*
ஏனைய பதிவுகள்
….
செயின்ட் பவுல்
பைபிளின்
பழைய ஏற்பாடு
பைபிள் ஒரு வரலாற்று நூலாகும். ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எந்த ஆண்டில் யாரால் எப்போது எப்படி
நடந்தது போன்ற அனைத்து விளக்கங்களும் வரலாற்றில்
இருக்க வேண்டும். பைபிளில் அவ்வாறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
சில இடங்களில் பழைய மன்னர்களின் பெயர்கள் இருக்கலாம். அவை மட்டுமே பைபிளை ஒரு
வரலாற்று நூலாக ஆக்காது என்று நினைக்கிறேன்.)
‘ இஸ்ரேலியர்’ எனப்பட்ட ஓரின மக்கள் 12 ஜாதிகளாக வகைப்படுத்தப்பட்டு
இருந்தனர் அவர்கள் தொடக்க காலத்தில் இஸ்ரேலியர்கள் எனவும் பின்னர் யூதர்கள் எனவும்
பைபிள் அழைக்கிறது. கடவுள் யெஹோவா என அழைக்கப்பட்டார்.
இந்த கடவுள் இஸ்ரேலிய மக்கள் தமக்குரிய ’சொந்த மக்களாக’ (The
Chosen Pepple) தேர்வு செய்து அவர்களோடு வாழ்ந்து வந்ததாக பைபிள் அறிவிக்கிறது.(17)
46 புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவற்றுள் 7 புத்தகங்களை பிரிவு கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே அவர்களுக்கு பழைய ஏற்பாட்டு நூல்கள் 39 மட்டுமே.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களும்
ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கிமு1975 வாக்கில் மெசபடோமியா பள்ளத்தாக்கு யாக்கோபு (Jacob) எனப்பட்ட
இஸ்ரவேல் (Israrel) வாழ்ந்து கொண்டிருந்தார். ( இந்த ஆண்டை இவ்வளவு குறிப்பாக எழுதுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தால்
மகிழ்ச்சி.) ..
இவர் எகிப்து நாட்டில் குடியேறினார். அவரது 12 மகன்களும்
இஸ்ரேலிய ஜாதிகளின் குலமுதல்வர்கள் (Patriarchs) என்று அழைக்கப்பட்டனர்.
இதிலிருந்து 75 பேர் எகிப்திற்கு சென்று அடிமைகளாக 430 ஆண்டுகள்
(??) வாழ்ந்தார்கள்.
அவர்களின் எண்ணிக்கை பெருகி ஆண்கள் மட்டும் ஆறு லட்சத்தை விட அதிகம்.(எண்ணிக்கைக்
கணக்கு உதைக்குமென்று தெரிகிறது. !!) (18)
கிமு1500
வாக்கில் இஸ்ரேலிய இனத்தில் மோசே என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்த காலத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் என ஒருவரும் இருக்கவில்லை.
… இஸ்ரேலியர்கள் புதிதாக உருவாகிய இனம் என்பதால் அவர்களுக்கு உரிய கடவுள் என
அதுவரை எவரும் அறியப்படவில்லை.(19)
“ ஒரு கடவுள் மோசேயை சந்தித்ததாகவும் இஸ்ரயேலரின் விடுதலைக்காக அவர் பாடுபடப்
போவதாகவும் எனவே அனைத்து இஸ்ரேலியர்களும் மோசே சொல்கிற படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும்
என்று மோசேயின் சகோதரர் ஆரோன் அறிவித்தார். (யாத்ராகமம்4:29-30)
இஸ்ரேலிய மக்களின் மூதாதையர் ஆகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின்
கடவுள் என்பதே அவருடைய பெயர் என கடவுள் அறிவிக்கிறார்(3:15) (20)
இஸ்ரவேலுடைய கடவுளாக (Triabl God) மோசே அவர்களுக்கு அக்கடவுளை அறிமுகப்படுத்தினார்.
( கடவுளை அறிமுகப்படுத்துகிறார்.
இதைவிட கடவுள் மோசேயை அறிமுகப்படுத்தி இருந்தால் நல்ல யோசனையாக எனக்கு தெரிகிறது!!)
பைபிளின் கடவுள் கி.மு.4000 வாக்கில் தோன்றியதாகப் பேசப்படுகிறது.
(அறிவியலோடு நாம் பேசும் பரிணாமம்,
fossil study, geneology, human evolution, archaeology .. என்ற எதுவும் இந்த ஆண்டுக்
கணக்கை ஒத்துக்கொள்ளாது.) அப்போதுதான் ஆதாம் படைக்கப்படுகிறார்..
