ஏனைய பதிவுகள் ….
5. https://dharumi.blogspot.com/2020/06/1101-5.html
6. https://dharumi.blogspot.com/2020/06/1102-6.html
6. https://dharumi.blogspot.com/2020/06/1102-6.html
தொடர்ச்சி ...
பைபிளின் புதிய ஏற்பாடு
மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் - இவர்களில் லூக்கா மட்டும் பிற ஜாதி கிரேக்கர்; இயேசுவை கண்ணால் பார்க்காதவர்.
நற்செய்திகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் இருந்து தொடங்கப்பட்டன. மத்தேயு,லூக்கா கன்னி மேரியின் கருவிலிருந்து இயேசு உருவானதை கூறித் தொடங்குவர். ஆனால் மார்க்கும், யோவானும் அதைத் தாங்கள் அறிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். திருமுழுக்கு என்பதிலிருந்து அவருடைய நூல்கள் தொடங்குகின்றன.(56)
யூத மரபுகளில் இருந்து மாறுபட்டு பரிசுத்த ஆவி மற்றும் விசுவாசம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மதம் பவுல் மூலம் கிபி 49 இல் நடந்த எருசலேம் சங்கக் கூட்டத்திற்கு பின்னரே உருவாயிற்று. பைபிள் தன்னுடைய வரலாற்று தளத்திலிருந்து விசுவாசத்தின் பாதைக்கு இப்போதுதான் தடம் மாறிப் போனது.
புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உள்ளன. முதல் நூல் எழுதப்பட்ட காலம் கிபி 52க்குப் பின்னர். இயேசு மரணம் அடைந்து சுமார் 20 ஆண்டுகள் அப்போது ஆகியிருந்தன. அதாவது கிபி 49 கூடிய எருசலேம் சங்கத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும், அவை எழுதப்பட்ட காலவரிசைப்படி பைபிளில் இடம் பெறவில்லை.
தற்போது புதிய ஏற்பாட்டில் வரிசைப்படுத்திக் கொள்ள முறையின்படி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நான்கு நூல்களும் இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் உள்ள அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகும்.
அப்போஸ்தலர் நடவடிக்கைகள் அல்லது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் சிலுவை சம்பவத்துக்குப் பிறகு அவரது சீடர்கள் செய்த பணிகளும்
‘ அப்போஸ்தலன் ஆக இல்லாதிருந்தும் தன்னைத்தானே அப்போஸ்தலன் என கூறிக் கொண்டவர்” எனக் குற்றம் சாட்டப்பட்ட பவுல் மற்றும் பர்னபாஸ் போன்ற அவருடைய குழுவினர் செய்த பணிகளும் எழுதப்பட்டுள்ளன.
அதன்பின் பவுல் எழுதிய 14 கடிதங்கள் உள்ளன. உண்மையில் பவுல் எழுதிய கடிதங்கள் தான் காலத்தால் முதலில் எழுதப்பட்டவையாகும். ரோமர் முதலாக எபிரேயர் முடிய பவுல் எழுதிய கடிதங்களுக்குப் பின் இயேசுவின் சகோதரரான யாக்கோபு
(James) எழுதிய கடிதம் உள்ளது. (57)
இயேசுவின் எதிரி என பொருள்படும் எதிர்க் கிறிஸ்து (anti-Christ) என்பவர், பவுல் மற்றும் அவருடைய குழுவினர் தாம் என்கிற அதிர்ச்சியான தகவலும் அவற்றில் இடம் பெற்றுள்ளது.(58)
இயேசுவின் வாழ்க்கை வரலாறு:
மத்தேயு லூக்காஇயேசுவின் தலைமுறைப் பட்டியலைத் தருகிறார்கள். (மத்.1:1-16; லூக்கா 3.23-34) இந்த இரண்டிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.
உதாரணமாக இயேசுவின் தந்தை யோசேப்பு என கருதப்படுகிறது. யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என மத்தேயுவும் (மத் 1:16), ஏலி என
லூக்காவும் (லூக் 3:23) மாறுபட்டு எழுதுகின்றனர். (59)
மத்தேயு விவரிக்கும் தலைமுறைப் பட்டியலில் 41 தலைமுறைகள் மட்டும் இருந்ததாகவும், லூக்காவின் பட்டியலில் 56 தலைமுறை இருந்ததாகவும் அறிவிக்கிறார்கள்.
