Saturday, January 25, 2020

1082. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ...3

*

ஏனைய பதிவுகள் ….


நூலின் முகவுரை


பைபிளின் உள்ளிருந்து மட்டுமே நாம் தகவல்களையும் ஆதாரங்களையும் தேர்வு செய்து எழுதியிருக்கிறோம்.(பக் 14)

மதவாதிகளைப் பொருத்தவரை, தன் மதமே உயர்ந்தது; மற்றையவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பர். (9) (இந்த எண்ணம் ஆப்ரஹாமிய மதத்தினருக்கு அதிகம் என்ற என் கருத்தை என் நூலில் பரவலாக ஆதாரத்துடன் எழுதியுள்ளேன்.)

பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளரான பவுல், மதம் என்ற அந்தஸ்தில் இருந்த யூதத்தை (Judaism)  அதிலிருந்து வேறோர் நிலைக்கு மாற்றும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். கி.பி. 49 வாக்கில் பைபிளின் நடைமுறைக் கொள்கையில் ஒரு மாற்றம் கொண்டுவர பவுல் விரும்பிய போது, மதங்களை விட மாறுபட்ட ஒன்றை ‘கிறிஸ்து; (Christ) என்ற ஒற்றைச்சொல் மூலம் அறிமுகப்படுத்த முயன்றார்.அச்சொல் மனிதர்களிடையே பேதம் காட்டுதல் கூடாது என்னும் பொருள் கொண்டதாக இருந்தது.(9) ஆயினும் பவுலின் இக்கொள்கை இஸ்ரேலிய சமூகத்துக்குப் புதியது. கிறிஸ்து என்ற சொல்லும், அதில் பொதிந்துள்ள பொருளும் பைபிள் மரபுக்கு உரியதல்ல. ( At some point, his adherents also began to refer to him as “Son of God.” Paul employed both “Christ” and “Son of God” freely, and he is also responsible for the widespread use of “Christ” as if it were Jesus’ name rather than his title.https://www.britannica.com/biography/Saint-Paul-the-Apostle/Theological-views)

புதிய ஏற்பாட்டு நூல்களில் ‘கிறிஸ்து’ என்னும் பெயரில் பவுல் ஏசுவை அறிமுகம் செய்தார்.
இயேசுவையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கத்தில் பவுல் தம்முடைய புதிய ஏற்பாட்டு நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசு ஒர் மெசியா மட்டுமே. ... அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பின்னர்தான் ‘கடவுளின் ஆவி’ அவர் மீது இறங்கியது. அதனாலேயே அவர் உயிரோடு எழுப்பப்பட்டார். அதன் பின்னரே அவர் கிறிஸ்து என்னும் கடவுளின் மகனாக ஆனார். (ரோமர் 1:2,3)

இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மிக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford என்ற ஆசிரியர், தன் புத்தகம் The Story of Faith, பக்கம் 159-ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  “ .... There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross. From the early second century, such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians. (11)

கிரேக்க மதத்தின் ஒரு பிரிவு ‘அறிவு நெறிக் கோட்பாடு’ எனப்படும் குணாஸ்டிசிசம் (Gnosticism) எனப்பட்டது. (Gnosticism என்ற சொல்லை ’குணாஸ்டிசம்’ என்று இந்த நூலின் ஆசிரியர் மொழிபெயர்த்துள்ளார். நான் இதை என் நூலில் ‘ஞான மரபு’ என்று மொழிபெயர்த்துள்ளேன். இனி இந்த ஆசிரியரின் குணாஸ்டிசிசம் என்பதற்கு பதில் ஞான மரபு என்ற என் சொல்லை replace  செய்து கொள்கிறேன்!)   அந்த மதப் பிரிவின் கொள்கையே பவுலின் கடிதங்களில் அதிகப் பிரகாசத்துடன் காட்சியளிக்கிறது. அவரது இந்த அறிவின் வெளிப்பாடு தான் இயேசுவும் கிறிஸ்துவும் ஒரே ஆள் அல்ல என்பதாகும். (ரோமர் 1: 2-5)

“இயேசுவினாலே அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை’ (அப்போஸ்தலர் நடபடிகள் - திருத்தூதர் பணிகள் 4:12) என்ற பைபிள் வசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவர்கள் ஏனைய மதங்கள் மீது வெறுப்பு காட்டுகின்றனர். இத்தகையவர்களால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.(11) (இது பற்றி நானும் (பயனின்றி..) நிறைய எழுதியுள்ளேன்.

கிறித்துவ குருமார்களோடு பைபிள் பற்றிய விவாதத்தின் போது .. இயேசுவை பவுல் புற ஜாதியரிடம் பிரசாரம் செய்தார் என்றும், அதற்கு வசதியாக ஒரு பொய்யைக் கூறவும்  அவர் தயங்கவில்லை என்றும், அவரே அதனை ஒப்புக் கொள்வதையும் (ரோமர் 3:7,8  ) குறிப்பிட்டேன்.  இவ்வாறு பவுல் கூறிய பொய்யைப் பற்றிய கவலையின்றி, ஆனால் பவுல் விரும்பிய விசுவாசத்தை மட்டும் கொண்டவர்களாக மக்கள் இருப்பது பற்றி நான் வினா எழுப்பினேன்.

