100 நாட்களையும் தாண்டி தில்லியில் உழவர்களின் போராட்டம் இன்னும்
தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. எப்படி நடுவண் அரசு இதை இன்னும் கண்டு கொள்ளாமல்
இருக்கிறது என்பது ஆச்சரியமாகவும், மிகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. எங்கோ நடக்கும்
போராட்டம் .. ஏன் எதற்கு என்று முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்த எனக்கு
கீழ்வரும் கட்டுரை - குரு (வாலறிவு) என்பவர் எழுதிய கட்டுரை - மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னைப் போன்ற ஆட்களுக்காக அக்கட்டுரையின் தொடுப்பினைத்
தருகிறேன். அதோடு அக்கட்டுரையில் மிகப் பிடித்த சில பகுதிகளையும் இங்கே தந்துள்ளேன்.
அக்கட்டுரையினை முழுமையாகக் காண :
https://tcguru.blogspot.com/2021/01/blog-post_26.html
பொருளாதாரக் கணக்கெடுப்பின் மூலம் 2016ஆம் ஆண்டில்
வெளியான மற்றொரு அறிக்கை, நாட்டில் பாதி அளவிற்கு இருக்கின்ற பதினேழு மாநிலங்களில்,
விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.20,000, அதாவது மாதம் ரூ.1,700 ரூபாய்க்கும்
குறைவாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
------------------
1980களில் இருந்த அளவிற்கே 2000களிலும்
விவசாயிகளின் வருமானம் (பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு) இருந்திருக்கிறது.
------------
உண்மையில் போராடும் விவசாயிகள் பணக்காரர்கள்
என்றால், அவர்கள் ஏன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலே தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?
பஞ்சாபி செய்தித்தாள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். தினமும் கிட்டத்தட்ட
ஒன்று அல்லது இரண்டு தற்கொலைகள் அதில் வெளியாகி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும்
பஞ்சாபில் உள்ள மூன்று விவசாயிகளில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான் இருக்கிறார்.
----
இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டது
என்று சொல்பவர்கள் தயவுசெய்து குளிர்காலத்தில் உங்கள் வீட்டிற்கு வெளியே ஓரிரவு சென்று
வெளியே எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். பணம் கொடுத்தால் யாரும் இதைச் செய்வார்கள்
என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியே சாலையில் தள்ளுவண்டி ஒன்றில் அல்லது கூடாரத்தில்
ஓரிரவை கழித்த பிறகு, உங்களுக்கு பணம் வழங்கப்பட்டாலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக
அதை நீங்கள் செய்வீர்களா என்பதைச் சொல்லுங்கள்.
--------
அன்றொரு நாள் வணிக சேனல் ஒன்று என்னிடம் நேர்காணலை நடத்தியது.
நிகழ்ச்சியை நடத்தியவர் என்னிடம் ‘சந்தைகள் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து மிகவும்
உற்சாகத்துடன் இருக்கும் போது, விவசாயிகள் மட்டும் ஏன் மகிழ்ச்சியின்றி இருக்கிறார்கள்?’
என்று கேட்டார்.
‘நீங்களே உங்கள் கேள்விக்கு பதிலையும் அளித்து விட்டீர்கள்.
சந்தைக்கு ஆதரவாக இந்த சட்டங்கள் இருப்பதாலேயே, சந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றன.
இந்த சட்டங்கள் தங்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்று உணர்கின்ற விவசாயிகள் தெருக்களில்
இறங்கிப் போராடி வருகிறார்கள்’ என்று நான் பதிலளித்தேன்.
----------------
உலகம் பெருநிறுவன விவசாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்று பெருநிறுவனங்கள் விரும்புகின்றனவோ அதற்கு
மாறாக விவசாயத்தில் பெருநிறுவனங்களின் ஈடுபாடு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடவில்லை.
எடுத்துக்காட்டாக இந்த சட்டங்களை நாம் கடன் வாங்கிய இடமான அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் அறுபது முதல் எழுபதாண்டுகளுக்கு மேலாக திறந்த சந்தைகளும், விவசாயத்தில்
தடையற்ற வர்த்தகமும் இருந்து வருகின்ற போதிலும், விவசாய வருமானம் வீழ்ச்சியே அடைந்திருக்கிறது.
உண்மையில், 2020ஆம் ஆண்டில் 42500 கோடி டாலருக்கும் அதிகமான திவால்நிலையால் அமெரிக்க
விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் அங்கே சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பாக
இருந்திருக்கும் என்றால், விவசாயிகள் ஏன் திவால்நிலையை எதிர்கொள்ள வேண்டும்? அமெரிக்காவும் மிக மோசமான விவசாய நெருக்கடியையே
கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாது.
கிராமப்புற அமெரிக்காவில் தற்கொலை விகிதம் நகர்ப்புற அமெரிக்காவில் இருப்பதை விட
45% அதிகமாக உள்ளது.
----------
1970களில் இருந்து 93% பால் பண்ணைகள்
மூடப்பட்டுள்ளதும், ஆனால் அங்கே பால் உற்பத்தி அதிகரித்துள்ளதும் தெரிய வரும். பெருநிறுவனங்கள்
விவசாயத்தில் இறங்கி மிகவும் பெரிய பால் பண்ணைகளை அமைத்ததால், பால் விலை சரிந்து
93% பால் பண்ணைகள் மூடப்பட்டன என்று தெரிய வருகிறது.
--------------
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு
பெருநிறுவனங்களால் அதிக விலை கொடுக்க முடியும் என்று இப்போது கூறுகிறார்கள்! ஆனால்
இந்த அதிக விலை என்பது எதை விட அதிக விலை? எங்களிடம் இருக்கின்ற ஒரே அளவுகோல் குறைந்தபட்ச ஆதார விலை. பெருநிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள்,
பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் ‘அதிக விலை’ கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்றால்,
இந்த குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு உறுதிப்படுத்தித் தருவதில் அவர்களுக்கு
என்ன சிக்கல் இருக்கிறது?
---------
இப்போது அதையே இந்தியாவில் உள்ள அமுல் பால் கூட்டுறவு
நிறுவனத்துடன் ஒப்பிடுங்கள். ரூ.100க்கு அமுல் பாலை வாங்கும் போது, அதில் எழுபது ரூபாய் விவசாயிகளுக்குச் செல்கிறது என்று அமுல் பால் கூட்டுறவு நிர்வாக
இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஆக இங்கே விவசாயிகளின் பங்கு 70%! எனவே அமுலிடமிருந்து
பாடம் கற்றுக் கொண்டு, லாபத்தில் பெரும் பங்கை விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்கின்ற வகையில்
காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றிலும் அதேபோன்ற மாதிரியை நாம் ஏன் பின்பற்றக்
கூடாது?
------
No comments:
Post a Comment