ்யம்!
உங்களின் சொந்தக் கதை சுவாரசியமான கதைதான்.
ReplyDeleteஎழுதுகோல் நினைவுகள் இனிமை
ReplyDeleteபென்சிலை பற்றி அருமையான நினைவு.இவற்றில் சில நாங்கள் பள்ளிக்காலத்தில் எதிர்கொண்டதே.
ReplyDeleteநினைவுகளை மலரச் செய்யும் பதிவு.
ReplyDeleteஅருமை.