மற்றொரு நாள்; ஒரு பிஷப், பல பாஸ்டர்களோடும் மற்றொரு விவாதம் ... ”என் பொய்மையின் மூலம் கடவுளின் வல்லமை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவியெனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்? அப்படியானால், ‘நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்’ என்று சொல்லலாமே?” (ரோமர் 3: 7, 8) விவாதத்தில் எனக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை. இன்னொரு பேராசிரியர் வரவழைக்கப்பட்டார். நான் 3 கேள்விகளை அவர்கள் முன் வைத்தேன்:

·          பவுல் கூறிய பொய்யின் மூலம் கடவுளின் மாட்சி எவ்விதம் அதிகரித்தது?
·          அந்தப் பொய்யின் மூலம் பவுல் எதிர்பார்த்த நன்மை யாது?
·          அந்த நன்மையை அடைவதற்காக, என்ன தீமை செய்துவிட்டதாக பவுல் கருதினார்?

இந்த வசனங்கள் இதுவரை அவர்கள் கவனத்தில் பட்டிருக்கவில்லை. என் புரிதலை அவர்களுக்குச் சொன்னேன்: “பவுல் புறஜாதியரிடம் பணியாற்றுவது என முடிவு செய்ததும், அதற்குத் தேவையான தளத்தை முதலில் அமைத்துக் கொண்டார். புற ஜாதியரிடம் தாமாகவே சென்று பணியாற்றிட தாம் முடிவெடுக்கவில்லை என்றும், தாயின் கருப்பையில் தாம் இருந்த போதே கடவுள் தமக்குத் தரிசனமாகி தம்மைப் புற ஜாதியருக்குரிய அப்போஸ்தலனாகத் தேர்வு செய்து விட்டதாகவும், (கலாத்தியர் 1: 5, 16), அதனாலேயே தான் புறஜாதியாரிடம் சென்றதாகவும் பவுல் கூறினார். இத்தரிசனத்தை இயேசுவின் சீடர்கள் நம்பாமல், பவுல் கூறியது பொய் என்று மறுத்தனர். இதுதான் என்னுடைய விளக்கமாக இருந்தது.  ...  இயேசுவின் சீடர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல், ‘அப்போஸ்தலனாக இல்லாதிருந்தும் சிலர் தம்மைத் தாமே அப்போஸ்தலன் எனக் கூறிக் கொண்டனர்; அவ்வாறு கூறியவர்கள் பொய்யர்கள்’  என்று சாடினர்.(வெளிப்படுத்தின சுவிசேஷம் - திருவெளிப்பாடு 2:2) தம்மை அவர்கள் குறிவைத்துத் தாக்குவதைக் கண்ட பவுல், ‘நான் அப்போஸ்தலன் என மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களுக்கு நான்  அப்போஸ்தலன் தானே’ (1 கொரிந்தியர் 9:2) என்று எழுதி இயேசுவின் சீடர்களின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளும் விதமாகப் பேசினார்.

பைபிளின் உள்ளிருந்து மட்டுமே நாம் தகவல்களையும் ஆதாரங்களையும் தேர்வு செய்து எழுதியிருக்கிறோம்.(14)

கிறிஸ்துவத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மதப்பிரிவுகள் புதிது புதிதாகத் தோன்றியுள்ளன.

முதல் நூற்றாண்டுக்காலத்தில் 3 பிரிவுகள் இருந்தன. 1. யூதக் கிறிஸ்தவம்; 2. பவுல் கிறிஸ்தவம். 3. ஞானமரபுக் கிறிஸ்தவம். இதில் ஞானமரபுப் பிரிவில் 7 ஏழு உட்பிரிவுகள் இருந்தன.  அதன்பின் கி.பி. 325-. நிசேயா கவுன்சில் வரையில் வேறு 5 பிரிவுகள் வழக்கத்திற்கு வந்தன. ... கி.பி 325 முதல் இடைக்காலம் வரையிலும் 9 பிரிவுகள் இருந்துள்ளன.  கி.பி. 1517-ல் ஏற்பட்ட மார்ட்டின் லூதர் எழுச்சியினால் கிறிச்தவத்தின் அடைப்படைக் கொள்கை இரண்டாயிற்று. கத்தோலிக்கம், புரோட்டஸ்டண்ட் என்பவையே அவை.  .. அவரவர் விருப்பத்திற்கேற்ப புதுப் புது சபைகள் தினந்தோறும் உருவாகி வருகின்றன.(15)ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான மதத்தில் இருக்கட்டும். ஆனால் தம்முடையது மட்டுமே உயர்ந்தது என்றும் மற்றையவை இழிவானது என்றும் கருதுகிற பான்மை ஒழியவேண்டும்.

 *

No comments:

Post a Comment