பின் நோவா. அதன்பின் 9ஆவது தலைமுறையில் ஆபிரகாம். அடுத்து 42 ம்
தலைமுறையில் இயேசு. ஆதாம் முதல் இயேசு வரைக்கும் 60 தலைமுறைகள். (இந்த 60 தலைமுறைகளையும், பைபிளில் சொல்லப்பட்ட
பலரின் வயதையும் வைத்து ஆதாம் பிறந்த நாள், கிழமை , நேரம் எல்லாம் குறிக்கும் தீவிரக்
கிறித்துவர்களும் உண்டு.)
பைபிளின் கடவுள் மோசேயின் காலத்தைச் சார்ந்தவர் தான் என்பதற்கான
சான்றுகள் பைபிளில் உள்ளன. (21)
யாத்ராகமம் 5:2 - இஸ்ரவேலர்களின் கடவுள் பற்றி எகிப்திய மன்னன்
அறிந்திருக்கவில்லை. அந்த அளவிற்கு இஸ்ரேலின் கடவுள் அனைவருக்கும் புதியவர்.
( எகிப்திய மன்னன் விடுதலை தராததால்) மோசே கடவுளிடம் மீண்டும்
வந்து தன் குறையைப் பற்றி பேசினார். உடனே கடவுள், “ உங்களை நான் என் மக்களாக தேர்ந்தெடுப்பேன்
உங்களுக்கு கடவுளாக இருப்பேன்’ என்கிறார். (யாத் 6:7) (22)
உபாகமம் - இணைச்சட்டம் 27:9, 10 - இந்த வசனங்கள் கூறப்பட்ட நாளில் இருந்துதான்
இஸ்ரேலியர்கள் அந்த கடவுளுடைய மக்களினம் ஆகியிருப்பதாக பைபிள் அறிவிக்கிறது.
கடவுளுக்கு சில குணங்கள் இருந்ததாக மோசே அறிவிக்கிறார். கோபம்,
பொறாமை, பழிவாங்குதல், பாரபட்சம் காட்டுதல் முதலியன அவருடைய குணங்களாக இருந்தன
என்று பைபிள் அறிவிக்கிறது. (உபாகமம் - இணைச்சட்டம் 9:8, மற்றும் 6:14,15, ஏசயா
35:4, யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 11:7).புரோட்டஸ்டண்ட் மற்றும் பொது
மொழிபெயர்ப்பில் ’பொறாமை’ என்ற சொல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில்
‘a jealous god’ (Deuteronomy 6:14,15 in Catholic edition) என்று சொல்லப்பட்டுள்ளது
.
மோசே தம்மையும் தம் சகோதரர் ஆரோனையும் முன்னிலைப்படுத்தி எகிப்திய மன்னன்
பாரவோனிடம் சேர்ந்து தங்கள் விடுதலைக்கான கோரிக்கையை வைத்தார். முதலில் மன்னன் மறுத்தாலும்
இறுதியில் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதித்தார். கிமு 1446 எகிப்தை விட்டு இஸ்ரேலியர்கள்
வெளியேறினார்கள். இதிலிருந்து வெளியேறும் போது பிற ஜாதியினராகிய எகிப்தியர்களைக் கொள்ளையடித்துச் செல்லுமாறு ’தம் பிள்ளைகளாகிய
இஸ்ரவேலர்களுக்கு அவர்களுடைய கடவுள் உத்தரவிட்டார். (யாத்ராகமம் - விடுதலைப் பயணம்
12:35,36.
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையை கைக்
கொள்வீர்களானால் சகல ஜனங்களும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்து ஆகி இருப்பீர்கள்;
பூமி எல்லாம் என்னுடையது. (யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 19:5)
நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன் அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன்.
யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 29:45 ,46
புறஜாதியாரை- gentiles
- தம்முடைய எதிரிகளாக நடத்த வேண்டும் என்று தம் பிள்ளைகளுக்கு பைபிளில் கடவுள் உத்தரவிட்டார்.
பிற சாதியினருடன் உடன்படிக்கை எதுவும் செய்யக்கூடாது; பிற ஜாதி பெண்களை திருமணம்
செய்யக்கூடாது‘ பிற ஜாதியினரை நாடுகளோ அல்லது நல்லுறவுடன் அவர்களோடு வாழ்வு கூடாது;
தங்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டால் அவர்களிடமிருந்து தான் இஸ்ரேலியர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பிற சாதியினருடன் கலந்து வாழ்ந்தால் இஸ்ரேலிய சமூகம் தீட்டுப்பட்டு விடும். யாத்ராகமம்
- விடுதலைப் பயணம் 34:15, உபாகமம் - இணைச்சட்டம் 7:1-5, லேவியர் 25:42-45; எஸ்றா
9:11-15. இவ்வாறு கூறி ஜாதி மீது தீண்டாமையை
அவர் திணித்தார். (what
a ‘separatist’ god!!)
பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட போது அதன் கருத்துக்களை தங்கள் விருப்பம் போல்
மொழிபெயர்ப்பாளர்கள் சிதைத்து எழுதினர். (28)
ஒரு சான்று:
” நம் கடவுள் அநீதிக்கு பழிவாங்கும் நாளை அறிவிக்கவும் , துயருற்று
அழுவோர்க்கு ஆறுதல் கூறவும் (எசையா 61:2) எசையா தீர்க்கதரிசியை கடவுள் தேர்ந்தெடுத்து
அனுப்பி வைத்ததாக தகவல் தெரிகிறது. அவ்வாறு பழிவாங்கும் விதமாக வரும்போது புறஜாதியார்
கொள்ளையடிப்பது பற்றியும் ஒரு தகவலை கூறுகிறார். இத்தகவலை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள்
இருட்டடிப்பு செய்து மறைத்து விடுகின்றனர். அதாவது உண்மையில் இஸ்ரேலியர்களை பற்றிய
பழைய ஏற்பாட்டு எசையா எழுதும்போது,
“
நீங்களோ ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள். பிற இனத்தாரின் செல்வத்தைக்
கொண்டு நீங்கள் உண்பீர்கள். அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.
( எசையா 61:6 பொது மொழிபெயர்ப்பு)
என்று
கூறுகிறார். கத்தோலிக்க மொழிபெயர்ப்பும் இதே தகவலைத் தருகிறது ஏனைய ஆங்கில மொழிபெயர்ப்புகளும்,
புரோட்டஸ்டண்ட் தமிழ் மொழி பெயர்ப்புகளும் ’புறஜாதியார் சொத்துக்களை இஸ்ரயேலர்களால்
கொள்ளையடிக்கப்படும் என்ற தகவலைப் பதிவு செய்யவில்லை
இவ்வாறு பைபிளின் கடவுளுக்கு
இழுக்கு வராமல் பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் அவரைப் பாதுகாக்கிறார்கள்.(30)
எகிப்தை விட்டு வெளியே வந்தபின்னர் பின்னர்தான் மோசே தன்னுடைய ஐந்து நூல்களையும்
எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.
மோசேதான் நூல் எழுதினாரா?
(3500 ஆண்டுகளுக்கு முந்திய காலம் மேசேயின் காலம் என்கிறார்கள். அப்போது
எழுத்து வடிவங்கள் வந்து விட்டனவா? புதிய ஏற்பாடுகளின் ஆசிரியர்களே யார் யாரென்பது
தெரியவில்லை என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் பழைய ஏற்பாடு மோசே எழுதியது என்பதை
எவ்வாறு ஒத்துக்கொள்வது?) (31)
நூலின் ஆசிரியர் ஆதாம்-ஏவாள் அவர்களின் குழந்தைகள் என்பவைகளைப்
பற்றி பேசுகிறார். கடவுள் காயினைப் பிரித்து விடுகிறார் அப்போது அவன், “ என்னை
காண்கிற எவனும் என்னைக் கொல்வானே” என்று கூறுகிறார். அவன் வேறு யாரைப் பற்றி பயப்பட்டான்?
அப்படியெனில் பைபிளின் கடவுள் படைத்த உலகத்தையும் மக்களையும் தவிர வேறு மக்களும்
அப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.
வேறு பெண்கள் இல்லாத நிலையில் நோது தேசம் சென்றதும் காயினுக்குப்
பெண் கிடைத்து இருக்கிறது. எனவே கர்த்தர் படைத்த
உலகத்தைவிட நோ தேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்டது. எனில் நோக்கி
தேசத்தை படைத்த கடவுள், பைபிளின் கடவுளை விட மிகவும் மூத்தவர்.(36)
ஹமுராபி என்னும் பாபிலோனிய மன்னர் தன்னுடைய சட்டங்களின் தொகுதிகளால்
மிகவும் பெயர் பெற்றவர் ஆவார். பைபிளில் முக்கியமானதாக கருதப்படும் ’கண்ணுக்குக் கண்;
பல்லுக்குப் பல்’ என்பது ஹமுராபியின் சட்டம் என அறிகிறோம். ஹமுராபியின்
காலம் கிமு 1772 - 1750 ஆகும். அதாவது அவர் மோசேக்கும் 280 ஆண்டுகளுக்கு முந்தையவர்.
அவரை பைபிள் நன்கு அறிந்திருந்ததாகத் தெரிவிக்கிறது. (ஆதியாகமம் - தொடக்க
நூல் 14:1
ஹமுராபி மன்னர், தன்னுடைய கடவுளாகிய ஷமாஷ் என்பவர் சட்டங்களின்
தொகுதியைத் தம்மிடம் வழங்கியதாகக் கூறிக்கொண்டார். அதே வழியைப் பின்பற்றி தம்முடைய
கடவுளிடம் சட்டத் தொகுதிகளை வழங்கியதாக மோசேயும் கூறிக்கொண்டார். (36)
தொடரும்…..
*