லூக்காவும்
அவருடைய நற்செய்தி நூலும்:
இயேசுவை தன் கண்களால் கூட காணாதவர் லூக்கா. அவர் முன்னரே எழுதப்பட்டிருந்த மத்தேயு, மார்க்கு இரண்டையும் நன்கு படித்து தம்முடைய நூலை எழுதியதாக கூறுகிறார். (1:1-4)
அவர் வசனங்களில் 350 வசனங்கள் மார்க்கு எழுதிய நூலில் உள்ளன; 325 வசனங்கள் மத்தேயு நூலில் உள்ளன. அந்த நூல்களில் இல்லாத பல விஷயங்களை தன் கொள்கைக்கு ஏற்ப மாற்றி தனது நூலில் எழுதியுள்ளார். மூல நூல்களில் இஸ்ரேலிய ஜாதிகளுக்கு மட்டுமே இயேசு ஆதரவாக இருந்ததாக எழுதப்பட்டிருந்த பகுதிகளை மாற்றிவிடுகிறார் அல்லது திருத்தம் செய்து கொள்கிறார். ஒரு உதாரணம் நல்ல சமாரியன் கதை. (60)
திருச்சட்டத்தில் வல்லுநர் ஒருவர் இயேசுவிடம் வந்து 10 கட்டளைகளில் எது சிறந்தது என்று கேட்டார். திருச்சட்டத்தில் சொல்லியிருப்பதை செய்யுங்கள் என்றும் உன் மீது அன்பு செலுத்துவது போல் உன் அயலான் மீதும் அன்பு செலுத்துவாயாக என்றும் பதில் கூறியதாக பைபிளில் உள்ளது. மத்தேயு மார்க்கு இரண்டிலும் இது உள்ளது. அதோடு அங்கு அது முடிந்து விடுகிறது. (மத் 22:35-40; மாற்கு 12:26-34).
ஆனால் லூக்கா நற்செய்தியில் திருச்சட்ட நூல் வல்லுநர் அடுத்து ஒரு கேள்வி கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக நல்ல சமாரியன் கதையை இயேசு கூறியதாக எழுதுகிறார். இந்தக் கதை மிகவும் பிரபலமான ஒன்றாகும். இயேசுவுக்கு மிகவும் சிறந்த கிரீடத்தை வழங்குவதற்கு இக்கதையை பலரும் இன்று பயன்படுத்துவர். ஆனால் லூக்காவின் மூல நூலாகிய மத்தேயுவிலோ, மாற்கிலோ இது இல்லை. இதன் மூலம் இயேசுவுக்கு லூக்கா ஒரு புதிய முகவரியைக் கொடுக்கிறார். யூதர்கள் சமாரியர்களைப் புற சாதியினரைப் போல தீண்டத்தகாதவர்கள்ளகவே நடத்துவர். ஆனால் ஒரு யூதனாக இருந்தும் இயேசு சமாரியர் மீது அன்பு செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதற்கு இச்சம்பவம் லூக்காவிற்குப் பயன்பட்டது. (லூக்கா 10:29-37) .
இதுபோல இன்னொரு மாற்றமும் உண்டு. கானான் தேசத்துப் பிற ஜாதிப் பெண்ணை ஏசு நாயாக விரட்டியதாக மத்தேயும், மாற்கும் எழுதுவார்கள். இயேசு பிற ஜாதியார் மீது விரோதம் பாராட்டியதாக மூல நூல்களில் எழுதப் பட்டுள்ளன. (மத் 15:21-28; நாற்கு 7:24-28)ஆனால் இந்தச் சம்பவத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் லூக்கா.(61)
யூதர்களின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய பாசத்தை தவிர்த்து விடுகிறார் லூக்கா. சமாரியர் மீதும் பிறர் மீதும் கொண்டிருந்த வெறுப்பை மறைத்து அவர்களுடன் அவர் நல்லுறவு கொண்டு உழைத்தது போலவும் தாழ்த்தப்பட்ட குழுவினருக்காக அவர் உழைத்ததாகவும் மாற்றி எழுதுகிறார். அதற்கான சில உதாரணங்கள்:
- ஊனமுற்றோர்
மீது பரிவு
13: 10 - 13
- விதவைகளின்
நலனில் ஈடுபாடு
7: 11 - 15 மற்றும்18:
1- 18
- ஏழைகளுக்காக
உழைத்தல் 16: 19 - 31 மற்றும்
18: 24, 25
- பாவிகளை
மீட்பதில் விருப்பம்
15: 11 - 31 மற்றும்
15: 8 - 10 மற்றும்
19: 1-7
- வரிதண்டும் பாவிகளையும்ரட்சிக்கும்
மனப்பான்மை 18: 9 - 14
இந்தப் புதிய தகவல்கள் மூலம் இயேசுவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜாதிகளை கடந்த பொதுவான ஒரு முகவரியையும் கொடுக்கிறார்.
இயேசுவை உலகுக்கு அறிமுகப் படுத்த விரும்புபவர்கள் இன்று லூக்காவின் இந்த முகவரியை இயேசுவுக்கு வழங்குகிறார்கள். ஆனால் லூக்கா இயேசுவுக்காகக் கொடுத்திருப்பது உண்மையான தகவல்கள் அல்ல. அவருடைய சீடர்கள் இத்தகவல்கள் எதுவும் இயேசுவுக்கு உரியதாக எழுதவில்லை. இயேசுவின் பெயரால் புதிய மதத்தை உருவாக்கிய போது லூக்கா இயேசுவுக்கு வழங்கியிருக்கும் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஏசுவின் முகம் வேறு வகையானது.(62)
இயேசுவின் அற்புதங்களாலேயே மக்கள் கவரப்பட்டனர்
மாற்கு 3:8 -- “...திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். ( ஆங்கிலத்திலும் புராட்டஸ்டன்ட் மொழிபெயர்ப்பிலும் ’அற்புதங்கள்’ என்ற சொல் இல்லை.)
மாற்கு 4:35-41 - வீசும் புயலை நிறுத்தி படகில் இருந்த சீடர்களை காப்பாற்றியது - ”காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே ! இவர் யாரோ?”
சீடர்கள் கூட இயேசுவை மெசியா என அறிந்து பின்பற்றுவதற்குப் பதில் அவருடைய அற்புதங்களைக் கண்டு அவரைப் பின்பற்றினர் என அறியலாம்.
இயேசு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உவமையில் இயேசு உரையாடிக்கொண்டிருந்தார். அதைக் கேள்வி கேட்ட சீடர்களிடம் ’மறைபொருள் அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்கு கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்றார். (மத் 13;10-12) (உள்ளவருக்குக் கொடுப்பதும், இல்லாதவரிடமிருந்து
எடுக்கப்படும் என்னும் இந்தத் தத்துவம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. யாரும் விளக்கினால் புரிந்து கொள்வேன்.
இரண்டாவதாக, மறை பொருளை அவர்களுக்குப் புரியாத படி உவமைகள் மூலம் ஏன் பேச வேண்டும்? பயன் என்ன?.) (64)
மறைபொருள் சீடர்களுக்குப் புரியும் என்றார். பாவம் .. அவர்களுக்கும் ஏசு சொன்ன வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமை புரியவில்லை.(மத் 13:36)
(யாருக்காக, எதற்காக, மறைமுகமாக, உவமைகளோடு இயேசு பேசினார் என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கிறது)
மேற்கண்ட தகவல்களிலிருந்து இயேசுவை மெசியா என விசுவசித்து எவரும் அவரைப் பின்பற்றவில்லை என்பதை அறியலாம். அவருடைய சீடர்கள் கூட அவர் யார் என்பது தெரியாமலும், அவரது பேச்சு புரியாமலும், அவரது பேச்சை விசுவாசிக்காமலும் தான் அவரோடு உறவாடி இருக்கிறார்கள். ஆனால் அவர் செய்த அற்புதங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. (65)
*****
ஒரு சிறு பின்குறிப்பு
சினிமாவைப் பற்றி எழுதினால் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி இரண்டு பதிவுகளில் கருப்பு துரை என்ற படத்தை பற்றி எழுதினேன்; 25 பேர் மட்டுமே
பார்த்திருக்கிறார்கள். ஆனால் அதைவிட மூன்று மடங்கு அளவு இந்தத் தலைப்பில் எழுதியதை வாசித்து இருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
ஆனால் நீங்கள் வந்ததும் போனதும் தடங்கள் ஏதும் இல்லாமல் சென்று விட்டீர்கள். எனக்குப் பல கேள்விகள்;
உங்களுக்குப் பதில் தெரிந்தால் ஏன் சொல்லக்கூடாது?
நான் தவறாக எழுதலாம் - உங்களைப் பொறுத்தவரையில். அப்படியிருந்தால் அதை ஏன் நீங்கள்
மறுக்கக்கூடாது.
இப்படிப் பல கேள்விகள் எனக்கு. இந்த கேள்விகளுக்காவது
பதில் தருவீர்களா
???
*